என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
.நகைச்சுவை சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.நகைச்சுவை சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மார்ச், 2011

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. ! புதிய கட்சி: மூ.பொ.போ.மு.க. உதயம் [பகுதி-5]





மதியம் கேண்டீனுக்குப்போய் லஞ்ச் முடித்து விட்டு, ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் பார்க்கலாம் என்று தான், நான் நினைத்தேன்.  ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது.   

வ.வ.ஸ்ரீ. சாப்பிட வீட்டுக்குப்போனவர் போனவர் தான். ஆளையே சீட்டில் காணும். எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது.  

தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார். 

தூக்கக்கலக்கம் போக, அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது, வ.வ.ஸ்ரீ. அவர்களே வந்து விட்டார்.    

“என்னப்பா, இப்போதே Further ஆக நம்ம Discussions Continue பண்ணலாமா”, என்று சொல்லி ஒரு சிட்டிகை பொடியை வேகவேகமாக எடுத்து உறிஞ்சினார். கையில் உள்ள பொடியை அவர் உதற லேசாக என் கண்ணில் பட்டு, சற்றே எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், என் தூக்கம் சுத்தமாகக் கலைந்து போய் விட்டது. மேனேஜர் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே, தன் ரூமுக்குள் நுழைந்ததை நான் மட்டுமே கவனித்து விட்டு, வ.வ.ஸ்ரீ. யிடம் மெதுவாகச் சொன்னேன்.     

”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு.    RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு.  அதற்குள், I will teach him a Lesson”  [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்]   என்றார்.  அவர் கொடுத்த தைர்யத்தில் என் பேட்டியைத் தொடர ஆரம்பித்தேன்.

”இந்தப்பொடிப் பழக்கத்தால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எதுவும் பாதிப்பு உண்டா, சார்” என்றேன்.

“நல்லதொரு கேள்வி தானப்பா” என்று உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்குக் கல்யாணம் ஆன புதிதில், இந்தப்பொடி போடும் பழக்கமே எனக்கு அதிகமாகக் கிடையாது.  எப்போதாவது யாராவது போடும்போது லேசாக வாங்கி மோந்து (முகர்ந்து) பார்ப்பதோடு சரி.   அதுவும் என்னவளை நெருங்கும்போது பொடி நெடி ஏதும் இல்லாமல் சுத்தமாக மூக்கைக் கழுவிக்கொண்டு, பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தேன்.

அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள்,  மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள் முதலியன ஏற்பட்டதில் எல்லாவற்றிலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது எனக்கு, 

புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான்,  எனக்கு இந்தப் பொடியின் மீது , ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது.  அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;

பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. 

அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு.   அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.

கூடிய சீக்கரம் ரிடர்ய்ட் ஆகும் நிலையில் இருந்த அவரின் இந்த சோகமான சுய சரிதையைப் பொடிப்பொடியாகக் கேட்ட எனக்கு, அவர் மேல் ஒரு பச்சாதாபமே ஏற்பட்டது. 

சற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை அவர் எடுத்துரைத்த விதம் எனக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது.

அவர் காதருகில் போய் மெதுவாக, ”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும்,  கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும்,   சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும்,   சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்”  என்றேன், நான்.

“புதுசா கல்யாணம் ஆகப்போகும் நீ,  இதை ஏன் இவ்வளவு ஒரு பரமரகசியமாக, அதுவும் பயந்து கொண்டே கேட்கிறாய்?  என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா?  ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினால் தான் உனக்கு எல்லா விஷயங்களுமே நல்லாப்புரிபடும்” என்று சொல்லி, எழுச்சியுடன் மேலும் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து உறிஞ்சி உதறலானார்.    நான் என் கண்களை முன் ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு, காதுகளை மட்டும் நன்றாகத் தீட்டித் திறந்து கொண்டேன்.

“முதன் முதலாக பால்சொம்புடன் படுக்க வரும்போது,  அவள் யாராயிருந்தாலும் அழகிய பால்குடம் போல பளபளப்பாத்தான், முன்னப்பின்ன அனுபவமில்லாத, உன் கண்களுக்குத் தெரியும்.   

நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா,  அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள் .   

”அச்சச்சோ, அது தான் ஏன் சார்ன்னு உங்களிடம் கேட்கிறேன்.  காரணம் என்னன்னு சொல்லாமல், பால்குடம் பழையசோத்துப்பானையா ஆகிடும்னு மட்டும் சொன்னா எப்படி சார்?” என்றேன் நானும் விடாமல். 

அவருக்கு மேலும் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி முக்கியமானத் தகவலை பெற்றுவிட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

”அவ்வளவு ஏனப்பா, இந்தப்பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறாயா நீ ?”  என்றார் வ.வ.ஸ்ரீ.





“எனக்கு அது ரொம்ப பிடிச்ச ஐட்டம், சார்; நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றேன்.

“முற்றலான தேங்காய்த் துருவல், ஏலக்காய், வெல்லம் எல்லாம் போட்டு, **கம்பர்கட்** போல பதமாக பாகுகாய்ச்சி,  அரிசி மாவை தனியே வேக வைத்து, மெல்லிசா அழகாக துணி மாதிரி அதை உள்ளங்கையில் கொஞ்சமாகப் பரப்பி, பிறகு அதை சொப்பு போலச்செய்து, அதில் இந்த தேங்காய், வெல்லம், ஏலம் கலந்த பூர்ணத்தை கொஞ்சமாக உருட்டி வைத்து, பிறகு அதை அப்படியே மூடி, சின்னதா ஒரு மூக்கு வைத்து முடித்துக்கொண்டு, பிறகு மீண்டும் இட்லி சுடுவது போல வேக வைத்து சூடாகத் தருவார்களே, அதைத் தின்னும் போது எவ்வளவு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும்? என்று சொல்லி நிறுத்தினார், வ.வ.ஸ்ரீ.

“ஆஹாஹா, சார்! நீங்க இப்படியொரு அருமையான கொழுக்கட்டை செய்முறைப் பக்குவம் சொல்லும்போதே, கொழக்கட்டைகள் என் கண்முன் இருப்பது போல, நாக்கிலே ஜலம் ஊறுகிறது,  சார்” என்றேன்.

“இந்த சுடச்சுட சாப்பிடும் பிள்ளையார் கொழுக்கட்டை போலத்தானப்பா, புதுப்பொண்டாட்டியும்.     அதே கொழுக்கட்டையை அப்படியே மூடி வைத்து ஒரு நாலு நாள் கழித்து சாப்பிட முடியுமா உன்னால்?” என்றார், வ.வ.ஸ்ரீ.

“அது எப்படி சார், சாப்பிட முடியும், ஊசிப்போய் நல்லாவே இருக்காது, ஒரே நாத்தம் அடிக்கும் சார்” என்றேன் நான்.

“முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி,  நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ.   

பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! 

இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;

பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும்,  பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா;  

பாவம் அவர்கள், நடுவில் இந்த டி.வி. சீரியல்களைப்பார்த்து அதில் வரும் பல சோகங்களுக்காக, கண்ணீர் வடிக்க வேண்டியதாகவும் உள்ளது.  அதனால் கொஞ்சம் நம்மை விட சீக்கிரமாகவே தளர்ந்து போய் விடுகிறார்களப்பா” என்று விளக்கினார், வ.வ.ஸ்ரீ.  

பிறகு அவரே,  ” ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா,  என்னைப்போல”, என்றார் வ.வ.ஸ்ரீ.

இவர் இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு விலாவரியாக எடுத்துச் சொல்வதைக் கேட்டதும், நான் கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா, என்று ஒரேயடியாகக் குழம்பிப்போக வைத்தது என்னை. 

எது எப்படியிருந்தாலும், இந்த வ.வ.ஸ்ரீ. உன்னை என்னதான் குழப்பினாலும், சுடச்சுட,  நீ கொழுக்கட்டை சாப்பிட்டே ஆகணும் என்றது என் உள் மனது.   

எனக்கும் சுடச்சுட ருசியான ஒரு கொழுக்கட்டை விரைவிலேயே கிடைக்க வேண்டும் என்று நானும் மனமுருக வேண்டிக்கொண்டேன்.

இவரின் இந்தக்கொச்சையான பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்த நான் ”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்று என் அடுத்த கேள்விக்குத் தாவிச்சென்றேன்.  

அன்றைய ஆபீஸ் நேரம் அதற்குள் முடிந்து விட்டதால், நாளைக்குப் பேசுவோம் என்ற படி இருவரும் பிரியா விடை பெற்றுச்செல்ல வேண்டியதாகிப் போனது.

  

தொடரும்


ஒரு சிறு விளக்கம்:

[  ** கம்பர்கட் ** அல்லது   கமர்கட்  என்பது அந்தக்காலத்தில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஒரு தின்பண்டம்.  கடலைமிட்டாய், தேங்காய் பர்பி, ஆரஞ்ச் மிட்டாய் என்பதுபோல பல சாதாரண பெட்டிக்கடைகளிலும், பள்ளிக்கூட வாசல்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடியது.

தேங்காய் + வெல்லம் + ஏலம் கலந்த ஒரு கலவை தான், கையில் ஒட்டாதபடியும்,ஆனால் அமுக்கினால் அமுங்கக்கூடியதாகவும் ஒரு வித ஜவ்வுமிட்டாய் போல பாகுபதத்தில் உருண்டையாக கோலிக்குண்டுபோல செய்யப்பட்டிருக்கும். மிகவும் சுவையானதாக இருக்கும். 

இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. 
என்றும் அன்புடன் உங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

வியாழன், 17 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 4]







மறு நாள் காலையில் நான் என் சீட்டுக்கு வந்து அலுவலக வேலைகளில் மூழ்கலானேன்.  வ.வ.ஸ்ரீ. அவர்கள் இன்னும் சீட்டுக்கே வரவில்லை.  வரும் வழியில் யார் யாரிடம் எழுச்சியாக என்னென்ன பேசிக்கொண்டு இருக்கிறாரோ? என்ற கவலை எனக்கு.   அவரிடம் மேற்கொண்டு என்னென்ன கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு பேப்பரில் குறித்து ஞாபகமாக என் சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன்.  

