என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

அன்னமிட்ட கைகள்
அன்னமிட்ட கைகள்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-வந்தாரை வரவேற்று வயிறு முட்டச்சோறு போட்டு விருந்தளித்தவர்கள் தான் ரெங்கமணியும் தங்கமணியும். அது ஒரு காலம். செல்வச் செழுப்பினில் வாழ்ந்த காலம். 
அந்த கிராமத்திலேயே அன்னதானப் பிரபுக்கள் பரம்பரை என்று தான் அவர்களுக்குப் பெயர்.  பல தலைமுறையாக ஊருக்கு வருவோர் போவோர் அனைவருக்குமே தேர், திருவிழாக்கள் போன்ற விசேஷ நாட்கள் மட்டுமின்றி தினமுமே கூட ஒரு பத்து பேர்களுக்காவது அன்னமிட்ட பிறகே உண்ணும் உத்தம பரம்பரையில் வந்த தம்பதியினர் தான்.


இன்று அவர்கள் நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. வயதாகிவிட்டது. செல்வம் அனைத்தும் செல்வோம் என்று விடை பெற்று விட்டன. மனம் இருந்தும் கையில் பணம் இல்லாத நிலை.
அவர்கள் இருவரும் இரண்டு வேளை சாப்பிடவே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுவரும் நிலையில் அவர்களால் என்னதான் செய்ய முடியும்?


அவர்களின் இன்றைய நிலைமை தெரியாமல், இங்கிதம் தெரியாமல் இன்றும் அவர்களை நாடி வருவோர் ஒரு சிலர் இருந்தனர்.


அதுவும் இந்த சுப்பண்ணா இருக்கிறாரே, அடிக்கடி வருவார். ஏதேதோ பழங்கதை பேசுவார்.  ஏதாவது சாப்பாடு சாப்பிடாமல் இடத்தைக் காலி செய்யவே மாட்டார்.
உபசாரம் எப்படிக்கிடைக்கிறதோ அதற்கேற்றார்போல ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளைகளோ உணவு சாப்பிட்டு விட்டுத்தான், அரை மனதோடு பிரியாவிடை பெற்றுச்செல்வார்.


இன்று அவர்கள் வீட்டில் ஏதோ கொஞ்சமாக அரிசியும், அரைக்கிலோ வெண்டைக்காய்களும்மட்டுமே உள்ளன. ஒரு வேளைக்கான உணவு எப்படியும் தயாரித்து விடலாம். இரவுக்கு வேறு ஏதாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, காலை எட்டு மணிக்கு ஆற்றங்கரைக்குக் குளிக்கக் கிளம்ப ஆயத்தமானார் ரெங்கமணி.


“என்ன செளக்யமா .... ரெங்கமணி ... ... தங்கமணி ..... இன்று என் சாப்பாடு உங்களுடன் தான். ஒன்றும் அவசரமில்லை. சமையல் மெதுவாக நடக்கட்டும், நானும் என் பாராயணங்கள் முடிக்க எப்படியும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகும்” என்ற படியே ஒரு ஓரமாக பாராயணம் செய்ய அமர்ந்து விட்டார், சுப்பண்ணா.“ஆற்றில் குளித்து அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு எப்போ வருவேள்? இவர் வேறு வந்திருக்கிறாரே? நான் என்ன செய்யட்டும்? என்று கேட்பதுபோல ரெங்கமணியை சங்கடத்துடன் நோக்கினாள் தங்கமணி. 


“நாம் என்ன செய்வது? ஏதோ நம் மீதுள்ள பிரியத்தில் நாம் அழைக்காமலேயே வந்து விடுகிறார் இந்தப்பெரியவர்.  ஏதாவது அட்ஜஸ்டு செய்து, நான் வரும்வரை காத்திராமல், அவருக்கேனும் ஏதாவது இருப்பதைக் கொண்டு சமையல் செய்து போட்டுவிடு.
இல்லையென்றால் ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விடு என்று ஏதோ ரகசியமாகச் சொல்லிச் சென்றதை, சுப்பண்ணாவும் தன் பாம்புச் செவிகளில் வாங்கிக் கொள்ளத் தவறவில்லை.
ஆற்றுக்குக் குளிக்கச்சென்ற ரெங்கமணி மணி மூன்றாகியும் வீடு திரும்பவில்லை. ஆற்றுத் தண்ணியை அள்ளிக் குடித்துவிட்டு, ஆற்றங்கரைப் பிள்ளையார் அருகில் அமர்ந்து ஜப தபத்தில் நெடுநேரம் ஈடுபட்டுவிட்டார்.
அன்னதானப் பரம்பரையல்லவா.!  வந்துள்ள விருந்தினராவது திருப்தியாகச் சாப்பிடட்டும், அதில் நாம் பங்குக்குப் போக வேண்டாம் என்று நினைக்கலானார். 
வந்தப் பெரியவரோ அதற்குமேல் விடாக்கொண்டன் கொடாக்கொண்டனாக, தங்கமணி எவ்வளவு வற்புருத்தி அழைத்தும் சாப்பிட வராமலேயே இருக்கலானார்.
எவ்வளவு நாழியானாலும் ரெங்கமணி வராமல் நான் சாப்பிடுவதாவது என்று பிடிவாதமாக மறுத்து வாசல் திண்ணையில் வந்து அமர்ந்து விட்டார்..
பெரியவர் இந்நேரம் எப்படியும் சாப்பிட்டிருப்பார் என்று நினைத்த ரெங்கமணி வீடு வந்து சேர்ந்ததும், சாப்பிடாமல் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரைப் பார்த்ததும் கண் கலங்கினார். 
பிறகு அவரை உள்ளே அழைத்துப்போய் மனைவியை அழைத்து சாப்பாடு போடச்சொன்னார்.   தானும் பெரியவர் அருகிலேயே அமர்ந்து கொண்டார். 
தான் குளித்துவிட்டு வரும்போது வேறு ஒரு நண்பரின் அழைப்பைத் தட்டமுடியாமல் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்ததாகவும், உண்ட களைப்பில் அப்படியே சற்று கண் அசந்து விட்டதாகவும், அதனால் தகவல் சொல்லி அனுப்ப முடியாமல் போனதாகவும் சொல்லி, தன்னை அதற்காக மன்னிக்கும் படியும் வேண்டினார். 
தன் மனைவியிடமிருந்து ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி அருந்தி, செயற்கையாக ஒரு ஏப்பம் விடலானார், ரெங்கமணி.
பெரியவர் சாப்பிட்டதும், திண்ணையில் வந்தமர்ந்தார்.  ரெங்கமணியிடம் ரூபாய் நோட்டுக் கட்டுகளாக திணிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய துணிப்பையை ஒப்படைத்தார். 
“என்ன இது”  என்று அதிர்ச்சியுடன் கேட்டு ரெங்கமணி திகைக்கலானார்.
“உன் தாத்தாவும் உன் அப்பாவும் செய்த அன்னதானத்தில், வளர்ந்தவர்கள் தான் என் அப்பாவும் நானும்.  இன்று என்னிடம் ஓரளவுக்குப்பணம் சேர்ந்துள்ளது. ஆனால் ஒண்டிக்கட்டையான எனக்கு உன்னையும் தங்கமணியையும் விட்டால் இந்த உலகில் சொந்தம் கொண்டாட யார் இருக்கிறார்கள்? அதனால் தான் ஒருவித பாசத்தினால் உங்களைப் பார்க்க அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறேன்.உங்கள் வீட்டிலேயே உரிமையுடன் எவ்வளவோ நாட்கள் சாப்பிட்டிருக்கிறேன். இனி என் சொச்ச கால செலவுக்கு கொஞ்சம் பணத்துடன் காசிக்குப் போய்விடலாம் என்று இருக்கிறேன். இதில் ஏழு லட்சம் ரூபாய் இருக்கிறது. இதை உங்கள் பரம்பரை இதுவரை செய்துவரும் அன்னதானத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதற்குப் பயன் படுத்திக்கொள்” என்று கூறி ஒப்படைத்தார். 
“பணமெல்லாம் வேண்டாம்” என்று ரெங்கமணி வாங்க மறுத்து விட்டார்.
”ரெங்கமணி, நீ உன் தாத்தா அப்பா போலவே ரொம்ப நல்ல மனம் படைத்தவன். உன் மனைவி தங்கமணியும் தங்கமானவள் தான். இருப்பினும் நேற்றுவரை எனக்கு நீங்கள் அன்னமளித்ததற்கும், இன்று அன்னமிட்டதற்கும் நிறைய வித்யாசத்தை என்னால் உணரமுடிகிறது.    
இன்று வெண்டைக்காய் கறி, வெண்டைக்காய் குழம்புத்தான் என்று ஒன்னை ரெண்டாக்கிவிட்டீர்கள். பகல் சாப்பாடு, இரவு சாப்பாடு என்று ரெண்டாக பழகிய நீங்கள், இன்று என் வருகையால் ரெண்டை ஒன்னாக்கி 4 மணியாகியும் சாப்பிடாமலேயே இருக்கிறீர்கள்; 
உங்களுக்கு நல்ல மனம் உள்ளது பணம் மட்டும் தான் இல்லை. அதுவும் இன்று தான் இல்லாமல் உள்ளது.  என்னிடம் இன்று நிறைய பணம் சேர்ந்துள்ளது. ஆனால் சொந்தபந்தம் ஏதும் இல்லாமல் உள்ளது; 
இந்தப்பணம் உங்களைப்போன்ற நல்ல மனம் உள்ளவர்களிடம் இருந்தால் தான் அன்னதானம் தொடர்ந்து நடைபெற முடியும். அதனால் ஏற்படும் புண்ணியம் உனக்கு மட்டுமல்ல எனக்கும் கூடவே வரும்; 
நான் இறந்த பிறகு, இனி என் இந்தப்பணத்தினால் நீங்கள் தொடரப்போகும் அன்னதானப் புண்ணியத்தால் எனக்கும் நல்லகதி கிடைக்ககூடும்.. அதனால் இதை தயவுசெய்து ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அன்னதானம் செய்து வா” என்றார்.    .  
.


சுப்பண்ணாவை கண் கலங்கியபடிக் கட்டித்தழுவிய ரெங்கமணி, அவரைக் காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், தங்களுடனேயே தங்கள் தகப்பனார் போல இருந்துவிட வேண்டும் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்ள, சுப்பண்ணாவும் ரெங்கமணியைத்தன் சொந்தப்பிள்ளைபோல பாசத்துடன் கட்டித்தழுவிக்கொண்டு அவர்களுடனேயே தங்கிவிட சம்மதித்தார்.
இவற்றையெல்லாம் அருகில் நின்று கவனித்த அன்னமிட்ட கைகளையுடைய தங்கமணிக்கும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வரலானது.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


  

48 கருத்துகள்:

 1. ஒண்ணை இரண்டாக்கி, இரண்டை ஒன்றாக்கிய அந்த ஆதர்ச தம்பதிகளை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. இன்றும் கூட எனக்கு தெரிந்து விருந்தோம்பலை ஒரு நோன்பாகவே செய்யும் சிலரை அறிவேன். அன்னபூரணி அனைவரையும் ரக்ஷிக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. அன்னபூரணியின் அருள் அந்த ஆதர்ச தம்பதிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கட்டும்...

  நல்ல சிறுகதை... பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மனதை நெகிழ வைக்கும் கதை. கதை என்றில்லாது உங்களுக்குத் தெரிந்த பழைய தலைமுறை வரலாறாகக் கூட இருக்கலாம்.
  இப்படிப்பட்ட ஈர நெஞ்சத்தவர்கள் இருந்ததினால் தான் மும்மாரி மழையும் பொழிந்தது!
  நல்ல மனத்திற்கிசைவான கதைகளை தொடர்ந்து தரும் உங்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. கதையோட்டம் நெகிழ வைத்து விட்டது

  பதிலளிநீக்கு
 5. மேன்மக்கள் என்று சொல்லக்கேள்வி ஐயா...
  இதோ இன்று தங்கள் கதையில் கண்டேன்..
  சுப்பண்ணா போன்று செஞ்சோற்றுக்கடன் செய்பவர்கள்
  இன்று உலகில் எத்தனை பேர். எண்ணிக்கையில் அடக்கிவிடலாம்.
  அதிலும் குறிப்பறிந்து உதவி செய்தல் என்பது மிகப் பெரிய விஷயம்.

  தர்மம் செய்து வாழ்ந்த முன்னோர்களின் வழிநடந்த ரெங்கமணி மற்றும் தங்கமணி
  போன்றோர் இவ்வுலகில் வாழும் வரை, தர்மம் எப்போதும் வெல்லும்.

  அருமையான கதை ஐயா.

  பதிலளிநீக்கு
 6. ரெங்கமணி, ஒன்றை இரண்டாக்கியதும். இரண்டை ஒன்றாக்கியதும், அதை சுப்பண்ணா புரிந்துகொண்டதும், இவையனைத்தையும் நீங்கள் கதையாக்கியதும் மிகவும் ரசிக்கவைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 7. உணர்ச்சி பூர்வமான கதை. கண் கலங்கினேன்.

  பதிலளிநீக்கு
 8. ஐயா,

  'அன்னமிட்ட கைகள்' மிக அருமையாக இருக்கிறது. மனதை நெகிழ வைத்து விட்டது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. சிவனடியார்களை நினைவுபடுத்தினார் ரங்கமணி. செல்வம் - செல்வோம் மிக ரசித்தேன். நல்ல கதை.

  TM6

  பதிலளிநீக்கு
 10. நல்ல கதை.அன்னமிட்ட கைகளுக்கு ஆதரவு என்றும் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 11. மனமொத்த தம்பதிகளாக அமைவதே கடினம் இந்நாளில். இந்த தர்மத்தை மனம் கோணாமல் இவ்வளவு நாள் சேர்ந்து செய்வதே ஒரு வரம். நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று படிக்கும்போதே பாசிட்டிவ் எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன. நம்பிக்கை+ பரவசம்+ நெகிழ்ச்சி ஏற்படுத்திய கதை.

  பதிலளிநீக்கு
 12. கொடுப்பதில் இன்பம் இருக்கிறது. கொடுத்துத்தான் உணரமுடியும். அதுவும் தனக்கே இல்லாத நிலையிலும் கொடுப்போர் மேன்மக்களே.அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான கதை... நிஜத்தில் நடந்ததை பார்த்தது போல் இருந்தது நடை...

  பதிலளிநீக்கு
 14. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!என்பதை விளக்கும் அழகான சிறு கதை. அருமையாக படைத்திருகீங்க
  ஐயா..

  பதிலளிநீக்கு
 15. ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விட்ட அன்னமிட்ட
  கைகளை அருமையான கதையாக்கிய
  அற்புதமான நடையழகுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 16. அன்னமிட்ட கைகளையுடைய தங்கமணிக்கும் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வரலானது.

  உண்டி கொடுத்து உயிர் கொடுத்த அருமையான கதை.

  பதிலளிநீக்கு
 17. நல்ல மனம் உள்ளவர்களிடம் பணம் இருந்தால் தான் அன்னதானம் தொடர்ந்து நடைபெற முடியும். அதனால் ஏற்படும் புண்ணியம் உனக்கு மட்டுமல்ல எனக்கும் கூடவே வரும்; /

  அருமையான வாழ்வியல் தத்துவம்.

  பதிலளிநீக்கு
 18. வறுமை நெருப்பு சுட்டபோதும்
  வறுமையில் செம்மையாக
  வாழ்ந்து காட்டிய அரிய கதைக்கு
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கு நல்ல மனம் உள்ளது பணம் மட்டும் தான் இல்லை. அதுவும் இன்று தான் இல்லாமல் உள்ளது. என்னிடம் இன்று நிறைய பணம் சேர்ந்துள்ளது. ஆனால் சொந்தபந்தம் ஏதும் இல்லாமல் உள்ளது;

  மனதைத் தொட்ட கதை. அருமையான முடிவு. ரங்கமணி தங்கமணி தீர்க்காயுசாய் இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 20. விருந்தோம்பல் பண்பு மலிந்து விட்ட இந்த காலத்தில் தேவையான கதை இது. மிக அருமை.
  நீண்ட காலமாக வலைப்பக்கம் வராததால் தங்கள் பழைய இடுகைகளை படிக்க இயலவில்லை. மன்னிக்கவும். .

  பதிலளிநீக்கு
 21. ந‌ல்ல‌தையே சொல்ல‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ளை ஊக்குவிப்ப‌தே உங்க‌ வேலையாப்போச்சு... ந‌ல்லாயிருக்கு சார் க‌தை.

  பதிலளிநீக்கு
 22. சிறந்த சிறுகதை பாராட்டுகள் இப்படி சிறந்த கணவன் மாணவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் நாம் எல்லோரும் உணர்வுள்ள சிறந்த குடுபமாக ஏன் மாறகூடாது? என வினவு வதைபோல இருக்கிறது சிறப்பு

  பதிலளிநீக்கு
 23. காலத்திற்கேற்ற பதிவு. விருந்தோம்பலா? அதன் பொருள் என்ன என்று கேட்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

  சங்கேத மொழி உள்ளத்தால் இணைந்த தம்பதியருக்கே புரியும் மொழி. தெளிவான நீரோட்டமாய் அழகான நடை. உயர்ந்த கருத்து..

  பதிலளிநீக்கு
 24. அருமையான கதை.

  இந்த தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய கதை.

  இருப்பதைக் கொண்டு சிறப்பாய் உணவளிப்பது பெரிய கலை.

  பதிலளிநீக்கு
 25. வாவ்!!! அருமையான கதை. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மைத் தரும்” என்பதற்கு நல்ல விளக்கம்.

  பதிலளிநீக்கு
 26. மிக அருமையான கதை.. அன்னமிட்ட பெண்மணி நிஜமாகவே பாராட்டுக்குரியவள்.

  பதிலளிநீக்கு
 27. அன்னதானம் செய்வதை நித்ய பூஜை போல, சிரமேற்கொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள். கதையில் இதனை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். இது பற்றி இரண்டு விசயங்கள் பகிர விரும்புகிறேன் சார்.

  1. இங்கே மதுரையில் தினமும் மதிய வேளையில் (12 மணியளவில்) கீழவாசல் டெலிஃபோன் எக்சேஞ்ச் அருகில் மிகவும் வறியவர்களுக்கு வள்ளலார் அருட் சங்கத்தினர் உணவிடுகின்றனர். நடைபாதையிலேயே பந்தி நடக்கிறது. நாள் தவறாமல் இது நடக்கிறது. நம்முடைய பங்களிப்பையும் பணமாக செலுத்தலாம்.

  2. இதே மதுரையில் இன்னொரு அன்னதானமும் நடந்தது. 1001 பேருக்கு அன்னதானம் என்று போஸ்டர் அடித்து அறிவித்தார்கள். 1001 பேருக்கு திருமணம் செய்யலாம், 1001 பேருக்கு புத்தகங்கள் தரலாம், சாப்பாடு போடுவதை எப்படி கணக்கிட முடியும். 1002வதாக யாராவது வந்தால் சாப்பாடு கிடையாதா என்று கேட்கத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 28. ஒன்னை ரெண்டாக்கி, ரெண்டை ஒன்னாக்கி விடு // அருமையான விளக்கம். நல்ல கதைக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 29. எண்ணம் தொட்ட கதை அன்னமிட்டகை மிக அருமை . வாழ்த்துகள் ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 30. "காட்டில் நிலவாய்
  கடலில் மழையாய்
  இருந்தால் யாருக்கு லாபம்
  தனியில் துணையாய்
  பசியில் உணவாய்
  இருந்தால் ஊருக்கு லாபம் "
  என்கிற கவிஞர் வாலியில் பாடலை
  நினைவுறுத்திப் போனது
  தங்கள் கதை
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 31. இந்த மாதிரி மனிதர்கள் இப்போது எங்கே இருந்தாலும் , அவர்களுக்கு என் ந்மஸ்காரங்கள் இதை அழகாக எழுதி எங்களை நெகிழ வைத்த உங்களுக்கும் சேத்துதான்!

  பதிலளிநீக்கு
 32. இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகைதந்து, அழகான ஆதரவான கருத்துக்களாகவே அனைவரும் கூறி, சிறப்பித்துள்ளது எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.

  வெகுவாகப் பாராட்டியுள்ள, என் அன்பிற்குரிய அனைத்துத் தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 33. அருமையான கவிதை ... அன்னமிட்ட கை ... சூப்பர்... உண்மையில் அவர்களுக்கு நான் என்னுடைய வணக்கத்தை செலுத்துகிறேன்.... அத எழுதிய உங்களுக்கும் என்னுடைய வணக்கங்கள் ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள Ms.VijiParthiban Madam,

   வாங்கோ. வணக்கம்.

   “அன்னமிட்ட கை” போலவே பின்னூட்டமிட்ட தங்கள் கைகளும் மிகவும் போற்றத்தக்கவைகளே ஆகும்.

   அதற்கு என் அன்பான இனிய நன்றிகள்.

   அன்புடன் vgk

   நீக்கு
 34. அன்னமிட்ட கை ரொம்ப நல்ல கதை.இபுபடியும் சிலர் இருக்காங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 19, 2015 at 1:37 PM

   //அன்னமிட்ட கை ரொம்ப நல்ல கதை. இப்படியும் சிலர் இருக்காங்க.//

   ஆமாம். நம் சிவகாமியைப்போலவே ஊருக்கு ஒருவராவது இதுபோல நல்லவங்களா ஆங்காங்கே இருக்காங்க. :) அதனால் மட்டுமே கொஞ்சமாவது அவ்வப்போது மழை பெய்யுது. :)

   நீக்கு
 35. அருமை.

  பெரிய புராணத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை படித்தது போல் இருந்தது.

  அன்னமிட்ட கை அருமையான கை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. வசதியா வாள்ந்துபோட்டு நிலம மாறிப்போயிட்டா. கஸ்டம்தா. ஒன்ன ரெண்டாக்கி ரெண்ட ஒன்னாக்கிலாம அவஸ்தபடோணும்.

  பதிலளிநீக்கு
 37. ஊன்றை இரண்டாக்கி இரண்டை ஒன்றாக்கி. என்ன அழகான வார்த்தை விளையாட்டு. அன்ன தானம் செய்தே பழக்கப்பட்டவர்கள். இல்லை என்று சொல்லமுடியாமல் தவிக்கும் தவிப்பு. எல்லாவற்றையுமே உணர வைத்த எழுத்து திறமை.

  பதிலளிநீக்கு
 38. இரண்ட ஒண்ணாக்குனது சாப்பாட்டில மட்டும் இல்ல...ரெண்டு குடும்பமும் ஒண்ணாக்குனதுதான் அருமை...ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு வாத்யாரே...

  பதிலளிநீக்கு