என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேரக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2012

ஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]

முதல் பகுதி [ படிக்கத் தவறியவர்களுக்காக ]

எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் Accounts Clerk-cum-Typist ஆக வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனம் லாரி பஸ் போன்ற வாகனங்களுக்கு வேண்டிய உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கி விற்கக்கூடிய சற்றே பெரிய வியாபார ஸ்தாபனம். 

ஃபர்கோ, லேய்லண்ட், பென்ஸ் போன்ற பல கனரக வாகனங்களுக்கு ENGINE + CHASSIS PARTS  அனைத்தும் அங்கு கொள்முதலும் வியாபாரமும் நடைபெறும். பஸ் பாடிகட்டப் பயன்படும் அலுமினிய தகடுகள், பஸ் லாரிக்குத்தேவைப்படும் பேட்டரிகள், அதிர்ச்சியைத் தாங்கிடும் [டூ வீலரில் உள்ள ஷாக் அப்சார்பருக்கு பதிலான] கனமான சற்றே வளைவான ஸ்பிரிங் பட்டைகள், பால்பேரிங்ஸ், கிராங் ஷாப்ட், சிலிண்டர் ஹெட், ஆயில் பிஸ்டன்ஸ் என ஏராளமான ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் வாங்கி விற்கப்படும் ஸ்தாபனம் அது. 

அது தவிர அவர்களுக்கே சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க், தேங்காய் மட்டைகளிலிருந்து நார் எடுத்து,மெத்தைகள் செய்வதும், தாம்புக் கயிறுகள் தயாரிப்பதுமாக ஒரு ஃபாக்டரி போன்ற பல துணைத்தொழில்களும் நடைபெற்று வந்தன. 
 .
அங்கு ஏற்கனவே பணியாற்றியவர்களில் 'ஜான்பேட்டா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஒருவர் உண்டு. அவரது உண்மைப்பெயர் R. பெரியண்ணன் என்பதே. இந்த ஜான்பேட்டா என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்றே என்னால் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியவில்லை.  நான் அவரை முதன்முதலாக சந்திக்கும் போதே அவருக்கு சுமாராக ஒரு 45 வயது இருக்கும். 

'ஜான்பேட்டா' என்றாலே அந்தத் தெருவிலுள்ள கைவண்டிக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் மற்றும் தெருக்குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும். பெரியண்ணன் என்று யாராவது அழைத்தாலும், ஜான்பேட்டாவாகிய பெரியண்ணனே கூட திரும்பிப் பார்க்க மாட்டார். 

அந்த அளவுக்கு இந்த ’ஜான்பேட்டா’ என்ற பெயர் பிரபலமாக இருந்தது. எங்கள் கம்பெனி மேனேஜர் மட்டும், ‘ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு. 

”ஜான்பேட்டா” அவர்களின் தோற்றம்:

சுமார்  ஆறு அடி உயரம். 

நல்ல கருத்த நிறம். 

 நரம்புகள் தெரியும், ஒல்லியான தேகம். 

கம்பீரமான முரட்டு மீசை. 

பெரிச்சாளி போன்ற பார்வை. 

நெற்றியில் காலை நேரங்களில் மட்டும் ஒரு பெரிய குங்குமப்பொட்டு. 

அழுக்கான ஒரு நாலு முழம் வேஷ்டி. 

முழுக்கையை அரைக்கையாக மடித்து விட்ட ஒரு காக்கி சட்டை. 

சடைகள் போல வளர்ந்த அடர்த்தியான பரட்டைத் தலைமுடி, 

தலையில் வெள்ளைக்கலர் துண்டு ஒன்றால் முண்டாசுக்கட்டு. 

கால்களில் போட் [Boat] போல வளைந்த டயர் செருப்பு. 

நடை உடை பாவனையில் ஒரு தெனாவெட்டு. 

எல்லாவற்றிலுமே ஒரு அலட்சியம். 

எதற்குமே பயப்படாத ஓர் ஆசாமி.

கிட்டத்தட்ட, சமீபத்தியப் பிரபலமான சந்தனக்கடத்தல் வீரப்பன் போன்ற தோற்றமுடையவராக இருந்தார், அன்றே இந்த எங்கள் ’ஜான்பேட்டா’. 

R. பெரியண்ணன் என்று சம்பள நாட்களில் மட்டும், ஒட்டப்பட்ட ரெவின்யூ ஸ்டாம்பின் மேல் கையெழுத்துப் போட மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவும் அவர் முழுவதுமாக கையெழுத்துப் போட்டு முடிக்க ஒரு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பேனாவை அடிக்கடி உதறிக்கொண்டே இருப்பார். தரையெல்லாம் ’இங்க்’ தெளிக்கப்படும். அவர் பல்லைக்கடித்துக்கொண்டு கையொப்பம் இட்ட பிறகு அந்த பேனாவின் நிப் சற்றே வளைந்திருக்கும். [அது பால்பாய்ண்ட் பேனா வராத காலம் - ஃபெளண்டைன் பேனாவில் மை ஊற்றி எழுதிய காலம்]. மற்றபடி ஜான்பேட்டாவுக்கு எழுதப்படிக்க ஏதும் தெரியாது. ஆனாலும் அவருக்கு உலக அனுபவ அறிவு அதிகம்.

கையெழுத்து மட்டும் போடுவாரே தவிர ஒரு மாதமாவது சம்பளத்தை அவர் சம்பள நாளில் வாங்கி நான் பார்த்ததே இல்லை. அவ்வப்போது நாலு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஆகவே தேவைப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்வார். 

