தாயுமானவள்
சிறுகதை [பகுதி 2 of 3]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
முன்கதை முடிந்த இடம்:
பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண்குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.
அடுத்த பகுதி தொடர்கிறது ...................
”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.
”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.
அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.
”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.
”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.
”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.
”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.
சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது.
தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.
சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.
“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.
அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.
குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.
தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி.
ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.
ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.
மதியம் மூன்று மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி, “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்” நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.
மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.
அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன.
தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது. அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான்.
தொடரும்
[இந்தச் சிறுகதையின் இறுதிப்பகுதி 09.12.2011
வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்]
வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்]
[ இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர்
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.
இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை
இதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன் ]
காணத்தவறாதீர்கள்
அன்புடன்
vgk
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.
இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை
இதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன் ]
காணத்தவறாதீர்கள்
அன்புடன்
vgk
