என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
குட்டியூண்டு கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டியூண்டு கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 மார்ச், 2012

நேத்து ராத்திரி ....... யம்மா !


நேத்து ராத்திரி .... யம்மா !



இரண்டு பெண்மணிகளுக்கும் ஒரே அலுவலகத்தில் வேலை. ஆனால் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு இலாகாக்களில் பணிபுரிபவர்கள். இருவரும் ஆருயிர்த்தோழிகள். 

சாப்பாட்டு இடைவேளையில் கேண்டினில் நேருக்கு நேர் சந்தித்து அரட்டை அடிப்பார்கள். மற்ற நேரங்களில் சாட் [சுட்டி] மூலம் ஏதாவது தொடர்பு கொண்டு பொழுதைக் கழிப்பதும் உண்டு.


இவ்வாறு அலுவலக நேரத்தில் நடந்த அவர்களின் சுட்டி உரையாடல் ஒன்றை இப்போது பார்ப்போமா?

பெண் 1 : எனக்கு நேற்று மாலையும் இரவும் மிகவும் நல்லபடியாகவே அமைந்தது. உனக்கு எப்படிடீ?

பெண் 2 : நேற்றைய இரவுப்பொழுது எனக்கு வீணாகிப்போனதுடீ. என் கணவர் வீட்டுக்கு வந்தார். 

இரவு சாப்பாட்டை மூன்றே நிமிடங்களில் முடித்துக் கொண்டார். அடுத்த இரண்டே நிமிடங்களில் படுத்துத்தூங்கி குறட்டை விட ஆரம்பித்து விட்டார். 

உனக்கு மட்டும் எப்படி சந்தோஷமாக இருந்தது என்று சற்று விபரமாகத்தான் சொல்லேன்; நமக்குள் எதற்கு ஒளிவு மறைவுகள் ?

பெண் 1: எனக்கு நேற்று மிகவும் அதிர்ஷ்டமான இரவாகவே அமைந்தது.  என் கணவர் வீட்டுக்கு வந்தார். வந்ததும் என்னை ஆசையுடன் வெளியே அழைத்துச்சென்றார். 

இரவு மிக அருமையான விருந்து போன்ற ஸ்பெஷல் சாப்பாட்டு வகையறாக்களை, ஒரு புதுக் காதலர்கள் போல ஹோட்டலில் தனி அறையில் குளிர்சாதன வசதியுடன் மிகவும் ஜாலியாக சாப்பிட்டோம். 

அதன் பிறகு ஒரு மணிநேரம் ஜாலியாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றோம். 

வீட்டுக்கு வந்ததும் வீடு பூராவும் என் கணவர் மெழுகுவர்த்திகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தார். 

இரவு நீண்ட நேரம் தூங்காமல் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். 

தேவலோகக் காட்சிகள் போல ஒரே சந்தோஷமான பகிர்வுகள் தான் நேற்று எங்களுக்குள்; உண்மையிலேயே நேற்றைய இரவை என்னால் மறக்க முடியாதுடீ. அது நல்லதொரு புது அனுபவமாகவே எனக்கு இருந்ததுடீ.


இந்தப்பெண்மணிகளின் கணவர்கள் இருவரும், அதே நேரத்தில் தனியே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அதையும் பார்க்கலாமா?

கணவர் 1 : நேற்று சாயங்காலம்+இரவு எப்படிப்பா கழிந்தது?

கணவர் 2 : சூப்பராக படு நிம்மதியாகக் கழிந்தது!


வீட்டுக்கு வந்தேன். இரவு உணவு டைனிங் டேபிள் மேல் ரெடியாக இருந்தது. 


நன்றாக சாப்பிட்டேன். உடனே போய்ப் படுத்தேன். 


நிம்மதியாகத் தூங்கினேன். அடடா! மிக அருமையான தூக்கம். 


அது சரி!  உனக்கு எப்படி ?

கணவர் 1 : அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? அது ரொம்பவும் கொடுமையப்பா! 

நேற்று மாலை வீட்டுக்கு வந்தேனா! இரவு சமையலே தயாராகவில்லை.  

நான் மின்சாரக் கட்டணம் கட்ட மறந்து விட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. 

வேறு வழியில்லாமல் என் மனைவியை வெளியே சாப்பிட ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிப்போகும்படி ஆகிவிட்டது. 

அதில் எக்கச்சக்க செலவாகி என் பர்ஸே காலியாகி, திரும்பி வர பஸ்ஸுக்கோ ஆட்டோவுக்கோ கூட பணமில்லாத நிலையாகி விட்டது. 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் பொடி நடையாக நடந்தே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். 

வீட்டுக்கு வந்தால் மீண்டும் ஒரே இருட்டு.  மின்சார சப்ளை தான் துண்டிக்கப்பட்டு விட்டதே ! 

பிறகு மிகவும் கஷ்டப்பட்டு, தட்டுத்தடுமாறி பல மெழுகுவர்த்திகளை ஏற்றி வீடு பூராவும் பல இடங்களில் நானே வைக்கும்படியாகி விட்டது. 

மின்விசிறி சுழலாமல் காற்று வராததால் என்னால் நிம்மதியாகத் தூங்கவே முடியவில்லை. ஒரே கொசுக்கடி வேறு. 

மிகவும் கடுப்பாகிப்போய் இருந்த என்னிடம், என் மனைவி ஏதேதோ அர்த்தமில்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் உளறிக்கொண்டே இருந்து மேலும் என்னை வெறுப்பேற்றி விட்டாள். 

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நானும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்கும்படியானது. 






”மொத்தத்தில் நேத்து ராத்திரி .... யம்மா; 
நரக வேதனை தான் ... யம்மா”.



-o-o-o-O-o-o-o-

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பலி ஆடுகள் !

பலி ஆடுகள் !



ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒரு குதிரையும் ஒரு ஆடும் வளர்த்து வந்தார். 

ஒரு நாள் உடல் நலமில்லாமல் போய் விட்ட அவரின் குதிரைக்கு வைத்தியம் செய்ய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். 

குதிரையைப் பரிசோதித்த அந்த வைத்தியர் குதிரைக்கு வைரஸ் நோய் தாக்கியிருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு இந்த மருந்தினைக்கொடுத்து சரியாகிறதா என்று பார்க்கலாம் என்றும், தான் மீண்டும் மூன்று நாட்களுக்குப்பிறகு வருவதாகவும், ஒருவேளை சரியாகாமல் போனால் நாம் அதனைக் கொன்று விடுவதே நல்லது என்றும் சொல்லி விடுகிறார்.

இந்த இவர்களின் சம்பாஷனைகளை அருகே நின்ற அந்த ஆடு உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.மறுநாள் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டு அவர்கள் புறப்பட்டு விட்டனர்.

அந்த ஆடு குதிரையிடம் வந்து “நண்பா! நீ உற்சாகமாக இரு; ஓய்ந்து படுக்காதே; உடனே எழுந்திரு; சுறுசுறுப்பாக என்னுடன் நடந்து வா; இல்லாவிட்டால் அவர்கள் உன்னை ஒரு வழியாகத் தூங்கச்செய்து விடுவார்கள்” என்றது. ஆனாலும் குதிரையால் ஆடு சொன்னது போல உடனே செய்ய முடியவில்லை.

இரண்டாம் நாளும் குதிரைக்கு மருந்து செலுத்தி விட்டுச் சென்றார்கள்.

இரண்டாம் நாளும் ஆடு குதிரையிடம் வந்து அதை உற்சாகப்படுத்தி எழுந்து வருமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டது. அவ்வாறு செய்யாவிட்டால் நீ நிச்சயம் இறக்க நேரிடும் என்று எச்சரித்ததோடு, ”வா ... என்னோடு புறப்படு ... நான் உனக்கு உதவுகிறேன்” என்று ஆறுதலாகப்பேசி அதனை எழுப்ப முயன்றது.  ஆனால் குதிரை எவ்வளவோ முயன்றும் அதனால் அது போலச் செய்ய முடியவில்லை.

மூன்றாவது நாளும் மருந்து அளித்து சிகிச்சை செய்த வைத்தியர், குதிரையின் உடல்நிலையில் துரதிஷ்டவசமாக எந்தவொரு முன்னேற்றமும் தெரியவில்லை. எனவே இதை நாம் நாளைய தினமே கொன்று விடலாம். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த வைரஸ் ஊரில் உள்ள மற்ற எல்லாக்குதிரைகளுக்கும் பரவிடக்கூடும் என்று சொல்லிவிட்டுப்போனார். 