கோபாலன் என்று ஒரு கேஷியர் அங்கு பணியாற்றி வந்தார். அவருக்கு சுத்தமாக காது கேட்காது. பலக்கக் கத்தினால் மட்டுமே ஏதோ கொஞ்சம் அவருக்குப் புரிய வரும். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். எதிலுமே பட்டுக்கொள்ள மாட்டார். அவரிடம் அவ்வப்போது போய் பணம் வேண்டி தலையைச் சொறிவார் இந்த ஜான்பேட்டா. 

ஒரு கையை குவித்துக்காட்டினால் ஐந்து ரூபாய் தேவையென்றும், இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு, அந்த கேஷியர் கோபாலனே, மாதத்தில் ஒரு முறையோ இரு முறையோ, ஒரு நோட்டில் தேதி போட்டுக் குறித்துக்கொண்டு பணம் தந்து விடுவார். 

மறுமுறை அதே மாதத்தில் ஜான்பேட்டா பணம் கேட்க வரும்போது, ”மேனேஜரிடம் போய்க்கேள்” என கையைக்காட்டி விடுவார், அந்தக் கேஷியர். மாதம் ஓரிரு முறை மேனேஜரும் ஜான்பேட்டா மேல் சற்றே இரக்கப்பட்டோ அல்லது ஒருவித பயத்தினாலோ பணம் தரச்சொல்லுவார். 

அதன் பிறகு கேட்கும் போது மேனேஜரும், ”முதலாளியைப்பார்” என்று சொல்லி விட்டு ஒதுங்கிவிடுவது வழக்கம். முதலாளி தினமும் மாலை சுமார் 5 மணிக்கு கம்பெனிக்கு காரில் வந்து இறங்குவார். ஒரு மணி நேரம் மட்டுமே அங்கு கம்பெனியில் இருப்பார். பெரும்பாலான நேரங்களில் கம்பெனிக்கு வெளிப்புறமே இருக்கும் ஜான்பேட்டா, முதலாளி அவர்கள் காரை விட்டு இறங்கும் போதே, அவரைத் துரத்திக்கொண்டே கம்பெனிக்குள் உள்ளே வருவது வழக்கம். 

முதலாளியைத் துரத்திக்கொண்டே ஜான்பேட்டாவும் வருவதைப் பார்க்கும் கேஷியர், ஒரு நிமிஷம் பதட்டமாகி, பிறகு உடனே சுதாரித்துக்கொண்டு, ஜான்பேட்டா இதுவரை இந்த மாதம் எவ்வளவு முறை பணம் அட்வான்ஸ் ஆக வாங்கியுள்ளார், மொத்தம் எவ்வளவு தொகை வாங்கியுள்ளார், இன்னும் சம்பளம் போட எவ்வளவு நாட்கள் உள்ளன, அதற்குள் மீண்டும் இவர் எவ்வளவு முறை பணம் கேட்டுத் தொல்லை கொடுப்பார் போன்ற புள்ளிவிபரங்களுடன், முதலாளியிடம் தானும் செல்வார்.

முதலாளியும் ஜான் பேட்டா மேல் இரக்க சுபாவம் உடையவர் தான். “என்னப்பா நீ அடிக்கடி இப்படிப் பணம் கேட்டுத் தொல்லை கொடுக்கிறாய்; ஒருவழியாக ஒண்ணாம் தேதி முழுச்சம்பளமாக வாங்கிக்கொள்ள மாட்டாயா” என்று லேசாகக் கடிந்து கொள்வார். அதற்கு ஜான்பேட்டா சிரித்தபடியே தலையைச் சொரிந்து கொள்வார். 

கடைசியில் ”அவன் கேட்பதைக்கொடுப்பா” என்று முதலாளி ஸ்பெஷல் சாங்ஷன் ஆர்டரை, கைஜாடையாகவே அளித்து விடுவார். 

ஜான்பேட்டா கேஷியரை ஒரு அலட்சியப்பார்வை பார்த்துவிட்டு, அவர் தரும் பணத்தை வெகு அலட்சியமாக வாங்கிக்கொண்டு ஒருவித வெற்றிப்புன்னகையுடன் வெளியேறி விடுவார்.  இது மாதாமாதம் அவ்வப்போது நடக்கும் ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சியே.

பணம் கைக்குக்கிடைத்ததும் ஜான்பேட்டா நேராக அங்குள்ள பெட்டிக்கடையில் ஒரு கட்டு பீடியை வாங்கிகொண்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, அந்த காலக்கட்டத்தில் அங்கிருந்த நாயர் டீக்கடைக்கு, ஸ்பெஷல் டீ ஆர்டர் செய்யச் சென்றிடுவார். இந்த டீக்கடை நாயரைப்பற்றி தனியே ஒரு கேரக்டர் பதிவே எழுதலாம். அவ்வளவு சுவாரஸ்யமான ஆசாமி தான் என்னைப்பொருத்தவரை அவரும்.

இந்த ’ஜான்பேட்டா’வுக்கு வீடோ வாசலோ, பெற்றோர்களோ, மனைவியோ, குழந்தைகுட்டிகளோ, உறவினர்களோ இருந்ததாக எங்கள் யாருக்குமே ஒன்றுமே தெரியாது. வருஷத்தின் 365 நாட்களும், இரவு நேரங்களிலும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் அவர் தங்குவது எங்கள் கம்பெனியை ஒட்டியுள்ள ஒரு பகுதியில் தான். அந்தப்பகுதியின் மேலே தகரக்கூரை வேயப்பட்டிருக்கும்.. 

