என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]

ஒரு வழியாக லிஃப்டில் சிதறி இருந்த மசால்வடைத் துகள்களை சுத்தப்படுத்தி விட்டு, அவர்கள் மூவரும் வேண்டா வெறுப்பாக தங்கள் வீட்டை நெருங்கினர்.

வீட்டு வாசலில் பூட்டைத் தன் கையால் பிடித்து இழுத்தபடி, மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள அம்புஜத்தின் உடன்பிறப்பு கோவிந்தன் நின்று கொண்டிருந்தான்.

“வாடா .... கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம் ... ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று தன் உடன்பிறந்த தம்பியை கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம்.

ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக் கொண்டு, கைலியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல், கோவில் மாடு போல சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல, அவர் கண்களுக்குத் தெரிபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து புறப்பட்டு அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்றுவரை ஒரு பிரயோசனமும் இல்லை.

ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார். கோவிந்தனுக்கே அவரின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருந்தது.

“கோவிந்தா நீ தான் இதற்கு சரியான ஆளு! நம்ம வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னான்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மறுமானும் ( மறுமான் = அக்கா பிள்ளை ) ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று, தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்து விட்டு ”கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான்.

வீட்டைத் திறந்து நால்வரும் உள்ளே போனதும் “சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான், கோவிந்தன்.

“நீ முதலில் எலி எங்கே உள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப் பாரு ... சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு.

சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் ஹால் பக்கம் வெளியேற்றினான் கோவிந்தன். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு, உயரத்தில் இருந்த லாஃப்ட்களில் உள்ள அனைத்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள் என எல்லாவற்றையும் எடுத்து, தொப்தொப்பென்று கீழே போட ஆரம்பித்தான். சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ் கற்களில் கீறல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்கு கூடமாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து அத்திம்பேர் (அத்திம்பேர்=அக்காவின் கணவர்)! நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாகப் பிராண்டிட்டுப் போய் விடப் போகிறது” என்று எச்சரித்தான், கோவிந்தன்.

இதைக் கேட்டதும் ராமசுப்புவுக்கு, நிஜமாகவே அது போல நடந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு, அரண்டு மிரண்டு போய், பெட்ரூம் கதவை சாத்தி விட்டு, ஃபேனைத் தட்டிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தார்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும், அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென்று விழுந்ததில், எலியோ என பயந்து போய், கட்டிலிலிருந்து எழுந்த அவர் ஒரு பரத நாட்டியமே ஆடியதில், அங்கிருந்த டீப்பாய் மேல் இருந்த இருமல் சிரப் மருந்து பாட்டில் கீழே விழுந்து, அது உடைந்து அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.


தொடரும்

சனி, 26 பிப்ரவரி, 2011

இனிய செய்தி - 4

06.03.2011 தேதியிட்டு 
இன்று வெளியான கல்கி வார இதழ் - பக்கம் 81 இல்
”இதுக்கு எழுதவா ஜோக்ஸ்”
 பகுதியில் நான் எழுதிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெற்றுள்ளது 
என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


போட்டி அறிவிப்பு செய்யப்பட்ட கல்கி இதழ் பக்கம் 67/ 13.02.2011 போட்டிக்கு வரையப்பட்டிருந்த ஓவியத்தின் படவிளக்கம்:




ஒருவள் காதில் ஸ்பீக்கர் ஆன் செய்த செல் போன்.
யாரோ ஒரு ஆண் மகன் எங்கிருந்தோ அழைத்துப் பேசுகிறார்.  
(அழைப்பவர் அவள் கணவனாகவும் இருக்கலாம்) 
அவள் விழிகளில் மிகவும் வியப்புடன் ஒரு பார்வை; 
அவள் அருகே போனில் வந்துள்ள செய்தியைத் தானும் 
ஆச்சர்யத்துடன் கேட்கும் நாயோ பூனையோ 
போன்ற அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணி ஒன்று.

மேலே கொடுத்துள்ள சூழ்நிலைக்கு நான் எழுதி அனுப்பி
தேர்வாகி பிரசுரிக்கப்பட்டுள்ள ஜோக் இப்போது இங்கே:

“என்னங்க, நான் தாங்க பேசறேன். ஃபோனை 
அந்த நாய்கிட்ட கொடுன்னு சொல்றீங்க!”

“ஸாரி டியர், ஃபோனை எடுத்தது 
நம்ம ஜிம்மியாக்கும்னு நினைச்சேன்.”

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

இனிய செய்தி 3

”நம் உரத்த சிந்தனை”
(தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்)
53, லக்ஷ்மியம்மன் கோவில் தெரு, பெரம்பூர், சென்னை-11

பிப்ரவரி 2011 இதழின், பக்கம் எண் 36 இல்
வெளியிடப்பட்டுள்ள
நூல் மதிப்பீடு பற்றிய விபரம:

=============================================================

”எங்கெங்கும் .. எப்போதும் .. என்னோடு”

ஆசிரியர்: வை. கோபாலகிருஷ்ணன்

மணிமேகலைப் பிரசுரம்,
4 தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை-17

”முதல் கதையில் ஆரம்பிக்கிற விறுவிறுப்பு, 15 கதைகளையும் படித்து முடிக்கிற வரை தொடர்கிறது. கதைகள் அன்னியப்படாமல் நம் பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில் நடப்பதைப் போல் உள்ளது.

ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இந்நூல், சிறுகதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறது.”

==============================================================

என் வலைப்பூ நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் தகவலுக்காக மட்டும்.



’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]

ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த வண்ணம் தாண்டிக் குதித்து, பெட் ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு மிகவும் உஷாராக சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்து விட்டு, பூட்டிய வீட்டைத் திறந்து வெளியே போய், மீண்டும் வீட்டையும் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றனர்.

திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது, நம் ராமசுப்புவுக்கு.

பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில் (லாஃப்ட்டில்), வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை வாங்கிக் கொண்டபின், சூடான சுவையான ரோட்டுக்கடை ... மசால் வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே, கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

“ஆள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பக்கம் எலி வரவே வராது, சார். அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது சார். நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்து பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்து, அந்த எலிக்கூடையும் ஒப்படைத்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அனுப்பி வைத்தார், பரந்தாமன்.

தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல, பரந்தாமன் கொடுத்த நம்பிக்கையில் எலிக்கூட்டுடன் அடுக்கு மாடி வீட்டுக்கு விரைவாகச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்றாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட் ஏறியபோது, கூடவே ஒட்டிக்கொண்ட பால்காரர் ஒருவர், “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார். சுத்தமாக சோப்புப் போட்டுக்கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சரியான நேரத்தில், இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக்கூறிய அந்தப் பால்காரரை நன்றியுடன் நோக்கிய ராமசுப்பு, அந்தப் பால்காரரை விட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக் கொடுத்து உதவுமாறு வேண்டினார், பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத் திட்டத்தில்.

பால்காரர் எலிக்கூட்டின் உள்ளே தன் முரட்டுக் கையைவிட்டு வடையைப் பிடித்து வேகமாக இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால் வடை, தூள் தூளாகி லிஃப்டினுள்ளேயே சிந்திச் சிதறியது.

“எலிக் கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க ஸார்” என்றார் மிகவும் அஸால்ட்டாக அந்தப் பால்காரர்.

’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.


தொடரும்


புதன், 23 பிப்ரவரி, 2011

’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]

செயலற்ற செயலாளராக இருப்பதாகச் சொல்லி, தன் மீது கண்டனத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய புண்ணியவான்கள் யாரோ, நம்மீது உள்ள கடுப்பில், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களில் யாரோ ஒருவரின் சதித்திட்டமாகத் தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது.

பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (தென்னங்கீற்றுக் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு, ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார்.

வீட்டின் வெளிப்பக்க கிரில்கேட் திறந்தே இருந்தது. பூட்டிய பூட்டு மட்டும் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் வெளிக்கதவைப் பூட்டி விட்டு உள்ளே போனார். ஹாலில் யாரும் பார்க்காமலேயே, டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அதை ரிமோட்டால் அணைத்து விட்டு, மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிகொண்டார்.

சமையல் அறைப் பக்கம் தான் நேரில் பர்த்து விட்ட அந்த எலியின் நடமாட்டத்தைப் பற்றி, திகிலுடன் அம்புஜம் விவரித்துக் கூறியதை, ஒரு மர்மக் கதை போல அரண்டு மிரண்டபடியே கேட்டுக்கொண்டார், ராமசுப்பு.

பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியை செல்போனில் அழைத்தார், ராமசுப்பு.

அது சமயம் தன் குடும்பத்தாருடன் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்குப் பாலாபிஷேகம் செய்யப் போயிருந்தார் பட்டாபி. தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கிப் பரிகாரம் கேட்கலானார், ராமசுப்பு.

“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். அவ்வாறு செய்தால் பூனை எலியைப் பிடித்துத் தின்று விடும் என்று ஒரு ஆலோசனையும்; எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கி விட்டு, அபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, தொடர்பைத் துண்டித்து விட்டார், பட்டாபி.


