முன்கதை முடிந்த இடம்:
கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில், பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.
-------------------------
வாசல் கண்ணாடிக்கதவை திறந்து விட்டார் ஒருவர், ராணுவ சிப்பாய் உடையில். கடையில் கூட்டமான கூட்டம்.டவுனில் சினிமாக்கொட்டகை, ரேஷன் கடை, அடுத்தது டாஸ்மாக் கடையில் தான் கூட்டமாக இருக்கும் என்று பார்த்துள்ளேன், கேள்விப்பட்டுள்ளேன். அதற்கு அடுத்தபடியாக பஸ் ஸ்டாண்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இப்போது ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும், பண்டிகைகாலம் ஏதும் இல்லாதபோதும் கூட, மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து, போட்டிபோட்டுக்கொண்டு, ஏதேதோ வாங்கிச்செல்கின்றனர்.
மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதாகவும், ஏதேதோ செய்திகள் படித்த ஞாபகம் எனக்குள் ஏற்பட்டது.
தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதாகவும் சொல்லுகிறார்கள். மேலும் மேலும் உயரக்கூடும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இவ்வாறு கூடுகிறார்களோ என்னவோ?
எங்கிருந்து தான் எப்படித்தான், பணம் புரளுகிறதோ ! கிராமத்தானாகிய எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.வரட்சியால் தண்ணீர் இல்லாமலும், மழை வெள்ளத்தால் அதிகத்தண்ணீர் சூழ்ந்தும், பயிர்கள் வீணாகி, அல்லல்படும் எனக்கு, தங்கம் வாங்க இவர்கள் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்வதைப்பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.
அந்த குளிரூட்டப்பட்ட கடையில் முதலில் என்னை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தபோதும், ஒருவன் டிப்டாப் உடையில் என்னை நெருங்கி, “பெரியவரே, குடையை நீட்டிக்கொண்டு இப்படி குறுக்கே நிற்காதீர்கள், மற்றவர்கள் மேல் அது குத்திவிடும். உங்களுக்கு என்ன வேண்டும்” என்று வினவினான்.
”மூக்குத்தி ஒன்று பார்க்க வேண்டும்” என்றேன்.
“நேராகப்போய் அந்தக்கடைசியில் உள்ள லிஃப்டில் ஏறி நாலாவது மாடிக்குப்போங்க” என்றான்.
லிஃப்டில் ஏறுவதற்கே ஒரு நீண்ட க்யூ வரிசை காத்திருந்தது. பேசாமல் படி ஏறிச்சென்றுவிடலாமா என்று நான் நினைத்தபோதே, “அய்யா, பெரியவரே! சீக்கரம் நகர்ந்து போங்க, லிஃப்ட் வந்து விட்டது” என்று சொல்லி என்னை அந்த லிஃப்ட் ரூமுக்குள் தள்ளிக்கொண்டு போய்விட்டனர், அங்கு கூடியிருந்த ஜனங்கள்.
தொடரும்
{ இந்தக்கதையின் தொடர்ச்சி [பகுதி 3 / 7] நாளை மறுநாள் வியாழக்கிழமை 26.05.2011 அன்று வெளியிடப்படும். }


