என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 19 அக்டோபர், 2011

மா மி யா ர்


மா மி யா ர்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-





உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய வனஜா, தன் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிவிட்டு, தன் கணவரிடம் வினவினாள்.



”அம்மா இங்கு இல்லை. எங்கு போனார்களோ தெரியாது. இனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வனஜாவை கடுப்புடன் முறைத்துப் பார்த்து விட்டு, எங்கோ வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார். 



பகல் பூராவும் எப்போதுமே இந்த மனுஷனுக்கு வனஜா மேல் ஒரே கடுப்பு வருவது சகஜம் தான். வாக்கப்பட்டு வந்து [வாழ்க்கைப்பட்டு வந்து] ஆறு மாதங்களாகத்தான் அவளும் பார்த்து வருகிறாளே! ஆனால் ராத்திரியானால் அவரின் கடுப்பையெல்லாம் எங்கோ பறந்து போக வைத்து, பெட்டிப்பாம்பாக ஆக்கிவிடுவாள், அந்த கெட்டிக்காரி, வனஜா. 



ஜாதக விசேஷம் அப்படி. ஜாதகப் பொருத்தம் இல்லை, இந்த ரெண்டு ஜாதகத்தையும் சேர்க்க வேண்டாம் என்றார் ஒரு ஜோஸ்யர். செகண்ட் ஒபினியனுக்காக இன்னொரு ஜோஸ்யரிடம் போனார், வனஜாவின் தந்தை.



அந்த ஜோஸ்யர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு, பையனுக்குப் புனர்பூசம் நக்ஷத்திரம்; பெண்ணுக்கு உத்திராடம் நக்ஷத்திரம். சஷ்டாஷ்டக தோஷம் மட்டும் உள்ளது என்றார். அதுவும் மித்ர சஷ்டாஷ்டகம் தான். மற்றபடி தேவலாம் என்றார்.



“சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? அது என்ன செய்யும்? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?  என்றார் வனஜாவின் அப்பாவும் விடாப்பிடியாக. 



வந்துள்ள நல்ல வரனை விடக்கூடாது. நல்ல பையன். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். சொந்த வீடும் சொத்து சுகமும் உள்ளது. ஜாதகப்பொருத்தம் இல்லை என்று சொல்லி, மற்ற எல்லாம் பொருந்திய மாப்பிள்ளையை நழுவவிடலாமா? என்பது பெண்ணைப் பெற்றவரின் கவலை.



”சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம் தான். அதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம்.  என்ன ஒன்று, இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும் சண்டை போட்டுக் கொண்டே வாக்குவாதம் செய்துகொண்டே இருப்பார்கள். ராத்திரியானா சமாதானமாப் போய்விடுவார்கள்” என்று புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை, பாக்கு பன்னீர்ப் புகையிலையை எட்டிப்போய்த் துப்பிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரால் வாயையும் கழுவிக்கொண்டு வந்தவர் “என்ன ஸ்வாமி, நான் சொல்வது விளங்கிச்சா உமக்கு” என்று மீண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை வெளிக்கொணர்ந்தார், அந்த ஜோஸ்யர். 



“நானும் என் சம்சாரமும் கூட இதே போலத்தானே!; எங்க வனஜா பிறந்தன்னிலேந்து கடந்த 25 வருஷமா, பகலெல்லாம் சண்டை போட்டுண்டு, ராத்திரியானா சமாதானம் ஆகிண்டு தானே இருக்கோம்!; அதனால் என்ன பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது; 



வேறு ஒன்றும் ஜாதகக்கோளாறு இல்லையே! அப்போ மித்ர சஷ்டாஷ்டகம் மட்டும் தான்; அதனால் பரவாயில்லை; மேற்கொண்டு ஆக வேண்டிய கல்யாண வேலைகளைப்பார்க்கலாம்னு சொல்றேளா!” என்றார் வனஜாவின் அப்பா, மிகுந்த ஆர்வத்துடன்.



அதுபோல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம் என்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார் என்பது ஜோஸியருக்கும் புரிந்து விட்டது. 



“பேஷா இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கலாம் ஸ்வாமி;  இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி எங்கே இருக்கிறார்கள்?” எங்கேயாவது நூற்றுக்கு ஒத்தரோ, ஆயிரத்துக்கு ஒத்தரோ இருக்கலாம்; குடும்பம்னா சண்டை சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்;



இப்போ நானும் என் சம்சாரமுமே மித்ரசஷ்டாஷ்டக தோஷம் உள்ளவா தான்;  எங்களுக்கு விளையாட்டுபோல ஆறு புள்ளைகள், ரெண்டு பொண்ணுகள். பகலெல்லாம் இங்கே தான் ஜோஸ்யம் பார்த்துண்டு இருப்பேன். வீட்டுக்குப்போனா ஒரே பிரச்சனைகள்; ராத்திரி படுத்துக்க மட்டும் தான் வீட்டுக்கே போவேனாக்கும்”   என்று சொன்ன ஜோஸ்யருக்கு ரூபாய் 100 க்கு பதில் ரூபாய் 200 ஆகக் கொடுக்கப்பட்டது, வனஜாவின் அப்பாவால்.



