About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, March 23, 2014

VGK 08 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - "அமுதைப் பொழியும் நிலவே”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 08 - ” அமுதைப் பொழியும் நிலவே ”


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து














இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    




இரண்டாம் பரிசினை 


வெ ன் று ள் ள வ ர் க ள் 



இருவர்



அதில் ஒருவர்


திருமதி. 


கீதா மதிவாணன்


அவர்கள்





வலைத்தளம்:


கீதமஞ்சரி 

geethamanjari.blogspot.in

 







இரண்டாம் பரிசு பெற்ற


திருமதி. 


கீதா மதிவாணன்


அவர்களின் விமர்சனம் இதோ:




காதல்ரசம் பொங்க கனவுலகத்தில் சஞ்சாரிக்கும் கதாநாயகனுக்கு நடப்புலகில் வெற்றிலைச்சாற்று அபிஷேகம் நடவாமல் தப்பித்தது அதிர்ஷ்டம்தான். அழகு தேவதையொருத்தியைக் கண்டதும் காதலாகி, கனிந்துருகி, கரிசனத்துடன் உதவிபுரிந்து, கைபேசி எண் பரிமாற்றமும் முடிந்து அவளிடம் தன் காதல் மனத்தை வெளிப்படுத்த சிந்திக்கும் தருவாயில்… அடடா…  என்னவொரு பரிதாபம்!

தொடர் பேருந்து பற்றிய வித்தியாசமான வர்ணனையும், கற்பனைக் கதாநாயகியின் பெயரும் யதார்த்த வாழ்க்கையில் பக்கத்து இருக்கையில் அமரும் கிழவியின் பெயரும் ’அமுதா’ என்று அமைந்திருப்பதும், பேருந்தில் சூழ்நிலைக்கேற்ற பாடல்கள் ஒலிபரப்பும் கதாசிரியரின் ரசனைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு நகைச்சுவைக் கதை. ஆனால் இந்தத் தொடர்பேருந்து பயணத்தின் வாயிலாய் கதாசிரியர் நம்மை அழைத்துப் போவது எங்கேபொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் சாரின் நகைச்சுவைக்கதைகளை ஊன்றிக் கவனித்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரிகிறது.

ஒரு கதையில் மேம்போக்காய் நகைச்சுவைத் தூவல்களைத் தூவியிருந்தாலும் சரி அல்லது நகைச்சுவையிலேயே முக்கித் தோய்த்திருந்தாலும் சரி நகைச்சுவையை மீறிய ஒரு கனமான செய்தி அந்தக் கதையினூடே நம் கவன ஈர்ப்புக்காகக் காத்துக்கிடக்கிறது.

இதுவரை பொழுதுபோக்காகவும் சுவாரசியத்துக்காகவும் கதைகளை வாசித்து ரசித்தது போகஇப்போது விமர்சன நோக்கில் வாசிக்கும்போது வேறு பல பரிமாணங்கள் தென்படுவது வியக்கவைக்கிறது. இந்தக் கதையிலும் அப்படித்தான்.

தொடர்பேருந்தைப் பார்க்குந்தோறும் ஒரு குழந்தையைப் போல் குதூகலிக்கும் மனசின் ஆசையை நிறைவேற்ற, ஒருநாள் பயணம் செய்ய முடிவெடுக்கிறான் கதாநாயகன். குறிக்கோளற்றப் பயணம்தான் எவ்வளவு சுகானுபவம்! மடியில் கனமில்லை. அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. சன்னலோரத்தில் அமர்ந்து, தலை கோதும், கழுத்து வருடும் காற்றை அனுபவித்தபடியே கண்மூடிக் கிறங்கிக் கிடக்கலாம்.

நாம் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதா என்று அடிக்கடி சஞ்சலப்படவேண்டாம். இறங்கவேண்டிய இடத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்று சங்கடப்படவேண்டாம். இந்தக் கூட்டத்தில் நீந்தி எப்படி இறங்கப் போகிறோம் என்று மலைக்கவேண்டாம். எந்த அவசரத்துக்கும் இடங்கொடாமல் பொறுமையாய் செல்லலாம். எங்கு இறங்கத் தோன்றுகிறதோ அங்கு இறங்கலாம், ஒரு ஞானியைப் போல.

ஆம். வாழ்க்கைப் பயணத்துக்கும் இந்தப் பேருந்துப் பயணத்துக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை. வாழ்க்கையின் தாத்பர்யத்தை இதைவிடவும் அழகாய் நேர்த்தியாய் சொல்லமுடியுமாஎன்ன?

