About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 7, 2014

VGK 08 - அமுதைப் பொழியும் நிலவே !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 13.03.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M ]

REFERENCE NUMBER:  VGK 08

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




'அமுதைப் பொழியும் நிலவே !'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்





என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஆறரை மணி இருக்கும். வீட்டிலே அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமுலில் இருக்கும் என்பதால், காற்று வாங்கவேண்டி காலாற நடந்து கொண்டிருந்தேன்.

திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 


அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. 

சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். 

மேலும் என்றோ ஒரு நாள், தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.


சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நின்றது. 

கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.


அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு, துவாக்குடி வரை செல்ல ஓர்  பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். 


வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் என்னைப்போன்ற சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது !


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.

கும்மென்று ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. 



 

எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள். 





“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] வழியாகத் தானே போகிறது?” 

“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?


“ பீ.ஹெச்.ஈ.எல். [B H E L] இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.


[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் நான் உறுதியானேன்.

பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]


“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?” 


”நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். 

இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியதாக உள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில். 



அழைப்புக் கடிதத்தை வாங்கி நான் நோட்டமிட்டேன். 

பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.


அவளின் வெல்டிங் - ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.







  

“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய BHEL Welding Research Institute என்கிற இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு நான் பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள். 


“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் உங்களை அந்த இடத்தில் விட்டுவிடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?” 

“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலையில் அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”  என்றாள்.


என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன். 

“தாங்க்யூ ஸார்”  என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.




என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல நான் உணர்ந்து மகிழ்ந்தேன். 



   


ஞாபகமாக அந்த 'அமுதைப் பொழியும் நிலவான அமுதா’வின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன். 

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.


“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும்” என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.


அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 





இந்த என் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.


 







    



திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. 

யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்தின்  நடத்துனர்.

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார். 

பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம். 


அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா? 


தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள். 



 
  


கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

\
“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது. 

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர். 

“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள். 

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச்சாற்றை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.



 

“அமுதா...ம்மா .... நீ அங்கன குந்திட்டியா, .... நான் இங்கன குந்தியிருக்கேன்; எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.


oooooOooooo





”VGK 06 - உடம்பெல்லாம் 
உப்புச்சீடை ”

என்ற நெடுங்கதை 
விமர்சனப்போட்டிக்கு 
ஏராளமானவர்கள் 
உற்சாகத்துடன் கலந்துகொண்டு
தாராளமாக விமர்சனங்கள் 
எழுதியனுப்பி அசத்தியுள்ளது
மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அந்தப்போட்டிக்கான விமர்சனங்களில்
பரிசுக்குத் தேர்வானவைகள் மட்டும்

கங்கையிலிருந்து 
புறப்பட்டு
காவிரி நோக்கி ’

’கங்கா காவேரி எக்ஸ்பிரஸ்’ 
இரயிலில்
வந்துகொண்டே உள்ளன.




பரிசுப்போட்டி பற்றிய முடிவுகள்
வெகு விரைவில் வெளியாக உள்ளன 
என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக்கொள்கிறேன்.




அதில் ’HAT-TRICK’ வெற்றியாளர்களுக்கு
மட்டும் சில கூடுதல் பரிசுகளும் புதிதாக
அறிவிக்கப்பட உள்ளன.



09/03/2014 ஞாயிறு மற்றும் 
10/03/2014 திங்களுக்கு 
இடைப்பட்ட நள்ளிரவு 12.01க்கு 
பரிசு பெற்றோர் பற்றிய 
முதல் அறிவிப்பு வெளியாகலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது.

காணத்தவறாதீர்கள்

அன்புடன் கோபு [ VGK ]

oooooOooooo






”எங்கோ படித்தது”


"சிறுகதை, புதினம், கவிதை போன்ற இலக்கிய வடிவங்களுக்கு ஒரு கட்டுக்கோப்பு  இருப்பது  போல, விமர்சனங்களுக்கும் உண்டா என்று கேட்டால் 'ஆம்' என்பதே  நம் பதிலாகிப் போகிறது. 

விமரிசனங்களும், உடலுக்கு அளவாகத் தைத்த சட்டை போல தொங்காமல், துவளாமல் 'சிக்'கென்று இருக்க வேண்டும்.

"ஒரு கதைக்கு எழுதப்படும் விமரிசனம் என்பது அந்தக் கதையையே சாங்கோபாங்கமாக மறுபடியும் எடுத்து எழுதுவதும், இடையிடையே கதையின்  நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி சிலாகிப்பதும் இல்லை.

கதையின்  ஜீவனை விட்டு விலகி விடாமல், அதை நடுவில் நிறுத்தி, கதையின் வாசிப்பு அனுபவிப்பில் நாம் ரசித்த ரசனைகளை அணிகலனாக்கி அலங்கரித்து அழகு பார்ப்பதே...."



[ இதை நான் எங்கோ படித்தது ! 
இது தங்களுக்கும் இன்று பயன்படலாம் ]


அன்புடன் கோபு [ VGK ]




oooooOooooo









44 comments:

  1. 'அமுதைப் பொழியும் நிலவான அமுதா’வின்
    அமுதமான நினைவில் பயணித்த பயண நிகழ்வில்
    அருமையான கதை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. கதையின் ஜீவனை விட்டு விலகி விடாமல், அதை நடுவில் நிறுத்தி, கதையின் வாசிப்பு அனுபவிப்பில் நாம் ரசித்த ரசனைகளை அணிகலனாக்கி அலங்கரித்து அழகு பார்ப்பதே...."
    விமர்சனம் என்று விமர்சனத்திற்கு அளித்த பயனுள்ள
    விளக்கத்திற்கு நன்றிகள்..!

    ReplyDelete
  3. அவளின் வெல்டிங் - ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.

    சிறகடித்து விண்ணில் பறக்கும் வண்ண வண்ண நினைவுகள்
    ரசிக்கவைக்கின்றன..!

    ReplyDelete
  4. பேருந்தில் ஒலிக்கும் பாடல்கள் எண்ணப்பறவையை சிறகடிக்க வைக்கும் வகையி எழில் கோலம் காட்டி சூழ்நிலையை பொருத்தமாக படம்பிடித்துக்கட்டும் வண்ணம் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டதற்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. அனைத்துப்படங்களும் கதைக்கு
    விளக்கமளித்து சிறப்பு சேர்க்கின்றன..!

    ReplyDelete
  6. விமர்சனம் எழுதலாம்.... கதை அருமை.

    ReplyDelete
  7. Good imagination. Will send vimarsanam after getting my system repaired. My monitor died today.

    ReplyDelete
  8. கதை முடிந்ததா என்றால் தொடர்ந்து நகை போல் அறிவிப்புகள்.. உங்கள் உற்சாகம் ஒரு இனிமையான வியாதி. காதல் மாதிரி தான். படிக்கிறவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

    ReplyDelete
  9. அருமையான கதையையும் கொடுத்து விமர்சனம் எழுத டிப்ஸும் தரும் தங்கள் பெருந்தன்மை வியக்கவைக்கிறது. பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
  10. அருமையான கதை... விமர்சனம் அனுப்புகிறேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
  11. அருமையான கதையையும்
    விமர்சனம் எழுதுவோருக்கு உதவும்படியான
    "டிப்ஸும் "கொடுத்துதவியமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சிறகடித்து விண்ணில் பறக்கும் வண்ண வண்ண நினைவுகள்
    ரசிக்கவைக்கின்றன..!

    ReplyDelete
  13. ஆஹா ! எல்லோரின் ஆசையையும்

    ( நியாயமான ) நிறைவேற்றும்

    இறைவன் !

    அப்பனே ( கதா ) நாயகா,

    உன்



    கனவிலும் அமுதா,

    நினைவிலும் அமுதா.

    என்ன, வயசுதான் கொஞ்சம்

    இடிக்கும்.

    (அதான், இடிச்கிக்கிட்டே

    உட்க்கர்ந்தாச்சே)



    அங்கு அழகான கைப்பை.

    இங்கு இடுப்பிலே சுருக்குப் பை !



    அங்கு, அழகான உதட்டுச் சாயம் .

    இங்கு வெற்றிலைச் சாயம்.!!



    வாழ்வே மாயம்,

    அனுபவி ராஜா, அனுபவி !



    கனவில் வந்தவளுக்கு,

    எவரும்

    டிக்கெட் வாங்கலாம்,

    ஆனால். நிஜத்தில் வந்தவள்,

    மற்றவளுக்கு டிக்கெட்

    வாங்குகிறாள்.

    இதுதான் வாழ்வின் யதார்த்தம் !

    'நச் ' என்ற முடிவு.

    ReplyDelete
  14. அருமையான திரைக்கதை அம்சங்களுடன்

    உள்ள சிறு கதை.



    மரவட்டை .. சரி.

    ஆனால்,

    அந்த பைரவர் பற்றிய குறிப்புகள் ....



    ஒன்று, இதை தவித்திருக்கலாம்,

    அல்லது, பைரவர் என்ற வார்த்தையை

    தவிர்த்திருக்கலாம்.

    ( மாணிக்க வாசகரே

    அவையடக்கம் பாராமல்,

    தன்னை

    'நாயிற்க் கடையாய் கிடந்த அடியேன் '

    என்று கூறிக்கொள்கிறார் )



    இது எனது எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. G Perumal ChettiarMarch 7, 2014 at 10:35 AM
      G Perumal ChettiarMarch 7, 2014 at 11:11 AM

      அன்புள்ள ஐயா,

      வாருங்கள் ..... வணக்கம்.

      பல்வேறு காரணங்களால் இந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு வரும் பின்னூட்டங்களுக்கு மட்டும், பொதுவாக நான் யாருக்குமே பதில் அளிப்பது இல்லை.

      அதேபோல இந்தப்போட்டியில் கலந்துகொள்பவர்களும் அதிகமாக இங்கு வந்து தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பதிவதும் இல்லை.

      இருப்பினும் தாங்கள் முதன்முதலாக என் வலைப்பதிவுப் பக்கம் இன்று வருகை தந்து சத்தான, முத்தான, முதிர்ச்சியான, அதிர்ச்சியான நல்ல பல கருத்துக்களை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  15. விமரிசனம் குறித்த தெளிவான பார்வையைக் குறிப்பிட்டமைக்கு நன்றி. அருமையான கற்பனைக் கதை. இதுவும் ஏதோ பத்திரிகையில் படிச்ச நினைவு. எதில் என்று தான் நினைவில் வரலை. :))))))

    ReplyDelete
  16. பெருமாள் செட்டியாரின் பின்னூட்டம் ரசிக்கும்படி இருக்கிறது.

    ReplyDelete
  17. அட்டகாசமான போட்டிகளை அறிவித்து மட்டிலா உற்சாகம் அளிக்கிறீர்கள் பதிவுலகிற்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. சிறப்பான கதை! வேலைப்பளுவினால் தொடர்ந்து வர முடியவில்லை! நேரம் கிடைக்கையில் அனைத்து கதைகளையும் படித்து மகிழ்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  19. சிறுகதைக்கு இவ்வளவு கருத்துரைகள் எனில், விமர்சனங்கள் எத்தனையோ என வியக்க வைக்கின்றது.
    விமர்சனம் விரைவில் அனுப்புகிறேன் ஐயா, இறை நாட்டம்!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 7, 2014 at 9:37 PM

      வாருங்கள் நண்பரே, வணக்கம்.

      //சிறுகதைக்கு இவ்வளவு கருத்துரைகள் எனில், விமர்சனங்கள் எத்தனையோ என வியக்க வைக்கின்றது. //

      இது இப்போது மூன்றாம் முறையாக நான் பதிவிடும் மீள் பதிவாகும்.

      முதன்முறை : தனித்தனியாக இரண்டு பகுதிகளாக ஜனவரி 2011 இல் - பகுதி1 க்கு 12 Comments*
      http://gopu1949.blogspot.in/2011/01/1-of-2.html

      பகுதி-2 க்கு 27 Comments*
      http://gopu1949.blogspot.in/2011/01/2-of-2_14.html

      இரண்டாம் முறை நான் தமிழ்மணத்தில் ஒரு வாரம் நட்சத்திரப்பதிவராக இருந்த போது - நவம்பர் 2011 இல்
      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html
      அப்போது 32 Comments*

      * மேற்படி கமெண்ட்ஸ் எண்ணிக்கை யாவும் என் பதில்கள் உள்பட*

      இது விமர்சனப்போட்டிக்கான கதையாக இருப்பதால் பொதுவாக விமர்சனம் அனுப்ப நினைக்கும் யாரும் அதிகமாக இங்கு வந்து பின்னூட்டம் இடுவது இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவும்.

      தங்களைப்போல ஒருசிலர் பின்னூட்டமும் கொடுத்து, விமர்சனமும் அனுப்புவது உண்டு. அவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.

      நானும் பின்னூட்டங்களை விட விமர்சனங்களையே தற்சமயம் மிகவும் வரவேற்கிறேன். என் கவனம் இங்கு இல்லை. அங்கு மட்டுமே. அதற்கே நேரம் போதவில்லை.

      தனி ஆளாக செயல்பட்டு விறுவிறுப்பாக ஒரு போட்டி நடத்துவது என்றால் சும்மாவா ?

      //விமர்சனம் விரைவில் அனுப்புகிறேன் ஐயா, //

      சந்தோஷம். நல்லது. அனுப்புங்கோ.

      //இறை நாட்டம்!// அழகோ அழகு !

      அன்புடன் VGK

      Delete
  20. இச்சிறுகதை வெளியான பத்திரிகை கல்கியா, மங்கையர் மலரா? குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 7, 2014 at 9:39 PM

      //இச்சிறுகதை வெளியான பத்திரிகை கல்கியா, மங்கையர் மலரா? குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே ஐயா!//

      இரண்டுமே இல்லை. “தேவி” என்ற வார இதழில் 13.01.2010 அன்று அவர்களின் பொங்கல் சிறப்பிதழில் வெளியானது.

      அன்புடன் VGK

      Delete
  21. Mail message from Mr. R.Rajagopal, PA to GM/F BHEL Tiruchi-14
    2163012 - RAJAGOPAL R 10:27 (28 minutes ago) to me
    அன்புள்ள கோபு சார் அவர்களுக்கு,

    தங்கள் கதையை ரசித்துப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

    இப்படிக்கு
    ராஜகோபால்//

    Thank you Mr Rajagopal.

    GOPU

    ReplyDelete
  22. 'அமுதைப் பொழியும் நிலவே '........ ஹா....ஹா........:)))
    நல்ல பகல்கனவு கதை.

    ReplyDelete
  23. மீண்டும் ஒரு முறை படித்து ரசித்தேன்.

    புத்தகத்திலும் படித்தேன் - படிக்கும்போது நான் பயணத்தில் இருந்ததும் நினைவுக்கு வருகிறது! பக்கத்தில் யாரும் அமுதா இருக்கிறார்களா என நினைத்ததும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  24. ஆஹா ..அமுதைப் பொழியும் நிலவு மகள் வெறும் கனவுக் கன்னியாக
    மறைந்து விட்டாளே!:)))பெரும்பாடு பட்டு தேடிய சோடிப் பறவையில்
    ஒன்று நிஜமாகவே பறந்து போனது போல் உணர்ந்தேன் .கட்டிப் பிடிக்காத குறையாய் வெத்திலைச் சாற்றைத் துப்பிய கிழவி நிஜமாகவே சிரிப்பை மூட்டி விட்டாள் கனவின் முடிவில் இந்தக் கட்டம் நிஜ வாழ்வில் வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் சிரித்துவிட்டேன் :)))))) அருமையான கதை !வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  25. வித்தியாசமான கற்பனை! குமரி அமுதா... கிழவி அமுதா....:))

    பாராட்டுகள் சார்.

    ReplyDelete
  26. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/03/blog-post_4241.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete

  27. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.in/2014/10/blog-post_24.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  28. வயசுப் பொண்ணு வாசம் மல்லிகைப்பூ வாசம் வந்ததா.

    ReplyDelete
  29. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    'ஜொள்ளு' வடிய ஆரம்பித்து, அமுதாப் பாட்டியின் 'லொள்ளில்' முடிந்த கதை.

    ரசித்து படிக்க , சிரிக்க, சிந்திக்க வைத்த கதை.

    உங்கள் அக்மார்க் நிறைய பதித்திருக்கிறீர்கள்.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    ReplyDelete
  30. ரசித்து சிரித்து படித்தகதை. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  31. //“அமுதா...ம்மா .... நீ அங்கன குந்திட்டியா, .... நான் இங்கன குந்தியிருக்கேன்; எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.//

    சிரிப்புத்தான் வருகுதைய்யா.

    பரிசை வெல்லப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:26 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **“அமுதா...ம்மா .... நீ அங்கன குந்திட்டியா, .... நான் இங்கன குந்தியிருக்கேன்; எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.**

      //சிரிப்புத்தான் வருகுதைய்யா.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சிரித்து வாழ வேண்டும் !! :)

      //பரிசை வெல்லப்போகும் விமர்சகர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

      :)

      Delete
  32. பகல்ல கனவு கண்டுகிட்டா அமுதா பாட்டிதான்வரும்.பகல் தூக்கம்லா வேணாம்

    ReplyDelete
  33. வீட்ல கரண்டு கட்டுனா பஸ்ல ஒருரவுண்டு போய்வருவது நல்ல ஐடியாதான். பயணத்தில் தூங்கி பகல் கனவு கண்டால் அமுதா பாட்டி வந்து பக்கத்துல உக்காந்து வெத்தலை மென்னுவாங்களே.

    ReplyDelete
  34. சிட்டுக் குருவி படத்தில் வரும் "என் கண்மணி..." பாடலை நினைவூட்டுகிறது...இந்தாம்மா காய்கறிக்கூட முன்னால போன்னு யாராச்சும் சொல்லமாட்டாங்களா!!!

    ReplyDelete
  35. //இளமங்கை அருகிருக்க இவர் மனதில் மோகம்!

    இளமனதில் இடம்பிடிக்க இவருக்கோர் தாகம்!

    இதற்கான காட்சிகளில் பளிச்சிடும் விவேகம்!

    கனவென்று அறிந்தவுடன் கவலைதரும் சோகம்!

    கதையெங்கும் மிளிர்கிறதே நகைச்சுவையின் பாகம்!
    //

    ReplyDelete
    Replies
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கவிதை நடையில் கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
    2. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில் 2011-இல், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 26 + 38 + 41 = 105

      அதற்கான இணைப்புகள்:

      https://gopu1949.blogspot.in/2011/01/1-of-2.html

      https://gopu1949.blogspot.in/2011/01/2-of-2_14.html

      https://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

      Delete
  36. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    ReplyDelete
  37. WHATS-APP COMMENT RECEIVED ON 07.05.2019 FOR VGK-08

    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    உங்கள் நினைவுகள் யதார்த்தமானது.

    இப்படிக்கு,
    மணக்கால் மணி

    ReplyDelete
  38. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 24.05.2021

    உங்கள் கற்பனைத்திறன் ரசிக்கும்படியும், ஒவ்வொரு ஆணின் மனதிலும் தோன்றும் உணர்வுகளை விரசமில்லாமலும் விபரமானவர்கள் விளங்கிக்கொள்ளும்படியும் அழகாக கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சியுடன் நன்றி.

    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    ReplyDelete