“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்து விடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதையும் நிராகரித்து விட்டாள்.


“வளவளன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருக்காமல் சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுங்கப்பா .... மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் ராஜூ.


தொடரும்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]

அன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்

“அப்பா.... நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.

ராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.

சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.

அவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.

புதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.

வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் ஒரு சரியான சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன்.

மீட்டிங்கில் பலர் சொன்ன பலவிதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.


தொடரும்

சனி, 19 பிப்ரவரி, 2011

மீண்டும் இனிய செய்தி

அன்புள்ள வலைப்பூ நண்பர்களுக்கு,

கல்கியின் ’வித்யாசமாக யோசியுங்க’ பகுதியில் இன்று மீண்டும் என் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

[ Ref: 27.02.2011 தேதியிட்ட கல்கி பக்கம் எண் 54 ]

அன்புடன்,
வை கோபாலகிருஷ்ணன் ,



வியாழன், 17 பிப்ரவரி, 2011

சூ ழ் நி லை

காலை 10 மணி. பிஸினஸ் விஷயமாக சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது.

”குட்மார்னிங் ... ஜெயா... சொல்லு” என்றார் டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம்.

ஜெயாவுக்கு குரல் தடுமாறியது. அவள் அழுது கொண்டே பேசுவது இவருக்குப் புரிந்தது.

“அப்பா... தாத்தா சென்னையில் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டாராம். இப்போது தான் போன் வந்தது. அவரின் உடல் ‘ஜி.ஹெச்’ இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங் ஃப்ளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள்.

மஹாலிங்கம் சற்று பலமாகச் சிரித்துக் கொண்டே, “அப்படியாம்மா, ரொம்ப சந்தோஷம். நான் அவசியம் போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்” என்றார், சற்றும் தன் முகபாவணையில் வருத்தமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லாமல்.

தன் அப்பாவின் இத்தகைய பேச்சு ஜெயாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. தன் தாயாரிடம் இந்த டெலிபோன் உரையாடலைப் பக்குவமாக எடுத்துச் சொன்னாள்.

இதைக் கேள்விபட்ட மஹாலிங்கத்தின் மனைவி ஈஸ்வரிக்கு தன் கணவன் மீது கோபமாக வந்தது.

“கோடீஸ்வரரான இவருக்கு எப்போதுமே எங்க பிறந்த வீட்டுக் காரங்களைக் கண்டாலே ஒரு வித இளக்காரம் தான். மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு. இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன்” என்று தன் மகளிடம் கூறிவிட்டு, விமான டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடுகளைக் கவனிக்கலானாள்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட மஹாலிங்கம், தன் தந்தை இறந்த துகத்தில் மூழ்கியிருக்கும் ஈஸ்வரியுடன் அதிகமாக மனம் விட்டு பேச முடியாமல் போனது. அகால மரணம் ஒன்று எதிர்பாராமல் நடந்து விட்ட அந்த வீடு இருக்கும் சூழ்நிலையிலும், பெரியவரின் மறைவால் அந்த வீட்டில் குழுமியிருக்கும் மனிதர்களின் துக்கமான மன நிலையிலும், எப்படி அவர்கள் மனம் விட்டு பேச முடியும்.

ஈஸ்வரி ஒரு மூன்று வாரங்களாவது இங்கேயே (பிறந்த வீட்டிலேயே) இருந்து விட்டு, பிறகு டெல்லிக்கு புறப்பட்டு வரட்டும் என்று தன் மாமியாருக்கும் மனைவிக்கும் பொதுவாக காதில் விழுமாறு சொல்லி விட்டு, தான் மட்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால் அவரால் எந்த வீட்டிலும், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாது. துக்க வீட்டுக்கு வந்து விட்டு ’போயிட்டு வருகிறேன்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அதனால் டக்கென்று புறப்பட்டு விட்டார். அவர் எப்போதுமே இப்படித்தான் என்று தெரிந்த ஈஸ்வரியும் அவர் மேல் இப்போது உள்ள கோபத்தில், அவருடன் முகம் கொடுத்தே பேசவில்லை.

இதற்கிடையில் தன் கணவன் இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி பெருமையாகப் பேசி பூரித்துப் போகும் தன் தாயிடமே கோபமாக வந்தது, ஈஸ்வரிக்கு.

அடுத்த ஒரு மாதமும் கோபத்தில், தன் கணவனுடன் தொலைபேசியில் கூட பேசுவதைத் தவிர்த்து விட்டாள் ஈஸ்வரி. அவ்வளவு கோபம் அவர் மீது.

ஒரு மாதம் கழித்து ஒரு வழியாக டெல்லிக்குத் திரும்பினாள் ஈஸ்வரி.

“வா, ஈஸ்வரி” என்று அன்புடன் தான் வரவேற்றார், தற்செயலாக அன்று வீட்டில் இருந்த மஹாலிங்கம். ஜெயாவும், தன் அன்புத் தந்தையை இழந்த துக்கத்துடன் திரும்பி வந்துள்ள தன் அம்மாவை ஓடிச்சென்று ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

தன் வயது வந்த மகள் பக்கத்தில் இருக்கிறாளே என்றும் பாராமல் ஈஸ்வரி கோபமாக தன் கணவனிடம் வாய் சண்டையிட தயாராகி விட்டாள்.

“எங்கப்பா சாலை விபத்திலே செத்துப்போனது உங்களுக்கு ரொம்பவும் ஸந்தோஷமா? இது போல நீங்க ஜெயாவிடம் சொன்னது கொஞ்சமாவது நியாயமா? உங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும், எங்க அப்பாவை அந்தப் பணத்தால் திரும்ப வரவழைக்க முடியுமா? ” என சுடும் எண்ணெயில் போட்ட அப்பளமாகப் பொரிந்து தள்ளினாள்.

“வெரி... வெரி... ஸாரி ஈஸ்வரி, இது தான் உன் கோபத்திற்குக் காரணமா?

“சென்னைக்குப் போன இடத்தில் என் நண்பர் ஒருவர் மூலம், நம்ம ஜெயாவுக்கு எல்லா விதத்திலும் நல்ல ஒரு பொருத்தமான மாப்பிள்ளை பையன் பார்த்து, ஜாதகமும் பொருந்தி, மற்ற எல்லா விஷயங்களும் பேசி முடிக்கும் நேரம், நம் ஜெயாவிடமிருந்து, இந்த துக்கமான தகவல் வந்தது. நான் அங்கிருந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பிள்ளை வீட்டார் ஏதாவது அபசகுனமாக நினைக்காமல் இருக்கவும் தான், அவ்வாறு சொல்லும் படியும், சமாளிக்கும் படியும் ஆகி விட்டது.

என்னிடம் உள்ள பணத்தாலும், செல்வாக்காலும் அவரின் உயிரைத் திரும்ப கொண்டு வர முடியாவிட்டாலும், அவருடைய உடலையாவது வெகு சீக்கரமாக ”ஜி.ஹெச்” லிருந்து வீட்டுக்குக் கொண்டு வர முடிந்தது.

மேற்கொண்டு செய்ய வேண்டிய இறுதிச் சடங்களின் எல்லாச் செலவுகளுமே என்னுடையதாக இருக்கட்டும் என்று சொல்லி, உன் அம்மாவிடம் நிறைய பணம் கொடுத்து வர முடிந்தது.

இந்தப் பணம் கொடுத்த விஷயம் மட்டும் உன்னிடமோ, வேறு யாரிடமுமோ சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனக்கும் என் மாமனாரின் இந்த திடீர் முடிவில் மிகவும் வருத்தம் தான். அவரின் விதி அது போல உள்ளபோது நம்மால் என்ன செய்ய முடியும்?

அமரரான உன் அப்பா ஆசீர்வாதத்தால் தான், இந்த ஒரு நல்ல இடம் கை கூடி வந்து, நம் ஜெயாவின் கல்யாணம் நல்லபடியாக முடியணும்!” என்று சொல்லி, தன் மனைவின் கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார் மஹாலிங்கம்.

தன் கணவனின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அவரின் சமயோஜிதச் செயலையும், தனக்கே கூடத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு, அவர் தக்க நேரத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

அவரின் சூழ்நிலை தெரியாமல் அவசரப்பட்டு ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோமே என வருந்தி, அவர் மீது சாய்ந்த வண்ணம் கண்ணீர் சிந்தினாள், ஈஸ்வரி.

தாத்தாவின் திடீர் மரணம், ஒரு விதத்தில் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதை எண்ணி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள், மணப்பெண் ஜெயா.

-o-o-o-o-o-o-




















செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 ) ]

இந்தக் கதையின் முன் பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot/2011/02/4-8.html பகுதி 1
to 4
http://gopu1949.blogspot/2011/02/5-8.html பகுதி 5
http://gopu1949.blogspot/2011/02/7-8.html பகுதி 6 & 7


இப்போது இந்தக் கதையின் நிறைவுப் பகுதி [ பகுதி 8 ]


சமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.

அவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு, வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.

பிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்
” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


ஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி.

அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது.


“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).

ரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.

பாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.


தயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி.


இதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:

“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.

கோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.

ஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.

கோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.

அந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.

அடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

அதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.

நடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.

உங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு?

எது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.

நமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.

அது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.

நீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ!

அதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ!

இங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;

தங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

நாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.

அந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்” ஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.

அழகிய உடலோ
அருவருப்பான உடலோ
உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்
அழுகக்கூடிய, நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய பொருளாகி விடுகிறது.
அதை எரிக்க வேண்டிய அவசரமும், அவசியமும்
நிர்பந்தமும் ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்
அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை
.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ
என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!

பெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.


-oooooooooo-

இந்த நெடுங்கதை, மார்ச் 2006 “மங்கையர் மலர்” தமிழ் மாத இதழின் பக்கம் எண்கள்: 98 முதல் 112 வரை, என் அன்பு மனைவி திருமதி: வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில், முதன் முதலாக வெளியிடப்பட்டது.

இந்தக் கதையைப் படித்து மகிழ்ந்த, தமிழ் மொழி தெரிந்த கன்னட எழுத்தாளர் ஒருவர், மங்கையர் மலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எங்கள் விலாசம் பெற்று, பிறகு எங்களுடனும் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், எங்கள் அனுமதியுடன், இந்தக் கதையை, கன்னடத்தில் மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகையான ”கஸ்தூரி” யில், “மையெல்லாக் கண்டு” என்ற தலைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரே எனது வேறு சில கதைகளையும், மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியிட்டு வ்ருகிறார். கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் எங்கள் நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது.
நான்கு வருஷங்கள் ஆகியும், ஒருவரை ஒருவர் நேரில் இதுவரை சந்தித்தது பேச சந்தர்ப்பம் அமையவில்லை.

அவர் ஓய்வு நேரம் ஏதும் இல்லாத, மிகவும் பிஸியான, பிரபல கர்நாடிக் ம்யூசிக் மேதை; கர்நாடக அரசால் அவ்வப்போது நடத்தப்படும் ம்யூசிக் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கும் மகத்தான பணியை மேற்கொள்ளும் அளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த திறமையும் ஈடுபாடும் புகழும் பெற்றவர். தன் வீட்டிலேயே பலருக்கும் ம்யூசிக் கற்றுத்தருபவரும் கூட. ஒரு ஆர்வத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் எழுத்துத் துறையிலும் அவ்வப்போது, ஒரு பொழுது போக்குக்காக ஈடுபட்டு வரும் அவர், பெங்களூரூவில் வசிக்கும், ஒரு குடும்பத் தலைவி என்பதும் குறிப்பிடத் தக்கது.

-=-=-=-=-=-=-=-=-

திங்கள், 14 பிப்ரவரி, 2011

சிரிக்கலாம் வாங்க ! [ உலக்கை அடி ]

அந்த காலத்திலெல்லாம் பெரும்பாலும் வீட்டுக்கு வீடு மாமியார், தன் மருமகளைப் பாடாய்ப் படுத்தியதைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம் அல்லது கேள்விப் பட்டிருக்கிறோம். ஏன் இன்றும் கூட ஆங்காங்கே இவ்வாறு நடப்பதாகச் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இப்படியாகத்தானே, மாமியார் கொடுமைகளால் படாத பாடு பட்டு வந்த மருமகள் ஒருத்தி கடைசியில் பொறுமையிழந்து என்ன செய்தாள் என்று நாம் பார்ப்போமா ?

அதற்கு முன் உலக்கை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்:

உலக்கையை பற்றி இப்போது எதற்கு அனாவஸ்யமாக என்கிறீர்களா? அது ஒன்றும் அனாவஸ்யமல்ல, மிகவும் அவஸ்யம் தான்.

உலக்கையை பற்றித் தெரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தக்கதையில் வரும் சம்பவத்தைப் படித்தால் உவகை ஏற்படாது, அதனால் தான்.

சுமார் 150 செண்டிமீட்டர் உயரமும், 5 செண்டிமீட்டர் விட்டமும் கொண்ட உருளை வடிவில் (சற்று தடிமனாக) மரத்தினால் செய்யப்பட்ட வழவழப்பான ஒரு கழி. மூங்கில் போன்ற வடிவமைப்பில் ஆன ஒரு மரத்தடி. மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதிகளில் கொஞ்சம் மட்டும் பூண் போட்டு தகரத்தினால் அடித்திருப்பார்கள் ஒரு வித ஃபினிஷிங் அழகு கொடுக்க. உரலில் நெல்லைப் போட்டு, இந்த உலக்கை என்ற தடிமனான கழியால் இடித்து இடித்து, நெல்லிலிருந்து உமியைப் பிரித்து, கைக்குத்தல் அரிசி தயாரிப்பார்கள். உரலில் உள்ள நெல்லை இந்த உலக்கையால் குத்தி இடிப்பது சற்று கஷ்டமான வேலை தான், ஏனென்றால் அது வெயிட் ஆக இருக்கும்; கைகளை வலிக்கும்; படிக்கும் நமக்கல்ல, குத்தி இடிப்பவர்களுக்கு மட்டும்.

சரி, இப்போது கதைக்குப் போவோமா ?


மாமியார் படுத்த படுக்கையாகி விட்டார்கள். ஆட்டம் பாட்டமெல்லாம் இனி நடக்காது என்று ஆகிப்போன நிலை. தனியாக ஒரு ரூமில் அவர்களிடமிருந்து அவ்வப்போது ஏதேதோ முனகல் சப்தங்கள் மட்டும் வந்த வண்ணம் உள்ளது. போனால் போகிறதென்று மூத்த மருமகள் மட்டும் ஏதோ அவ்வப்போது ரூமில் எட்டிப் பார்த்து கவனித்துக் கொண்டு வருகிறாள், உயிர் இருக்கிறதா இல்லையா என்று.

தன்னை அவள் என்ன பாடு படுத்தியிருக்கிறாள்; வாழ்க்கைப்பட்டு வந்த புதிதில் வட்டமாக தோசை வார்க்கவே கஷ்டப்பட்டு வந்த என்னைப் போய், அவர்களுக்கு நான் போட்ட தோசை சுடச்சுட இல்லாமல் இருப்பதாகச் சொல்லி, தோசைத் திருப்பியில் நல்ல சூடு ஏற்றி என் தொடைப் பகுதியில் சூட்டைக் காய்ச்சி இழுத்தவர்கள் தானே இந்த என் மாமியார். அந்தத் தழும்பு கூட இன்றும் ஞாபகார்த்தமாக அப்படியே இருக்கிறதே! அதெற்கெல்லாம் அனுபவிக்க வேண்டாமா, அவ்வளவு சீக்கரம் உயிர் போயிடுமா என்ன! நினைத்துக் கொள்கிறாள் மருமகள்,

அவளும் பொறுத்துப் பொறுத்து பார்த்தாள். இந்த தன் மாமியார்க் கிழவி சட்டென டிக்கெட் வாங்கிக்கொண்டு போகாமல், தானும் சிரமப் பட்டுக்கொண்டு, தன்னையும் சிரமப் படுத்தி வருவதாக உணர்ந்தாள், ஒருநாள்.

எமதர்மராஜா, தன் மாமியாரின் சீட்டைக் கிழிக்க மறந்துட்டானோ? அல்லது சீட்டையே எங்காவது தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறானோ? என்னவோ, நாமே அவனுக்கு ஞாபகப் படுத்தி உதவனும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மாமியாரிடமிருந்து முக்கல் முனகலுடன் கூடிய அழைப்பு. நல்லவேளையாக வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாருமே இல்லை.

மளமளவென்று உள்ளே போனாள். சுவர் ஓரமாக மூலையில் ஒரு உலக்கை சாத்தப்பட்டு நின்று கொண்டிருந்தது. அதைக் கையில் எடுத்தாள்; மாமியார் கழுத்தில் ஓங்கி ஒரு போடு போட்டாள்.

பேச்சு மூச்சு நின்று போனது போலத் தோன்றியது, அவளுக்கு. ஊரைக் கூட்டினாள். ஒப்பாரி வைத்தாள். அனைவரும் வந்தனர். கூடி நின்று கழுத்து வீங்கிய கிழவியைக் கண்டனர். வேலைக்குச் சென்றிருந்த தன் கணவர், மற்ற இரு கொழுந்தன்கள், அவர்கள் மனைவிகள் என எல்லோருக்கும் செய்தி போய் அனைவரும கூடி விட்டனர்.

மூத்தவனுக்கு அம்மா மேல் பாசம் அதிகம். “அம்மாவுக்கு திடீரென என்ன ஆச்சு, நீ என் அம்மாவை கவனித்துக் கொள்ளும் லட்சணம் இது தானா” என மனைவியிடம் கத்தினான்.

[தன்னைச் சூட்டைக் காய்ச்சி இழுத்தபோது, வாயை மூடிக்கொண்டு ஊமையாய் இருந்த மகானுபாவர் தான் இவரும். சுத்த வழுவட்டையான ஒரு அம்மாக் கோண்டு.]

அவன் போட்ட சத்தத்தில் அந்தக் கிழவி சற்றே கண் விழித்துப் பார்த்தாள். ஆனால் கழுத்து வீங்கிப் போனதால் அவளால் பேச முடிய வில்லை. தன் மூத்த மகனிடம் ஜாடை காட்டி புரிய வைக்க முயன்றாள்.

சுவற்றின் மூலையில் சாத்தியிருந்த உலக்கை, தன் கழுத்து, மூத்த மருமகள் என மூன்றையும் தன் கை விரலால் மாற்றி மாற்றி சுட்டிக் காட்டி, என்ன நடந்தது என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள் அந்தக் கிழவி.

மூத்த மகனுக்கு அவள் சொல்ல வருவது ஒன்றும் விளங்காமல் இருக்கவே, தன் மனைவியைப் பார்த்து என்ன நடந்தது என்பது போல முறைத்துப் பார்க்கிறான்.

நாம் உலக்கையால் போட்ட ஒரு போடு இந்தக் கிழவிக்குப் பத்தவில்லை போலிருக்கு, விட்டால் நம்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுவாள் போலிருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டு, சுதாரிப்புடன் பதில் சொல்ல ஆரம்பிக்கிறாள்:

”என்னங்க இது ! உங்க அம்மா என்ன சொல்லவராங்கன்னு உங்களுக்குமா புரியலே! என்ன தான் அவங்க வயத்துல பொறந்தவங்களா இருந்தாலும், அவங்க என்ன சொல்ல வராங்கன்னு, உங்க யாருக்குமே இப்படிப் புரியாமல் இருக்கே! ரொம்பவும் வேடிக்கை தான் போங்க! அவங்களோடவே ஆரம்பத்திலிருந்து பிரியமாப் பழகின எனக்கு நல்லவே புரியுதுங்க; ஆனால் அதை என் வாயாலேயே சொல்லத்தான் வெட்கமா இருக்குதுங்க” என்றாள் அந்த சாமர்த்தியமான மூத்த மருமகள்.

”என்னன்னு சீக்கரம் சொல்லித் தொலைடீ. நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.” கணவன் அவளிடம் கத்த, சுற்றி நின்ற தம்பிகளும், தம்பி மனைவிகளும் என்னவோ ஏதோ என்று சஸ்பென்ஸுடன் காத்திருக்க, கழுத்தில் அடிபட்ட மாமியாரும் தன் காதைத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப மூத்த மருமகளையும், மூலையில் சாத்தப்பட்ட உலக்கையையும், தன் கழுத்தையும் கை விரலை நீட்டி காட்டிக்கொண்டே இருந்தாள்.

“மூலையில் சாத்தப்பட்டுள்ள உலக்கையும், கழுத்தில் அணிந்திருக்கும் தன் கல் அட்டிகையும், மூத்த மருமகளாகிய எனக்கே சொந்தம்ன்னு சொல்ல வராங்க என் பிரியமுள்ள மாமியார். ஆனால் பாவம் பேச்சு வராமல் அதைத்தான் ஜாடையாக் காட்டுறாங்க” என்று ஒரே போடாகப் போட்டாள் அந்த மூத்த மருமகள்.

எல்லோரும் அதை அப்படியே நம்பி விட, கிழவி மட்டும் இதைக் கேட்டதும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகுன்னு, இப்படிச் சொல்லுகிறாளே இந்தப் பாவி மருமகள் என்ற வேதனையில், வாய் அடைத்துப்போய் விட்ட அவளுக்கு நெஞ்சும் அடைத்துப்போய், உண்மையிலேயே உயிரை விட்டுவிட்டாள்.

”தன்னுடைய கடைசி ஆசையை நீங்களெல்லாம் நிறைவேற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில், இப்போது உங்க அம்மா உயிர் நிம்மதியாகப் போயிடுச்சு பாருங்க” என்று சொல்லியவாறே, கிழவியின் கழுத்திலிருந்த கல் அட்டிகையைக் கழட்டி தன் கழுத்தில் போட்டுக்கொண்டாள், அந்த மூத்த மருமகள்.

மீண்டும் ஒரு வித சந்தேகத்துடன் தன் மனைவியைப் பார்த்த மூத்த பிள்ளையிடம் “நீங்க தான், செத்துப் போயுள்ள உங்க அம்மாவுக்கு மூத்த பிள்ளை; மசமசன்னு நிற்காமல், மளமளன்னு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கள்” என்று ஒரு அதட்டு போட்டு விட்டு, சுவற்றின் மூலைக்குச்சென்று, ”என் மாமியார் எனக்காக ஆசையாகக் கொடுத்த உலக்கை இது” என்று சொல்லி, அதைக் கட்டிப் பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டாள்.

-o-o-o-o-o-o-o-

பின் குறிப்பு:

இந்தக்கதை சிரிப்பதற்கு மட்டுமல்ல. சிந்தித்துப் பார்க்கவும் தான். புதிதாக நம் வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் மருமகளை, மாமியார்கள் தன் சொந்தப் பெண்ணாகவே நினைத்து, அன்புடன் பழக வேண்டும். நாகரீகமாக நடத்த வேண்டும். பிரச்சனைகள் வரும் போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இருவருமே உணர வேண்டும். நாம் பிறரிடம் அன்பு செலுத்தினால் தான், அதே அன்பை நாம் பிறரிடமிருந்து ஓரளவுக்காவது எதிர்பார்க்க முடியும்.

அதுபோலவே நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அன்பு செலுத்தி பாராட்டிக் கொள்ளாவிட்டால், இந்தக் கதையில் வரும் மாமியார் மருமகள் போல, விரோதமான எண்ணங்களே மனதில் பதிந்து கடைசியில் அது முற்றிப் போய் ஆபத்திலும், வன்முறையிலும் கொண்டு போய் விட்டு விடும்.

இன்றே இப்போதே பிறரிடம் அன்பு காட்டப் பழகுவோம், பாராட்டு சொல்லப் பழகுவோம். தூய அன்புக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் மயங்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அன்புடன் நேரம் ஒதுக்கி நான் எழுதியுள்ள இந்தக்கதையைப் படித்தவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். என் அன்பைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றியுடன்,
வை.கோபாலகிருஷ்ணன்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நன்றே செய் ! அதுவும் இன்றே செய் !!

எண்ணெய் பார்த்துப் பல வருடங்கள் ஆன பரட்டைத்தலை. அதில் ஆங்காங்கே தொங்கும் ஆலம் விழுது போன்ற சடைகள். அழுக்கான ஒரு வேஷ்டி அதனிலும் சல்லடை போன்ற பொத்தல்கள்.

சட்டைப்பை கிழிந்து தொங்கி, பாதி பித்தான்கள் இல்லாத ஒரு பச்சைக்கலர் சட்டை. இடது தோளில் கழுதைக் கலரில் ஒரு ஜோல்னாப் பை. அதில் ஏதேதோ ஒரு சில நெசுங்கிய அலுமினிய தட்டுகள் மற்றும் குப்பைக் காகிதங்கள்.

வலது கையில் நாய்ச் சங்கிலியுடன் கட்டப்பட்ட ஓரிரு இரும்பு வளையங்கள். சிவந்த கண்கள். எச்சில் ஒழுகும் வாய்.

வலது கால் கட்டைவிரல் பகுதியில் அடிபட்டது போல காயத்துடன் சற்றே வெளியில் வரும் ரத்தத் துளிகள். அதைச்சுற்றி ஈக்கள் மொய்த்த வண்ணம் இருந்ததால் காலை அடிக்கடி நீட்டியும் மடக்கியும் அந்த ஈக்களை ஓட்டியபடி, அந்த ஓட்டல் வாசலில் ஒரு தகரக் குவளையுடன், அமர்ந்து கொண்டு, ஓட்டலுக்கு வருவோர் போவோரை கை கூப்பி வணங்கிக் கொண்டிருந்த அவனை, எல்லோருமே ஒரு வித அருவருப்புடன் பார்த்து விட்டுத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர்.

யார் பெற்ற பிள்ளையோ பாவம் என்று இரக்கப்பட்டு, ஒரு சிலர் தங்களால் முடிந்த சில்லறை நாணயங்களையும் போட்டுச் சென்றனர்.

போக்குவரத்து நெருக்கடியை உத்தேசித்து, அந்த ஓட்டலுக்கு சற்று தள்ளியிருந்த, ஜன நடமாட்டம் அதிகமில்லாத, சந்து ஒன்றில் தன் காரை நிறுத்திவிட்டு, ஓட்டலில் டிபன் சாப்பிட வந்திருந்த பாபு, அவசர அவசரமாக அந்த ஓட்டலிலிருந்து வெளியேறவும், அந்தப் பரட்டைத்தலையன், மொய்க்கும் ஈக்களைத் துரத்த வேண்டி, தன் காலை நீட்டவும், பாபு அவன் காலில் இடறி நிலை தடுமாறி விழப்போய், கஷ்டப்பட்டு சுதாரித்துக் கொண்டு, ஒருவழியாக சமாளித்து நின்று, அவனைக் கண்டபடி திட்டித் தீர்க்கவும் சரியாய் இருந்தது.

ஏற்கனவே புண்ணான தன் கால் விரலில், பாபு இடறியதால் மேலும் ரணமான அவன் பே...பே...பே...பே.. என்று ஏதோ கத்திக்கொண்டே, கஷ்டப்பட்டு எழுந்து நின்று கொண்டான்.

அவன் செயலால் சற்றே பயந்து போன பாபு, தன் நடையை சற்று வேகமாக்கி, தன் காரை நோக்கி ஓட ஆரம்பிக்க, அவனும் பாபுவைத் துரத்த ஆரம்பித்தான்.

காலை விந்தி விந்தி நடந்த பரட்டைத் தலையன், பாபு காரைக் கிளப்புவதற்கு முன்பு காரின் முன்னே போய் நின்று விட்டான்.

இருபது வயதே ஆன இளைஞன் பாபுவுக்கு, இப்போது பயம் மேலும் அதிகரித்தது. நம்மைத் துரத்தி வந்துள்ள இவன் மேலும் என்ன செய்வானோ? என்று.

ஒரு வேளை மனநிலை சரியில்லாதவனாக இருந்து, அவன் காலில் நாம் இடறிய கடுப்பில், நம்மைத் தாக்குவானோ அல்லது நம் காரைக் கல்லால் அடித்துச் சேதப் படுத்துவானோ எனக் கவலைப் பட ஆரம்பித்தான்.

கார் கண்ணாடிகளை மேலே தூக்கி விட்டு, காரை மெதுவாக ஸ்டார்ட் செய்து, லேசாக அந்தப் பரட்டைத் தலையன் மீது, ஹாரன் அடித்தபடியே மோதித் தள்ளினால், அவன் நகர்ந்து விடுவான் என்று எதிர்பார்த்து செயல்பட ஆரம்பித்தான்.

அதற்கெல்லாம் அந்தப் பரட்டைத் தலையன், சற்றும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. தன் தோளில் தொங்கிய, கழுதைக் கலர் ஜோல்னாப் பையில் கையை விட்டு துலாவிக்கொண்டிருந்தான்.

பிறகு தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு, காரிலிருந்து இறங்கி அவசரமாக பின்புற டிக்கியைத் திறந்து, கார் ஜாக்கியுடன் இருந்த இரும்புக் கழியை கையில் தற்காப்பு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, அவனை நெருங்கினான். பாபு.

காருக்கு முன்னால் இஞ்ஜினை ஒட்டி நின்றிருந்த அந்தப் பரட்டைத் தலையன் இப்போதும், தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு எதையோ குடைந்து தேடிக்கொண்டிருந்தான்.


இரும்புக் கழியால் அவனை அடிப்பது போல ஓங்கிக்கொண்டு, அவனை கார் பக்கத்திலிருந்து வேறு பக்கம் ஓடிப் போகத் தூண்டினான், பாபு.

இப்போதும் பே...பே...பே...பே ன்னு கத்திய அவன், தன் ஜோல்னாப் பையிலிருந்து புத்தம் புதியதோர் செல்போன் ஒன்றை எடுத்து, கார் இன்ஜின் பேனட் மீது வைத்து விட்டு, காலை விந்தி விந்தி பயந்து கொண்டே மீண்டும், அந்த ஓட்டலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அப்போது தான் பாபுவுக்கு தான் சமீபத்தில் ஏராளமான ரூபாய்கள் செலவழித்து வாங்கிய புத்தம் புதிய ஐ-பேட் மொபைல் போன், தன்னிடம் இல்லாதது பற்றிய ஞாபகமே வந்தது.

பரட்டைத் தலையனின் காலில் இடறி தடுமாறி விழ இருந்த பாபுவின் செல்போன் மட்டும், பரட்டைத் தலையனின் ஜோல்னாப் பைக்குள் விழுந்திருக்கக் கூடும் என்பது புரிய வந்தது.

அதைத் தன்னிடம் ஒப்படைக்கத்தான் அவன் தன்னைத் துரத்தி வந்துள்ளான் என்பதையும் பாபு இப்போது தான் உணரத் தொடங்கினான்.

பாவம், அந்த வாய் பேச வராத அப்பாவியான பிச்சைக்காரனைப் போய் நாம் தாக்க நினைத்தோமே என்று தன் அவசர புத்தியை நினைத்து மிகவும் வெட்கப் பட்டான்.

பாபு அவனை மீண்டும் சந்தித்து ஒரு சில உதவிகள் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் அப்போது தன் காரை வீட்டை நோக்கி ஓட்டிச் செல்லும்படியாகி விட்டது. நேராக வீட்டுக்குச் சென்ற பாபு, தன்னுடைய பழைய கைலிகள், பேண்டுகள், சட்டைகள் என சிலவற்றை ஒரு பையில் போட்டுக்கொண்டு, சில்லறைகளாகவும், ரூபாய் நோட்டுக்களாக ஒரு நூறு ரூபாய்க்கு மேல் பணமும் போட்டுக் காரில் அதைத் தனியாக வைத்துக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் பாபுவுக்கு.

தான் அவனுக்கு இந்தச் சின்ன உதவியைச் செய்ய நினைத்ததை நிறைவேற்ற, மறு நாள் காலை, தன் காரில் அதே ஓட்டல் வாசலுக்குச் சென்றான், பாபு. ஆனால் அங்கே அந்த பரட்டைத் தலையனைக் காணவில்லை.

சுற்று வட்டாரத்தில் பல இடங்களிலும், மிகவும் மெதுவாகக் காரை ஓட்டிச் சென்று, ஒரு மணி நேரத்திற்கு மேல் தேடியும், அவனைப் பார்க்க முடியவில்லை.

கடைசியாக காரில் ஏறி வீடு திரும்பும் வழியில் நடு ரோட்டில் ஒரு மிகப் பெரிய கூட்டம். காரை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு, இறங்கி நடந்து வந்து, கூட்டத்தை விலக்கிப் பார்த்த பாபுவுக்கு ஒரே அதிர்ச்சி.

நடு ரோட்டில், நல்ல வெய்யில் வேளையில், பசி மயக்கத்தில் இருந்துள்ள அவனுக்கு, வலிப்பு ஏற்பட்டதாகவும், துடிதுடித்து விழுந்த அவன் உயிர் உடனே பிரிந்து விட்டதாகவும், அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

இறந்து கிடந்த அந்தப் பரட்டைத் தலையன் அருகே, அவனை நல்லடக்கம் செய்ய வேண்டி, ஒரு துணியை விரித்து, யாரோ வசூலுக்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

பாபுவின் கண்கள் ஏனோ சில சொட்டுக் கண்ணீர் வடிக்க, அவன் கைகள் இரண்டும், இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை அந்தப் பிணத்துக்கு அருகில், விரித்திருந்த துணியில் போட்டுக் கொண்டிருந்தன.

காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பி வரும் போது, அந்த அனாதையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மனப் பூர்வமாக பாபு பிரார்த்தித்த போது, ”அப்படியே ஆகட்டும்” என்பது போல அவனின் ஐ-பேட் மொபைல் போன் ஒலிக்க ஆரம்பித்தது.

-o-o-o-o-o-o-


சனி, 12 பிப்ரவரி, 2011

காதலாவது ... கத்தரிக்காயாவது !!!

”காதலாவது ..... கத்திரிக்காயாவது ”
என்று நினைத்து
இந்தக் கதையைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள்.
14.02.2011 உலகக் காதலர் தினமாமே!

காய்கறி விற்கும் காமாட்சியைக் காண வேண்டும் என தன் கண்கள் இரண்டும் துடிப்பதையும், கால்கள் இரண்டும் அந்தச் சின்ன மார்க்கெட்டை நோக்கி காந்தம் போல இழுக்கப் படுவதையும் கொஞ்ச நாட்களாகவே உணரத் தொடங்கியிருந்தான் பரமு.

நிறம் சுமாராகவே இருந்தும் இருபது வயதே ஆன காமாட்சி நல்ல ஒரு அழகி. தீர்க்கமான முகம். நல்ல உயரம், உருண்டு திரண்ட அங்க லக்ஷணங்களுடன், அவளைப் பார்ப்பவர்களுக்கெல்லாம், உற்சாக பானம் ஏதும் அருந்தாமலேயே, அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு வித ‘கிக்’ ஏற்படுத்தக் கூடிய உடல்வாகு கொண்டவள்.

நல்ல கருங்காலி மரத்தில், கை தேர்ந்த சிற்பி ஒருவரால், செதுக்கப்பட்ட சிலை போலத் தோன்றுபவள். இன்னும் சற்று கலராக மட்டும் அவள் இருந்திருந்தால், யாராவது சினிமாவில் புது முகக் கதாநாயகியாக்க கூட்டிப் போயிருப்பார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான் பரமு.

சிறு வயதிலேயே தாயை இழந்தவன் பரமு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாருமில்லை. கல்லூரிப் படிப்பை முடித்து ரிசல்ட் வரும் முன்பே ஒரே ஆதரவாக இருந்த தத்தையும் போய்ச் சேர்ந்து விட்டார். பெண்களுடன் கொஞ்சமேனும் பேசிப் பழகிப் பழக்கமில்லாத பரமுவுக்கு, இந்தக் காய்கறிகள் விற்கும் காமாட்சியிடம் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமே, அந்த ஊரில் இருந்த மிகப் பெரியதொரு காய்கறி மார்க்கெட் தான்.

தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமு அவ்வப்போது தமிழில் வெளியாகும் வார இதழ், மாத இத்ழ் முதலியவற்றிற்கு சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என அனுப்பி அதில் வரும் சன்மானத் தொகையிலும், தற்சமயம் மாணவர்கள் தங்கிப் படித்து வரும் விடுதியின் மெஸ் ஒன்றில் தற்காலிகமாக வேலை பார்த்து , அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளி வருபவன். மேலும் தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் காத்திருப்பவன். அந்த மெஸ்ஸிலேயே தங்கிக்கொண்டு, தானும் மாணவர்களுடன் அங்கேயே சாப்பிட்டும் வந்தான்.

தினமும் மெஸ்ஸுக்கு வேண்டிய காய்கறிகள், வாங்க மொபெட் ஒன்றில் விடியற்காலமே பெரிய மார்க்கெட்டுக்குச் சென்றிடுவான். சின்ன மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டிருக்கும் காமாட்சியும், பெரிய மார்க்கெட்டுக்கு, மொத்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்ய வந்திடுவாள்.

ஆரம்பத்தில் சாதாரணமாக இது போன்ற சந்திப்புக்கள் பரமுவுக்கும் காமாட்சிக்கும் பெரிய மார்க்கெட்டில் ஏற்பட்டு வந்தன.

பெண்களுடன் பேசவே மிகவும் கூச்சப்படும் பரமுவுடன், காமாட்சி தான் இழுத்துப் பிடித்து பேசி வந்தாள். நாளடைவில் பரமுவுக்கு காமாட்சி மேல், அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கியது. அனாதை போன்ற தன்னிடமும் அன்பு காட்டி பேச ஒருத்தி, அதுவும் பூத்துக்குலுங்கும் இளம் வயதுப் பருவப் பெண். கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் பரமு.

நாளடைவில் காமாட்சியின் காய்கறிக் கூடைகளையும், சாக்கு மூட்டைகளையும், பெரிய பெரிய பைகளையும் முடிந்த வரை பரமுவே, தன் மொபெட் வண்டியில் சுமந்து கொண்டு வருவதும், மீதியை அவள், பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வருவதுமாக, அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.

இப்போதெல்லாம் காமாட்சி பெரிய மார்க்கெட் பக்கம் வருவதில்லை. எல்லாமே பரமு பாடு என்று விட்டுவிட்டாள். இதனால் இருவருக்குமே லாபமாகவே இருந்தது. பஸ் சார்ஜ், லக்கேஜ் சார்ஜ் எனத் தனித்தனியே செலவு இல்லாமல், காய்கறிகளுக்கான கொள்முதல் விலைகளுடன், பரமுவின் வண்டிக்கு ஆகும் பெட்ரோல் செலவுக்கு மட்டும், தன் பங்கைக் கணக்கிட்டுப் பகிர்ந்து கொண்டாள், காமாட்சி.

சின்ன மார்க்கெட்டில் காமாட்சியின் காய்கறி வியாபாரம் நாளுக்கு நாள் நன்றாகவே நடைபெற்று வந்தது. காரணம், பரமு வாங்கிவரும் பச்சைப்பசேல் என்று பளிச்சென்று உள்ள தரமான காய்கறிகள், நியாயமான விலை, சரியான எடை, வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும் காமாட்சியின் கனிவான பேச்சு முதலியன. எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.

இருந்தும் அன்றாடம் மிரட்டி, உருட்டி பணம் பறித்து வரும் பேட்டை ரெளடிகள், முனிசிபாலிடி பேரைச் சொல்லி ரசீது கொடுக்காமல் தண்டல் வசூலிப்பவன். ஓஸியில் காய்கறிகளை அள்ளிச்செல்லும் காக்கிச் சட்டைக்காரர்கள், கடனில் காய்கறி வாங்கிச் சென்று, கடனைத் திருப்பித் தராத அடாவடிகள் போன்றவர்களைச் சமாளிக்க இளம் வயதுப் பெண்ணான காமாட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. தன் பக்கத்து நியாயத்திற்கு ஆதரவாக இந்த சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்க, தனக்கென்று ஒரு துணை இல்லையே என்று மனதில் வேதனைப் பட்டு வந்தாள்.

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு, தூய்மையான மிகவும் எளிமையான உடையுடன் கடையை விரித்து அமர்ந்தால், மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை, அந்தச் சின்ன மார்க்கெட்டில், இவள் கடையில், காய்கறி வியாபாரம் சக்கை போடு போடும்.

“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக் காரன், கிண்டலாகக் கேட்டபோது, காமாட்சி பத்ரகாளியாகவே மாறி விட்டாள். அவள் தன் கையில் வைத்திருந்த தராசுத் தட்டை சுழட்டி அவன் மேல் அடிக்க எழுந்த போது, அந்த சின்ன மார்க்கெட்டே அதிர்ந்து போனது. இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.

நடந்த இந்த விஷயத்தை, தைர்யமாக காமாட்சி வாயாலேயே சொல்லிக் கேட்ட பரமுவுக்கும் அவளிடம் ஒரு வித பயம் ஏற்பட்டது. தன்னுடைய வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ’நமக்காவது .... காதலாவது .... கத்திரிக்காயாவது ....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பெரிய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த கத்திரிக்காய் மூட்டையை காமாட்சியிடம் ஒப்படைத்து விட்டு புறப்படலானான். ஆனால் அவன் மனம் மட்டும் காமாட்சியையே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு தலைக் காதல் செய்து வந்தது.

படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமு மேல் காமாட்சிக்கும் உள்ளூர பாசமும், நேசமும் அதிகம் உண்டு. இருவரும் சந்தித்து உரையாடும் போது, அவரவர் கஷ்டங்களையும், வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.

பரமுவின் நட்பினால், காமாட்சிக்கு பெரிய மார்க்கெட் செல்லும் வேலை இல்லாமல், வியாபாரத்திலேயே முழு கவனமும் செலுத்த முடிந்தது. பரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால்! நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.

குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது.

இருப்பினும் சிறு வயதில் பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட காமாட்சிக்கு, அது நிறைவேறாமலேயே போய் விட்டது. அவள் பூப்பெய்தின போது கூட, அவள் அம்மா பல இடங்களில் பணம் புரட்டி, சாதாரண சீட்டிப்பாவாடை, சட்டை, தாவணி வாங்கிக் கொடுத்தது, காமாட்சிக்கு இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

அவள் அம்மாவும் என்ன செய்வாள் பாவம்? கணவனை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, இளம் விதவையான அவள், கடைசியில் தன் தள்ளாத வயது வரை, காய்கறிக்கூடை ஒன்றை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி வீடு வீடாகச் சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தவளே.

காமாட்சியின் தாயாரும் ஒரு நாள் உடம்பு முடியாமல் படுத்து மறுநாளே, [8 வது வகுப்பு முழுப்பரீட்சை எழுதி முடித்து விட்டு வந்த ] காமாட்சிக்கும் அதிக சிரமம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்ததில், காமாட்சி ஒரு அனாதை போல ஆகிவிட்டாள். படிப்பைத் தொடர முடியாமல் அம்மா செய்து வந்த காய்கறி வியாபாரத்தையே தானும் செய்ய அன்று ஆரம்பித்தவள் தான். சுமார் ஏழு வருடங்கள் விளையாட்டு போல ஓடிவிட்டன.

பட்டுப்பாவாடைக்கு ஆசைப்பட்ட அவளின் சிறுவயது ஆசை அலைகள் இன்றும் ஓயாமல் காமாட்சியை துரத்தி வருகின்றன. எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் நியாயமான ஆசைதான் காமாட்சிக்கும்.

இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்பதே அவளின் இன்றைய ஆசை. அதற்கான தொகையையும் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கி விட்டாள்.

காமாட்சியின் அன்றாட லாபமும் சேமிப்பும் உயர உயர, தங்கம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்ததில் அவள் ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. சாண் ஏறினால் முழம் சறுக்குது.

இந்தச் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பரமுவிடம் அவ்வப்போது சொல்லிக் கொள்வாள். பரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.

அன்றொரு நாள் அதிகாலையில் வழக்கம் போல காய்கறி மூட்டைகளையும் பெரிய பெரிய பைகளையும் தனது மொபெட்டில் ஏற்றியபடி வேகமாக வந்த பரமு, சின்ன மார்க்கெட்டில் உள்ள காமாட்சியின் கடை அருகே, பிரேக் அடித்து சமாளித்து நிறுத்துவதற்குள், பின்னால் வேகமாக துரத்தி வந்த ஆட்டோ ஒன்று, கவனக்குறைவால், பரமுவின் வண்டி மேல் மோதிவிட, பரமு மொபெட்டிலிருந்து சரிந்து கீழே விழ, காய்கறிகள் யாவும் ஆங்காங்கே சிதறி, அங்கு ஒரு பெரிய கும்பலே கூடி விட்டது. இதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.

இடது முழங்கால் பகுதியில் நல்ல அடிபட்டு வீங்கிப் போய், ஒரு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டான் பரமு. வலது உள்ளங்காலையும் ஊன முடியாமல் வலி உள்ளது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

காமாட்சி தான், மூன்று வேளையும் தன் கைப்பட சமைத்த உணவு எடுத்துப்போய், மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, ஆஸ்பத்தரிச் செலவுகளையும் சமாளித்து வருகிறாள்.

பட்டுப்புடவை மற்றும் தங்கச் சங்கிலிக்கான சேமிப்பு தான், ஆபத்திற்கு இப்போது கை கொடுத்து உதவுகிறது. பரமுவின் உதவி இல்லாததால், காய்கறி கொள்முதல் செய்ய பெரிய மார்க்கெட்டுக்கு இவளே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நிழலின் அருமை வெய்யிலில் சென்றால் தான் தெரியும் என்பது போல, பரமுவின் அருமையை இப்போது நன்றாகவே உணர முடிந்தது காமாட்சியால்.

இன்னும் இரண்டு நாட்களில் பரமு பழையபடி வலியில்லாமல் நடக்க ஆரம்பிக்க முடியும் என்றார், பரமுவுக்கு பிஸியோதெரபி பயிற்சி அளிப்பவர். சீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.

மறுநாள் பரமுவுக்கு வந்ததாகச் சொல்லி மெஸ்ஸில் தங்கியுள்ள ஒரு பையன் கொடுத்த இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு, சாப்பாட்டுத் தூக்குடன் ஆஸ்பத்தரிக்குப் போனாள், காமாட்சி.

போகும் வழியில், ஆஸ்பத்தரிக்கு மிக அருகில் உள்ள அரச மரத்துப் பிள்ளையார் கோவிலில் அபிஷேக அலங்காரங்கள் முடித்து, சூடான சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.

“வா, காமாட்சி! என்ன விஷ்யம்! இனிப்புடன் வந்துள்ளாய்?” பரமு கேட்டான்.

”ஒரு விசேஷமும் இல்லை. பிள்ளையார் கோவிலில் பிரஸாதமாகக் கொடுத்தார்கள்” என்றாள், பரமுவுக்கு வந்த இரண்டு கடிதங்களையும் நீட்டியபடி.

முதல் கவரைப் பிரித்துப் பார்த்த பரமு, “ஆஹா, மிகவும் இனிமையான செய்தி தான்; சர்க்கரைப் பொங்கல் விசேஷமாகத் தான் கொண்டு வந்துள்ளாய்; நான், அந்த வாரப் பத்திரிக்கை நடத்திய ஒரு சிறுகதைப் போட்டிக்கு “காதலுக்கு உதவிய காய்கறிகள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன்; அது முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். உடனடியாக புகைப்படம் ஒன்றும், சுய விபரக் குறிப்பு ஒன்றும் அனுப்பி வைக்க வேண்டுமாம்” என்றான்.

காமாட்சி புன்னகையுடன், கண்களை அகலமாக விரித்து, அவனை நோக்கினாள்.

இரண்டாவது கவரையும் அவசரமாகப் பிரித்தான், பரமு. அவன் முகத்தில் இப்போது கோடி சூரிய பிரகாஸம். அரசுடமையாக்கப் பட்ட வங்கியொன்றில் நிரந்தர வேலைக்கு நியமனமாகியுள்ளதாகத் தகவல். மருத்துவப் பரிசோதனைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.

கால் வலி மறந்து போய் துள்ளிக்குதிக்கிறான் பரமு. தபாலைக் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியின் கைகள் இரண்டையும் பிடித்துத் தன் கண்கள் இரண்டிலும் ஒத்திக் கொள்கிறான்.

பரமுவை இவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காமாட்சி இதுவரை பார்த்ததே இல்லை. அவளுக்கும், பரமுவுக்கு நல்ல வேலையொன்று நிரந்தரமாகக் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாகவே இருந்தது.

“எந்த ஊருக்குப் போய் வேலையில் சேரும்படி இருக்கும்?” என்று அவள் கேட்கும் போதே, அவளின் கண்களில் நீர் தளும்ப, ஏதோ தூசி கண்ணில் விழுந்து விட்டது போல, தன் புடவைத் தலைப்பால், துடைத்துக் கொள்கிறாள்.

“திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வேலைக்குக் காலியிடம் இருப்பதாகவும், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் நம்ம உள்ளூராகிய திருச்சி மாவட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தேன்” என்றான்.
[அதுவும் உனக்காகவே தான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டான்].

“ஒரு வேளை வெளியூரில் வேலை கிடைத்திருந்தால் என்னை அம்போ என்று விட்டு விட்டுப்போய் விடுவாய் தானே?” என்றாள்., காமாட்சி.
[என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போக மாட்டாயா? என மனதுக்குள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டாள்]

[” நீ என்னுடன் வருவாய் என்றால் வெளியூர் என்ன, வெளிநாடு என்ன, அந்த சந்திர மண்டலத்துக்கே கூட கூட்டிப் போகத் தயாராக இருக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ]

“நீ கடந்த ஒரு வாரமாகச் செய்துள்ள உதவிகளுக்கு, உன்னை அம்போ என்று என்னால் எப்படி விட முடியும்?” என்று சொல்லியபடியே, காமாட்சியை வைத்த கண் வாங்காமல், புன்னகையுடனும், நன்றியுடனும் நோக்கினான், பரமு.

“சரி, முதல் மாத சம்பளம் வாங்கி என்னய்யா செய்யப் போறே?” காமாட்சி வினவினாள்.

“எனக்குப் பிடித்த காமாட்சி அம்மனுக்கு, பட்டுப் புடவையும், கால்களுக்கு கொலுசும் வாங்கி சாத்தப் போறேன்” என்றான் பரமு.

“அப்புறம்” என்றாள், காமாட்சி.

“அப்புறம், ஒரு ஆறு மாத சம்பளத்தைச் சேர்த்து, காமாட்சி அம்மன் கழுத்துக்கு இரண்டு பவுனில் ஒரு தங்கச் செயினும், ஒவ்வொரு கைக்கும் ஒரு ஜோடி வீதம் தங்க வளையலும், காதுக்குத் தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மூக்குத்தியும் வாங்கிப் போடுவேன்” என்றான்.

“அப்புறம்” என்றாள் காமாட்சி.

“அப்புறம் என்ன, என் மனசுக்குப் புடிச்சவளாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வேன்” என்றான் பரமு.

“உன் மனசுக்குப் பிடித்தவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?” என்றாள் காமாட்சி.

“அதற்கும் அந்தக் காமாட்சி அம்மன் கருணை வைத்தால் தான் முடியும்” என்றான் பரமு.

“என்னய்யா நீ, எதற்கு எடுத்தாலும், காமாட்சி அம்மன்னே சொல்லிக்கிட்டு இருக்கே; எங்கய்யா இருக்கா அந்தக் காமாட்சி அம்மன்?” என்று பொறுமை இழந்து கேட்டாள் காமாட்சி.

“அவள் எங்கும் நிறைந்தவள். எப்போதும் என் மனதில் குடி கொண்டு இருப்பவள்; எனக்குப் பக்கத்திலேயே எப்போதும் ஏன் இப்போது கூட நிற்பவள்; என் கண்களுக்குத் தெரிகிறாள்; உனக்குத் தெரியலையா? புரியலையா? அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறாயா?” என்றான் பரமு.

வெட்கத்தால் காமாட்சியின் முகம் சிவந்தது. கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள்.
[ பரமுவுடன் தன் திருமணக் கோலத்தை மனதில் எண்ணியபடி.]

“முதல் பரிசு வாங்கும் அளவுக்கு அப்படி என்னய்யா அந்தச் சிறுகதையில் எழுதியுள்ளாய்?” காமாட்சி, தலை நிமிர்ந்து ஆர்வமுடன் கேட்கிறாள்.

“அதில் வரும் நாயகனுக்கு, நாயகி மேல் தீராத காதல். அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக நான் அனுபவித்து வந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளேன்; கதை வெளி வந்ததும் நீயே படித்துப் பார் தெரியும்” என்றான் பரமு.

இவ்வளவு ஆசையை மனதில் போட்டுப் பூட்டி வைத்து எப்படிய்யா வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க முடிந்தது உன்னால்? அதைக் கொஞ்சமாவது என்னிடம் வெளிப் படுத்தியிருந்தால், என் மனசும் சந்தோஷப்பட்டிருக்கும் தானே? ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும் படாததுமாகவே பழகி வந்தாய்?” என்று கேட்டாள் காமாட்சி.

“எல்லாம் ஒரு வித பயம் தான் காமாட்சி. அன்னிக்கு உன்னிடம் வம்பு செய்த அந்த ஆளை தராசுத்தட்டைச் சுழட்டி அடிக்கப் போனேன் என்று நீ தானே என்னிடம் சொன்னாய்! அது போல என்னையும் தாக்கினால் நான் என்ன செய்வது என்ற பயம் தான்” என்றான் பரமு.

இதைக் கேட்டதும், கடகடவென்று கன்னத்தில் குழி விழச் சிரித்த காமாட்சி, பரமுவின் கன்னம் இரண்டையும் தன் இரு கை விரல்களாலும் செல்லமாகக் கிள்ளி விட்டாள்.

