About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, June 13, 2011

வ டி கா ல் [ பகுதி 4 of 4 ] இறுதிப்பகுதி


முன்கதை முடிந்த இடம்:

“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் 

இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.

-------------------------------------------------------------------------
தொடர்ச்சி .......... [இறுதிப்பகுதி] இப்போது
-------------------------------------------------------------------------

”படிச்சவரு, வயசானவரு., ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்க வந்துள்ள விருந்தாளி; காத்தாட வெட்ட வெளியிலே படுக்க விரும்புறாரு என்று அவருக்கு மொட்டை மாடியிலே கட்டில் போட்டு; பெட்ஷீட், தலையணி, போர்வை, குடிக்க வெந்நீர் பாத்திரம், டார்ச் லைட்டு எல்லாம் கொடுத்திருக்கிறார், அவருடைய மாப்பிள்ளை;

பாத்ரூம் போகணும் என்றாலும், குளிராக இருக்கு வீட்டுக்குள் வந்து படுக்கணும் என்றாலும் இருக்கட்டும், என்று வீட்டின் டூப்ளிகேட் சாவியையும் ஏற்பாடாகக் கொடுத்திருக்கிறாங்க. அவங்களைப் பொருத்தவரை இவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு தூங்குவதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றவன் தொடர்ந்து பேசினான்.

“விடியற்காலம் பால்காரரோ, நியூஸ் பேப்பர்காரரோ வந்தவுடன், அவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக்கொண்டே, அவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டே கிளம்பி விடுவார்” என்றான்.

“இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.

“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவ்ரு.  டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு; 

அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை; 

நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான்.

அவன் சொல்வதும் எனக்கு நியாயமாகவே பட்டது.

மனைவியை இழந்த அவருக்கு வயதான காலத்தில் பேச்சுத்துணையாக ஒரு வடிகால் தேவைப்படுகிறதே! அந்த வடிகாலாக இருந்து, அவருக்கு இந்த வாட்ச்மேனும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கொண்டு தானே இருந்து வருகிறான்!

இவரைப்போல வசதி படைத்தவர்களும், வடிகால் வேண்டுவோரும், பேசாமல் தற்சமயம், ஆங்காங்கே, டி.வி., கட்டில், தனி அறைகள் போன்ற அனைத்து வசதிகளும் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து, மாதாமாதம் பணம் கட்டி, தங்கி விடுவதே நல்லது என்று எனக்குத் தோன்றியது. 

முதியோர் இல்லங்களில் சேர்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். பேச்சுத்துணைக்கும் பொழுதுபோக்கிற்கும் இவர்கள் வயதை ஒத்த பெரியோர்கள் இருப்பார்கள். பணம் தருவதால் ஓரளவு பொறுப்பாகவும் கவனித்துக் கொள்வார்கள். 

தினமுமோ அல்லது வாரம் ஒருமுறையோ மருத்துவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருகை தருவதால், உடல்நிலை சரியில்லாவிட்டாலும், உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, தேவையான சிகிச்சை தரப்பட்டு, அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வழியுண்டு.

ஊரார் ஆயிரம் சொல்லுவார்கள். பெற்ற குழந்தைகள் பொறுப்பாக கவனிக்கவில்லையென்று. இன்றுள்ள அவசர உலகத்தில், பணம் ஈட்டுவது மட்டுமே ஒரே குறியாக ஆணும் பெண்ணும் அலைந்து திரிய வேண்டிய அவஸ்தைகளுக்கிடையில், யாரும் யாரையும் ஓரளவுக்குமேல் கவனிக்க முடியாத சூழ்நிலையில், இத்தகைய முதியோர் பிரச்சனைகளுக்கும், நடைமுறைக்கு சாத்தியமான, ஒரு நல்ல வடிகால் (தீர்வு) வேண்டுமே!

எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாடார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.

அவரைப்பற்றி உணர்ந்து கொண்ட எனக்கு ‘வடிகால்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றியே இந்தக்கதையை எழுதி சமுதாயத்திற்கு, இவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியதே, இந்தக்கதை பிறந்ததன் காரணமாகும்.

ஆனால் ஒன்று; எங்கள் வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.       

-o-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-o-




[இந்தச் சிறுகதை பத்திரிகை ஆசிரியரால் சற்றே சுருக்கப்பட்டு 
14.07.2010 தேதியிட்ட “தேவி” வார இதழில் வெளியிடப்பட்டது.]



நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்

இந்தக்குறிப்பிட்ட நபருடன் அன்று எனக்கேற்பட்ட அனுபவத்தில், அவரின் விசித்திரமான ஒருசில நடவடிக்கைகள், என் மனதில் ஏற்படுத்திய ஒருசில பாதிப்பால் மட்டுமே, முதியோர் இல்லத்தில் சேர்ப்பது கூட ஒருவிதத்தில் இந்த நபர்போல உள்ளவர்களுக்கு ஒரு தீர்வாக இருக்குமோ என்று எனக்கு நினைக்கத் தோன்றியதை எழுதினேன்.

ஆனால் முதியோருக்கான பிரச்சனைகள், நபருக்குநபர், வீட்டுக்கு வீடு, ஒரே மாதிரியாக இல்லாமல் முற்றிலும் வேறுபடுபவதாகத்தான் உள்ளது

முதியோர்களிடம் மிகுந்த மரியாதை வைத்து, அன்பு செலுத்தி, அவர்களை மிகவும் அக்கறையாகப் பேணிப் பாதுகாத்துவரும் எவ்வளவோ பேர்களைகளையும், குடும்பங்களையும் நான் அறிவேன்.  

அது போன்ற பெரியவர்கள் வீட்டில் இருப்பதும், தங்கள் அனுபவத்தால் நல்ல பல அறிவுரைகள் வழங்குவதும், பேரன் பேத்திகளுக்குப் பாதுகாப்பாகவும், அரவணைப்பாகவும் இருப்பதும், அதனால் அந்தக்குழந்தைகள் ஆறுதல் அடைவதும் ஆங்காங்கே சில இடங்களில் இன்றும் காணப்படும் நல்ல விஷயங்களாகவும், முன்னுதாரணங்களாகவும் உள்ளன.

அந்த முதியோர்கள் ஓரளவுக்கு உடல்நிலை தெம்பாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருந்து விட்டால், அவர்களால் அந்தக் குடும்பத்திற்கே பலவித உதவிகள் கிடைப்பதும் உண்டு. 

சுத்தமாக நடமாட்டமே இல்லாமல், படுத்த படுக்கையாய் பல ஆண்டுகளாக இருப்பினும், கொஞ்சம்கூட அருவருப்பு காட்டாமல், அவர்களுக்கு எல்லாவிதமான பணிவிடைகளும் செய்துவரும் பல கணவன் மனைவிகளையும் நான் அறிவேன்.

பெற்றோர்கள் நம்மை விட்டுப்பிரிந்த பின்தான், நம்மில் பலருக்கு அவர்களைப்பற்றிய அருமையே புரிய ஆரம்பிக்கிறது. இருக்கும் வரை கோபதாபங்களில் நம்மையும் அறியாமல் ஏதேதோ, வாய்தவறி சிலசமயங்களில் பேசிவிடுகிறோம்.  பிறகு வருந்தி பிரயோசனமே இல்லை. இதுபோன்ற பேச்சுக்கள் அந்த வயதானவர்களுக்கு, நெஞ்சில் ஆஸிட் ஊற்றியதுபோல, மனதை ரணமாக்கிவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.

இறந்தவர்களுக்கு நாம் நம் மதச்சடங்குகள், சாஸ்திர சம்ப்ரதாயங்கள்படி எவ்வளவோ செலவுகள் செய்து, ஈமச்சடங்குகள், தான தர்மங்கள், நினைவு நாட்கள் அஞ்சலிகள் முதலியன செய்து, பல்வேறு புண்ணிய நதிகளில் நீராடி, புனித யாத்திரைகள் மேற்கொண்டு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய ஏதேதோ செய்கிறோம்.  அதனால் அவர்களுக்கும் நற்கதி கிடைத்து, நம்மையும் நம் சந்ததிகளையும் ஆசீர்வதிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவையெல்லாம் அவர்கள் இறந்த பிறகு நாம் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். 

இப்போது அவர்கள் உயிருடன் நம் கண் முன்னால் இருக்கும் போது, கொஞ்சமாவது அவர்களிடம் அன்புடனும், ஆதரவுடனும் நடந்துகொண்டால், அவர்களின் பரிபூரண ஆசிகள் மிகச்சுலபமாகக் கிடைத்து நாமும், நம் சந்ததிகளும், குறையொன்றும் இல்லாமல், நிம்மதியுடன் வாழ வழி கிடைக்குமே!  தயவுசெய்து யோசிப்போம்.

-----------------------------------

என் பக்கத்து வீட்டில், முன்பு ஒரு காலத்தில், ஒரு மிகவும் வயதான அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளை. அந்த பிள்ளைக்கே 79 வயது. அந்த அம்மாவுக்கு 97 வயது. 

அந்த தன் அம்மாவை நல்லமுறையில் தான் அந்த மகன் கவனித்துக்கொண்டு வந்தார். அவர்கள் இருவரும் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து, தங்களுக்குள் விளையாட்டாகப் பேசிக்கொள்வார்கள். அந்த அம்மாவுக்கு காது மட்டும் அவ்வளவாகக்கேட்காது. சற்று பலக்க கத்திப்பேச வேண்டும்.  அந்த 79 வயதான மகனுக்கு அரைகுறையாக காது கேட்கும்.

”உனக்கு சதாபிஷேகம் (80 வயது பூர்த்தி) ஆகி நான் பார்க்கணும் என்று இருக்கோ என்னவோடா” என்பாள் அந்தத்தாயார்.  

“எனக்குக் கொஞ்சமாவது உடம்பில் தெம்பு இருக்கும் போதே நீ டிக்கெட் வாங்கிவிட்டால் தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது” என்று இவர் அந்தக்கிழவியின் காதில் பலக்கக் கத்திச்சொல்லுவார்.  

அப்படியும் அந்தக்கிழவியின் காதில் என்ன விழுந்ததோ தெரியாது சிரித்துக்கொண்டே ”நீ மஹராஜனா 100 வயசு இருக்கனும்டா, நீ கவலையே படாதே, உன் சதாபிஷேகம் வரைக்கும் நான் கண்டிப்பா இருப்பேன்டா” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வாள். 

”யாரு முன்னே போகப்போறோமோ, யாரு பின்னே போகப்போறோமோ, பேசாமல் ஏதாவது புலம்பிண்டே இருக்காமல் ராமா, கிருஷ்ணா, கோவிந்தான்னு ஏதாவது சொல்லிண்டே இரு” என்பார் அந்த பாட்டியின் பிள்ளை.

அந்த அம்மா காதில் இப்போ என்ன விழுந்ததோ, என்ன புரிந்து கொண்டார்களோ தெரியாது. அந்த அம்மா மீண்டும் பேச ஆரம்பிப்பார்கள் : ”உன் ஃபிரண்டுகள் ராமனும், கிருஷ்ணனும் ரொம்ப நாளா இந்தப்பக்கமே காணுமேடா, ஊருக்கு எங்காவது போயிருக்காங்களா,  போய் விசாரிச்சாயா” என்பாள் அந்த அம்மா.

இதுபோன்ற இவர்களின் பேச்சையும், நகைச்சுவையான உரையாடல்களையும், அருகில் இருந்து அடிக்கடி கேட்கும் வாய்ப்பு பெற்ற எனக்கு,  ஒரே சிரிப்பாக வரும்.

-----------------------------------

’அம்மா என்றழைக்காத உயிரில்லையே; அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே ....’ என்ற அழகிய பாடல், நமக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாசிரியரால் எழுதப்பட்டு, மிகவும் பிடித்த ஒரு இசைஅமைப்பாளரால் இசையமைக்கப்பட்டு, மிகவும் பிடித்த ஒரு பாடகரால் பாடப்பட்டு, திரைப்படத்தில் நமக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகரால் வாய் அசைத்து நடிக்கப்பட்டு, காணும் நம் மனதை அப்படியே மயக்குகிறது.  

இந்தப்பாடலைக்கேட்டு மயங்கி நம் வாயும் முணுமுணுக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அதே நம் தாய் தானே, நம்மை வயிற்றில் சுமந்து, கஷ்டப்பட்டு பெற்று, பாலூட்டி, சோறூட்டி, கண் உறக்கமின்றி வளர்த்து நம்மை ஆளாக்கியுள்ளார்கள்.  

அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டாமா? நம் குழந்தைப்பருவத்தில் நமக்காக எவ்வளவோ நாட்கள் கண் உறங்காமல் கஷ்டப்பட்ட, அந்தத்தாய் இன்று கஷ்டப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டு, கட்டிலில் கிடக்கும் போது, நாமும் அவர்களுக்காக ஒருசில இரவுகள் தூங்காமல் பணிவிடை செய்ய வேண்டாமா? தயவுசெய்து இதை அனைவரும் நினைத்துப்பார்ப்போம். மனசாட்சிப்படி நியாயமாக நடந்து கொள்வோம். 

-----------------------------------

நாம் இன்று ஏதோ நடமாடி வருகிறோம், சம்பாதிக்கிறோம், சந்தோஷமாக இருக்கிறோம். நமக்கும் நோய் வரலாம், முதுமை வரலாம், முடியாத்தனம் வரலாம். நாம் எவ்வளவு வயதுவரை இந்த உலகில் வாழப்போகிறோம், என்னென்ன கஷ்டங்கள் படப்போகிறோம் என்பது யாருக்குமே தெரியாததொரு, மர்மமாக உள்ளது. 

இன்று நாம் நம் குழந்தைகள் மேல் அளவுக்கதிகமாக பாசம் வைக்கிறோம். அந்தக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றி என்னவெல்லாமோ கனவுகள் காண்கிறோம்.

அது போலத்தான் நம் தாய் தந்தையும் அன்றொரு நாள் நம் மீது பாசமழை பொழிந்திருப்பார்கள். என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.  

மிகவும் வயதான அவர்களும், இன்று சின்னக்குழந்தைகள் போலவே தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அவர்கள் மனம் புண்படும்படி நாம் எதுவும் பேசக்கூடாது,  நடந்து கொள்ளக்கூடாது.மிகவும் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், விட்டுக்கொடுத்துப் போதலையும் கடைபிடிக்க வேண்டும்.

வயதான தாய் தந்தையர்கள், இப்போதும் தங்களுடன் கூடவே இருக்கும் வாய்ப்பு அமையப்பெற்றவர்கள், தினமும் ஒரு 5 நிமிடங்களாவது அவர்கள் அருகே சென்று அமர்ந்து, சாப்பிட்டீர்களா? ஏதாவது உங்களுக்கு வேண்டுமா? பழங்கள் ஏதாவது வாங்கி வந்து தரட்டுமா? என அன்புடன் விசாரித்தாலே போதும். அவர்களுக்கு சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். 

வயதான அவர்களுக்கு, நல்ல இனிப்பான மாம்பழத்தை வாங்கிவந்து, நன்கு கழுவி, அழகாகத்துண்டுகள் போட்டு, தோல் நீக்கி, நம் கையால் இரண்டே இரண்டு துண்டங்கள் கொண்டுபோய், சாப்பிடச்சொல்லி அன்புடன் கொடுத்தால் அகம் மகிழ்ந்து போவார்கள். 

 


நம்மை மனதார ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் அந்த நல்ல மனமார்ந்த ஆசிகளுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது என்பதை நாம் உணர வேண்டும்.

-----------------------------------

அவர்களை வயதான காலத்தில் பேணிப்பாதுகாக்க வேண்டியதும் அன்பு செலுத்த வேண்டியதும் நமது கடமை என்று உணர்வோமாக!   


முதியோர் இல்லங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதைத் தவிர்ப்போமாக!

-----------------------------------




என்றும் அன்புடன் தங்கள்,
வை.கோபாலகிருஷ்ணன் 

68 comments:

  1. ஐயா யதார்த்தமான உண்மைகள் நிறைந்த படைப்பை தந்திருக்கிறீங்கள்......
    உண்மையாகவே எப்போதும் அவர்களை தெய்வங்களாக பார்க்க வேண்டும்.....
    இன்றும் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருப்பதை அழகாய் சொன்னீங்கள்.....

    ReplyDelete
  2. ஒரு கதையின் மூலம் மிக அழகான கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள். கதைக்குப் பிறகு எழுதப் பட்டுள்ள சிந்தனைகள் யாவுமே அருமை. கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete
  3. என் அம்மாவின் பெரியப்பா , கடந்த மாதம்தான் இறந்தார். தொண்ணூற்றி ஒன்பது வயது அவருக்கு அப்பொழுது. கடைசி வரை என் மாமாவும் சரி மாமியும் சரி கடைசி வரை அருமையாக பார்த்து கொண்டார்கள். அவருக்கு ஒரு பக்க காது மட்டுமே கேட்காது மற்ற படி நன்றாகவே இருந்தார்.

    ReplyDelete
  4. அவரைப்பற்றி உணர்ந்து கொண்ட எனக்கு ‘வடிகால்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றியே இந்தக்கதையை எழுதி சமுதாயத்திற்கு, இவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியதே, இந்தக்கதை பிறந்ததன் காரணமாகும்.//

    Very Impressive.

    ReplyDelete
  5. அகம் மகிழ்ந்து போவார்கள். நம்மை மனதார ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் அந்த நல்ல மனமார்ந்த ஆசிகளுக்கு ஈடு இணை ஏதும் கிடையாது என்பதை நாம் உணர வேண்டும்.//

    மிக அழகான கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள். சிந்தனைகள்அருமை. கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை.

    ReplyDelete
  6. அவர்கள் இறந்த பிறகு நாம் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்.
    இப்போது அவர்கள் உயிருடன் நம் கண் முன்னால் இருக்கும் போது, கொஞ்சமாவது அவர்களிடம் அன்புடனும், ஆதரவுடனும் நடந்துகொண்டால், அவர்களின் பரிபூரண ஆசிகள் மிகச்சுலபமாகக் கிடைத்து நாமும், நம் சந்ததிகளும், குறையொன்றும் இல்லாமல், நிம்மடியுடன் வாழ வழி கிடைக்குமே!//
    தயவுசெய்து யோசிப்போம்.
    தயவுசெய்து உணர்வோமாக!
    முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்ப்பதைத் தவிர்ப்போமாக!

    ReplyDelete
  7. வெரிகுட்.. 2 பதிவாவே போட்டிருக்கலாம்

    ReplyDelete
  8. முதியோ இல்லங்களை பற்றிய உங்களின் மாறுபட்ட சிந்தனை அருமை , அதே நேரத்தில் வயதான தாய் தந்தை உள்ளவர்களுக்கு தாங்கள் கூறியுள்ள அறிவுரை மிக அருமை ஐயா,

    ஒரு முதியவரின் வாழ்க்கை வழியே பல கோணங்களை கொண்டு அதை கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
    ”உனக்கு சதாபிஷேகம் (80 வயது பூர்த்தி) ஆகி நான் பார்க்கணும் என்று இருக்கோ என்னவோடா” என்பாள் அந்தத்தாயார்.

    “எனக்குக் கொஞ்சமாவது உடம்பில் தெம்பு இருக்கும் போதே நீ டிக்கெட் வாங்கிவிட்டாள் தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது” என்று இவர் அந்தக்கிழவியின் காதில் பலக்கக் கத்திச்சொல்லுவார்.

    அப்படியும் அந்தக்கிழவியின் காதில் என்ன விழுந்ததோ தெரியாது சிரித்துக்கொண்டே ”நீ மஹராஜனா 100 வயசு இருக்கனும்டா, நீ கவலையே படாதே, உன் சதாபிஷேகம் வரைக்கும் நான் கண்டிப்பா இருப்பேன்டா” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்வாள். ""

    ஆஹா
    என்ன அழகான உரையாடல், தனக்கு ஏதாவது காதில் விழவில்லை என்றால் அன்னையிடமிருந்து ஆசிவாதம்தான் வெளிவரும் என்பதை
    அற்புதமாய் சொல்லி இருக்கீங்க ஐயா

    மனம் நெகிழவைத்த கதை

    இன்ட்லி எட்டு
    தமிழ்மணம் மூன்று அடியேன் தான் ஐயா

    ReplyDelete
  9. கதைக்கு பின்னால் எழுதிய அனைத்தும் அருமை. கதையும் அற்புதம் தான்.. இருந்தாலும் உங்களது சிந்தனைகள் நன்றாக உள்ளது. காது கேட்காத அம்மாவும் பையனும் பேசிக்கொண்டது சிரிப்பாக இருந்தது. ;-))

    ReplyDelete
  10. இந்திய மரபு சார்ந்த உறவுகளிலும் சிந்தனைகளிலும் அவசரம் நேரமில்லை என்கிற தப்பித்தல் வார்த்தைகளால் விரிசல் விழுந்துள்ளது.

    பணத்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற மனோபாவம் பணம் வாங்க முடியாது தோற்றுப்போகும் இடங்களில்தான் ஒருவரின் சுயம் விழிக்கிறது.

    இனிமையான வார்த்தைகள் மட்டுமே முதியவர்களுக்குப் போதும். அவர்கள் மனதும் வயிறும் குளிர்ந்துவிடும்.

    அருமை கோபு சார்.

    ReplyDelete
  11. அருமையான பதிவு!

    HATS OFF!!

    முதியவர்களின் இன்றைய நிலையையும் அவர்களுக்கு எந்த அளவிற்கு காருண்யமும் அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது என்பதையும் மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

    முதியோர் இல்லங்களுக்கு வருடா வருடம் சென்று உணவும் பொருள்களும் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் அவர்களின் பார்வையில் தெரியும் ஏக்கமும் வலியும் அப்படியே மனதைப் பிசையும். நான் வலைப்பூ தொடங்கிய புதிதிலேயே அவர்களின் வேதனையைப் பற்றி விள‌க்கமாக எழுதியிருக்கிறேன்.

    அதனால்தான் நல்ல விதைகளாய் விதைக்க வேன்டுமென்பது. குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே அன்பையும் கருணையையும் பிறரை மதிக்கவும் சொல்லிச் சொல்லி பழக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் நிச்சயம் பின்னாளில் பெற்றோருடைய ஊன்றுகோலுக்குப் பதிலாக தானே இருப்பார்கள்!

    சிறு குழந்தையாயிருக்கையில் அதன் கண்ணீரைத் துடைத்தே பழக்கப்பட்ட பெற்றோருக்கு, அவர்களின் முதிய பிராய‌த்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரே சிந்தாமல் பார்த்துக்கொள்வது எத்தனை புண்ணியம்!!

    ReplyDelete
  12. ஐயா...அருமையான தொடர்..... இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான விஷயத்தை சொல்லியிருக்கிங்க.

    ReplyDelete
  13. ஆரம்பம் ஒரு அமானுஷ்யத்தன்மையுடன் இருந்தாலும், போக்குக்காட்டி கதையையும் மடைதிருப்பி வடிகால்களுக்கும் வசதிபண்ணித் தந்து விட்டீர்கள்.

    வயதானவர்கள் கூட இருப்பது இளசுகளுக்கு பலவிதங்களில் செளகரியமே. கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதச்சம்பளத்தில் அரைப்பங்கு அவர்கள் துணையாக இருப்பதால் மிச்சமாகும் என்பது தெரியும். பெற்றோரை நடுத்தெருக்கு அனுப்பாமல், காப்பாற்றுகிறான் என்று சுற்றுவட்டாரத்திலும் நல்ல பெயர். இருக்கவே இருக்கு, வாழ்க்கைக் கணக்கில் சேருகின்ற புண்ணிய பலனும்.

    அதே மாதிரி வயதான பெற்றோர்களுக்கும் பிள்ளை,மருமகள், பேரக்குழந்தைகள் மத்தியில் கிடைத்த வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்வது, விலைமதிப்புள்ள வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதை விட சந்துஷ்டியை கொடுக்கிற சமாச்சாரம் என்பது தெரியவரும். வயதான காலத்தில் பிள்ளைகளின் கூட இருந்து பிள்ளைகளூக்கும் வெளியிடத்தில் பெருமை சேர்க்கும் கடமை சார்ந்த புண்ணியமும் கிடைக்கும். விழுகிறோமா, எழுகிறோமோ சொந்த பந்தங்களின் மத்தியில் என்கிற மனநிம்மதியும் இதில் உண்டு.

    ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது, சின்ன விஷயங்களை பெரும்போக்கில் பெரிது பண்ணாமல் அரவணைத்துச் செல்வது, வரட்டு கெளரவங்களை அலட்சியம் செய்வது போன்ற உப்புப் பெறாத சின்ன சின்ன விஷயங்களில் பெரியோர்--சிறியோர் இருசாராரும் கொஞ்சமே அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், எந்த வடிகாலுக்கும் வேலையே இல்லை. அப்புறம், 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' பாட்டுப்பாட வேண்டியது தான்! அந்த சந்தோஷத்தை நினைத்தால், எந்த சொந்த இழப்புக்கும் தயாராகிற மனோபாவம் வரும்! வேண்டியதெல்லாம், மனசை கொஞ்சமே அட்ஜெஸ்ட் செய்துகொள்கிற மனோபாவம் மட்டுமே1 இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் ஆயிரம் தொந்தரவுகளை கிட்டத்தில் அண்ட விடாமல் கட்டிக் காப்பாற்றுகிற ரட்சையாகச் செயல்படுவது உறுதி!

    முதியோர் இல்லங்களெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம். சென்ற தலைமுறையில் இந்த தேசத்திற்கு இதைப்பற்றிய 'அறிவே' கிடையாது.
    வேண்டாத பல இறக்குமதிகளும் கூடச்சேர்ந்த இறக்குமதியே இதுவும்.
    நமக்குச் சரிப்படாத இந்த கார்ப்பரேட் விவகாரங்கள், ஒட்டாத ஒரு அன்னியத்தன்மை கொண்டே என்றும் இருக்கும்!

    அவரவர்க்குத் தேவையானதை தேர்ந்து கொள்கிற மாதிரி, கதையில் சொல்லியும் முழு திருப்திபடாது நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் உங்கள் நல்ல நோக்கம் பளிச்சிடுகிறது. அதற்கான பாராட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

    ReplyDelete
  14. கதையை விட பின்னால் எழுதிய விஷயங்கள் அருமை!

    ReplyDelete
  15. /////அது போன்ற பெரியவர்கள் வீட்டில் இருப்பதும், தங்கள் அனுபவத்தால் நல்ல பல அறிவுரைகள் வழங்குவதும், பேரன் பேத்திகளுக்குப் பாதுகாப்பாகவும், அரவணைப்பாகவும் இருப்பதும், அதனால் அந்தக்குழந்தைகள் ஆறுதல் அடைவதும் ஆங்காங்கே சில இடங்களில் இன்றும் காணப்படும் நல்ல விஷயங்களாகவும், முன்னுதாரணங்களாகவும் உள்ளன.

    //// உண்மை தான் ஐயா

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு. கதையின் முடிவில் நீங்கள் சொல்லியிருந்த ஒவ்வொரு விஷயமும் உண்மை....

    ReplyDelete
  17. கோபு சார், கதையில் எழுதியுள்ள கருத்துக்கள் நீங்கள் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கண்டு வடிகால் இப்படி இருக்கலாம் என்று சிந்தித்ததனால் ஏற்பட்டவை. அறிவு சார்ந்தது..? ஆனால் கதைக்குப் பிறகு சொன்ன கருத்துக்கள் உணர்வு சார்ந்தது,அன்பினால் சிந்தித்தது. உங்களுக்கே கதையில் சொல்லப்பட்ட கருத்துக்களில் அவ்வளவு உடன்பாடில்லை என்று தெரிகிறது.பெரியவர்களைப் பற்றியவரை அறிவு கொண்டு செயல்படுவதை விட, அன்பு கொண்டும் உணர்வு கொண்டும் செயல்படுவதே சிறந்தது.

    ReplyDelete
  18. மிகச் சரியாக தனிமையில் உள்ளவர்களின் உணர்வுகளை அதுவும் வயதானவர்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  19. நல்லா எழுதி உள்ளீர்கள்,
    ஆனந்த விகடன படித்த உணர்வைகொடுக்குது

    ReplyDelete
  20. நன்றாக இருந்தது சார். கதையின் முடிவில் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் அருமை. முதியோர் இல்லங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

    ReplyDelete
  21. மிக அழகான கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள். சிந்தனைகள்அருமை. கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை.

    ReplyDelete
  22. வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.//ஏற்றுக் கொண்டேன்.

    இதைப் பற்றிய ஒரு கவிதையை சென்ற மாதம் என் பதிவில் பதித்திருக்கிறேன்.நேரம் இருப்பின் பாருங்க.
    topic:ஏனப்பா எனைப் படைத்தாய்..?
    Link: http://zenguna.blogspot.com/2011/04/1.html

    ReplyDelete
  23. மிக அருமையான அனுபவத்தோடான கருத்துரைகள் கோபால் சார். பகிர்வு அருமை.

    ReplyDelete
  24. ஒரு நாடு எப்போது வ(ந)ல்லரசு ஆகும்?
    என் பதில்: சிறு பான்மையோர் மிகமிக சந்தோஷமாய் வாழ வேண்டும்...
    மருந்துக்குக் கூட ஒரு முதியோர் இல்லம் இருக்கக் கூடாது..அங்கு..
    கதையும்..கதைக்குப் பின்னால் சிந்திய சிந்தனைத் துளிகளும் என்னை இவ்வாறு எழுதத் தூண்டியது!

    ReplyDelete
  25. ஒரு பர்ஃபியின் மீது தூவப் பட்ட தேங்காய் துருவல்கள் க்ரேவியாய்..
    தங்கள் ‘வடிகாலும்’ பின் முளைத்த..
    சிந்தனைகளும்..
    அருமை!!!

    ReplyDelete
  26. எதை highlight செய்து காட்டுவது , நீங்கள் கூறியது எல்லாமே சத்தியமான உண்மை .

    ReplyDelete
  27. இன்றைய வாழ்வியல் பிரச்னையை சிந்திக்கும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள் எவ்வளவுதான் பரிதாபம் ஏற்பட்டாலும் அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தோம் என்ற தங்கள் உணர்வும் யதார்த்தமாகவெ இருந்தது. முதுமை எல்லோருக்கும் உண்டு, உயிருடன் இருந்தால். பயமாகவே உள்ளது.

    ReplyDelete
  28. மிக மிக அருமை
    இன்றைய காலகட்டத்தில் உள்ள
    பரவலான ஒரு பிரச்சனையை
    கதை கருவாகக் கொண்டு
    சிறுகதையின் எல்லை மீறாமல் அதை தெளிவாக
    ரசிக்கும்படியாக சொல்லிவிட்டு
    (அதிகம் பிரச்சாரம் இல்லாமல்
    சொல்லி முடித்துவிட்டு)
    பின்னால் இத்துடன் இது முடியவில்லை
    "அப்ப நீங்க " என்பது போல்
    தனியாக அது குறித்து அக்குவேறாக
    ஆணிவேறாக அலசி இருப்பது
    என்னை மிகவும் கவர்ந்தது
    இதை ஒரு பரிசோதனை முயற்சி
    எனக்கூடச் சொல்லலாம்
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. மன்னிக்கவும் VGK சார். வடிகால் பகுதியை நான் நேற்றே படித்துவிட்டேன் - அலைபேசி உதவியுடன் படித்ததால் உடனேயே கருத்துகூற முடியவில்லை. வயதானவர்களின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் உண்மையான கதை சார். இதை முதியோர் இல்லத்திலிருக்கும் ஒரு பெரியவரும் ஒப்புக் கொண்டார். அவர் கூறியது -" வயதாகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் முன்பே நம்மை சுற்றியுள்ளவர்கள் உணர்ந்துவிடுகிறார்கள். குடும்பத்தினருடன் நமக்கு பேச நிறைய விசயம் இருப்பதை உணரும்போது நமக்கு வயதாகிவிட்டது என்று புரிகிறது. ஆனால், நம்முடன் பேச அவர்களுக்கு நேரமில்லை. நமக்காக உருவாக்கினாலும் ஆறாவது விரல் போல் ஒட்டாமல் - சங்கடமாக இருக்கிறது. இங்கே பேசவும் சிரிக்கவும் ஆறுதல் கூறவும் நிறைய இருக்கின்றனர். முடிந்தபோது வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறேன்." அவரிடம் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை சார். ஒரு அலை கடமையாக கரைக்கு வந்து திரும்புவதைப்போல வாழ்க்கையை எடுத்துக் கொள்கின்றார். நம்மைப் போன்றவர்கள் சென்று பேசினால் ஆர்வமாக பேசுகிறார்கள். அதுவே ஒரு திருப்தியாக சில சமயம் அமைந்துவிடுகிறது. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது நன்றி சார்.

    ReplyDelete
  30. இன்னும் ஒன்று சார். இதுபோல முதியோர் இல்லம் செல்வதை ஆண்கள்தான் விரும்புகின்றனர். பெண்கள் விரும்புவதில்லை. முதியோர் இல்லத்தை எதிர்ப்பதைவிட அதை value addedஆக செய்ய முயற்சிக்கலாமா என்றுகூட தோன்றுகிறது.

    ReplyDelete
  31. நான் முதியோர் இல்லத்தை ஆதரிப்பதாக தவறாக எண்ண வேண்டாம், சார். முதிர்யோர் பற்றி நான் ஏற்கன்வே எழுதிய கட்டுரையை முடிந்தால் சென்று பாருங்கள். http://mahizhampoosaram.blogspot.com/2011/01/blog-post_20.html

    ReplyDelete
  32. கதையும் அதைத் தொடர்ந்து உங்கள் கருத்துக்களும் நீண்ட நேரம் யோசிக்க வைக்கும்..
    முதியவர் என்றில்லை.. மனம் விட்டு பேச ஆளற்ற தனிமை.. எவரையுமே நோகடிக்கும். முதியவர்களுக்கு கூடுதலாய் அதன் சோகம் தாக்கும்..

    ReplyDelete
  33. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  34. @ vidivelli!
    மிக்க நன்றி.

    @ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    மிக்க நன்றி

    @ எல் கே !
    தங்கள் அம்மாவின் பெரியப்பா பற்றிய செய்திகளும், தங்களின் மாமா, மாமியின் பணிவிடைகளும் மிகவும் பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  35. @ இராஜராஜேஸ்வரி !

    ஸ்ரீ துர்கா லக்ஷ்மி சரஸ்வதி போல மும்முறை அழகிய செந்தாமரையை மலரச்செய்துள்ளது, என்மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது.

    தங்கள் பின்னூட்டங்களும்
    Very Impressive தான்.

    மிகவும் நன்றி, நன்றி, நன்றி!!!

    ReplyDelete
  36. சி.பி.செந்தில்குமார் said...
    //வெரிகுட்.. 2 பதிவாவே போட்டிருக்கலாம்//

    மிக்க நன்றி.

    [ஏதோ கொஞ்சமாக எழுத வேண்டும் என்று நினைத்துத்தான் கடைசியில் ஆரம்பித்தேன். அது சற்றே பெரியதாக அமைந்து விட்டது.]

    ReplyDelete
  37. @ A.R.ராஜகோபாலன்
    தங்களின் நீண்ட பின்னூட்டம் எனக்கும் மனதை நெகிழ வைத்தது. மிக்க நன்றி.

    @ RVS
    மிக்க நன்றி. உங்கள் பதிவுகளில் என்னை அடிக்கடி சிரிக்க வைக்கிறீர்களே! ஏதோ என்னால் முடிந்தது கொஞ்சமாக. ’எத்கிஞ்சிது’ என்பார்களே அதுபோல.

    ReplyDelete
  38. @ சுந்தர்ஜி
    //இனிமையான வார்த்தைகள் மட்டுமே முதியவர்களுக்குப் போதும். அவர்கள் மனதும் வயிறும் குளிர்ந்துவிடும்.

    அருமை கோபு சார்.//

    நீங்கள் சொன்னால் எதுவும் மிகச்சரியாக இருக்கும், மிக்க நன்றி, சுந்தர்ஜி சார்.

    ReplyDelete
  39. @ மனோ சாமிநாதன்

    //அருமையான பதிவு!
    HATS OFF!!//

    என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மிகச்சிறந்த எழுத்தாளராகிய தங்களின் மிக நீண்ட, கருத்தாழம் மிக்க பின்னூட்டம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. உற்சாகப்படுத்தியுள்ளது.

    //அதனால்தான் நல்ல விதைகளாய் விதைக்க வேண்டுமென்பது. குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே அன்பையும் கருணையையும் பிறரை மதிக்கவும் சொல்லிச் சொல்லி பழக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் நிச்சயம் பின்னாளில் பெற்றோருடைய ஊன்றுகோலுக்குப் பதிலாக தானே இருப்பார்கள்! //

    எவ்வளவு ஒரு நல்ல விஷயம் சொல்லியுள்ளீர்கள்!

    HATS OFF !!! TO YOU, Madam.

    ReplyDelete
  40. தமிழ்வாசி - Prakash said...
    //ஐயா...அருமையான தொடர்..... இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான விஷயத்தை சொல்லியிருக்கிங்க.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  41. @ ஜீவி
    இந்தக்கதையை ஆரம்பம் முதல் மிகவும் உன்னிப்பாகப்படித்து, உங்களுக்கே உரிய பாணியில், நன்கு திறனாய்வு செய்துள்ளீர்கள் என்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

    தாங்கள் எவ்வளவோ பிரபல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்து, வெகு அழகாக அவைகளை விமரிசனம் செய்து உங்கள் பதிவினில் வெளியிட்டுள்ளீர்கள்.

    அவைகளைப் படித்துப்படித்து உங்கள் மேல் எனக்கு மிகப்பெரிய அன்பும், நல்லெண்ணமும் ஏற்பட்டுள்ளது.

    அத்தகைய தாங்கள் இந்த மிகச்சாதாரண எழுத்தாளனாகிய என் படைப்பையும் படித்து, விமர்சனம் செய்ய வந்துள்ளது, என் அதிர்ஷ்டமோ துரதிஷ்டமோ என்ற கவலையுடன் தான் இருந்து வந்தேன்.

    //அவரவர்க்குத் தேவையானதை தேர்ந்து கொள்கிற மாதிரி, கதையில் சொல்லியும் முழு திருப்திபடாது நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றிலும் உங்கள் நல்ல நோக்கம் பளிச்சிடுகிறது. அதற்கான பாராட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.//

    தங்கள் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து, தங்களின் இந்தப்பாராட்டுக்களை, பணிவன்போடு ஏற்றுக்கொள்கிறேன்.

    நன்றி, நன்றி, நன்றி!!!

    ReplyDelete
  42. middleclassmadhavi said...
    //கதையை விட பின்னால் எழுதிய விஷயங்கள் அருமை!//

    மிக்க நன்றி, மேடம்.
    =========================
    @ கந்தசாமி.

    மிக்க நன்றி
    =========================

    @ வெங்கட் நாகராஜ்

    குழந்தையாய், அதுவும் அழகான் [என் அருமைப் பேத்திபோன்ற சாயலில்] பெண்குழந்தையாய் காட்சியளித்து வந்தீர்கள். அச்சச்சோ ! திடீரென வளர்ந்த அழகிய ஆண் மகனாக மாறிவிட்டீர்கள். ஆனால் இதுவும் சூப்பராகவே உள்ளது.

    கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

    =========================

    ReplyDelete
  43. @ G.M Balasubramaniam
    வணக்கம் ஐயா. தங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு உற்சாகம் தரக்கூடியதாக அமைந்த, தங்களின் அருமையான உண்மையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  44. @ முரளி நாராயண்
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    =============================

    @ துஷ்யந்தன்
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    =============================

    @ கோவை2தில்லி
    மிக்க நன்றி, மேடம்.
    [உங்கள் அடையாளமாக இருந்த குழந்தை போட்டோ படத்தையும் மாற்றிவிட்டீர்கள். ஆனாலும் பாப் தலையுடன் குழந்தை அழகோ அழகு]
    ==============================

    @ மாலதி

    மிக்க நன்றி

    =============================

    ReplyDelete
  45. குணசேகரன்... said...
    /வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்./

    //ஏற்றுக் கொண்டேன்.//

    தங்கள் ஏற்புக்கு மிக்க நன்றி.

    //இதைப் பற்றிய ஒரு கவிதையை சென்ற மாதம் என் பதிவில் பதித்திருக்கிறேன்.நேரம் இருப்பின் பாருங்க.
    topic:ஏனப்பா எனைப் படைத்தாய்..?
    Link: http://zenguna.blogspot.com/2011/04/1.html//

    தகவலுக்கு நன்றிகள்.
    படித்துப்பார்த்து, பின்னூட்டமும் கொடுத்துள்ளேன்.

    ReplyDelete
  46. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //மிக அருமையான அனுபவத்தோடான கருத்துரைகள் கோபால் சார். பகிர்வு அருமை.//

    அத்திப்பூத்தது போல தங்களின் அபூர்வ வருகைக்கும், உற்சாகமூட்டக்கூடிய அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ஒரு பிரபல எழுத்தாளர் எப்போதாவது வந்து இதுபோல ஏதாவது 4 வரிகள் சொல்லிப்போனால் அதில் கிடைக்கும் இன்பமே தனி தான். கொம்புத் ‘தேன்’ போன்றது. மிக்க மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
  47. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    //கதையும்..கதைக்குப் பின்னால் சிந்திய சிந்தனைத் துளிகளும் என்னை இவ்வாறு எழுதத் தூண்டியது!//

    ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.

    //ஒரு பர்ஃபியின் மீது தூவப் பட்ட தேங்காய் துருவல்கள் க்ரேவியாய்..
    தங்கள் ‘வடிகாலும்’ பின் முளைத்த..
    சிந்தனைகளும்.. அருமை!!!//

    தங்களின் பின்னூட்டம் என்ற தேங்காய் பர்பி மிகச்சுவையாக இருக்குது. தேங்காய்த்துருவல்கள் வேற் எதேஷ்டமாகத் தூவியுள்ளீர்கள்.

    மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  48. angelin said...
    //எதை highlight செய்து காட்டுவது, நீங்கள் கூறியது எல்லாமே சத்தியமான உண்மை .//

    மிகவும் சந்தோஷம். நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  49. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //இன்றைய வாழ்வியல் பிரச்னையை சிந்திக்கும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள். எவ்வளவுதான் பரிதாபம் ஏற்பட்டாலும் அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தோம் என்ற தங்கள் உணர்வும் யதார்த்தமாகவே இருந்தது. முதுமை எல்லோருக்கும் உண்டு, உயிருடன் இருந்தால். பயமாகவே உள்ளது.//

    என் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மிகப்பிரபல எழுத்தாளராகிய தாங்களே அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறியுள்ளது நான் செய்த பெரும் பாக்யமாகக் கருதுகிறேன். மிகவும் சந்தோஷம். என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  50. Ramani said...
    //மிக மிக அருமை
    இன்றைய காலகட்டத்தில் உள்ள
    பரவலான ஒரு பிரச்சனையை
    கதை கருவாகக் கொண்டு
    சிறுகதையின் எல்லை மீறாமல் அதை தெளிவாக
    ரசிக்கும்படியாக சொல்லிவிட்டு
    (அதிகம் பிரச்சாரம் இல்லாமல்
    சொல்லி முடித்துவிட்டு)
    பின்னால் இத்துடன் இது முடியவில்லை
    "அப்ப நீங்க " என்பது போல்
    தனியாக அது குறித்து அக்குவேறாக
    ஆணிவேறாக அலசி இருப்பது
    என்னை மிகவும் கவர்ந்தது
    இதை ஒரு பரிசோதனை முயற்சி
    எனக்கூடச் சொல்லலாம்
    மனங்கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    அன்புள்ள ரமணி சார்,

    தங்களின் ஆழம் மிக்கக்கருத்துக்கள் என்னையும் வெகுவாகக் கவர்ந்தன.

    தங்களின் அன்பான வருகைக்கும், அரிய வாழ்த்துக்களுக்கும், தனிச்சிறப்பான, மாறுபட்ட, ரசிக்கும் தன்மைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  51. சாகம்பரி said...
    //நான் முதியோர் இல்லத்தை ஆதரிப்பதாக தவறாக எண்ண வேண்டாம், சார். முதிர்யோர் பற்றி நான் ஏற்கன்வே எழுதிய கட்டுரையை முடிந்தால் சென்று பாருங்கள். http://mahizhampoosaram.blogspot.com/2011/01/blog-post_20.html//

    தங்களின் மேற்படி பதிவுகள் (பகுதி 1 முதல் 5 வரை) நேற்று 14,06,2011 அன்று தான் முழுவதுமாக, மிகவும் பொறுமையாகப் படித்தேன். ரஸித்தேன். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பின்னூட்டம் அளித்துள்ளேன்.

    மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள். மிகவும் பயனுள்ள வாழ்வியல் கட்டுரைகள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  52. @ சாகம்பரி

    பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் தாங்கள் மிகவும் நீண்டதொரு விரிவான, மிகவும் பயனுள்ள, பின்னூட்டம் இட்டுள்ளது என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது.

    முதியோர் இல்லத்துக்கு நேரில் சென்று அவர்களுடன் பேசி, ஆறுதல் கூறி, அவர்களின் உணர்வுகளை உங்கள் எழுத்தில் வடித்திருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கும் இதுபோல ஒரேயொரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுடன், தொடர்ச்சியாக 40 நாட்கள் பேசிப்பழகிய அனுபவம் வாய்த்ததுண்டு. நிறைய விஷயங்கள் மனதில் மிகுந்த வலியுடன் ஏற்றிக்கொள்ள முடிந்தது. ஒவ்வொருவர் கதையும் ஒரு தனி நாவலாகவே எழுதலாம் போல இருந்தன.

    //நம்முடன் பேச அவர்களுக்கு நேரமில்லை. நமக்காக உருவாக்கினாலும் ஆறாவது விரல் போல் ஒட்டாமல் - சங்கடமாக இருக்கிறது. இங்கே பேசவும் சிரிக்கவும் ஆறுதல் கூறவும் நிறைய இருக்கின்றனர். முடிந்தபோது வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறேன்." அவரிடம் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை சார். ஒரு அலை கடமையாக கரைக்கு வந்து திரும்புவதைப்போல வாழ்க்கையை எடுத்துக் கொள்கின்றார். நம்மைப் போன்றவர்கள் சென்று பேசினால் ஆர்வமாக பேசுகிறார்கள்.//

    அந்தப்பெரியவரின் இத்தகையப்பேச்சு
    என் மனதைப்பிசைவதாக உள்ளது, மேடம்.

    //அதுவே ஒரு திருப்தியாக சில சமயம் அமைந்துவிடுகிறது. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது நன்றி சார்.//

    தாங்கள் என்னுடன் இந்த விஷயத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு, மிகவும் நன்றிகள், மேடம்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  53. சாகம்பரி said...
    //இன்னும் ஒன்று சார். இதுபோல முதியோர் இல்லம் செல்வதை ஆண்கள்தான் விரும்புகின்றனர். பெண்கள் விரும்புவதில்லை. //

    ஆமாம். பெண்கள் பெரும்பாலும் adjust செய்துகொண்டு போய் விடுவார்கள். ஆண்களால் அவ்வாறு இருக்க இயலவில்லை.

    தாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல, கணவனை இழந்த பாட்டிகள் எப்படியோ சமாளித்து விடுவார்கள். மனைவியை இழந்த தாத்தாக்கள் பாடு மிகவும் கஷ்டமாகி விடுகிறது.

    //முதியோர் இல்லத்தை எதிர்ப்பதைவிட அதை value addedஆக செய்ய முயற்சிக்கலாமா என்றுகூட தோன்றுகிறது.//

    தாங்கள் கூறும் இந்தக்கருத்து மிகவும் நியாயமானதே. எனக்கும் இந்த "VALUE ADDED CONCEPT" நல்லதொரு தீர்வாக அமையும் என்றே தோன்றுகிறது.

    மிக்க நன்றி, மேடம். அன்புடன் vgk

    ReplyDelete
  54. ரிஷபன் said...
    /கதையும் அதைத் தொடர்ந்து உங்கள் கருத்துக்களும் நீண்ட நேரம் யோசிக்க வைக்கும்..
    முதியவர் என்றில்லை.. மனம் விட்டு பேச ஆளற்ற தனிமை.. எவரையுமே நோகடிக்கும். முதியவர்களுக்கு கூடுதலாய் அதன் சோகம் தாக்கும்..//

    அன்புள்ள என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களே!

    தங்கள் அன்பான வருகைக்கும், அரிய பெரிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    தாங்கள் சொல்வது நியாயம் தான். தனிமை என்பது யாருக்குமே கொடுமை தான். அதுவும் வயதானவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.

    அன்புடன் தங்கள் வீ.....ஜீ.... [vgk]

    ReplyDelete
  55. உங்கள் கதையில் வரும் பெரியவர் ரொம்பா பிராக்டிகலான ஆளாக இருக்கிறார். ஆனால் கொஞ்சம் சுயநலவாதியோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. கதாசிரியரை சந்திக்க வரும் நேரம் மற்றும் இரவு முழுவதும் பேசுவதற்கு ஆள் வைத்திருப்பது போன்ற விஷயங்கள் தான் இந்த சிந்தனையைத் தருகிறது. இரவில் தூங்கமுடியாத ஒரு நிலை ஒரு குறைபாடுதான். அதை எப்படி லாவகமாக சமாளிக்கிறார் என்ற உங்கள் கற்பனை அற்புதம்.

    என் தாய் தந்தை என்னுடனே இருக்கிறார்கள். வேறு சில பெரியவர்களுக்கும் நான் உதவியும் வருகிறேன். 65 வயது முதல் 85
    வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இதில் உண்டு. எந்தக் காரணத்தினாலோ இவர்கள் அத்தனை பேரும் குழந்தைகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள். சில சமயம் நல்ல அறிவுரைகளை வளங்குவார்கள். பலசமயம் நம் பொருமையை சோதிக்கிறார்கள். முதுமை வரும் பொழுது நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நான் சிந்திப்பதுண்டு.
    சாகம்பரி மேடம் சொல்லியிருப்பது போல் ஒரு முதியோர் நிலையத்தை அமைப்பது தான் சிறந்த தீர்வாகப்படும். ஒருபுறம் பெரியோர்கள் சிலர் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பது உண்மை. நல்ல படியாக கவனிக்கப்பட்டுவரும் பெரியவர்கள் திருப்தியில்லாமல் இருப்பதும் யதார்தம். என்னதான் பாசம் நேசம் என்று பேசினாலும், இன்றைய சூழ்நிலையில் பெரியவர்களை சரியானபடி பார்த்துக் கொள்ள ஒரு குடும்ப அமைப்பை இழந்து நிற்கிறோம் என்பது உறுதி.

    சிந்தனையைத் தூண்டிய பதிவுக்கு நன்றி. எல்லாப் பின்னூட்டங்களும் அருமை.

    ReplyDelete
  56. My Dear Mr.VENKAT Sir,

    தங்கள் அன்பான வருகைக்கும், நீண்ட பின்னூட்டத்தின் மூலம், சொல்லியுள்ள பல்வேறு நிதர்சனமான, உண்மையான, மிகவும் யதார்த்தமான, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பொதுப்படையாக நாம் பேசுவதோ, எழுதுவதோ, பிறருக்கு உபதேசம் செய்வதோ மிகவும் எளிது.

    ஆனால் ப்ராக்டிகலாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து நடப்பது என்பது நடக்கக்கூடிய காரியமாகவே இருப்பதில்லை, பல இடங்களில்.

    அதையே தான் தாங்களும் மென்மையாக நாசூக்காக தெரிவித்துள்ளீர்கள். I do fully accept it.

    பல வீடுகளில் இந்தப்பெரியோர்கள் படும் பாடும், இவர்களால் மற்றவர்கள் படும் பாடும் சொல்லிக்கொள்ள முடியாத பலவித சிக்கல்கள் நிறைந்தவைகளாகவே உள்ளன.

    வீட்டுக்குவீடு, நபருக்கு நபர் பிரச்சனைகளும், அவற்றின் நீள, அகல, ஆழமும் வித்யாசப்பட்டு குட்டையைக் குழப்புவதாகவே உள்ளது.

    ஏதோ நமது பேச்சுக்கள், எழுத்துக்கள், கருத்துக்களால், ஏரி, குளங்களை தூர் எடுப்பதுபோல, கொஞ்சமாக தூர் வாரத்தான் முடியும். வேறு ஒன்றும் பெரியதாக செய்வதற்கில்லை, என்பதை நானும் நன்றாகவே உணர்ந்துள்ளேன்.

    அதனால் தான் என் இந்த சிறுகதையை ஒரு மாதிரியாக யதார்த்தமான உணர்வுகளோடு முடித்துவிட்டு, அதில் எனக்கே ஒரு முழுத்திருப்தி ஏற்படாமல் “நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்” என்று ஏதேதோ எனக்குத் தோன்றியதை கடைசியில் தனிப்பகுதியாக எழுதியுள்ளேன்.

    அவரவர் போக்குப்படி, செளகர்யப்படி எது நல்லதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

    இதைப்படிக்கும் யாராவது ஒரு நாலு பேர்களுக்காவது சற்றே ஒரு நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சியே.

    //சிந்தனையைத் தூண்டிய பதிவுக்கு நன்றி. எல்லாப் பின்னூட்டங்களும் அருமை.//

    Thank you, very much, Sir.
    அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  57. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  58. பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் உண்மை சார். முதியவர்களைப் பற்றி பலரும் சிந்திப்பதில்லை என்பதை விட இயந்திர மயமாகிவிட்ட இவ்வுலகில் தன்னைப் பற்றி சிந்திக்கவே நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை.

    தனிமை தரும் வேதனையை மிக எளிய நடையில் மிக அழகாக, மிக ஆழமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    முதியோர் இல்லங்களே இருக்கக் கூடாதென்பது என் கருத்து. எனினும் முதியோர் இல்லத்தின் தேவைகள் மற்றும் அவசியத்தை "வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல்" சொல்லிவிட்டீர்கள். அடியவளுக்கு மறுப்புத் தெரிவிக்க சொல்லேதும் கிட்டவில்லை.

    "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இராவணன்" என்பார்கள். அரக்கனாகச் சித்தரிக்கப்படும் இராவணனின் இதயமே கலங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது கடன்பட்டிருக்கும்போது. எனினும், இக்கால மாந்தர்கள் சிலருக்கு இராவணன் அளவுக்குக் கூட நல்ல சிந்தனைகள் இல்லாமல் போனது வருத்தமே. பெற்ற கடனும்,வளர்த்த கடனும் ஆளானவுடனே மறந்து விடுகிறதோ, அல்லது மறப்பது போல் நடிக்கக் கற்றுக்கொண்டு விடுகின்றனரோ. கடவுளுக்கே வெளிச்சம்.

    " கல்லிலே கலைவண்ணம் கண்டான்" என்பது போல், பார்க்கும், பாதிக்கும் எல்லா விஷயங்களையும் எளிமையாக எடுத்தியம்பும் கலை உங்களிடமிருக்கிறது VGK சார்.

    அன்புடன்,
    ராணி கிருஷ்ணன்.

    ReplyDelete
  59. முதியோர் இல்லம் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் இருப்பவர்களை என்ன பண்ணும்?

    ReplyDelete
  60. அந்தப் பெரியவர் உங்களை சந்திதித்ததில் எங்களுக்கெல்லாம் சுவையான கதை கிடைத்தது. கதைக்குப்பின் நீங்க சொல்லி இருக்கும் கருத்துக்கள் எனக்கு தெளிவா தெரியல.பினூட்டம் மூலம் சொல்லி இருப்பவர்கள மூலமாகத் தான் தெரிஞ்சுக்க முடிஞ்சது.

    ReplyDelete
  61. முதியோர் இல்லம் தேவைதான். ஆனால் அது வீட்டில் தேவை இல்லாத பழைய பொருட்களைக் கொண்டு போடுவது போல் இருக்கக்கூடாது. எல்லா குழந்தைகளும் வெளி நாடுகளில் இருக்கும் வயதாவர்களுக்கு முதியோர் இல்லம் அவசியம். நிறைய வயதானவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு வெளி நாடுகளில் தங்க விருப்பம் இல்லை என்ற்.

    ஆமாம், நம்ப ஊர்ல அடுத்த வருடம் 90 வயதாகப் போகும் என் அப்பா ஆட்டோ பிடித்துப் போய் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வருகிறார். அதெல்லாம் வெளி நாடுகளில் முடியுமா?

    அருமையான பெற்றோர்களை முதியோ இல்லத்தில் விட்ட பிள்ளைகளையும் பார்த்திருக்கிறேன், பிள்ளைகளுக்கு எதுவும் செய்யாமல் தான், தன் சுகம் என்று இருந்தும், வயதான காலத்தில் பிள்ளைகளால் நன்கு நடத்தப்பட்ட குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  62. முதியோர் இல்லத்துல போயிருந்தா வயசு கூட்டாளிகளும் கெடச்சிருப்பாங்க. பேச்சு கேட்டுகிடவும் யாராச்சும் கெடச்சிருப்பாங்களே.

    ReplyDelete
  63. இந்தப்பதிவை படிக்கும் யாராவது இன்றைய இளம் தலைமுறைக்காரங்க பெற்றொரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நினைப்பில் இருந்தால் நிறைய யோசிப்பாங்கஃ நாம செய்வது சரிதானா. என்று

    ReplyDelete

  64. நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான்.அவன் சொல்வதும் எனக்கு நியாயமாகவே பட்டது.//யதார்த்ததோடு நமக்கு புடிச்ச விஷயத்தயும் தொட்டது மிகவும் பிடித்தது வாத்யாரே...வடிகால்..பலவிதம்...

    ReplyDelete
  65. சிந்தனைக்கு சில விஷயங்கள் உண்மையிலேயே சிந்திக்க வைத்தது!

    ReplyDelete
  66. சிந்தனைக்கு சிலவிஷயங்கள்... ரொம்ப நல்லா இருக்கு.. முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயமாகி விட்டது..வெளிநாடுகளுக்கு பெற்றோர்களை கூட்டி போகமுடியாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும். பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைக்கும் பேச்சு துணைக்கு ஆட்களும் கிடைப்பார்களே..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... September 22, 2016 at 10:11 AM

      வாங்கோ, வணக்கம்.

      //சிந்தனைக்கு சிலவிஷயங்கள்... ரொம்ப நல்லா இருக்கு..//

      மிக்க மகிழ்ச்சி.

      //முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயமாகி விட்டது..வெளிநாடுகளுக்கு பெற்றோர்களை கூட்டி போகமுடியாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும். பாதுகாப்புக்கு பாதுகாப்பும் கிடைக்கும் பேச்சு துணைக்கு ஆட்களும் கிடைப்பார்களே..//

      ஆமாம். நீங்கள் சொல்வதும் சரிதான்.

      தங்களின் அன்பான வருகைக்கும், யதார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete