என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
சிறுகதை [பகுதி 2 of 5] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை [பகுதி 2 of 5] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 2 of 5]




தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 2 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-








முன்கதை முடிந்த இடம்:

“காஃபி, டீ, பூஸ்டு, போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ்,  க்ரேப் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் ...... என்ன சாப்பிடுகிறீர்கள்?” தூத்பேடாக்கள், வறுத்த முந்திரிகள், ஸ்பெஷல் மிக்சர், ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கட்டுகள் முதலியன நிறைந்த தட்டொன்றை டீப்பாயுடன் சுமதி அருகில் நகர்த்தியவாறு கேட்டான், சுந்தர்.

“நோ ... தாங்க்ஸ் .... குடிக்க தண்ணீர் மட்டும் போதும்”

ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்து சுமதியிடம் சுந்தர் நீட்ட இருவர் மனதிலும் ஏதோ ஜில்லென்ற உணர்வு ஏற்பட்டது.

=====================================

தொடர்ச்சி இப்போது இங்கே ......


“வாம்மா; நான் தான் மரகதம் ..... என் வீட்டுக்காரர் நாடுநாடாகச் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய பிஸினஸ்மேன். குடும்ப விஷயங்களிலெல்லாம் தலையிட அவருக்கு நேரமே கிடையாது. இவன் என் ஒரே மகன் சுந்தர் ..... இவன் தான் எனக்கே தெரியாமல், அந்த விளம்பரம் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி, முரட்டு நாற்காலி ஒன்று நிரம்பி வழியுமாறு கும்மென்று உட்கார்ந்து கொண்டாள் மரகதம். 

மரகதத்தைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து கைகூப்பி நின்ற சுமதியின் செயலால் மனதுக்குள் மகிழ்ந்த மரகதம் ”பரவாயில்லை ..... நீ உட்கார்ந்து கொள்” என்று சொல்லிவிட்டு, சுந்தரையும் வேறு ஒரு நாற்காலியில், வாயைத்திறக்காமல் அமைதியாக உட்காரும்படி, தன் ஒருமாதிரியான கண் அசைவுகளாலேயே உத்தரவு பிறப்பித்தாள், மரகதம்.

“உங்களுக்குப் பூர்வீகம் எந்த ஊரும்மா? சென்னையில் எவ்வளவு நாளா இருக்கீங்க?” சுமதியைப்பார்த்து மரகதம் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“எங்க அப்பா அம்மாவின் பூர்வீகம் திருச்சிராப்பள்ளி பக்கம். ’ஆங்கரை’ கிராமம். ஆனால் நாங்கள் சென்னை வந்து 25 வருஷங்களுக்கு மேல் இருக்கும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், இதே சென்னையில் தான்” என்றாள் சுமதி.

இவள் பெற்றோர்களின் பூர்வீகம் திருச்சி என்று கேள்விப்பட்டதும் மரகதத்திற்கு சற்றே மகிழ்ச்சி ஏற்பட்டது. மரகதத்தின் பிறந்த வீடும் திருச்சி மாவட்டத்தில் உள்ள ’மணக்கால்’ என்ற கிராமம். 


திருச்சியிலிருந்து சுமதி சொன்ன ’ஆங்கரை’ என்ற கிராமத்தைத் தாண்டித்தான் ’லால்குடி’ வழியாக ‘மணக்கால்’ போக வேண்டும். 

சுமதி மேலும் தாமதிக்கவில்லை. தன்னைப்பற்றியும், தன் உத்யோகம் பற்றியும், தன் குடும்ப சூழ்நிலை பற்றியும், தாய், தந்தை, நான்கு தங்கைகள் முதலிய எல்லா விபரங்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தாள். 

“என் மகன், எனக்கே தெரியாமல், இப்படி ஒரு கேவலமான விளம்பரம் கொடுத்திருந்தும், ஒரு பெரிய குடும்பத்தில் மூத்த பெண்ணாக பிறந்துள்ள நீ, எந்த தைர்யத்தில் இங்கே புறப்பட்டு வந்தாய்?” மரகதம் தன் முதல் அம்பைத் தொடுத்தாள்.

இவரைப்போன்ற சிலர், இன்றுள்ள சாதகமான சூழ்நிலையில், உண்மையை முழுவதுமாக மறைத்துக்கூட, மிகச்சுலபமாகத் திருமணம் செய்து கொள்ள நினைக்கலாம்; 


எந்தவொரு மருத்துவப் பரிசோதனைகளோ, மருத்துவச் சான்றிதழ்களோ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லாமலேயே, நம் நாட்டில் ஜாதகப் பொருத்தத்தையும், ஜோஸ்யர்கள் சொல்லும் பலன்களையும், கல்யாணத் தரகர்களின் வாய்ச்சவடால்களையும் மட்டுமே நம்பி, நிறைய திருமணங்கள் மிகச்சுலபமாக நடந்து முடிந்து விடுகின்றன;    