என் மேஜை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது.  எடுத்தேன்.  வ.வ.ஸ்ரீ யே தான் பேசினார்.  அப்போது தான் கவனித்தேன் அவர் தன் சீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை.

“குட் மார்னிங் சார்,  என்ன சார், கொஞ்சம் லேட்டா?” என்றேன்.   

”நான் அப்போதே வந்து விட்டேன், நீ தான் கவனிக்கவில்லை.  ஏதோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாய்.   If you are free,  please come to my seat.  Let us continue our discussions"  என்றார்.

ஆஹா, இன்றைக்கும் நம் ஆபீஸ் வேலை அம்போ தான் என்று நினைத்தேனே தவிர,  அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால், உடனே அவர் சீட்டுக்கு அருகில் இருந்த மற்றொரு காலி நாற்காலியில் போய் அமர்ந்து விட்டேன்.

”சொல்லுப்பா, நாம நேத்திக்கு எங்கே விட்டோம்”  என்றார் முகத்தில் ஒரு வித பேரெழுச்சியுடன்.

"தங்களில் 99 வயது தந்தைக்கு நீங்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், விட்டோம், சார்" என்றேன்.

சிரித்துக்கொண்டவர்,“நான் சொல்வதையெல்லாம் அப்படியே கிரஹித்துக் கொண்டு, கரெக்ட்டாகச் சொல்லுகிறாய் நீ, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார். 

“நீங்கள் எப்படி சார், இந்தப்பொடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனீங்க?” என்றேன் ஒரு வித ஆச்சர்யமான முகபாவனையுடன்.

“பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’  வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். 

சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு. 

அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார்.  ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். 

அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.   

அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார்.  கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.  

அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.   

ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள்.   அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும்.  பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5  நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள்.   அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு,  பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள்.  இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.

தினமும் எதற்காக இப்படி என்னைப்போன்ற நூற்றுக்கணக்காண பொடியன்களுக்கு இலவசப்பொடி தர்மம் செய்கிறார்கள் என்று அந்த நாளில் வழுவட்டைத்தனமாக நானே ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டதுண்டு.   பிறகு நாளாக நாளாகத்தான் அது அவர்களின் வியாபார யுக்தி; அனைவரும் எழுச்சியுடன் பொடி போட வேண்டும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ. 



தொடரும்



செவ்வாய், 15 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 3]




”பாத் ரூமிலிருந்து எழுச்சியுடன் வந்து தன் சீட்டில் அமர்ந்த வ.வ.ஸ்ரீ, நான் வந்து அவர் அருகே அமர்ந்திருப்பது கூடத் தெரியாமல், ஒரு பெரிய டர்க்கி டவலால், தனது பளபளக்கும் தலை முதல், முகம், கழுத்து, முழங்கை, கை விரல்கள் வரை சுத்தமாகத் துடைத்துக் கொண்டுவிட்டு,  ஒரு சிட்டிகைப் பொடியை கை விரல்களால் எடுத்துக்கொண்டு, தரையில் ஒரு உதறு உதறிவிட்டு, பொடிட்டின்னையும் கையோடு மூடிவிட்டு, என்னை எழுச்சியுடன் ஒரு பார்வை பார்த்தார், என் அடுத்தடுத்தத் தொடர்த்தும்மல்கள் எப்படி இருந்தன?  என்று கேட்பது போல!. 

இங்கேயே உட்கார், எழுந்து போய் விடாதே, என்பது போல கைஜாடை காட்டி என்னை அமர வைத்தார். 

சற்றே கீழே குனிந்தவர், தன் கைவிரல்களில் இடுக்கியிருந்த பொடியை சர்ரென்று ஒரே இழுப்பாக மூக்கினுள் இழுத்து விட்டு, கையைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டு, பிறகு அந்தக் கர்சீப்பையே, ஹோட்டல்களில் தோசையைச் சுருட்டி பார்சலாகத்தருவார்களே, அதே போலச் சுருட்டி  மூக்குத் துவாரங்களுக்கு அருகில், அதாவது மீசை இருக்க வேண்டிய இடத்தில் நீளவாக்கில் தன் இரு கைகளாலும் வயலின் அல்லது ஃபிடில் வாசிப்பது போலப் பிடித்தவாறே, தன் தலையையும் மூக்கையும் ஒரே ஆட்டாக ஆட்டினார்.  

அதாவது இவர் தன் மூளையை நோக்கிச் செலுத்திய அந்த ஒரு சிட்டிகைப்பொடியில், சில துகள்கள் மட்டும் நாம் இவர் மூளைக்குள் போய்ப் பார்ப்பதற்குப் பெரிதாக என்ன இருக்ககூடும் என்ற எண்ணத்தில், தங்கள் பயணத்தை ஒரு வித எழுச்சியுடன் தொடராமல், இடையே, மூக்கினுள் உள்ள முடிகளில் படிந்து விட்டிருக்கும் போல.  அந்த வழுவட்டையானத் துகள்களைத்தான் இப்போது ஒட்டடை அடிப்பது போல ஏதோ செய்து வெளியேற்றி வருகிறார், என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

ஸ்டெடியாக நிமிர்ந்து உடகார்ந்து என்னை நோக்கிய அவரிடம், ”ஒரு நாளைக்குப் பொடிக்கு மட்டும் எவ்வளவு சார், செலவு செய்கிறீர்கள்?”  என்று மெதுவாக என் பேட்டியை ஆரம்பித்தேன்.

“ஐந்து பைசா மட்டையில் ஆரம்பித்தேன் 1966 இல்.  இப்போ தினமும் நாலு ரூபாய் செலவாகிறது.  அதில் எனக்கு மட்டும் மூன்று ரூபாய், நண்பர்களுக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே.   அவனவன் சத்திரம் கட்டுகிறான், சாவடி கட்டுகிறான்,  ஆஃப்டர் ஆல் நம்மால் முடிந்தது இந்த சிறிய பொடி தர்மமாவது தினமும் செய்யலாமே என்று தான்”  என்றார்.  

”தினமும் நாலு ரூபாய்க்கு மூக்குப்பொடியா, என்ன சார் இப்படி, ரொம்பவும் அநியாயமாக உள்ளதே!” என்றேன்.

”விலைவாசியெல்லாமே ஏறிப்போயிடுத்துப்பா; உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ! ஒரு கிலோ ப்யூர் காஃபிப்பொடியை விட, ஒரு கிலோ மூக்குப்பொடி விலை அதிகம்”  என்றார் வ.வ.ஸ்ரீ. 

”தொடர்ந்து பொடி போடுவதனால் உடம்புக்குக் கெடுதல் இல்லையா, சார்”  என்றேன்.

“இது எங்கப்பரம்பரை வழக்கமப்பா, நான் என்ன செய்வது?; எங்க தாத்தா (அப்பாவோட அப்பா) தவறிப்போகும் போது அவருக்கு வயது 108.  அவர் தன் 12 ஆவது வயதிலிருந்து பொடிபோடப் பழகியவர்ன்னு கேள்வி.  

என் அப்பாவும் பொடி போடுவார்.   அவர் என் தாத்தாபோல செஞ்சுரி போடாவிட்டாலும் பொடி போட்டே 99 வயதுக்கு மேல் ஒரு மூணு மாதமும் வாழ்ந்தவர்.  சொல்லப்போனால் அவரின் அந்த இறுதி மூச்சு நின்ற நாள் காலையிலிருந்தே அவர் பொடி போடவில்லை.  

சுற்றி நின்ற எங்களுக்கெல்லாம் அது தான் மிகப்பெரிய கவலையாக இருந்தது. எது சாப்பிட்டாலும் நன்றாக முடிந்தவரை வயிறு முட்ட சாப்பிடுபவர்.   விரத நாட்களில் பட்டினி இருந்தாலும் சுத்தமாக இரண்டு நாட்கள் வரை எதுவுமே சாப்பிடாமல் முழுப்பட்டினி இருந்து விடுபவர்.  ஆனால் பொடி மட்டும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை வீதம் மூக்கில் இழுத்துக்கொண்டே இருக்கனும் அவருக்கு. 

அந்த அவரின் கடைசி நாள் அன்று, பொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ.    

99 வயது வரை வாழ்ந்து முடிந்து,  அதன்பிறகு,  அதுவும் என்றைக்கோ இறந்துபோன, தன் தந்தையை நினைத்து இன்றைக்குப்போய் இவர் கண்ணீர் விட,  நான் காரணமாகி விட்டேனே என எனக்கே சற்று சங்கடமாக இருந்தது.

அன்றைய அலுவலக நேரம் இத்துடன் முடிந்து விட்டதால்,  நாங்கள் ஆற்ற வேண்டிய அரும் பணியை இவ்விதமாகப் பேசிப்பேசியே (Group Discussions)கழித்து விட்ட நாங்களும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.














தொடரும்

ஞாயிறு, 13 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி: ”மூ.பொ.போ,மு,க.” உதயம் [பகுதி 2]




மறுநாள் காலை கேண்டீனில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் அருகில் சூடான காஃபியை ஆற்றியபடியே, பேரெழுச்சியுடன் வந்தமர்ந்த வ.வ.ஸ்ரீ. யை, வணக்கம் சொல்லி வரவேற்றேன்.   

“என்ன சார், நேற்று உங்களை பார்க்க முடியவில்லை.  திடீரென்று லீவு போட்டுட்டீங்களே!” என்றேன்.

இந்த தமிழ்நாடு எலெக்‌ஷன் முடியற வரைக்கும் எனக்கு ரெஸ்டே கிடையாது தம்பி.   அடிக்கடி லீவு போடுவேன்.  234 தொகுதிகளுக்கும் போய்ப் பலபேரை சந்திக்கணும்.  ஆற்றவேண்டிய கட்சிப்பணிகள் நிறையவே இருக்குப்பா” என்றார்.   

”நீங்க அப்போ எந்தக்கட்சி சார்” என்றேன் அப்பாவித்தனமாக.

இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார். 

”ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று எல்லாப்பயல்களும் நான் எங்கே போறேன், யாரை சந்திக்கிறேன், அடுத்து என்ன செய்யப்போறேன்னு, ஒற்றர்படையை நியமித்து, என்னையே தொடர்ந்து நோட்டம் விடுகிறார்களப்பா. இந்தப்பத்திரிக்கைக்காரர்கள் தொல்லையும் தாங்கவே முடியாமல் இருக்குப்பா” என்றார்.

“நீங்களோ ஆளுங்கட்சியும் இல்லை, எதிர் கட்சியும் இல்லை என்று தெரிகிறது.  பிறகு எதற்கு சார் உங்களை அவர்கள் ஃபாலோ பண்ணனும்”  என்றேன்.

“நான் யார், என் பவர் என்ன என்பது எதுவும் தெரியாமல், வழுவட்டைத்தனமாக இப்போது என்னை எதுவும் கேட்காதே, போகப்போக உனக்கே எல்லாம் தெரியவரும். அது சரி,  நேற்று ஆபீஸில் ஏதும் விசேஷமுண்டா” என்று கேட்டு பேச்சை மாற்றினார் வ.வ.ஸ்ரீ.

”பொடிட்டின்னுக்காக பலபேர் உங்களைத்தேடி வந்தாங்க சார்;  மேனேஜர் சார் உங்கள் சீட்டுப்பக்கம் இரண்டு முறை வந்து, ஏதோ ஃபைல்கள் பேப்பர்களைத் தேடிட்டுப்போனார், சார்; வேறு எதுவும் விசேஷமில்லை சார்” என்றேன்.

”இந்தப்புதிய மேனேஜர் பயலிடம் நான் ஸ்ட்ரிக்ட்டாவே சொல்லிப்புட்டேன். இந்த எலெக்‌ஷன் முடியற வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று.அப்படியும் அவன் என் சீட்டுக்கு வந்து ஏதோ நோண்டிவிட்டுப்போனானா?   ஏற்கனவே இங்கிருந்து டிரான்ஸ்பரில் போன மேனேஜர்பயல் V V என்றால் புதிதாக வந்துள்ள இவன் S V V யாக இருப்பான் போலிருக்கு” என்றார், வ.வ.ஸ்ரீ.(V.V= வழுவட்டை;  S.V.V = சூப்பர் வழுவட்டை) 

”சார், என்ன இருந்தாலும் அவர் நம் மேனேஜர் இல்லையா, மேனேஜர் பயல்ன்னு மரியாதை குறைவா சொல்லுறீங்களே” என்றேன் நான்.   (அவர் வாயைக்கிளறி அவரை ஏதாவது பேச வைத்து, அந்தப்பேச்சில் அப்படியே சொக்கிப்போய் மயங்குவதில் தான் எனக்கு ஒரு தனி இன்பம் ஆயிற்றே!)

“புதிதாக டிரான்ஸ்ஃபர் ஆகி வந்துள்ள இந்த மேனேஜர்பயல் என் சின்னப்பையனை விட வயதில் ரொம்பவும் சின்னவன் தெரியுமோ; அவன் வயசைப்போல ஒண்ணரை மடங்கு இந்த நிறுவனத்தில் நான் சர்வீஸே போட்டாச்சு தெரியுமோ;இந்த ஆபீஸில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டெண்டான நான், என் 41  வருஷ சர்வீஸில் இவனைப்போல எவ்வளவு மேனேஜர்பயலுகளைப் பார்த்திருப்பேன் தெரியுமோ?” என்றார் வ.வ.ஸ்ரீ.

சரி சார், நாழியாச்சு, நாம கேண்டீனிலிருந்து புறப்பட்டு நம் சீட்டுக்குப் போவோமா என்று கேட்டபடியே எழுந்து கொண்டேன்.   அவரும் பொடியை ஒரு சிட்டிகை இழுத்து விட்டு, ஒருவழியாக என்னுடன் எழுச்சியுடன் கிளம்பினார். அவரை அப்படியே பேசவிட்டால் சாயங்காலம் ஆபீஸ் முடியும் வரை கேண்டீனிலேயே என்னுடன் பேசிக்கொண்டே இருந்திருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகள் சற்று தள்ளி நின்று பொடி போட்டாலே நமக்குத்தும்மல் வந்துவிடும் போது, அவர்களால் எப்படிப் பொடியை கணிசமான அளவில் விரல்களால் எடுத்துக்கொண்டு, **வேட்டுக்குழாயில் கந்தகம் அடைப்பது போல**, மூக்கினுள் அடைத்து, சர்ரென்று ஒரே இழுப்பாக இழுத்து, தும்மாமல் இருக்க முடிகிறது என்று எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வருவதுண்டு.  ஒரு நாள் நம் வ.வ.ஸ்ரீ. அவர்களிடமே துணிந்து இது பற்றிக் கேட்டு விட்டேன்.  

அதற்கு அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
  மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”

என்று நீ கேள்விப்பட்டதில்லையா என்றார்.

(திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளியில் பலமுறை பரிசுகள் வென்ற எனக்கு,  இந்தக்குறள் மட்டும் ஏனோ மறந்து விட்டது போலிருக்கு)

இந்த விசித்திரக் குறளைக்கேட்டு அவரை ஆச்சர்யத்துடன் நான் நோக்குகையில் அவரே தொடர்ந்து பேசலானார்.

“தம்பி, பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...”  என்றார். 

“இல்லையே சார்,  அது எப்படித் தும்மல் போடும்”  என்றேன் நான்.

“அது போலத்தான், பொடி போடும் எங்களுக்கும் பொடி போடும் போது தும்மல் வராது.   ஆனால் நாங்கள் தும்மலை தேவைப்படும்போது சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும்” என்று சொன்னவர், சொன்னபடி செய்தும் காட்டிவிட்டார்.

“மூக்குப்பொடி போடும் இந்த மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமாத் தேவை இந்தக்கைக்குட்டை” என்று ஜவுளி வியாபாரியாக வேஷமிட்டு சிவாஜி கணேசன் ’தூக்குத்தூக்கி’ என்ற படத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்.

அது போல கைவசம் எப்போதும் வைத்திருக்கும் பல கைக்குட்டைகளில் (கர்சீஃப்) ஒன்றைக் கையில் எடுத்தார் வ.வ.ஸ்ரீ.   அதன் ஒரு நுனியை விளக்குத்திரி போடுவது போலத் திரித்தார்.  அதை அப்படியே தன் மூக்குத் துவாரத்தில் நுழைத்தார்.   

முகத்தை அஷ்ட கோணலாக்கிக்கொண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக பதினைந்து தும்மல்கள் தும்மினார்.  அவரின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டன.  அவரைச்சுற்றி மழைச்சாரல்போல சளித்தூறல்கள்.  கைகுட்டை முழுவதும் பஞ்சாமிர்தம்போல ஏதேதோ ஒழுகியவண்ணம்.  அவர் முதல் தும்மல் போட்டதுமே, ஓடி விட்டேன் நான் என் சீட்டை நோக்கி.

இடி, மின்னல், மழை போன்ற அவரின் தும்மல்கள் ஒருவழியாக முடிந்து, புயல் கரையைக்கடக்க ஒரு கால் மணி நேரம் ஆனது. 

தன் பெண்ணின் நிச்சயதார்த்தம் பற்றி தன் வருங்கால சம்பந்தியிடம் டெலிபோனில் பேச முயற்சித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு பரந்தாமனுக்கு, இவரின் தொடர் தும்மலால் மிகுந்த எரிச்சல் ஏற்பட்டது.  சனியன், சகுனத்தடை என்று அவரைத் திட்டிக்கொண்டிருந்தது, எனக்கு மட்டுமே கேட்டது.

பாத் ரூம் சென்று மூக்குத் துவாரங்களைக் கழுவிக்கொண்டு, கைக்குட்டையையும் சோப்புப்போட்டு அலசிப் பிழிந்தவாறு தன் இருக்கையில் ஒருவாறு வந்தமர்ந்தார் வ.வ.ஸ்ரீ.   மீண்டும் அவரைப் பேட்டி காணப்போனேன், நான்.













தொடரும்



வெள்ளி, 11 மார்ச், 2011

*வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! - புதிய கட்சி: ”மூ.பொ.போ.மு.க.” உதயம்!!




ஸ்ரீனிவாசன் என்ற ஒரே பெயரிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் அந்த மிகப்பெரிய நிறுவனத்தில் ’வழுவட்டை ஸ்ரீனிவாசன்’  என்று சொன்னால் தெரியாதவர்களே கிடையாது. அவர் தலை வழுக்கையாக இருப்பதால் அப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த என் கணிப்பு முற்றிலும் தவறாகிப்போய்விட்டது.  

புதிதாக அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நான் அவரிடம் போய் “சார், கேண்டீன் எங்கே இருக்கிறது, எப்படிப்போக வேண்டும்?” என்று கேட்டேன்.

“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார்.  

என் அப்பா வயதில் அவர் இருந்ததாலும், நான் வேலைக்குச்சேர்ந்த முதல் நாள் என்பதாலும், அவர் மீது கோபப்படாமல் அமைதி காக்கும்படி ஆகி விட்டது, என் அன்றைய நிலை.

கேண்டீனில் பலரிடம் அவர் பேசும்போதும் இந்த ’வழுவட்டை’ என்ற சொல்லை, அவர் மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தி வந்ததை நானும் கவனிக்கத்தவறவில்லை.

”காண்டீன் சாப்பாடு வரவர வழுவட்டையாக உள்ளது.  வீட்டுச் சாப்பாடுபோல எழுச்சியாக இல்லை.  புது மேனேஜர் எழுச்சியாக இருப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவரும் வழுவட்டையாகவே உள்ளார்” என்று ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்.

மொத்தத்தில் அவருடன் பழகியதில், ஒருவித எழுச்சியில்லாத அனைத்தும் வழுவட்டையே எனப்புரிந்து கொண்டேன்.  அவருடைய அகராதிப்படி எழுச்சிக்கு எதிர்பதம் வழுவட்டை என்ற சொல் என்பது எழுச்சியுடன் எனக்குப்புரிய வந்தது.

வ.வ.ஸ்ரீ, க்கு அருகிலேயே சற்று எதிர்புறமாக என்னுடைய அலுவலக இருக்கையும் அமைந்திருந்ததால் அவருடைய அன்றாடப்பணிகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது.  எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப் பழகிவந்த அவரைச்சுற்றி எப்போதும் யாராவது வந்துபோய்க்கொண்டே இருப்பார்கள்.

அவர் மேஜைமீது எப்போதும் பளபளப்புடன் கூடிய எவர்சில்வர் மூக்குப்பொடி டப்பா ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.  அவரை நாடி வருவோரைவிட அந்தப் பொடிடப்பாவை நாடி வருவோர்களே அதிகம். 





பார்ப்பவர்களுக்கு அது ஒரு அல்பப்பொடி தர்மமாகத் தெரிந்தாலும், பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான ஒரு தர்மம் போலும்.   

வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.   நாளடைவில் வ.வ.ஸ்ரீ. அவர்களுடனும், அவருடைய பொடிபோடும் நண்பர்களுடனும் எனக்கு நல்ல பரிச்சயம் ஆகிவிட்டது. 

ஒரு நாள் வ.வ.ஸ்ரீ. ஆபீஸுக்கு திடீரென லீவு போட்டு விட்டார். அவருடைய பொடி நண்பர்கள் பலரும் வந்து ஏமாந்து போனார்கள். ஒருசிலர் வ.வ.ஸ்ரீ. லீவு போடட்டும், பொடிட்டின்னுடன் லீவு போடலாமா? என்று மிகவும் சலித்துக்கொண்டனர்.   மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்.

இதைப்பார்த்த நான் சும்மா இல்லாமல், அதில் ஒருவரிடம், “ஏன் சார்,  நீங்களே தனியாக பொடி வாங்கி வைத்துக்கொள்ளலாமே” என்று தெரியாத்தனமாகக் கேட்டு விட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்துப்பார்த்த அவர், “தம்பி, நீ ஒரு பொடிப்பையன்.   பொடியைப்பற்றி உனக்குத்தெரிந்திருக்க நியாயம் இல்லை.   ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;  அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்” என்றார்.


தொடரும்   

செவ்வாய், 8 மார்ச், 2011

’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 8 / 8 முன்கதையுடன் முழுவதுமாக]



’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 8 / 8 முன்கதையுடன் முழுவதுமாக]

இந்த நகைச்சுவைத்தொடரின் முதல் ஏழு பகுதிகள், இதுவரைப் படிக்காதவர்கள், இப்போதாவது படிக்கட்டும், என்ற நோக்கத்தில்  இந்தக் கலரில்  கொடுக்கப்பட்டுள்ளது.

 

'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]

அன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.

“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்.

“அப்பா.... நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.

ராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.

சிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவளை, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.

அவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.

புதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.

வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் ஒரு சரியான சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன்.

மீட்டிங்கில் பலர் சொன்ன பலவிதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.

இப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.

தொடரும்

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]

செயலற்ற செயலாளராக இருப்பதாகச் சொல்லி, தன் மீது கண்டனத்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய புண்ணியவான்கள் யாரோ, நம்மீது உள்ள கடுப்பில், வேண்டுமென்றே மூன்றாவது மாடியின் கடைசி வீடான நம் வீட்டுப்பக்கம் அந்தச் சனியனை துரத்தி விட்டிருப்பார்களோ! இது அவர்களில் யாரோ ஒருவரின் சதித்திட்டமாகத் தான் இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் ராமசுப்புவுக்கு வந்தது.

பஸ் இறங்கி வீடு செல்லும் முன்னே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு துடைப்பம் (தென்னங்கீற்றுக் குச்சிகளை வைத்துக் கட்டிய கட்டை விளக்கமாறு) வாங்கிக்கொண்டு, ஒரு வீராதி வீரனின் போர்வாள் போல அதைக் கையில் பிடித்துக்கொண்டு, தன் வீட்டிற்குள் பயந்து கொண்டே நுழைந்தார்.

வீட்டின் வெளிப்பக்க கிரில்கேட் திறந்தே இருந்தது. பூட்டிய பூட்டு மட்டும் தனியே தொங்கிக் கொண்டிருந்தது. தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியால் வெளிக்கதவைப் பூட்டி விட்டு உள்ளே போனார். ஹாலில் யாரும் பார்க்காமலேயே, டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. அதை ரிமோட்டால் அணைத்து விட்டு, மெதுவாக பெட்ரூம் கதவைத் திறந்து கொண்டு உடனே மீண்டும் ஞாபகமாக அந்தக் கதவை சாத்திவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் தானும் கட்டிலில் ஏறிகொண்டார்.

சமையல் அறைப் பக்கம் தான் நேரில் பர்த்து விட்ட அந்த எலியின் நடமாட்டத்தைப் பற்றி, திகிலுடன் அம்புஜம் விவரித்துக் கூறியதை, ஒரு மர்மக் கதை போல அரண்டு மிரண்டபடியே கேட்டுக்கொண்டார், ராமசுப்பு.

பிறகு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாதவராக, தன்னிடம் ஓரளவு ஒட்டுதலாகப் பழகும் பக்கத்து வீட்டுப் பட்டாபியை செல்போனில் அழைத்தார், ராமசுப்பு. 



அது சமயம் தன் குடும்பத்தாருடன் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்குப் பாலாபிஷேகம் செய்யப் போயிருந்தார் பட்டாபி. தனக்கு நேர்ந்துள்ள விபரீதத்தை பட்டாபியிடம் விளக்கிப் பரிகாரம் கேட்கலானார், ராமசுப்பு.

“பூனை ஒன்று வாங்கி வளர்க்கலாம் அல்லது ஏற்கனவே பூனை வளர்ப்பவர்களிடம் வாடகைக்கோ அல்லது ஓஸியிலோ வாங்கி வரலாம். அவ்வாறு செய்தால் பூனை எலியைப் பிடித்துத் தின்று விடும் என்று ஒரு ஆலோசனையும்; எலி பாஷாணம் என்று கடைகளில் விற்கும். அதை வாங்கி சாதத்துடன் மையப்பிசைந்து, ஆங்காங்கே வீடு பூராவும் உருட்டி வைத்து விட்டால், எலி அதை அப்படியே சாப்பிட்டாலும் சாப்பிடலாம்; இறந்து போனாலும் போகலாம்” என்ற மற்றொரு ஆலோசனையும் வழங்கி விட்டு, அபிஷேகம் பார்க்க வேண்டிய அவசர வேலை இருப்பதாகச் சொல்லி, தொடர்பைத் துண்டித்து விட்டார், பட்டாபி.

“சாமியார் பூனை வளர்த்த கதையாகிவிடும். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டே இருக்கும். சகுனத்தடையாகி விடும். அதைக் கைக்குழந்தை போல பராமரிக்கணும். எல்லா இடங்களிலும் மலம் ஜலம் கழித்து அசிங்கம் செய்து விடும். பூனையிலிருந்து ஏதோ ஒரு வித வைரஸ் நோய் பரவுவதாக சமீபத்தில் ஏதோ ஒரு வார இதழில் படித்தேன்” எனச் சொல்லி அந்தப் பூனை வாங்கும் யோசனையை முளையிலேயே கிள்ளி எறிந்தாள் அவரின் மனைவி அம்புஜம். எலி பாஷாணமும் அவளுக்கு சரியாகப் படவில்லை. அதையும் நிராகரித்து விட்டாள்.

“வளவளன்னு நீங்க ரெண்டு பேரும் பேசிண்டே இருக்காமல் சீக்கிரமாக ஏதாவது வழி பண்ணுங்கப்பா .... மத்தியான சாப்பாடே இன்னும் அம்மா தயார் செய்யவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுது” என்றான் ராஜூ.


தொடரும்


எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]

ராமசுப்பு, அம்புஜம், ராஜூ மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த வண்ணம் தாண்டிக் குதித்து, பெட் ரூமை விட்டு மெதுவாக வெளியே வந்து, எட்டி நின்றவாறு மிகவும் உஷாராக சமையல் அறையை ஒரு திகிலுடன் பார்த்து விட்டு, பூட்டிய வீட்டைத் திறந்து வெளியே போய், மீண்டும் வீட்டையும் பூட்டிவிட்டு, ஹோட்டல் ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றனர்.

திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பும் வழியில் சந்தித்த தன் பால்ய நண்பர் பரந்தாமனிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதித்ததில் நல்ல ஒரு தீர்வு கிடைத்தது, நம் ராமசுப்புவுக்கு.

பரந்தாமன் வீடும் பக்கத்திலேயே இருந்ததால், அங்கு போய் அவர் வீட்டுப் பரணையில் (லாஃப்ட்டில்), வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த எலிக்கூடு ஒன்றை வாங்கிக் கொண்டபின், சூடான சுவையான ரோட்டுக்கடை ... மசால் வடை ஒன்றும் வாங்கி, அவரை விட்டே, கைராசி என்ற பெயரில் அதில் பொருத்தித் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

“ஆள் நடமாட்டம் இருந்தால் அந்தப் பக்கம் எலி வரவே வராது, சார். அப்படியே வந்தாலும் நம்மை ஒன்றும் கடித்துக் குதறாது சார். நாம் பயப்படுவது போலவே அதுவும் நம்மைப் பார்த்து பயந்து எங்கேயாவது ஓடி ஒளிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்து, அந்த எலிக்கூடையும் ஒப்படைத்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லி அனுப்பி வைத்தார், பரந்தாமன்.

தேர்தல் வாக்குறுதியை நம்பி நாம் ஓட்டளிக்கச் செல்வது போல, பரந்தாமன் கொடுத்த நம்பிக்கையில் எலிக்கூட்டுடன் அடுக்கு மாடி வீட்டுக்கு விரைவாகச் செல்ல ஆரம்பித்தனர்.

மூன்றாவது மாடிக்குச் செல்ல லிஃப்ட் ஏறியபோது, கூடவே ஒட்டிக்கொண்ட பால்காரர் ஒருவர், “என்ன ஸார் எலிக்கூடு இது? இவ்வளவு அழுக்காக ஒட்டடையுடன் ஒரு வித நாற்றம் அடிப்பதாக உள்ளது. இது போல சுகாதாரமில்லாத எலிக்கூட்டைக் கொண்டுபோய் வைத்தீர்களானால், எலி அந்தப் பக்கமே வராது ஸார். சுத்தமாக சோப்புப் போட்டுக்கழுவி, ஏற்கனவே எலி விழுந்த வாடை எதுவும் இல்லாமல் வைத்தால் தான், டக்குனு வந்து எலி மாட்டிக்கும்” என்று தான் பல நாள் முயன்று, பல நூற்றுக்கணக்கான எலிகள் பிடித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

சரியான நேரத்தில், இந்த ஒரு பக்குவத்தை எடுத்துக்கூறிய அந்தப் பால்காரரை நன்றியுடன் நோக்கிய ராமசுப்பு, அந்தப் பால்காரரை விட்டே எலிக்கூட்டிலிருந்து மசால் வடையை மெதுவாக வெளியே எடுத்துக் கொடுத்து உதவுமாறு வேண்டினார், பிறகு அதே மசால் வடை தேவைப்படலாம் என்ற தொலை நோக்குத் திட்டத்தில்.

பால்காரர் எலிக்கூட்டின் உள்ளே தன் முரட்டுக் கையைவிட்டு வடையைப் பிடித்து வேகமாக இழுத்ததில், மிகவும் மிருதுவான அந்த மசால் வடை, தூள் தூளாகி லிஃப்டினுள்ளேயே சிந்திச் சிதறியது.

“எலிக் கூட்டை சுத்தமாக சோப்புப் போட்டுக் கழுவி விட்டு, வேறு ஒரு புதிய மசால் வடை வாங்கி வைங்க ஸார்” என்றார் மிகவும் அஸால்ட்டாக அந்தப் பால்காரர்.

’ரெண்டு ரூபாய் போட்டு வாங்கிய பெரிய சைஸ் மசால்வடை இப்போது தண்டமாகி விட்டது. அதை வாங்கிய உடன் சூடாக நாமாவது புட்டு வாயில் போட்டிருக்கலாம்’ என நினைத்துக் கொண்டாள் அவரின் தர்மபத்தினி அம்புஜம்.

லிஃப்டினுள் சிந்திச் சிதறிய வடைத்தூள்களை செயலாளரின் மனைவி என்ற முறையில் அவளே சுத்தம் செய்ய வேண்டியதாகி விட்டது, அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.

தொடரும்

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]

ஒரு வழியாக லிஃப்டில் சிதறி இருந்த மசால்வடைத் துகள்களை சுத்தப்படுத்தி விட்டு, அவர்கள் மூவரும் வேண்டா வெறுப்பாக தங்கள் வீட்டை நெருங்கினர்.

வீட்டு வாசலில் பூட்டைத் தன் கையால் பிடித்து இழுத்தபடி, மணச்சநல்லூரிலிருந்து வந்துள்ள அம்புஜத்தின் உடன்பிறப்பு கோவிந்தன் நின்று கொண்டிருந்தான்.

“வாடா .... கோவிந்தா, செளக்யமா? எப்போது வந்தாய்? பாவம் ... ரொம்ப நேரமா வாசலிலேயே நிற்கிறாயா?” என்று தன் உடன்பிறந்த தம்பியை கண்டு உவகையுடன் விசாரித்தாள் அம்புஜம்.

ராமசுப்புவைப் பொறுத்தவரை அவர் மச்சினன் (மச்சினன்=மனைவியின் சகோதரன்) கோவிந்தனைக் கண்டாலே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. முரட்டு மீசை வைத்துக் கொண்டு, கைலியை முழங்காலுக்கு மேல் மடித்துக் கட்டிக்கொண்டு, அகராதித்தனமாக ஏதாவது பேசிக்கொண்டு, வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல், கோவில் மாடு போல சுற்றிக்கொண்டு, எப்பவும் ஒரு பேட்டை ரெளடி போல, அவர் கண்களுக்குத் தெரிபவன். மொத்தத்தில் அவன் ஒரு ஒரு வாய்ச் சவடால் பேர்வழி. அடிக்கடி மணச்சநல்லூரிலிருந்து புறப்பட்டு அக்கா வீட்டுக்கு வந்து டேரா போடுபவன். அவனால் அவருக்கு நேற்றுவரை ஒரு பிரயோசனமும் இல்லை.

ஆனால் இன்று அவரும் அவனை மனதார வரவேற்றார். கோவிந்தனுக்கே அவரின் இந்தச் செயல் ஆச்சர்யமாக இருந்தது.

“கோவிந்தா நீ தான் இதற்கு சரியான ஆளு! நம்ம வீட்டிலே ஒரு எலி புகுந்து அட்டகாசம் பண்ணுது. என்னான்னு கொஞ்சம் பார்த்து விரட்டி விட்டுடு. உன் அக்காளும், மறுமானும் ( மறுமான் = அக்கா பிள்ளை ) ரொம்பவும் பயந்து நடுங்கிப் போய் இருக்கிறார்கள்” என்று, தான் ரொம்ப தைர்யசாலி போலப் பேசினார்.

“எலி தானே ... அது என்ன புலியா ... ஏன் இந்தக் கிலி உங்களுக்கு?” என்று ஒரு வீர வசனத்தைப் பொழிந்து விட்டு ”கவலையே படாதீங்கோ, இன்று அதை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்” என்று தைர்யம் சொன்னான்.

வீட்டைத் திறந்து நால்வரும் உள்ளே போனதும் “சூடா ஒரு காஃபி போடு அக்கா ... அப்படியே ஏதாவது பஜ்ஜியும் கெட்டிச் சட்னியும் பண்ணினாக்கூட இந்த மாதிரி நேரத்துக்கு சாப்பிட ஜோராயிருக்கும்” என்றான், கோவிந்தன்.

“நீ முதலில் எலி எங்கே உள்ளதுன்னு கண்டு பிடிச்சு அதை வெளியேற்ற வழியைப் பாரு ... சமையல் ரூமுக்குப் போகவே உங்க அக்கா பயப்படறா” என்றார் ராமசுப்பு.

சமையல் அறைக்குள் புகுந்து ராக்குகளில் இருந்த அனைத்து சாமான்களையும் ஹால் பக்கம் வெளியேற்றினான் கோவிந்தன். பிறகு உயரமான மர ஸ்டூல் ஒன்று போட்டுக்கொண்டு, உயரத்தில் இருந்த லாஃப்ட்களில் உள்ள அனைத்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள் என எல்லாவற்றையும் எடுத்து, தொப்தொப்பென்று கீழே போட ஆரம்பித்தான். சாமான்கள் உடையுமோ, நசுங்குமோ அல்லது தரையில் புதிதாகப் போடப்பட்ட டைல்ஸ் கற்களில் கீறல் விழுமோ என்ற பயத்தில் ராமசுப்புவே அவனுக்கு கூடமாட உதவி செய்யத் தயாரானார்.

“பார்த்து அத்திம்பேர் (அத்திம்பேர்=அக்காவின் கணவர்)! நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. உங்கள் உச்சந்தலையின் மேல் அந்த எலி எகிறிக்குதித்து, உங்கள் உடம்பெல்லாம் ஊடுருவி, உள்ளங்கால் வழியாகப் பிராண்டிட்டுப் போய் விடப் போகிறது” என்று எச்சரித்தான், கோவிந்தன்.

இதைக் கேட்டதும் ராமசுப்புவுக்கு, நிஜமாகவே அது போல நடந்து விட்டது போல ஒரு பிரமை ஏற்பட்டு, அரண்டு மிரண்டு போய், பெட்ரூம் கதவை சாத்தி விட்டு, ஃபேனைத் தட்டிவிட்டு, கட்டிலில் போய் அமர்ந்தார்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும், அதில் பல நாட்களாகத் தொங்கிக் கொண்டிருந்த கருத்த தடியான ஒட்டடைக்கற்றை ஒன்று அவர் மேல் தொப்பென்று விழுந்ததில், எலியோ என பயந்து போய், கட்டிலிலிருந்து எழுந்த அவர் ஒரு பரத நாட்டியமே ஆடியதில், அங்கிருந்த டீப்பாய் மேல் இருந்த இருமல் சிரப் மருந்து பாட்டில் கீழே விழுந்து, அது உடைந்து அதிலிருந்து கொட்டிய திரவம் அடிபட்ட எலியின் ரத்த ஆறு போலக் காட்சியளித்தது.


 
தொடரும்

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 5 / 8 ]

சமையல் அறையின் எல்லாச் சாமான்களையும் கீழே தள்ளி விட்டு போர்க்களம் போல பரப்பிய கோவிந்தன் ஒரு குச்சியால் நெடுக லாஃப்ட் பூராவும் தட்டிப் பார்த்தான். எலி மட்டும் அவன் கண்களுக்குத் தட்டுப்படவே இல்லை.

வெறுத்துப் போன அவன் “அக்கா, சமையல் ரூமில் அது இல்லை. வேறு எங்கேயாவது தான் இருக்கணும். நீ பஜ்ஜி, சட்னி, காஃபி தயார் பண்ணு. நான் படுக்கை அறையில் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி ராமசுப்பு இருந்த அறைக்குள் புகுந்தான்.

ராமசுப்பு அப்போது தான் உடைந்த சிரப் பாட்டிலைப் பொறுமையாக திரட்டி ஒத்தி எடுத்து, அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து, துணியால் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, தன் கைகளில் க்ளவுஸ் அணிந்து கொண்டு, அங்கிருந்த அட்டாச்டு பாத் ரூமில், தான் இரவல் வாங்கி வந்திருந்த அழுக்கடைந்த எலிக்கூட்டை நன்றாக ஒட்டடைபோகத் துடைத்து, சோப்பு போட்டு நுரை பொங்க தேய்த்து, குழாய் நீருக்கு அடியில் பிடித்த வண்ணம், துணி துவைக்கும் போது சட்டைக் காலர் அழுக்கெடுக்க உபயோகிக்கும் நைலான் ப்ரெஷ் கட்டையால் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய கெட்ட நேரமோ என்னவோ, மிகவும் வயதான அந்த எலிக்கூடு தண்ணீர் பட்டதும், ஒருவித உற்சாகம் அடைந்ததில், பட் ... பட் ... என்று அதிரஸம் போல தனித் தனியாகப் புட்டுக் கொண்டது. கம்பிகள் தனியாகவும், உளுத்துப்போன கட்டைகள் தனியாகவும் உடைந்ததும், நம் ராமசுப்புவுக்கு அழுகையே வந்து விட்டது.

“அத்திம்பேர் .... இந்த உடைந்து போன பாடாவதி எலிக்கூட்டைத் தலையைச் சுற்றி குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு, பெரிய மார்க்கெட்டுக்குப் போய் நல்லதாகப் பார்த்து, புதுசா வேறு எலிக்கூடு வாங்கிட்டு வாங்க” என்று உத்தரவு போட்டான் கோவிந்தன்.

சமையல் அறையில் சிதறிக் கிடந்த சாமான்களை குனிந்து நிமிர்ந்து சரி செய்வதற்குள் இடுப்புப் பிடித்தாற்போல ஆகிவிட்டது, அம்புஜத்திற்கு.

அமர்க்களப்படும் இந்த வீட்டில் இனியும் இருந்தால், நம்மையும் ஏதாவது வேலை ஏவிக்கொண்டே இருப்பார்கள் என்று யூகித்த ராஜூ ட்யூஷன் படிக்கப் போவதாகச் சொல்லி, தன் சைக்கிளில், எங்கேயோ கிளம்பி விட்டான்.

இந்த கோவிந்தன் முகத்திலும், எங்கேயோ ஒளிந்துள்ள அந்த எலி முகத்திலும் மேற்கொண்டு விழிக்கப் பிடிக்காமலும், அமர்க்களப்படும் அந்த வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிடிக்காமலும், எலிக்கூடு புதிதாக வாங்கி வரும் சாக்கில், ராமசுப்புவும், எஸ்கேப் ஆகி பெரிய மார்க்கெட்டுக்குப் போகக் கிளம்பி, ஒரு வழியாக பஸ் ஏறி விட்டார்.

உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க மார்க்கெட் முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துக் கடைசியில் எலிக்கூடுகள் விற்கும் கடையொன்றைக் கண்டு பிடித்து விட்டார், ராமசுப்பு.

“நல்லதா ஒரு எலிக்கூடு கொடுப்பா” என்றார்.

“சுண்டெலியா? நடுத்தர எலியா?  பெருச்சாளியா?” என்றான் அந்தக் கடைக்காரன்.

“இதில் இவ்வளவு வகையறாக்கள் உள்ளனவா!” எலியைக் கண்ணால் கூடப் பார்க்காமல் எலிக்கூடு வாங்க புறப்பட்டது எவ்வளவு ஒரு முட்டாள் தனம் என்பதை நினைத்து வருந்தினார், ராமசுப்பு.
தொடரும்

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]

சுண்டலியா? நடுத்தர எலியா? பெருச்சாளியா? பதில் அளிக்க முடியாமல் மிகவும் குழம்பிப் போன ராமசுப்பு, 

 
“என்னப்பா நீ வெய்யிலில் வந்துள்ள என்னிடம் போய் ”கல்வியா........ செல்வமா... ....... வீரமா.......” என்ற பாட்டுப் போல ஏதேதோ கேள்வி கேட்கிறாய்? ஏதாவது ஒரு எலிக்கூடு கொடுக்க வேண்டியது தானே! என்றார்.

 
“நான் ஏதாவது ஒரு கூடு கொடுத்து அதை நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டு, உங்கள் வீட்டுக்கார அம்மா, உங்களை வெய்யிலில் திரும்பவும் அலைய விடக்கூடாது அல்லவா! அதனால் தான் கேட்டேன்” என்று சொல்லி, சுண்டலி பிடிக்கும் கூடு ஒன்றையும், நடுத்தர எலி பிடிக்கும் கூடு ஒன்றையும் கொண்டு வந்து காட்டினான்.

 
”இந்த மிகச்சிறிய கூட்டுக்குள் கையே நுழையாது போலிருக்கே” என்றார் ராமசுப்பு.
 
”சுண்டெலிகள் பிடிக்க இது தான் சரியான கூடு சாமி. சின்னக் கைகள் உள்ள யாராவது ஒரு குழந்தையை விட்டு உள்ளே தொங்கும் கம்பியில் ஒரு சின்ன வடையைச் சொருகிவிட்டால் போதும், ஒரே நேரத்தில் அரை டஜன் சுண்டெலிகள் க்ரூப் க்ரூப்பாக வந்து கப்புகப்புன்னு மாட்டிக்கும். பின் புறம் கம்பிகள் நெருக்கமாக உள்ளதால் வெளியே அவற்றால் தப்பிச் செல்லவும் முடியாது” என்றான்.

 
சற்றே பெரியதான மற்றொன்றை எடுத்து நோட்டம் விட்டார் ராமசுப்பு. அதில் தன் கை சுலபமாக உள்ளே நுழையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவருக்கு. இருந்தாலும் கையை உள்ளே விட்டுப் பார்க்க பயம் அவருக்கு, உள்ளே ஏற்கனவே ஏதும் எலி இருந்தால்! என ஒரு வித அச்சம்.

 
”கொஞ்சம் பெரிய சைஸ் எலியென்றால் இதை எடுத்துக் கொள்ளுங்க சாமி. வடையைப் பொருத்தி வைக்க சுலபமாக இருக்கும். ஆனால் பின்புறக் கம்பிகள் நெருக்கமாக இல்லாமல் இருப்பதால், இதில் நுழையும் சுண்டெலிகள் இதிலிருந்து வடையை மட்டும் அழகாக சாப்பிட்டு விட்டு, சுலபமாக கொல்லைப்புறம் உள்ள கம்பி இடுக்குகள் வழியாகத் தப்பித்து விடும், சற்று பெரிய எலியாக இருந்தால் “விண்டோ” வழியாக வேடிக்கைமட்டும் பார்க்கும், ஆனால் தப்பித்துச் செல்லவே முடியாது” என்றான்.

 
“பெருச்சாளின்னு ஏதோ சொன்னாயே, அதற்கென்று ஏதாவது தனிக் கூடு உள்ளதா, அல்லது இதிலேயே அதுவும் மாட்டிக் கொண்டு விடுமா ? என மிகுந்த ஆவலுடன் கேட்டார். 

 
பெருச்சாளிக்கென்று இது போல தனியாக எதுவும் கூடு நம்மிடம் கிடையாது சாமி. அது பொதுவாக வீட்டுக்குள் வந்து தொந்தரவு கொடுப்பது கிடையாது. ரோட்டில் ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போல சாக்கடையில் வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டே இருக்கும்.

 
பெரிச்சாளிகளை பொதுவாக பெரிய கற்களாலும், கட்டையாலும் அடித்து காலி செய்து விடுவார்கள். அல்லது ஸ்ப்ரிங் ஆக்‌ஷனுடன் கூடிய எலிப்பொறி வைத்துப் பிடிப்பார்கள். அதனுடைய உடம்பு வெயிட் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா போன்ற ஸ்பீடுக்கு, இது போன்ற எலிக்கூடுகளை பெரிச்சாளி பிடிபடும் என்று நினைத்து வைத்தால் அந்தக் கூட்டையே வடையுடன் அலாக்காக தள்ளிக்கொண்டு (தூக்கிக்கொண்டு) போய்விடும். 

 
இந்தப் பெரிச்சாளிகள் என்பவை கிராமப்புற வீடுகள், கொல்லைப்புறம் போன்றவற்றிலும், நகர்புற சாக்கடைகளிலும் தான் அதிகமாக நடமாடும். ஆள் நடமாட்டமில்லாமல் உள்ள வீடுகளில் தரையில் மண்ணைத் தோண்டி பெரிய பெரிய குழிகள் (எலி வங்குகள்) பறித்து வீட்டையே நாசமாக்கி விடும்;

 
உங்க வீட்டு எலிகள் சுண்டலியா, நடுத்தர எலியா, பெருச்சாளியா என்று, இதுவரை எதுவும் சொல்லாமலேயே இருக்கிறீர்களே! என்று மீண்டும் கேட்கலானார் அந்தக் கடைக்காரர்.

 
தன் ஞானசூன்யத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ”சரிப்பா நடுத்தர சைஸ் எலி பிடிக்கும் கூடே கொடுப்பா” என்றார்.

 
“இது போன்ற சைவக்கூடு போதுமா? அல்லது அசைவக்கூடு கொடுக்கட்டுமா சாமி?” என்ற தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ராமசுப்புவை மேலும் ஸ்தம்பிக்க வைத்தான். இது என்னடா தொல்லை என்று நினைத்து, அவன் என்ன கேட்கிறான் எனப் புரியாமல் அவனிடமே விளக்கம் கேட்டார் ராமசுப்பு.

 
“இப்போது நான் காட்டிய சைவக்கூடு என்றால் எலிக்கும் எலிக் கூட்டுக்கும் சேதாரம் இல்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சா முறையில் அழகாகப் பிடித்து அதன் பிறகு அவரவர் விருப்பப்படி, தண்ணீர் வாளியில் அமுக்கியோ, ஒரே சுழட்டாக சுழட்டி சதிர்க்காய் போல அடித்தோ, சாக்குப்பை ஒன்றுக்குள் ஓடுமாறு கூட்டைத் மெதுவாகத் திறந்து விட்டு, பிறகு சாக்குப்பையின் வாயை இறுக்கிக் கட்டி, சாக்குப்பையை தரையில் சாத்து சாத்து என்று சாத்தியோ கொன்று விடலாம்.
  
 
ஜீவகாருண்யம் மிகுந்தவராக இருந்தால் அதைக் கூட்டோடு எடுத்துச் சென்று வேறு ஏதாவது நமக்கு வேண்டப்படாதவர் குடியிருப்புப் பகுதியில் விட்டுவிட்டு வந்தால், அது அங்கு நல்ல வேலை வாய்ப்பைத் தேடிப் பிழைத்துக் கொள்ளும், நம் நாட்டு இளைஞர்கள் வெளி நாட்டுக்கு வேலை வாய்ப்புத் தேடி செல்வது போல.
  
 
ஒரு சிலர் பூனை மீது மட்டும் ஜீவகாருண்யம் கொண்டு, அதன் பார்வை படும்படியாக இந்த எலிக்கூட்டை திறந்து விடுவார்கள். அந்தப் பூனை ஒரே பாய்ச்சலில் எலியைப்பிடித்து கவ்விச் சென்று கபளீகரம் செய்துவிடும்; ஆனால் அசைவக்கூடு என்றால் அப்படி இல்லை” என்று சற்றே சஸ்பென்ஸ் கொடுத்தார், அந்தக் கடைக்காரர். 

 
தான் சைவமாக இருந்தாலும், வந்தது வந்தோம் அசைவக்கூடு எப்படியிருக்கும் என்பதைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அதையும் காட்டச் சொல்லி வேண்டினார். 

 
அவன் காட்டிய அந்த அசைவக்கூட்டைப் பார்த்த ராமசுப்புவுக்கு திருச்சி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸுக்கு எதிர்புறம் பிரம்மாண்டமாக உள்ள மெயின்கார்ட்கேட் ஆர்ச் வளைவு தான் ஞாபகத்திற்கு  வந்தது.   மேலும் அந்தக்கூடு என்னவோ ஆடை ஆபரணங்கள் ஏதும் இல்லாமல் அம்மணமாக இருப்பது போலத் தோன்றியது. இந்த வெட்ட வெளியான அமைப்பில் எப்படி ஒரு எலி சிக்க முடியும்? என்று யோசித்து சிண்டைப் பிய்த்துக் கொண்டார். 

 
”இதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், சாமி. கொஞ்சம் அசந்தாலும் ஸ்பிரிங் ஆக்‌ஷன் நம் கை விரல்களைப் பதம் பார்த்து விடும். ஆனால் இதில் மாட்டிய எலி தப்பிக்கவே முடியாது. ஒரே ... அடி, எலியின் கழுத்தில் சரியாக அடிக்கும்; தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். தலை தனி உடல் தனியாக தொங்க ஆரம்பித்து விடும். க்ளீன் பெளல்ட் ஆகி ரத்தம் கக்கி செத்துவிடும்” என எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்கியவன் போல ஒரு பெரிய பிரசங்கம் செய்தான். அந்தக் கடைக்காரன்.

 
முடிவாக, நடுத்தர சைஸ் எலி விழக்கூடிய சைவக் கூட்டிலேயே இரண்டு கொடுப்பா” என்றார். பரந்தாமனிடம் இரவல் வாங்கிய எலிக்கூட்டுக் கடனை அடைத்து விட பரந்தாமன் வீட்டுக்குப் பயணமானார். 

புதிய கூட்டை ஒப்படைத்து விட்டு, பழையகூட்டுக்கு நேர்ந்த கதியை சுருக்கமாக எடுத்துரைத்தார்.  

“என்ன தான் இது புதிய கூடாக இருந்தாலும், நாங்கள் உங்களிடம் கொடுத்தது பல தலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு. அதைப்போய் இப்படி அநியாயமாக உடைத்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே?” என மிகவும் வருத்தத்துடன் கூறினாள், பரந்தாமனின் மனைவி. 

தொடரும்

'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]

பரந்தாமனுக்கு தரவேண்டிய எலிக்கூட்டுக் கடனை ஒருவழியாக அடைத்து விட்டோம் என்ற திருப்தியுடன், புத்தம் புதிய மற்றொரு எலிக்கூட்டுடன் பரந்தாமன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தன் வீட்டுக்குச் செல்லும் வழியில், இரண்டு டஜன் மசால் வடைகள் மறக்காமல் வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.

சூடாக பஜ்ஜி போட்டுத்தா அக்கா என்று தொடர்ந்து படுத்தி வரும் கோவிந்தனுக்கும் தின்னக் கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில்.

வழியில் ட்யூஷன் முடிந்து இப்போது தான் வருவதாகச் சொல்லி, ராஜூவும் தன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டும்,  எலிப் பிரச்சனை விஷயமாக அப்பாவுடன் பேசிக்கொண்டும் வந்த ராஜுவுடன், ராமசுப்பு தன் வீட்டை அடையும் போது இரவு மணி ஏழாகி விட்டது.

“வாங்கோ அத்திம்பேர், வீட்டிலே எலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நன்றாக அலசிப் பார்த்து விட்டேன். கவலைப்படாமல் சாப்பிட்டுப் படுங்கோ. நாளைக்குக் காலையிலே அக்காவையும் ராஜூவையும் கூட்டிண்டு மணச்சநல்லூர் போகலாம்னு இருக்கிறேன்” என்றான் கோவிந்தன்.

 
மோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.

எதற்கும் இருக்கட்டும் என்று புதிய எலிக்கூட்டை மசால் வடையுடன் தயார் நிலையில் சமையல் அறையின் ஒரு ஓரமாக, கோவிந்தனை விட்டே வைக்கச் சொன்னார்.  அவன் சாப்பிடவும் ஒரு அரை டஜனுக்கு மேல் வடைகள் கொடுத்தார்.
தம்பி கோவிந்தனை பூனைப் படைத் தளபதி போல தன்னருகிலேயே பாதுகாப்புக்காக நிற்க வைத்துக்கொண்டு, எலி பயம் ஏதுமின்றி, இரவு சமையலை ஒரு வழியாக முடித்திருந்தாள், அம்புஜம்.

அனைவரும் சாப்பிட்டு அலுப்புடன் படுத்தனர். ராமசுப்புவுக்கு மட்டும் சரியாகவே தூக்கம் வரவில்லை. ஏதேதோ சொப்பனங்கள் வேறு வந்தன.
முதன் முறையாக தன் உள்ளங்காலில் யாரோ சொரிவது போலத் தோன்றி திடுக்கிட்டு எழுந்தார். பிறகு சீப்பை எடுத்து தானே தன் கையால் நன்றாகவே சொரிந்து கொண்டு படுத்துக்கொண்டார்.

இரண்டாவது முறை தன் தலையணிக்கும், தலையணி உறைக்கும் இடையில் ஏதோ ஊடுருவிச் சென்றது போல ஒரு உணர்வு.  மீண்டும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.

ராமசுப்புவின் தலை மட்டும் தரையில் இருந்தது, தலையணியைக் காணோம்.  தன் தலையணியை தரதரவென்று எலி இழுத்துப்போய் இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம் வந்தது அவருக்கு.

எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, தன் தலையாவது தப்பியதே என்று நினைத்து, வலது கையை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்து விட்டார்.

அவர் வைத்திருந்த தலையணியை உருவி கோவிந்தன் தன் தொடைக் கிடுக்குகளுக்கு அண்டக் கொடுத்திருந்ததை, இருட்டில் அவரால், சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.
மூன்றாம் முறை, சுவற்றில் ஆணியில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஏதோவொரு மாதக் காலண்டர் ஃபேன் காற்றில் விசிறியடித்து கீழே விழுந்ததில், திடுக்கிட்டு எழுந்தார்.

”அம்புஜம், அம்புஜம் ஏதோ சப்தம் கேட்டதே கவனித்தாயா?”என்றார்.
அசந்து தூங்கிக்கொண்டிருந்த அம்புஜம், இவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தூக்கத்தில் அவளை எழுப்பினால் என்ன நடக்கும் என்பது அவர் நன்றாகவே அறிந்திருந்ததால் கப் சிப் என்று தானும் சற்று கண்ணை மூடித் தூங்கலானார்.

நான்காவது முறையும் திடுக்கிட்டு எழுந்தார். இப்போது ஏதோவொரு விசித்திர சப்தம் தொடர்ந்து கேட்கலானது.

நிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார்.   அது தன் மச்சினன்கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.
மறுநாள் சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு ராமசுப்பு ஆபீஸுக்குக் கிளம்பும் போதே, மற்ற மூவரும் மணச்சநல்லூருக்குக் கிளம்பினர். அம்புஜமும் ராஜூவும் திரும்பி வர எப்படியும் ஞாயிறு இரவு ஆகிவிடும் என்பது அவருக்கும் தெரியும். 

ராமசுப்புவுக்கு ஆபீஸிலும் வேலை ஓடவில்லை. வீட்டில் எலி ஓடுமோ என்ற கவலை. தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கோவிந்தனும் போய் விட்டானே என்ற பயம் வேறு. 

பக்கத்து சீட்டுக்காரரிடம் செய்தித்தாள் வாங்கி ராசி பலன் பகுதியை நோட்டம் விட்டார். அவர் ராசிக்கு “சனி வக்ரமாகவும் உக்கிரமாகவும் இருப்பதால் எந்த ரூபத்திலாவது வந்து தொல்லை கொடுப்பார்; (எலி ரூபத்திலோ என்று நினைத்து பயந்து போனார்) இந்த ராசிக்காரர்கள் பலருக்கும் பண விரயம் ஏற்படும். சிலருக்கு மட்டும் எதிர்பாராத வகையில் அண்டை அயலாரின் பாராட்டு மழை பொழியும்” என சம்பந்தா சம்பந்தம் ஏதுமில்லாமல் ஏதேதோ போட்டிருந்தது.

ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ்ஸைப் பிடித்தார். வழியில் மாம்பழச்சாலை அருகே பஸ் நின்றதும், ராமசுப்புவின் கண்களில் பட்டது அந்தக் காட்சி. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் வரை பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய அவரை, அங்கேயே மாம்பழச் சாலையிலேயே இறங்கிக்கொள்ளும் படிச்செய்தது,  அவர் கண்ட அந்த அபூர்வமான அதிஸயக் காட்சி.

தன் மச்சினன் கோவிந்தனைப் போலவே ஒருவன். அவன் பெயர் ரங்கனாம். பெரிய எலி ஒன்றைத் தலைகீழாகத் தொங்க விட்டபடி, தன் கை விரல்களாலேயே அதன் வாலைப் பிடித்தபடி, சிறுவர்கள் பலர் அவனைப் புடை சூழ, குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து, அப்படியே பிரமித்துப் போய், அவனைப் பின் தொடர்ந்து ராமசுப்புவையும் செல்ல வைத்தது.

அந்த ரங்கனுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு அட்வான்ஸ் தொகையையும் அவனுக்கு அளித்து விட்டு, தன் வீட்டு விலாசத்தையும் அவனிடம் குறித்துக் கொடுத்து விட்டு, வீடு திரும்ப எண்ணியவருக்கு ஒரு சிறு சபலம் ஏற்பட்டது. 

அம்புஜம் ராஜூ யாரும் இல்லாத இன்றைய இரவு தனிமையில் இனிமை காண வேண்டி, உற்சாக பானம் ஒரு குவார்ட்டர் வாங்கி அடித்து விட்டு, ஹோட்டலில் திருப்தியாக ஸ்பெஷல் ரவாதோசை, ஆனியன் ஊத்தப்பம் என்று டிபனும் வாங்கி சாப்பிட்டு விட்டு, மசாலாப்பால் ஒன்றும் சூடாக அருந்தி விட்டு, ஒரு வழியாக ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பினார்.

உண்மையிலேயே அந்த உற்சாக பானம் அன்றிரவு, அவருக்கு பயத்தை நீக்கி தன்னம்பிக்கை அளித்ததுடன், நல்ல நிம்மதியான உறக்கத்தையும் அளித்தது.
 தொடரும்

இப்போது நாம் படிக்கப்போவது
இறுதிப் பகுதி 8

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு மாம்பழச்சாலை ரங்கன், தன் வழக்கம்போல பட்டைசாராயத்தை கட்டிங் ஏற்றிக்கொண்டு ஒருவித போதையுடன் ஆனால் மிகவும் ஸ்டெடியாகவே,  கையில் ஒரு  கனத்த  மஞ்சள் பையுடன் ராமசுப்பு குடியிருக்கும் ‘எலிஸபத் டவர்ஸ்’ அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டில், லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடி போய், ராமசுப்பு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான். 

கதவைத் திறந்த ராமசுப்புவுக்கு, எலி செத்த வாடை, குடலைப் பிரட்டி, குமட்டிக்கொண்டு வர ஆரம்பித்தது.தன் மூக்கை மட்டும் இறுகப் பொத்தியபடி , ஜாஸ்மின் ஃபாரின் செண்ட் பாட்டிலை எடுத்து பன்னீர் தெளிப்பது போல ரங்கன் மீதும், ரங்கன் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையின் மீதும், தன் மீதும் மாற்றி மாற்றித்  தெளித்து தொடர்ந்து ஸ்ப்ரே செய்து கொண்டே இருந்தார்.

பிறகு, “வாப்பா, ரங்கா ..... இப்படி ஓரமாக உட்கார்” என்று சொல்லி விட்டு, வாட்ச்மேனை அவசரமாக அழைத்து, அனைத்து வீடுகளுக்கும் அவசரச் செய்தியொன்று சொல்லி அனுப்பி, அனைவரையும் வெளியே வரவழைத்தார்.

செய்தி கேட்ட அனைவரும், மிகுந்த ஆச்சர்யத்துடன், அவரவர் வீட்டிலிருந்து வெளியே வந்து, குழந்தை குட்டிகளுடன் ஆங்காங்கே ஒவ்வொரு தளத்தின் படிக்கட்டுகளிலும் விரைந்து வந்து கூடி நின்றனர்.

ரங்கன் தன் ஒப்பந்தப்படி மிகச்சரியாக 9 மணிக்கு, தான் கொண்டுவந்திருந்த செத்த எலியை, தன் மஞ்சள் பையிலிருந்து வெளியே எடுத்து தன் கையாலேயே அதன் வால் பகுதியைக் கெட்டியாகப் பிடித்து தலை கீழாக அந்த செத்த எலியைத் தொங்கவிட்டு ராமசுப்புவின் வீட்டிலிருந்து, மிகவும் மெதுவாக அடிமேல் அடி வைத்தபடி, சவ ஊர்வலம் போலப் புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக ஒவ்வொரு மாடிப்படிகளாக மொத்தம் சுமார் 21x3=63 படிகள் இறங்கிச் சென்றான்.


ராமசுப்புவும் அவனைப் பின்தொடர்ந்து,  ஒவ்வொரு குடுத்தனக் காரர்களையும் ஒரு வித பெருமிதத்துடன் பார்த்தவாறே செல்லலானார்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த அனைவரும், தங்கள் குழந்தை குட்டிகள் சகிதம்,  அந்த முரட்டு  எலியின் இறுதி ஊர்வலத்தில் மகிழ்வுடன் கலந்து கொள்ள ராமசுப்புவைப் பின் தொடர்ந்து சென்றனர். 

தூக்கிச் செல்லும் செத்த எலியைப் பார்த்த அனைவருக்கும், அது என்கெளண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் ரெளடியைப் போலக் காட்சியளித்து.

தெருவோரம் இருந்த குப்பைத் தொட்டியொன்றில் அதைப்போட்டு நல்லடக்கம் செய்துவிட்டு, ராமசுப்புவிடம் விடைபெற்று, புறப்படத் தயாரானான், ரங்கன்.  

ரங்கனுக்கு தன் சட்டைப்பையிலிருந்து சர்வ அலட்சியமாக ஒரு ஐம்பது ரூபாய் சலவை தாளை, பலரும் பார்க்கும் வண்ணம் எடுத்து நீட்டினார், ராமசுப்பு.

ஆஹா, நம் அடுக்கு மாடிக் குடியிருப்பில், இதுவரை அட்டகாசம் செய்து வந்த முரட்டு எலியை ‘எலி பிடிக்கும் எக்ஸ்பர்ட்’ ஒருவரை பிரத்யேகமாக வரவழைத்து, மிகவும் லாவகமாகப் பிடித்து, அடித்துக் கொன்று, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த, செயலாளர் ராமசுப்புவை அனைவரும் உளமாறப் பாராட்டினர். 

அன்று அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்து, அதை நிறைவேற்றக் காரணமாய் இருந்தவர்கள் கூட, இன்று அவரைக் கைகுலுக்கிப் பாராட்டி, தங்களின் அன்றைய அவசரச் செயலுக்கு மன்னிப்பும் கேட்டனர். அண்டை அயலாரின் பாராட்டு மழையில் நனைந்தவாறே வீட்டுக்குத் திரும்பினார் ராமசுப்பு.

கதவைத் திறந்ததும், டைனிங் டேபிளிலிருந்து இரண்டு மிகச்சிறிய சுண்டலிகள் தாவிச் சென்று அருகே இருந்த ஜன்னல் கம்பிகள் வழியே வெளியில் தப்பியோடியதைத் தன் கண்களாலேயே பார்த்த அவருக்கு தலையைச் சுற்ற ஆரம்பித்தது. 

மிகவும் பயத்துடன், மிகப்பெரிய துணிக் குடையின் கைப்பிடி வளையப் பகுதியை மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிள் அருகே இருந்த ஜன்னல் கைப்பிடியில் நுழைத்து எட்டி நின்றவாறே, ஜன்னல் கதவுகளை இழுத்துப் பளார் என்று சாத்தி விட்டு, வீட்டையும் பூட்டிவிட்டு, தெருவோரமாக வந்து நின்று யோசித்தார்.

அன்று தன் வீட்டுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு முரட்டுப் பெண் எலியாக இருக்குமோ! அதுதான், ஒருவேளை பிரஸவித்து இந்த இரண்டு குட்டிகளைப் போட்டிருக்குமோ! 

அல்லது ஒருவேளை இன்னும் அதிகமான குட்டிகள் போட்டு அவைகளும் ஆங்காங்கே சுற்றித்  திரிகின்றனவோ, என நினைத்து அஞ்சி நடுங்கலானார். 

தன் ’எலிஸபத் டவர்ஸ்’ குடியிருப்புப் பகுதி மீதே ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது அவருக்கு.

எது எப்படி இருப்பினும், இந்த எலிகள் நடமாடும், எலிஸபத் டவர்ஸ்ஸில் இனியும் நாம் குடியிருப்பது நல்லதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார், ராமசுப்பு.

கூடிய சீக்கரம் இந்த அடுக்குமாடி வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு, தன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள செயலாளர் பதவியையும் துச்சமெனக் கருதி, துறந்துவிட்டு, ’எலி வலையானாலும் தனி வலையாக’ வேறு எங்காவது தனி வீடு பார்த்துக் குடியேறுவது என்று அதிரடியாக முடிவெடுத்தார், ராமசுப்பு.

அதுவரை எங்கே தங்குவது, எப்படித் தங்குவது என்று குழம்பியவாறே, தானும் தன்னையறியாமலேயே மணச்சநல்லூரில் உள்ள தன் மாமனார் வீட்டுக்குச் செல்லலானார், மைத்துனர் ”திருவாளர் கோவிந்தன்” அவர்களை மீண்டும் கையோடு அழைத்து வந்து, தன்னுடனேயே  நிரந்தரமாகத் தங்க வைத்துக்கொள்ள.

-o-o-o-o-o-o-o-

[இந்த நகைச்சுவைச் சிறுகதை 14.11.2007 மற்றும் 21.11.2007 தேதியிட்ட ”தேவி”  
 வார  இதழ்களில் {தீபாவளி மலர்}  இரு வாரத் தொடராகவெளியிடப்பட்டது ] 



இறுதியாக ஓர் எச்சரிக்கை

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி விட்டதால், எழுத்தாளர் என்ற முறையில் நமது ஜனநாயகக் கடமையை, மற்ற பொது ஜனங்கள் போல ஓட்டளிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், வேறு ஏதாவது ஒரு முறையில், அனைவருக்குமே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்கு திடீரென்று ஏற்பட்டுள்ளதால் பிறக்க உள்ளது ”மூ.பொ.போ.மு.க.” என்ற புதிய கட்சி.

அது என்ன புதிய “மூ.பொ.போ.மு.க”? இப்போது ஏற்கனவே ஏராளமாகவே உள்ள ”மு.க.” வில் முடியும் கட்சிகள் போதாதா என நீங்கள் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது.

”மூ.பொ.போ.மு.க” பற்றிய எல்லா விபரங்களும், என்னுடைய அடுத்த நகைச்சுவைத் தொடரில் தான் தெரிந்து விடுமோ உங்களுக்கு!

அதுவரை ஆவலுடன் காத்திருங்கள்.  ஆனால் இப்போதே சிரிக்கத் தயாராகி விடுங்கள்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன்