என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
நகைச்சுவை சிறுகதை 2 of 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை சிறுகதை 2 of 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா ? [நிறைவுப்பகுதி 2 of 2]







கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

நகைச்சுவை கதை [நிறைவுப்பகுதி 2 of 2]
By வை. கோபாலகிருஷ்ணன்

5]


ஒரு வார காலம் ஓடிப்போனது. வாய்ப் புண்கள் நன்கு ஆறி விட்டது. இன்று எப்படியும் காரியம் நல்ல படியாக முடிந்து விடும் என்று நினைத்துச் சென்ற அவரை, சுழல் நாற்காலியில் அமரச் செய்தார் அந்த டாக்டர்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க இரண்டு அச்சுகள் வைத்திருப்பார்களே, அது போல கைப்பிடியுடன் கூடிய ஏதோ இரண்டு கோப்பைகள் வடிவிலான (சலூனில் சம்மர் கட் வெட்ட உபயோகிக்கும் மிஷின் போல) ஒரு உபகரணத்தை, வாயைத் திறக்கச் சொல்லி, வாயினுள் நுழைத்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஒரு ஆட்டு ஆட்டி இடைவெளி ஏதும் உள்ளதா என சோதனை செய்து பார்த்தார், அந்த டாக்டர்.

எச்சில் கூட விழுங்க முடியாமல் தவித்த பஞ்சாமிக்கு அதனை உடனடியாக வாயிலிருந்து வெளியே எடுத்தால் போதும் என்றாகி விட்டது. அந்த உபகரணத்தை அவர் வாயிலிருந்து வெளியே எடுத்து ஒரு ஓரமாக வைத்தார் டாக்டர்.

பிறகு, ஏதோ ஒரு பாத்திரத்தில், ஏதோ ஒரு பவுடரைத்தூவி, தண்ணீர் விட்டு, ரோஸ் கலரில் சப்பாத்தி மாவு பிசைவது போலப் பிசைய ஆரம்பித்தார். மேற்கொண்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என பஞ்சாமிக்கு கவலை ஏற்பட்டது. அங்கு ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வகை செயற்கைப் பல் செட்டுகள், இவரைப் பார்த்து பல்லைக்காட்டி, பரிகாசமாகச் சிரிப்பது போலத் தோன்றியது, பஞ்சாமிக்கு.

ரோஸ் கலர் சப்பாத்தி மாவை அந்த அச்சுகளில் நிரப்பி, மீண்டும் வாயைப் பிளக்கச்சொல்லி, உள்ளே இறுக்கமாகச் செலுத்தி, வழிந்த மாவை தன் கை விரல்களால் வழித்தெறிந்தபின், டாக்டர், பஞ்சாமியின் தலையில் ஒரு கையும், முகவாய்க்கட்டையில் ஒரு கையுமாக வைத்து ஒரே அழுத்தாக அழுத்தியதும், அந்தப் பசை மாவில் சிறிதளவு தொண்டைக்குழிக்குள் பாய்வது போல ஒரு அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டுத் தவியாய்த் தவித்தார், பஞ்சாமி.

பிறகு வாயைத் திறக்கச் சொன்ன டாக்டர், டக்கென்று அவற்றை வெளியே எடுத்து. ஒரு சில டச்-அப் செய்து விட்டு ஓரம் கட்டினார்.

“வாய்க் கொப்பளித்து விட்டு நீங்கள் புறப்படலாம், இரண்டு நாட்கள் கழித்து வந்தால், உங்கள் பல் செட் ரெடியாகி இருக்கும்” என்றார் டாக்டர்.

பாவம் நம் பஞ்சாமியும் பல் விஷயமாக பல நாட்களாகப் படையெடுத்து வருகிறார்.

அடுத்த முறை டாக்டரிடம் படையெடுத்தபோது, இவரின் பல்செட் ரெடியாகி இவரைப் பார்த்து புன்னகை பூத்து வரவேற்றது.





“என் வாழ்வே இனி உன்னோடு தானடா !
இனி உன் வாயே எந்தன் உலகமடா !
அனைத்தையும் நாம் இனி 
கடிப்போம்,
ருசிப்போம், 
சுவைப்போம் 
ஒன்றாகவே !”



என அந்தப் பல்செட் பாட்டுப் பாடுவது போலத் தோன்றியது பஞ்சாமிக்கு.


6]

பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, புதிய பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம் என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.




7]

தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.



ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.

நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.




8]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு முக்கால் லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.

இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.



-o-o-o-o-o-o-o-


முற்றும்


-o-o-o-o-o-o-o-

பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டி.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:




”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”



நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?      நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !






எனவே நண்பர்களே!


போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 


பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?



பணம் இன்று போகும் !  
நாளை வரும் !!



[ பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன். .........  அப்போ வரட்டுமா ..........  Bye Bye ...... vgk ]


-ooooooo-