இதுபோன்ற ஏமாற்றும் உலகத்தில், இவர் தன் விளம்பரத்தில் உண்மையை உண்மையாக மறைக்காமல் ஒத்துக்கொண்டு கூறியிருந்தது, முதலில் என்னை மிகவும் கவர்ந்தது;  


மேலும் எயிட்ஸ் என்பது மிகவும் மெதுவாகப் பரவும் ஒரு ஆட்கொல்லி நோய். இன்றோ அல்லது நாளையோ கூட அதைப் பூரணமாக குணப்படுத்த நம் மருத்துவ விஞ்ஞானிகளால் மருந்து கண்டுபிடித்து விடக்கூடும். அந்த நம்பிக்கை எனக்கிருப்பதால், புறப்பட்டு வந்தேன்” என்றாள் சுமதி.

தனக்கு வரப்போகும் கணவன் ஒரு ஒழுக்கம் கெட்டவன் என்ற ”ஐ.எஸ்.ஐ.” முத்திரை உன்னை பாதிக்கவில்லையா?” மரகதத்திடமிருந்து பாய்ந்து வந்த இரண்டாவது அஸ்திரம் இது.

வயசுக்கோளாறினாலும், ஏதோவொரு ஆர்வக் கோளாறினாலும், கெட்ட நண்பர்களின் சேர்க்கையினாலும், அவர்களின் தவறான வழிகாட்டுதலாலும், சில ஆண்கள் அவசரப்பட்டு, தெரிந்தோ தெரியாமலோ இதுபோல, தவறான போகக்கூடாத இடங்களுக்குப் போய்விட்டு, தவறு என்றே தெரியாமல் தவறுகள் செய்துவிட்டு, பின்னால் அதற்காக வருந்தி, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, மீண்டும் அதுபோல தவறுகள் செய்யாமல் திருந்தி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்;  


இவர்களின் இத்தகைய செயலை நான் நியாயப்படுத்துவதாக தயவுசெய்து எண்ண வேண்டாம்; 


மழைகாலத்தில் நாம் தெருவில் நடந்து போகும் போது கால் வழுக்கியோ கல் தடுக்கியோ தவறுதலாக சேற்றிலோ சாக்கடையிலோ விழுந்து விடுவது இல்லையா? அதுபோலத்தான் இதுவும்; 


தெரிந்தோ தெரியாமலோ நம் கை அல்லது கால் விரல்களால் அசிங்கத்தைத் தொட்டு விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்; 


அதற்காக அந்த அசிங்கத்தின் மேல் பட்ட நம் விரல்களை உடனே நாம் வெட்டி எறிந்து விடுகிறோமா!  ........   இல்லையே;


அதுபோலவே, இவர்களை நாம் ‘ஒழுக்கம் கெட்டவர்கள்’ என ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது. எதிர்பாராமல் நம்மை மீறி, நடந்து முடிந்து விட்ட இதை, ஒரு சிறிய விபத்து என்று தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்; 


இது போன்ற விபத்துக்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல, ஒரு சில அப்பாவிப் பெண்களுக்கும் கூட திருமணத்திற்கு முன்பே துரதிஷ்டவசமாக ஏற்பட்டு விடுவதுண்டு, அதை நாம் ஒரு கெட்ட கனவு போல மறந்து விடுவதே நல்லது” மிகத்தெளிவாகவே பேசினாள், சுமதி.

“நீ இவனை மணந்தால் உனக்கும், உனக்குப்பிறக்கும் குழந்தைக்கும் கூட இந்த வியாதி பரவக்கூடும் அல்லவா?” இந்தக்கேள்வி அவளை எப்படியும் வீழ்த்தி விடும் என எதிர்பார்த்தாள், மரகதம்.

”பாதுகாப்பாக இருந்தால் அதைப் பரவாமலும் தடுக்கலாம். மருத்துவ விஞ்ஞானம் இன்று நன்கு வளர்ந்து விட்டது. அது மேலும் மேலும் வளரவே செய்யும். எந்தப் பிரச்சனைக்கும் அது நல்லதொரு தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”

பக்குவமாகவும் மிகவும் மென்மையாகவும் அதற்கு விடையளித்தாள், சுமதி.

“இன்றைய சூழ்நிலையில் இவனுடைய ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பது உனக்கே தெரியும். ஒருவேளை, உன்னை மணந்தபின், இவன் அற்ப ஆயுளில் போய் விட்டால், உன் நிலைமையை எண்ணிப் பார்த்தாயா?” மரகதம் தொடர்ந்தாள்.

“அவரைப்பெற்ற தாயாராகிய உங்கள் வாயால் அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள் .... அம்மா! 


நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில்,  நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;  


மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;  


இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.


தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.


தொடரும்
     

[இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் 20.12.2011 
செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படும்]