இந்த ஜோஸ்யர் சொன்ன மித்ர சஷ்டாஷ்டக விஷயம் வனஜாவுக்கும் கல்யாணத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது. அவளுக்கு இதிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை ஏதும் கிடையாததால், இதை ஒரு பொருட்டாகவே அவள் எடுத்துக் கொள்ளவில்லை. 




இப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன ஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள். சில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே, அனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது.   



சரி இந்த சஷ்டாஷ்டக தோஷத்தைப் பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் விட்டு விட்டு, தொலைந்து போன வனஜாவின் மாமியார் என்ன ஆனாள்ன்னு பார்ப்போமா!




நேற்று காலையில் உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் சற்றே சப்தம் போட்டுப் பேசிக்கொண்டதனால் ஏற்பட்ட விளைவே இது,  என்பது வனஜாவுக்குப் புரிந்து விட்டது.




நேற்று சாயங்காலம், நான் என் அம்மா வீடுவரை போய்விட்டு நாளைக்கு வந்து விடுகிறேன் என்று தான் சொன்னபோதே, மாமியார் முகத்தில் ஒரு மகிழ்ச்சியோ, பதிலில் ஒரு சுரத்தோ இல்லை என்பதை எண்ணிப்பார்த்தாள்.




தன் கணவராகிய ஒரே பிள்ளையை பெற்றெடுத்தவள் வேறு எங்கு தான் கோபித்துக்கொண்டு போய் இருப்பார்கள்? என்று ஊகிக்க முடியாமல் தவியாய்த் தவித்தாள், வனஜா.




வனஜா தன் தாயாருக்கு போன் செய்து, தான் பஸ் பிடித்து செளகர்யமாக, வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவித்து விட்டு, தன் மாமியார் காணாமல் போய் உள்ள விஷயத்தையும் கலக்கத்துடன் கூறினாள். 




”நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமையா இருக்கே, நம் கையால் தான் இன்று சமையல் செய்வோமேன்னு, சமையல் அறையில் புகுந்தேன். அது என்ன பெரிய ஒரு தப்பா? என்னை சமைக்க விடாம தடுத்துட்டாங்க, என் மாமியார். 




“நான் என்ன தீண்டத்தகாதவளா” ன்னு ஏதேதோ கோபமாப் பேசிட்டேன்” என்றாள் வனஜா தன் தாயிடம்.




”வயசான காலத்திலே, ஆசை ஆசையா, உன் மாமியார் தன்னால முடிஞ்ச எல்லாக் காரியங்களையும் இழுத்துப்போட்டு செஞ்சு கொடுத்து, உனக்கு ரொம்பவும் உபகாரமாகத்தானே இருக்காங்க! அவங்க மனசு வருத்தப்படும்படியா ஏன் நீ ஏதாவது இப்படி பேசுகிறாய்?;




தலைய வாரிப்பின்னிண்டு, மூஞ்சிய பளிச்சுனு அலம்பிண்டு, தலை நிறையப் பூ வெச்சுண்டு, புதுசு புதுசா புடவையைக்கட்டிண்டு, நீ உன் புருஷனை கவனிச்சிண்டா போதும்டீ கண்ணேன்னு தானே உன் மாமியார் அடிக்கடி சொல்றாங்க!; 




அதுக்கு நீ ”உங்களுக்கு வயசாயிடுச்சு; நீங்க எதுவும் செய்ய வேண்டாம்; நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க;  நானே எல்லாம் பார்த்துக்கறேன்னு’ சொல்கிறாயாமே! பாவம், நீ இதுபோலச் சொல்லும் போதெல்லாம், அது அந்த அம்மாவை மனதளவில் பலகீனமானவங்களா ஆக்கிடுதோ என்னவோ;  



மேலும் நீ புதிசா கல்யாணம் ஆகி வந்தச் சின்னப்பொண்ணு; சமையல் கட்டுல அவசரத்துல ஏதாவது நீ சுட்டுக்கொண்டாலோ , குக்கர் முதலியவற்றைத் திறக்கும் போது உன் முகத்தில் ஆவி அடித்து விட்டாலோ, அப்பளம் வடகம் முதலியன பொரிக்கும் போது ஏதாவது சுடச்சுட எண்ணெய் தெளித்து விட்டாலோ, அந்த அம்மாவுக்கும், உன் கணவருக்கும் தாங்கவே முடியாதாம்; 




அன்றொரு நாள், நான் அங்கே வந்திருந்த போது, குழந்தை மாதிரி, கண் கலங்கிப்போய், என் கையைப் பிடித்துக்கொண்டு என்னிடம் இதெல்லாம் சொன்னாங்க! இவ்வளவு நல்ல மனசு உள்ள உன் மாமியாரை புரிந்து கொள்ளாமல் நீ ஏன் அவங்க மனசு வருத்தப்படும் படியாக நடந்து கொள்கிறாய்?” என தன் மகளைத் திட்டித் தீர்த்தாள் வனஜாவின் தாய்.




”சரிம்மா, இப்போ அவங்களைக் காணோமே, நான் எங்கு போய் அவங்களைத் தேடுவேன்?” அழாக்குறையாகக் கேட்டாள், வனஜா தன் தாயிடம்.




”நேத்து சாயங்காலத்திலிருந்து உன்னைப் பார்க்காமல், வீடே விருச்சோன்னு இருந்ததாகச் சொல்லி, இங்கே நம் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருக்காங்க உன் மாமியார். நீ இங்கிருந்து புறப்பட்ட அதே நேரம் அவங்க அங்கிருந்து புறப்பட்டிருக்காங்க. உன்னை நேரில் சந்தித்துப்பேசி சமாதானப்படுத்தி, அழைச்சிட்டுப் போகலாம்னு, பாவம் அவங்களே புறப்பட்டு வந்திருக்காங்க;




”நீ இங்கே இல்லாமல் புறப்பட்டு விட்டதால், ஒவ்வொரு விஷயமா என்னிடம் இப்போ தான் கண் கலங்கியபடிச் சொன்னாங்க”




“இன்னும் என்னென்ன சொன்னாங்க, என் மாமியார்” வனஜா கேட்டாள்.




சின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆன புதுசு, ஞாயிற்றுக்கிழமை லீவுன்னா, சினிமா, டிராமா, பார்க்கு, பீச், குற்றாலம், கொடைக்கானல்ன்னு ஜாலியாப் போய்ட்டு வந்தால் தானே, நானும் நீங்களும் சீக்கரமா பாட்டியாகப் பிரமோஷன் வாங்க முடியும்னு சொன்னாங்க; 




இதெல்லாம் புரியாம உங்க பொண்ணு, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, நானே சமைக்கிறேன்னு எனக்குப் போட்டியா சமையல்கட்டுக்கு வந்தாள்னா, நான் அவளுக்கு எப்படி இதையெல்லாம் புரிய வைக்கமுடியும்” என்று சொல்லி வருத்தப்படறாங்க. 




இவ்வளவு நல்ல ஒரு மாமியாரை அடைய நீ போன ஜன்மத்துலே ஏதோ புண்ணியம் செய்திருக்கனும்னு நினைக்கிறேன். சம்பந்தியம்மாவுக்கு நம்ம வீட்டுலே விருந்து போட்டு, நானே அவங்களை அங்கே அழைச்சிட்டு வரேன், நீ கவலைப்படாம இரு” என்றாள் வனஜாவின் தாய்.




தங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை, தன் தாயின் மூலம் அறிந்துகொண்ட வனஜாவுக்கு, ஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.  




மாமியார் வந்ததும், தான் ஏதாவது நேற்று தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள் என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள், வனஜா.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o- 




இந்தச்சிறுகதை 18.10.2011 வல்லமை மின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது
Reference: http://www.vallamai.com/archives/9301/

வெள்ளி, 14 அக்டோபர், 2011

அன்னமிட்ட கைகள்




அன்னமிட்ட கைகள்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



வந்தாரை வரவேற்று வயிறு முட்டச்சோறு போட்டு விருந்தளித்தவர்கள் தான் ரெங்கமணியும் தங்கமணியும். அது ஒரு காலம். செல்வச் செழுப்பினில் வாழ்ந்த காலம். 




அந்த கிராமத்திலேயே அன்னதானப் பிரபுக்கள் பரம்பரை என்று தான் அவர்களுக்குப் பெயர்.  பல தலைமுறையாக ஊருக்கு வருவோர் போவோர் அனைவருக்குமே தேர், திருவிழாக்கள் போன்ற விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமுமே கூட ஒரு பத்து பேர்களுக்காவது அன்னமிட்ட பிறகே உண்ணும் உத்தம பரம்பரையில் வந்த தம்பதியினர் தான்.


இன்று அவர்கள் நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. வயதாகிவிட்டது. செல்வம் அனைத்தும் செல்வோம் என்று விடை பெற்று விட்டன. மனம் இருந்தும் கையில் பணம் இல்லாத நிலை.




அவர்கள் இருவரும் இரண்டு வேளை சாப்பிடவே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுவரும் நிலையில் அவர்களால் என்னதான் செய்ய முடியும்?


அவர்களின் இன்றைய நிலைமை தெரியாமல், இங்கிதம் தெரியாமல் இன்றும் அவர்களை நாடி வருவோர் ஒரு சிலர் இருந்தனர்.


அதுவும் இந்த சுப்பண்ணா இருக்கிறாரே, அடிக்கடி வருவார். ஏதேதோ பழங்கதை பேசுவார்.  ஏதாவது சாப்பாடு சாப்பிடாமல் இடத்தைக் காலி செய்யவே மாட்டார்.




உபசாரம் எப்படிக்கிடைக்கிறதோ அதற்கேற்றார்போல ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளைகளோ உணவு சாப்பிட்டு விட்டுத்தான், அரை மனதோடு பிரியாவிடை பெற்றுச்செல்வார்.


இன்று அவர்கள் வீட்டில் ஏதோ கொஞ்சமாக அரிசியும், அரைக்கிலோ வெண்டைக்காய்களும்மட்டுமே உள்ளன. ஒரு வேளைக்கான உணவு எப்படியும் தயாரித்து விடலாம். இரவுக்கு வேறு ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, காலை எட்டு மணிக்கு ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்ப ஆயத்தமானார் ரெங்கமணி.


“என்ன செளக்யமா .... ரெங்கமணி ... ... தங்கமணி ..... இன்று என் சாப்பாடு உங்களுடன் தான். ஒன்றும் அவசரமில்லை. சமையல் மெதுவாக நடக்கட்டும், நானும் என் பாராயணங்கள் முடிக்க எப்படியும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகும்” என்ற படியே ஒரு ஓரமாக பாராயணம் செய்ய அமர்ந்து விட்டார், சுப்பண்ணா.



