அன்பான நெஞ்சங்களுக்கு....
பிரபல இசை விமரிசகர் அமரர் சுப்புடு அவர்களுக்கு பாடத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.
அவர் பாடிக் கேட்டதாக யாரும் சொல்லிப் படித்ததுமில்லை.
நிச்சயம் அவருக்குப் பாடத் தெரிந்திருக்கும் என்றும் நன்றாகப் பாடுவார் என்று நினைப்பதும், இது இருந்தால் அது இருக்கத்தான் வேண்டும் என்கிற மாதிரி ஒரு நிலை.
அதே மாதிரி கதை விமரிசனம் எழுதத் துணிவோரிடம் எழுத்தாள குணாம்சமும் படிந்திருக்கும் என்று நினைப்பதில் தப்பில்லை.
சொல்லப்போனால் வாசகர், விமரிசகர், எழுத்தாளர் என்பதெல்லாம் ஒன்றே ஆன பல நிலைகள் தாம்.
தேர்ந்த வாசகரின் இன்னொரு பரிமாணம் தான் எழுத்தாளர். எழுத்தாளருக்கும் விமரிசன குணம் வாய்த்திருந்தால் தான் எதையும் எழுதவே முடியும். வாசக, எழுத்தாள நிலைகளின் உள்ளார்ந்த வெளிப்பாடே விமரிசனங்களும். அதனால் இதெல்லாமே ஒன்றில் ஒன்றாகப் புதைந்திருக்கும் செயல்பாடுகள். தேவைக்கேற்ப எதுவொன்றாகவும் வெளிப்படும்.
கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு மேலே; ஏறத்தாழ இருநூறு விமரிசனங்களின் பிரசுரிப்பு; இது ஒரு சாதனையா என்றால், நிச்சயம் சாதனை தான். அதுவும் பதிவுலகில் நிகழ்வுற்ற சாதனை.
இன்றைய தேதியில் பதிவுலகில் நிகழ்வுறும் எந்த செயலும் பிற்காலத்து ஏற்படக் கூடிய பெருத்த மாறுதல்களுக்கு இப்போதே தயாராகிக் கொண்டிருப்பதாக அடிக்கடி இப்பொழுதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன்.
காலஞ்சென்ற எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 'என் எழுத்துக்கள் அத்தனையையும் வலைத்தளத்தில் ஏற்றுங்கள்' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டதும் அதனால் தான்.
காகித அச்சுலகம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பழம் பெருமைகளையெல்லாம் இழந்து மங்கி வரும் காலமிது; துந்துபி முழங்க மின்னணு உலகம் எழுந்து நின்று எல்லாவற்றையும் வாரிசுருட்டி தன்னுள் அடக்கிக் கொள்ள பகாசுர பசியுடன் தயாராகிக் கொண்டிருக்கும் காலமும் இதுவே. குட்டியூண்டு ஐபாடில் IBooks, kindle என்று வகைவகையாய் கதைப் புத்தகங்களைப் படிக்கும் காலமிது.
இதுவே இப்படியான சாகசங்களின் மீதும் பதிவுலகின் வளர்ச்சியின் மீதும் தணியாத பாசமாய் தளும்பி மேலோங்குகிறது.
பத்து வருடங்களுக்கு முன் நான் பதிவுலகில் 'என் பக்கங்கள்' என்று என் எழுத்தை ஆரம்பிக்கும் பொழுது இருந்த நிலை அல்ல இன்று. அன்றிருந்த குழந்தைத்தனம் இன்று இல்லாமல் வாலிபனாய் வளர்ந்ததே போல் பக்கம் பக்கமாக தங்கள் சொந்த படைப்புகளைப் படைத்து எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பதிவர்கள் அழகு பார்க்கும் காலம் இது! எல்லா துறைகளிலும் ஏகப்பட்ட விஷயங்களை அடக்கிக் கொண்டு கல்வெட்டாய் காலமெல்லாம் பதிந்திருக்கப் போகும் இடமும் இதுவே! மொழியின் வளர்ச்சிக்கு, அதன் எந்த ஆக்கபூர்வமான சோதனை முயற்சிகளுக்கும் களனாகப் இருக்கவிருக்கும் நிலைக்களனும் இந்த இணையமே.
எதிர்கால எதிர்பார்ப்பு ஏற்றங்களுக்கு ஏற்ப நம்மை சரிபடுத்திக் கொண்டே ஆக வேண்டிய காலமும் இது தான்!
