பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
நகைச்சுவை சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். நமக்குப் பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும், அதன் கஷ்டம்?
பற்களினால் படாதபாடுபட்ட பஞ்சாமியை உங்களுக்குத் தெரியுமா? தெரியா விட்டாலும் பரவாயில்லை. இந்தக்கதையைப் படித்து முடிக்கும் போது ஓரளவுக்குக்காவது தெரிந்து கொண்டு விடுவீர்கள். இதைப்படிக்கும் உங்களில் எவ்வளவோ பஞ்சாமிகள் பஞ்சமின்றி இருக்கக்கூடும். உங்களைப் பற்றிய உண்மைக் கதையை எழுதிவிட்டதாக யாரும் கோபப்பட வேண்டாம்.
பஞ்சாமிக்கு ஆஜானுபாகுவான உடம்பு. நல்ல உயரம், தடிமனான உடல்வாகு, அதற்கேற்றபடி, கைகள், கால்கள், முகம், வாய் மட்டுமல்ல, நல்ல எடுப்பான பற்களும் கூட. அவர் வாயைத் திறக்காமலேயே கூட நாம் அவரின் பற்களை தரிஸிக்க முடியும். பற்களின் வளர்ச்சியில் அவ்வளவு ஒரு அபரிமிதமான முன்னேற்றம். அவரின் மேல் வரிசைப் பற்களைப்பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ அதில் தேங்காய்த் துருவ வேண்டும் போல் ஒரு எழுச்சி ஏற்படும்.
அவருடைய மிகப்பெரிய பற்கள் சில துணி துவைக்கும் பாறாங்கற்களை நினைவு படுத்தும். ஒன்றில் துணியைக் கசக்கிப்பிழிந்து வைக்கலாம். மற்றொன்றில் துணியையே அடித்துத் துவைக்கலாம் போல அருமையாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்.
ஆலங்குச்சி, வேலம் குச்சி, அடுப்புச் சாம்பல் முதலியவற்றில் ஆரம்பித்து பயோரியா, நஞ்சன்கூடு, கருவேலப்பட்டை, ’பாடாவதி பல்பொடி’ என்றும் ஒன்று உண்டு - அது வரையிலும் அனைத்தையும் உபயோகித்து, பிறகு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய எல்லா நாட்டு மக்களும் தேய்ப்பதாக பிரபலபமாக விளம்பரப்படுத்திய அந்தத் தித்தித்து வழியும் ரோஸ் கலர் பற்பொடி வரை உபயோகித்து ஓய்ந்தவர் தான் நம் பஞ்சாமி. ஒரு காலக்கட்டத்தில் நெல் உமியுடன் உப்பு, கிராம்பு, கற்பூரம் முதலியன போட்டு வறுத்து அரைத்து உமிக்கரிப் பல்பொடி என்ற தன் சொந்தத் தயாரிப்பிலும் தேய்த்துப் பார்த்தவர்.
வெற்றிலை, பாக்கு, புகையிலை போடும் ஆசாமியானதால் பற்கள் யாவும் பழுப்பேறி ஒரு வித ஈஸ்ட்மென் கலரில் காட்சியளிக்கும். டீ.வி. விளம்பரங்களில் வரும் அந்த முத்துப்பல்லழகி போல ஆக வேண்டும் என்று விரும்பி பஞ்சாமியும் இதுவரை தேய்த்துப் பார்க்காத பற்பசைகளே இல்லையெனச் சொல்லலாம்.
சொட்டுத்தண்ணி விட்டால் சட்டிச்சாந்து வழிக்கலாம் போல அட்டைக் கருப்பாக இருக்கும் நானே, அந்தக் காலத்தில் டீ.வி. விளம்பரத்தைப் பார்த்து, இண்டர் நேஷனல் லக்ஸ் தேய்த்துப் பார்த்தவன் தான், சினிமா நடிகை ஸ்ரீதேவி போல அழகாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில்.
விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
விளம்பரத்தில் வருவதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பதைப் புரிந்து கொள்வதற்குள் நானே நூற்றுக்கணக்கான சோப்புகள் வாங்கி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவ்வாறு ஆலங்குச்சியில் ஆரம்பித்து, நவ நாகரீகப் பற்பசைகள் வரை அனைத்தையும் உபயோகித்துப் பார்த்து விட்ட பஞ்சாமியின் முப்பத்திரண்டு பற்களும் நேற்று வரை ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் ஒரேயடியாக பாசம் பிடித்து ஒன்றுடன் ஒன்று மிகவும் ஒட்டுறவாகத் தான் இருந்து வந்தன.
அவருடன் நெருக்கமாகப் பழகிய ஒரு சிலர் அவர் வாயிலிருந்து ஒரு வித துர் நாற்றம் அடிப்பதாகச் சொன்னதும் அவரால் அதை நம்பவே முடியவில்லை. (சாக்கடை நாற்றம் அந்த சாக்கடைக்குத் தெரியாது என்பது போல).
பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: “இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”.
பல்லு போய் தாத்தாவான பிறகு உன் பக்கத்தில் வந்து தான் என்ன லாபம், வராமல் இருந்து தான் என்ன நஷ்டம் எனக் கேட்க வேண்டும் போலத் தொன்றியது பஞ்சாமிக்கு. இருந்தும் வாயை மூடி மெளனமாக இருந்து விட்டார். பிரச்சனைக்குரிய வாய் துர்நாற்றம் மேலும் பரவாமல் இருக்கவோ என்னவோ!
2]
முடிவாக தன் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, பல் டாக்டர் ஒருவரை சந்தித்து பற்களை முழுமையாக க்ளீன் செய்து வந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.
ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.
ஆஸிட்டுக்கு பை-பை என்ற விளம்பரத்தில் வரும் டாய்லெட் போல தன் பற்களும் பளிச்சென்று படு சுத்தமாகி விடும் என்ற இன்பக் கனவில் மூழ்கியவாறு நீண்ட க்யூவில் டாக்டரைப் பார்க்க அமர்ந்திருந்தார்.
தன்னைப்போலவே பலருக்கும் பலவித பல் பிரச்சனைகள் உள்ளன என்பதை அங்கு பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கும் பலரைப் பார்த்ததும் அறிந்து கொண்ட பஞ்சாமிக்கு, பல்லில் பாலை வார்த்தது போல இருந்தது. யான் பெற்ற துன்பம் பெறுக இந்த வையகமும் என்ற நல்லெண்ணம்.
வெற்றியோ, தோல்வியோ, இன்பமோ, துன்பமோ, நாற்றமோ, துர்நாற்றமோ, மெஜாரிட்டி இருந்தாலே ஒரு வித நிம்மதி தானே!
டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே நுழைந்ததும் அழகான சுழலும் நாற்காலியில் அமர்த்தப்பட்டார் நம் பஞ்சாமி. யாருக்குமே நாற்காலியைப் பிடித்து விட்டால் போதும், இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்து விட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுவது இயற்கையே.
இடிக்கி, குரடு, நோஸ்ப்ளேயர் போன்ற ஒரு சில உபகரணங்களுடனும், கை நிறைய பஞ்சுடனும், டாக்டர் அவர்கள் பஞ்சாமியின் பல் இடுக்குகளில் புகுந்து விளையாட ஆரம்பித்தார். இதுவரை ஒட்டி உறவாடிய பற்களுக்கு இடையே பெரிய இடைவெளிகளை ஏற்படுத்தத் தொடங்கினார். நெடுநாளைய காரைகள் பாறைகள் போல பெயர்த்து எடுக்கப்பட்டன.
ஒவ்வொரு முறை குத்திக்குத்தி சுரண்டும் போதும் ஈறுகளிலும், எகிறிலும் ரத்தம் பீரிட்டு வந்து வலி எடுத்து வாய் பூராவும் ரத்தத்தால் உப்புக்கரித்தது. பஞ்சினால் ரத்தம் ஒத்தி ஒத்தி எடுக்கப்பட்டு பிறகு, தூக்கி எறியப்பட்டு வந்தது. பஞ்சாமியின் வாய் வெற்றிலை பாக்குப் போடாமலேயே நல்ல சிவப்பாகிப் போனது, இனக்கலவரத்தில் சிக்கிய இலங்கை போல.
விடுதலை விரும்பிகளாகவும், தீவிரவாதிகளாகவும் கருதப்பட்ட கறைகளும் காரைகளும் அடக்கி ஒடுக்கி அகற்றப்பட்டதால், தங்கள் ‘சொத்தை’ இழந்த அப்பாவி மக்கள் போல, பற்கள் யாவும் பலகீனமாகி ஒரு வித பாதுகாப்போ, ஒற்றுமையோ, பலமோ, அரவணைப்போ இல்லாமல் அகதிகள் போல ஒரு வித ஆட்டத்துடனும், நடுக்கத்துடனும் விளங்கின.
எவ்வளவு கஷ்டப்பட்டாலும், கடைசியில் முத்துப்பற்களைப் பெற்றே தீரப் போகிறோம் என்று நம்பி, பஞ்சாமியும் வலியைப் பொறுத்துக்கொண்டு, டாக்டருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இடையிடையே அங்குள்ள வாஷ்பேசினில் வாய்க்கொப்பளித்தபடி, துர்நாற்றமில்லாத தன் வருங்கால இல் (பல்) வாழ்க்கையை எண்ணி மகிழ்ந்தார்.
டாக்டரின் ஆலோசனையின் பேரில் முன் பக்கம் மேல் வரிசையில் தூக்கலாக இருந்த ஆறு பற்களையும் அகற்றி விட்டு, படிமானமான செயற்கைப் பற்கள், அளவெடுக்கபட்டு, இரண்டு நாட்கள் கழித்து கிளிப் மூலம் பொருத்துவது என்று பேசி முடிக்கப்பட்டது. கீழ்ப்புறமும் பக்கத்துக்கு தலா இரண்டு வீதம் நான்கு கடவாய்ப் பற்களும் சொத்தையாகி விட்டது என அகற்றப்பட்டிருந்தன. சிகிச்சைக்குப்பின் முகத்தில் பிரதிபலிக்க இருக்கும் அழகை உத்தேசித்து, பஞ்சாமி (இருக்கும்) பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லி வீட்டுக்குப் புறப்படலானார்.
3]
இரண்டு நாட்களுக்கு சூடாக எதுவும் சாப்பிட வேண்டாம். பால், கஞ்சி, ஐஸ்கிரீம் போன்ற ஏதாவது திரவ உணவாக சூடு இல்லாமல் ஜில்லென்று மட்டும் சாப்பிடச் சொல்லி டாக்டர் கூறியிருந்ததால், இவை மூன்றில் தனக்கு மிகவும் இஷ்டமான ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் டப்பாக்களாக நிறைய வாங்கி வந்து, தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் அடுக்கி வைத்து விட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்த பஞ்சாமிக்கு, முன் வரிசையில் அழகாக ஆறு பொய்ப் பற்கள் கட்டி விடப்பட்டன. கண்ணாடி முன் நின்று பல்லைக்காட்டிய பஞ்சாமிக்குத் தன் முகமே மாறி விட்டது போன்ற ப்ரமை ஏற்பட்டது.
குத்துச்சண்டை வீரரிடம் குத்து வாங்கியது போல முகத்திலும், தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.
முன்புற செயற்கைப்பற்கள் ஆறுக்கும் ஆதரவாக, மிகப்பெரிய செதில் போன்ற பொருள் மேல் தாடையின் உள் ஓட்டுப் பகுதியில் சொருகப்பட்டிருந்தது. அது பஞ்சாமியின் வாயில் ஏதோ வேண்டாத ஒரு பொருள் ஈஷிக்கொண்டிருப்பது போல அருவருப்பை அளித்தது.
மேலும் அந்தப் பொய் பற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க இரு புற நிஜப்பற்களிலும் இரண்டு கம்பிகள் க்ளிப் போல வளைத்து மாட்டப் பட்டிருந்ததால், விண் விண்ணென்று அந்தப்பற்களிலும், ஒரு வித வலியை ஏற்படுத்தி அவஸ்தை கொடுத்து வந்தது.
எதையாவது சாப்பிடும்போது, பொய்ப் பற்களும் விழுங்கப்பட்டுவிடுமோ என்ற ஒரு வித பயத்தில், பஞ்சாமியால், நிம்மதியாக எதுவும் ருசித்து, ரசித்துச் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தையாக இருந்தது.
சுமார் ஒருமாத காலமாக இது போன்ற பல வித கஷ்டங்களை அனுபவித்து வந்த பஞ்சாமிக்கு, அவருடைய வயதான மாமனாரின் வருகை, ஒரு வித திருப்பு முனையாக அமைந்தது.
சதாபிஷேகம் முடிந்து, எண்பது வயதைத்தாண்டி எட்டு மாதங்கள் ஆன அவரால், கரகரப்பான மிக்ஸர், காராச்சேவ், முள்ளு முறுக்கு, கடலை மிட்டாய் என எல்லாமே நன்றாகக் கடித்து சாப்பிட்டு வர முடிகிறது. சுத்தமாக எல்லாப் பற்களும் விழுந்து, கம்ப்ளீட் ஆக பல் செட் கட்டியிருப்பவர்.
பஞ்சாமிக்கு பல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, தான் இது போல ஆரம்பத்தில் அனுபவித்த பல்வேறு கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி, மீதியுள்ள எல்லாப் பற்களையும் சப்ஜாடா தட்டி விட்டு விட்டு, புதியதாக முழுமையான கட்டிடம் கட்டினால் தான் சரிப்பட்டு வரும் என்று எடுத்துரைத்தார்.
பஞ்சாமிக்கு இதைக்கேட்டதுமே பல்லைப் பிடுங்கியது போல ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல், மாமனார் எவ்வழியோ மாப்பிள்ளையும் அவ்வழியே என தினமும் பல் டாக்டரிடம் படையெடுத்து, வாரம் இரண்டு மூன்று பற்கள் வீதம் பிடுங்கிய வண்ணம் இருந்தார். ஒரு வழியாக, கொஞ்சம் கொஞ்சமாக, அனைத்துப் பற்களையுமே புடுங்கியெறிய நான்கு மாத காலம் ஆகி விட்டது.
அனைத்துப் பற்களுமே புடுங்கப்பட்ட அவர் முகமே மாறிவிட்டது. காலி செய்யப்பட்ட ஜிப்-பேக் போல அவரின் வெறும் வாய் காற்றினை உள்வாங்கி அசை போட்டு வந்தது. கன்னப்பகுதி முழுவதும் உரித்துப்போட்ட முழுக் கமலாரஞ்சுப் பழத்தோல் போல வலுவின்றி லொடக்கென்று காணப்பட்டது.புதுப் பல்செட் கட்டும் வேலை, வாய்ப்புண்கள் ஆற வேண்டி, டாக்டரால் மேலும் ஒரு மாததிற்கு ஒத்தி வைக்கப் பட்டது.
4]
இந்த ஒரு மாதமும், பஞ்சாமி வாயைக் கட்ட, வயிற்றைக் கட்ட படாதபாடு பட்டு விட்டார். சாப்பாட்டில் கடுகு போன்ற மிகச்சிறிய கடிக்க வேண்டிய சமாசாரங்களைக் கூட கடிக்க முடியாமல் கடுப்பு வந்தது அவருக்கு.
அவருக்கு மிகவும் பிடித்தமான கரமுரா அயிட்டங்களான பக்கோடா, மிக்சர், காராச்சேவ், கடலை, நேத்திரங்காய் சிப்ஸ், வறுத்த முந்திரி முதலியவற்றை அவர் கண்ணெதிரிலேயே பிறர் கரமுரா எனக் கடித்துச் சாப்பிடுவதைக் கண்டு கண்ணீர் விடலானார்.
மேற்படி அனைத்து அயிட்டங்களையும் தனித்தனியே மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடிப் பொடியாக்கி பொக்கை வாயில் போட்டு வந்தும் திருப்தியாகவில்லை பஞ்சாமிக்கு. கடிக்க வேண்டியதை கடிக்கணும், சப்ப வேண்டியதைச் சப்பணும், அப்போது தான் முழுத்திருப்தி ஏற்படும், என்ற உண்மை அவருக்கு விளங்கியது.
நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. ”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.
நன்றாக மென்று தின்று வெற்றிலை பாக்குப் போட்டு, புகையிலைச்சாறை விழுங்கி வந்த பஞ்சாமிக்கு, இப்போது வாழ்க்கையே வெறுத்துப் போனது போலத் தோன்றியது. ”மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவார்களா?” என்பார்கள். அதுபோல வாய்த் துர்நாற்றம் நீங்க, பற்களைக் க்ளீன் செய்யப்போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை எண்ணி எண்ணி வருத்தப்பட்டார், பஞ்சாமி.
வறுத்த முந்திரி போட்ட பால் பாயஸம், சற்றே கெட்டியான ஆமவடை, சதைப்பத்தான முருங்கைக்காய் சாம்பார், கட்டை வடாம், மொறுமொறுப்பான அடை என அவரவர் இஷ்டத்துக்கு வெட்டும்போது, மோர்க்களி, குழைந்த மோர்சாதம், கரைத்த ரஸம் சாதம், மோர்க்கஞ்சியெனப் பத்திய சமையல்கள் பரிமாறப்பட்டன, பஞ்சாமிக்கு மட்டும் தனியாக.
ஆசையில் அன்றொரு நாள் பால் பாயஸத்தைப் பாய்ந்து ஒரு டம்ளர் எடுத்துக் குடித்த அவர், வாயில் மிதந்த முந்திரிப் பருப்புகளை கடிக்க வழியில்லாமல், சாப்பாடுத் தட்டைச் சுற்றி தூ...தூ என்று துப்பியதைப் பார்க்க எனக்கே மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.
பல்லில்லாத பஞ்சாமிக்கு வெளியில் போகவோ, யாரையும் சந்திக்கவோ மிகவும் வெட்கமாக இருந்தது. பல்வலி இருப்பது போல ஒரு சிறிய டவலால், வாயை எப்போதும் மறைத்துக் கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.
ஒரு மாதம் முடிந்து வாய்ப்புண் ஆறியதும் பல் டாக்டரை சந்திக்கச் சென்றார். ரெடிமேட் பேண்ட் சட்டை வாங்கி உடனடியாக அணிந்து கொள்வது போல, உடனே இன்று தனக்கு பல் செட் கட்டப்பட்டு, அனைத்தையும் கடித்து சாப்பிட்டு விடலாம் என எண்ணிச் சென்ற அவருக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது.
இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார்.
தொடரும்