பேருந்துப் பயணத்தை வாழ்க்கைப் பயணத்துக்கான ஒரு குறியீடாகக் காட்டுவதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தில் நம் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் அடுத்தப் பயணத்தில் அது கிட்டக்கூடும் என்று ஆசுவாசம் கொள்ளலாம். சக பயணியால் சங்கடமெனில் இருக்கை மாறி அமரலாம். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் நமக்கென்று நிரந்தரமாய் ஒதுக்கப்பட்டுவிட்ட இருக்கையில் இறுதிவரை நாம் பயணித்தே ஆகவேண்டும். அதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நம் கையில் இல்லை.

இந்தக் கதையின் நாயகன் போலத்தான் நாமும் நமது வாழ்க்கைப் பயணத்தில் எல்லாமே சுமுகமாய் சுகமாய் அமையவேண்டுமென்ற எதிர்பார்ப்பிலிருக்கிறோம். அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ நம்மால் நடைமுறை யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள இயலாமல் போகிறது.

பேருந்தில் பக்கத்து இருக்கையில் பயணிக்கும் ஒரு சக பயணிக்கான எதிர்பார்ப்பே இப்படியென்றால் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் சக உறவுகள் பற்றிய எதிர்பார்ப்பு நம்முள் எப்படியிருக்கும்? 

கனவுகளிலிருந்து கலைந்து நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பும்போதுதான் வாழ்க்கை மிகவும் சுவாரசியமுள்ளதாகிறது.

சிலருக்கு கனவு நனவாகிறது. பலருக்கு கனவு கனவாகவே போகிறது. ஒரு சாமான்யனின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளியைக் காட்டி  கதையை முடித்தவிதம் சிறப்பு. நகைச்சுவையோடு கூடிய வெகு அழமான வாழ்வியல் அம்சம் கொண்ட அற்புதக் கதை இது. பாராட்டுகள் கோபு சார்.



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.



 

    



ஆஸ்திரேலிய


கீதாப்பொண்ணுடன்





இரண்டாம் பரிசினை 


பகிர்ந்து கொண்ட 


மற்றொருவர் யார்?




வேறு யார் ?


வழக்கம் போல 


'அம்மா 'த்தொகுதியான 


ஸ்ரீரங்கம் 


அம்மா மண்டபத்திலிருக்கும்





கீதா அம்மாவே 


தான் ! ;)


தேர்தல் நேரத்தில் அமைந்துள்ள


மிகச்சரியான கூட்டணி !



திருமதி. 


கீதா சாம்பசிவம்

அவர்கள்


வலைத்தளம்:

sivamgss.blogspot.in



" எண்ணங்கள் “






இரண்டாம் பரிசு பெற்ற


திருமதி. 


கீதா சாம்பசிவம்


அவர்களின் விமர்சனம் இதோ:




ஒரு இளைஞனின் கற்பனை அதுவும் கல்யாணம் ஆகாத இளைஞனின் கற்பனை எவ்வளவு தூரத்துக்குப் போகும் என்பது தான் கதையின் முக்கியக் கரு. ஆண், பெண்ணின் ஈர்ப்புச் சக்தி இயல்பான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர்.  பருவ வயது வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  ஆணுக்குத் தான் முற்றிலும் அறியாத ஒரு பெண் மனைவியாக வரப் போகிறாள் என நினைக்கையிலேயே மனம் ஒரு வகையான பதட்டத்தில் ஆழ்கிறது. அதோடு கற்பனையில் அந்தப் பெண்ணைக் குறித்துப் பற்பல கனவுகள் காண்பான்.  பெண்ணைக் குறித்தும், அவள் அழகைக் குறித்தும் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் இருக்கும்.  உண்மையிலேயே தான் கனவில் கண்ட அந்தப் பெண் தன் பக்கத்தில் இருந்தால் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பனையிலும் ஆழ்ந்து போவான்.  இப்படிப் பட்ட எண்ணங்களோடு கூடிய ஒரு ஆண்மகன் தான் கனவு காண்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேருந்தில் கண்டதொரு கனவே இங்கே கதையாகப் பரிமளித்துள்ளது.


அலுவலகத்தின் விடுமுறை நாளில், மின் வெட்டு தினத்தில் வீட்டில் இருக்கும் வெப்பமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க நினைக்கும் கதாநாயகன் பொழுது போக்கச் செல்ல நினைப்பது ஒரு தொடர் பேருந்தில் பயணம். அந்தப் பேருந்தும் நகரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தொடர் பேருந்து.  ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பொழுதுபோக்கும் ஆச்சு;  தொடர் பேருந்தில் பயணம் செய்தாப்போலவும் ஆகிவிட்டது.  மனித மனத்தின் சராசரி ஆசைகள் பேருந்திலோ, ரயிலிலோ ஜன்னலோரம் அமர்வது.  இங்கே அது இவன் கேட்காமலே கிடைக்கிறது.  செல்லும் தூரம் வரை சுகமான காற்றும் வீசுகிறது. கூடவே  மல்லிகை மணமும் கமழ, மனம் பெண்களை எதிர்பார்க்கப்பக்கத்தில் வந்து அமர்கிறாள் ஓர் அழகி.  பாலக்காட்டு ராணி. அமுதா என்ற இனிமையான பெயரைச்சொல்லும் போதே நாக்கும், மனமும் இனிக்கிறது.

அவளோ உதவி நாடுகிறாள்.  செல்ல வேண்டிய பயிற்சி நிலையம் செல்ல வழி கேட்கிறாள். இங்கேயும் சாதாரணமாக எல்லா ஆண்களும் சொல்வது போலவே தானே கூட வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொள்கிறான் கதாநாயகன்.  இதோடு கற்பனை முடிந்ததா என்றால் இல்லை.  இவள் எத்தனை நாட்கள் இருப்பாள் எனக் கணக்குப் போட்டுப்பார்த்து அதற்குள் இவளையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நீண்ட காலத் திட்டம் ஒன்றும் மனதுள் தோன்றுகிறது.  உடனே மனதில் காதலும் தோன்றுகிறது. இதென்ன கண்டதும் காதலா என்றெல்லாம் கேட்காதீர்கள்.  இது எதிர்பாலினம் ஒன்றை ஒன்று ஈர்ப்பதின் விளைவு தான்.  அது மட்டுமே.  ஆனால் நம் கதாநாயகர் சொப்பன உலகில் மிதக்கிறாரே!  அது அவருக்கே தெரியவில்லை. இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டு அவளிடம் செல்போன் நம்பர் கூட வாங்கிக் கொள்கிறார் சொப்பனத்திலேயே. நல்லவேளையாக தன்னுடைய செல்போனை எடுத்துக் கீழே போட்டு உடைக்கலை.  அந்த அமுதாவுக்காக ஆட்டோவுக்குச் செலவு செய்து பயிற்சி நிலையம் கூட்டிச் செல்லவும், அவளுக்குத் தங்குமிடம் பார்த்துக் கொடுக்கவும் கூடத் தயாராகிவிடுகிறான்.  எல்லாம் திருச்சி சுப்ரமண்யபுரம் டோல் கேட்டில் இருந்து துவாக்குடி போகும் நேரத்துக்குள்ளாக. 

அப்போது தான் பேருந்து பயணம் முடிந்து நிற்கிறது போலும்.  இவருக்கு வியர்க்கிறது.  தன் காதலில் வெற்றி கிட்டுமா என்னும் கலக்கத்தில் இருப்பவரைத் தட்டி எழுப்புவது பேருந்தின் நடத்துநர்.  இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது என எழுப்புகிறார்.  அப்போது தான் நம் கதாநாயகருக்குத்தான் கண்டது இனிமையான கனவு எனப் புரிந்து நிகழ்காலத்துக்கு வருகிறார்.  ஆனால் பாருங்க, அவர் மனதில் அமுதாவின் பெயரே ஓடிக் கொண்டிருக்கிறதா!  அப்போப் பேருந்தில் போடப்படும் பாடலும், "அமுதைப் பொழியும் நிலவா"க அமைய சோகப் பெருமூச்சு விடும் கதாநாயகனின் சோகத்தை அதிகப்படும் வகையில் அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு பெண்மணி ஏறி கதாநாயகர் அருகே அமர்கிறாள்.அமர்வதோடு கதாநாயகரைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தலையையும் நீட்டுகிறாள். ஹாஹாஹா, இங்கே தான் இருக்கு நம் எழுத்தாளரின் நகைச்சுவையான கேலி.

வந்தவள் ஒரு காய்கறி விற்கும்கிழவி. கட்டி அணைத்தாற்போல் ஜன்னல் வழி தலையை நீட்டியது வெற்றிலைச் சாறைத் துப்ப.  இது போதாதா நம் கதாநாயகரின் அசடு வழிதலுக்கு.  பத்தாக் குறையாக அந்தக் கிழவியை "அமுதாம்மா" என இன்னொரு கிழவி கூப்பிடவே. ஆஹா, நிஜமான இளம் அமுதாவுக்கு பதில் இப்படி ஒரு கிழட்டு அமுதா பக்கம் அமர்ந்து பயணம் செய்யும்படி ஆயிற்றே எனத் தன் தலைவிதியை நொந்து கொண்டு பயணம் செய்கிறான் கதாநாயகன்.

திருமணம் ஆகாத ஆணின் மனதில் தோன்றும் ஆசைகளும், சபலங்களும், இளம்பெண்ணிடம் பேசத் துடிக்கும் முனைப்பும், அவளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் தான் நல்லவன் எனக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் துடிப்பும் இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.  எப்படியேனும் இந்தப்பெண் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூற அவன் நினைப்பதெல்லாம் படிக்கையில் நமக்கு நிஜம் போலவே தோன்றுகிறது.  கடைசியில் தான் ஆசிரியர் இவை அனைத்தும் கனவு எனப் புதிரை உடைக்கிறார். அதன் பின்னர் கதாநாயகனின் ஏமாற்றமும், சராசரிப் பெண்களே பேருந்தில் ஏறும் நிலைமையும், அதிலும் ஒரு கிழவி வந்து பக்கம் அமர்வதை வேறு வழியில்லாமல் சகிக்க வேண்டி இருப்பதையும் மறைமுகமாகச் சொல்லி விடுகிறார்.  

இது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு.  இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல.  நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.


 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.






     



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

[கோழிக்கும் குஞ்சுக்கும்]

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.








இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக 


பல மணி நேர இடைவெளிகளில் 


வெளியிடப்பட்டு வருகின்றன.




காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo





இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:



” மறக்க மனம் கூடுதில்லையே  





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


27.03.2014 

 

இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.












என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்







23 comments:

  1. இரண்டு விமர்சனங்களுமே மிக நன்றாக இருந்தன. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி கீதமஞ்சரி மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete

  2. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன் -
    திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    அவர்களின் அருமையான ,சுவையான -
    விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. மற்ற விமரிசனங்களைப் படிக்கையில் தான் என்னோட விமரிசனம் எவ்வளவு சாதாரணம்னு புரியுது. பரிசு பெற்ற கீத மஞ்சரிக்கு என் வாழ்த்துகள். அவரோடு மீண்டும் பரிசைப் பகிர்ந்து கொண்டது இனிய ஆச்சரியம். தொடர்ந்து ஊக்குவிக்கும் வைகோ சாருக்கும் என் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam March 23, 2014 at 1:32 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மற்ற விமரிசனங்களைப் படிக்கையில் தான் என்னோட விமரிசனம் எவ்வளவு சாதாரணம்னு புரியுது.//

      ஆஹா, தங்களுடைய தன்னடக்கம் என்னை மெய்சிலிர்க்க
      வைக்குது !

      நானும் ’சாதாரணமானவன்’ தான்.

      சிலர் என்னை அவ்வப்போது தங்கள் பின்னூட்டங்களிலும், பிற சில இடங்களிலும் கூட ’அசாதாரணமானவர்’ என்றும்
      அசாதாரணமான திறமைகள் படைத்தவர் என்றும் சொல்லி
      மகிழ்கிறார்கள். அதேசமயம் என்னை மகிழ்விப்பதாகவும் நினைக்கிறார்கள்.

      எனக்குத் தெரியாதா என்னைப்பற்றி ..... பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன, என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக் கொள்வதும் உண்டு.

      ஆனால் உங்கள் விஷயம் வேறு. தங்களின் விமர்சனங்கள்
      சாதாரணமானவைகளே அல்ல என நிரூபித்து விட்டீர்கள்.

      இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள எட்டு முடிவுகளில் சுளையாக நான்கு முறை வெற்றி பெற்றுள்ளீர்கள். அதுவும் அவற்றில் இரண்டு ‘முதல் பரிசுகள் + இரண்டு இரண்டாம் பரிசுகள்’. ;))))

      இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நானும் சற்றே யோசித்து சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்துள்ளேனாக்கும்.

      //தொடர்ந்து ஊக்குவிக்கும் வைகோ சாருக்கும் என் நன்றி.//

      நான் தொடர்ந்து தங்களை ஊக்குவிப்பதெல்லாம் ஒருபுறம் தனியாக இருக்கட்டும். நான் தங்களை மட்டுமல்லாது, வேறு பலரையும் தான் அவ்வப்போது ஊக்குவித்து வருகிறேன்.

      நான் ஒரு ஊக்கு விற்கும் வியாபாரி .... SAFETY PIN SELLER ;)

      இப்போது நான் விஷயத்துக்கு வருகிறேன்.

      http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_19.html என்ற இணைப்பினில், “முதல் பரிசை வாங்கிக் கொடுத்த ஆப்பிள்கன்னங்களும், அபூர்வ எண்ணங்களும் விமரிசனம்!” என்று ஓர் பதிவினை வெளியிட்டுள்ளீர்கள்.

      அதில் ஏராளமான V I Ps வருகை தந்து பின்னூட்டமிட்டுள்ளனர்.

      குறிப்பாக திருமதி. வல்லிசிம்ஹன், திருமதி கோமதி அரசு, திரு. ஸ்ரீராம், திரு. வெங்கட் நாகராஜ், திரு. ஜீவி ஐயா போன்றவர்களின் கருத்துக்கள் மிகவும் அழகாக உள்ளன.

      இவ்வளவு தூரம் தங்களைப் பாராட்டி எழுதும் இவர்கள் ஐவரும் ஏன் இந்த என் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ பக்கமே தலைகாட்டாமலும், கலந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்பதும் எனக்குப்புரியாத புதிராகவே உள்ளது.

      அவர்களையும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என தாங்களாவது தயவுசெய்து எடுத்துச் சொல்லக்கூடாதா ?

      எப்படி அழகாக விமர்சனம் எழுதி எப்படிப் வெற்றியையும் பரிசையும் சுலபமாகப் பெறுவது என தாங்கள் ஒரு வகுப்பே நடத்தலாம் என நான் நினைக்கிறேன். இவ்வாறு தாங்கள் CLASS எடுக்க FEES கூட வாங்கிக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

      குறிப்பாக அந்தத்தங்களின் பதிவில் திரு. ஜீவி ஐயா அவர்கள், மீண்டும் மீண்டும் வருகை தந்து எழுதியுள்ள பல விஷயங்கள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தன.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அடக்கமான கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  4. பரிசுபெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! இருவரின் விமர்சனமும் அருமை!

    ReplyDelete
  5. புதிய பரிமாணங்களுடன் விமர்சனங்கள் எழுதி, பரிசுகள் பெறும்
    கீதா + கீதாம்மா இருவருக்கும்
    எனது பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. பரிசு பெற்ற திருமதி கீதமனசரிக்கும், திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பாராட்டிய அனைவருக்கும், இனி பாராட்டப்போகும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வைகோ சார் சொன்னது போல் ஶ்ரீராம், வெங்கட், திருமதி கோமதி அரசு, திருமதி வல்லிசிம்ஹன், திரு ஜீவி சார் ஆகியோரையும் விமரிசனப் போட்டியில் பங்கு பெற அழைக்கிறேன்.

    ReplyDelete
  8. பரிசுப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன் மற்றும் திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. இரண்டாம் பரிசுக்குரியதாய் என் விமர்சனமும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு வாய்ப்பினை வழங்கிய தங்களுக்கு மிகவும் நன்றி கோபு சார். மறுபடியும் பரிசு பெற்றதோடு மறுபடியும் அதை மறுபடியும் கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

    ReplyDelete
  10. அருமையாக விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெறும் இரு கீதாக்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! கோபு சார் சொல்வது போல் தேர்தல் சமயத்தில் சரியான கூட்டணி தான்!

    ReplyDelete
  11. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://sivamgss.blogspot.in/2014/03/blog-post_26.html
    திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  12. பரிசு பெற்ற திருமதி. கீதா மதிவாணன்
    திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete

  13. திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

    இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  14. இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு:
    http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html

    தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  15. திருமதிகள் கீதா மதிவாணன் மற்றும் கீதா சாம்பசிவம் அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  16. பரிசு பெற்ற இரு கீதா மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  17. பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 8:59 AM

      //பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      Delete
  18. பரிசு வென்ற திருமதிங்க கீதா சாம்பசிவம் கீதா மதிவாணன் மேடமவங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. திருமதி கீதாசாம்பசிவம் திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு

    ReplyDelete
  20. சிலருக்கு கனவு நனவாகிறது. பலருக்கு கனவு கனவாகவே போகிறது. ஒரு சாமான்யனின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளியைக் காட்டி கதையை முடித்தவிதம் சிறப்பு. நகைச்சுவையோடு கூடிய வெகு அழமான வாழ்வியல் அம்சம் கொண்ட அற்புதக் கதை இது. பாராட்டுகள் கோபு சார்.// :-)))))
    //இது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு. இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல. நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.// :-))))
    ரசித்தேன்...இருவர்க்கும் எனது நல்வாழ்த்துகள்.






    ReplyDelete
  21. பரிசுபெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! இருவரின் விமர்சனமும் அருமை!

    ReplyDelete