அவர்கள் சென்ற பிறகு ஆடு குதிரையிடம் மீண்டும் வந்தது, 

”நண்பா, நான் சொல்வதை இப்போது நீ கவனமாகக் கேட்டுக்கொள். இதுவே உனக்கு இறுதி வாய்ப்பு; உடனே மன உறுதி கொண்டு எழுந்திரு; வலிமையுடன் தைர்யமாக என்னுடன் ஓடி வா ,,,,, உம் ,,, அப்படித் தான் ,,,, சபாஷ் ,,,,, உன்னால் நிச்சயம் முடியும் ..... அப்படித்தான் .... மெதுவாக ..... வெரி குட் ..... அவ்வளவே தான் ..... இப்போ வா ,,,,,  ஒன் .... டூ ..... த்ரீ ... சூப்பராக உன்னால் இப்போது ஓட முடியும் ..... முயற்சி செய் ..... இது பத்தாது ..... இன்னும் சற்றே வேகமாக ..... எஸ் ,, எஸ் ,,,, குட் ,,,, வெரிகுட் ...  அவ்வளவு தான் ... உன்னால் பழையபடி நடக்க முடிகிறது; 

நிச்சயமாக உன்னால் ஓடவும் முடியும்; முயற்சி செய் .... உன் உடல் மிகவும் நன்றாகத் தேறிவிட்ட்து ... இனி எந்தக்கவலையோ பிரச்சனையோ இல்லை, உன்னால் இனி பழையபடி வேக வேகமாக இயங்க முடியும்” என்று சொல்லி மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது.



அதே நேரம் அந்த பண்ணை உரிமையாளரான விவசாயி அவ்விடம் வந்தவர் தன் குதிரை பழையபடி எழுந்து இங்குமங்கும் துள்ளி ஓடுவதை கவனித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்: 


“ஆஹா. என் குதிரை அபூர்வமாக தெய்வ சக்தியால் மட்டுமே ஆச்சர்யமாகப் பிழைத்துக் கொண்டுள்ளது; 

MIRACLE தான் நடந்துள்ளது. இந்த ஆட்டினை அடித்துப்போட்டு கொன்று, விருந்து ஏற்பாடுகள் செய்து, இந்தக்குதிரை பிழைத்து விட்டதை நாம் நாளை கொண்டாடியே ஆக வேண்டும்” என உரக்கக்கத்திச் சொல்கிறார்.  


-oOo-


இது போன்ற அநீதிகள் ஆங்காங்கே இன்றும் நடைபெற்றுக்கொண்டு தான் வருகின்றன.

ஒரு வெற்றிக்கான உண்மையான காரணம் என்ன? யார் இந்த வெற்றிக்குப் பின்னனியில் உழைத்துள்ளார்கள்? யாருக்கு வெற்றிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்? என்பதையே அறியாமல் ஏதேதோ தவறுகள் இழைக்கப்பட்டு விடுகின்றன.  

உண்மையான உழைப்பாளியின் உழைப்பு சுரண்டப்பட்டு வருகிறது. யாரோ செய்த கடும் வேலைகளுக்கான, உண்மை உழைப்புக்கான பாராட்டும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் சம்பந்தமே இல்லாத வேறு சிலருக்கு போய்ச்சேர்ந்து, அனாவஸ்யமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெற்றிக்கு உண்மையாக உழைத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு,  விரக்தியடைய நேரிடுகிறது. அவர்களின் இந்த நிலை இன்று ’பலி ஆடுகள்’ நிலையில் தான் உள்ளன.

உரிய அங்கீகாரம் இல்லாமலும் வாழப்பழகுவது என்பதை நாம் கற்றுக்கொள்வதும், நம் தனித்திறமைக்கு எடுத்துக்காட்டு தான் என்பதை, நாம் நினைவில் கொள்வோம்.

”உன்னுடைய வேலையும் உழைப்பும் தொழிற்கல்வி சார்ந்தது அல்ல” என்று யாராவது நம்மிடம் சொல்லி வெறுப்பேற்றினாலும் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டாம்.

தொழிற்கல்வி கற்காமலேயே அனுபவம் வாயிலாகக் கட்டப்படும் பாய்மரக் கப்பல்களும், படகுகளும், சிறுசிறு தோணிகளும், பரிசல்களும் பாதுகாப்பாகவே கரை சேர முடிகிறது.

தொழிற்கல்வி கற்ற நிபுணர்கள் செய்யும் ’டைட்டானிக்’ போன்றவைகள் தான் அனைத்து உயிர்களையும் ஒட்டுமொத்தமாக மரணமடையச்செய்து விடுகின்றன.


-oOo-


[என்றோ மின்னஞ்சல் மூலம் 
நான் ஆங்கிலத்தில் படித்த செய்தியினை 
சற்றே தேவையான மாற்றங்கள் செய்து 
சிறுகதையாக்கித் தமிழில் தந்துள்ளேன். vgk]

திங்கள், 27 பிப்ரவரி, 2012

I Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]

I Q  TABLETS 
[ ஐக்யூ டாப்லெட்ஸ்]


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒரு ஆச்சாரமான தென்னிந்தியரும் ஒரு வெள்ளைக்கார துரையும் சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர்.  

சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு எட்டு மணிக்குக் கிளம்பிய ரயில் மறுநாள் காலை ஏழு மணிக்கு விஜயவாடாவை அடைந்தது. வெள்ளைக்கார துரை ஏற்பாட்டின் படி அவருக்கு மிகவும் பிரமாதமான அருஞ்சுவையுடன் கூடிய அனைத்துக் காலை சிற்றுண்டிகளும் பணியாள் ஒருவரால் வழங்கப்பட்டன.


தென்னிந்தியர் தனது நாலு அடுக்கு டிபன் கேரியரின் முதல் அறைலிருந்து இரண்டே இரண்டு இட்லிகளை மட்டும் எடுத்து சாப்பிட்டார்.


அதே போல ’வால்டேர்’ என்று அன்று அழைக்கப்பட்ட தற்போதைய விசாகப்பட்டிணத்தில் வெள்ளைக்கார துரைக்கு ரெயில்வே சிற்றுண்டி சாலையால், மிகப்பெரிய அளவில் மிகச் சிறப்பான மதிய சாப்பாடு விருந்தாகவே அளித்து மகிழ்விக்கப்பட்டது.

இப்போதும் நம் தென்னிந்தியர் தனது டிபன் கேரியரின் இரண்டாவது அடுக்கிலிருந்து நான்கு இட்லிகளை மட்டுமே எடுத்து சாப்பிட்டார்.


இந்த மனிதரைப் பார்த்து அந்த வெள்ளைக்காரர் மிகவும் வியந்து போனார். அவருக்கு இவரின் செயல் ஒன்றும் தெளிவாக விளங்கவில்லை. என்ன நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தும் ஏனோ ஒரு தயக்கத்தில், தொண்டை வரை வந்த சொற்களை வாயிலிருந்து வெளியே விடாமல், நாகரீகம் என்ற பெயரில் அமைதியாகவே இருந்து விட்டார்.

இதே செயல் இரவு எட்டு மணிக்கு ’பெர்ஹாம்பூர்’ என்ற ஸ்டேஷன் வந்ததும், மீண்டும் இரவு டின்னர் நேரத்திலும் நடந்ததால், வெள்ளைக்காரரால் பொறுமையாக இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“ஐயா, நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வேளா வேளைக்க்ச் சாப்பிட்டு வரும் அந்த வெள்ளைப் பண்டம் என்ன?” என்றார்.

“ஐயா, இதன் பெயர் " IQ Tablets [ ஐக்யூ டாப்லெட்ஸ்]”; 


தென்னிந்தியர்களாகிய எங்களால் இதை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு, பேரெழுச்சியுடன் ஒருசில நாட்கள் கழித்து விட முடியும்” என்றார் நம்மாளு.

“ஆஹா! அப்படியா, மிக்க மகிழ்ச்சி!! இதை எப்படித் தயார் செய்கிறீர்கள் என்பதை எனக்குத் தாங்கள் சற்றே விளக்கமாகச் சொல்ல முடியுமா?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டார் அந்த வெள்ளைக்காரர்.

தென்னிந்தியரும், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள், அவைகள் தயாரிக்கும் முறைகள் முதலியவற்றை மிகவும் சிரத்தையுடன் அழகாக அற்புதமாக விபரமாக விளக்கிக் கூறினார்.

