About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 9, 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-5Dr. VGK அவர்கள் வெளியிட்டுள்ள இந்த நூலில், அந்தக்காலக் கட்டத்தில் இங்கு தமிழ்நாட்டின் காவிரிக்கரையில் வாழ்ந்த பல்வேறு மகான்கள் பற்றியும், அவர்களை ஆதரித்து, ஆலோசகர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் பக்தி செலுத்தி, இறை நம்பிக்கையுடன், தர்ம சிந்தனைகளுடன், மிகவும் நல்லாட்சி புரிந்த ஒருசில மன்னர்கள் பற்றியும் நிறைய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

மகான்களின் மதிப்புத் தெரியாமல், அவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பல்வேறு மன்னர்கள் / அரசிகள் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டுள்ளன. 

மன்னர்களின் பலம், பலகீனம், அடிக்கடி இவர்களுக்குள் ஏற்பட்டு வந்த போர்கள், அதன் வெற்றிகள், தோல்விகள், மன்னர்கள் ஆண்டுவந்த காலக் கட்டம், அவர்களின் இல்வாழ்க்கை, வாரிசுகள், வாரிசுகள் இல்லாத மன்னர்கள், அவர்களில் பலருக்கும் ஏற்பட்ட இறுதி முடிவுகள் என பலவற்றையும், சுவைபட அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார் Dr. VGK. 

பொதுவாக கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டில், 1675 முதல் 1752 வரை, தமிழ் நாட்டின் காவிரிக்கரையோரம் வாழ்ந்துள்ள  மன்னர்கள் மற்றும் மகான்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

மகான்களில் குறிப்பாக (1) சதாசிவ பிரும்மேந்திராள் [1670-1752]; (2) மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி [1673-1762]; (3) ஸ்ரீதர வெங்கடேசர் அய்யர்வாள் [1635-1720]; (4) போதேந்திர சரஸ்வதி (1610-1692]; (5) நாராயண தீர்த்தர் (1675-1745]; (6) தாயுமானவர் (1707-1742]; (7) அபிராமி பட்டர் [1680-1750;  (8) பாஸ்கர ராயர் [1690-1785] ஆகியோர் பற்றி, மிக விரிவாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.

அதுபோல அப்போது ஆண்டுவந்த மன்னர்களில் மேற்படி மகான்கள் சிலருடன் தொடர்பில் இருந்த (1) சொக்கநாத நாயக்கர் (2) ராணி மீனாக்ஷி (3) மதுரை ராணி மங்கம்மாள், (4) ஷாஜி-2 (5) சரபோஜி, (6) விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் பற்றிய பல்வேறு செய்திகளை அறியமுடிகிறது.


 
^மதுரை ராணி மங்கம்மாள்^
^ஷாஜி-II தஞ்சாவூர்^

 கெம்ப கெளடா-1
 பெங்களூர்

தஞ்சை, திருச்சி, மதுரை, ஆற்காடு, செஞ்சி, பெங்களூர், புதுக்கோட்டை, ராமனாதபுரம், சிவகங்கை முதலிய பகுதிகளை ஆண்ட அரசர்களும், மராட்டியர், முகலாயர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் அரசியல் சக்திகளாக அப்போது இருந்துள்ளனர்.

மேற்படி மகான்களைத் தவிர குமரகுருபரர் போன்ற சைவ மட மகான்கள் பலரும், வைணவ, பெளத்த, சமணமதப் பண்டிதர்களும், வீரமா முனிவர் (கிறிஸ்தவர்), இரட்டை மஸ்தான் (இஸ்லாமியர்) போன்ற மகான்களும் அதே காலக்கட்டத்தில் இருந்திருக்கக்கூடும் என அறியப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் ஆதரவாளர்களாக பலரும் இருந்துள்ளனர்.  தமிழ்மொழி அப்போது பிரபந்த அளவிலேயே சிற்றிலக்கியமாக இருந்துள்ளது. கம்பர் அல்லது திருவள்ளுவரோடு ஒப்பிடும் அளவுக்கு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார் நம் நூல் ஆசிரியர் Dr, VGK.

ரகுநாத சேதுபதி-II என்னும் ’கிழவன் சேதுபதி’, மதுரை நாயக்கரின் கீழ், ராமனாதபுரத்தை ஆண்ட [1671-1710] ஒரு குறுநில மன்னன். மறவ மன்னர்களிலேயே சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். 1616-1682 வாழ்ந்த சொக்கநாத நாயக்கர் இவருக்கு ’பரராஜ கேசரி’ (அன்னிய அரசர்களுக்கு சிங்கம்போல விளங்குபவர்) என்ற பட்டத்தை வழங்கினார். ‘கிழவன் சேதுபதி’ 1707-இல் தன்னை ஒரு சுதந்திர மன்னனாக அறிவித்துக் கொண்டார். 1725-இல் மீண்டும் அது குறுநில நாடாக ஆக்கப்பட்டது. அதனால் சிவகங்கை ஓர் புதிய நாடாக அறிமுகமானது. 

 கிழவன் சேதுபதி

சிறந்த பக்திமானும், திருவாடனை, காளையார் கோயில் போன்றவற்றிற்கு நிறைய நிலங்களைக் கொடையாக அளித்தவரும், ராமநாதபுரத்தில் ஓர் கோட்டையையும், வைகையில் ஓர் அணையையும் கட்டியவரும், கிறிஸ்தவப் பாதிரிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவருமான  ‘கிழவன் சேதுபதி’க்கு மொத்தம் 45 மனைவிகள் இருந்ததாகவும், அதுதவிர ’கதலி’ என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகள் Dr. VGK அவர்களின் நூலின் மூலம் அறிய முடிகிறது. ’கதலி’யின் சகோதரரான ரகுநாதனை புதுக்கோட்டைக்கு மன்னராக்கி ‘தொண்டைமான்’ என்ற பட்டத்தையும் அளித்தார். இவ்வாறு ஒரு புதிய வம்சம் புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ளது. 

’கிழவன் சேதுபதி’ இறந்தபோது அவருடைய 45 மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர் என்கிறார் Dr. VGK. கிழவனின் தத்துப்பிள்ளையான விஜயரகுநாத சேதுபதி (1710-1723) அதன்பின் அரசராகியுள்ளார் என்கிறது இந்த நூல்.

இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அள்ளித்தந்துள்ளார், Dr. VGK அவர்கள். இயல்பான பேச்சுத்தமிழில், ஆங்காங்கே சிற்சில நகைச்சுவை வரிகளையும் சேர்த்து, ஒரு வரலாற்று நூலைப்படிக்கிறோம் என்ற அலுப்பேதும் ஏற்படாத வண்ணம், அழகாக ஓர் கதை போலச் சொல்லிச் செல்வது, படித்து மகிழ பேரின்பம் தருவதாக உள்ளது.

தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சாம்பாருக்கு ‘சாம்பார்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பக்கம் எண்: 136 இன் இறுதியில் சுட்டிக் காட்டியுள்ளது, இந்த நூலை வாசிக்கும் வாசகர்களை புன்னகை புரிய வைப்பதாக உள்ளது.


தொடரும் ....


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


Saturday, December 7, 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-4


நூலைப்பற்றியதோர் சுருக்கமான அறிமுகம்:

மன்னர் ஷாஜி-II, கும்பகோணம் அருகிலுள்ள திருவிசை நல்லூரில், 1693-இல், சாஸ்திரங்கள் படிக்க ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். 

கோபாலகிருஷ்ண சாஸ்திரி (பின்னர் ஒரு சமஸ்கிருத இலக்கண கர்த்தா ஆனவர்), சதாசிவ பிரம்மேந்திரர் (பின்னர் ஒரு யோகியாக பெயர் பெற்றவர்) இருவரும் அங்கு மாணவர்களாகச் சேர்ந்து நண்பர்களானார்கள். கெளண்டின்ய கோத்ரத்தைச் சேர்ந்த யக்ஞராம தீக்ஷிதரின் மகனும், கண்டர மாணிக்க பிரஹசரணக்காரருமான, ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் மேற்படி இருவரின் குருவாக இருந்தார். 

கண்டர மாணிக்கம் என்ற இந்த ஊர் குடவாசலுக்கு அருகில் உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவிலும் இதே ’கண்டர மாணிக்கம்’ என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது.  

ரிக் வேத பண்டிதரான ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதர் ஒரு மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர் மட்டுமல்ல. அதில் அவர் பல நூல்களை எழுதியுள்ளவர். வேதப் படிப்பு முடிந்தபின் வேதாந்தம், இலக்கியம், தர்க்கம் முதலிய பல சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர்.  திருமலை நாயக்கரிடம் அமைச்சராக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின் சீடரும் ஆவார். 

ஸ்ரீ ராமபத்ர தீக்ஷிதரால் இயற்றப்பட்டுள்ள 20 நூல்களில் மிக உயர்ந்து நிற்கும் மூன்று நூல்களைப்பற்றி, Dr. VGK அவர்கள், தனது நூலில் மிகவும் சிலாகித்துச் சொல்லியுள்ளார். மன்னர் ஷாஜியின் விருப்பத்தை, திவான் ஸ்ரீதர வெங்கடேசர் இவரிடம் தெரிவிக்க, இவரும் அதனை ஏற்றுக்கொண்டு, திருவிசை நல்லூருக்கே குடிபெயர்ந்து வந்து விடுகிறார். மேலும் பல ஆச்சர்யமான செய்திகள் Dr. VGK அவர்களின் நூலில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன.

^மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் 
அதிஷ்டானம், நமணசமுத்திரம்^
[புதுக்கோட்டையிலிருந்து 10 கிலோ மீட்டர்]
புதுக்கோட்டை-திருமயம் சாலையின் இடையே
சாலையை ஒட்டியுள்ள ஒரு மிகப்பெரிய வறண்ட ஏரிக்கு அப்பால்
தேக்காட்டூர் நோக்கிச் செல்லும் பாதைக்கு முன்பு பிரியும் 
ஓர் மண் சாலையில் அமைந்துள்ளது.
மேலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


^சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்^

மிகச் சிறந்த சிவ பக்தரான ‘ஸ்ரீதர வெங்கடேசர்’ அரசனின் திவானாக பொறுப்பில் இருந்துகொண்டு, அதே திருவிசை நல்லூரில் வாழ்ந்து வந்தார்.


 


^தன் தபோ வலிமையால், ’கங்காஷ்டகம்’ இயற்றி, கங்கையை தன் வீட்டுக் கிணற்றில் பொங்கி வரச் செய்த, திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயர்வாள் அவர்கள், மக்கள் நன்மைகளுக்காக மட்டுமே மன்னரிடம் திவானாக பணியில் இருந்தவர்.^


போதேந்திர சரஸ்வதி, பரம சிவேந்திர சரஸ்வதி போன்ற துறவிகளின் மடங்கள் அருகில் இருந்தன. தாயுமானவர், அபிராமி பட்டர், நாராயண தீர்த்தர், பாஸ்கர ராயர் போன்ற சில மகான்களும் அதே காலத்தில் அதே பகுதியில் வாழ்ந்தவர்கள். அது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது அதற்கு ஒரு பின்னணி அல்லது நோக்கம் இருந்ததா என்பது ஒரு தந்திரமான கேள்வி.
 

^ஸ்ரீ பகவன்நாம போதேந்திராள் அதிஷ்டான கோபுரம்
கோவிந்தபுரம் - கும்பகோணம்.^

^தாயுமானவர் சமாதியில் அவரது திரு உருவம்^

^அமாவாசையில் தோன்றிய முழு  நிலவு - அபிராமி அம்மை^
^வரஹூர் செல்லும் நாராயண் தீர்த்தரும், வெண் பன்றியும்^


இசை, இலக்கியம், மதம், தத்துவம் ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்ட அதே சமயத்தில், அரசியல் குழப்பங்கள், பொருளாதாரப் போராட்டங்கள், பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவைகளும் பெரிய அளவில் நிலவின. அப்போதிருந்த குறுநில மன்னர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்டும், கட்சி மாறிக்கொண்டும் இருந்தனர். ஆங்கில பிரஞ்சு வர்த்தகர்கள், நாடு பிடிக்கும் ஆசையில், இந்தச் சண்டைகளில் தங்கள் மூக்கை நுழைத்தனர்.  இறுதியில் ஆங்கிலேயர் வென்று, தமிழ்நாட்டில் காலூன்றினர். பின்னர் அவர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றினர்.

மஹாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியின் பரம்பரையில் வந்த இந்நூலின் ஆசிரியர் Dr. VGK அவர்கள், தனது மூதாதையரைப்பற்றியும், அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் அறிய முற்பட்டபோது கிடைத்த பல அரிய சுவாரஸ்யமான தகவல்களைத் திரட்டி, அவற்றை ஒரு புத்தகமாகத் தொகுத்திருக்கிறார்.  அப்போது வாழ்ந்த மகான்கள், மன்னர்களின் வாழ்க்கைகளின் மூலம், அக்காலக் கட்டத்தைப் பற்றிய ஒரு அழகிய, பரந்த காட்சியை இந்நூல் நம் கண்களுக்குக் காட்டுகிறது.

தொடரும்...


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

Thursday, December 5, 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-304.11.1970 முதல் 24.02.2009 வரை, சுமார் 38 வருடங்களுக்கும் மேலாக, திருச்சியில் உள்ள மிகப்பெரிய ’நவரத்னா / மஹாரத்னா’ பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு பணி நிலைகளில், பல்வேறு இலாகாக்களில் பணியாற்றிடும்  வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பட்டதாலும், அதிலும் 10.02.1981 முதல் 24.02.2009 வரை சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேல், நிதித்துறையின் மிக முக்கியமான, காசாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்று பணியாற்றிடும் வாய்ப்புக் கிட்டியமையாலும், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், இளநிலை அதிகாரிகள் மற்றும் Dr. VGK போன்ற மிக உயர்ந்த மேலதிகாரிகளுடன், ஓரளவுக்கு நெருங்கிப் பழகிடும் வாய்ப்புகள் அடியேனுக்கு அதுவாகவே அமைந்தது.
     
அலுவலக வேலைகளில் எங்களுக்குள் அன்றாடம் நேரடித் தொடர்புகள் இல்லாது போனாலும், BHEL என்ற மிகப்பெரிய இமயமலையின் எவரஸ்ட் சிகரமாக விளங்கிய Dr. VGK அவர்களுக்கும், எங்கோ ஒரு மூலையில், அதே இமயமலையின் அடிவாரத்தில் மிகச்சிறிய புல் போன்று முளைத்து விளங்கி வந்த மிகச் சாதாரணமானவனான எனக்கும், எப்படியோ ஒருசில பந்தங்கள் ஏற்பட்டு, ஒருவர் மேல் ஒருவர் மனதில் அன்புடனும், வாத்ஸல்யத்துடனும் பழகி வருவதற்கான சந்தர்ப்பங்கள், அபூர்வமாகவும்,  தெய்வாதீனமாகவும் சில சமயங்களில் ஏற்பட்டுள்ளன.

அடியேன் A2/304F என்ற கதவு எண் உடைய BHEL Township குடியிருப்பில் வசித்து வந்தபோது, Dr. VGK அவர்கள், நானே சற்றும் எதிர்பாராத ஒருநாள், என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்து சிறப்பித்திருந்தார்கள். 

என்னுடைய மூத்த பிள்ளை + மூன்றாம் பிள்ளை கல்யாணத்திற்கு (1998 மற்றும் 2009) எனது அழைப்பை ஏற்று, நேரில் வருகை தந்து சிறப்பித்துத் தந்தார்கள்.  

அவருக்கான கோயில் பிரார்த்தனை வேண்டுதல் ஒன்று (சிவன் கோயில் ஒன்றுக்கு 108 அகல் விளக்குகளில் எண்ணெய் + திரி போட்டு ஏற்றுதல்), அவர் சார்பில் என் மூலம் நிறைவேற்றித்தரும் சந்தர்ப்பம் Mr. G.JAYARAMAN என்பவரால் எனக்கு அளிக்கப்பட்டது. 