அந்த தகர ஷெட்டிலேயே தான் கம்பெனியில் விற்கப்படும் பேட்டரிகள், ஆஸிட் ஜாடிகள், அலுமினிய தகடுகள், ஸ்ப்ரிங் பட்டைகள் என என்னவெல்லாமோ அடசல்கள் பூராவும் அடுக்கப்பட்டிருக்கும். அதன் நடுவே, ஒரு இத்துப்போன கயிற்றுக்கட்டில், ஒரு விசிறி, ஒரு அழுக்குத் தலையணி, ஒரு கருப்புக் கம்பளி போர்வை இதனுடனேயே ஜான்பேட்டா இரவில் படுத்திருப்பார். 

ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு. வாசலில் பெயருக்கு ஒரு தகர கேட் இருக்கும். அதை ஒரு ஒப்புக்காக, ஒரு நாய்க்கழுத்து இரும்புச் சங்கிலியுடன் கூடிய ஒரு மிகச்சிறிய பூட்டைப் போட்டு பூட்டி விட்டு தான், எங்காவது வெளியே புறப்படுவார்.

அவருக்கு என்ன தான் அந்தக்கம்பெனியில் வேலை என்கிறீர்களா? அது ஒன்றும் சரியாகப் பட்டியலிடவே முடியாதது. ஒரு வேலையும் செய்யாதவர் போலத்தான் பகல் நேரங்களில்  அருகிலுள்ள பீடிக்கடையிலும், டீக்கடையிலும் நின்று கொண்டிருப்பார்.  ஆனால் அவருக்கான வேலைகள் ஏராளமாகவே உண்டு.

கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே. ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது. 

அங்கு கம்பெனிக்குச் சற்றே தள்ளி அமைந்திருந்த டீக்கடை வாசலில் தான் பீடியும் கையுமாக எப்போது நின்றிருப்பார். “ஜான்பேட்டா உன்னை மேனேஜர் கூப்பிடுகிறார்” என்று நாங்கள் யாராவது போய் வெற்றிலை பாக்கு வைத்து, சமயத்தில் அழைத்து வரும்படியாகவும் இருக்கும். 

அலட்சியமாக பீடியை ஒரு இழுப்பு இழுத்து புகை விட்டுக்கொண்டே “போப்பா ..... வரேன்னு சொல்லு” என்பார். ஆனால் லேசில் வரவும் மாட்டார். 

இரண்டாம் பகுதி

தொடர்ச்சி [ பகுதி 2 of 2 ] இப்போது:

காசு கொடுத்து கஷ்டப்பட்டு வாங்கிய பீடியை இறுதி வரை இழுத்து இன்பம் கண்டுவிட்டு, டீயை ருசித்துக் குடித்துவிட்டு பிறகல்லவோ அவர் வருவார்! 

உள்ளே ஜான்பேட்டா அவர்கள் வந்ததும் மேனேஜரை முறைத்தபடி, தலையை உயர்த்தி ஒரு பார்வை மட்டும் பார்ப்பார். அதற்குள் எதற்காக இவனைக் கூப்பிட்டோம் என்பதே மேனேஜருக்கு மறந்தே போய்விடும். மேனேஜர் சற்றே ஆழ்ந்து யோசிப்பதற்குள் ஜான்பேட்டா மீண்டும் எஸ்கேப் ஆகிவிடுவதும் நிகழும்.

ஜான்பேட்டா தான், சீனியர் மோஸ்ட் ஊழியர். முதலாளி அவர்களால் நெரிடையாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர். முதலாளியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மற்ற நாங்கள் எல்லோரும் மேனேஜர் உள்பட ஜான்பேட்டாவைப் பொருத்தவரை ஜூனியர்ஸ். நேற்று வந்த பொடிப்பயல்கள் என்ற ஓர் அலட்சிய மனோபாவம் அவருக்கு உண்டு.  

லாரி மற்றும் ரெயில்வே பார்ஸல் ஆபீஸ்களுக்குச் சென்று பார்ஸலில் வரும் சாமான்களை LR / RR கொடுத்து எடுத்து வருவது, மரப்பெட்டிகளில் வரும் அவற்றை கம்பெனிக்கு வந்ததும் உடைப்பது, அதில் உள்ள பொருட்களை எங்கு அடுக்கச்சொல்கிறோமோ அங்கு அடுக்குவது, புது பேட்டரிகளுக்கு ஆஸிட் + டிஸ்டில்டு வாட்டர் ஊற்றி சார்ஜ் செய்வது, சாமான்களை வண்டியில் ஏற்றுவது இறக்குவது, சாமான்களை அழகாக வேகமாகப் பேக்கிங் செய்து, வரும் கஸ்டமர்களின் வண்டியில் ஏற்றிவிட்டு, அவர்கள் கொடுக்கும் சிறு சில்லரை நாணயங்களை, தன் மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையின் அரைக்கை மடிப்புக்குள் பர்ஸ் போலத் திணித்துக்கொள்வது, பேங்குக்குப்போய் பணம் எடுத்தல், பணம் கட்டுதல் போன்ற பல வேலைகளை அவர் தான் பொறுப்பாகச் செய்து வந்தார்.  

