என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ நிறைவுப்பகுதி 3 of 3 ]


கடவுள் இருக்கிறாரா? 
அல்லது
கடவுள் இல்லையா?

[விவாதப் பகுதி 3 of 3]



பகுதி 1 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

பகுதி-2 படிக்க: http://gopu1949.blogspot.in/2012/04/2-of-3.html


மாணவர்: 


ஐயா, உங்களின் ஆய்வுக்கொள்கைகளின் அடித்தளம் யாவுமே இருமையைப்பற்றியே [இரண்டு பொருட்களை சம்பந்தப்படுத்தியே] உள்ளன.

உங்கள் வாதத்தில் பிறப்பு,  இறப்பு; வாழ்வது, சாவது; நன்மை செய்யும் கடவுள், தீமை செய்யும் கடவுள் ஆக, இதுவரை எல்லாமே இரட்டை இரட்டையாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.


கடவுளையே ஒரு எல்லைக்கு உட்பட்டவராக , ஏதோவொரு அளவுக்கு உட்பட்டவராக, நம்மால் அவரை வெகு சுலபமாக அளந்துவிட முடியும் என்பதாகவே உள்ளன.


ஐயா,  ”எண்ணங்கள்” என்பது என்ன என்பதையே கூட,  விஞ்ஞானத்தால் இன்றுவரை விவரிக்க முடியாதபடியே தான் உள்ளது.  


விஞ்ஞானம் மின்சாரத்தையும் காந்த சக்தியையும் பயன் படுத்தி வருகின்றனவே தவிர, ஆனால் இதுவரை அதைக் கண்களால் கண்டது இல்லை. இவை இரண்டினில் ஒன்றைப்பற்றி விஞ்ஞானம் இதுவரை ஏதோ கொஞ்சமாக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது என்பதே உண்மை. 

இறப்பை பிறப்பின் எதிர்பதமாகப் பார்ப்பதே முதலில் அறியாமையின் வெளிப்பாடாகும்.  


வாழ்வின் எதிர்பதம் சாவு என்பதே தவறு.  


ஒருவரின் சாவினில் அவரின் வாழ்வு என்பது மறைந்துள்ளது என்பதே சரியான பொருள்.

இப்போது கூறுங்கள் பேராசிரியரே!  


குரங்கிலிருந்து படிப்படியாக பலவித பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டு மாறியவர்களே மனிதர்கள் என்று நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த முடியும் அல்லவா?

பேராசிரியர்: 

இயற்கையில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்ற தலைப்பு வரும்போது, ஆமாம் எங்களால் அது போல பாடம் நடத்த முடியும் தான். நானும் நடத்தக்கூடும் தான்.

மாணவர்: 


இயற்கையின் இந்தப் பரிணாம வளர்ச்சியினை நீங்கள் உங்கள் கண்களால் இதுவரை கண்டு உணர முடிந்துள்ளதா, ஐயா.

[பேராசிரியர் அவர்கள் புன்னகை புரிந்த முகத்துடன், தன் தலையை லேஸாக ஆட்டிக்கொண்டார்.  அவருக்கு இந்த மாணவரின் விவாதம் தன்னை எங்கு கொண்டு செல்லப்போகிறது என்பதும் புரியலானது]


மாணவர்: 


ஆகையால் பரிணாம வளர்ச்சி பற்றி போதிக்கும் யாரும் இதுவரை  எதையும் தங்கள் கண்களால் பார்த்து உணரவில்லை. 


தாங்களே சோதனை செய்ததும் இல்லை. 


எதையும் நிரூபித்ததும் இல்லை.


செய்முறைக்காகவும் சோதனைகளுக்காகவும் யாரும் தன்னை மிகவும் வருத்திக்கொண்டதும் இல்லை. 