அவள் இவ்வாறு பச்சைக்கொடி காட்டியதும், பயம் தெளிந்த பரமு மட்டும் சும்மா இருப்பானா என்ன!

ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்.

இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி' அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, அந்த அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.

-o-o-o-o-o-o-o-














வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]

இந்தக்கதையின் முன்பகுதிகளைப் படிக்க:
http://gopu1949.blogspot.com/2011/02/4-8.html பகுதி 1 முதல் 4 வரை
http://gopu1949.blogspot.com/2011/02/5-8.html பகுதி 5

முன்கதை..................... பகுதி 6

சற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.

சங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்” என்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

அவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.

சென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.

அதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.

கொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர்களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

கை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா? பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா? பட்டாபி கண் கலங்கினார்.

இங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா? அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ? அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ? பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.

எதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.

எப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.

“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.


தொடர்ச்சி .................. பகுதி 7 இதோ .... இப்போது :

தன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

சங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி & கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.

“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும்
கமலாவும், சங்கர மடத்தின் உள்பக்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.

“வாங்கோ, வாங்கோ, வரணும்! தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ! என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக,
வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.

வந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது.

இதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே! அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது!


அந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு.


“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.

உங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.

நான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.

நல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார்.


கைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி.


அட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார்.


அதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார்.


“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தான் குருநாதர்.

அவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.

அவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா !

சங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது.

வேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா !

ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள்.


இந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும்.

நீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது.

கங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ !

அந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ! ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.

நீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ !

நான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.

“ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.

சங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும்,
யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.

தொடரும்




புதன், 9 பிப்ரவரி, 2011

நகரப் பேருந்தில் ஒரு கிழவி

டவுன் பஸ் ஒரு வழியாக அந்தப் பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பி விட்டது.

“புளியந்தோப்புக்கு ஒரு டிக்கட் கொடுப்பா” கிழவி தன் இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து காசு எடுத்து நடத்துனரிடம் நீட்டுகிறாள். அவள் மடிமீது ஏதோ சற்றே பெரிய சாக்கு மூட்டை வேறு.

“வண்டி புளியந்தோப்புக்குப் போகாதும்மா. கேட்டுக்கிட்டு ஏற வேண்டாமா?” ரெண்டு ரூபாய் டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்து விட்டு, காசைக் கிழவியின் கையிலிருந்து வெடுக்கெனப் புடுங்கி தன் பையில் போட்டுக்கொண்டு “மார்க்கெட்டில் இறங்கி நடந்து போம்மா” என்கிறார் நடத்துனர்.

“அய்யா, அப்பா, வண்டியக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லுய்யா, மார்க்கெட்டிலே இறங்கினா புளியந்தோப்புக்குப் போக நான் ரொம்ப தூரம் நடக்கணுமேப்பா, வெய்யிலிலே இந்த வயசானக் கிழவி மேல இரக்கம் காட்டுப்பா, கையிலே வேறு சில்லறைக் காசும் இல்லப்பா” என்று தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறாள் அந்தக் கிழவி.

”பேசாமக் குந்தும்மா; சரியான சாவு கிராக்கியெல்லாம் பஸ்ஸிலே ஏறி, என் உயிரை வாங்குது” என்று சீறுகிறார் நடத்துனர். அவர் கவனம் மற்ற பயணிகளுக்கு டிக்கெட் போட்டு காசு வசூலிப்பதில் திரும்புகிறது.

கிழவிக்கு வயது எண்பதுக்குக் குறையாது. நல்ல பழுத்த பழம் போன்றவள். தோல் பூராவும் ஒரே சுருக்கம் சுருக்கமாக உள்ளது. வெய்யிலின் கடுமையில் அவள் முகம் மிளகாய்ப் பழம் போல சிவந்து விட்டது.

அதற்குள் பஸ் மார்க்கெட்டை நோக்கி பாதி தூரம் சென்று விட்டது. பஸ்ஸின் ஆட்டத்தில் நின்று கொண்டிருந்த கிழவி அவளையறியாமலேயே மீண்டும் தன் இருக்கையில் தள்ளப்படுகிறாள்.

அவள் வாய் மட்டும் ஏதோ “காளியாத்தா ... மாரியாத்தா” ன்னு புலம்பிக் கொண்டே இருந்தது.

கிழவியைப் பார்த்த எனக்குப் பாவமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.

தள்ளாத வயதில், கடுமையான வெய்யிலில், கையில் சுமையுடன் பஸ்ஸில் ஏறி, சாமர்த்தியமாக அதுவும் தன்னந்தனியாக பயணம் செய்கிறாளே என்று எனக்குள் வியப்பு.

புளியந்தோப்பு வழியாக இந்த பஸ் போகுமா என்று ஒரு வார்த்தை யாரிடமாவது கேட்டு விட்டு அவள் ஏறியிருக்கலாம் தான். படித்த விபரம் தெரிந்தவர்களுக்கே சமயத்தில் இதுபோல தவறு ஏற்படக் கூடும். பாவம் வயசான இந்தக் கிழவி என்ன செய்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

மார்க்கெட் நெருங்கும் முன்பே, போக்குவரத்து ஸ்தம்பித்து பஸ் நிற்க ஆரம்பித்தது. வரிசையாக பேருந்துகளும், லாரிகளும், கை வண்டிகளும், ஆட்டோக்களுமாக கண்ணுக்கு எட்டியவரை நின்று கொண்டிருந்தன.

யாரோ ஒரு மந்திரி, எங்கோ ஒரு பகுதியில், மக்கள் குறை கேட்க வரப் போவதாகவும், அவரின் காரும், அவரின் ஆதரவாளர்களின் கார்களும், பாதுகாப்பு போலீஸ் வண்டிகளும் வரிசையாகப் போன பின்பு தான், போக்கு வரத்து சகஜ நிலைக்குத் திரும்புமாம்.

வெகு நேரமாக இப்படி ட்ராஃபிக் ஜாம் ஆகியுள்ளதாக பேசிக்கொண்டனர், பஸ் அருகில் நின்ற ஒரு சில கரை வேட்டி அணிந்த ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள்.

இங்கு டிராஃபிக் ஜாம் ஆகி மக்கள் தவித்து நிற்கும் பகுதிக்கு அந்த மந்திரி குறை கேட்க நடந்தே வந்தாரானால், அவரை இங்குள்ள மக்கள் கொதித்துப்போய் ஜாம் செய்து விடுவார்கள், என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

கீழே இறங்கி நிலமையை ஆராய்ந்த நடத்துனர், ஓட்டுனரிடம் வண்டியை சீக்கிரமாக ரிவேர்ஸ்ஸில் எடுக்கச் சொல்லி விசில் ஊத ஆரம்பித்தார். ”ரைட்டுல கட் பண்ணு. இந்த டிராஃபிக் ஜாம் இப்போதைக்கு கிளியர் ஆகாது போலத் தோன்றுகிறது. பேசாமல் இந்த டிரிப் மட்டும் புளியந்தோப்பு வழியாகப் போய் விடலாமய்யா” என்றார்.

கிழவியின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று நினைத்து என்னுள் மகிழ்ந்து கொண்டேன்.

ஆனால் புளியந்தோப்புக்கு சற்று முன்னதாகவே பஸ் எஞ்சினில் ஏதோ கோளாறு ஆகி வண்டி நிறுத்தப்பட்டது. எஞ்சினைத் திறந்து பார்த்த ஓட்டுனர், நடத்துனரிடம் “ரேடியேட்டருக்குத் தண்ணி ஊத்தணும்” என்றார். ரேடியேட்டரிலிருந்து ஒரே புகையாக வந்து கொண்டிருந்தது.

“நடுக்காட்டில் நிறுத்தினா தண்ணிக்கு எங்கேய்யா போவது?” நடத்துனர் புலம்ப ஆரம்பித்தார்.

இது தான் சமயம் என்று தன் பெரிய மூட்டையுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய கிழவி, “இதோ தெரியுதே குடிசை. அது தானய்யா என் வீடு. என் வீட்டுக்கு வாப்பா. வேண்டிய மட்டும் தண்ணி தாரேன்” என்று கூறினாள்.

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சொம்பு நிறைய நீர்மோர் கொண்டு வந்து “வெய்யிலுக்கு குளுமையாய் இருக்கும், குடிச்சுட்டுப் போப்பா” என்றாள், அந்த நடத்துனரிடம்.

மனித நேயமும் தாயுள்ளமும் கொண்ட இந்தக் கிழவியைப் போய் கண்டபடி பேசி விட்டோமே என வெட்கி, மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டார், அந்த நடத்துனர்.

“நல்லா மவராசனா இருப்பா” என்று வாய் நிறைய வாழ்த்தினாள், அந்தக் கிழவி.

பிறகு பேருந்து ஒரு வழியாக நகர்ந்தும், அந்தக் கிழவியின் உருவம் மட்டும் என் மனதிலிருந்து நகராமல் நின்றது.

-o-o-o-o-o-o-