அவரின் உபயோகத்திற்கு என்றே கம்பெனியில் கொடுக்கப்பட்ட ஒரு பாடாவதி சைக்கிள் உண்டு. அதில் உட்காரும் இடமெல்லாம் பிஞ்சுபோய் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அவரைத்தவிர அந்த சைக்கிளை நாங்கள் யாருமே ஓட்ட முடியாது. அவ்வளவு பாடாவதி நிலைமையில் இருக்கும் அந்த சைக்கிள். 

அந்த சைக்கிள் இல்லாமல் தனியாக ஜான்பேட்டாவை எங்கும் மற்ற தெருக்களில் பார்க்கவே முடியாது. அந்த பாடாவதி சைக்கிளில் பட்டும் படாததுமாக உட்கார்ந்து ஓட்டிச்செல்வது அவரது ஸ்டைல். அந்த சைக்கிளில் பெல்லும் இருக்காது, பிரேக்கும் இருக்காது. சடர்ன் ப்ரேக்குக்கு பதிலாக, தன் டயர் செருப்புக் கால்களைத் தரையில் தேய்த்து, ஊன்றி நிறுத்தி விடும் சாமர்த்தியம் உண்டு அவருக்கு..

விடியற்காலை எழுந்து, படுக்கை+போர்வை+தலையணியை சுருட்டி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, கயிற்றுக்கட்டிலையும் மடக்கிப்போட்டு விட்டு, பல்பொடி சோப்புகள் சகிதம், அந்தப் பாடாவதி சைக்கிளில் காவிரிக்குச்சென்று, குளித்துவிட்டு, துணிமணிகளையும் சோப்புப்போட்டு கசக்கிப் பிழிந்து எடுத்து வந்து கம்பெனியிலேயே ஒரு ஓரமாக அவர் கட்டியுள்ள கொடியில் காயப்போட்டு விடுவார்.  ஏற்கனவே அங்கு முதல் நாள் உலர்த்திய துணிகளை ஓர் உதறு உதறிவிட்டு அணிந்து கொள்வார்.

பெண்கள் போல சற்று நீண்ட முடி வளர்த்திருப்பார். அதைத் தன் கைகளால் உலாத்தியபடியும், ஆலம் விழுதுகள் போலத் தொங்கவிட்ட தன் முடிகளைத் துண்டினால் தட்டியபடியும் வெய்யிலில் சற்று நேரம் நின்றபடியும் காயவைப்பார். பிறகு அதை அள்ளி முடிந்து கொண்டு, அதன்மேல் ஓர் முண்டாசும் கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமப்பொட்டு சற்றே பெரிதாக வைத்துக்கொண்டு, காலை நாஸ்தா செய்துவிட்டு, பீடி குடித்து விட்டு, டீ ஒன்றை உள்ளுக்குள் செலுத்தி விட்டாரானால், அவர் அன்றாடப் பணிகளுக்குத் தயார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.  

டாண் என்று பத்து மணிக்கு பேங்க் வேலைகளுக்குப் புறப்பட ரெடியாகி விடுவார். ரூபாய் ஐயாயிரம் முதல் ரூபாய் ஐம்பதாயிரம் வரை பணம் கட்டவோ எடுக்கவோ வேண்டியிருக்கும். [இன்றைய மதிப்பில் ரூபாய் அரை லக்ஷம் முதல் ஐந்து லக்ஷம் வரை என்று வைத்துக்கொள்ளலாம்] . பேங்குக்குப் போகும்போது கையில் எந்த ஒரு பையும் எடுத்துப்போக விரும்ப மாட்டார். 

“பணம் ஜாக்கிரதை, ஜான்பேட்டா” என்று மேனேஜரோ, கேஷியரோ, நாங்களோ சொன்னால் அவருக்கு அசாத்யக் கோபம் வந்து விடும். மீசையை முறுக்கியபடி எங்களை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பார், சுண்டைக்காய்ப் பணம்; இதுக்கு தனியாக ஒரு பை வேறா வேண்டும்! என்பது போல .  

எவ்வளவு பணமாக இருந்தாலும் [இப்போது போல 1000, 500 நோட்டுக்கள் அப்போது கிடையாது 100 ரூபாய் தான் அன்று மிகப்பெரிய நோட்டு ] தன் நாலு முழ வேஷ்டியின் தலைப்பில் அப்படியே மடித்து வைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவார். வேஷ்டி அவிழாமல் நழுவாமல் இருக்க பட்டையான பச்சைக்கலர் பெல்ட் ஒன்றும் அணிந்திருப்பார். 

பேங்குக்குப்போய் விட்டு வெற்றிகரமாக வேலைகளை முடித்துக்கொண்டு ஜான்பேட்டா நல்லபடியாக திரும்பி வரும்வரை கேஷியருக்கு திக்திக்கென்று இருக்கும்.  Pay-in-Slip எழுதி பூர்த்தி செய்யப்பட்ட தாள்கள் அடங்கிய புத்தகமும், இதர காசோலை வரைவோலை போன்றவைகளையும், சைக்கிள் கேரியரில் பறக்காமல் இருக்க கிளிப் போட்டு வைத்துக்கொள்வார். மழைநாட்களில் மட்டும் அவற்றை ஒரு ப்ளாஸ்டிக் போன்ற பையில் அள்ளிப்போட்டுக்கொண்டு, சைக்கிள் கேரியரில் சொருகிக்கொள்வார்.

ஜான்பேட்டாவிடம் இதுபோன்ற பேங்க் வேலைகள் எல்லாவற்றையும்  ஒப்படைத்தபின்,அவரும் பேங்குக்குக் கிளம்பியபின், என்னிடம் அந்தக்கேஷியர் இதுபற்றி புலம்பிக்கொண்டிருப்பார்.

”அவன் மிகவும் நல்லவன் தான். நாணயமானவன் தான். சாமர்த்தியமான ஆசாமி தான். இருந்தாலும் பண விஷயம் ஹேண்ட்பேக் போன்ற எதுவும் எடுத்துச்செல்லாமல், வேஷ்டித்தலைப்பில் இவ்வளவு பணத்தையும் முடிந்து கொண்டு, அந்த பெல்லும் பிரேக்கும் இல்லாத பாடாவதி சைக்கிளில் செல்கிறான். சொன்ன பேச்சே கேட்பதில்லை” என என்னிடம் புலம்புவார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஒருமுறை ஜான்பேட்டாவுக்கும் எங்கள் கம்பெனியின் மேனேஜருக்கும் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பாஷணை:

மேனேஜர்: 

ஜான்பேட்டா! [AIR PARCEL] ஏர் பார்ஸலில் ஒரு பொருள் மதராஸிலிருந்து வந்துள்ளது. நீ போய் உடனே அதை எடுத்து வரவேண்டும். 

கஸ்டமர் அந்தப்பொருளுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறார். 

ஏர் பார்ஸல் எடுக்கும் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?

ஜான்பேட்டா:  ஏன் தெரியாது?

மேனேஜர்: 

’உனக்கு ஏன் தெரியாது’ என்று எனக்குத் தெரியாது. 

உனக்கு அந்த ஆபீஸ் உள்ள இடம் தெரியுமா, தெரியாதா என்று பளிச்சென்று தெளிவாகச் சொல்லு.

ஜான்பேட்டா: [மேனேஜரை முறைத்துப்பார்த்தபடி] 

அதற்கான சீட்டையும் பணத்தையும் கொடுங்க, போய் வாங்கி வருகிறேனே இல்லையா என்று பாருங்க, சும்மா அனாவஸ்யக் கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்காதீங்க!

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

பொதுவான ஒருசில தகவல்கள்:

அந்தக்காலக்கட்டத்தில் அதாவது 1970 வரை லேண்ட்லைன் டெலிஃபோன் வைத்திருந்தவர்களே மிகவும் குறைவு. 

அதுவும் அதில் ஆட்டோமேடிக் டயலிங் வசதி ஏதும் கிடையாது.  டயல் செய்யும் இடம் நம்பர் ஏதும் இல்லாமல் சப்பையாகவே இருக்கும். 

ரிஸீவரை கையில் நாம் எடுத்து காதில் வைத்துக்கொண்டதும், கொர்..ர்..ர்..ர் என்று டயல் டோன் மட்டும் கேட்கும். அதே சமயம் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண்மணி, ‘நம்பர் ப்ளீஸ்’ என்று நம்மிடம் இனிமையாகக் கேட்பார். நாம் தொடர்பு கொள்ள வேண்டிய மூன்று இலக்க எண்ணை அவர்களிடம் கூற வேண்டும். 

உடனே ’பி.பி காலா’ ’ஜெனரல் காலா’ என்று கேட்பார்கள். [PP Call என்றால் PARTICULAR PERSON உடன் மட்டும் நாம் பேச வேண்டும் என்ற நமது விருப்பத்தைத் தெரிவிப்பது. GENERAL CALL என்றால் அந்த நம்பரில் யாரிடம் வேண்டுமானாலும் நாம் பேசத் தயார் என்பது]   

அப்போதெல்லாம் திருச்சி போன்ற பெரிய நகரங்களுக்குக்கூட 3 இலக்க தொலைபேசி நம்பர்கள் மட்டுமே இருந்தன. 

அதாவது திருச்சி போன்ற பெருநகரத்திலேயே மொத்தம் அதிகபட்சமாக 999 பேர்களுக்கு மேல் லேண்ட் லைன் இணைப்பு கேட்க மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

நாம் தொலைபேசி இணைப்பகத்திலிருந்து தொடர்பு கொண்ட பெண்மணியிடம் நமக்குத் தேவையான நம்பர் கொடுத்தவுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு, டெலிஃபோன் அருகிலேயே தவமாய்த் தவமிருக்க வேண்டும். 

மீண்டும் நமக்கு தொலைபேசி இணைப்பகத்திலிருந்து அழைப்பு வரும். நாம் கேட்ட நம்பருடன் நமக்கு இணைப்புத் தருவார்கள். பிறகு தான் நாம் பேசவே முடியும். 

அதுவும் மழை பேய்க்காற்று போன்ற சமயங்களில் இந்த டெலிஃபோன் பலநாட்கள் வேலை செய்யாது. உடல் நிலை சரியில்லாமல் நீண்ட ஓய்வு எடுத்துக்கொள்ளும்.

உள்ளூர் இணைப்புகளுக்கே இவ்வளவு தொல்லைகள். வெளியூர் வெளிநாடு இணைப்புகள் தேவையென்றால், நாம் செத்தோம். மணிக்கணக்காக, நாள் கணக்காகத் தவமாய்த் தவமிருக்க வேண்டியிருக்கும். வேறு எந்த வேலையும் பார்க்கவே முடியாது. 

இன்று இந்த செல்ஃபோன் மூலம் உலகமே நம் கையில் அடங்கியுள்ளது. உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், அடுத்த நொடிப்பொழுதில் மிகச் சுலபமாகப் பேசி விட முடிகிறது.  இத்தைகைய இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை நாம் கையெடுத்துக் கும்பிடத்தான் வேண்டும்.

இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஜான்பேட்டாவை வெளியே ஏர்பார்ஸல் வாங்கிவர ஒருவழியாக அனுப்பிவிட்டால், அவரை பிறகு தொடர்பு கொள்ளவே முடியாது, என்பது அன்றைய சூழ்நிலை. 

அவர் அந்த ஏர்பார்ஸல் ஆபீஸுக்கு நல்லபடியாகப் போய்ச்சேர்ந்தாரா? அந்த ஏர் பார்ஸலை வாங்கி விட்டாரா? எப்போது அந்த பார்ஸல் நம் கம்பெனிக்கு வந்து சேரும்? அதுவரை அந்தப்பொருளுக்காகவே காத்துக்கிடக்கும் நம் கஸ்டமருக்கு என்ன பதில் சொல்வது? என பல கவலைகள் அந்த எங்கள் மேனேஜருக்கு.

இது போன்ற அவசரச் சூழ்நிலைகளில் ‘ஜான்பேட்டா’ போன்ற தெனாவெட்டு ஆசாமிகளின் பதில் யாருக்குமே ஒருவித எரிச்சலைத்தானே தரும்! 

ஜான்பேட்டாவிடம் பேசி வேலை வாங்குவதற்கு மிகவும் பொறுமை வேண்டும். அந்தப்பொறுமை மிகவும் இருந்தது அந்த எங்கள் மேனேஜர் வெங்கட்ரமணி அவர்களுக்கு. 

அந்த வெங்கட்ரமணி என்னும் மேனேஜரை சமீபத்தில் கடைத்தெருவில் சந்தித்தேன். வயது 85. இப்போதும் மிகவும் பொறுமையாகவே [காதில் மெஷின் வைத்தபடி] மெதுவாக கூனியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.  
     
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்த ஜான்பேட்டாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். விற்கும் பொருட்களை அழகாக Packing செய்வது எப்படி என்பதை நானே என் ஆர்வத்தில் அவர் செய்வதை அருகில் இருந்து பார்த்துக் கற்றுக்கொண்டேன். 

இன்றைக்கும் என் வீட்டில் என் மகன்கள் மருமகள்கள் போன்றவர்கள் வெளியூர் வெளிநாடு செல்லும் போது பலபொருட்களை என்னிடம் ஒப்படைத்து ஊர் போய்ச்சேரும் வரை  சிந்தாமல் சிதறாமல் அழகாக Packing செய்து தரச்சொல்லி சொல்வதுண்டு. 

நானும் என்றோ நானாக விருப்பப்பட்டு ஜான்பேட்டாவிடம் கற்ற தொழில்நுட்பத்தாலும், எனக்கே உள்ள ஆர்வத்தாலும் அவற்றை அழகாக Pack செய்து தருவதுண்டு. [உதாரணமாக இட்லி, தோசை, சட்னி, எண்ணெயில் குழைத்த தோசைமிளகாய்ப்பொடி, தயிர் சாதம், புளியஞ்சாதம், பொரித்த வடாம், சாம்பார்பொடி, ஊறுகாய்கள் முதலியன சிந்தாமல் சிதறாமல் உடையாமல் மற்ற பொருட்களின் மேல் அப்பி கறை படுத்திவிடாமல் இருக்க வேண்டும் அல்லவா] இப்போதெல்லாம் மிகச்சுலபமாக Aluminium foil டப்பாக்கள் வந்து விட்டன. உணவுப் பதார்த்தங்களை Packing செய்வதும் மிகச்சுலபமாகி விட்டது. 

அப்போதெல்லாம், செய்தித்தாள்கள், இலைகள், சணல் கயிறு முதலியவற்றால் தான் அழகாக சிந்தாமல் சிதறாமல் ஒழுகாமல் கட்டும்படியான நிலைமை இருந்தது. 

முன்பெல்லாம் மளிகைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, பேப்பர் பைகளில் போட்டு மடித்து, சணல் போட்டுக் கட்டித்தருவார்கள் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த சணலை தேவையான அளவுக்கு எடுத்துக்கொண்டு, லேசாக கையால் திரித்து சுலபமாக கத்தரித்து விடுவார்கள் என்பதையும் உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். அது ஒற்றைப்பரி சணல் எனப்படும். அதை சுலபமாகக் கையால் திரித்து வெட்டிவிட இயலும். 

அதுவே மூன்றாகவோ அல்லது ஐந்தாகவோ திரிக்கப்பட்டிருந்தால் கெட்டிச் சணல் கயிறு என்று அழைக்கப்படும். அதை கத்தியோ ப்ளேடோ இல்லாமல் கையால் யாராலும் அறுத்துவிட முடியாது.  

ஆனால் அத்தகைய கெட்டியான 3 பரி அல்லது 5 பரிச் சணலையும், என்னால் இன்றும் கத்தியோ ப்ளேடோ இல்லாமல், வெறும் கையால் அறுத்துவிட முடியும். 

இதுவும் ஜான்பேட்டா அவர்களிடமிருந்து நானே OUT OF MY OWN INTEREST, VOLUNTARY யாகக் கற்றுக்கொண்ட டெக்னிக். 

இப்போது நான் அதுபோன்ற கெட்டிக் கயிறுகளை அவ்வாறு கத்தியின்றி கையாலேயே அறுக்கும் போது பலரும் பார்த்து வியந்து போய் பாராட்டுவார்கள். 