தொடர்ந்து கஷ்டப்பட்டு பிரயத்தனம் செய்து எதையும், தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்ததும் இல்லை.
இதுபோலெல்லாம் இருக்கும் போது நீங்கள் எப்படி ஐயா, உங்களுக்கு மனதில் தோன்றியதை எங்களுக்குப் பாடமாக போதிக்கலாம்? 


எப்படி எங்கள் மேல் உங்கள் கருத்துக்களைத் திணிக்கலாம்?

நீங்கள் பாடம் போதிக்கும் ஒரு ஆசிரியரா? அல்லது விஞ்ஞானியா? அல்லது மத போதகரா?  சொல்லுங்கள், ஐயா.

[இந்த சூடான விவாதத்தால் வகுப்பறையில் 
அப்போது மிகுந்த கூச்சலும் குழப்புமாக அமளி ஏற்பட்டது]

மாணவர்: 


[மற்ற சக மாணவர்களைப் பார்த்து கேட்கிறார்]

நண்பர்களே! 


இந்த நம் வகுப்பறையில் உள்ள நம் பேராசிரியர் அவர்களின் மூளையை யாராவது உங்களில் ஒருவராவது இதுவரை பார்த்திருக்கிறீர்களா?
[இதைக் கேட்டதும், மாணவர்கள் அனைவரும் 
பலக்கச் சிரித்து விட்டனர் ]
மாணவர்: 

[தொடர்ந்து வகுப்பறை நண்பர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்]:

”பேராசிரியரின் மூளையின் ஓசையை இதுவரை யாராவது தங்கள் காதால் கேட்டுள்ளீர்களா?”

அவரது மூளையை யாராவது இதுவரை உணர்ந்தாவது உள்ளீர்களா?

அவரது மூளையை யாராவது இதுவரை தொட்டுப்பார்த்து உள்ளீர்களா?

அவரது மூளையின் வாசனையையாவது யாராவது இதுவரை நுகர்ந்து பார்த்து உள்ளீர்களா?



! ! ! ! ! 

உங்கள் அனைவரின் மெளனத்திலிருந்து, யாரும் அதுபோல இதுவரை  செய்யவில்லை என்பது, இப்போது என்னால் நன்கு உணர முடிவதால், நான் கீழ்க்கண்ட முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

அதாவது ......

அநுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப்பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், விஞ்ஞான பூர்வமாக, நமது பேராசிரியர் அவர்களுக்கு மூளை என்ற ஒன்றே இல்லை! இல்லை!! இல்லை!!! என்பதைத் தானே நாம் இப்போது தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது?

மாணவர் பேராசிரியரை நோக்கி:

என் பெரும் மதிப்புக்குரிய ஐயா, நாங்கள் இப்போது செய்த மிகச்சிறிய சோதனைகளின் அடிப்படையிலான, விஞ்ஞானபூர்வமான முடிவு இவ்வாறு இருக்கும் போது, நாங்கள் எவ்வாறு நீங்கள் நடத்தும் பாடங்களை நம்ப முடியும், ஐயா?

[இந்த நேரம் அந்த வகுப்பறையில் பெரிய அமைதி நிலவியது] 

[பேராசிரியர் அந்த மாணவரை உற்று நோக்கினார். அந்த மாணவரின் முகத்தில் தோன்றிய அறிவின் ஆழம் அவரை ஸ்தம்பிக்கச்செய்தது] 

பேராசிரியர்: 

எதையுமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன், என் அன்புக்குரிய மகனே!

மாணவர்: 


அவ்வளவு தான் ஐயா! மனிதர்களுக்கும் கடவுளுக்கும் உள்ளதோர் இணைப்பே “நம்பிக்கை” என்பது மட்டுமே, ஐயா. 

அந்த நம்பிக்கையே எல்லாவற்றையும் இதுவரை நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. 


