ச கு ன ம்
சிறுகதை [பகுதி 1 of 2]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
அன்று வைகுண்ட ஏகாதசி. விடியற்காலம் மூன்று மணிக்கே நான் அலாரம் வைத்து எழுந்துவிட்டேன். ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிக்கும் ஆவலில் வெளியூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கப்போகும் என் மாமியாரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துவர நான் திருச்சி ஜங்ஷனுக்குச் செல்ல வேண்டும். அவர்களை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து என் ஆபீஸுக்குச்செல்ல வேண்டும்.
குளித்து முடித்துப் புறப்படத் தயாரானேன்.
“நாலு மணிக்கு பால் பூத் திறந்துவிடும்; தயவுசெய்து இரண்டு அரை லிட்டர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொடுத்துட்டுப் போயிடுங்கோ; ஜங்ஷனுக்கு போகவர ஆட்டோ பேசிக்கொண்டு விடுங்கோ” புது டிகாக்ஷனில், ஃபிரிட்ஜ்ஜில் இருந்த பழையபாலை சுடவைத்துக் கலந்த காஃபியை நீட்டியவாறே அன்புக் கட்டளையிட்டாள் என்னவள்.
காஃபியை என் கையில் கொடுத்தவள், வாசலைப்பெருக்கி, தண்ணீர் தெளித்து, சிறிய கோலம் ஒன்றை அவசர அவசரமாகப் போடலானாள். [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும்]
காஃபியை என் கையில் கொடுத்தவள், வாசலைப்பெருக்கி, தண்ணீர் தெளித்து, சிறிய கோலம் ஒன்றை அவசர அவசரமாகப் போடலானாள். [வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது என்பது சாஸ்திர சம்ப்ரதாயமாகும்]
அந்த அடுக்குமாடிக் கட்டடத்தில், காலை ஆறு மணிக்கு மேல்தான் லிஃப்ட் இயக்கப்ப்ட வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. இரண்டாவது மாடியிலிருந்து முப்பத்தாறு படிகள் இறங்கி, தெருக்கோடியில் உள்ள பால் பூத்துக்கும் ஆட்டோவிலேயே சென்று, பால் பாக்கெட்டுகள் வாங்கிவந்து, ஆட்டோக்காரரை ஐந்து நிமிடம் நிற்கச்சொல்லி விட்டு வாங்கி வந்த புதுப்பாலை என் மனைவியிடம் கொடுக்க மீண்டும் படியேறினேன்.
நான் படியேறி மேலே போகும்போது, எண்பது வயதைத்தாண்டிய ஸ்ரீமதிப்பாட்டியும், ஐம்பது வயதாகியும் பிரும்மச்சாரியான அவர்களின் இரண்டாவது மகனும், முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி காவிரி ஸ்நானத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வயதிலும் அவர்கள் இருவரும் மிகவும் சுறுசுறுப்பானவர்களாகவே உள்ளனர். எனக்கும் தூரத்து சொந்தம் தான். அந்தக்கால உடம்பு. வெய்யிலோ, மழையோ, பனியோ, குளிரோ வருஷம் முழுவதும் விடியற்காலம் நாலு மணிக்குள் எழுந்து, ஐந்து மணிக்குள் கிளம்பி, போகவர சுமார் இரண்டை கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, விபூதியைக் குழைத்து இட்டுக்கொண்டு, சிவப்பழமாக சொட்டச்சொட்ட ஈரத்துணியுடன், காலை ஏழு மணிக்குள் திரும்பி வந்து விடுவார்கள்.
அந்த ஸ்ரீமதிப்பாட்டியின் கணவர் இருந்தவரை, அவருடனேயே தான் காவிரி ஸ்நானத்திற்கு சென்று வந்தார்கள். முகம் பூராவும் பசுமஞ்சளுடன் பார்க்கவே பறங்கிப்பழம்போல நல்ல சிவப்பாக,நெற்றியிலும், நடுவகிட்டிலும் குங்குமம் வைத்துக்கொண்டு, தீர்க்க சுமங்கலியாகவே சிரித்த முகத்துடன் அழகாக அம்பாள் போல காட்சியளித்தவர்கள் தான். இப்போது கணவர் காலமானபின் கூடத்துணைக்கு தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு தினமும் விடியற்காலம் காவிரிக்குச் சென்று வருகிறார்கள்.