“ஆற்றில் குளித்து அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு எப்போ வருவேள்? இவர் வேறு வந்திருக்கிறாரே? நான் என்ன செய்யட்டும்? என்று கேட்பதுபோல ரெங்கமணியை சங்கடத்துடன் நோக்கினாள் தங்கமணி. 


“நாம் என்ன செய்வது? ஏதோ நம் மீதுள்ள பிரியத்தில் நாம் அழைக்காமலேயே வந்து விடுகிறார் இந்தப்பெரியவர்.  ஏதாவது அட்ஜஸ்டு செய்து, நான் வரும்வரை காத்திராமல், அவருக்கேனும் ஏதாவது இருப்பதைக் கொண்டு சமையல் செய்து போட்டுவிடு.




இல்லையென்றால் ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விடு என்று ஏதோ ரகசியமாகச் சொல்லிச் சென்றதை, சுப்பண்ணாவும் தன் பாம்புச் செவிகளில் வாங்கிக் கொள்ளத் தவறவில்லை.




ஆற்றுக்குக் குளிக்கச்சென்ற ரெங்கமணி மணி மூன்றாகியும் வீடு திரும்பவில்லை. ஆற்றுத் தண்ணியை அள்ளிக் குடித்துவிட்டு, ஆற்றங்கரைப் பிள்ளையார் அருகில் அமர்ந்து ஜப தபத்தில் நெடுநேரம் ஈடுபட்டுவிட்டார்.




அன்னதானப் பரம்பரையல்லவா.!  வந்துள்ள விருந்தினராவது திருப்தியாகச் சாப்பிடட்டும், அதில் நாம் பங்குக்குப் போக வேண்டாம் என்று நினைக்கலானார். 




வந்தப் பெரியவரோ அதற்குமேல் விடாக்கொண்டன் கொடாக்கொண்டனாக, தங்கமணி எவ்வளவு வற்புருத்தி அழைத்தும் சாப்பிட வராமலேயே இருக்கலானார்.




எவ்வளவு நாழியானாலும் ரெங்கமணி வராமல் நான் சாப்பிடுவதாவது என்று பிடிவாதமாக மறுத்து வாசல் திண்ணையில் வந்து அமர்ந்து விட்டார்..




பெரியவர் இந்நேரம் எப்படியும் சாப்பிட்டிருப்பார் என்று நினைத்த ரெங்கமணி வீடு வந்து சேர்ந்ததும், சாப்பிடாமல் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்ததும் கண் கலங்கினார். 




பிறகு அவரை உள்ளே அழைத்துப்போய் மனைவியை அழைத்து சாப்பாடு போடச்சொன்னார்.   தானும் பெரியவர் அருகிலேயே அமர்ந்து கொண்டார். 




தான் குளித்துவிட்டு வரும்போது வேறு ஒரு நண்பரின் அழைப்பைத் தட்டமுடியாமல் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்ததாகவும், உண்ட களைப்பில் அப்படியே சற்று கண் அசந்து விட்டதாகவும், அதனால் தகவல் சொல்லி அனுப்ப முடியாமல் போனதாகவும் சொல்லி, தன்னை அதற்காக மன்னிக்கும் படியும் வேண்டினார். 




தன் மனைவியிடமிருந்து ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி அருந்தி, செயற்கையாக ஒரு ஏப்பம் விடலானார், ரெங்கமணி.




பெரியவர் சாப்பிட்டதும், திண்ணையில் வந்தமர்ந்தார்.  ரெங்கமணியிடம் ரூபாய் நோட்டுக் கட்டுகளாக திணிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய துணிப்பையை ஒப்படைத்தார். 




“என்ன இது”  என்று அதிர்ச்சியுடன் கேட்டு ரெங்கமணி திகைக்கலானார்.




“உன் தாத்தாவும் உன் அப்பாவும் செய்த அன்னதானத்தில், வளர்ந்தவர்கள் தான் என் அப்பாவும் நானும்.  இன்று என்னிடம் ஓரளவுக்குப்பணம் சேர்ந்துள்ளது. ஆனால் ஒண்டிக்கட்டையான எனக்கு உன்னையும் தங்கமணியையும் விட்டால் இந்த உலகில் சொந்தம் கொண்டாட யார் இருக்கிறார்கள்? அதனால் தான் ஒருவித பாசத்தினால் உங்களைப் பார்க்க அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறேன்.



உங்கள் வீட்டிலேயே உரிமையுடன் எவ்வளவோ நாட்கள் சாப்பிட்டிருக்கிறேன். இனி என் சொச்ச கால செலவுக்கு கொஞ்சம் பணத்துடன் காசிக்குப் போய்விடலாம் என்று இருக்கிறேன். இதில் ஏழு லட்சம் ரூபாய் இருக்கிறது. இதை உங்கள் பரம்பரை இதுவரை செய்துவரும் அன்னதானத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதற்குப் பயன் படுத்திக்கொள்” என்று கூறி ஒப்படைத்தார். 




“பணமெல்லாம் வேண்டாம்” என்று ரெங்கமணி வாங்க மறுத்து விட்டார்.




