செவ்வாய், 20 மார்ச், 2012

SVANUBHAVA 2012 - திருச்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் [பகுதி-1 of 2]




சுகமான அனுபவம்
பகுதி-1 of 2

”ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர். 

இத்தகைய நம் புராதன பாரம்பர்யம் மிக்க கலை நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும், குறிப்பாக மாணவ சமுதாயத்திடமும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். 

டெல்லியிலும் சென்னையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள், சமீபத்தில் 24.02.2012 மற்றும் 25.02.2012 ஆகிய இரு நாட்களும் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள R.V. AUDITORIUM என்ற மிகப்பெரிய இடத்தில் நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.

முதல் நாள் 24.02.2012 அன்று மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன. 

அடுத்தநாள் 25.02.2012 அன்று ஒரு பாட்டுக் கச்சேரி, அதைத்தொடர்ந்து கரகாட்டம், ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி, பரத நாட்டியம் அதன் பிறகு எல்லா வயதினரும் சிரித்து மகிழ ஒரு நாடகம் முதலியன நடைபெற்றது.. 

http://svanubhava.blogspot.in/p/schedule_27.html + http://elavasam.blogspot.in/2012/02/blog-post_21.html  என்ற வலைப்பதிவுகளில் இந்தக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல்களைப் படித்த, பதிவர் ஒருவர் எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்கள். 

முதல் நாள் காலை மங்கள இசைக்குப் பிறகு நடைபெற்ற, திருமதி விசாஹா ஹரி அவர்களுடைய ஹரிகதாகாலட்சேபம் ஒரு மணி நேரமும் அதன்பிறகு வேறொரு குழுவினர் நடத்திய தெருக்கூத்து நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரமும் நேரில் சென்று காணும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.


 

திருமதி விசாஹா ஹரி அவர்கள்


காலை மிகச்சரியாக 10 மணி முதல் 11 மணி வரை, ஒரு மணி நேரம் மட்டுமே திருமதி விசாஹா ஹரி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மணி நேரத்திலும் கடைசி 20 நிமிடங்கள், அவையில் கூடியிருந்தவர்களின் கேள்விகளுக்கு, நிகழ்ச்சியில் பங்கேற்பவர் பதில் அளிக்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர். ஆகவே திருமதி விசாஹா ஹரி அவர்களின் இசைச்சொற்பொழிவு 40 நிமிடங்களுகு மட்டுமே நடைபெற்றது.

ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஆயிரம் பேர்களும், சுற்றுவட்டார சில பள்ளி மாணவ மாணவிகள் சுமார் ஐநூறு பேர்களும், பொதுமக்கள் சுமார் ஐநூறு பேர்களுமாக ஆக மொத்தம் 2000 பேர்களுடன் சபை நிரம்பி வழிந்தது.

எவ்வளவு அறிவு, எவ்வளவு அழகான மதுரமான குரல்வளம், எவ்வளவு கீர்த்தனைகள், எவ்வளவு விஷயஞானம், எவ்வளவு பக்குவம், எல்லாமே தெரிந்தவர்களாக இருக்கிறார்களே! என அவையோர் அனைவருமே அசந்து தான் போனார்கள். அனைவருமே மெய்மறந்து கேட்க மிகவும் ஆவலாகவும், அமைதியாகவும் அமர்ந்திருந்தது நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியே!

தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள், தான் சொல்ல விரும்பியதை மிகவும் இனிமையாகயும், மென்மையாகவும், கேட்பவர்களுக்கும் பக்திப்பரவஸம் ஏற்படுமாறும், அனைவருக்கும் எளிதில் மனதில் பதியுமாறும் மிக அழகாகச் சொன்னார்கள், திருமதி விசாஹா ஹரி அவர்கள் !!  

சரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷகத்தை அவர்களின் நாவினில் காணமுடிந்தது. சபையினர் அனைவரும் மிக அமைதியாகவும், ஆவலுடனும், பக்திப்பரவஸத்துடனும் கேட்டு மகிழ்ந்தனர்.    

முதல் 20 நிமிடங்களில் அவர் சொன்ன 
மிகச்சிறியதொரு புராணக் கதை:


ஏழு கண்டத்திற்கும் ராஜாதி ராஜாவாக இருந்தும், தான் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல், பெருமாளின் சுதர்ஸனச்சக்ரமே ராஜா எனவும், தான் ஓர் சேவகன் மட்டுமே எனவும் நினைத்து, நல்லாட்சி செய்தவர் அம்பரிஷ் என்பவர். 

தானும் ஏகாதஸி விரதமிருந்து, மக்களுக்கும் ஏகாதஸி விரத மகிமையை எடுத்துச்சொல்லி எல்லோருமே, மாதம் இருமுறை உபவாஸம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர் அந்த அம்பரிஷ் என்ற ராஜா. 

உடல் நலத்தைப் பேணிக்காக்க இன்றும் பல மதத்தினரும் பட்டினி இருந்து விரதம் அனுஷ்டிக்கின்றனர். மருத்துவத் துறையினரும் உணவுக் கட்டுப்பாடுகளைப் பற்றிய எச்சரிக்கைகள் தந்து வருகிறார்கள்.

ஏகாதஸி பட்டினியிருந்துள்ள அம்பரிஷிடம் அதிதியாக [விருந்தினராக] துர்வாஸர் என்ற மிகக்கோபிஷ்டரான முனிவர் (அந்த அம்பரிஷ் என்ற பேரரசரை சோதிக்கவே) வருகிறார். 


அது ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி நாள். பொதுவாக ஏகாதஸியன்று சுத்தமாக பட்டினியிருப்பவர்கள், மறுநாள் துவாதஸி அன்று சீக்கரமாகச் சாப்பிடுவது வழக்கம். 

துவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச்  சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார். 


இடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ். 

அதிதிக்கு போஜனம் இடுவதற்குள் குடிநீர் அருந்திவிட்ட அம்பரீஷ் மீது  துர்வாஸருக்கு கடும் கோபம் வந்து, ஏதோ மந்திரம் சொல்லி ஒரு பேயை வரவழைத்து அம்பரிஷை வதம் செய்யச்சொல்லி விடுகிறார். 


அம்பரிஷ் இதற்காக பயப்படவில்லை. தான் செய்தது ஒருவேளை தவறாக இருப்பின் அந்தப்பேய் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று பேசாமல் தைர்யமாக இருந்து விடுகிறார்.

ஏகாதஸி விரதமிருக்கும் தன் பக்தனுக்கு ஆபத்து என்றதும் சுதர்ஸனச்சக்கரம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்காமல் சுழன்று சென்று  அந்தப்பேயை அடித்து விரட்டியதோடு அல்லாமல் ஏவிவிட்ட துர்வாஸ முனிவரையும் துரத்த ஆரம்பித்து விட்டது. 

சற்றும் இதை எதிர்பாராத துர்வாஸ முனிவர், நேராகப் பெருமாளிடம் போய் முறையிடுகிறார். தன்னை எப்படியாவது இந்த ஆபத்திலிருந்து காத்தருளும்படி வேண்டுகிறார்.

“தன்னால் இதைத்தடுத்து நிறுத்த முடியாது எனவும், ஒரு வேளை என் பக்தனான அம்பரீஷிடம் சென்று, அவன் காலில் நீர் போய் விழுந்தால் ஸ்ரீசுதர்ஸனச்சக்ரம் ஒரு வேளை உம்மை மன்னிக்கலாம்” என்கிறார் பகவான். 

முனிவர் அம்பரீஷிடம் ஓடுகிறார். அம்பரீஷ் கால்களில் விழவும் தயாராகி விட்டார் துர்வாஸ முனிவர்.

பக்திமானான அம்பரீஷ் அப்போதும் முனிவரை மிகவும் உயர்ந்தவராகவே மதித்து ”என் காலில் தாங்கள் விழக்கூடாது. தாங்கள் மிகப்பெரிய ஞானி, முனிவர். நான் உண்மையிலேயே தவறு செய்திருந்தேனானால் அந்த ஸுதர்ஸனச்சக்கரம் என்னையே பலியிடட்டும்” என்கிறார்.

ஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.

-o-o-o-O-o-o-o-




அடுத்த 20 நிமிடங்களில் 

திருமதி விசாஹா ஹரி அவர்கள் கூறிய வேறொரு புராணக்கதையும், 

அதன் பிறகு கடைசி 20 நிமிடங்களில் நடந்த கேள்வி நேரத்தில்:  

ஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய  அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................


இதன் அடுத்த பகுதியில் தொடரும்.

38 கருத்துகள்:

  1. மறந்து போன நமது பாரம்பர்யம் மிக்க கலைகளை கண்டு களிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.! அதைப்பற்றிய மகிழ்வான அனுபவங்களை எங்களுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம்! சுவாரஸ்யமான அனுபவப்பகிர்வைத் தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. விசாகா ஹரி அவர்களின் கதாகாலட்சேபம் எனக்கும் மிகவும் பிடிக்கும். இந்த காலத்திலும் எங்கு சென்றாலும் மடிசாரை அழகாக கட்டிக் கொண்டு வந்து விடுகிறார். M.B.A பட்டதாரி.

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இவர் ஒரு சார்டட் அக்கவுண்டண்ட்.

    பதிலளிநீக்கு
  4. அட திருச்சிக்கே போனது மாதிரி இருந்துச்சுங்க :)

    பதிலளிநீக்கு
  5. விசாக ஹரி!-- கேட்கவே வேண்டாம்.. அவரது கதா காலட்சேபம் அவையில் அல்லது தொலைக்காட்சி முன் உட்கார்ந்து அவர் முகபாவம் பார்த்து நாமும் அதே உணர்வுகளைப் பெறும் பேறு பெற்று ரசித்துக் கேட்டு ஆனந்தம் அடைய வேண்டிய ஒன்று. சொல்லும் சொல்லுக்கேற்பவான உணர்வுகள் அவரை ஆட்கொண்டு, அந்த உணர்வுகளின் ஆளுகையில் அந்த உணர்வுகளே அவராகிப் போவார். இந்த பாணி இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி இதுவரை யாரும் பெற்றதில்லை.

    அப்படியானவரின் கதா காலட்சேபத்தின் ஒரு பகுதியை கேட்டு அனுபவித்து மிகச் சிறப்பாக
    கோர்வையாக வழங்கியிருக்கிறீர்கள். நேர்த்தியான நேரேஷன்! படிப்பதற்கு சுகமாக இருந்தது!

    மகாராஜா அம்பரீஷ் என்னும் விஷ்ணு பக்தரின் சரிதம் கேட்கும் பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு.

    அப்படியான அடக்கம் கொண்டுள் ளோரை எதிர் கொள்ளும் பொழுது எதிராளிக்கும் அந்த அடக்கம் வர வேண்டுமென்பது. பணிவு என்னும் பண்பு கொண்டோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பார்ப்போருக்கும் அவரின் அந்தப் பணிவு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கதையிலிருந்து இதுவே நாம் பெறும் பாடமாகத் தெரிகிறது.

    அடுத்த பகுதியையும் (கேட்க) வாசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கொடுங்கள், கோபால்ஜி!

    பதிலளிநீக்கு
  6. திருமதி விசாகா ஹரியின் காலட்சேபங்களை யூட்யூப்பிலிருந்து தரவிறக்கி கேட்டு ஆனந்தித்திருக்கிறேன். நேரில் கேட்கும் வாய்ப்பு பெற்ற நீங்கள் பாக்கியசாலி.

    அம்பரீஷ் ராஜா கதை திரு கோயந்தகா பதிப்பித்துள்ள பகவத் கீதை புத்தகத்தில் படித்துள்ளேன். அம்பரீஷ் ராஜா முக்தியடைந்த இடம் என்று கேரளாவில் ஷோரனூர் அருகே உள்ள ஒரு திவ்ய க்ஷேத்திரத்தின் தல புராணம் சொல்லுகிறது.

    பதிலளிநீக்கு
  7. ஒரு பெண் குழந்தை எழுப்பிய, என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய அருமையானதொரு கேள்வியும், அதற்கு திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொன்ன அழகான பதிலும் .......................
    ///
    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. I am a fan of Visaha Hari. I never miss her programme at Chennai. I am having some DVD too.(Especially Sundarakandam, Meenakshi Kalyanam).
    I think you had a very nice time.
    Thanks for the story narrated by her.
    Waiting for the next post.
    viji

    பதிலளிநீக்கு
  9. சுகமான அனுபவ்ம் கிடைத்தது உங்களுக்கு, காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. துவாதஸி அன்று, நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்த முனிவர், லேசில் அரண்மனைக்குத் திரும்பி வரவில்லை. அம்பரிஷ் ஏகாதஸிக்கு மறுநாளான துவாதஸி அன்றும் அதிதியாக வந்த முனிவருக்காக தானும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்.
    இடையில் மிகுந்த தாகம் எடுத்ததால் கொஞ்சம் குடிதண்ணீர் மட்டும் அருந்தி விடுகிறார், அம்பரிஷ்.

    தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.

    பதிலளிநீக்கு
  11. "துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமா?துவாதசி முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல் காலம் கடத்தியது தவறல்லவா?"
    "இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி."
    "கலங்காதீர். அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால் அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.
    "தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ"
    என்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.
    ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக் காட்டும் என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உபவாசம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம் முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    (ஏன் இப்படி நடந்தது என்பதற்கான புராண விளக்கம்)

    பதிலளிநீக்கு
  12. விசாகா ஹரியின் பாரம்பரியமிக்க கலைகளை கண்டு கேட்டு ரசிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது உங்க அதிர்ஷ்ட்டம்தான், அதை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டதால் நாங்களும் கொஞ்சம் அதிர்ஷடம் செய்திருக்கோம்

    பதிலளிநீக்கு
  13. @ரிஷபன் said...

    //தாகத்திற்காக தண்ணீர் அருந்தவில்லை. துவாதசி பாராயணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் ஏகாதசி விரத பலன் கிட்டாது. அதனால் அரசனை துளசி தீர்த்தம் அருந்தி பாராயணம் முடிக்குமாறு சொல்கிறார்கள். முனிவரை விட்டுவிட்டு உணவு அருந்திய தோஷம் வேண்டாம் என்று. அம்பரீஷனும் அப்படியே செய்கிறார்.//

    அன்புள்ள ரிஷபன் சார். தங்கள் விளக்கம் வெகு அருமையாக உள்ளது.

    அதாவது அம்பரீஷ்க்கு அன்று தாகம் எடுத்ததால் அவர் தண்ணீர் அருந்தவில்லை.

    துவாதஸியன்று குறிப்பிட்ட நாழிகைக்குள் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதஸி விரதத்தை முடிக்க வேண்டும்;

    அப்போது தான் ஏகாதஸி விரதம் இருந்த பலன் முழுமையாகக் கிட்டும்;

    அதனால், அவர் அருந்தியது துளஸி தீர்த்தம் மட்டுமே;

    அதுவும் அவருடன் இருந்த பல சாஸ்திரங்கள் படித்த அறிஞர்கள் வற்புருத்தி இந்த விஷயத்தை அம்பரீஷ் மஹாராஜாவுக்கு எடுத்துச் சொன்னதால், அவரும் இதுபோல துளஸி தீர்த்தம் மட்டும் அருந்தியுள்ளார். அதில் தவறேதும் இல்லை தான்.

    தாங்கள் சொல்லிய விஷயம மிக நன்றாகப் புரிகிறது.

    இதுவிஷயம் பற்றி திருமதி விசாஹா ஹரி அவர்கள் இவ்வளவு விளக்கமாக அன்று சொல்லவில்லை.

    தாகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் அருந்தினார் அம்பரீஷ் என்றே சொன்னார்கள்.

    ஒரு வேளை நேரமின்மையாலும், கேட்பவர்களில் பலரும் குழந்தைகள் தானே என்பதாலும், அதுபோல சுருக்கமாகச் சொல்லிவிட்டார்களோ என்னவோ.

    மேலும் நல்லதொரு விளக்கம் தாங்கள் கொடுத்துள்ளது, புராணக்கதையை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள எல்லோருக்குமே உதவக்கூடும்.

    தங்கள் விளக்கமும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

    மிக்க நன்றி, சார்.

    [நானும் இதற்கு முன்பு இந்த அம்பரீஷ் பற்றிய கதையைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை;

    அதனால் அவர்கள் அன்று இந்த நிகழ்ச்சியில் என்ன சொன்னார்களோ அதை நான் எவ்வளவு தூரம் கிரஹித்துக்கொண்டேனோ அதை மட்டுமே எழுதும்படியாக ஆகிவிட்டது என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்]

    அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  14. இது போன்ற சுவையான நிகழ்வுகள் 'சென்னைக்கு" அடுத்து உங்க ஊரில் தான் பார்க்கலாம். உம்... கொடுத்துவைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் கதையும், ரிஷபன் சாரின் விரிவான பின்னூட்டமும் ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..

    அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. thanks for sharing the story. I always like to hear stories. During childhood days, i used to attend the kathakalakshebam in the temples. But now that opportunity is not available for me in this part of the land. So watching the one telecasted in Vijay TV every morning.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பகிர்வு அற்புதம்.


    அம்பரீஷ் மகராஜா கதை குழந்தைகள் கேட்டது நன்மையே.
    பக்தியும், பணிவும், கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்ட சிறந்த அரசன்.

    ஏகாதஸி விரதகதை படிப்பவர்கள் என்றால் அம்பரீஸ் மகராஜாவை படித்து ஆக வேண்டும்.
    அவர் பக்தியால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

    குழந்தையின் கேள்விக்கு விசாகா அவர்களின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. சுகமான அனுபவம்
    ஸ்வானுபவா” என்ற இயக்கத்தினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நாட்டின் பல இடங்களில் நடத்தி வருகின்றனர்.

    ஸ்வானுபவமான பகிர்வுக்கள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  19. மங்களகரமான நாதஸ்வர இசை, ஹரிகதா காலட்சேபம், தெருக்கூத்து, குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி, தாளவாத்யக்கச்சேரி ஆகியவை நடைபெற்றன.

    மனமெங்கும் நிரம்பித் ததும்பும் அருமையான பகிர்வுகள்..

    இனிய நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  20. ஏழு கண்டங்களையும் ஆளும் அவ்வளவு பெரிய ஒரு மகாராஜா, ஏகாதஸி விரதம் விடாமல் கடைபிடித்து வந்த விஷ்ணு பக்தன், தன் தலைக்கே ஓர் ஆபத்து வரும் சூழ்நிலை வந்தபோதும் கூட, அவ்வளவு பணிவாக இருந்துள்ளார் என்பதை நாம் இந்தக்கதை மூலம் அறிய வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லி முடித்தார்.

    பணியுமாம் என்றும் பெருமை என்று உணர்த்திய அம்பரீச அரசனின் சிறப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்! அடுத்த பகுதியை எதிர் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  22. புராணக்கதைக்கு நன்றி விசாகாஹரியின் உபந்நியாசம் அருமையாக இருக்குமே(எங்க ஊர் மருமகள் ஆச்சே?:) இப்போ திருச்சில இல்லையேன்னு இருக்கு வைகோ சார் உங்க பதிவு என்னை அங்கே கொண்டுபோகிறது.

    பதிலளிநீக்கு
  23. அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டுகழித்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. கண்டோம் கேட்டோம் என்றில்லாமல் சுவாரஷ்யங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு இன்பம் தான்

    பதிலளிநீக்கு
  24. ஒரு நல்ல கதையினை எங்களுக்குத் தந்தது.... மகிழ்ச்சியும் நன்றியும்..

    அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.

    அன்புடன் எம்.ஜே.ராமன்.

    பதிலளிநீக்கு
  25. ஒரு நல்ல ,புகழ் பெற்ற ஹரிகதா கலைஞரின் நிகழ்ச்சியை கண் முன் கொண்டு வந்து நிருதிவிட்டேர்கள்...நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அவர்கள் உபன்யாசத்தை பதிவின் நீளம் கருதி
    முழுவதும் சொல்ல முடியாவிட்டாலும்
    அதை மிகச் சரியாக உணரும்படியாகவும்
    எங்களூரில் நடக்கையில் தவறவிடக்கூடாது என்கிற
    உறுதி கொள்ளுமாறும் ஒரு அருமையான பதிவினைத்
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  27. துளசி தீர்த்தம் அருந்தி விரதம் முடித்ததாக ரிஷபன் சார் கூறிய விளக்கமே சரியானது.

    அருமையான காலட்சேபமும் ஸ்வானுபாவமும் உங்களுக்கு அமைந்திருக்கிறது.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து அழகான நல்ல கருத்துக்கள் கூறி உற்சாகம் அளித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அடுத்த பகுதியில் மீண்டும் விரிவாக சந்திப்போம்.

    என்றும் அன்புடன் உங்கள் vgk

    பதிலளிநீக்கு
  29. ஏகாதசி விரத மகிமை அம்பரீஷ் மஹாராஜாவின் பணிவு அந்த சிறப்புகளை விசாகா ஹரி மூலம் கேட்க நேர்ந்தது எல்லா புண்ணிய பலன் களையும் எங்களையும் அடைய வச்சுட்டீங்க

    பதிலளிநீக்கு
  30. நானும் விசாகா ஹரியின் பரம ரசிகை.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் YOU TUBE ல் அவர் ஹரி கதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

    அவர் மடிசார் உடுத்தும் அழகே அழகு. அதையும் ரசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  31. மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru October 20, 2015 at 10:58 AM

      வாங்கோ முருகு, வணக்கம்மா

      //மைக்கு புடிச்சி பேச்ர அந்த அம்மா போட்டோ படம் நல்லாகீது.//

      அப்படியா !!!!!!!!!!!!!!!! மிகவும் சந்தோஷம். முடிந்தால் அந்த அம்மாவைப் பார்த்து இதை நான் சொல்லிவிடுகிறேன். :)

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  32. நமது பாரம்பரிய கலைகளைக்கண்டுகளிக்க தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயம் எங்களுக்கும் அதை அறிய தந்தீர்களே அம்பரீஷ் மஹாராஜா கதை துர்வாச முனிவரின் கோபம் எல்லாமே சிறப்பாக தெரிந்து கொள்ள முடிந்தது. திருமதி ஸ்ரீ விசாகா ஹரியின் கதைகள் கேட்க கொடுத்து வைத்திருக்கணுமே.

    பதிலளிநீக்கு
  33. வெரைட்டியான புரோகிராம்கள்!! பெண்மணிகளில் கதாகாலட்சேபம் செய்பவர்கள்...மிகவும் குறைவுதான்.

    பதிலளிநீக்கு