’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
3) 'மணிக்கொடி'
பி.எஸ். ராமையா
[பக்கம் 26 முதல் 29 வரை]
’மணிக்கொடி’யின் முதல் இதழ் பார்த்து ராமையா சொக்கிப்போனார். அந்தப்பத்திரிகையில் பணியாற்ற வேண்டுமென்கிற ஆசையில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து தமது ஆசையை உரிமையாளர் ஸ்ரீநிவாசனிடம் தெரிவிக்கிறார். ராமையாவுக்கு பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலை கிடைக்கிறது. எந்த வேலையானாலும் சரி, இந்தப் பத்திரிகைக்கு ஏதாவது ஒரு வகையில் உழைக்கவேண்டுமென்கிற உள்ளக்கிடக்கையில் ஒப்புக்கொள்கிறார் ராமையா.
’நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி’ என்று தஞ்சைப்பகுதியில் அந்தக்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அந்த மாதிரியான சின்ன ரயில் நிலையங்களில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர்தான் பணிக்கு இருப்பவராய் இருக்கும். டிக்கெட் கொடுப்பதும் அவரே, வெளியேறும் பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்வதும் அவரே, பாயிண்ட்ஸ்மேனும் அவரே. அந்த ஸ்டேஷன்மாஸ்டர் மாதிரி, எழுத, பிழைதிருத்த, பேப்பர் வாங்க, தபால் நிலையம் செல்ல, ஸ்டாம்ப் ஒட்டி பார்ஸல் கட்ட என்று ராமையா அந்தப் பத்திரிகைக்கு சகலமும் ஆகிறார். விழிப்பிலும், தூக்கத்திலும் ராமையாவுக்கு மணிக்கொடியே மனசு பூராவும் வியாபித்து அந்தப் பத்திரிகைக்காகத்தான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்கிறதான நினைப்பு மேலோங்குகிறது.
'மணிக்கொடி’ பி.எஸ். ராமையா அவர்களை நீடாமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி என வேடிக்கையாக ஒப்பிட்டுச் சொல்கிறார் ஜீவி. சுதந்திரப் போராட்ட வீரரான இவரைப்பற்றிய மேலும் சுவாரஸ்யமான பல தகவல்கள் ஜீவியின் நூலில் உள்ளன.
ஆனந்த விகடன் போட்டியில் பரிசுபெற்ற சமூக சீர்திருத்த புரட்சிக்கதையான ‘மலரும் மணமும்’ பி.எஸ். ராமையா எழுதியதே. 1936ல் மணிக்கொடியில் இவர் எழுதியுள்ள ‘கார்னிவல்’ என்ற கதை பற்றியும், ’போட்டிக் கதை’ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள சிறுகதை பற்றியும் ஜீவி புகழ்ந்து சொல்லியுள்ளார்.
பி.எஸ். ராமையாவின் மிகச்சிறந்த நாடக ஆக்கங்களான ’தேரோட்டி மகன்’ ‘பூவிலங்கு’ ‘மல்லியம் மங்களம்’ ‘பாஞ்சாலி சபதம்’ என்பவற்றின் சிறப்புக்களையும் ஜீவி மறக்காமல் நமக்கு நினைவூட்டுகிறார். திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படமே பி.எஸ். ராமையாவின் வெற்றி கண்ட நாடகமே என்கிறார் ஜீவி. ‘இந்த மன்றத்தில் .... ஓடிவரும் .... இளம் தென்றலைக் கேட்கின்றேன்... என்ற புகழ்பெற்ற இனிமையான பாடல் இடம்பெற்ற படம் இது என்பதையும் ஜீவி நமக்கு நினைவூட்டத் தவறவில்லை.
4) புதுப்பாதை அமைத்த
புதுமைப்பித்தன்
[பக்கம் 30 முதல் 35 வரை]
புதுமைப்பித்தன்
[பக்கம் 30 முதல் 35 வரை]
எதுபற்றியும் ஊன்றி கவனித்து அதுபற்றி தன்னில் பதிந்ததை அல்லது அதுபற்றி படித்துப் பிடித்ததை கதைகளாக வடித்துவிடும் துடிதுடிப்பு புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் தெரிகிறது. அவர் தரும் கதைகளின் முடிவும் பளீரென்று மின்னல் வெட்டாய் நிகழ்ந்து இதற்குமேல் விவரிக்க என்ன இருக்கிறது என்ற உணர்வையும் தோற்றுவிக்கும் என்கிறார் ஜீவி.
அதற்கு உதாரணமாக ‘பொன்னகரம்’ ‘ஒருநாள் கழித்து’ கல்கி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ [கலைமகளில் வெளியானது]; ‘சாப விமோசனம்’; ‘உணர்ச்சியின் அடிமைகள்’; ‘கயிற்றரவு’; ‘காஞ்சனை’; ‘மனித யந்திரம்’; ‘கபடாபுரம்’ போன்ற பலகதைகளை எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள தனித்தன்மைகளை தனக்கே உரித்தான பாணியில் சிலாகித்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
ஒவ்வொன்றையும் படிக்கப்படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளது.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்




























