என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
[சிறு தொடர்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
[சிறு தொடர்] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 4 of 4] நிறைவுப்பகுதி



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

சென்ற வெள்ளிக்கிழமை முதல்
 இன்று திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டுள்ளது.

இன்றுடன் முடிந்துள்ள இந்த 
நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


பகுதி-1 க்கான இணைப்பு:  


பகுதி-2 க்கான இணைப்பு:  


பகுதி-3 க்கான இணைப்பு:  


பகுதி-4

[ நிறைவுப்பகுதி ]


லாரம் மண்டையை உடைப்பது போல அடிக்க ஆரம்பித்தது. 

திடுக்கிட்டு எழுந்தான் மனோ.
பால் காரனையும் காணோம். பஞ்சாயத்தாரையும் காணோம். இதுவரை நடந்த அத்தனையும் கனவு என்பதை உணர்ந்தான்.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்து விடுவதுண்டு. அவன் தந்தை ஒரு சாலை விபத்தில் இறந்து போவது போல கனவு கண்டான். அது போலவே ஒரு வாரத்தில் நடந்து விட்டது.  பிறகு ஒரு முறை அவன் தாய் கிணற்றடியில் வழுக்கி விழுவது போலக் கனவு கண்டான். ஒரே மாதத்தில் அதுபோலவே நடந்து, அவள் படுத்த படுக்கையாகி அடுத்த ஒரு மாதத்தில் போய்ச் சேர்ந்தும் விட்டாள். அன்று முதல் நெருங்கிய சொந்த பந்தங்கள் என்று சொல்லிக்கொள்ள யாருமின்றி, தனி மரமானான் மனோ. 

தன்னுடன் படித்த சகமாணவன் ஒருவன், பள்ளி இறுதித் தேர்வில், மிகவும் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதன் மாணவனாக வருவதாகக் கனவு கண்டான். அதன்படியே அதே மாணவன், மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலேயே முதல் மாணவனாக ஆனான்.

இன்றைய அவனுடைய கனவில் நல்ல வேளையாக அந்தக் கருநாகப்பாம்பு அனுவைக் கடிக்கவில்லை என்ற மன நிம்மதியுடன், பாத் ரூமுக்குக் குளிக்கச் சென்றான். பத்து மணிக்குள் தன்னை ரெடிசெய்து கொண்டு, அனு வீட்டில் ஆஜராகிவிட்டான், மனோ.


இவன் உள்ளே நுழையவும் அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவர்களை வரவேற்ற மனோவுக்கு ஒரே அதிர்ச்சி.

வந்தவன் பெயர் நாகப்பா. தன் நடுத்தர வயது நரைமுடிகளை மறைக்க தலைமுழுவதும் ’டை’ அடித்துக்கொண்டு கருகருவென்று வந்துள்ளான். 

சென்னையில் ஏற்கனவே மனோ தன் சிறுவயதில் தாய் தந்தையுடன் வசித்த பகுதியில், அவன் ஒரு பேட்டை ரெளடி என்று பெயர் பெற்றவன். ஏற்கனவே மனோவுக்குத் தெரிந்தவரை இரண்டு முறை திருமணம் ஆனவன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு பலமுறை கம்பி எண்ணி வந்தவன்.   

அவனுடன் வந்திருப்பவர்களும் அவனுடைய சொந்த தாயோ தந்தையோ அல்ல. எல்லாம் திட்டமிட்ட சதிச்செயலும், ஏமாற்று வேலைகளும், கபட நாடகமும் என்பதை அனுவின் தாயாரைத் தனியே அழைத்துப்போய் மனோ விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டான்.

அனுவின் தாயும் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி, பெண் கொடுக்க சம்மதம் இல்லை எனக்கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

தங்கள் சூழ்ச்சிக்கு பெண் பலியாகாமல் தப்பித்து விட்டாளே என்ற ஆத்திரத்திலும், ஏமாற்றத்திலும் வந்தவன் பெரிதாகச் சத்தம் போட்டான்:

“இந்த ஊமையான செவிடான உங்கள் பெண்ணுக்கு எவன் தாலி கட்டப்போறான்னு நானும் பார்க்கிறேன்; ஏதோ போனாப்போகுதுன்னு பெரிய மனசு பண்ணி, ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுத்து உதவலாம்னு வந்தா, இப்படி மரியாதை தெரியாம இருக்கிறீங்களே!” என்று புலம்பியவாறு புறப்பட்டான்.

அமைதியும், அழகும், அறிவும் நிறைந்த இந்த அல்வாத்துண்டு போன்ற அனுவைக் கட்டிக்கொள்ள எவனுக்காவது கசக்குமா என்ன? இவள்மேல் என் அடிமனதில் குடிபுகுந்து விட்ட அன்பும் காதலும் மாறுமா என்ன? என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான், மனோ.

தன் கனவில் வந்த கருநாகப்பாம்பு தான், இந்த நாகப்பா ரூபத்தில் இப்போது அனுவைக் கொத்த வந்துள்ளது. கனவில் அந்த கருநாகப் பாம்பிடமிருந்து அனுவைக் காப்பாற்றியது போலவே, இப்பவும் இந்த நாகப்பாவிடமிருந்தும் நம் அனுவை எப்படியோ ஒரு வழியாகக் காப்பாற்றி விட்டோம், என மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான், மனோ.

நல்ல நேரத்தில் தெய்வம் போல வந்து தன் மகளின் வாழ்க்கை பாழாகி வீணாகாமல் காப்பாற்றிய மனோவுக்கு அனுவின் தாய் கண்ணீருடன் நன்றி கூறினாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்ட புத்திசாலிப்பெண் அனுவும் கைகூப்பி மனோவை வணங்கினாள்.

தான் கண்ட கனவில் அனு “அம்மா” என்று கத்தியதுபோல, விரைவில் தகுந்த சிகிச்சைகள் மேற்கொண்டால், அவள் வாய் திறந்து பேசவும் வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை டாக்டர் மனோவுக்குத் தோன்றியது.

மனோவின் கனவு என்றுமே பலிக்காமல் இருந்தது இல்லை. அவளை அவன் அலாக்காகக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, பிள்ளைத்தாச்சியான அவளைப் பிரிய மனமில்லாமல், கட்டி அணைத்தவாறு அமர்ந்து கொஞ்சியது உள்பட, நிச்சயம் ஒரு நாள் நடந்தே தீரும், என்ற நம்பிக்கையில் ........ 

மனோவின்  மனசுக்குள் மத்தாப்பூக் கொளுத்தியது போன்றதொரு மகிழ்ச்சி ஏற்பட்டது.   

மறுநாள் அதிகாலையின் அனு போட்டிருந்த இதயம் போன்ற [ஹாட்டீன் வடிவ] கோலத்தில் 



WELCOME ! 
THANK YOU !! 
HAPPY DEEPAVALI !!! 

போன்ற அழகான வார்த்தைகளைப் பார்த்த மனோவுக்கு, அவளின் மனத்திலும் தான் புகுந்து விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது. 


அப்புறம் என்ன! அடுத்த தீபாவளி அனுவுக்கும் மனோவுக்கும் நிச்சயமாகத் தலை தீபாவளியாகத் தானே இருக்கும்!    


நாமும் அவர்களை 
மனதார வாழ்த்திடுவோம்!!



இந்த என் குறுநாவல் முழுவதும் ஒரே பகுதியாக

"வல்லமை" மின் இதழில் 


”தீபாவளி 2011 ஸ்பெஷல்” 


ஆக வெளியிட்டிருந்தார்கள் என்பதையும் 

தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.





 சுபம் 





தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் 


மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 


என் இனிய தீபாவளி


நல்வாழ்த்துகள்.




 



இத்துடன் நம் ’சிறுகதை 


விமர்சனப்போட்டி’க்கான கதைகள்


அனைத்தும் வெற்றிகரமாக 


இனிதே நிறைவடைகின்றன.





of  




இந்த இன்றைய நிறைவுப்பதிவு


இந்த ஆண்டின் 200வது பதிவாக


அமைந்துள்ளதை நினைக்க 


என் மனதுக்கும் 


ஓர் நிறைவாகத்தான் உள்ளது.



 200th Post of 2014 


 








இந்தப்போட்டிகளில் இதுவரை


ஆர்வத்துடன் பங்கு கொண்டு



சிறப்பித்துள்ள 


அனைவருக்கும் 


மீண்டும் என் அன்பான 


இனிய நன்றிகள்.






VGK-40 போட்டியில் 
கலந்துகொள்ள மறவாதீர்கள் !

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!

     




 




VGK-38, VGK-39, VGK-40 ஆகிய


போட்டிகளின் பரிசு முடிவுகள், 


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியல்,


சாதனையாளர்களுக்கான


புதிய கூடுதல் விருதுகள் [பரிசுகள்],


ஒட்டுமொத்த பரிசுப்பட்டியல்


முதலிய பல்வேறு அலசல்கள்


வழக்கம்போல


வெகு விரைவில்


தினமும் ஒவ்வொன்றாக 


வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள் !





தகவலுக்காக


நாளை 21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு ’நேயர் கடிதம்’ வீதம் வெளியிடப்படும்


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.
  



சிறுகதை விமர்சனப்போட்டிகளின்
நிறைவு விழாக் கொண்டாட்டங்களாக 
 அடுத்தடுத்து தினமும் ஏதாவது ஒரு பதிவு 
வெளியாகிக்கொண்டே இருக்கும்.

காணத்தவறாதீர்கள் !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

VGK-40 - மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]



முக்கிய அறிவிப்பு 

இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான 

கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து

சென்ற வெள்ளிக்கிழமை முதல்
 நாளைய திங்கட்கிழமை வரை 
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது

நான்கு பகுதிகளையும் 
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக 
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது. 


விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

இறுதி நாள்: 26.10.2014 
ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 40

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:






மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதைத் தொடர் 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


பகுதி-1 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html

பகுதி-2 க்கான இணைப்பு:  

http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html

பகுதி-3





த்தகைய அழகிய தன் இளம் பெண் அனுவுக்கு வாய் பேசமுடியாமல் உள்ளது என்று தற்செயலாகக் கோயிலில் சந்தித்த அனுவின் தாயார் மூலம் நேற்று கேள்விப்பட்டதும் மனோவுக்கு அதிர்ச்சியாகிப் போனது.

அழகிய அந்த முழுநிலவுக்குள் இப்படியொரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது. இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது என நினைத்துக்கொண்டான்.

இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து, அனுவின் மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்து வந்த ஈடுபாடு சற்றும் குறையாமல், மேலும் அதிகரிக்கவே செய்தது. 

அன்று சனிக்கிழமை. இரவு மணி எட்டு இருக்கும். அனுவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.

“வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம், மாடிப்படிகளில் ஏறி நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தால் நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே” என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக்கீழே போட்டு, அவர்களை அமரச்சொல்லி, மின் விசிறியையும் சுழலவிட்டான், மனோ. 


”தம்பி, நான் வாடகைப்பணம் வசூல் செய்ய வரவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நீங்க ஆபீஸ் டூட்டிக்குப்போக வேண்டியிருக்குமா அல்லது விடுமுறையா எனக் கேட்டுட்டுப் போகலாம்னு தான் நான் வந்தேன்” என்றாள்.

“டூட்டிக்குப் போகணும்னு கட்டாயம் ஏதும் இல்லை. பொழுது போக்கா இருக்கட்டுமே என்று நானாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் போய் வருவது என் வழக்கம். சொல்லுங்கம்மா, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” மனோ மிகுந்த ஆவலுடனும், துடிப்புடனும் கேட்டான். அவனின் அன்புக்குரிய அனுவின் அம்மா அல்லவா அவர்கள்!


“ஆமாம் தம்பி, நீங்க ஒரு உதவி செய்யணும். நம்ம வீட்டுப்பொண்ணு அனுவை பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து, ஆம்பளைத்துணை இல்லாத வீடாப்போச்சு. நீங்க கொஞ்சம் அவங்க வந்து போற சமயம் மட்டும், நாளை காலை பத்து மணி சுமாருக்கு நம்ம வீட்டுக்கு வந்து கூடமாட பேச்சுத்துணையா இருந்துட்டுப்போனீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் தைர்யமா இருக்கும்” என்றாள்.


இதைக்கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒருவித அதிர்ச்சியாகவும் இருந்தது. 


“ரொம்ப சந்தோஷமான சமாசாரம் தான் அம்மா. மாப்பிள்ளைப் பையன் என்ன செய்கிறார்? நம் அனுவைப்பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லி விட்டீர்களா?” மனோ மிகுந்த அக்கறையுடன் வினவினான்.


“சென்னையில் ஏதோ பிஸினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்கு ஒண்ணும் பஞ்சமில்லையாம். கல்யாணத் தரகர் ஒருவர் மூலம் தான் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் இதுவரை நடந்துள்ளது; 

நீங்க தான் தம்பி நேரில் வந்து பேசி முழு விபரம் கேட்டு, நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும். நல்லபடியா முடிஞ்சு, நல்ல இடமாக இருக்கணுமேன்னு ஒரே விசாரமாக இருக்கிறது” என்றாள்.


”சரிம்மா, நீங்க கவலைப்படாம போங்க. நான் நாளைக்கு காலையிலேயே சரியா பத்து மணிக்கு முன்னாடியே வந்துடறேன்” என்று சொல்லி டார்ச் அடித்து கீழே கடைசிபடி வரை கூடவே தானும் சென்று வழியனுப்பி வைத்தான், மனோ.

மனோ ஓட்டலுக்குச் சென்று வழக்கம்போல் இரவு உணவருந்தி விட்டு தன் அறைக்கு திரும்ப வந்து படுத்தும், தூக்கமே வரவில்லை. நெடுநேரம் புத்தகங்கள் படித்தும் எதுவுமே மனதில் பதியவில்லை. மனோவில் மனதில் ஏதோ இனம்புரியாததோர் சோகம் கவ்விக்கொண்டது போல உணரமுடிந்தது. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.




திகாலையில் வழக்கம்போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை. 

அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப்போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப்புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் கலகலப்பாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும், என மனதிற்குள் பிரார்த்தித்தான்.       

தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில், குனிந்த நிலையில் பூமித்தாயைக் குளிப்பாட்டி, மேக்-அப் செய்வது போல், அழகிய தன் கையின் பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து, கோலமிட்டு, கலர் கலரான ஆடைகள் அணிவித்து, பறங்கிப்பூக்களை சூடி மகிழ்கின்றாள் அனு. தன் வீட்டுப் பக்கத்திலிருந்து, நடு ரோட்டுப்பக்கம் போய் அமர்ந்து ஆங்காங்கே [ பூமித்தாயின் உடலில் ] கோலத்தில் டச்-அப் வேறு செய்கிறாள். அவள் இவ்வாறு நடுத்தெருவில் குந்திட்டு அமர்ந்திருப்பது அவளின் வீட்டை நோக்கி.

அவள் வீட்டுக்கு நேர் எதிர்புறம் உள்ள செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் புதர்போன்ற பகுதியிலிருந்து சுமார் ஆறடி நீளமுள்ள கருநாகப்பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப்புறம் நோக்கி சரசரவென்று வந்து கொண்டிருப்பதை மனோ தன் பைனாக்குலர் மூலம் பார்த்து விட்டான். 





அவளின் முதுகுப்புறம் வந்த அந்த பாம்பு அவளைத் தீண்டாமலும், கோலத்தைத்தாண்டாமலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.



 




இதைப்பார்த்து விட்ட மனோவுக்கு பதட்டம் அதிகரித்து, தன் பைனாகுலரை வீசிவிட்டு, வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடோடி வருகிறான். 

அனுவின் பக்க வாட்டில் நெருங்கிய அவன், அவளை அப்படியே அலாக்காகத்தூக்கிச் சென்று, அவள் வீட்டு வாசல் பக்கம் நின்று அவளை அப்படியே திருப்பி, படமெடுக்கும் அந்தப் பாம்பைப் பார்க்கச் செய்கிறான்.

திடீரென்று ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப்பிடித்து தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு கருநாகம் தீண்ட இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக தன் வாய் திறந்து “அம்மா” என்று அலறிக் கத்திவிட்டாள்.

அவளை அது சமயம் வாய் திறந்து பேச உதவிய அந்தப் பாம்பும், தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல தான் வந்த வழியே திரும்பிச்சென்று, எதிர்புறம் இருந்த செடி கொடிகளுடனான புதர் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.


டாக்டர் மனோவுக்கு அந்தக் கடிக்க வந்த பாம்பை விட, இதுவரை வாய் பேச முடியாத குறையுடன் இருந்த அனு, தன் வாய் திறந்து ”அம்மா” என்று அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் “ஹை..ய்..ய்..ய்..யோ” என அவளைப் பார்த்து கத்திவிட்டான்.

காலை வேளையில் இவர்கள் எழுப்பிய இந்தச் சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது. 

நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை, அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை நாம் சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் என அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.

இதில் சம்பந்தப்பட்ட ’அனு’வாலும் வாய் திறந்து உண்மையைப் பேசமுடியாத நிலை. அந்தப் பாம்பாலும் பஞ்சாயத்தில் சாட்சி சொல்ல வரமுடியாத நிலை. 

’அனு’வைக் கட்டிப்பிடித்து மனோ தூக்கியதை மட்டும், அங்கே அகஸ்மாத்தாக வந்த பாக்கெட் பால் போடுபவன் ஒருவன் பார்த்துவிட்டான். அவனே இதில் மனோவுக்கு எதிரான வில்லனாகவும், கண்ணால் சம்பவத்தை நேரில் கண்ட முக்கியமான சாட்சியாகவும் ஆனதால், பஞ்சாயத்தில் இவ்வாறு ஒரு மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.


பஞ்சாயத்தாரின் தீர்ப்பினைக்கேட்ட மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது. 

அதைவிட கொடுமை ..... கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.


தொடரும்



     



/ இந்தக்கதையின் தொடர்ச்சி -
இறுதிப்பகுதி நாளை வெளியாகும் /

காணத்தவறாதீர்கள் !

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !!

இதுவே இந்தப்போட்டியில்
கலந்துகொள்ளத் தங்களுக்கான 
இறுதி வாய்ப்பு !!!

    





தகவலுக்காக


 

 


VGK-38 - மலரே ..... குறிஞ்சி மலரே !
விமர்சனப்போட்டி பரிசு முடிவுகள்
25.10.2014 சனிக்கிழமை
முதல் வெளியிடப்படும்.

21.10.2014 முதல் 24.10.2014 வரை
தினமும் ஒரு ’நேயர் கடிதம்’ வீதம் வெளியிடப்படும்


 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்