2006-ம் ஆண்டு, நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக (கடைசியாக என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்) டெல்லிக்குச் சென்றபோது, நான் தங்கியிருந்த BHEL GUEST HOUSE இல், வேறொரு தனி VIP அறையில், Dr. VGK அவர்களும் தங்கியிருந்ததால், அங்கும் ஒருசில நிமிடங்கள் அவரை சந்தித்துப் பேச வாய்ப்புக்கிடைத்தது.  Dr. VGK அவர்களுடனான இதுபோன்ற பல்வேறு பசுமையான + சந்தோஷமான நினைவலைகளை அவ்வப்போது எனக்குள் நினைத்து நான் மகிழ்வதுண்டு. 

நான் அறிந்த வரையில் Dr. VGK அவர்கள் திருச்சி BHEL 2 and 4 BLDG. இல், இரண்டாவது தளத்தில் முழுவதுமாக வியாபித்திருந்த ENGINEERING DESIGNS DEPARTMENT இல் பல்வேறு நிலைகளில் பல்லாண்டுகள், அனைவராலும் விரும்பப்பட்ட பொறுப்பான அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தவர். (இதே இலாகாவில் 1971-1975 காலக்கட்டத்தில் திரு. இராமபிரஸாத் என்பவர் HOD யாக இருந்தார். அவர் எங்கள் சங்க்ருதி கோத்திர, ஆபஸ்தம்ப சூத்ரக்காரர். எங்கள் இருவருக்கும் திருச்சி-லால்குடி மார்க்கத்தில் உள்ள ஆங்கரை கிராமத்திற்கு ஒரு கிலோமீட்டர் முன்பே அமைந்துள்ள, மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் ஸ்வாமியும், அங்கே காவல் தெய்வமாக உள்ள கருப்பருமே குலதெய்வமாகும்)   

பிறகு Dr. VGK அவர்கள் GENERAL MANAGER ஆக பதவி உயர்வு பெற்றபின் சிலகாலம் புதுடெல்லியில் உள்ள BHEL CORPORATE OFFICE க்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்கள்.

அபாரமான பாண்டித்யமும், மிகச்சிறந்த அறிவாற்றலும், தலைமைப் பண்புகளும், மனிதாபிமானமும், VERY QUICK AND CORRECT DECISION MAKING செய்வதில் வல்லமையும் மிக்க, மிகவும் நேர்மையாளரான Dr. VGK அவர்கள் BHEL திருச்சி குழுமத்தின் மிக உயர்ந்த பதவிப்பொறுப்பை [UNIT HEAD OF ’BHEL’ - TIRUCHI AS 'EXECUTIVE DIRECTOR'] ஏற்க வந்தநாளில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.` எனது பெயரும் எனது இனிஷியலும் உள்ள ஒருவர் மிக உயர்ந்த பதவியில் பொறுப்பேற்றுக்கொள்ள வரப்போகிறார் என்பதை அறிந்தவுடன் எனக்கு மேலும் ஓர் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது என்றும்கூடச் சொல்லலாம்.

Dr. VGK அவர்களின் பதவி ஏற்புக்கு முதல் நாள் (2005) காலை சுமார் 10 மணிக்கு, திருச்சி BHEL TOWNSHIP KAILASH GUEST HOUSE இல் தங்கியிருந்த அவர்கள், காரில் ஏறி ஊரகத்திலிருந்து, தஞ்சை-திருச்சி மெயின் ரோட்டுக்குச் செல்கிறார்.  TOWNSHIP ENTRANCE இல் உள்ள SECURITY OFFICIALS மிகவும் ALERT ஆக உள்ளனர். ஏதோவொரு அலுவலக வேலையாகச் சென்ற நான் அங்கு, எதற்கோ யாருக்காகவோ எதிர் திசையில் உள்ள ஓர் கடை வாசலில் (சந்துரு கடை வாசலில்) காத்து, நின்றுகொண்டு இருக்கிறேன். 


 


என்னைத்தாண்டிச் சென்ற ஓர் புத்தம்புதிய, A/C CAR WITH COOLING GLASS COVERED, SUDDEN BREAK போடப்பட்டு REVERSE இல் என்னை நோக்கி மெதுவாக வருகிறது. அந்தக் காரிலிருந்து இறங்கிய Dr. VGK அவர்கள், நேராக என்னை நோக்கி வந்து, கை குலுக்கிவிட்டு,  க்ஷேமநலம் விஜாரிக்கிறார். எதிர்புற பாதுகாப்பு அலுவலகத்தில் அப்போது பணியில் இருந்த அனைத்து SECURITY OFFICIALS களும், என்னவோ ஏதோ என்று பதறி அடித்து ஓடி வந்து, எங்களை சூழ்ந்து நின்று கொள்கிறார்கள்.  

”நாளைக்கு இங்கு ED யாக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறேன், தெரியுமா?” என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்க,  நான் அப்படியே  ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் விட்டேன். “நன்றாகத் தெரியும் ஸார்” என்று மகிழ்ச்சி பொங்க அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். பிறகு சிரித்த முகத்துடன் ”நாம் இனி அடிக்கடி சந்திக்கலாம்” எனச் சொல்லிவிட்டு, அவர் தனது காரில் ஏறி புறப்பட்டு விட்டார். அங்கிருந்த ஒருசில செக்யூரிட்டி அதிகாரிகள், அந்தக் காருக்கும், எனக்குமாகச் சேர்த்து ஓர் ராயல் சல்யூட் அடித்து விட்டு, நகர்ந்து சென்றார்கள்.  

மறுநாள் அந்தக்காரை ஓட்டிவந்த ஓட்டுனர் என்னை நேரில் வந்து எனது அலுவலகத்தில் சந்தித்தார். நான் அங்கே அந்தக்கடை வாசலில் நிற்கும் போது, என்னைத் தாண்டிச் சென்ற காரை சற்றே நிறுத்தச் சொன்னாராம். ”அங்கே அந்தக் கடை வாசலில் நிற்பது நம் கேஷ் ஆபீஸ் கோபாலகிருஷ்ணன் தானே?”, என அவரிடம் Dr. VGK விஜாரித்தாராம். அவர் ”ஆம்” என்று சொன்னதும் காரை கொஞ்சம் ரிவர்ஸில் எடுக்கச் சொன்னாராம்.  நீண்ட நாட்கள், ஊரை விட்டு ஊர், நாங்கள் இருவரும் பிரிந்திருந்தும், எத்தனை ஒரு ஞாபக சக்தியுடன், இந்த மிகவும் சாமானியனான என்னை, இன்னும் அவர் தனது நினைவில் வைத்துக்கொண்டுள்ளார் என்பதை நினைத்துப் பூரித்துப் போனேன். 

தனது அழுக்கு வஸ்திரத்தில் ஒரு பிடி அவல் மட்டும் எடுத்துக்கொண்டு, ஊருக்கே ராஜாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை தரிஸிக்கச் சென்ற ’சுதாமா’ என்ற குசேலரின் நிலையும் என் நிலையும் அன்று ஒன்றாகவே இருந்தது என எனக்குள் நினைத்துக்கொண்டேன். 


 

BHEL என்ற மிகப்பெரிய ஆலமரம் போன்ற நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும், இலாபகரமான + உலகத்தரம் வாய்ந்த உற்பத்திக்கும், ஆணி வேர்களாக இருந்து, அந்தக்காலத்தில் பணியாற்றிய உன்னதமான உயர் அதிகாரிகளின் ஒப்பற்ற வரிசையில் Dr. VGK அவர்களுக்கும் ஓர் தனியான சிறப்பிடம் உண்டு என்றால் அது மிகையாகாது.


  

இந்த நூலுக்கான தனது அணிந்துரையில் Mr. R. Padmanabhan, Present Executive Director, BHEL Tiruchi Complex அவர்கள் கூறியுள்ள கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்துள்ளவை:-

-=-=-=-=-=-=-

நூலாசிரியர் ”சுவாராஸ்யமான காலக்கட்டத்தில்” வாழ்ந்த மக்களின் அனுபவத்தைத் தான் உணர்ந்ததோடு, பிறருக்கும் உணர்த்தும் பணியை மிகவும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார். நூலின் நடை, அத்தனை இயல்பாக வந்திருக்கிறது. அவருடைய பன்முகத் தன்மையே அதற்குக் காரணம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

திரு. VGK ஒரு பொறியாளர் மட்டுமல்ல. மேலாண்மை நிபுணர், கணிப்பொறி தொழில்நுட்ப வித்தகர்,  ஆன்மீகச் செறிவு மிக்கவர், தொலை நோக்காளர். எழுத்தாளர், பேச்சாளர், உன்னதமான தலைவர், இயல்பாகவே இலக்கியம், சிற்பம், இசை, தத்துவம் என்னும் பலகலைகளிலும் ஈடுபாடுகொண்டவர். நுட்பங்களை உற்று நோக்கி பாராட்டும் உள்ளமும், உயர் சிந்தனையும் கொண்டவர். அனைத்துக்கும் மேலாக மனித மனங்களைப் படித்து, மனிதநேயம் மிக்கவராகத் திகழ்பவர். இத்தகைய பெருந்தன்மைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் படிப்போரின் மனதை ஈர்த்துத் தக்க வைத்துக்கொள்ளும், உண்மை பொதிந்த ஒரு களஞ்சியமாக இங்கே, இப்போது, இந்நூல் வடிவில் வெளிப்பட்டிருக்கிறது. 

-=-=-=-=-=-=-

 

தொடரும்...


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

   

Tuesday, December 3, 2019

தலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-2

18.11.2019 திங்கட்கிழமை
Dr. VGK 
அவர்களால் வெளியிடப்பட்ட 

தமிழ் நூலின் தலைப்பு:

காவிரிக்கரையில் வாழ்ந்த
மகான்களும், மன்னர்களும்ஆங்கில நூலின் தலைப்பு:

Saints and Kings from the 
Kaveri Belt of Tamilnadu ...

விழாவுக்கான அழைப்பிதழ்:


நூல் வெளியீட்டு விழாவில் நேரில் கலந்துகொண்டு, நூலின் தமிழ் பிரதி ஒன்றினை Dr. VGK அவர்களின் கையொப்பத்துடன் வாங்கி வந்து எனக்கு அன்பளிப்பாக அளித்துள்ளவர்: G.SRIDHAR, MANAGER / FINANCE, BHEL, திருச்சி அவர்கள்.  அவருக்கு அடியேனின் நன்றிகளை இங்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  


விலை மதிப்பற்ற இந்த புத்தகத்தின் விலை ரூ. 301-00 என பதிப்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நமது வலைத்தள வாசகர்களுக்காக மட்டும், பதிவுத் தபால் செலவு உள்பட, விசேஷ தள்ளுபடி விலையான  ரூ. 250 க்கு இந்த நூலை நாம், உடனடியாக வரவழைத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி முறைகளை இனிவரும் அடுத்த பகுதிகளில் விரிவாகச் சொல்ல நினைக்கிறேன்.

மேற்படி நூலுக்கு கீழ்க்கண்ட மூவர் வெகு அழகாக அணிந்துரை அளித்து சிறப்பித்துள்ளனர்.

1) திரு. ஆர். பத்மநாபன் அவர்கள். இன்றைய  ’செயலாண்மை இயக்குனர்’, பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி குழுமம், திருச்சி-14


2) பேராசிரியர் திரு. என். ராஜேந்திரன், துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.

3) முனைவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன், வரலாற்றாசிரியர் + தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தஞ்சாவூர்.

மஹான்களைப் பற்றிய செய்திகளுடன் கூடிய மேற்படி நூல் எனது கைகளுக்குக் கிடைத்த தினம்: 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பிரதோஷம் + சுப முஹூர்த்த தினம்.

Dr. VGK அவர்களின் அறிமுகத்துடன் தொடங்கும், 304 பக்கங்கள் கொண்ட, மிகச் சுவையான இந்தத் தமிழ் நூலின் முதல் 170 பக்கங்களை, இதுவரை மனதில் வாங்கிக்கொண்டு, ரஸித்து, ருசித்து அசை போட்டு படித்து முடித்துள்ளேன். மிகவும் பொக்கிஷமான இந்த நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை மேலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லுவேன்.

தொடரும்....
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]