என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
சிறுகதை [பகுதி 4 of 5] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை [பகுதி 4 of 5] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 4 of 5]



தேடி வந்த தேவதை

[சிறுகதை - பகுதி 4 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




முன்கதை முடிந்த இடம்:



“தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.


தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. 


ஆனால் அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது. 


மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.


=================================


தொடர்ச்சி இப்போது இங்கே ............




என்னதான் இருந்தாலும், வரதட்சனை வாங்கக்கூடாது, தன் கல்யாண விஷயமாக பெண் வீட்டாருக்கு எந்த செலவுகளும் வைக்கக்கூடாது என்ற தன் பிடிவாதக் கொள்கைக்காக, தன் குடும்ப டாக்டரின் உதவியுடன், தன்னைப் பெற்றெடுத்த தாயிடமே. தனக்கு எயிட்ஸ் நோய் வந்திருப்பதாகப் பொய் சொல்லி நாடகமாடுவதா?


சுந்தரின் இந்தச்செயலை ஆதரிக்க மனமின்றி சுமதி தவித்தாள். இந்த சம்பவம் தொண்டையில் முள் ஒன்று தைத்தது போல, அவளால் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சங்கடப்பட வைத்தது.    


மறுநாள் காலை அவளிடம் தொலைபேசியில் சுந்தர் தொடர்பு கொண்டதும், தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.

“தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள், சுந்தர். முதலில் உங்கள் தாயாரிடம் உண்மையை உண்மையாகக் கூறி விடுங்கள். அவர்கள் அதன்பிறகும் என்னையே தன் மருமகளாக ஏற்றுக்கொள்ள விரும்பினால், நல்லபடியாக நம் திருமணம் நடக்கட்டும். இல்லையென்றால் பிராப்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்; 


தங்கள் தாயாரை நான் மிகவும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். அவர்களிடம் உண்மையை மறைக்க என்னால் முடியவே முடியாது” தீர்மானமாகத் தன் முடிவை எடுத்துக்கூறினாள், சுமதி.


“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தச் சொல்லியல்லவா சொல்லுவார்கள், சுமதி.  நாம் ஒரே ஒரு பொய் தானே சொல்லப்போகிறோம். அதுவும் என் தாயார் ஒருவரிடம் மட்டுமே தானே. திருமணத்திற்குப்பிறகு நாமே இந்த உண்மையைச் சொல்லிவிட்டால் போகிறது” என்றான் சுந்தர்.


“நோ .... மிஸ்டர் சுந்தர். எனக்குப் பொதுவாக யார், யாரிடம், எதற்காகப் பொய் சொன்னாலுமே பிடிக்காது. 


“சுமதி, ப்ளீஸ் ...... நான் எதற்காகச் சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோ; எங்க அம்மாவைப் பற்றியும், அவங்க எதிர்பார்ப்புகள் பற்றியும் உனக்கு எதுவுமே தெரியாது. நான் ஒரே பிள்ளை என்பதாலும், நாங்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்பதாலும், நிறைய வரதட்சணை, சீர்செனத்தியோட மருமகள் வரணும்னு ரொம்ப பேராசைப்பிடித்து அலைகிறார்கள். எனக்கோ அதிலெல்லாம் கொஞ்சம் கூட இஷ்டமே கிடையாது. 


அதனால் தான் இப்படியொரு வீண் பழியை நானே என் மீது சுமத்திக்கொண்டு நாடகம் ஆடினேன். எங்கள் குடும்ப டாக்டரும் எனக்காக, என் புரட்சிகரமான கொள்கைகளுக்காக, அவரும் எனக்கு ஆதரவாக இருந்து, எனக்கு அதுபோல எயிட்ஸ் நோய் வந்திருப்பதாக அம்மாவிடமும் சொல்லி, அவர்களை நம்பும்படியாக உதவி செய்துள்ளார்.


அப்போதாவது என் அம்மா தன்னைத் திருத்திக்கொள்ள மாட்டார்களா; தன் எதிர்பார்ப்புகளை கைவிட்டுவிட்டு எப்படியோ, தன் மகனுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆனால் போதும்; பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தால் போதும், என்று நினைத்து செயல்படமாட்டர்களா! என்று நினைத்துத்தான் நான் இதுபோல நாடகமே ஆடியுள்ளேன்.      


இப்படி எல்லாம் கூடி வரும் போது, வெண்ணெய் திரண்டு வரும் போது [வெண்ணெய்த்] தாழியை உடைத்த கதையாக நீ செய்துவிடாதே, சுமதி .....  ப்ளீஸ் .... என்று சுந்தர் கெஞ்சினான்.


“ஹலோ மிஸ்டர் சுந்தர்! வரதட்சணை வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம் என்ற சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தங்களின் புரட்சிகரமான கொள்கைக்காக நானும் உங்களைப் பாராட்டுகிறேன்; 


ஆனால் இதை தங்கள் விஷயத்தில் செயல் படுத்துவதற்கும், நடைமுறைப் படுத்துவதற்கும், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவேயில்லை; 


உண்மையைச் சொல்லி தாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தீர்கள் என்ற மகிழ்ச்சியால் தான், நான் உங்கள் வீட்டுக்கே வந்தேன். அதுவே சுத்தப்பொய் என்று ஆனதும், எனக்கு எதையுமே நம்ப முடியாமல் உள்ளது” என்றாள் சுமதி.