இதைக்கேட்டு மகிழ்வடைந்த வெள்ளைக்காரர், “எனக்கு அதில் இரண்டைத்தர முடியுமா? தாங்கள் எனக்கு இலவசமாகத் தர வேண்டாம். அதற்கு எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அதை நான் தங்களுக்குத் தந்து விடுகிறேன்” என்றார்.

ஒரு நிமிடம் தயங்கி யோசித்த தென்னிந்தியர் பிறகு பேசலானார்:

“ஐயா, என்னிடம் மீதியுள்ளது மூன்றே மூன்று மட்டுமே; அதை நான் நாளை காலையில் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்; 

இருப்பினும் நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், அருகில் உள்ள என் சொந்தக்காரர் வீட்டுக்குப் போக இருப்பதால், அங்கு காலை சிற்றுண்டி எனக்கு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்;

நீங்கள் என்னிடம் ஆசைப்பட்டுக் கேட்பதால் உங்களுக்கு அவற்றைத் தருவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு IQ Tablet [ஐக்யூ டாப்லெட்] ரூபாய் 20 ஆகுமே” என்றார். 

[ இந்தச் சம்பவம் நடைபெற்ற காலக்கட்டத்தில் விலைவாசிகள் மலிவோ மலிவு - ஒரு இட்லி 5 பைசா; ஒரு ரூபாய்க்கு 20 இட்லிகளும், 20 ரூபாய்க்கு 400 இட்லிகளும், 60 ரூபாய்க்கு 1200 இட்லிகளும் கிடைத்த காலம் அது ] 

இதைக்கேட்டதும் அந்த வெள்ளைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி. தனக்கு இன்று அந்தப்பொருள் கிடைப்பதற்கான தன் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்து போய், மகிழ்ந்து போய், உடனடியாக 3 டாப்லெட்ஸ்களையும் [இட்லிகளையும்] பெற்றுக்கொண்டு, ரூபாய் 60 பணமும் கொடுத்து விட்டார். டாப்லெட்ஸ்களை [இட்லிகளை] உண்டுவிட்டு தூங்கிப்போனார், வெள்ளைக்காரர். 

மறுநாள் காலை ஹெளரா ஸ்டேஷனில் இருவரும் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 

வெள்ளைக்காரர் கண் விழித்தெழுந்ததும் தென்னிந்தியரைப் பார்த்து, “ஐயா, இந்தப்பொருளைச் செய்வது பற்றிய முழு செய்முறைகளும், ஒன்று விடாமல் எனக்குச் சொல்லி விட்டீர்களா! அல்லது ஏதாவது சிலவற்றை சொல்லும் போது நடுவில் விட்டு விட்டீர்களா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“சுத்தமாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விபரமாகச் சொன்னேனே, ஐயா” என்றார் தென்னிந்தியர்.

“அப்படியானால், பிறகு ஏன் இந்த டாப்லெட்ஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளன?” என்று கேட்டார், வெள்ளைக்காரர். 

.........
.............
....................
..........................
................................
.......................................
.............................................
.....................................................

“நான் தான் சொன்னேனே ஐயா, அவைகள் யாவும் IQ TABLETS [ஐக்யூ டாப்லெட்ஸ்] என்று; 

நேற்று இரவு தான், முதன்முறையாக நீங்கள் மூன்றே மூன்று டாப்லெட்ஸ் மட்டும் சாப்பிட்டுள்ளீர்கள்; 

அவை இப்போது நன்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டன பாருங்கள்; 

உங்களை நன்கு சிந்திக்க வைத்துள்ளன பாருங்கள். 

என்னிடம் கேள்விகள் கேட்கத் தூண்டியுள்ளன பாருங்கள்; 

அதனால் தான் அவைகளின் விலை சற்று அதிகம்; 

அப்போ நான் வரட்டுமா .....” 

என்று சொல்லி விடைபெற்று, ரயிலிலிருந்து இறங்கி விட்டார், அந்த புத்திசாலித் தென்னிந்தியர். 

-o-o-o-o-o-o-





[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]  

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

காணாமல் போன கைக்கடியாரம்


காணாமல் போன கைக்கடியாரம்




ஒரு விவசாயி தன் வயல் அருகே இருந்த மிகப்பெரிய தானிய சேமிப்புக்கிடங்கில் தன் கைக்கடியாரத்தை எங்கோ தொலைத்து விட்டதை உணர்ந்தார். 

எங்கு தேடியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை. அவரைப்பொருத்தவரை அது ஒரு சாதாரண கடியாரம் அல்ல. செண்டிமெண்ட்டாக இருந்த நினைவுப்பொருள். அதனால் அதற்கான மதிப்பு மிகவும் அதிகமே.

எல்லா இடத்திலும் அதைத்தேடியும் காணாமல் வருத்தப்பட்டு வெளியே வந்தபோது, தானிய சேமிப்புக்கிடங்குக்கு வெளியே நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறார். அவர்களிடம் விஷயத்தைக் கூறி அவர்கள் அனைவருமாக உள்ளே போய் தேடிக்கண்டுபிடித்துத் தருமாறு சொல்லுகிறார். 

கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு தகுந்ததோர் சன்மானம் பரிசாகத் தருவதாகவும் அறிவிக்கிறார்.

அனைத்துச் சிறுவர்களும் ஆவலுடன் சேர்ந்து தேடியும் காணாமல் போன அந்த பொருள் கிடைக்கவில்லை. அந்த விவசாயி உள்பட அனைவரும் வீடு திரும்ப நினைக்கும் போது ஒரே ஒரு சிறுவன் மட்டும், ”தனக்கு மட்டும் அதைத் தேட இன்னொரு சந்தர்ப்பம் தர முடியுமா” எனக் கேட்டுக்கொள்கிறான்.

துடிப்புடன் இருந்த அந்தச்சிறுவனை நோக்கிய விவசாயி, அவனை மீண்டும் தனியே உள்ளே செல்ல அனுமதிக்கிறார். ”தாராளமாக உள்ளே சென்று வா; வென்று வா” என்றும் ஊக்கமளிக்கிறார். 

உள்ளே சென்றவன் சற்று நேரத்திலேயே வெற்றியுடன், கையில் கைக்கடியாரத்துடன் திரும்ப வருகிறான். அவனைப்பார்த்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது. 

“நீ மட்டும் எப்படி வெற்றி பெற முடிந்தது? மற்றவர்கள் எதனால் வெற்றி பெற முடியாமல் போனது? என்று ஆச்சர்யத்துடன் வினா எழுப்பினார்.

”அமைதியாக தரையில் அமர்ந்து, என் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டு ’கவனித்தல்/கேட்டல்’ [Listen] என்ற ஒன்றை மட்டுமே நான் செய்தேன். நான் மட்டுமே தனியாக இருந்ததால் நிசப்தம் நிலவியது. தங்கள் கைக்கடியாரத்தின் ’டிக்டிக்’ என்ற ஒலியை என்னால் நன்கு கேட்க முடிந்தது.   அந்த ஒலி வந்த திசையை நோக்கி ஓடி அதை என்னால் சுலபமாகக் கண்டுபிடித்து எடுத்துவர முடிந்தது” என்றான் அந்தச் சிறுவன்.


-o-o-o-o-o-o-o-

அமைதியான மனநிலை/சூழ்நிலையில் தான், நல்ல முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.

தினமும் ஒரு சில நிமிடங்களாவது மனதுக்கும் மூளைக்கு சற்றே ஓய்வு கொடுத்து அமைதியாக இருந்து பாருங்கள். அது மிகக் கூர்மையாக சிந்தித்து நல்ல முடிவுகளாக எடுத்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்ப்பது போல மிக அருமையாக மாற்றிக் காட்டிடும்.

-o-o-o-o-o-o-o-




[This is a short story in English forwarded by my friend VIJI of BHEL. 
Only the translation in Tamil is done by me - vgk]  



வியாழன், 16 பிப்ரவரி, 2012

விருது மழையில் தூறிய குட்டிக்கதை !


மீண்டும் மீண்டும் விருதுகள் 


[விருது மழையில் தூறிய குட்டிக்கதை !]


[1] விருதினை அன்புடன் வழங்கியவர்:


திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்



மூன்றாவது முறையாக எனக்கு இதே 


விருது வழங்கப்பட்டுள்ளது

என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மிகப்பிரபல பதிவரும், பல பத்திரிகைகள் மின் இதழ்கள் முதலான ஊடக எழுத்துலகில் மிகப்பிரபலமான எழுத்தாளரும், இன்னும் பல்வேறு தனித்திறமைகளைத் தங்களிடத்தே குவித்து வைத்துக் கொண்டுள்ளவருமாகிய, தங்களின் பொற்கரங்களால் இந்த விருதினை இன்று 16.02.2012 பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !



Madam !

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo







[2] விருதினை அன்புடன் வழங்கியவர்: 


திரு. காரஞ்சன் (சேஷ்) E.S.SESHADRI அவர்கள்


காரஞ்சன் சிந்தனைகள்(சேஷாத்ரி)


இரண்டாவது முறையாக எனக்கு இதே 


விருது வழங்கப்பட்டுள்ளது.


இவ்விருதினை அன்புடன் 15.02.2012 அன்று 
எனக்கு வழங்கியுள்ள அருமை நண்பர் 
திரு. காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள்.



oooooooooooooooooooooooooooo

நான் பெற்ற இந்த மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு விருதுகளையும், என் அருமை நண்பரும், என் நலம் விரும்பியும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான பிரபல எழுத்தாளர் மற்றும் பதிவர் திரு. ரிஷபன் rishaban57.blogspot.com அவர்களுக்கு அன்புடன் சமர்பிக்கின்றேன். 

 

ஒரே நேரத்தில் இரு விருதுகள் பெற்ற திரு. ரிஷபன் அவர்களுக்கு என் அன்பான மனமார்ந்த வாழ்த்துகள்.


to you, Sir

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


விருதுகள் பெற்ற 
மற்றும் 
விருதுகள் அளித்த 
மகிழ்ச்சியில் 
இதோ ஓர் குட்டிக்கதை 
உங்கள் பார்வைக்காக மட்டுமே!


ஓர் வயதான கணவன் மனைவி. 

கணவன் படுத்த படுக்கையில் நாட்களை எண்ணிக்கொண்டு. 

அவரின் கடைசி ஆசையை தன் அன்பு மனைவியிடம் சொல்லி ”நிறைவேற்றித்தருவாயா?” எனக்கேட்கிறார்.

”எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நிறைவேற்றிடுவேன்” என்கிறாள் மனைவி.

கணவனின் கடைசி ஆசை: 

தான் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த தன் பணம் முழுவதும் [சுமார் ஒரு கோடி ரூபாய்] தான் இறந்த பிறகு தன்னுடனே சேர்த்து புதைத்திட வேண்டும் என்பதே.

மனைவி அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். 

கணவர் டெபாஸிட் செய்திருந்த அவரின் பணமெல்லாம் வங்கியிலிருந்து 1000 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு ஒரு பெரிய சூட்கேஸ் நிறைய எடுத்து வந்து, வீட்டில் பத்திரமாக மனைவியால் பாதுகாக்கப்படுகிறது.

கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம், மிகவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. பிறருக்கு இந்த விஷயம் கசிந்தால் பிறகு புதைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் அல்லவா! 

யாராவது புதைத்த அந்தப்பணத்தைத் தோண்டி கொள்ளை அடித்தும் செல்லலாம் அல்லவா! அதனால் மிகவும் உஷாராகவே தேவரகசியமாகவே பாதுகாக்கப் பட்டது.

அந்த நாளும் வந்தது. 

மனைவி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக கணவனை நல்லடக்கம் செய்யும் இடத்திற்குத் தானும் அந்த மிகப்பெரிய சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கிச்சென்று, அதை முதலில் தன் கையாலேயே வைத்துவிட்டு, பிறகு தன் கணவனின் பூத உடலின் நல்லடகத்தில் கலந்து கொண்டு, அவரை சூட்கேஸுடன் புதைத்த அந்த இடத்தை முழுவதும் பூசும் வரை அங்கேயே இருந்து விட்டு வீடு திரும்புகிறாள். 

மற்றவர்களிடமெல்லாம் அந்தப்பெட்டியில் உள்ளவை, என் கணவர் அன்றாடம் எழுதி வந்த பலவருஷ பழைய டயரிகள் மட்டுமே எனச் சொல்லி சமாளித்து விட்டாள்.

சந்தேகப்பட்டுத் தூண்டித்துருவிக் கேட்ட தன் தம்பியிடம் மட்டுமே உண்மையைச் சொல்லும்படியாகி விட்டது அவளுக்கு.

“ஏன் அக்கா மடத்தனமாக இப்படிச்செய்தாய்? என்று மனம் கொதித்துப்போய்க் கேட்டான் தம்பி.

“என் பிரியமான கணவரின் கடைசி ஆசையடா அது. அதை கூட நான் நிறைவேற்றாவிட்டால் என் மனமும் அவர் ஆன்மாவும் எப்படி சாந்தியடையும்?” என்றாள்.  

”நீ செய்த இந்த முட்டாள் தனத்தால் யாருக்கு என்ன லாபம்?” என்றான் தம்பி.

”இந்த என் செயலால் யாருக்கு என்ன நஷ்டம்; உனக்குத்தான் என்ன நஷ்டம்; அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவர் தன்னுடன் மேலுலகம் வரை கொண்டு செல்ல விரும்பினார்; அவ்வளவு தான்; இதில் என்ன தப்பு இருக்கிறது? ” என்றாள் தொடர்ந்து அந்த அக்காக்காரி.

“பணத்தின் மதிப்புத்தெரியாத பைத்தியக்காரியாக இருக்கிறாயே ... நீ இப்படி” வேறு யாருக்காவது இந்த விஷயம் தெரிந்தால் அவரைப் புதைத்த இடத்தை தோண்டி பணம் முழுவது கொள்ளை போய் விடும், தெரியுமா? என்று தொடர்ந்து வாதம் செய்தான் அவளின் அன்புத் தம்பி.

[இதைக்கேட்டதும் அக்காக்காரிக்கு தன் தம்பி மேல் கோபம் வந்து விட்டது]

/சற்று இடைவேளை/
.............
.....................
............................
...................................
.........................................
...............................................
....................................................
.............................................................
.....................................................................
.............................................................................

”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்? நானா பைத்தியக்காரி? போடா போக்கத்தவனே ..... 

நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை By way of Cheque மட்டுமே; அதுவும் "Account Payee only" என்று Cross செய்யப்பட்டது. 

அதுவும் Payable -  in favour of 'MY BELOVED HUSBAND', only. 

அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது. 

ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது; 

பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா; 
உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள். 

இது எப்படியிருக்கு! 

தங்கள் கருத்தைக்கூறுங்களேன்.

அன்புடன்
vgk






செவ்வாய், 4 அக்டோபர், 2011

பெயர்ச் சூட்டல்




பெயர்ச் சூட்டல்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




இன்று சாயங்காலம் ஆபீஸ் விட்டு வீடு திரும்பும்போது எப்படியும் நல்ல செய்தி நம் காதில் விழுந்துவிடும் என்ற ஆவலில் ரகு, தன் வீட்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான்.


தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் தன் தாயும் தந்தையும் இவ்வளவு தூரம் அக்கறை காட்டுவதும், விவாதிப்பதும் அவர்களின் ஒரே பிள்ளையான ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து வியப்படையச் செய்தது.

எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.

நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, அவர்களாகவே தன்னிடம் தெரிவிக்கட்டும் என்று ஒருவித வெட்கத்துடன் ஹாலில் டீ.வி. பார்க்க அமர்ந்தான்.

இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, ஒரு வெள்ளைத்தாளில் அதை அப்படியே அழகாக எழுதி, நாலா பக்கமும் மஞ்சள்பொடியை சற்றே நீரில் கலந்து அழகாக பட்டையடித்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, அங்கிருந்த உண்டியலுக்குள் அந்தப்பேப்பரை மடித்துப்போட்டு ஞாபகமாக பத்திரப்படுத்தி விட்டனர்.

அவர்கள் வாயால் தன்னிடம் எதுவுமே சொல்லாததால் பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.









”நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப்பொருத்தமாய் இல்லைன்னு, நம்ம ஜோஸ்யர் இன்று வந்து சொல்லிட்டுப் போயிட்டாருடா; 


வேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வருதான்னு பார்ப்போம். 


எல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.     

ரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-




இந்தச்சிறுகதை "வல்லமை” 
மின் இதழிலும் இன்று 
04.10.2011 வெளியாகியுள்ளது.
www.vallamai.com

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

வ ர ம்





வரம்

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-ooOoo-


அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.

அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.

உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும். 


இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.

மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.

”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.

இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.

இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.
.....
...........
..................
.........................
................................
.......................................


நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
...

......

.........
....................

பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார்.