முன்னெச்சரிக்கை முகுந்தன்
நகைச்சுவைச் சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
ஐம்பது வயதைத் தாண்டிய முகுந்தனுக்கு சற்று பெருத்த சரீரம். நடந்தாலே பெருமூச்சு வாங்கும். சுகர் பிரஷருடன் சமீபகாலமாக சற்று ஞாபக மறதியும் சேர்ந்து கொண்டுள்ளது. எப்போதுமே எதிலுமே ஒருவித படபடப்பு. எதையாவது மறந்து விட்டு விடுவோமோ என்று முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.
ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது அலுவலக அடையாள அட்டை, வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட.
ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே கொடுத்திருந்தனர்.
பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு என்று நீங்கள் யோசிப்பதும் நியாயமே. அது ஒரு பெரிய கதை.
ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய அவருக்கு, அன்றொரு நாள் போதாத காலம். இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன.
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து காவிரிக்குப்போகும் வழியில் தான் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அமைந்துள்ளது.
அன்று சனிக்கிழமை. அரை நாள் மட்டுமே ஆபீஸுக்குத் தலையைக் காட்டிவிட்டு, சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டார், முகுந்தன்.
மறுநாள் காலை ஆறரை மணிக்கு திருச்சி ஜங்ஷனிலிருந்து புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலைப்பிடித்து சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம் அவருக்கு.
ஞாயிறு மாலை அவர் பிள்ளைக்கு சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் பார்த்து விட்டு வர ஏற்பாடு. அவரின் மனைவியும் மகனும் ஏற்கனவே சென்னை பெரம்பூரிலுள்ள இவரின் மைத்துனர் வீட்டுக்குப்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன.
முகுந்தனுக்கு வேண்டிய துணிமணிகள், மருந்து மாத்திரைகள், முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் முதலியன அனைத்தும் ஒன்று விடாமல், அவர் மனைவி ஏற்கனவே ஒரு பெட்டியில் ரெடி செய்து வைத்திருந்தாள்.
அவற்றையெல்லாம் ஒரு செக்-லிஸ்டு போட்டுவிட்டு, ஒருமுறை சரி பார்த்துவிட்டு, ஹோட்டலிலிருந்து வரவழைத்த ஸ்பெஷல் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தவர், நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.
ஜன்னல் வழியே மழைச்சாரல் பட்டு, திடீரென்று கண் விழித்த முகுந்தனுக்கு ஒரே அதிர்ச்சி. மணி 5.30 ஆகிவிட்டது. வெளியே மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மேக மூட்டமாக எங்கும் ஒரே இருட்டு. மின்னலுடன் கூடிய பலத்த இடிகள் வேறு பயமுறுத்தி வருகிறது. மின்வெட்டுக்கூட ஏற்படக்கூடிய சூழ்நிலை.
அவசர அவசரமாக பாத்ரூம் போய்விட்டு , பல் தேய்த்து முகம் கழுவி, துண்டு ஒன்றால் துடைத்துக்கொண்டு, மெயின் ஸ்விட்சை ஞாபகமாக ஆஃப் செய்துவிட்டு, வீட்டைப்பூட்டிக்கொண்டு, பூட்டை நன்கு இழுத்துப்பார்த்து விட்டு, காலில் செருப்பு, ஒரு கையில் பெட்டி, மறு கையில் குடை+டார்ச் லைட்டுடன், லிஃப்ட் வேலை செய்யாத எரிச்சலில் படியிறங்கி ரோட்டுக்கு வந்தார்.
“சரியான மழை ... இன்னும் 48 மணிநேரம் தொடருமாம்” யாரோ இருவர் குடை பிடித்த வண்ணம் பேசிச்சென்றது இவர் காதிலும் விழுந்தது.
கனத்த மழையினால் சாலை முழுவதும் சாக்கடை நீரும் கலந்து ஓடிக்கொண்டிருந்ததால் சேறும் சகதியுமாகக் காலை வைக்கவே மிகவும் அருவருப்பாக இருந்தது.
அதிகமாக ஜனங்கள் நடமாட்டமோ, வாகங்கள் தொல்லையோ இல்லை. ஏற்கனவே ஒருமுறை இதே போன்ற நல்ல மழையில், நடுரோட்டில் குண்டும் குழியுமாகத் தேங்கியிருந்த, மழை நீருக்கு அடியில் இருந்த மாட்டுச்சாணத்தில் காலை வைத்து, அது அப்படியே இவரை வழிக்கி விட்டு, சறுக்கி விழச்செய்ததில், உடம்பெல்லாம் சேறும் சகதியுமாகி, வலது தோள்பட்டை எலும்பு நழுவி. பலநாட்கள் அவஸ்தைப்பட்ட அனுபவத்தில், தற்போது மெதுவாக ஊன்றி, அடிமேல் அடிவைத்து, வாஜ்பாய் ஸ்டைலில் நடக்கும் போது, இவர் அருகில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதில் உடனே ஏறிக்கொண்டார்.
மணி இப்போதே 6.10 ஆகிவிட்டது. பல்லாண்டுகளாக நடைபெற்று வரும் **பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**, ஊரைச்சுற்றிக்கொண்டு, திருச்சி ஜங்ஷனுக்குப்போக எப்படியும் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டி எப்படியும் புறப்பட்டு விடக்கூடும். திருச்சி டவுன் ஸ்டேஷனில் இந்த வண்டி நிற்காது. மழை வேறு வலுத்துத் தொல்லை கொடுத்து வருகிறது.
ரிஸ்க் எடுக்க விரும்பாதவராய், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார். நேரம் இருப்பதால் பதட்டம் இல்லாமல், 6.45க்குள் அங்கு போய் செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று நல்லதொரு முடிவு எடுத்தார்.
ஆட்டோ 6.30 க்கே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை அடைந்து விட்டது. முகுந்தனுக்கு ஒரு பெரிய நிம்மதி. சூடான காஃபி ஒன்று வாங்கி மழைக்கு இதமாக அருந்தினார்.
6.45 ஆகியும் இன்னும் இருட்டாகவே சூரிய வெளிச்சம் வராமல் இருந்ததும் அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. பலத்த மழையும் கருத்த மேகமுமே காரணம் என்று நினைத்துக்கொண்டார்.
“சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்? இந்த ப்ளாட்ஃபார்ம் தானே!” என அங்கிருந்த ஃபோர்டரிடம் வினவினார்.
“என்ன சாமீ! ஊருக்குப்புதுசா நீங்கள்? சென்னைப் பட்டணத்திற்குப்போக ராத்திரி பத்தரை மணிக்குத்தான் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் வண்டி இருக்கு. பல்லவனுக்குத்தான் போகணும் என்றால் பேசாமப்போய்ப் படுங்க. நாளைக்குக் காலையிலே 6.45 க்குத்தான் அது வரும்” என்றான்.
அழாக்குறையாக இங்கும் அங்கும் திரும்பிய அவர் கண்களில் பட்டது அந்த ரயில்வே கடிகாரம் 18.50 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டியவாறே.
ராசி பலனில் இன்று சனிக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் என்று போட்டிருந்தது அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது.
கொட்டும் மழையால், பகலில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை மாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையாகத் தோன்றியதால் வந்தக் குழப்பமே இவ்வளவுக்கும் காரணம். எதிலும் ஓரளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது தான்.
ஞாயிறு காலை பிடிக்க வேண்டிய ரிஸர்வேஷன் செய்த வண்டிக்கு, சனிக்கிழமை மாலையே புறப்பட்டுச் சென்றால், யார் தான் என்ன செய்வது?
கொட்டும் மழையிலும், மின்னல் இடியிலும், அவ்வப்போது லேசாகத் தெரியத் தொடங்கிய நிலா இவரைப்பார்த்து கண் சிமிட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
**பாலக்கரை மேம்பாலம் கட்டும் பணிகளால்**
திருச்சி டவுனிலிருந்து திருச்சி ஜங்ஷன் வரை செல்லும் நேர் வழிப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் அடைக்கப்பட்டிருந்த
ஓரிரு வருடங்களில், இந்தக்கதை எழுதப்பட்டது.
இப்போது பாலக்கரைப் பகுதியில் அதுபோன்ற
போக்குவரத்துத் தொந்தரவுகள் ஏதும் இல்லை.
-oOo-
-oOo-