”சுமதி, ப்ளீஸ் ..... சுமதி, என்னைத் தயவுசெய்து நம்பு, நான் சொல்வதை தயவுசெய்து புரிஞ்சுக்கோ! எனக்கு உண்மையிலேயே எயிட்ஸ் எல்லாம் ஏதும் கிடையாது. நான் வேண்டுமானால் நீ வேலை பார்க்கும் மருத்துவ மனைக்கே நாளைக்கே, ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வந்து, இதை உன்னிடம் நிரூபித்துக்காட்டுகிறேன், ...... போதுமா?” என்றான்.


“தேவையே இல்லை. அது போலெல்லாம் எதுவும் நீங்கள் தயவுசெய்து செய்ய வேண்டாம்;


உங்களுக்கு எயிட்ஸ் எதுவும் இல்லை என்பதைக் கேட்க, எனக்கும் மிகவும் சந்தோஷமே; 


ஆனால் அதை நான் நம்பி, அது எனக்குத்தெரிந்து, அதை என்னிடம் நீங்கள் நிரூபித்து என்ன ஆகப்போகிறது? நீங்கள் முதலில் இந்த சந்தோஷமான விஷயத்தைத் தெரிவிக்க வேண்டியது உங்களைப் பெற்றெடுத்த தாயாரிடம் மட்டும் தான்” என்றாள் சுமதி.  


”அது மட்டும் என்னால் முடியவே முடியாது, சுமதி; எங்க அம்மாவைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது” என்றான் சுந்தர் மிகவும் ஏக்கத்துடன்.


“உங்களால் இது முடியாது என்றால், பேசாமல் விட்டு விடுங்கள்” என்றாள் சுமதி, மிகவும் அலட்சியமாக.   


”நான் உன்னை நேரில் பார்த்ததிலிருந்து, உன் அழகான, இனிமையான, பக்குவமான பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து, என் மனதை உன்னிடம் பறிகொடுத்து விட்டேன்!மணந்தால் உன்னைத்தான் மணப்பது என்று முடிவே செய்து விட்டேன், தெரியுமா!” என்றான் சுந்தர்.


”நீங்கள் முடிவெடுத்து விட்டால் மட்டும் போதுமா?” என்றாள், சுமதி.

”முடிவாக நீ என்ன தான் சொல்ல வருகிறாய், சுமதி?” அழாக்குறையாகக் கேட்டான் சுந்தர்.


”தங்கள் தாயாருக்கு தாங்கள் ஒரே பிள்ளை. நல்ல அழகானவர், நிறைய படித்தவர், நன்கு சம்பாதிப்பவர், வசதி வாய்ப்புக்களுக்கும் குறைவில்லை. உங்களை மணக்க வரும் பெண்ணும் அதுபோல வசதி வாய்ப்புக்கள் உள்ளவளாக, நிறைய சீர்செனத்தியுடன் வரவேண்டும் என்று தங்கள் தாயார் எதிர்பார்ப்பதையும், நான் குறை கூறவே மாட்டேன்; 


அவர்கள் போன தலைமுறை ஆசாமிகள்.  அவர்களுக்கென்று ஒரு சில ஆசைகள், கற்பனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்! அதில் தப்பு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை; 


அரசாங்கம் ஆயிரம் சட்ட திட்டங்கள் போட்டிருந்தாலும், பிறருக்குத் தெரியும் வண்ணம் ரொக்கப்பணமாக கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்கள் வெளிப்படையாக நடைபெறாவிட்டாலும், நகைகள், தங்கம், வைரம், வெள்ளி, பிற சொத்துகள் என்று வேறு ஏதேதோ வகையில் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும், நம் நாட்டின் எல்லா இடங்களிலும் வெகு சகஜமாக, இன்றும் நிகழ்ந்து வரும் மிகச் சாதாரண நிகழ்ச்சிகள் தானே; 


திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்; 


எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;  


அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; 


ALL THE BEST ...... AND ..... GOOD BYE  ......." என்று சொல்லி போனை வைத்துவிட்டாள், சுமதி.       








சுந்தர் அடுத்த ஒரு வாரமும் சுமதியின் நினைவினில் தவியாய்த் தவித்து வந்தான். வேறு எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. 


தன் தாயிடமும் இதுபற்றிப் பேசவும், உண்மையைச் சொல்லவும் மிகவும் தயங்கினான். 


இப்போது இந்த உண்மையை தன் வாயால் தன் தாயிடம் சொல்லப்போய், ஒருவேளை அதன் காரணமாகவே, தன் மனதுக்கு மிகவும் பிடித்தமான தேவதையாகிவிட்ட, சுமதியை தன் மனைவி ஆக்கிக்கொள்ள முடியாமல் போய் விடுமோ! என்ற கவலையும் அவனுக்கு ஏற்பட்டது.


அவன் தாயார் மரகதமும் அவனை அழைத்துக்கொண்டு, சுமதி வீட்டுக்குப் பெண் கேட்கப்போக, எந்தவொரு துரித நடவடிக்கைகளும் எடுக்காமலேயே காலம் கடத்தி வந்தாள்.


தொடரும் 






[ இந்தச்சிறுகதையின் அடுத்த
இறுதிப்பகுதி வரும் 24.12.2011
சனிக்கிழமையன்று வெளியிடப்படும் ]