ஸ்ரீரங்கத்தில் பிறந்திருந்தாலும், பெங்களூரில் வாழுந்துவரும் பிரபல பதிவர் திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள் சமீபத்தில் ஒரு 10 நாட்கள் முன்பே என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தானும் தன் கணவரும் ஓர் உபநயன விழாவிற்காக ஸ்ரீரங்கம் வர இருப்பதாகவும் 20/02/2015 முதல் 25/02/2015 வரை ஸ்ரீரங்கத்தில், அம்மா மண்டபம் அருகே, [சென்னையில் தற்சமயம் உள்ள] தன் சகோதரிக்கு சொந்தமான பூட்டியே உள்ள ஓர் இல்லத்தில் தங்கப்போவதாகவும், திருச்சி பதிவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி, நீங்கள் அங்கு அழைத்து வந்தால் அங்கேயே நம் சந்திப்பினை வைத்துக்கொள்ள செளகர்யமாக இருக்கும் என என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
நான் இங்கு திருச்சியில் உள்ள, எனக்கு ஓரளவு நெருக்கமான தொடர்புகள் உள்ள [என்னையும் சேர்த்து] எட்டு நபர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலியனவற்றை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஏழு நபர்களுக்கும் தகவல் அனுப்பி இந்த இனிய சந்திப்புக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, நானும் எல்லோரையும் ரஞ்ஜனி மேடம் சார்பில் கேட்டுக்கொண்டிருந்தேன்.
எங்களுக்குள் இதுசம்பந்தமாக பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. 18.02.2015 அமாவாசையன்று திருச்சியிலிருந்து சென்னை செல்ல இருந்த [இந்த எட்டு நபர்களில் ஒருவரான] திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் பயணத்தை, இந்த இனிய சந்திப்புக்காகவே ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டோம். அவர்களும் எங்கள் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற தன் நீண்டநாள் ஆசையினால் தன் சென்னைப் பயணத்தையே ஒத்திப்போட்டதுடன், ”இந்த இனிய சந்திப்பு, தன்னுடைய இல்லத்திலேயேதான் நடத்தப்பட வேண்டும் என்றும், அதுதான் தனக்கும் வசதியாக இருக்கும்” என்ற நிபந்தனையையும் எங்கள் முன் வைத்துவிட்டார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாக நாங்கள் எல்லோருமே ஒருமனதாக, அந்த மூத்த பதிவரின் ஒரே நிபந்தனையை ஏற்றுக்கொண்டோம்.
இவ்வாறாக திருச்சி மாவட்ட பதிவர்கள் சார்பில் திருமதி. ரஞ்ஜனி நாராயணன் தம்பதியினருக்கு, திருச்சி மாவட்ட மிகப்பிரபலமான மூத்த பதிவர் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்களின் இல்லத்தில் எங்களால் 22.02.2015 ஞாயிறு மாலை 6 மணி சுமாருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், திருமதி. ரஞ்ஜனி அவர்களுக்கு, எழுத்துலகின் மூலம் மிகவும் பழக்கமான, ஆனால் இதுவரை நேரில் சந்திக்காத நம் திருமதி. ராதாபாலு அவர்களை எப்படியும் நான் என்னுடன் கூட்டிவந்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததை என்னால் நன்கு உணர முடிந்தது.
நிஜப்புலியின் வாலைப் பிடித்த எழுத்துலகப் பெண் புலியான திருமதி. ராதாபாலுவை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதே என்னுடைய நெடுநாள் ஆவலாகவும் இருந்து வந்தது.
ஆனால் ராதாபாலு அவர்கள் அப்போது தன் மகன் வீட்டுக்குச் சென்னைக்குச் சென்றிருந்தார்கள். தொடர்புகொண்டு பேசியபோது எப்படியும், சீக்கரமாக திருச்சிக்கு வந்து விடுவேன் என என்னிடம் கூறியது சற்றே ஆறுதலாக இருந்தது. என்னிடம் சொன்னபடியே 17.02.2015 திருச்சிக்குத் திரும்பி வந்து விட்டதாக தகவல் வந்ததும்தான் என் வயிற்றில் புலிப்பால் வார்த்தது போல இருந்தது.
திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் செல்வது என்பது எனக்கு முன்பெல்லாம் மிகவும் ஆவலாக இருந்து வந்தது. அப்போதெல்லாம் கோயில் பெரியதாகவும் ஊர் சிறியதாகவும் இருந்தது.
இன்று ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும் என்றாலே எனக்கு மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அந்தமிகப்பெரிய கோயிலைவிட இப்போது ஊர் பெரியதாகி விட்டது. ராஜகோபுரத்தையே மறைக்கும் அளவுக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள், ஊரின் விஸ்தரிப்புகள், ஏராளமான குடியிருப்புகள், மிக அதிகமான வாகனப் போக்குவரத்துகள், எங்கும் ஒரே பரபரப்புகள், ஜனங்கள் கூட்டம், டூரிஸ்டுகள், கல்யாண மண்டபங்கள் எனப்பெருகிப்போய் விட்டன.
அதுவும் ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு என்ற ஒன்று உள்ளதே .... அது ஸ்ரீரங்கத்திற்கே சற்றும் சம்பந்தமே இல்லாததுபோல .... அடுத்த ஊர் வரை நீண்ண்ண்ண்டு போய்க்கொண்டே உள்ளது.
தென்னூர் பகுதியில் உள்ள திருமதி ராதாபாலு அவர்களையும், திருச்சி K.K. நகரில் உள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களையும் என்னுடன் சேர்ந்தே கூட்டிப்போக வேண்டியது என் கடமை என உணர்ந்து CALL TAXI PACKAGE ஆக 4 மணி நேரங்களுக்கு வரவழைப்பதாக இருந்தேன்.
இதைக்கேள்விப்பட்ட திருமதி. ராதாபாலு அவர்கள், “கால் டாக்ஸி வேண்டாம், சார், நாங்கள் புதிதாக கார் வாங்கி ஓட்டக்கற்றுக்கொண்டு வருகிறோம் அல்லவா; அந்த எங்கள் சொந்தக்காரிலேயே நாம் மூவரும் செல்வோம்” என ஓர் அன்புக்கட்டளை பிறப்பித்து விட்டார்கள். மீண்டும் பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்த கதையாகிப்போனது, எனக்கு.
ராதாபாலு அவர்களின் அன்புக்கட்டளையை என்னால் எப்போதுமே மீற இயலாது என்றாலும், ’இப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு வருகிறோம்’ என்ற அவர்களின் பேச்சு என்னைக் கொஞ்சம் தயங்கி நடுங்க வைத்து விட்டது. :)
என்னதான் பேரன்புடன் கூடிய .. புலிவாலையே பிடித்த துணிச்சல் மிக்க .. மிகவும் வலுவான நட்புதான் எங்களுடையது என்றாலும், இந்த விஷப்பரிட்சைக்கு நான் ஒத்துக்கொண்டாலும், என்னவள் .... அதாவது என் மேலிடம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா .... என்ன ! :)
பிறகு தான் எங்கள் சந்தேகத்தைத் தெளிய வைத்தார்கள். “காரை ஓட்டி வரப்போவது நான் அல்ல, ஒரு அனுபவம் வாய்ந்த ஓட்டுனர், அதனால் நீங்க தைர்யமாக என்னுடன் வாங்கோ” என்று. எங்கள் மனது உடனே ஜில்லிட்டுப்போனது. :)
தான் சொன்னபடி 3.50 மணிக்குள் திரு. தமிழ் இளங்கோ அவர்களும் என் இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.
மிகச்சரியாக 4 மணிக்கு தன் வீட்டை விட்டு கிளம்பப் போவதாகவும், புறப்படும் முன்பு எனக்கு போன் செய்வதாகவும் ராதாபாலு என்னிடம் சொல்லியிருந்தார்கள். எப்படியும் ராதாபாலு தன் வீட்டைவிட்டுப் புறப்படும் முன்பு எனக்கு போன் வரும் என்ற நம்பிக்கையில் நானும் ஜாலியாகவே இருந்தேன்.
குணசீலம் கோயிலில் 22.02.2015 ஞாயிறு காலை முடிகாணிக்கை கொடுத்துவிட்டு, வந்துள்ள என் குட்டிப்பேரன் ஆதர்ஷையும், அவன் அண்ணன் அநிருத்தையும் நான் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.
முதல்முடி இறக்கிக்கொண்டு முதன்முதலாக வீட்டுக்கு வரும் குழந்தையை ஹாரத்தி சுற்றி வரவேற்றதுடன், பால் பாயஸம், தயிர்ப் பச்சடி, பொறித்த அரிசி அப்பளம், ஆம வடை, ஸ்வீட், 2 கறிகள், 1 கூட்டு, நல்ல பச்சரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரஸம், தயிர், ஊறுகாய், நுனி இலையில் சாப்பாடு என தடபுடல் விருந்து சாப்பிட்ட மயக்கம் வேறு எனக்கு.
திருமதி. ராதாபாலு அவர்களிடமிருந்து போன் ஏதும் வராததால் நானும் அப்போது புறப்படத் தயார் நிலையில் இருக்கவில்லை.
நம் அன்புக்குரிய திருமதி. ராதாபாலு அவர்கள் 4.05 க்குள் என் குடியிருப்பு பகுதி வாசலில் தன் சொந்தக் காருனுடன் வருகைதந்து என்னை கீழே இறங்கி வருமாறு போனில் அழைத்துவிட்டார்கள். நான் கொஞ்சம் காலதாமதம் செய்திருந்தாலும் ராதாபாலுவே மேலே ஏறி என் இல்லத்திற்கு வந்திருப்பார்கள். மேக்-அப் ஏதும் இல்லாமல் மிகவும் கேஷுவலாக இருந்த என்னைப்பார்த்து பயந்தே போய் இருப்பார்கள். என் இமேஜும் ஸ்பாயில் ஆகியிருக்கும். :)
”இதோ லிஃப்டில் கீழே இறங்கி வந்துகொண்டே இருக்கிறேன்” என்று ராதாபாலுவிடம் போனில் சொல்லியபடியே, நான் என் பேண்ட் ஷர்ட் முதலியவற்றை அப்போதுதான் தேடி எடுத்து அணிந்துகொள்ள ஆரம்பித்தேன். :) அவசரத்தில் பெல்ட் போடக்கூட மறந்துவிட்டேன். நல்லவேளையாக இடுப்பிலிருந்து பேண்ட் நழுவாமல், புத்தம் புதிய அரணாக்கயிறு காப்பாற்றியதில் கொஞ்சம் நிம்மதியே. :)
பொதுவாகப் பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து, நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு, கண்ணாடிமுன் நீண்ட நேரம் நின்றுகொண்டு, புறப்படவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பது என் சொந்த அனுபவம். ஆனால் இவர்கள் விதிவிலக்காக டாண் என்று 4.05 க்கே என் வீட்டு வாசலுக்கு காரில் வந்துசேர்ந்து, என்னைக் கீழே வருமாறு அழைத்ததில் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது.
அதுதான் நம் ராதாபாலு அவர்களின் ஸ்பெஷாலிடி ! :)
மொத்தத்தில் நாலும்
தெரிந்த நல்லவர்கள்.
அது என்ன நாலும் தெரிந்தவர்கள் என்றால் ......
ஒன்பது கெஜம் மடிசார் புடவை அணிவது,
ஆறு கெஜம் சாதாப்புடவை அணிவது
சுடிதார் அணிவது
ஜீன்ஸ் அணிவது
என வைத்துக்கொள்ளலாம் தானே ! :)
-oOo-
அன்று முரட்டுப் புலியுடன் !
இன்று
முரட்டுப் பாம்புடனும்
முரட்டு ஆமையுடனும் !!
இவர்களிடம் எதற்கும் கொஞ்சம் உஷாராகவே
பழக வேண்டும் என நினைத்துக்கொண்டேன் ! :)
புலிபோலச்சீறிப் பாய்ந்து,
பாம்பெனப் படமெடுத்து,
ஆமைபோல என்னையே
கவிழ்த்து மூடிவிடுவார்களோ
என்று எனக்கு பயமாக உள்ளது. :)
-oOo-
ராதாபாலுவின் காரின் பின் இருக்கையில் நானும்
திரு. தமிழ் இளங்கோ அவர்களும்
ஜாலியாக பயணிக்கும்போது
காருடன் ஜோராகத் தோன்றிடும்
நம் ராதாபாலு அவர்கள் !
குறித்த நேரத்தில் அன்புடன் வருகை தந்து என்னைத் தன் சொந்தக்காரிலேயே அழைத்துச் சென்று, சந்திப்பினில் கலகலப்பாகக் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், திரும்ப என் வீடுவரை என்னை பத்திரமாகக் காரிலேயே அழைத்து வந்து விட்டுவிட்டுப்போன கருணை உள்ளம் கொண்ட ராதாபாலு அவர்களை நான் எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா!
இரவு என் வீட்டு வாசலிலிருந்து பிரியாவிடை
பெற்றுச்செல்லும் அவர்களின் கார்.
பேரன்புக்குரிய ராதாபாலு அவர்களுக்கும், அவர்களின் ஓட்டுனர் திரு. ரமேஷ் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
-oOo-
முக்கியமான பதிவர் சந்திப்பினைப்பற்றி இன்னும் ஒன்றுமே சரிவரச் சொல்லாமல், ஏதேதோ நான் புதிய கதைகள் சொல்லிக் கொண்டிருப்பதாகத் தாங்கள் எல்லோரும் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது. என்ன செய்வது? நன்றி மறப்பது நன்றன்று அல்லவா!
பதிவர் சந்திப்பினைப்பற்றி இந்தத் தொடரின் அடுத்தப்பகுதியில் , மேலும் பல படங்களுடன் சுவாரஸ்யமாகவே பேச ஆரம்பித்து விடலாம் என நினைக்கிறேன்.
தொடரும்
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]
பின் குறிப்பு:
என் சமீப கால பதிவுகளில் மேலே காட்டியுள்ளது போல
‘என்றும் அன்புடன் தங்கள்’
என்பதற்கும்
’[வை. கோபாலகிருஷ்ணன்]’
என்பதற்கும்
இடையே ஆங்கிலத்தில் என் கையொப்பம் போலத் தோன்றுகிறது அல்லவா ! அதனை அதாவது என் கையொப்பத்தினை எனக்காக பலவித டிசைன்களில் வடிவமைத்து கொடுத்துள்ளதும் நம் ராதாபாலு அவர்களே !
அவர்கள் நீட்டும் இடத்திலெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் சொல்படி நான் சமத்தாகக் கையெழுத்துப்போட்டு வருகிறேன். இதுவரை அழகாக ஆறு கையொப்பங்களை எனக்காக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்கள். இன்னும் அழகாக மேலும் சிலவற்றை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியுள்ளார்கள்.
என் கையொப்பத்தை நான் எப்படியெல்லாம் ஸ்டைலாகப் போடணும் என எனக்குக் கற்றுக்கொடுத்து உதவியுள்ள ராதாபாலு அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
நன்றியுடன் கோபு