”எப்படி அது எப்படி?” என சிலர் என்னிடமிருந்து தெரிந்து கொள்ளவும் முயற்சிப்பார்கள். அதுபோன்ற சமயங்களில் என் குருநாதராகிய ஜான்பேட்டாவை நான் நினைத்துக்கொள்வதுண்டு. 

அதை மிகவும் கவனமாகப் புரிந்துகொண்டு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கயிறு அறுகுமோ அறுகாதோ, உள்ளங்கையை கத்திபோல அறுத்துவிடும் ஆபத்து அதில் உள்ளது.

ஒருமுறை நாங்கள் குடியிருந்த வீட்டின் குறுகிய வாசல் திண்ணையில் மிகப்பெரிய ஆட்டுக்கல்லும் குழவியும் வைத்திருந்தோம். அந்தத் திண்ணை 2 அடி உயரம் + 2 அடி அகலம் + 5 அடி நீளம் உள்ளது. அந்த மாவரைக்கும் மிகப்பெரிய ஆட்டுக்கல்லும் 2 அடி உயரம் 2 அடி நீளம் 2 அடி அகலம் உள்ளது. ஒரு கெட்டியான ஜீனிச்சாக்கில் அந்த மிகப்பெரிய ஆட்டுக்க்ல்லை வைத்து 6  முரட்டு ஆசாமிகளாக சேர்ந்து ’ஏலேலோ ஐலஸா’ போட்டு கொண்டுவரப்பட்டு, எங்கள் வீட்டு வாசல் திண்ணையில் வைக்கப்பட்ட ஆட்டுக்கல் அது. 

அது திண்ணையில் இருந்ததால் இட்லி தோசைக்கு மாவு அரைக்க மிகவும் கஷ்டமாகவே இருந்தது.   திண்ணையில் உட்கார்ந்தும் அரைக்க முடியாமல், நின்றுகொண்டும் அரைக்க முடியாமல், அதுவும் மழைகாலங்களில் மிகவும் கஷ்டமாக இருந்ததால், அதை வீட்டுக்குள் கொண்டுபோய் ஒரு ஓரமாக பூமியில் பள்ளம் பறித்து, ஆட்டுக்கல்லின் பெரும்பகுதியை பள்ளத்தில் இறக்கிவிட முடிவு செய்தோம். 

அவ்வாறு பூமியில் குழிபறித்து ஆட்டுக்கல்லை ஒண்ணேமுக்கால் அடிக்கு கீழே இறக்கிவிட்டால் தான், அதன் 2 அடி உயரம் வெறும் 3 அங்குலமாகக் குறையும். அதன் அருகே தரையில் அமர்ந்து மாவு அரைக்க வீட்டுப்பெண்மணிகளுக்குக் கஷ்டமில்லாமலும் இருக்கும் என்பதால் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.   [இப்போது போல கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வராத காலம் அது; அம்மி, ஆட்டுக்கல், குழவிகள் போன்றவைகளே பயன் படுத்தப்பட்டு வந்த காலம் அது ]  

நான் 1970 லேயே அந்த ஆட்டோமொபைல்ஸ் கம்பெனியிலிருந்து விலகி விட்டிருந்தேன்.  1974 இல் ”இந்த ஆட்டுக்கல்லை நகர்த்த தகுந்த ஆட்களை உங்களுடன் கூட்டி வந்து உதவிசெய்ய முடியுமா” என ஜான்பேட்டாவை நேரில் போய் சந்தித்துக் கேட்டேன். 

ஜான்பேட்டா அவர்கள், உடனே புறப்பட்டு என்னுடன் என் வீட்டுக்கு வந்தார். ஆட்டுக் கல்லைப் பார்வை இட்டார். ”இதை எங்கே போட வேண்டும்?” எனக் கேட்டார். நாங்கள் அந்த ஆட்டுக்கல்லைப் போட வேண்டிய இடத்தை அவருக்குக் காட்டினோம். 

”போய் உதவிக்கு ஆட்களைக் கூட்டி வாருங்கள்” என்றேன் ஜான்பேட்டாவிடம். 

“இந்த ஒரு ஆட்டுக்கல்லை நகர்த்த ஒன்பது ஆட்களாக வேண்டும்?” என்றார். 

”நானும் நீங்களும் மட்டுமே நகர்த்திப் போட்டுவிட முடியுமா என்ன?”
 என்று கேட்டேன். 

“கெட்டிச்சாக்கு இரண்டு கொண்டுவந்து கொடுத்துவிட்டு நீயும் நகரந்து போய் நில்லப்பா” என்றார். 

சாக்கை கீழே மெத்தென்று விரித்து விட்டு, அந்த மிகப்பெரிய ஆட்டுக்கல்லை தான் ஒரே ஆளாக நகர்த்தி, அந்தத்திண்ணையிலிருந்து கீழே தள்ளி விட்டார். பிறகு அதை அப்படியே உருட்டிப்போய் உள்ளேயும் போட்டு விட்டார். எனக்கும் என் அப்பாவுக்கும், தனி ஒரு ஆளாகவே செய்த ஜான்பேட்டாவின் இந்த தீரச்செயல் ஒரே ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. 

குடிக்கத்தண்ணீர் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு ஐந்து ரூபாயோ என்னவோ பணம் கொடுத்தோம். ஜான்பேட்டா அவர்கள் முதலில் அந்தப்பணத்தை வாங்க மறுத்தார். பிறகு என் அப்பா வற்புருத்திய பிறகு, ”பெரியவர் கொடுப்பதால் வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி, அந்தப்பணத்தை வாங்கிக் கண்ணில் ஒத்திக்கொண்டு, முழங்கை அருகே இருந்த சட்டை மடிப்பில் சொருகிக்கொண்டு போனார். அதன் பிறகு பல்லாண்டுகள் நான் ‘ஜான்பேட்டா’ வை நேரில் சந்திக்கவே வாய்ப்பு அமையவில்லை.

அதன் பிறகு 1975 இல் என் தந்தை காலமானார். 1981 இல் நான் திருச்சி டவுனிலிருந்து BHEL Quarters க்கு குடிமாறிச் செல்ல நேர்ந்தது. அங்கேயே ஒரு 20 வருடங்கள் [1981 முதல் 2000 வரை] இருக்கும்படி நேர்ந்து விட்டது.  

இதற்கிடையில், நான் BHEL Quarters இல் குடியிருந்த காலக்கட்டத்தில் ஜான்பேட்டா இறந்து போய் இருக்கிறார். அன்று ஜான்பேட்டவுடன் சேர்ந்து நான் வேலை பார்த்த நிறுவனத்தின் முதலாளியும் அதன்பின் காலமாகி விட்டாராம்.  அந்தக்கம்பெனியும் பிறகு சரிவர திட்டமிட்டு நடத்த ஆள் இல்லாமல் மூடப்பட்டு விட்டதாம்.    

ஜான்பேட்டா இறந்த விஷயம் எனக்கு அப்போது யாருமே தெரியப்படுத்தவில்லை. அதில் எனக்கு மிகவும் வருத்தமே. 

ஜான்பேட்டாவுக்குச் சொந்தமான யாரோ மாமனோ மச்சானோ ஓரிருவர் மட்டும் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் என்ற ஊரிலிருந்து வந்து, திருச்சியிலேயே அவரை நல்லடக்கம் செய்ததாக பிறகு ஒருநாள் நான் வேறொருவர் மூலம் கேள்விப்பட்டேன். 

இருப்பினும் அந்த 'ஜான்பேட்டா' என் நினைவலைகளில் இன்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் என்பதே உண்மை.   

ooooooooooooooo

வியாழன், 5 ஏப்ரல், 2012

”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]

எனக்கு 18 வயது இருக்கும் போது, 01.01.1968 முதல் தொடர்ச்சியாக சுமார் 2 ஆண்டுகள் + 9 மாதங்கள் நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் Accounts Clerk-cum-Typist ஆக வேலை பார்த்து வந்தேன். 

அந்த நிறுவனம் லாரி பஸ் போன்ற வாகனங்களுக்கு வேண்டிய உதிரி பாகங்கள் அனைத்தும் வாங்கி விற்கக்கூடிய சற்றே பெரிய வியாபார ஸ்தாபனம். 

ஃபர்கோ, லேய்லண்ட், பென்ஸ் போன்ற பல கனரக வாகனங்களுக்கு ENGINE + CHASSIS PARTS  அனைத்தும் அங்கு கொள்முதலும் வியாபாரமும் நடைபெறும். 

பஸ் பாடிகட்டப் பயன்படும் அலுமினிய தகடுகள், பஸ் லாரிக்குத்தேவைப்படும் பேட்டரிகள், அதிர்ச்சியைத் தாங்கிடும் [டூ வீலரில் உள்ள ஷாக் அப்சார்பருக்கு பதிலான] கனமான சற்றே வளைவான ஸ்பிரிங் பட்டைகள், பால்பேரிங்ஸ், கிராங் ஷாப்ட், சிலிண்டர் ஹெட், ஆயில் பிஸ்டன்ஸ் என ஏராளமான ஆயிரக்கணக்கான உதிரி பாகங்கள் வாங்கி விற்கப்படும் ஸ்தாபனம் அது. 

அது தவிர அவர்களுக்கே சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க், தேங்காய் மட்டைகளிலிருந்து நார் எடுத்து,மெத்தைகள் செய்வதும், தாம்புக் கயிறுகள் தயாரிப்பதுமாக ஒரு ஃபாக்டரி போன்ற பல துணைத்தொழில்களும் நடைபெற்று வந்தன. 
 .
அங்கு ஏற்கனவே பணியாற்றியவர்களில் 'ஜான்பேட்டா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஒருவர் உண்டு. அவரது உண்மைப்பெயர் R. பெரியண்ணன் என்பதே. இந்த ஜான்பேட்டா என்ற பெயர் எப்படி அவருக்கு வந்தது என்றே என்னால் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியவில்லை.  நான் அவரை முதன்முதலாக சந்திக்கும் போதே அவருக்கு சுமாராக ஒரு 45 வயது இருக்கும். 

'ஜான்பேட்டா' என்றாலே அந்தத் தெருவிலுள்ள கைவண்டிக்காரர்கள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள் மற்றும் தெருக்குழந்தைகள் உள்பட அனைவருக்கும் அவரை அடையாளம் தெரியும். பெரியண்ணன் என்று யாராவது அழைத்தாலும், ஜான்பேட்டாவாகிய பெரியண்ணனே கூட திரும்பிப் பார்க்க மாட்டார். 

அந்த அளவுக்கு இந்த ’ஜான்பேட்டா’ என்ற பெயர் பிரபலமாக இருந்தது. எங்கள் கம்பெனி மேனேஜர் மட்டும், ‘ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு. 

ஜான்பேட்டா அவர்களின் தோற்றம்:

சுமார்  ஆறு அடி உயரம். 

நல்ல கருத்த நிறம். 

ஒல்லியான நரம்புகள் தெரியும் தேகம். 

தொடரும்