என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 15 டிசம்பர், 2011

தேடி வந்த தேவதை !


தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 1 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-








"மணமகள் தேவை” என்ற பகுதியில் பத்திரிகையில் வந்த அந்த விளம்பரத்தைப் படித்த சுமதிக்கு ஒருவித வியப்பாகவும், விசித்திரமாகவும் தோன்றியது. அதே சமயம் தானே ஏன் தன்னை அந்த விளம்பரதாரருக்கு அர்ப்பணிக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது.

24 வயதான சுமதி, நன்கு படித்தவள். ஓரளவு சராசரிக்கு மேலேயே நல்ல அழகானவளும் கூட. மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவ மனையில், நர்ஸ் ஆக வேலையும் பார்த்து வருபவள்.

நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பம். தனக்குக்கீழ் அடுத்தடுத்து வயதிற்கு வந்த நான்கு தங்கைகள். சொற்பமான ஓய்வூதியத்தில் தந்தை. நேர்மையின் மறு உருவம் என்று சிலராலும், பிழைக்கத்தெரியாத அப்பாவி மனிதன் என்று பலராலும் பட்டம் பெற்றவர். ஊசி மருந்து மாத்திரைகள் என நித்யகண்டம் பூர்ண ஆயுசாக உள்ள தாயார்.

தான் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினால், ஒருவேளை, தன் தங்கைகளையாவது நல்லபடியாகக் கரைசேர்க்க,ஏதாவது ஒரு வகையில், உதவியாகயிருக்குமோ என சிந்தித்தாள். விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பலமுறை படிக்கலானாள்.

“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ...............................  தொலைபேசி எண்: ...........................

சிறிது நேரம் யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்து, அந்தத் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டாள்.

“ஹலோ யார் பேசறது?” எதிர் முனையில் ஒரு பெண் குரல்.

“மேடம், வணக்கம்; என் பெயர் சுமதி. வடபழநியிலிருந்து பேசுகிறேன். விளம்பரம் சம்பந்தமாகப் பேச நேரில் வரணும். எப்போது வந்தால் உங்களுக்கு செளகர்யப்படும்?”

“விளம்பரம் கொடுத்தவன் வெளியே போய் இருக்கிறான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்து பாரு. அவன் வந்தால் நான் சொல்லி வைக்கிறேன்.”

 ”நீங்கள் யார் பேசுவது என நான் தெரிந்து கொள்ளலாமா, மேடம்” சுமதி மிகவும் பணிவாகக் கேட்டாள்.

எதிர்முனையில் பேசுபவருக்கு ஆத்திரமாக வந்தாலும், மிகவும் இனிமையான, கனிவான, குயிலின் குரல்போல இருந்ததால், பொறுமையுடன் “நான் அவனுடைய அம்மா ..... மரகதம்” என்று சொல்லி விட்டு போனைத் துண்டித்து விட்டாள்.

“சுமதி .... சுந்தர்” பெயர் என்னவோ பொருத்தமாகத்தான் தெரிகிறது. நேரில் வரட்டும், பேய் ஓட்டுவதுபோல ஓட்டிவிடலாம் எனக் கறுவிக் கொண்டாள், மரகதம்.

மாலை மணி 5.15 க்கு ஆட்டோவிலிருந்து இறங்கிய சுமதி, வாசலில் உள்ள இரும்புக்கதவைத் தள்ளியபடி, இருபுறமும் பூத்துக்குலுங்கிய புஷ்பச்செடிகளை ரஸித்த வண்ணம், அழைப்பு மணியை அழுத்த முயற்சிக்கவும், கதவு திறக்கப்படவும் சரியாக இருந்தது.

”ஹலோ ..... ஐ ஆம் சுமதி ..... மே ஐ கம் இன்?”

தேன் போன்ற இனிமையான குரல், நல்ல உயரம். சிவப்பழகு. ஒடிசலான தேகம். பவுடர் அப்பாமலேயே, இயற்கையிலேயே முகத்தில் ஒரு வசீகரம்.

அழகு தேவதையாக ஒரு உருவம் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டதும் கதவைத்திறந்த வாலிபன் சற்றும் யோசிக்கவில்லை. 


“வாங்க உள்ளே” என்று அன்பொழுக அழைத்தான். அவள் உள்ளே வந்ததும், “ஐ ஆம் சுந்தர்; வெரி க்ளாட் டு மீட் யூ” என்று சொல்லிக் கைகூப்பி விட்டு, அங்குள்ள சோபாவில் அமரச்சொன்னான்.   

  
”அம்மா, அவங்க வந்திருக்காங்க” என உள் கதவைத்திறந்து குரல் கொடுத்தான். 

அந்த அறையின் குளுகுளு வசதி சுமதியை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்வித்தது.

“காஃபி, டீ, பூஸ்டு, போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ்,  க்ரேப் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் ...... என்ன சாப்பிடுகிறீர்கள்?” தூத்பேடாக்கள், வறுத்த முந்திரிகள், ஸ்பெஷல் மிக்சர், ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கட்டுகள் முதலியன நிறைந்த தட்டொன்றை டீப்பாயுடன் சுமதி அருகில் நகர்த்தியவாறு கேட்டான், சுந்தர்.

“நோ ... தாங்க்ஸ் .... குடிக்க தண்ணீர் மட்டும் போதும்”

ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்து சுமதியிடம் சுந்தர் நீட்ட இருவர் மனதிலும் ஏதோ ஜில்லென்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.




தொடரும்


[இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் ஞாயிறு 18.12.2011 அன்று வெளியிடப்படும்.]

53 கருத்துகள்:

  1. “எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ............................... தொலைபேசி எண்: .........................../

    என்ன கதை இது???

    பதிலளிநீக்கு
  2. "தேடி வந்த தேவதை !"

    கதையின் தலைப்பு விபரீதம் இல்லை என்று அறிவிக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் பாட்டில் எடுத்து சுமதியிடம் சுந்தர் நீட்ட இருவர் மனதிலும் ஏதோ ஜில்லென்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

    சுமதி.. சுந்தர்.. ஜில் கதைதான் போல..

    பதிலளிநீக்கு
  4. நிறைய எதிர்பார்ப்புகள் தந்த அருமையான ஆரம்பம்...

    பதிலளிநீக்கு
  5. சொல்லிய வார்த்தைகளைவிட சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கு கனம் அதிகம் என்பதை அதிகம் நம்புகிறேன்..

    இந்த கதையிலும் கனம் அதிகம்...

    பதிலளிநீக்கு
  6. நேர்மையின் மறு உருவம் என்று சிலராலும், பிழைக்கத்தெரியாத அப்பாவி மனிதன் என்று பலராலும் பட்டம் பெற்றவர்.

    நேர்மையானவர்களுக்கு சரியான பட்டம்தான்.. ஆச்சரியமில்லை..
    நிதர்சனமான உண்மை..

    பதிலளிநீக்கு
  7. நேரில் வரட்டும், பேய் ஓட்டுவதுபோல ஓட்டிவிடலாம் எனக் கறுவிக் கொண்டாள், மரகதம்.

    தேடிவந்த தேவதையை பேய் மாதிரி விரட்ட தயாராக தாய்????

    அருமையான கதையின் ஆரம்பத்திற்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. பல்லவி துவக்கம் பிரமாதம்
    அனுபல்லவி சரணங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...
    த.ம 2

    பதிலளிநீக்கு
  9. ரொம்பவும் சுவாரஸ்யமாக, சஸ்பென்ஸுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்! வழக்கம்போல எழுத்து நடை அருமை!!

    பதிலளிநீக்கு
  10. வித்யாசமாக,சுவாரசியமா ஆரம்பித்திருக்கே கதை,எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கதையா??

    பதிலளிநீக்கு
  11. ஆரம்பம் அட்டகாசமாக இருக்கிறது. உங்கள் பதிவை எப்போதும் நிழல் போல தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன் வை.கோ சார்.

    பதிலளிநீக்கு
  12. ////“எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ............................... தொலைபேசி எண்: .......////

    ஒரு வித்தியாசமான கதைக் களத்தை நகர்த்தி செல்கின்றீகள் அடுத்த பகுதிக்கு வெடிட்டிங்

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வை.கோ - கதை அருமையாக நகர்கிறது - மணப்பெண் தேவை விளம்பரம் நன்று - நோயினைத் தவிர - சுமதி சுந்தர் - பெயர்ப் பொருத்தம் நன்றாகவே இருக்கிறது - மாமியாரூக்கு விருப்பமில்லை - வேறு வழியுமில்லை. ம்ம்ம்ம்ம்ம்ம் - பொறுத்திருந்து பார்போம் - கதை எத்திசை நோக்கிச் செல்கின்றதென ..... நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதையின் ஆரம்பத்திற்கு பாராட்டுகள்

    தேன் போன்ற இனிமையான குரல், நல்ல உயரம். சிவப்பழகு. ஒடிசலான தேகம். பவுடர் அப்பாமலேயே, இயற்கையிலேயே முகத்தில் ஒரு வசீகரம்.

    classic! :)

    பதிலளிநீக்கு
  16. எதிர்பார்ப்புகளோட ஆரம்பிச்சிருக்குது கதை.. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்..

    பதிலளிநீக்கு
  17. அருமை.தொடர காத்திருக்கிறேன்.

    தமிழ்மணம் 5.

    பதிலளிநீக்கு
  18. “எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ............................... தொலைபேசி எண்: .....//இதுவரை நான் அரிந்து யாருமே எடுக்காத சப்ஜெக்ட்..மிக ஆர்வமுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.சீக்கிரம் அடுத்த பகுதியைப்போடுஙக்ள்.

    பதிலளிநீக்கு
  19. நல்லதொரு கருவைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. நிறையவே எதிர்பார்ப்புகளுடன் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. கதை மிகுந்த எதிர்பார்ப்புடன்செல்கிறது அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. அருமையான ஆரம்பம். நானும் அடுத்த பாகத்துக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. ஆரம்பமே பல கேள்விகளைத் தக்கவைத்து பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்புகிறது. அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. வித்தியாசமான கதையாக ஆரம்பித்திருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்று விளம்பரத்தில் .....அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்.....

    த.ம - 7
    இண்ட்லி - 5

    பதிலளிநீக்கு
  25. ஆரம்பமே அசத்தலா இருக்கு வித்யாசமான கதைக்கள்ம்

    பதிலளிநீக்கு
  26. எய்ட்ஸ் என்றதும் பக்கத்தில் வரக்கூட தயங்கும் மக்கள் உள்ள காலத்தில் திருமணம் செய்ய முன்வந்திருக்கும் அந்த பெண்ணின் குணம் வியப்பைத் தருகிறது.அவருக்கும் எயிட்ஸ் எப்படி வந்திருக்கும் என்ற & கதை எப்படி போகப்போகிறது என்ற கேள்வியும் தோன்றுகிறது.தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. :) தொடர்கிறேன்....
    இப்படித்தான் கதையோட்டம் இருக்குமென எனக்குள் ஒரு யூகம் இருக்கிறது. அது சரியா தவறா என்று தெரியா காத்திருக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  28. எதை எழுத!
    ஆவலை தூண்டி விடுவது!
    பிறகு, காத்திருக்க வைப்பது!
    என்ன நியாயம்?

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  29. “எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள, படித்த, அன்பான, அழகான, வசதியுள்ள 27 வயது சாஃப்டுவேர் இஞ்சினியருக்குப் பொருத்தமான பெண் துணை தேவை. எம்மதமும் சம்மதம். மற்ற விபரங்கள் நேரில். முழுமனதுடன் விருப்பம் உள்ள பெண் தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம் ............................... தொலைபேசி எண்: ...........................


    நல்ல ஒரு கருத்தை சொல்ல போகிறது கதை எனத் தெரிகிறது.

    தேடி வந்து விட்டாள் தேவதை எனவும் தெரிகிறது.

    காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. கதை களமே வித்தியாசமாக இருக்கிறது.. ஆவலுடன் மற்ற பகுதிகளுக்காக காத்திருக்கிறேன்.........



    காதல் - காதல் - காதல்

    பதிலளிநீக்கு
  31. வரவேற்பு எப்படியிருக்குமோ என்று நான் மிகவும் பயந்துகொண்டே வெளியிட்ட இந்தச்சிறுகதையின் முதல் பகுதிக்கு பெரும் திரளாக வருகை தந்து கருத்துக்களைக் கூறியுள்ள அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் அன்பான மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிலும் நான் முற்றிலும் எதிர்பார்க்காதவிதமாக தோழர்களை விட தொழிகளே அதிக எண்ணிக்கையில் வருகை தந்து ஆதரவளித்துச் சிறப்பித்துள்ளது
    என் எழுத்துக்களின் மேல் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகவே உணர்கிறேன்.

    வருகை தந்து உற்சாகப்படுத்தியுள்ள 12 அன்புத் தோழர்களுக்கும், 14 பாசமுள்ள தோழிகளுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

    அனைவரும் இந்தக்கதையின் இறுதிப்பகுதிவரை தவறாமல் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  32. என்ன இப்படி நிறுத்திட்டீங்க. இதற்குத்தான் சொல்வது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று . பொறுத்திருக்கின்றேன். நல்ல கதை ஓட்டமாக இருக்கின்றது. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  33. சந்திரகௌரி said...
    //என்ன இப்படி நிறுத்திட்டீங்க. இதற்குத்தான் சொல்வது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து வாசிக்க வேண்டும் என்று . பொறுத்திருக்கின்றேன். நல்ல கதை ஓட்டமாக இருக்கின்றது. தொடருங்கள்//

    தங்களின் அன்பான வருகைக்கு நன்றி, மேடம். அடுத்த பகுதி வெளியாகி விட்டது.

    உங்களுக்காகவே அடுத்த பகுதியை நான் வெளியிடுவதாகச்சொன்ன தேதியாகிய 18.12.2011 ஞாயிறுக்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது 17.12.2011 சனிக்கிழமை மதியமே வெளியிட்டு விட்டேன்.

    அது போல அடுத்தடுத்த பகுதிகளும் வரும் 20th 22nd & 24th அன்று வெளியாகிவிடும். ஒரேயடியாகக் கொடுத்தால் நீண்ட கதையாகிவிடும். யாருக்கும் முழுவதும் பொறுமையாகப் படிக்க நேரம் இல்லாமல் போய் விடும்.

    மேலும் அதில் ஒரு சஸ்பென்ஸ்ஸோ த்ரில்லோ இருக்காது. அதனால் ஓரிரு நாட்கள் இடைவெளியில். தொடர்ந்து பதிவுகள் தந்திட முடிவு செய்துள்ளேன். vgk

    பதிலளிநீக்கு
  34. வித்தியாசமான கதை.
    தொடருங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  35. Rathnavel said...
    வித்தியாசமான கதை.
    தொடருங்கள்.
    நன்றி ஐயா./

    தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.
    vgk

    பதிலளிநீக்கு
  36. மாதேவி said...
    அதிரடியான ஆரம்பம்..../

    தங்களின் அன்பான வருகைக்கு
    மிக்க நன்றி. vgk

    பதிலளிநீக்கு
  37. ஒரு சிறுகதை படிப்பவர் மனதில் ஆரம்பத்திலேயே, அடுத்த காட்சி என்ன என்று ஆவலைத் தூண்டும் வண்ணம் இருக்க வேண்டும் என்பார்கள். இது சிறுகதையின் உத்தி. உங்கள் எல்லாக் கதைகளுமே ஒரு சஸ்பென்ஸ் வைத்துதான் தொடங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  38. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், அழகான பாராட்டுக்களும் என்னை மிகவும் உற்சாகப்பட வைத்துள்ளன. மிக்க நன்றி, ஐயா.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  39. அட வித்தியாசமான கதைக்களம்.... தலைப்பு மெல்லிய தென்றல்.... அதிரடியான விளம்பரம்....

    எய்ட்ஸ் நோய் வந்தால் என்ன. அவர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது உலகில் என்பதை உணர்த்த தான் விளம்பரம் கொடுக்க செய்தாரா கதை ஆசிரியர்.. அருமையான ஆரம்பம்....

    பெண் என்றால் புற அழகு மட்டுமல்லாது அக அழகும் இருக்கவேண்டும் அப்போது தான் அந்த அழகுக்கு தேவதை என்ற பெயரும் கிடைக்கும்.. நம்ம கதையின் நாயகி சுமதி தான் அந்த தேவதையாக இருக்கும்.... சுந்தர் சுமதி பெயர் பொருத்தம் அபாரம்.... ஆனா ஏன் மரகதம் அம்மாக்கு இஷ்டமில்லை?? மகனுக்கு இப்படி ஒரு நோய் இருக்குன்னு கோபமா??

    நேர்மையாக இருக்கும் எல்லோருக்குமே பிழைக்க தெரியாத அப்பாவி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது... பரவாயில்லை..

    சிக்கலை முடிந்தாகிவிட்டது... இனி ஒவ்வொரு சிக்கலாக அவிழ்க்கவேண்டும்...

    கதை படிக்கும்போதே அடுத்து என்னாகும் என்ற பரபரப்பை படிக்கும் வாசகர் மனதில் ஏற்படுத்தும் அளவுக்கு கதை எழுதி இருப்பது கதையாசிரியரின் சிறப்பு...

    அண்ணா அருமையான கதைக்களம்... இருவரின் மனம் ஒத்துப்போனால் கல்யாணத்தில் முடியலாம்...

    ஆனால் எயிட்ஸ் நோயாளியை திருமணம் செய்தால் நம் நான்கு தங்கைகளுக்கு எதுனா வழி பிறக்கும் என்கிற எண்ணத்தோடு தியாகம் செய்வதாக நினைக்காமல் உண்மையான அன்போடு சுந்தரை கைப்பிடித்தால் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்... விட்டுக்கொடுத்தல் இருக்கலாம் ஆனால் தியாகம் செய்தோம் வாழ்க்கை கொடுத்தோம் என்ற உணர்வு மனதில் இருக்கக்கூடாது....

    அன்பான அழகான வசதியுள்ள எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுந்தரின் காரெக்டர் முதல் பகுதிலயே கதையாசிரியர் அருமையா சொல்லிட்டார்...

    நல்ல மனசுள்ள சுமதியும் சுந்தரும் சேரவேண்டும் அடுத்த பகுதியில் என்ன ஆகுதுன்னு பார்ப்போம்..

    அசத்தலான கதை அண்ணா.... தொடர்கிறேன் அடுத்த பாகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! ”பின்னூட்டப்புயல்” என்று நான் பெயர் சூட்டியுள்ள என் அன்புச் சகோதரி மஞ்சு வந்தாச்சு! ;)))))

      வாருங்கள், வாருங்கள். முதலில் உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

      //தலைப்பு மெல்லிய தென்றல்.... //

      புயலின் வாயால் தென்றல் என்ற பாராட்டு! ;)
      பஹூத் அச்சா ஹை!!

      //பெண் என்றால் புற அழகு மட்டுமல்லாது அக அழகும் இருக்கவேண்டும் அப்போது தான் அந்த அழகுக்கு தேவதை என்ற பெயரும் கிடைக்கும்..//

      என் தங்கச்சி மஞ்சு சொன்னால் எதுவும் கரெக்டாவே இருக்கும்.

      //நேர்மையாக இருக்கும் எல்லோருக்குமே பிழைக்க தெரியாத அப்பாவி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது... பரவாயில்லை.. //

      கதையாசிரியரான தங்கள் அண்ணனை உத்தேசித்தே இதைச் சொல்லியுள்ளீர்கள் ... பரவாயில்லை..

      தொடரும் .....

      நீக்கு
    2. VGK To மஞ்சு [2] தொடர்ச்சி....


      //கதை படிக்கும்போதே அடுத்து என்னாகும் என்ற பரபரப்பை படிக்கும் வாசகர் மனதில் ஏற்படுத்தும் அளவுக்கு கதை எழுதி இருப்பது கதையாசிரியரின் சிறப்பு...//

      ரொம்ப சந்தோஷம்மா !

      //அண்ணா அருமையான கதைக்களம்... //

      மிக்க நன்றிம்மா !

      //இருவரின் மனம் ஒத்துப்போனால் கல்யாணத்தில் முடியலாம்...//

      அப்படியா? இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ;)

      //விட்டுக்கொடுத்தல் இருக்கலாம் ஆனால் தியாகம் செய்தோம் வாழ்க்கை கொடுத்தோம் என்ற உணர்வு மனதில் இருக்கக்கூடாது....//

      கையைக்கொடுங்கோ! கண்ணில் ஒத்திக்கொள்ளனும்!!

      //அசத்தலான கதை அண்ணா.... தொடர்கிறேன் அடுத்த பாகம்...//

      ஆஹா, பேஷா !

      பிரியமுள்ள
      VGK









      நீக்கு
  40. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.

    முடிவே சுபமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

    சுவாரசியத்தைத் தூண்டும் சிறுகதை

    பதிலளிநீக்கு
  41. JAYANTHI RAMANI January 4, 2013 1:40 AM

    ”தேடி வந்த தேவதை” ஐப்படிக்க ”ஓடி வந்த தேவதை”யாகிய திருமதி ஜயந்தி ரமணி அவர்களே, வாங்கோ, வாங்கோ, வாங்கோ
    வணக்கம்.

    //ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.//

    போகப்போக மேலும் நிறைய அமர்க்களங்கள் இருக்கு.

    //முடிவே சுபமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.//

    நீங்க எப்படி வேண்டுமானாலும் நினைக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனாலும் உங்கள் நினைப்பும் சுபமாகவே உள்ளது. அது எனக்கு சுகமாக உள்ளது.

    //சுவாரசியத்தைத் தூண்டும் சிறுகதை//

    சுவாரஸ்யமான கருத்துக்கும், அன்பான வருகைக்கும் மிக்க நன்றி.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  42. குடும்பத்தில் மூத்த பெண் என்றால் பொறுப்பு தன்னால வந்துவிடும் என்பதை தங்களின் டச்சிங்கான எழுத்தால் உணர்த்தி விட்டீர்கள். தான் கஷ்ட்டப்பட்டாவது தன் குடும்பத்தினரை வாழ வைக்க அவள் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  43. பூந்தளிர் January 18, 2013 at 6:39 AM

    ”தேடி வந்த தேவதை” ஐப்படிக்க ஓடி வந்த தேவதை”யாக இங்கு வந்துள்ள பூந்தளிர் அவர்களே ... வாங்கோ. வணக்கம்.

    //குடும்பத்தில் மூத்த பெண் என்றால் பொறுப்பு தன்னாலே வந்துவிடும் என்பதை தங்களின் டச்சிங்கான எழுத்தால் உணர்த்தி விட்டீர்கள். தான் கஷ்டப்பட்டாவது தன் குடும்பத்தினரை வாழ வைக்க அவள் எடுக்கும் முடிவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.//

    தங்களின் இந்தக்கருத்துக்களும் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாகவே உள்ளது. மிக்க நன்றி.

    பிரியமுள்ள
    கோபு

    பதிலளிநீக்கு
  44. ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. ஒரு பெரிய சஸ்பென்ஸ் வருவது மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  45. இது போல் தன் குடும்பத்திற்காக தியாகம் செய்ய முன்வரும் பெண்கள் ஏராளம்,,,,,,, ஆனாலும் அவளின் தியாகம் பெரிதுபடுத்தப்பட வில்லை. கதை நல்லா போகுது, அடுத்த பதிவைப் பார்க்க போகிறேன். வரேன்,,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  46. ஓ..ஓ.. தன்தங்ககள வாள வக்க இவுக தியாகம் பண்ண போராகளோ.

    பதிலளிநீக்கு
  47. சுமதி சுந்தர் பெயர் பொருத்தம்மட்டும் நல்லா இருந்தா போதுமா பேப்பர் விளம்பரங்களில் எல்லாம் எவ்வளவு தூரம் நம்பக தன்மை இருக்கும். தன் குடும்பத்துக்காக இதுபோல முடுவு எடுத்திருக்காளா. .

    பதிலளிநீக்கு
  48. புயலுக்கு முன்னே உள்ள அமைதிபோல இருக்கு....

    பதிலளிநீக்கு
  49. விளம்பரத்தைப் படித்தவுடன் கதை விறுவிறுப்படைந்தது! தொடர்கிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு