என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 3 ஜூன், 2011

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! [ பகுதி 1 of 3]


அந்தக் கண்ணாம்பாக்கிழவி அந்த அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணைக்குக் குடிவந்து சுமார் 40 வருடங்கள் இருக்கும். கோடையோ, குளிரோ, காற்றோ, மழையோ இரவில் ஒரு சாக்குப்படுதாவுக்குள் முடங்கிக்கிடப்பாள். விடியற்காலம் எழுந்து தரையெல்லாம் பெருக்கி, சாணிதெளித்து மெழுகி, அழகாகக்கோலங்கள் போட்டு விடுவாள். பகலில் பூக்களும், துளசியும் யார்யாரோ பறித்துவந்து தருவதும், இவள் அவற்றை அழகாகத் தொடுத்துக் கோயிலுக்குக் கொடுப்பதும், வாடிக்கையாக நடைபெறுபவை.

எதிர்புறச்சந்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், குளியல் அறை முதலியவற்றில் இந்தக்கிழவிக்கு மட்டும் கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி உண்டு. கோயிலுக்கு நெருக்கமாகவே ஒரு சைவ உணவகம் உள்ளது. கையில் காசு ஏதும் கிடைத்தால் இரண்டு இட்லி வாங்கிக்கொள்வாள் இலவச சட்னி சாம்பாருடன். காசு இல்லாவிட்டால் பட்டினியுடன் கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.

பக்கத்து கிராமம் ஒன்றில் பிறந்து, ஏழ்மையில் ஊறி, பருவ வயதில் மற்றொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற காரணம் கூறிக் கணவனாலும் கைவிடப்பட்டவள். நிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள். 

அதே நேரம் மரத்திலிருந்து இறங்கிய குரங்குக்கூட்டம், ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் ஓடிப்பிடித்து சண்டையிட்டுக்கொண்டு, அந்த பாட்டிலில் இருந்த விஷத்தைத் தட்டிக்கொட்டிவிட்டுச் சென்று விட்டன.

வாழத்தான் வழியில்லை என்று புலம் பெயர்ந்து இவ்விடம் வந்தவளுக்கு சாகவும் வழியில்லாமல் போனது. எல்லாம் ஏதோ தெய்வ சங்கல்ப்பம் என்று நினைத்துப் பேசாமல் அந்த மரத்தடியிலேயே தங்க ஆரம்பித்தாள்.

இவள் இந்த ஊருக்கு வந்த நேரம், வெய்யிலிலும், மழையிலும் தவித்து வந்த அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு, ஊர் மக்கள் ஒன்றுகூடி வசூல் செய்து, சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. கோயில் கட்டட வேலைகளில் கண்ணாம்பாளும் தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளும், உதவிகளும் செய்து தந்து, அந்தப்பகுதி மக்களுக்குப் பரிச்சயம் ஆனாள்.

அந்த அரசமரப்பிள்ளையாரைச்சுற்றி அந்த நாளில் மிகவும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் வசித்து வந்தனர். கைரிக்‌ஷா வண்டிகள், கைவண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒருசில சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஒரே ஒரு ஆட்டோ ரிக்‌ஷா, செருப்புத்தைக்கும் தொழிலாளிகள், ரோட்டோரத்தில் கடைபோடும் காய்கறிக்காரர்கள், ஆங்காங்கே டீக்கடைகள், சவரக்கடைகள், சலவைத்தொழிலாளிகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கழுதைகள், தெரு நாய்கள் என அந்தப்பகுதியே ஒரு மாதிரியாக மிகவும் எளிமையாக ஆரவாரமின்றிக் காட்சியளித்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.

இன்றைய நாகரீகத்தின் பாதிப்புத் தலையெடுக்காத காலம் அது. கண்ணாம்பாவுக்கும் பால்ய வயதானபடியால், அங்குள்ள சற்றே வசதிபடைத்த ஒருசில வீடுகளில், தன் உடலுழைப்பைக்கொடுத்து ஏதோ கொஞ்சமாக சம்பாதித்து, மிகவும் கெளரவத்துடனும் மானத்துடனும் தன் வயிற்றுப்பிழைப்பை கழித்து வந்தாள். பிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சினேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.

ஓரிரு வருடங்கள் இவ்வாறு போனபோது, ஒருநாள் அந்தப்பெரிய மரத்தில், குதித்துக்கும்மாளம் அடித்த குரங்குகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்து பிள்ளையார் கோயில் வாசலுக்கு முன்புறம் தன் உயிரை விட்டுவிட்டது.

தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ என நினைத்த கண்ணாம்பாவுக்கு, இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.

அங்கிருந்த கைரிக்‌ஷாக்காரர்களும் மற்ற ஏழைத்தொழிலாளிகளுமாகச் சேர்ந்து, ஒரு வேட்டியை விரித்து, அதில் அந்த உயிர்நீத்த குரங்கைப்படுக்க வைத்து, சிறிய மலர்மாலை ஒன்று வாங்கிவந்து அதன் கழுத்தில் அணிவித்து, குங்குமத்தைக்குழைத்து அதன் நெற்றியில் நாமம் இட்டு, அதன் இறுதிக்கடனுக்குப் பணம் வசூல் செய்தனர். பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே ஒரு குழிவெட்டி, அந்தக்குரங்கைப்புதைத்து, புதைத்த இடத்தின் மேல், அந்தப்பிள்ளையாருக்கு சமமாக, ஓர் அனுமன் கோயிலும் எழுப்பி விட்டனர்.


தொடரும் 

31 கருத்துகள்:

 1. அதே நேரம் மரத்திலிருந்து இறங்கிய குரங்குக்கூட்டம், ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் ஓடிப்பிடித்து சண்டையிட்டுக்கொண்டு, அந்த பாட்டிலில் இருந்த விஷத்தைத் தட்டிக்கொட்டிவிட்டுச் சென்று விட்டன./

  பிள்ளையாரப்பா விநாயகா. நமஸ்காரம்!
  ஆஞ்சநேயா.! ஆத்யந்த மகாப்பிரபுவே ரட்சிக்கணும்.
  அருமையான ஆரம்பம். பாரட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல ஆரம்பம். பிள்ளையாரும் வினாயகரும் அருகருகே அமர்ந்து அருள் பாலிக்கிறார்களா... நல்லது... தொடருங்கள் நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. முதுமை ,தனிமை, கொடுமை...

  தொடர்கிறேன்.....

  பதிலளிநீக்கு
 4. காசு இல்லாவிட்டால் பட்டினியுடன் கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.

  இந்த எளிமையும் அதில் துளிர்விடும் பக்தியும் தான் உண்மையாய் ஆண்டவனின் மிக அருகில் அழைத்து செல்லும் என்பதால் அழகாய் சொல்லி செல்லுகிறீர்கள் ஐயா.

  தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ என நினைத்த கண்ணாம்பாவுக்கு, இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.

  இதுதான் நம்மவர்களின் பலமும் பலவீனமும் ஐயா, எதையுமே உணர்வு பூர்வமாக அணுகும் அணுகுமுறை

  நல்ல தொடக்கம் , தொடர காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. அருமையான தொடக்கம்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. குரங்குக் கூட்டத்தின் சண்டையில் விஷ பாட்டில் தட்டிக் கொட்டியது, அனுமார் கோயில் அமைந்த விதம் எல்லாமே இயல்பாக நடந்த நிகழ்ச்சியுணர்வில் கதையை நடத்திச் செல்கின்றன. அடுத்த பகுதியில், நடுநடுவே கொஞ்சம் கான்வர்ஷேசனோடு கதையை நகர்த்தினால், அழகாக இருக்கும்.
  தொடருங்கள்..

  பதிலளிநீக்கு
 7. பிள்ளையாரும், ஆஞ்சநேயரும் துணையிருக்க அருமையான ஆரம்பமாக இருக்கிறது சார். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. இந்த முறை குலுக்குவதற்குப் பதில் உருக்குவது என்ற தீர்மானமா?

  ஆரம்பம் ஒரு மலர் போல விரிகிறது.ஒரு மாலையாய்த் தொடரட்டும் வரும் பகுதிகள்.

  பதிலளிநீக்கு
 9. கதைத் துவக்கம் கன ஜோர். தொடருங்கள் . தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல துவக்கம் சார். தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. ///
  அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.///

  ஏழைகள் எங்கிருக்கிறார்களோ அங்கு தாங்கள் சொன்ன அனைத்தும் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 12. சோகம், ஏழ்மை, எளிமை, அழுகை, மரணம், என மிகவும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை போராட்டத்தில் கதை ஆரம்பிக்கிறது...


  தொடருங்கள் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 13. வழக்கம்போல் கதாபாத்திரங்களின் அறிமுகமும்
  சூழலை விவரித்துள்ள விதமும் அருமை
  என்னால் மனக்கண்ணில் இடத்தையும்
  கதாபாத்திரங்களையும் உணர முடிகிறது
  எழுத்தாளரின் வெற்றி என்பது அதுதானே

  பதிலளிநீக்கு
 14. கதை இயல்பாக ஆரம்பித்திருக்கிறது. ஜீவி சார் சொல்லியுள்ள கருத்து போல எனக்குக் கூட தோன்றியது.

  கல்கி பரிசு புத்தகங்கள் பற்றி நான் கேட்ட விவரங்களை எனக்காக இ.ந.ஏ.வில் பதிந்ததற்கு நன்றி. அருமையான புத்தகங்கள். குறிப்பாக எம் எஸ் அம்மா பற்றிய புத்தகம். நானும் பார்த்திருக்கிறேன்.

  இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் இணைப்பதில்லையோ....

  பதிலளிநீக்கு
 15. மன்னிக்கவும்....முதலில் எனக்கு தமிழ்மணப்பட்டை கண்ணுக்குத் தெரியவில்லை...!! இப்போது நானும் வாக்களித்து விட்டேன். இது நம்ம ஏரியா போல உங்களை எங்கள் ப்ளாக் பக்கமும் வருக என்று அன்புடன் அழைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 16. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்களை அழகாகக் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற உணர்வை இறந்தகுரங்கு உண்டாக்கியுள்ளது..!

  பதிலளிநீக்கு
 18. மதுரை சரவணன் said...
  //நல்லா இருக்கு.... வாழ்த்துக்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற உணர்வை இறந்தகுரங்கு உண்டாக்கியுள்ளது..!//

  தங்கள் அன்பான வருகைக்கும், அரிய கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும், அடுத்த எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 19. கோவில்கள் எப்படி புதிது புதிதாகத் தோன்றுகின்றன என்ற ரகசியம் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
 20. எப்பவுமே நாம் ஒன்று நினைக்க " அவன"
  வேற மாதிரிதானே நினைப்பான். கண்ணாம்பா கிழவிக்கு ஆயுசு கெட்டி..

  பதிலளிநீக்கு
 21. அந்த தமிழ் மணப் பட்டையில எப்படி வாக்களிக்கறதுன்னு எனக்கும் சொல்லிக் கொடுங்க. நானே உங்களுக்கு வாக்களிக்கலைன்னா அந்த அனுமாரே என் கண்ணை குத்திடுபவார்.

  கதையைப் பத்தி ஒண்ணும் சொல்லலியேன்னு பாக்கறீங்களா?

  என்னத்தச் சொல்ல.
  சொன்னத்தயே சொல்ல.

  அருமையோ அருமை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. கொரங்குதா அந்த கெளவிய காப்பாத்திச்சோ. இப்படில்லா கூட நம்புவாங்களா?

  பதிலளிநீக்கு
 23. கண்ணாம்பா கிழவி பற்றிய அறிமுகம் யதார்த்தம். ஏழையென்றாலே இப்படித்தான் இருப்பார்களோ??? அவளுக்கு ஆயுசு கெட்டியாகத்தான் இருக்கணும்

  பதிலளிநீக்கு
 24. ராமநாராயணன் படம்போல யதார்த்தமான சுவாரசியமான காட்சிகள்...ஹீரோயினோட அடுத்த மூவ் என்ன...நெக்ஸ்ட் எபிசோட்..

  பதிலளிநீக்கு
 25. இறந்து போன குரங்குக்கு இறுதி காரியங்கள் செய்யும் விசால மனது அந்த மனிதர்களுக்கு இருப்பது மிக நெகிழ்ச்சியான விஷயம்தான்..கண்ணாம்பா கிழவிக்கு ஏதோ ஒரு வாசலை அந்த அரசமரத்தடி பிள்ளையார் திறந்து வைத்திருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், நம்பிக்கையுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு