என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
ராஜியின் அன்புக் கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜியின் அன்புக் கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மார்ச், 2011

பெயர் காரணம் [வை.கோபாலகிருஷ்ணன்]

நம் பிரியமுள்ள பதிவர் திருமதி ராஜி அவர்களின் அன்புக்கட்டளைக்காக இந்தப் பதிவை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

மிகவும் போற்றுதலுக்குரிய என் பெற்றோர்களுக்கு நான் கட்டக்கடைசியாகப் பிறந்த பிள்ளை.    எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்க எனக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

தோசைக்கு மாவு அரைத்து, தோசைகள் முழுவதும் முறுகலாக வார்க்கப்பட்டதும், கடைசியில் பாத்திரத்தில் மிஞ்சிய மாவை ஒட்ட வழித்து சற்றே கனமாக ஊத்தப்பம் போல கெட்டியாக வார்த்து விடுவார்களே, அதே போலத்தான் ஆகி விட்டது போலிருக்கு என் பிறப்பும்.  அன்று முதல் இன்று வரை நான் ஆள் கெட்டி தான். எல்லாவற்றிலுமே கெட்டிதான், கெட்டிக்காரன்தான்னு அவசரப்பட்டு தப்பா ஏதும் நினைச்சுடாதீங்க.    நாளுக்கு நாள் உடம்பு வெயிட் ஏறுமுகமாகவே இருக்கு, அதைத்தான் கெட்டி என்று சொன்னேன்.


என் பெற்றோர்கள் செய்த *தவத்தின்* பயனாக எனக்கு முன்பாக அவர்களுக்கு நிறைய மக்கட்செல்வங்கள் பிறந்துள்ளன. 

[அந்தக் காலகட்டத்தில் அதாவது 1920 முதல் 1950 வரை, என் பெற்றோர்களின் இளமைப் பருவத்தில், தங்கள் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, வேறு எந்த பொழுது போக்கு அம்சங்களும் இல்லாத காலமாகையால், தங்கள் *தவத்தின்* வலிமையை வீணாக்காமல், மக்கட் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே, முழுமையாகப் பயன் படுத்திக் கொண்டிருப்பார்கள் என்பது, நான் பிற்காலத்தில்  செய்த ஆராய்ச்சிகளின் முடிவாகும்.   


’கு.க.’ என்றால் என்னவென்றே அப்போது அரசாங்கத்திற்கும் தெரியாது; பொது மக்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.   நான் பிறந்த பிறகே எங்கும் எதிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் போலிருக்கு.   நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு பிறந்தவனல்லவா நான்!  அது தான் காரணம். சுதந்திரத்திற்குப்பிறகு தான் மக்கள் (கணவன் மனைவியாகவே இருப்பினும்) சுதந்திரமாக ஜாலியாக எதையும் ஒரு கட்டுப்பாடு இன்றி அனுபவிக்க முடியவில்லையோ என்னவோ!] 

எனக்கு 2 அண்ணன்கள், 2 அக்காக்கள் தான்.  அண்ணன்கள் இருவருமே சமீபத்தில், என் பெற்றோர்களைக் காண வேண்டும் என்ற ஆசையிலோ என்னவோ என்னை மட்டும் இப்பூவுலகிலேயே அம்போவென்று விட்டுவிட்டு மேலுலகம் சென்று விட்டனர். இருப்பினும் என் 2 அக்காக்களும் என்னிடம் பிரியமாகவே இன்றும் இருந்து வருவதில் என் உடன்பிறப்புக்களுடனான மகிழ்ச்சி ஏதோ கொஞ்சம் நீடித்து வருகிறது.

நிறைய அரைப்பிரஸவம் குறைப்பிரஸவம் என்று என் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு விட்டதாகவும், எனக்கு முன்னால் பிறந்த ஒரு ஆண் குழந்தை 3 வயதாகும் போது வயிற்றில் கட்டியோ ஏதோ வந்து தவறிப்போனதாகவும், என் பெரிய அக்கா வருத்தத்துடன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது போல பீரியாடிகல் செக்-அப்போ, ஸ்கேன் வசதிகளோ, பிற மருத்துவ வசதிகளோ அவ்வளவாக இல்லாத காலம் அது. பெரும்பாலும் பிரஸவங்கள் வீட்டிலேயே தான் நடைபெறும்.   தாயும் சேயும் சேதாரமின்றி உயிர்பிழைப்பது, புனர்ஜன்மம் என்று தான் சொல்ல வேண்டும்.

என் பெற்றோர்கள் இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், நான் பிறந்தது மட்டும், காரைக்குடிக்கும் குன்னக்குடிக்கும் இடையே, காரைக்குடி பேருந்து நிலயத்திலிருந்து 2-3 KMs க்குள் உள்ள கோவிலூர் என்ற கிராமத்தில், பெரியதொரு அரண்மனை போன்ற வேத பாடசாலையுடன் கூடிய வீட்டில்.


உற்றார் உறவினர் சொத்து சுகம் என்று எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத அந்த நான் பிறந்த கோவிலூரை சும்மாவாவது ஒருமுறை பார்த்துவிட்டு வருவோமே  என்று எண்ணி சமீபத்தில் [20.02.1999] என் பெரிய அக்காவுடன் அங்கு சென்று வந்தேன். எல்லா இடங்களையும் சுற்றிச்சுற்றிப் பார்த்துவிட்டு, புகைப்படங்களெல்லாம் எடுத்து வந்தேன். நான் பிறந்த போது அவளுக்கு வயது 9 மட்டுமே.  இன்னும் எவ்வளவு ஞாபகம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் அழகாக எடுத்துச் சொன்னார்கள் தெரியுமா!   நான் பிறந்த அன்று 9 வயதுக்குழந்தையான அவளுக்கு இன்று வயது 70 ஆகிறது.


இன்றும் அந்த அரண்மனை போன்ற வீடும் அதன் அருகில் உள்ள மிகவும் பிரும்மாண்டமான சிவன் கோவிலும், குளமும் உள்ளன. அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் எனக்கு பிறந்த இடம் மட்டுமல்லாமல் அதுவே என்னை ஆட்கொண்ட இடமாகவும் ஆகியிருக்கும்.


நம் ராஜிக்காக என்றாவது ஒருநாள் இந்தப் பதிவு ஒன்று போட வேண்டியிருக்கும் என்று நினைத்துத்தானோ என்னவோ அன்று என்னை தன் பாசவலையிலிருந்து விடுவித்து விட்டது, அந்தக்குளம்.


அந்தக் கோவிலூர் என்ற கிராமத்தில், கிராமத்தையே அடைத்துக் கொண்டுள்ள அவ்வளவு ஒரு மிகப்பெரிய கலை நுணுக்கங்களுடன் கூடிய கோவிலை யார் கட்டினார்கள், எந்தக் காலத்தில் கட்டப்பட்டது, அதன் சிறப்புகள், மகத்துவம் முதலியன பற்றி இதைப்படிக்கும் யாராவது தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.  அந்த சிவன் கோவிலில் உள்ள அம்பாள் பெயர்: ஸ்ரீ சாடிவாலீஸ்வரியம்மன், ஸ்வாமி பெயர்: ஸ்ரீ ராஜகட்க பரமேஸ்வரர்.  தற்சமயம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் இது (பழைய இராமநாதபுரம் மாவட்டம்).


மிகவும் வசதி படைத்த நகரத்தார்களால் மட்டுமே அந்தக் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.   பஸ்ஸை விட்டு கீழே இறங்கும் போதே ஊரின் நுழைவாயிலாக இருபுறமும் மிகப்பெரிய விட்டமுள்ள தூண்களால் ஆன வளைவு.  அந்தத் தூண்களை அழகிய மிகப்பெரிய தேர்கள் போல வடிவமைத்துக் கட்டியுள்ளார்கள்.  ஒவ்வொரு தூண் போன்ற தேர்களுக்கும் அடிபாகத்தில், நல்ல மழை பெய்தாலும் நனையாமல் 10 பேர்களுக்கு மேல் படுத்துக்கொள்ளலாம்.  அவ்வளவு ஒரு பிரும்மாண்டம் அந்த தூண் போன்ற தேர்கள்.  அந்தக் கோவிலும் அதுபோலவே மிகவும் பிரும்மாண்டமானது.  


திருச்சி மாவட்ட அம்மாவின் பூர்வீக கிராமம் வாளாடிக்கும், அப்பாவின் பூர்வீக கிராமம் ஆங்கரைக்கும் இடைப்பட்ட கிராமம் மாந்துறை தான் என் குலதெய்வம். அங்குள்ள ஸ்ரீ வாலாம்பிகா (அல்லது) ஸ்ரீ பாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவணேஸ்வர் கோவிலுள்ள அம்மன் தனி அழகு.   அதே அழகுடன் விளங்குவது தான் நான் பிறந்த இந்தக் கோவிலூரில் உள்ள ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மனும்.   காணக் கண் கோடி வேண்டும். அப்படியொரு அழகோ அழகுடன் கூடிய அம்மன்.   பார்த்து வந்ததில் எனக்கு பரம திருப்தி.

ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மன்
[உணவு தானியங்களுக்கு அதிபதியான அம்பாள் என்று பொருள்]
இது 20.02.1999 அன்று என்னால் என் கேமராவில் எடுக்கப்பட்டப் படம்


[ 1949--1950 களில் மட்டும் என் பெற்றோர்கள் அங்கு வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு மறக்காமல் என்னையும் தூக்கிக்கொண்டு பழையபடி திருச்சிக்கே வந்து விட்டனர்.] 

நான் பிறந்த தேதி: 08.12.1949  குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை, சாயங்காலம் சுமார் 4.30 மணிக்கு.  ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி அவதரித்த அதே “புனர்பூச” நக்ஷத்திரம், மிதுன ராசி.  அன்றுதான் பிறந்துள்ள குட்டிக்குழந்தையாகிய எனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம் என்கிறீர்களா! நான் பொய் சொல்லவில்லை.  கைவசம் ஆதாரம் உள்ளது. இந்தத் தகவல் எல்லாம் என் அப்பா அவர் கைப்பட எழுதி வைத்துள்ள ஜாதகத்தில் உள்ளனவே!
  
அந்த ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எவ்வளவு ஜோஸ்யர்களிடம் எவ்வளவு தடவை நானும் அலைந்திருப்பேன்.  பல கைரேகை ஜோஸ்யர்கள், பல ஊர் நாடி ஜோஸ்யர்கள்,  ஜாதகம் பார்த்து பலன் சொல்லும் பல பிரபல ஜோஸ்யர்கள், குறி சொல்பவர்கள், உடுக்கடிப்பவர்கள், அம்பாள் உபாசகர், காளி உபாசகர் என நானும் பலவகையினரைப் பார்த்து விட்டேனே! எவ்வளவோ ஆயிரங்கள் பணமும் செலவழித்து விட்டேனே!  


அப்படியென்ன ஒரு கஷ்டம் என்கிறீர்களா? அதெல்லாம் நல்ல வேளையாக தாங்க முடியாததாக ஒன்றும் இல்லை தான்.  இருப்பினும் அவ்வப்போது என் மனைவி மக்களைத் திருப்திப் படுத்த மட்டுமே நான் இவ்வாறெல்லாம் அலைந்ததுண்டு. ஜோஸியத்தில் முழுதாக எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,  என்ன தான் சொல்லுகிறார் பார்ப்போமே, என்று கதை கேட்கவும், கேட்ட அந்தக்கதையை அப்படியே உடனுக்குடன் ஒரு நோட்டில் பதிவு செய்யவும் எனக்கு ஓர் ஆர்வம் மட்டும் உண்டு.

இவ்வளவு பணமும், பொன்னான நேரங்களும் செலவழித்ததிலும், ஒரு சில முக்கியமான விஷயங்கள் நான் புதிதாகக் கற்றுக்கொண்டதில், எனக்கும் மகிழ்ச்சி தான்.

அதாவது எந்த ஒரு ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம்.   

சரி, இப்போது என் பெயர் காரண விஷயத்திற்கு சீக்கரமாக வந்து விடுவோம். 

பிரஸவ வலியால் துடிக்கும் போது, என் தாயாருக்கு உதவி செய்ய, மிகவும் அனுபவசாலியான என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) திருச்சியிலிருந்து கோவிலூருக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.    என் அம்மா படும் வேதனையைப் பார்த்து,  ”அங்கிச்சி (பெயர் வேறு இருப்பினும் இப்படித்தான் அழைப்பார்கள்), உனக்கு இந்தக் கஷ்டம் இத்தோடு போதும்; இனி வேண்டவே வேண்டாம்; பிள்ளைக்குழந்தையாய் இருந்தா நம்ம அப்பா பெயரும், பெண் குழந்தையாய் இருந்தால் நம் அம்மா பெயரும் வெச்சுடு.  பொறந்தாத்துப் (பிறந்த வீட்டு) பெயரை குழந்தைக்கு வெச்சுப்புட்டா அத்தோட கடைசியாகிவிடும்” என்று அடிச்சுச் சொல்லிப்புட்டாளாம். 

என் அம்மாவோட அப்பாவின் பெயர் கோபாலகிருஷ்ணன்.  வாளாடி (திருச்சியிலிருந்து லால்குடி போகும் வழியில் இடையே இடது புறமாக உள்ள) கிராமத்தின் கணக்குப்பிள்ளையாக இருந்தவர். (Village Administrative Officer). மஹா கெட்டிக்காரராம் - கறார் பேர்வழியாம். நான் பார்த்ததில்லை, என் அம்மா தான் சொல்லுவாங்க.   அந்த என் அம்மா வழித்தாத்தா பெயரையே எனக்கு வெச்சுட்டாங்களாம், என் பெரியம்மா உத்தரவுப்படியே..

”கோபாலகிருஷ்ணன் என்ற பெயரிலே எவன் என்னை அழைக்கிறான், எல்லோருமே சப்பாணின்னு தானே அழைக்கிறான்....மயிலு” என்று அழாக்குறையாக கமல் ஸ்ரீதேவியிடம் (மயிலிடம்) சொல்லுவாரே 16 வயதினிலே படத்தில் --- அதே போல என் பெயர் ரயில் வண்டி போல நீளமாக இருப்பதால் “கோபு” என்று செல்லமாக யாரோ அழைக்கப்போய், “குஷ்பு” என்பது போல இந்த “கோபு” என்பதும் மிகவும் பிரபலமாகி,இன்று வரை, குடும்பத்திற்குள் புழக்கத்தில் ”கோபு” வும் இருந்து தான் வருகிறது.

ஆபீஸ் ரிகார்டுகளில் என் பெயர் V. GOPALAKRISHNAN தான்.  ஒரு சில மிகவும் பிரியமான தோழர்கள் + தோழிகள் அலுவலகத்தில் என்னை வீ............ஜீ (VG) என்று சற்றே ஒரு ராகம் கொடுத்து செல்லமாக அழைப்பதும் உண்டு. அழுக்கு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு, புத்தம் புதிய சலவைக்கட்டுகளாக வாங்கிப் போக அடிக்கடி என்னை நாடி வருவார்கள். அது போன்ற சமயங்களில் மட்டுமே, சீரியஸ் ஆக இருக்கும் என்னை தாஜா செய்து கூலாக்க இந்த செல்லமான ராகத்துடன் கூடிய வீ............ஜீ என்றொரு அழைப்பு எனக்கு அடிக்கடி வருவதுண்டு.


ஆபீஸில் எப்போதுமே எனக்கு இந்த ”லக்ஷ்மி” என்பவளோடு ரொம்பத் தொடர்புண்டு.   30 ஆண்டுகளுக்கும் மேலாக அவளுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு.   கோடிக்கணக்கில் இன்பங்கள் பல தந்தவள் அவள்.   பணி ஓய்வு பெறும் வரை நான் தினமுமே இந்த லக்ஷ்மியுடன் கொஞ்சிக்குலாவி கோடீஸ்வரனாகவே இருந்தவன், என்பதை இப்போது நினைத்தாலும் மனதினில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியே.  அவள் என்ன சாதாரண லக்ஷ்மியா தனலக்ஷ்மி ஆயிற்றே!


அதனால் தானோ என்னவோ செய்தித்தாள்களில் பல கோடிக்கணக்கில் ஊழல் என்று செய்திகள் வந்தாலும், நான் அதிர்ச்சியடைவதே இல்லை. நான் பார்க்காத கோடிகளா என்ன !   பிஸாத்து,   என்று தான் நினைப்பேன்.


என் அப்பா பெயர் வைத்தியநாதன் என்பதால், முதன் முதலாக ஒரு சிறுகதைப்போட்டிக்கு கதை எழுதி அனுப்பும் போது, தமிழில் என் பெயரை வை.கோபாலகிருஷ்ணன் என்று நானாகவே வைத்துக்கொண்டேன்.   அந்த முதன் முதலாக எழுதி அனுப்பிய சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்வானது 2005 ஆம் ஆண்டு.  அந்தச்சிறுகதை என் புகைப்படத்துடனும், சுய விபரக்குறிப்புகளுடனும், வை.கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் தினமலர்-வாரமலரில் வெளியாகி, என் நிறுவனத்தில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான நபர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது.


அது முதல், எழுத்துலகில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பலவித பரிசுகள் பெறுவதற்கு, இந்த ”வை.கோபாலகிருஷ்ணன்” என்ற என் பெயரே எனக்கு ராசியாக அமைந்தது.    அதுவே என்னை இப்போது இந்த வலைப்பூவில் உங்களிடமும், குறிப்பாக திருமதி ராஜி அவர்களிடமும் சிக்க வைத்துள்ளது.


ஏதோ எனக்குத்தோன்றியதை எழுதி முடித்து விட்டேன்.   இத்துடன் ESCAPE ஆகிவிடுறேன்.   Bye.


-o-o-o-o-o-o-o-


நான் பிறந்த ஊரான கோவிலூர் என்ற கிராமம் + அங்குள்ள மிகவும் பிரும்மாண்டமான கோயில் + குளம் முதலியன பற்றிய செய்திகள் சிலரால் என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.


இதில் மொத்தம் மிக அழகான 8 படங்கள் உள்ளன. அவற்றில் மூன்றினை மட்டும் இங்கு காட்டியுள்ளேன்:




இணைப்பு-2 : http://www.kovilur.com/temple.htm

The Koviloor temple of "Sri Kotravaleeswarar" was initially 
built by one Pandiya King "Veerasekara Pandiyan" approximately 
thousand years ago. At that time Koviloor was known as Saliwadi (Land 
of Rice) and Kalani Vasal (Land of Agriculture). It had been a 
laterite construction.

Later during the 18th century, His Holiness Shri la Sri Mukthiramalinga Gnana Desika Swamigal had started reconstruction work. Simultaneously he had established our Vedanta Mutt, when it came to be known as Koviloor.

Once Pandiya King Veerasekaran went for hunting near Saliwadi village and lost his sword and later recovered. He ordered the construction of the temple and named the deity as Kotravaleeswarar or Raja Katka Parameshwar (God who saved King's sword, valour and there by citizens)

A legend explains how merciful and considerate has been the Goddess towards the truthful devotees. In ancient times there was a devotee by name Sivagupthan, living at Saliwadi with his wife Sudanmai and daughter Aradhanavalli. One day Sudanmai asked her daughter to go to their farm to protect the rice grains from birds. At noon, the mother went to the farm and fed her child with curd rice. The child relished the food and happily ate it.

But to the surprise of Sudanami, after some time Aradhavalli came running and requested for lunch. On enquiry it was explained that she had not gone to the farm at all, instead gone to play with her friends. Immediately Sivagupthan and Sudanmai realised that Mother Universe had come down to save their rice grains. They rushed to the temple and saw the Mother sitting with a smile and remains of curd rice on her lips. From that day onwards She came to be known as "Thirunellai Amman" (Goddess who saved rice grain).


Description of Temple

Koviloor, at present, is a small village, 2 kilometres away from Karaikudi, an educational and commercial centre. The main features of Koviloor are our temple and the mutt.

On the main road, two magnificent chariots constructed with concrete, on both sides of entrance, welcome us to Koviloor Mutt and Temple and from that point a well laid road, leads us to the southern tower of the temple.

The temple is surrounded by four broad Mada Streets. In front of the temple, on the eastern side is the tank "Madhu Puskarani" with a mandapam in the centre of the tank. Surprisingly, by the grace of the lord, the tank is always full with water even during hot summer months. On the southern side, our mutt stands like a palace with
granite structure. Northern and western side of the temple, residential quarters for the temple and mutt employees are built. The main temple tower, Rajagopuram, is built with seven tiers according to 'Agama' tradition. It is full of beautiful sculptures.


இதில் உள்ள அனைத்துப்படங்களும், ஆங்கிலத்தில் எழுதியுள்ள செய்திகளும் என்னால் இந்தப்பதிவினில் இன்று [29.03.2015] புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது அனைவரின் தகவலுக்காகவும் மட்டுமே. - VGK