”ரெங்கமணி, நீ உன் தாத்தா அப்பா போலவே ரொம்ப நல்ல மனம் படைத்தவன். உன் மனைவி தங்கமணியும் தங்கமானவள் தான். இருப்பினும் நேற்றுவரை எனக்கு நீங்கள் அன்னமளித்ததற்கும், இன்று அன்னமிட்டதற்கும் நிறைய வித்யாசத்தை என்னால் உணரமுடிகிறது.    




இன்று வெண்டைக்காய் கறி, வெண்டைக்காய் குழம்புத்தான் என்று ஒன்னை ரெண்டாக்கிவிட்டீர்கள். பகல் சாப்பாடு, இரவு சாப்பாடு என்று ரெண்டாக பழகிய நீங்கள், இன்று என் வருகையால் ரெண்டை ஒன்னாக்கி 4 மணியாகியும் சாப்பிடாமலேயே இருக்கிறீர்கள்; 




உங்களுக்கு நல்ல மனம் உள்ளது பணம் மட்டும் தான் இல்லை. அதுவும் இன்று தான் இல்லாமல் உள்ளது.  என்னிடம் இன்று நிறைய பணம் சேர்ந்துள்ளது. ஆனால் சொந்தபந்தம் ஏதும் இல்லாமல் உள்ளது; 




இந்தப்பணம் உங்களைப்போன்ற நல்ல மனம் உள்ளவர்களிடம் இருந்தால் தான் அன்னதானம் தொடர்ந்து நடைபெற முடியும். அதனால் ஏற்படும் புண்ணியம் உனக்கு மட்டுமல்ல எனக்கும் கூடவே வரும்; 




நான் இறந்த பிறகு, இனி என் இந்தப்பணத்தினால் நீங்கள் தொடரப்போகும் அன்னதானப் புண்ணியத்தால் எனக்கும் நல்லகதி கிடைக்ககூடும்.. அதனால் இதை தயவுசெய்து ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அன்னதானம் செய்து வா” என்றார்.    .  
.


சுப்பண்ணாவை கண் கலங்கியபடிக் கட்டித்தழுவிய ரெங்கமணி, அவரைக் காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், தங்களுடனேயே தங்கள் தகப்பனார் போல இருந்துவிட வேண்டும் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்ள, சுப்பண்ணாவும் ரெங்கமணியைத்தன் சொந்தப்பிள்ளைபோல பாசத்துடன் கட்டித்தழுவிக்கொண்டு அவர்களுடனேயே தங்கிவிட சம்மதித்தார்.




இவற்றையெல்லாம் அருகில் நின்று கவனித்த அன்னமிட்ட கைகளையுடைய தங்கமணிக்கும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வரலானது.




-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


  

புது வண்டி





புது வண்டி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


தன்னுடைய புத்தம்புது வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து, மல்லிகை மணத்துடன் கூடிய ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்கு பூவும் வைத்து, நான்கு ஊதுபத்திகள் ஏற்றி, இதுவரை ஏதும் சவாரிக்கு அழைப்பு வராததால், அன்றைய செய்தித்தாளைப் புரட்டிய வண்ணம் டிரைவர் சீட்டில்,காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தான் ராமைய்யா. 




புது வண்டி வாங்கி ஒரு மாதமே ஆகியும், நேற்று வரை தொழில் அமோகமாகத்தான் நடந்து வருகிறது. 





எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பான அந்தப் போக்குவரத்துப் பகுதியில் காலேஜ், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்க ஆஸ்பத்தரி, போலீஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற அனைத்துமே இருப்பதாலும், எப்போதுமே ஜன நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாததாலும், ராமைய்யாவுக்கு அடிக்கடி சவாரி கிடைப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான்.





என்ன ஒரே ஒரு சின்ன குறைதான் ராமைய்யாவுக்கு. வரும் வாடிக்கையாளர்கள், புத்தம்புது வண்டியாச்சே, அதை படு சுத்தமாகப் பராமறித்து வைத்துள்ளாரே, நாமும் ஒத்துழைப்புக் கொடுக்கணும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாதவர்களாக உள்ளனர்.






அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வண்டியில் ஏறி வண்டியை அசிங்கப்படுத்தி விடுகின்றனர். போதாக்குறைக்கு மாலைகளையும், உதிரிப்பூக்களையும் வண்டி முழுக்க வாரி இறைத்து விடுகின்றனர்.





அமரர் ஊர்தி தானே! என்ற ஓர் அலட்சியம் அவர்களுக்கு. 


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-






[இந்தச் சிறுகதை ”வல்லமை” மின் இதழில் 12.10.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.]
Reference : http://www.vallamai.com/archives/9126/  

செவ்வாய், 11 அக்டோபர், 2011

எட்டாக் க[ன்]னிகள்


எட்டாக் க[ன்]னிகள்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-






நான் தினமும் பயணிக்கும் அரசுப்பேருந்தில், அது கிளம்பும் இடத்திலேயே ஏறி விடுவதால் அதிக கும்பல் இருக்காது. பாதி பஸ் காலியாகவே இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக மட்டும் இளம் வயதுப்பெண்கள் ஒரு கூட்டமாக அந்தப்பேருந்தில் ஏறி கலகலப்பை ஏற்படுத்து வருகின்றனர்.


ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் ப்ராஜக்ட் வொர்க்கோ, டிரைனிங்கோ செய்யச்செல்கின்றனர் என்று கேள்வி. எது எப்படியோ மல்லிகை மணத்துடன் பயணம் இப்போது இனிமையாக மாறியுள்ளது எனக்கு.



அந்தக்கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்ற குட்டையான கொஞ்சூண்டு தலைமுடி. மோட்டு நெற்றி.



ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. ஆரம்பத்தில், இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா! என அவள் மேல் நான் அனுதாபம் கொண்டேன். 



ஆனால் நாளடைவில் அவள் என்னுடன் வலிய வந்து அன்புடன் பேசியதில், எனக்குள் ஏதோ ஒருவித இரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு அவளும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிய ஆரம்பித்து விட்டாள். 




என் உருவத்தைப் பார்த்தால் தெரியாதே தவிர, எனக்கும் விளையாட்டுப்போல முப்பது வயது ஆகி விட்டது. இதுவரை பெண் வாடையே அறியாத ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த *பிரும்மச்சாரி* நான். இருந்தும் என் வீட்டில் இன்னும் என் திருமணம் பற்றிய பேச்சே எடுக்காமல் உள்ளனர்.


=================================================
[*பிரும்மச்சாரி* என்றால் இன்னும் திருமணமே ஆகாதவன் என்று பொருள்.


நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார். 

”அதாவது,  ஆஞ்சநேயர் (அனுமன்) ஒரு சுத்த பிரும்மச்சாரி. 

ஆனால் அவர் ஒரு வானரம் (குரங்கு இனம்). 

வானரத்தில் கூட பிரும்மச்சாரி உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்.

வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார். 

இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..]
====================================================

”சார், மணி என்ன ஆகுது. என் வாட்ச் ஓடவில்லை. பேட்டரி மாற்றனும் என்று நினைக்கிறேன்” என்றாள் என்னிடம் ஒருநாள்.



”இந்தக்காவிரி நதி நீர் பிரச்சனை கடைசியில் எப்படி சார் போய் முடியும்? நமக்கு தண்ணீர் வருமா வராதா? செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த என் கவனத்தை அவள் பக்கம் திருப்பினாள், ஒரு நாள்.



“பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என விளக்கினேன்.



எனக்கு அவள் மேல் ஏற்பட்டுள்ள தாகத்தையும் மோகத்தையும் கோடிட்டுக் காட்ட இது தான் சந்தர்ப்பம் என்று விளக்கம் கொடுத்த என்னுள் ஒருவித சந்தோஷமும் பரவசமும் ஏற்பட்டதை உணர்ந்தேன்.



என் விளக்கம் கேட்ட அவளும் ஒருவித வெட்கம் கலந்த சிரிப்புடன் சென்றதாகவே எனக்கு மட்டும் புரிந்தது.



பஸ் சார்ஜுக்கு சரியான சில்லறைக்காசு இல்லாமல், நடத்துனரிடம் பாட்டு வாங்க இருந்த என்னை, தானே சில்லறை கொடுத்து உதவி செய்தாள், மற்றொரு நாள்.



இப்படியாக எங்களின் பஸ் ஸ்நேகிதம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்தது. மிகவும் உயரமான அவள் என் மனதிலும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.



என் மனதிலிருந்த ஆசைகளையெல்லாம் கொட்டி, அவளுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டேன், மறுநாள் சந்திக்கும் போது எப்படியும் அவளிடம் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்.



திடீரென்று மறுநாள் அந்தப்பெண் மட்டும் அந்த பஸ்ஸில் வரக்காணோம். எனக்கு வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போல ஒருவித உணர்வு ஏற்பட்டது.



என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ,  அவள் ஏன் வரவில்லை என்று மற்ற பெண்களிடம் காரணம் கேட்கவோ, எனக்கு ஒருவித தயக்கமாக இருந்தது. அவள் ஃபோன் நம்பர், வீட்டு விலாசம் போன்ற விபரங்கள் கூட, இதுவரை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வேதனைப் பட்டேன்.



நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை நானே பலமுறை பிரித்துப் பிரித்துப் படித்ததில், அது கசங்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் நாளை வருவாள் என்ற நம்பிக்கையில், இரவு முழுவதும் கண் விழித்து முத்து முத்தாக மீண்டும் அதே கடிதத்தை, வேறொரு புதிய தாளில் அழகாக எழுதி முடித்து, ஒரு கவரில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டேன். 



மறுநாள் பஸ்ஸில் ஏறிய சற்று நேரத்தில் ஒரு சின்னப்பெண் என்னிடம் வந்தாள்,  “சார், உங்க ஃப்ரண்ட் இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னா” என்று சொல்லி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.



“தாங்க்யூ வெரிமச்” என்று சொல்லி பலவித சந்தோஷமான கற்பனைகளுடன் அதை வாங்கிய நான், தனிமையில் அமர்ந்து, அந்தக்கவருக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு, அந்தக்கவரை அவசரமாகப் பிரித்துப் படித்தேன். கண் இருட்டி வந்து என் தலை சுற்றுவது போல உணர்ந்தேன்.