பெரும்பாலும் நான் ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து ஆபீஸ் போக அவசரமாகச் செல்லும் போது, அநேகமாக இவர்கள் இருவரும் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு, சிவப்பழமாக எதிரே தென்படுவார்கள்.
ஆரம்ப நாட்களில் எனக்கு நேர் எதிராக வராமல், நான் ஆபீஸுக்கு நல்லபடியாக போய் வரவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில், சற்றே தயக்கத்துடன் ஒதுங்கி நின்று, வழிவிட்டு விடுவார்கள், அந்தப் பாட்டி.
ஒரு நாள், எனக்கு எதிரே ஏதோ யோசனையில் நடந்து வந்து விட்ட அவர்கள் என்னைப்பார்த்து, “சிவராமா, ஓரமா ஒரு நிமிஷம் உட்கார்ந்து விட்டு, பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு போப்பா” என்றார்கள் அந்த ஸ்ரீமதிப்பாட்டி.
“பாட்டி, நான் சகுனம் ஏதும் பார்ப்பதே கிடையாது. தினமுமே உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து கொண்டும் தான், ஆபீஸுக்குப்போய் கொண்டிருக்கிறேன்;
“பாட்டி, நான் சகுனம் ஏதும் பார்ப்பதே கிடையாது. தினமுமே உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், ஹனுமான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்து கொண்டும் தான், ஆபீஸுக்குப்போய் கொண்டிருக்கிறேன்;
மேலும் நீங்கள் பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, இந்தத் தள்ளாத வயதிலும், மிகவும் மனோ தைர்யத்துடன், தினமும் காவிரி ஸ்நானம் செய்து கொண்டு, பசி பட்டினி இருந்து தினமும் ஜபம், தபம், விரதம் முதலியவற்றை அனுஷ்டித்துக்கொண்டு, பழுத்த பழமாக இருந்து வருகிறீர்கள். நான் அலுவலகம் செல்லும்போது தாங்கள் என் எதிரே நடந்து வருவதை, ஒரு மிக நல்ல சகுனமாகவே எடுத்துக்கொள்கிறேன்;
தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது ஒருவர் மற்றொருவரை விட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத ஒரு இயற்கையின் நியதி தானே!
அதனால் என் எதிரில் தாங்கள் வர நேரும்போது, எந்தவிதமான தயக்கமும் இன்றி, ஒதுங்கி நிற்காமல் சர்வ சாதாரணமாகவே வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றேன்.
இதைக்கேட்டதும் ஸ்ரீமதிப் பாட்டிக்கு ஒரே சந்தோஷம்.
“சிவராமா, நீ மஹராஜனா நீண்ட நாட்கள் செளக்யமா, சந்தோஷமா இருக்கணும்டா” என்று வாயார வாழ்த்தினார்கள்.
இந்த அவசர யுகத்தில், விஞ்ஞான உலகத்தில், சகுனம் பார்ப்பது எவ்வளவு ஒரு மூட நம்பிக்கை என்பதை அந்த இரு பெரியவர்களுக்கும், நாசூக்காக உணர்த்தி விட்டோம் என்பதில் எனக்கு ஒரு பெரிய திருப்தி ஏற்பட்டது.
ரயிலில் வந்திறங்கிய என் மாமியாரை ஆட்டோவில் கூட்டிவந்து என் வீட்டில் விட்டுவிட்டு, அவசர அவசரமாக ஆபீஸுக்குப் புறப்பட்ட நான் ஏழு மணி பஸ்ஸையும் ஓடிப்போய் பிடித்து விட்டேன்.