தேர்ந்தெடுத்த இருநூறுக்கு சற்றே உள்ளடங்கிய விமரிசனங்களைத் தவிர தேர்வு பெறாத விமரிசனங்களையும் ஆர அமர படித்துப் பார்த்து பெறுவதற்கரிய வாய்ப்பு பெற்ற உணர்வின் உந்துதலில் ஒன்றே ஒன்று உங்களிடம் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.
விமரிசகர்கள் தங்களுக்குள் புதைந்திருக்கும் இன்னொரு சொரூபமான எழுத்தாள உள்ளத்தைப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைப்பது தான் அது. அப்பொழுது தான் விதவிதமாக எழுதக் கூடிய எழுத்து லாவண்யங்கள் வசப்படும்.
அது என்ன எழுத்தாள உள்ளம்?...
கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது. எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.
இந்த சித்தி வாய்க்கப் பெற்றால் எழுத்தாளன் ஒன்றை நினைத்து எழுத விமரிசனம் எழுதப் புகும் நீங்கள் வேறொன்றாக அதை வியாக்கியானம் பண்ணுகிற விலகிய நிலை ஏற்படாது. இந்தக் கதை இப்படித்தான் போக்கு காட்டப் போகிறது, முடியப் போகிறது என்று முன்னாலேயே தெரியும். இந்த நிலை தான் விமரிசகருக்கும் எழுத்தாளருக்கும் பேதமில்லாத அபேத நிலை.
இந்த நிலையில் வாசிப்பின் தீவிரத்தில் முதல்தர எழுத்துக்களை அவாவுகிற வாசகஆசை தன்னாலே உங்களுக்கு வந்து விடும். அந்த ஆசை தான் ஈடுபாடுகளுக்கான வித்து. உங்கள் ஈடுபாடுகளே உங்களைத் தீர்மானிப்பதால், ஈடுபாடுகள் மாறிப்போனால் நீங்களே மாறிப்போவீர்கள். தன் எழுத்தால் சிந்தனையால் மற்றவர்களை influence பண்ணுகிற சக்தி கிடைப்பது கிடைத்தற்கரிய வரம். இந்த வரம் கைவரப் பெறுவது தான் சிறந்த எழுத்தாளர்களின் இலட்சியமாகிப் போகிறது. வாசகர், விமர்சகர், எழுத்தாளர் என்கிற நிலைகளும் ஒன்றேயான நிலையாதலால் நம் செளகரியப்படி எந்த நிலையிலும் பிறரை ஆகர்ஷிக்கலாம்.
'ஆதலினால் எழுத்தாள உள்ளமும் அந்த அசகாயத் திறமையும் கைவரப் பெறுவீர்!' என்று கேட்டுக் கொள்ள நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.
இந்த போட்டியைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு கதைக்கான போட்டியிலும் கலந்து கொண்டவர்களில் சிறந்த விமரிசனம் என்பது தான் தேர்வுக்கான அடிப்படைக் காரணியாக அமைந்து விட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது எல்லாப் போட்டிகளிலும் இப்படித்தானே தேர்வு அமையும் என்று தோன்றும். ஒரே ஒரு போட்டியாக இருந்தால் போட்டிக்கு வந்தவற்றில் மிகச் சிறந்தவை என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ளலாம். ஆனால் இந்தப் போட்டியோ, உண்மையில் நாற்பது கதைகளுக்கான நாற்பது போட்டிகள்! நாற்பது போட்டிகளுக்கும் வெவ்வேறான கதைகள்! நாற்பது போட்டிகளுக்கும் அந்தந்த சூழ்நிலைகளில் விமர்சகர்களின் எண்ணமாய் அமைந்து போய் வந்து சேர்ந்த விமரிசனங்கள்! இருந்தும் தன் பதிவுதளத்திற்கு வழக்கமாக வந்து வாசிப்பவர்களைத் தாண்டி இந்த விமரிசன வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோபு சார் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்தார்.
சாதாரணமானவன் தான் என்று வெகு அடக்கமாக அவர் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் எதாவது சாதிக்க வேண்டும் என்று மனத்தில் எப்போதும் நினைக்கும் அவர் இலட்சிய நோக்கு இரவு பகல் பாராத அவரது தளராத செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தது. 'இந்தியாவில் இப்பொழுது இரவு மணி இரண்டாச்சே! தூங்கப் போங்க சார்; நான் அனுப்பி வைக்கிறேன்; அதை நாளைக்கு நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்' என்று வற்புறுத்தி சொல்லியும் பல சமயங்களில் அதைக் கேட்டுக்கொண்டதில்லை அவர். 'அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலை முடிந்தாக வேண்டிய' மனநிலை அவருக்கு. அதே மனநிலையை அங்கிருந்து கொண்டே இங்கு எனக்கு அவர் டிரான்ஸ்பர் பண்ணியது தான் அதிசயம். நானும் என் சொந்த வேலைகளுக்கு பகல் நேரம், இந்த போட்டி வேலைகளுக்கு இரவு நேரம் என்று ஒதுக்கி வைத்துக் கொண்டது, எந்த சுணக்கமும் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் குறித்த நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட விமரிசனங்கள் வெளியாவதற்கு பெரும் துணையாயிருந்தது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
போட்டிக்கான கதைகளையும், தேர்வு பெற்ற விமரிசனங்களையும் மிகப்பிரமாதமாக ஜோடனை பண்ணி வெளியிட வேண்டும் என்கிற அவரது தணியாத 'பிரசண்டேஷன் ஜாலம்' அவரது பணி நேரத்தின் பெரும் பகுதியைச் சாப்பிட்டு விட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
நானோ போட்டிக்கு வரும் விமரிசனங்களின் தரத்தை உயர்த்த எனக்குத் தெரிந்த எல்லா முயற்சிகளையும் செய்தேன். பத்திரிகை எழுத்தைப் போலவோ அல்லது அதை விஞ்ச வேண்டுமென்றோ நினைத்து செயல்பட்ட ஒரு இலட்சியம் எனக்கு இருந்தது. சொல்லப்போனால அந்த இலட்சியம் தான் என்னை வழிநடத்தியது. அதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டதால் தான் விமரிசனர்களுக்கும் அவர்களின் எழுத்துக்களில் சில மாற்றங்களைக் கொள்ள வேண்டி சில ஆலோசனைகளைச் சொல்ல வேண்டியதாகி விட்டதே தவிர அதற்கென்று தனிப்பட்ட வேறு எந்தக் காரணமும் இல்லை. கதாசிரியருக்கு வக்காலத்து வாங்குவதற்காகவோ, எங்கும் இல்லாத அதிசயமாக நடுவரும் விமரிசகர்களில் ஒருவராக வேண்டும் என்ற எண்ணத்தினாலோ இந்தக் காரியம் நிகழவில்லை. இவ்வளவு சிரமப்பட்டு, இவ்வளவு பரிசுகள் அளித்து நம் பதிவுலகில் முதல் முறையாக நாம் செயல்படும் மிகப் பெரியவான ஒரு சோதனை முயற்சி இது என்பதாலேயே எல்லா விதங்களிலும் இந்த போட்டி பதிவுலகில் இனி வரவிருக்கும் போட்டிகளுக்கு எடுத்துக்காட்டாய் முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இன்னொன்று. போட்டிக்கு வந்திருந்த நிறைய கட்டுரைகள், நறுக்குத் தெரித்தாற் போல ஓரிரண்டு பாராக்கள் அளவிலேயே எழுதப் பெற்றிருந்தது இன்னொரு ஏமாற்றம். இவர்கள் இன்னும் கொஞ்சம் எழுதி போட்டி விதியான A4 சைஸ் காகித அளவையானும் அடைந்திருக்கக் கூடாதா என்று ஏக்கப்பட வைத்தது. அப்படி ஏக்கப்படுகிற அளவுக்கு அவர்களின் எழுத்து இருந்திருந்து இப்படி ஏங்கவும் வைத்தார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன்..
தொடர்ந்து சளைக்காமல் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாய்ப்பைப் பெற்றவர்கள் என்னை பிரமிக்க வைக்கிறார்கள்; அப்படி வெற்றி பெற்றவர்களிலும் இந்த பத்து மாத கால அளவில் அந்தந்த நேரத்து கலந்து கொண்டு தொடர்ச்சியாகக் கலந்து கொள்ளாதவர்களும் உண்டு என்பதினால் அந்தந்த நேரத்தில் கலந்து கொண்டவர்களின் சிறந்த விமரிசனங்கள் பரிசுக்குத் தேர்வானதாக கொள்ள வேண்டுகிறேன். எல்லா நேரத்தும் எல்லாரும் கலந்து கொண்டிருந்திருப்பார்களேயானால் இன்னும் இன்னும் வேறுபட்ட பார்வைகளான விமரிசனங்களை வாசித்து ரசிக்கும் ரசனையும் நமக்கு கிட்டியிருக்கும்.
இந்த போட்டி கால அளவில் எல்லோரிடம் தொடர்பு கொண்டிருந்த அரிய வாய்ப்பு கிடைத்ததை பெறும் பேறாக நினைக்கிறேன்.. இந்த நம் நட்பின் தொடர்பு இதோடு முடிந்து விடாமல் மேலும் தொடர விரும்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
jeeveesblog.blogspot.com என் பது என் பதிவு தளம். அன்பர்கள் தவறாது அந்த தளத்திற்கு வந்து தங்கள் அன்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
கோபு சாரின் இந்த பதிவு தளத்தை என் தளம் போலத் தான் இந்த போட்டி காலத்தில் பாவித்தேன். அந்த உரிமையை எனக்குத் தந்த கோபு சாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.
அன்பர்களே, உங்கள் பேரன்பிற்கும் பரிவுக்கும் மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ப்ரியமுள்ள,
ஜீவி
Respected My Dear Jeevee Sir,
நமஸ்காரங்கள், வணக்கம்.
'அன்பான நெஞ்சங்களுக்கு....’ என்ற தலைப்பினில் தாங்கள் எழுதியுள்ள இந்தக்கடிதம் மிகப்பிரமாதமாக அமைந்துள்ளது. தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
//கதையைப் படித்துக் கொண்டே வரும் பொழுதே, அந்தக் கதையை எழுதிய எழுத்தளனின் எண்ண அலைகளோடு ஒன்றரக் கலப்பது. எழுதியவனும் வாசிப்பவனுக்குமான எண்ண சங்கமம் இது. எழுதிய எழுத்தின் ஜீவனை உள்வாங்கிக் கொள்கிற அற்புத ஆற்றல் இது. இந்த ஆற்றல் மட்டும் கைவரப்பெறின் எழுதியவனும் வாசிப்பவனும் இரு வேறு நபர்கள் என்கிற யதார்த்த நிலை உடலுக்கே என்றாகி உள்ள ஒத்திசைவில் ஒன்றரக் கலக்கலாம்.//
ஏற்கனவே நம்மில் ஒரு Set of People இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளால், நமக்குள் நாம் உள்ளத்தின் ஒத்திசைவில் ஒன்றரக் கலந்தே விட்டோம் என்றே எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. :)
இந்த மகத்தான போட்டிகளின் நிறைவினால், இப்போது நாம் ஒவ்வொருக்கொருவர் சற்றே பிரிய வேண்டிய நிலை, ஏற்பட இருப்பதை நினைக்கும்போதுதான், மனதுக்குக் கொஞ்சநஞ்சமல்ல நிறையவே வேதனையாக உள்ளது.
இது காலத்தின் கட்டாயம். தவிர்க்க இயலாதது தான். ஏதேனும் ஒரு ஆரம்பம் என்று இருந்தால் அதற்கு ஒரு முடிவு என்பதும் வேண்டும் தானே !
ஏதோ அந்த முடிவு என்பதும், மனதுக்கு நிறைவாக இன்பமாக நிறைவுற்றதில் எனக்கும் மகிழ்ச்சியே. அற்ப ஆயுளில் முடியாமல், நூறு ஆண்டுகள் நிறைவாகவே வாழ்ந்த ஒருவர் கனகாபிஷேகம் செய்துகொண்டது போலவே, 100% நம் அனைவருக்குமே திருப்தியாக அமைந்துவிட்டதில் எனக்கும் ஓர் தனி சந்தோஷமே.
இதே இனிய நினைவுகளுடன் நாம் அனைவரும் அவரவர்களின் பதிவினில் தொடர்ந்து சந்திக்கப் பிராப்தம் நமக்கு சாதகமாக அமையட்டும்.
நன்றியுடன் கோபு
அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும்
VGK-31 To VGK-40 போட்டிகளில்
பரிசு பெற்றவர்கள் பற்றிய
ஒட்டுமொத்த விபரங்கள்
அவரவர்களுக்கான
மொத்தப் பரிசுத்தொகைகளுடன்
நாளை வெளியிடப்பட உள்ளன
என்பதை பெருமகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
பரிசுத்தொகைகள் மின்னல் வேகத்தில்
தங்களை வந்தடையப்போகும்
தேதியும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கருத்தளிக்க மறவாதீர்கள் !!
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்





























.gif)