அவளுடைய அத்தைப்பையனுடன் அவளுக்கு நாளைய தினம் நிச்சயதார்த்தமாம். இரண்டு மாதங்கள் கழித்துத் திருமணமாம். நாளைய நிச்சயதார்த்தத்திற்கு நானும் கட்டாயம் வர வேண்டுமாம். அழைப்பிதழ் போல அழகாக கையால் எழுதி அனுப்பியிருக்கிறாள்.



அழகில்லாவிட்டாலும், நல்ல உயரமான அவளை மணக்கவும் ஒருவன் முன் வந்துள்ளான்.  அவள் மேல் ஆசை வைத்த எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. மன வருத்தம் அடைவதைத்தவிர நான் வேறு என்னதான் செய்ய முடியும்?


..................................
..........................................
..................................................
..........................................................
...................................................................
..............................................................................
.......................................................................................




நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ?  உங்களில் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்களேன்.









-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-

திங்கள், 10 அக்டோபர், 2011

பி ர மோ ஷ ன்

பிரமோஷன்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOO-


பஞ்சாமிக்கு காது அவ்வளவாகக் கேட்காது. அதனால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் சென்ற ஆண்டு கிடைக்க வேண்டிய பிரமோஷன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டாவது கிடைக்குமா என்பது இன்று அலுவலகம் போய் வந்தால் எப்படியும் தெரிந்துவிடும்.



”இந்த வருஷம் எப்படியும் கட்டாயம் கிடைத்து விடும்” என்று மேனேஜரின் மனைவி சென்ற வெள்ளிக்கிழமை, கோயிலில் பார்த்தபோது சொன்னது சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தது, பஞ்சாமியின் மனைவி அபிராமிக்கு.



தன் கணவர் வரவை பால்கனியிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அபிராமி. சூடான சேமியா பாயஸம் ஏலம் முந்திரி மணத்துடன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. 



பஞ்சாமி வழக்கத்திற்கு மாறாக மிகவும் அவசரம் அவசரமாக ஓடி வருவதிலிருந்தே அபிராமிக்கு விஷயம் புரிந்து விட்டது. மகிழ்ச்சியுடன் பாயஸத்தைக் கிளறப்போனாள்.



வேகமாக உள்ளே வந்த பஞ்சாமி வழக்கம்போல் பாத் ரூமுக்குச் சென்றார். கை, கால், முகம் கழுவிவிட்டு வரட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தாள் அபிராமி. பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் “பிரமோஷன் ஆச்சா?” என்று கேட்டாள்.



முகம் முழுவதும் சிரிப்புடன், ஒருவித பூரிப்புடன் தலையை ஆட்டினார் பஞ்சாமி.



சூடான பாயஸத்தை ஆற்றியபடி நீட்டினாள், தன் அன்புக்கணவர் பஞ்சாமிக்கு. 



“என்ன விசேஷம்; எதற்குப் பாயஸமெல்லாம்” என்று கேட்டார், பஞ்சாமி.


“பிரமோஷன் ஆச்சா? என்று கேட்டதற்கு பலமாகத் தலையை ஆட்டினீர்களே! அதற்குத்தான் என்றாள் அபிராமி சற்று உரத்த குரலில்.

...........
.......................
.................................
............................................
............................................................
.......................................................................
......................................................................................


”இரண்டு நாட்களாகவே மலச்சிக்கலுடன் அவதிப்படுகிறேனே! மோஷன் ஆச்சா என்று கேட்டாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்” என்றார் மிகவும் அப்பாவியாக, இந்த முறையும் பிரமோஷன் கிடைக்காத பஞ்சாமி.




இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது. 


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


செவ்வாய், 4 அக்டோபர், 2011

பெயர்ச் சூட்டல்




பெயர்ச் சூட்டல்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இன்று சாயங்காலம் ஆபீஸ் விட்டு வீடு திரும்பும்போது எப்படியும் நல்ல செய்தி நம் காதில் விழுந்துவிடும் என்ற ஆவலில் ரகு, தன் வீட்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான்.


தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் தன் தாயும் தந்தையும் இவ்வளவு தூரம் அக்கறை காட்டுவதும், விவாதிப்பதும் அவர்களின் ஒரே பிள்ளையான ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து வியப்படையச் செய்தது.

எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, அவர்களாகவே தன்னிடம் தெரிவிக்கட்டும் என்று ஒருவித வெட்கத்துடன் ஹாலில் டீ.வி. பார்க்க அமர்ந்தான்.

இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, ஒரு வெள்ளைத்தாளில் அதை அப்படியே அழகாக எழுதி, நாலா பக்கமும் மஞ்சள்பொடியை சற்றே நீரில் கலந்து அழகாக பட்டையடித்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, அங்கிருந்த உண்டியலுக்குள் அந்தப்பேப்பரை மடித்துப்போட்டு ஞாபகமாக பத்திரப்படுத்தி விட்டனர்.

அவர்கள் வாயால் தன்னிடம் எதுவுமே சொல்லாததால் பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.









”நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப்பொருத்தமாய் இல்லைன்னு, நம்ம ஜோஸ்யர் இன்று வந்து சொல்லிட்டுப் போயிட்டாருடா; 


வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். 


எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.     

ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-




இந்தச்சிறுகதை "வல்லமை” 
மின் இதழிலும் இன்று 
04.10.2011 வெளியாகியுள்ளது.
www.vallamai.com

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ஜா தி ப் பூ




ஜா தி ப் பூ

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு. 

பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்.

பின்புறம் ஒன்றும் முன்புறம் ஒன்றுமாக போடப்பட்ட இரண்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி.  பளிச்சென்ற தோற்றம். பார்த்தால் படித்த பெண்ணாகத் தோன்றுகிறாள். பூ வியாபரத்திற்குப் புதியவளோ! என்றும் புரியாத நிலை.

அந்தக்கோயில் வாசலில் பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் இந்தப் புதுப் பெண்ணின் வருகையால் கடந்த ஒரு வாரமாகப் படுத்துப்போனது.

இந்தப்பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அந்தப்பெண்ணை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பாழும் நெற்றியில் புதிதாகப் பட்டையிட்டுக்கொண்டு, அவளை பக்திப்பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.

இதுபோல எவ்வளவு பேர்கள் அவளிடம் வந்தாலும், வழியோ வழியென்று வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால், ஜொள்ளர்களை சமாளித்து, பூ வியாபாரத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், தன் கூடை முழுவதும் காலிசெய்துவிட்டு, கை நிறைய காசுகளுடன், கிழவியைப்பார்த்து கண் சிமிட்டியவாறே “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம்? என்பது போல, சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.

”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்.

ஆனாலும் அந்தப்பெண் போன பிறகே பாட்டிக்கு தன் பூ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பெண்ணைப் பற்றி பலரும் இந்தப்பாட்டியிடம் விசாரித்தார்கள். அந்தப்பெண் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊரு? இங்கே எங்கே தங்கியிருக்கிறாள்? என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஓர் ஆவலும் ஆர்வமும்.

”அந்தப்பாப்பா யாரோ எனக்குத் தெரியாதுப்பா; மொத்தத்தில் அது என் பிழைப்பைக் கெடுக்கத்தான் இங்கு வந்து போயிட்டு இருக்கு; இனிமேல் அது இங்கே செவ்வாய் வெள்ளி மட்டும் தான் வருமாம், இன்னிக்கு என்னிடம் சொல்லிட்டுப்போச்சு” என்று கிழவி தன்னிடம் விசாரித்த பலரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த ஒரு இளைஞன் மட்டும் கிழவியின் காதருகே போய் “பாட்டி, அந்தப்பொண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்ன்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்றான் சற்றே தயங்கியவாறு. 

இதைச்சொன்ன அந்த இளைஞனை, அந்தப்பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சின்ன வயதிலிருந்தே பழக்கம் உண்டு. செல்லமாக அவனை பேராண்டி என்று தான் கூப்பிடுவாள்.

தினமும் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன்.

ஒரு நாள், உடல்நலமின்றி இருந்து, பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக்கிழவியை, பாசத்தோடு குடை பிடித்து, அவளின் பூக்கூடையுடன், அவளின் குடிசை வீடு வரை கூடவே போய், அவளை அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன்.  

இந்தத்தள்ளாத வயதிலும், பூத்தொடுத்து பூ வியாபாரம் செய்து உழைத்து சாப்பிடும் அந்தக் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. மேலும் கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப்போகும் முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசிவிட்டுத் தான் போவான்.

சிறு வயதில் ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

“இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ,  இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” என ஒவ்வொன்றையும் அவனுக்கு அந்தப்பாட்டி பொறுமையாகச்சொல்லிப் புரிய வைத்திருக்கிறாள்.

”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.

தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு, உள்ளூரிலேயே பேங்க் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்துள்ளது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் அந்தப்பூக்காரப் பாட்டியிடம் பகிர்ந்துகொண்டு, அவள் அவனை மனதார வாழ்த்துவதில் பேரின்பம் கொண்டு வருபவன் அவன்.

பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும், அந்த இளம் பூக்காரப்பெண்ணை, பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை.

வழக்கம்போல் அந்தப்பூக்கார கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும் படியாக வேண்டினான். அப்போது கோயில் மணி அடித்தது நல்லதொரு சகுனமாகத் தோன்றியது அந்தப்பாட்டிக்கும், அவளின் பேராண்டிக்கும்.

உயர்நிலைப் படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு தன் வீட்டுக்கு வந்துள்ள தன் பேத்தி, தான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், தனக்குப் போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதாகவும், நான் உன் பேத்தி தான் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளதை அந்தப்பூக்காரக் கிழவி தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

விளையாட்டாக பூ வியாபாரம் செய்ய இங்கு வந்து போன தன் சொந்தப்பேத்திக்கு, அதுவே பூச்சூடி மணமகளாக மாறும் பாக்யத்தைத் தந்துள்ளதிலும், அதுவும் இந்தத் தனக்கு மிகவும் பழக்கமான, ரொம்ப நல்ல பையன் தன் பேத்தியை தன் மனசார விரும்புவதையும் நினைத்துப் பூரித்துப்போனாள். 

எல்லாம் அந்தக் கோயில் அம்பாளின் அனுக்கிரஹம் தான் என்று வியந்து, சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள் அந்தப் பூக்காரக்கிழவி. 

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. மீண்டும் கோயில் மணி மேள தாளத்துடன் ஒலித்தது. 
  








-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


இந்தச் சிறுகதை ‘வல்லமை’ மின் இதழில் 
30.09.2011 அன்று வெளியிடப்பட்டது
http://www.vallamai.com/archives/8633/