அந்த நம்பிக்கை என்பது மட்டுமே  எல்லாவற்றிற்கும் உயிரளித்துக் கொண்டு வருகிறது.




oooooooooooooo
முற்றும்
oooooooooooooo





எனக்கு மிகவும் பிடித்தமான, இந்த அழகான உரையாடலை,  நீங்களும் நன்கு படித்து, புரிந்துகொண்டு.  ரஸித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
இது உண்மையில் நடந்த உரையாடல் சம்பவம் தானாம்.


இதில் பங்கு பெற்ற மாணவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் அனைவரும் அவரை அவசியமாகத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  

அவர் வேறு யாரும் அல்ல

பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நம்

திரு A P J அப்துல் கலாம் அவர்கள்.

[நம் இந்தியத் திருநாட்டின் 
முன்னாள் குடியரசுத்தலைவர் அவர்கள்] 










-oOo-

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இந்த உரையாடல், பல நாட்கள் முன்பு, எனக்கு என் நண்பர் ஒருவரால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்ப்ட்டது.

என்னால் முடிந்தவரை ஓரளவு தமிழாக்கம் மட்டும் செய்து தங்களுக்குத் தந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன் 
vgk


வியாழன், 12 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ பகுதி 2 of 3 ]


கடவுள் இருக்கிறாரா? 
அல்லது
கடவுள் இல்லையா?

[விவாதப் பகுதி 2 of 3]






மாணவர்: 


ஐயா, உங்களிடம் உஷ்ணமான பொருள் இருக்கலாம். அதை விட அந்தப்பொருளை இன்னும் உஷ்ணமாக்கலாம். சூப்பர் ஹீட், மெகா ஹீட், ஒயிட் ஹீட் என அதிகரித்துக்கொண்டே போகலாம். குறைவான உஷ்ணமாகவும் குறைக்கலாம். உஷ்ணமே இல்லாததாகவும் செய்திடலாம்.

ஆனால் குளிர்ச்சி என்ற பெயரில் உங்களிடம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை.  நாம் ஒரு பொருளை ஜீரோ டிகிரிக்குக்கீழே 458 டிகிரிக்கு கொண்டுவரும் போது அதில் சுத்தமாக உஷ்ணம் என்பதே இருக்காது. அதற்கு மேல் நம்மால் அதை குளிர்வித்துக் கொண்டு செல்லவும் முடியாது. 

அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது. 

உஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம்.  

நம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது. 

உஷ்ணம் என்பது தான் சக்தி. 

குளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா. 

உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.


[இந்த விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும், 
அந்தக் கல்லூரி வகுப்பு முழுவதுமே மயான அமைதியாகியது. 
அனைவரின் கவனமும் இந்த மாணவரின் பேச்சினை
உற்று கவனிப்பதிலேயே இருந்தது]   
மாணவர்: 


அதுபோல இருட்டு என்பது என்ன, பேராசிரியர் அவர்களே ? 

இருட்டு என்று ஏதாவது தனியாக உண்டா என்ன?

பேராசிரியர்: 


நிச்சயமாக உண்டே! 


இருட்டு என்று ஒன்று இல்லாவிட்டால் பிறகு இரவு என்பதே கிடையாதே!


மாணவர்: 


இல்லை ஐயா, நீங்கள் மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். இருட்டு என்பதும் வேறொரு பொருளின் மறைவே ஆகும். 


ஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம். 


அகல் விளக்கு, சிம்னி விளக்கு, டார்ச் லைட், மின் விளக்கு, மிகப்பிரகாசமாக எரியும் மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள் என பயன்படுத்தி இருட்டை நம்மால் போக்க முடிகிறது. 

இது போன்ற வெளிச்சங்கள் ஏதும் இல்லாதபோதும், தொடர்ச்சியாக நம்மால் அந்த வெளிச்சத்தைத் தர முடியாதபோதும் மட்டுமே இருட்டு என்பது ஏற்படுகிறது; இல்லையா ஐயா! 

உண்மையில் இருட்டு என்றே எதுவும் கிடையாது, ஐயா. 

மற்றொன்றும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் ஐயா! 

ஏற்கனவே இருட்டாக உள்ள இடத்தை தாங்கள் மேலும் இருட்டாக்கிக் காட்ட முடியுமா, ஐயா? 

பேராசிரியர்:

என் அன்புள்ள இளைஞனே! மொத்தத்தில் நீ என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பதை தயவுசெய்து விளக்கமாகச் சொல்லி விடு.
மாணவர்: 


கடவுள் இல்லை என்று தாங்கள் சொல்லிய தத்துவங்களாகிய கட்டடத்தின் அடித்தளத்திலேயே [அஸ்திவாரத்திலேயே] இப்போது விரிசல் கண்டுவிட்டது; குறை உள்ளது; குற்றம் உள்ளது எனச்சொல்ல வருகிறேன், ஐயா.

பேராசிரியர்: 

அப்படியா சொல்கிறாய் நீ! 


அது எப்படி என்று விளக்க முடியுமா உன்னால்?

தொடரும்





[இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்]

புதன், 11 ஏப்ரல், 2012

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?


கடவுள் இருக்கிறாரா? 
அல்லது
கடவுள் இல்லையா?


[விவாதப் பகுதி 1 of 3]




கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகள் இன்று நேற்று அல்ல பல யுகங்களாகவே நடைபெற்று வருகின்றன என்பதை நாம் ”கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்” என்று தன் தந்தையும் அரசனுமாகிய ஹிரண்யகசிபுவுக்குச் சொன்ன ”பக்தப் பிரகலாதன்” போன்ற புராணக் கதைகள் மூலம் நன்கு அறிய முடிகிறது. 

பட்டி மன்றங்கள் பல கேட்டு ரஸித்திருப்பீர்கள். கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு ஏற்றவாறு இரண்டு அணிகளாகப் பிரிந்து, தங்கள் வாதங்களை வெகு அழகாக எடுத்துரைப்பார்கள். 

ஒரு அணியிலிருந்து ஒருவர் பேசும் போது, அந்த அணிதான் வெற்றிபெறும் என்பது போல நமக்குத் தோன்றும். இன்னொரு அணியிலிருந்து வேறொருவர் வந்து பேசும் போது, நாம் ஏற்கனவே நினைத்தது தவறு, இந்த அணியினரே வெற்றி பெறக்கூடும் என்பது போல நமக்குத்தோன்றும். 

இவ்வாறாக மாற்றி மாற்றி அவரவர்கள், அவரவர்கள் அணிக்கு சாதகமான பல விஷயங்களை எடுத்து நம் முன் வைத்து, திறமையுடன் வாதம் செய்வார்கள்.

பட்டிமன்றத் தலைவர் அவர்களும் முன்னுரையாக நல்ல சில செய்திகளைக் கூறிவிட்டு, விவாதத்தைத் துவக்கி வைப்பார். ஒவ்வொருவர் பேசும் போதும், பேசி முடிந்ததும் கூட, தலைவர் பேசியவரைப் பாராட்டி உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். 

அந்த பிரபலமான பட்டிமன்றப் பேச்சாளர்களில் பலரும், தங்களை எந்த அணி சார்பாகப் பேசச் சொன்னாலும், தாங்கள் பேச முடியக்கூடிய அளவுக்கு அறிவும், ஆற்றலும், விஷய ஞானமும் உள்ளவர்களாகவே இருப்பார்கள். 

இதில் எந்த அணியினர் வெற்றி பெறுகிறார்கள்; எந்த அணியினர் தோல்வி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களின் வாதத்திறமைகளும், நம் முன் கொண்டுவந்து வைக்கும் பாய்ண்ட் பாய்ண்ட்டான,வெகு சுவாரஸ்யமானத் தகவல்களுமே, மிகவும் பாராட்டப்பட வேண்டியவைகளாகும்.  

அதுபோலவே இந்தப்பதிவினின் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு விவாதத்தை ஊன்றிப் படித்து வாருங்கள். இதில் உள்ள ஒவ்வொரு வரிகளும், ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் முக்கியமானவையாகும். மனதில் ஏற்றிக்கொண்ட பிறகே அடுத்த வரிக்குச் செல்ல வேண்டும். 

அதுபோல இந்த விவாதத்தை முழுவதுமாக ஒரு வரி விடாமல் தயவுசெய்து படியுங்கள். அப்போது தான் “கடவுள் இருக்கிறாரா? அல்லது “கடவுள் இல்லையா” என்று சிந்தித்துப்பார்த்து நீங்களும் பட்டிமன்றத் தலைவர் போல ஓர் முடிவுக்கு வர இயலும்.

oooooooooooooooooooooo
அன்புடன் vgk
oooooooooooooooooooooo


தத்துவப்பாடங்கள் கற்பிக்கும் ஒரு கல்லூரிப் பேராசிரியர், கடவுளால் விஞ்ஞானத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைப்பற்றி விவரிக்கிறார். 

அந்தப்பேராசிரியர் கடவுள் நம்பிக்கை ஏதும் இல்லாத ஓர் நாஸ்திகர். 


அவர் தன் வகுப்பு மாணவர்களில் ஒருவரை எழுந்து நிற்கச்சொல்கிறார்.


பேராசிரியர்: உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?


மாணவர்: நிறையவே உள்ளது ஐயா.


பேராசிரியர்: கடவுள் நல்லவரா?


மாணவர்: நிச்சயமாக நல்லவரே.


பேராசிரியர்: கடவுள் சக்தி வாய்ந்தவரா?


மாணவர்: ஆமாம், ஐயா, மிகவும் சக்தி வாய்ந்தவரே.


பேராசிரியர்: 


தன்னைக்காப்பாற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தும், என் சொந்த சகோதரர் புற்று நோயினால் இறந்து விட்டார். 


நம்மில் பலரும் நோயுற்றவர்களுக்கு உதவிடவும், அவர் நோயிலிருந்து விடுபட்டு செளகர்யமாகவும் தானே விரும்புவோம்! 


ஆனால் கடவுள் அப்படிச் செய்யவில்லையே. 


பின் எப்படி அவர் நல்லவர் ஆவார்? 


பதில் சொல்.


[மாணவர் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் மெளனமானார்.]

பேராசிரியர்: 


உன்னால் பதில் ஏதும் சொல்லமுடியாது. 


எனக்கு நன்றாகவே தெரியும். 


சரி நாம் மீண்டும் ஆரம்பிக்கலாமா? 


கடவுள் நல்லவரா?


மாணவர்: ஆமாம்; நல்லவரே!


பேராசிரியர்: சாத்தான் நல்லவரா?


மாணவர்: இல்லை. நல்லவர் இல்லை.


பேராசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தவர்?


மாணவர்: கடவுளிடமிருந்தே வந்தவர்


பேராசிரியர்: 


சரியாகவே சொல்கிறாய். அப்போ கெடுதல் செய்யக்கூடியவைகள் என்று இந்த உலகில் உண்டா?
.
மாணவர்: ஆம், உண்டு தான்.

பேராசிரியர்:  


ஓஹோ, அப்படியென்றால் இந்த உலகம் முழுவதிலும் கெடுதல்களும் பரவியுள்ளனவா?

மாணவர்: ஆம், பரவித்தான் உள்ளன.

பேராசிரியர்: 


ஆகையால் கெடுதல் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை ஒத்துக்கொள்கிறாய்; 


கடவுளே தான் இவற்றையெல்லாம், இந்தக் கெடுதல்களையெல்லாமும் ஏற்படுத்தியுள்ளார்; 


சரிதானே?

மாணவர்: ஆம், சரி தான் ஐயா.


பேராசிரியர்: அப்போ கெடுதல் செய்யும் சாத்தானைப் படைத்தவர் யார்?


[மாணவர் சற்று நேரம் மெளனம் சாதிக்கிறார்]


பேராசிரியர்:


கொடுமையான வியாதிகள், ஒழுக்கக்கேடுகள், பிரிவினைவாதங்கள், தீண்டாமை. அசிங்கங்கள், அராஜகங்கள், வன்முறைகள் முதலிய விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் எங்கும் உலகில் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கின்றன?
மாணவர்: ஆம், ஐயா.

பேராசிரியர்: 


எனவே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியவர் யார்?


[மாணவர் இப்போதும் எதுவும் பதில் பேசவில்லை.]

பேராசிரியர்: 


விஞ்ஞானப்படி நமக்கு ஐம்புலன்கள் உள்ளன. 


அதன் மூலமாக மட்டுமே நாம் எதையும் அடையாளம் காண முடிகிறது.


நம்மைச்சுற்றி நடப்பவற்றை உணர்ந்து கொள்ள முடிகிறது. 


இவ்வாறு இருக்கும் போது, இப்போது சொல்: 


நீ கடவுளை உன் கண்களால் இதுவரை பார்த்திருக்கிறாயா? 


மாணவர்: இல்லை, ஐயா. 


பேராசிரியர்: 


கடவுளின் குரலையாவது இதுவரை கேட்டிருக்கிறாயா என்று எங்களுக்குச் சொல். 


மாணவர்: இல்லை, ஐயா. 


பேராசிரியர்: 


கடவுளை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா? 


ருசித்திருக்கிறாயா? 


முகர்ந்து பார்த்திருக்கிறாயா? 


அல்லது உணர்வுபூர்வமான பார்வையாவது கடவுளின் மேல் உனக்கு இதுவரை ஏற்பட்டுள்ளதா? 

மாணவர்: 


இல்லை ஐயா, எதுவுமே இல்லை. 


ஆனால் எனக்கு கடவுளின் மேல் பயம் மட்டும் உள்ளது. 


பேராசிரியர்: 


இவ்வளவுக்கும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறாயா? 


மாணவர்: ஆமாம் ஐயா. 


பேராசிரியர்: 


அனுபவத்தையே அடிப்படையாகக்கொண்ட ஆராய்ச்சிகளின் படியும், இதுவரை நிகழ்த்தியுள்ள சோதனைகளின் அடிப்படையிலும், அந்தப் பல்வேறு சோதனைகளின் இறுதி முடிவு அறிக்கைகளின் படியும், உன்னுடைய, நீ சொல்லும் கடவுள் என்பவர் யாரும் இல்லவே இல்லை. 


இதற்கு உன் பதில் என்ன, என் அன்பு மகனே?  


மாணவர்: 


பதில் என்று சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை ஐயா! இருப்பினும் எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை மட்டும் உள்ளது.
பேராசியர்: 

ஆமாம். பாழாய்ப்போன நம்பிக்கை. 


இந்த நம்பிக்கை என்னும் சொல்லே விஞ்ஞானத்திற்கு இன்று அளித்துவரும் மிகப்பெரிய பிரச்சனையும் தொல்லையுமாகும்.

மாணவர்: 

பேராசிரியர் அவர்களே! நான் உங்களிடம் இப்போது கொஞ்சம் மனம் விட்டு பேச விரும்புகிறேன். 


உஷ்ணம் [HEAT] என்று சொல்லுகிறோமே, அப்படி ஒரு பொருள் உண்மையிலேயே உள்ளதா, ஐயா?

பேராசியர்: ஆம், உள்ளது.

மாணவர்: குளிர்ச்சி என்று சொல்லுகிறோமே, அது?

பேராசியர்: ஆமாம். அதுவும் உள்ளது.

மாணவர்: இல்லை ஐயா, அது போல எதுவுமே இல்லை.





[இதன் பிறகு நடைபெற்ற விவாதங்களில் 
சுவையும் சூடும் மிகவும் அதிகம்]

தொடரும்








[இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்]