கதையின் தலைப்பு
மிக அதிக எண்ணிக்கையில் பலரும்,
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு,
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
VGK 09 -
” அ ஞ் ச லை “
” அ ஞ் ச லை “
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
இரண்டாம் பரிசினை
வென்றுள்ளவர்கள்
மொத்தம் இருவர்:
மொத்தம் இருவர்:
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
வலைத்தளம்: “அரட்டை”
rajalakshmiparamasivam.blogspot.com
மற்றும்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம் : ” கீதமஞ்சரி ”
geethamanjari.blogspot.in
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்களின் விமர்சனம் இதோ:
இருவேறு மாறுபட்ட சூழலில் வாழ்பவர்களை இணைக்கிறது ஒரு புள்ளி குழந்தையெனும் வடிவில். வறுமை நிலையிலும் செம்மையாகவும் உண்மையாகவும் வாழும் அஞ்சலையும் செல்வக் கொழிப்பில் இருந்தாலும் ஏழைகளிடத்தில் கருணையும் அன்பும் கொண்டு வாழும் சிவகுருவும் ஆரம்பம் முதலே நம் மனத்தில் இடம்பிடித்துவிடுகிறார்கள். பொதுவாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பவர்கள் அந்த குழந்தையின் அன்பு முழுவதும் இனி தங்களுக்கே உரியது என்ற எண்ணத்துடன் அக்குழந்தையின் தாய் தந்தையிடம் இனி ஒருபோதும் அந்தக் குழந்தையைப் பார்க்கக்கூடாது என்றும் அதன் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொள்வார்கள்.
ஆனால் சிவகுரு அப்படிச் செய்யவில்லை. மாறாய் கணவனை இழந்த நிலையிலும் அவளைத் தொடர்ந்து தன் வீட்டில் வேலைசெய்ய அழைக்கிறார். இந்த இடத்தில் சிவகுருவின் கதாபாத்திரம் மேலும் சிறப்புறுகிறது. எத்தனையோ குழந்தைகள் இருக்கையில் அஞ்சலையின் குழந்தையை ஏன் தேர்ந்தெடுக்கிறார்? அதற்கும் காரணம் இருக்கிறது. அஞ்சலையின் பண்பும் குணநலன்களும் அக்குழந்தைக்கு இல்லாமலா போகும்? அஞ்சலையின் கணவன் பற்றியும் அவதூறு சொல்வதற்கில்லை, பாழாய்ப்போன குடி தவிர. நித்தமும் வேலைக்குச் செல்பவனாகவும், பகற்பொழுதில் குழந்தையைப் பார்த்துக்கொள்பவனாகவும் பொறுப்பானவனாகவே இருந்திருக்கிறான்.
அஞ்சலையின் குணங்களையும் அவள் வேலை செய்யும் விதத்தையும் கதாசிரியர் விவரிப்பதைப் பார்க்கையில் இப்படி ஒரு வேலைக்காரி நமக்குக் கிடைக்கமாட்டாளா என்று ஏக்கம் வருகிறது. அவள் வேலை செய்யும் இடத்தை மட்டுமல்ல, தன் வீட்டையும் எவ்வளவு நேர்த்தியாக வைத்திருக்கிறாள். குடிசைக்குள் சிவகுருவின் பார்வையின் மூலமே நமக்கும் அங்குலம் அங்குலமாய் உணர்த்திவிடுகிறார் கதாசிரியர். அவற்றுள் பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன.
விளக்கின் அருகிலிருக்கும் தீப்பெட்டியும் எண்ணெய்ப்புட்டியும், மண்பானைக்கு கிரீடம் வைத்தாற்போன்ற அலுமினிய டம்ளர், குழந்தையின் ஏணைக்கு அடியில் ஈரத்தை உறிஞ்ச போடப்பட்ட கெட்டித்துணி என்று ஒவ்வொன்றிலும் காட்டும் நேர்த்தியும் கூரிய அவதானிப்பும் வியக்கவைக்கின்றன.
முதலில் கதையை வாசிக்கும்போது சிவகுரு அஞ்சலையை தன் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளத்தான் வந்திருக்கிறார் என்று தோன்றியது. தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் வாடகைத்தாயாக நடிக்கும் கற்பகம் என்னும் கதாபாத்திரத்தை அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்ற வரிகளைக் கொண்டு பார்க்கும்போது இவளும் வாடகைத்தாயாக மாறுவாளோ… என்ற சந்தேகம் பாதிக்கதை வரையிலும் தொடர்கிறது.
சிவகுரு குழந்தையைத் தத்தெடுக்கும் விஷயத்தைப்பற்றி அஞ்சலையின் குடிசையில் பேசவில்லை.
சிவகுருவின் பார்வையில் கள்ளம் இல்லை. கபடம் இல்லை. கணவன் இல்லையென்ற காரணத்தால் வாழ்க்கையில் சோர்ந்துபோயிருக்கும் ஒரு நல்ல, அருமையான வேலைக்காரியை இழந்துவிட அவர் விரும்பவில்லை. அதே சமயம் அவள் குழந்தையை அவர் முன்பின் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அஞ்சலையை தங்கள் வீட்டு வேலைக்கு மறுபடி வரச்சொல்லி அழைக்க வந்த இடத்தில் குழந்தையைப் பார்த்துவிட்டு தத்தெடுக்க விரும்புகிறாரா அல்லது குழந்தையை முன்பே பார்த்திருப்பதால் அதைத் தத்தெடுக்கும் முனைப்புடன் வந்திருக்கிறாரா என்பதில் தெளிவில்லை.
பெரும்பாலும் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரையிலும்கூட தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பதுண்டு. அழகு கெடும், உடற்கட்டு குலையும், பொது இடத்தில் அநாகரிகம் என்ற அநாவசியசிந்தனையற்றவர்கள் அவர்கள். குழந்தைக்குத் தேவைப்படும்போதெல்லாம் சட்டென்று மாராப்பு ஒதுக்கிப் பால் புகட்டும் வெள்ளை உள்ளத்தினர். அஞ்சலையும் அப்படியிருந்திருந்தால் அவளிடமிருந்து எட்டுமாதக் குழந்தையை ஒரேநாளில் பிரித்திருப்பது அசாத்தியம். இரண்டு இடங்களில் நாசுக்காக நம் ஐயத்தை நிவர்த்தி செய்கிறார் கதாசிரியர். குழந்தை தாய்ப்பால் அருந்தவில்லை. அதற்கு புட்டிப்பால்தான். அஞ்சலையின் வறுமை நிலையால் அவளிடமிருந்து குழந்தைக்குப் போதுமான பால் கிடைத்திருக்காது என்பது அதன் மூலம் நமக்குப் புரியவைத்துவிடுகிறார்.
அஞ்சலைக்கு தன் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பது விருப்பம். சிவகுருவுக்கு தனக்குக் குழந்தை பிறக்கும்வரை தன் மனைவி எந்த மனக்கவலையுமின்றி மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பது விருப்பம். இருவரது பரஸ்பர விருப்பங்களும் ஒரே நாளில் நிறைவேற்றப்படுகின்றன குட்டிக்கண்ணனால்.
ஆனாலும் நடைமுறையில் இது சாத்தியம்தானா என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கூடவே சில சந்தேகங்களும் எழுகின்றன.
1. சிவகுருவின் மனைவிக்கு அநாதை இல்லத்துக் குழந்தைகள் எதையும் பிடிக்கவில்லை என்னும்போது இந்தக் குழந்தையை கட்டாயம் ஏற்றுக்கொள்வாள் என்று எந்த நம்பிக்கையில் சிவகுரு முடிவெடுக்கிறார்?
2. அன்றாட வீட்டுவேலை செய்யும் பெண்மணிகள் பெரும்பாலும் நடைதூரத்தில் அதே ஊரில்தான் ஏதாவது வீடுகளில் வேலைசெய்வார்கள். அப்படியிருக்கையில் அஞ்சலையைப் பற்றி அறிந்தவர்கள் அவளிடம் குழந்தை இல்லாததையும், அது சிவகுரு வீட்டில் இருப்பதையும் பார்க்க நேர்ந்தால் அது அஞ்சலையின் குழந்தைதான் என்பதை அடையாளங்கண்டுகொண்டு மல்லிகாவிடம் சொல்லிவிட மாட்டார்களா?
3. வம்பு பேசுவதையே தொழிலாய்க் கொண்ட அக்கம்பக்க குடிசைவாசிகள் சிவகுரு, அஞ்சலை வீட்டுக்கு வந்ததைப் பார்த்திருப்பதால் அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதல்லவா?
4. அஞ்சலை முந்தின மாதம் வரையிலும் அந்த வீட்டில் வேலை செய்திருக்கிறாள். கணவன் பகல் பொழுதுகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு இருந்தாலும், நாள், கிழமையிலாவது குழந்தையைக் கொண்டுவந்து மல்லிகாவிடம் காட்டியிருக்க மாட்டாளா? என்னதான் நகைகள் போட்டு அலங்கரித்தாலும் மல்லிகாவால் குழந்தையை அடையாளம் காணமுடியாமல் போகுமா?
5. சரி. அடையாளம் காணமுடியவில்லையென்றே வைத்துக்கொள்வோம். குழந்தை மல்லிகாவின் வளர்ப்பில் இருக்கும்போது, என்றாவது அஞ்சலையிடம் உன் குழந்தை எங்கே? ஒருநாள் தூக்கிக்கொண்டு வா என்று சொன்னால் என்ன செய்வாள்? எத்தனை நாளைக்குப் பொய் சொல்லி சமாளிக்க முடியும்?
கதையின் முடிவில் நமக்கெழும் இதுபோன்ற சின்னச்சின்ன சந்தேகங்களுக்கு கதாசிரியரிடம் நிச்சயம் பதிலிருக்கும். ஆனால் அந்த சந்தேகங்கள், கதையை ரசிப்பதிலோ அஞ்சலை போன்ற பெண்களின் குணாதிசயத்தை வியப்பதிலோ சிவகுரு போன்ற கணவான்களைப் போற்றுவதிலோ தடையேற்படுத்தவில்லை என்பது உண்மை.
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இனிய நல்வாழ்த்துகள்.
இரண்டாம் பரிசினை வென்று
பகிர்ந்து கொண்டுள்ள
ராஜலக்ஷ்மி பரமசிவம்
அவர்களின் விமர்சனம் இதோ:
அஞ்சலையின் தாய்மையை சோதிக்கும் கதை என்று இதை சொல்லலாம். கதையின் ஆரம்பத்தில் மாருதி காரைச் சேரியில் நிறுத்தி வைத்து சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வினை காட்டியிருக்கிறார் ஆசிரியர். பின்னால் அஞ்சலை எடுக்கும் மிகப் பெரிய முடிவை வாசகர்கள் தவறாக எண்ணி விடக் கூடாதே என்பதற்காகத் தான், என்றே சொல்ல வேண்டும். சிவகுரு எதற்காக அந்தக் குடிசைக்குள் வந்து உட்காருகிறார் என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் ஆசிரியரின் எழுத்து சாதுர்யத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அஞ்சலையின், வறுமையை, சிவகுரு மூலமாக நாமும் பார்க்கிறோம்.. தொய்ந்தக் கயிற்றுக் கட்டில், தொங்கும் தூளி, மண் பானை, தட்டிக் கதவு என்று விவரிக்கையில் நமக்கும் அஞ்சலை மேல் பரிதாபம் உண்டாகிறது. குடிசை உள்ளே உட்கார்ந்து அஞ்சலை ‘சொல்லுங்க சாமீ ‘என்று உரையாடலை ஆரம்பிப்பதற்குள் அஞ்சலையின் சரிதத்தையே சொல்லி விடுகிறார் ஆசிரியர்.
அஞ்சலையின் வேலை செய்யும் பாங்கு, அவள் சுத்தமாக வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி, அவள் நாணயம் என்று அடுக்கிக் கொண்டே போனதில் நாமும் சிவகுருவைப் பற்றி சற்றே மறந்து தான் விடுகின்றோம். அவள் நாணயத்திற்கு எடுத்துக் காட்டாய் ஆசிரியர் சொல்லும் நிகழ்ச்சிகள் அஞ்சலை மேல் ஒரு பெரிய நம்பிக்கையும், மரியாதையும் நமக்கு உண்டாகி விடுகிறது.
நல்ல உயர்ந்த குணங்களுடன் இருக்கும் சாதாரணப் பெண் அஞ்சலை என்பதை அவள் நெடுந்தொடர்கள் மேல் கொண்ட பிரியத்தினால் உணர முடிகிறது. சிவகுருவின் மனைவியின் உடல் நிலைப் பற்றி நமக்குத் தெரிந்தவுடன் அவர் அஞ்சலையைக். குழந்தைக்காகத் தான் பார்க்க வந்திருக்கிறார் என்பதை நொடிப்பொழுதில் தெளிவிபடுத்தி விட்டார் ஆசிரியர். ஆனால் அஞ்சலை ஒத்துக் கொள்வாளா என்கிற மாபெரும் சந்தேகம வராமல் இல்லை. அப்பொழுது தான் நமக்கு அஞ்சலை விதவையான விஷயம் தெரிகிறது. இந்த இடத்தில் அவளுடைய கணவர் இறந்து விட்டார் என்று சொல்வதோடு நிற்காமல் சாராயம் குடித்ததில் இறந்து விடுகிறார் என்று சொல்கிறார். ‘ குடி குடியைக் கெடுக்கும் ‘என்கிற ஆசிரியரின் சமுதாய அக்கறையை உணர முடிகிறது. அதற்காக அவருக்கு ஒரு சல்யுட்.
அஞ்சலையின் கணவனின் மருத்துவ செலவிற்கு சிவகுரு உதவியதில் இருந்து அவரின் தாராள மனம் தெரிய வருகிறது. அவர் தன் பண வசதியைக் கொண்டு தன் வீட்டிற்கு மழலைச் செல்வத்தை வரவழைக்க முற்படுகிறார் என்று யூகித்து விடுகிறோம்.
பணத்திற்காக குழந்தையை விட்டுத் தர முடியாது என்று முதலில் அஞ்சலை சொல்வது, சிவகுரு இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது. குழந்தையின் கண்கொள்ளா அழகை ஆசிரியர் வர்ணிக்கும் போது எடுத்துக் கொஞ்சி விளையாட மனம் விழைகிறது.
அவர் அஞ்சலையை காரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு அழைத்துப் போவதைத் தான் என் மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. எந்தப் பெண்ணும் இப்படி அயலார் காரில் சட்டென்று ஏறி விடமாட்டாளே! இளம் விதவையான தன்னை தன் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும் என்பது அஞ்சலைக்குத் தெரியுமே என்று தோன்றுகிறது.
ஹோட்டலுக்குப் பதிலாக சந்தடியில்லாத கோவில் போன்ற இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் அஞ்சலை இன்னும் கொஞ்சம் சுவாதீனமாக இருந்திருப்பாள் என்றே நினைக்கிறேன்.
அதன் பிறகு சிவகுரு குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கும் பரிசுப் பொருட்கள் நகைகள் எல்லாமே அவர் பாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
குழந்தையின் தாய் யாரென்பது ரகசியமாக இருக்கட்டும் என்று சிவகுரு சொல்வதை அஞ்சலைக் கடை பிடிப்பதாக சொல்கிறார் ஆசிரியர். எவ்வளவு நாள் அந்த ரகசியம் காக்கப் படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.
பத்தாயிரம் ரூபாய்க்கு தன் குழந்தையை கொடுக்க மறுக்கும் அஞ்சலை லட்சக் கணக்கில் கொடுப்பதால் ஒத்துக் கொள்கிறாளே என்றுத் தோன்றினாலும், அஞ்சலையின் இடத்திலிருந்துப் பார்த்தால், தாய்மையின் மிகப் பெரிய தியாகம் விளங்கும்.
தன் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டாலும் தன் கண்ணெதிரே மிக மிக வளமாக வாழ்வதைக் காணும் பேறும் கிடைக்கிறது . குழந்தையின் நலன் கருதியே அஞ்சலை இந்த முடிவிற்கு வந்தாள் என்று எடுத்துக் கொள்வோம். அவள் பணத்தை வாங்காமல் இருந்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை.
எனினும் எந்தத் தாயும் எளிதில் செய்ய முன் வராத தியாகத்தை செய்த அஞ்சலைக்கு அவளுடைய தியாகத்திற்கு என் வணக்கங்கள்.
கதை என்று மட்டுமே எழுதாமல், சமுதாய விழிப்புணர்வையும் சேர்த்துக் குழைத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையின் மூலம் “குடி குடியைக் கெடுக்கும்” என்று கோடிட்டுக் காட்டும் கோபு சாருக்கு மீண்டும் ஒரு சல்யுட்.
இறுதியாக ஒன்றை சொல்லியேயாக வேண்டும். பணத்திற்கு, பாசத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடிய சக்தி உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் இந்தக் கதை சொல்லத் தவறவில்லை.
பாராட்டுக்கள் கோபு சார்!
இப்படிக்கு ,
RajalakshmiParamasivam.
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் குறிப்பு
வெகுஜன பத்திரிகைகளின் பிரசுரத்தை எதிர்பார்த்து எழுதப்படும் கதைகளுக்கென்றே சில 'எழுத்து லட்சணங்கள்' உண்டு. அதில் ஒன்று: கதையின் போக்கை ’ஒரு மாதிரி' நடத்திச் சென்று விறுவிறுப்பைக் கூட்டி அதன் வழியிலேயே வாசகர்களை யோசிக்கச் செய்து கதையின் முடிவை மட்டும் நாம் எதிர்பார்க்காதவாறு வேறு மாதிரி முடித்து வைப்பது.
இந்த மாதிரி கதைகளில் கதைக்கான கதாசிரியரின் முடிவு தான் முக்கியத்துவம் பெறும்.. கதை வளர்ந்த பாதையை, சும்மா படிக்கிறவர்களுக்கு, வேறு மாதிரி நினைப்பதற்கான போக்குக் காட்டலே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே இந்தக் கதையிலும் சிவகுருவின் சில நடவடிக்கைகள் சித்தரிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். அதாவது சிவகுருவின் சில செயல்கள் அவரைப் பற்றி நாம் 'ஒரு மாதிரி'யாக நினைப்பதற்காக நிகழ்த்தப்பட்ட வெற்று செயற்கை பூச்சுகளே தவிர நிஜத்தில் கதை சொல்ல வந்த சேதி வேறு.
அதனால் சிவகுருவின் 'ஒரு மாதிரியான' சில செயல்பாடுகளையே முன்னிலைப்படுத்தி, கதையின் நோக்கத்தை விமரிசித்த விமரிசனங்களை, அவ்வளவாக முக்கியப்படுத்த முடியாமல் போய்விட்டது, என்பதை இக்கதைக்கு விமரிசனம் எழுதிய அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
நடுவர் அவர்களின்
வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுக்கான தொகை
இவ்விருவருக்கும்
-oOo-
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக
பல மணி நேர இடைவெளிகளில்
வெளியிடப்பட்டு வருகின்றன.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
” நாவினால் சுட்ட வடு ”
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
தாங்கள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற சகோதரிகள். ”அரட்டை” ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் “கீதமஞ்சரி” கீதா மதிவாணன் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிகச் சிறப்பான விமர்சனம் தந்து
பதிலளிநீக்குபரிசினைத் தொடந்து அள்ளும், வெல்லும்
திருமதி.கீதா மதிவாணன் மற்றும்
திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் இருவருக்கும்
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
(1) சின்னச்சின்ன சந்தேகங்கள் + (2) ரகசியம் கேள்விக்குறி எனும் இரு விமர்சனங்களும் அருமை...
பதிலளிநீக்குதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
திருமதி. ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனதாரர்களுக்கு மத்தியில் என் விமர்சனமும் தொடர்ந்து பரிசு பெறுவதில் அளவிட இயலா மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியதோடு அடித்தளமிட்டும் தந்துள்ள கோபு சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். எங்களை வாழ்த்திய அனைவருக்கும் அன்பான நன்றிகள்.
பதிலளிநீக்குஹாட்-ட்ரிக் பரிசு பெறும் வாய்ப்புக்கும் முற்றிலும் தேர்வாகியுள்ளதிருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குஅவர்களின் அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!
இரண்டாம் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டுள்ள
பதிலளிநீக்குதிருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..!
அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!
நான் பரிசு பெறும்போதெல்லாம் வந்து வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்ன்ரிகள் பல. உங்களின் தொடர்ந்த ஊக்கம் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. மீண்டும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குஇந்தப் பரிசினை திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒவ்வோர் அம்சத்தையும் கூர்ந்து ஆராய்ந்து
பதிலளிநீக்குவிமர்சனம் எழுதி பரிசு பெறும்
திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்
எனது நல்வாழ்த்துக்கள்!
பெரும்பாலும் விமரிசனம் எழுதி பரிசு பெறுகிறவர்கள் அல்லது இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் தாம் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதாகவும் தெரிகிறது. இந்த வட்டம் விரிவடைந்தால் மாற்றம் தென்படலாம். இல்லை, நீங்கள் பிரசுரிக்கிற 'எங்கோ படித்தது..' போன்ற வாசிப்பு அனுபவங்களில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனம் கொண்டாலும் எழுதப்படும் விமரிசங்களின் சிறப்பு கூடலாம்.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற கட்டுரைகளில் ஏதாவது வித்தியாச சிறப்பு தெரிகிறதா என்று பார்க்கவும் படிக்கவும் காத்திருக்கிறேன்.
இரண்டு விமர்சனங்களுமே மிக அருமை.
பதிலளிநீக்குபரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜி மேடத்துக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசு பெறும் ராஜி அவர்களுக்கும் கீதா மதிவாணனுக்கும் பாராட்டுக்கள்! மேலும் பல பரிசுகள் வென்றிட வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]
இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் இரண்டாம் பரிசை வென்றமைக்காகப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குபரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குJayanthi Jaya September 28, 2015 at 9:18 AM
நீக்கு//திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மணிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)
பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்
நீக்குதிருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதாய்மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி மிகுகிறது. பாராட்டுகள் கோபு சார். //
பதிலளிநீக்கு// கதை என்று மட்டுமே எழுதாமல், சமுதாய விழிப்புணர்வையும் சேர்த்துக் குழைத்து எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையின் மூலம் “குடி குடியைக் கெடுக்கும்” என்று கோடிட்டுக் காட்டும் கோபு சாருக்கு மீண்டும் ஒரு சல்யுட்.
இறுதியாக ஒன்றை சொல்லியேயாக வேண்டும். பணத்திற்கு, பாசத்தை விலைக்கு வாங்கிவிடக் கூடிய சக்தி உள்ளது என்கிற கசப்பான உண்மையையும் இந்தக் கதை சொல்லத் தவறவில்லை.//
எத்தனை கோணம்??? ரசித்தேன். வாழ்த்துகள்.
பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்
பதிலளிநீக்கு