என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 2 ஜூலை, 2011

நூறாவது பதிவு of 2011 [ இந்த நாள் இனிய நாள் ]


அன்புடையீர்,

வணக்கம். 

2011 ஆம் ஆண்டில் இது என் நூறாவது பதிவு

-ooooOoooo-


வலைப்பூவில் ஜனவரி 2011 முதல் தான் எழுத ஆரம்பித்தேன். இந்த ஆறே மாதங்களில் இதுவரை 100 பதிவுகள் வெளியிட்டுள்ள எனக்கு, அவ்வப்போது மிகுந்த ஆர்வமாக பின்னூட்டங்கள் அளித்து, குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி,  நிறைகள் இருப்பின் பாராட்டி,  மிகுந்த உற்சாகம் அளித்து வந்துள்ள அனைத்து வலைப்பூ பதிவர்கள், நண்பர்கள் மற்றும் தனி அன்பும் பிரியமும் காட்டி வரும் ஒருசில சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய எழுத்துலகப் பிரவேசத்திற்கு மிகவும் உறுதுணையாகவும், நல்ல வழிகாட்டியாகவும், அவ்வப்போது நான் சோர்வடையும் போதெல்லாம் என்னைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியவருமான என் அருமை நண்பர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் முதற்கண் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். 

பத்திரிகையுலகில் மட்டும், அதுவும் 2005 க்குப்பிறகு மட்டும் பவனி வந்து கொண்டிருந்த என்னை, வலைப்பூவுக்கு அழைத்து வந்து, 05.03.2009 அன்று  என் பெயரில் புதிய வலைப்பூ ஒன்றைப் பூக்கச்செய்ததும் திரு. ரிஷபன் அவர்களே. 

அதன் பிறகு ஒரு 20 மாதங்களுக்கு நான் ஏதும் பதிவு செய்யவில்லை. அது ஏன் என்பதைக்கூட நகைச்சுவையாக என் ஐம்பதாவது பதிவில் வெளியிட்டிருந்தேன் என்பது தங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம். ஒருவேளை அதைப் படிக்காதவர்கள் இப்போது படிக்க கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


சென்ற 2010 ஆம் ஆண்டு இறுதியில், எனக்கு மின்னஞ்சல் மூலம் நெருங்கிய நண்பராக அறிமுகம் ஆன திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள், என்னை வலைப்பூவில் எழுதச்சொல்லி அன்புக்கட்டளை இட்டார்கள். அதனால் ஏற்படக்கூடிய ஆத்மதிருப்தியை விளக்கி, நமது எண்ணங்களுக்கு ஒரு நல்ல வடிகாலாக அமையும் என்றும் எடுத்துச்சொல்லி வற்புருத்தினார்கள். அதன்பிறகே, மிகவும் சிரமப்பட்டு, கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்யப்பழகி,  இந்த நடப்பு ஆண்டு 2011 ஜனவரி முதல் மட்டுமே, பதிவுகள் எழுதி வெளியிடத்தொடங்கினேன்.

நான் வலைப்பூவில் என் படைப்புக்களை பதிவு செய்ய ஆரம்பித்தவுடன், நாளடைவில் பல நல்ல பதிவர்களின் அறிமுகங்கள் கிடைக்கப்பெற்றேன். அவர்கள் அவ்வப்போது தந்த பின்னூட்டங்கள் என்னை மேலும் மேலும் புதிய படைப்புகள் எழுதவும் அவற்றைப் பதிவு செய்யவும் தூண்டுகோலாக அமைந்தன.

எனக்குத்தெரிந்தவரை, மிகவும் தரமான பத்திரிகைகளில், தங்களின் மிகத்தரமான எழுத்துக்களால் பிரபலமாகியுள்ள, மிகச்சிறந்த புகழ்பெற்ற எழுத்தாளர்களாகிய,   

திருமதி வித்யாசுப்ரமணியன் [ கதையின் கதை ] அவர்கள், 
திருமதி மனோ சுவாமிநாதன் [ முத்துச்சிதறல் ] அவர்கள், 
திருமதி தேனம்மை லக்ஷ்மணன் [ சு ம் மா ]அவர்கள்,  
திரு. ரிஷபன் அவர்கள், 
திரு. கே.பி.ஜனா அவர்கள்,  
திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள் 

[இந்தப்பட்டியலில் மேலும் ஒருசிலரின் பெயர்கள் எனக்குத்தெரியாமலோ அறியாமலோ விடுபட்டிருக்கக்கூடும்; அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ]

ஆகியோர் என் வலைப்பூவுக்கு Followers ஆகி அவ்வப்போது அத்திப்பூத்தாற்போல வருகை தந்து பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.   பிரபலங்களாகிய இவர்களின் அன்பான வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதுபோலவே 

திருமதி சாகம்பரி (மகிழம்பூச்சரம்) அவர்கள்
திரு. வெஙகட் (மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்) அவர்கள்
திரு. ஜீவி (பூவனம்) அவர்கள்
திரு. சுந்தர்ஜி (கைகள் அள்ளிய நீர்) அவர்கள்
திரு. ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா) அவர்கள்
திருமதி இராஜராஜேஸ்வரி (மணிராஜ்) அவர்கள்

ஆகியோர் தங்களின் வாசிப்பு அனுபவத்தால், என் படைப்புக்களை நன்கு அலசி ஆராய்ந்து, திறனாய்வு செய்து, ஒரு வித்யாசமான முறையில் பின்னூட்டம் இடுவதை நான் பலமுறை கவனித்துள்ளேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் என்னுடைய பெரும்பாலான படைப்புகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வருகை தந்து பின்னூட்டம் கொடுத்துவரும், 

திரு வெங்கட் நாகராஜ், 
திருமதி கோவை 2 தில்லி, 
திருமதி சித்ரா, 
திருமதி ராஜி [கற்றலும் கேட்டலும் ], 
திருமதி thirumathi bs sridhar, 
திருமதி மிடில் கிளாஸ் மாதவி 

மற்றும் கடந்த ஓரிரு மாதங்களாக என் வலைப்பூவைத் தொடர்ந்து வரும் 

திரு. A.R.ராஜகோபாலன் [ ஆயுத எழுத்து ] அவர்கள்,  
திரு. GMB Sir, அவர்கள்
திருமதி லஷ்மி [குறையொன்றும் இல்லை ] அவர்கள்  

ஆகியோருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

மார்ச் 2011 க்குப்பிறகே என் பதிவுகள் இண்ட்லியில் இணைக்கப்பட்டன. சமீபகாலப்பதிவுகளுக்கு பெருவாரியான நண்பர்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வருவதால், சமீபத்திய பதிவுகளில் 35 பதிவுகளுக்கு மேல் இதுவரை இண்ட்லியால் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. இதுவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது.

அதுபோலவே நண்பர் திரு. எல்.கே. அவர்கள் தான், என்னை முதன் முதலாக ஜனவரி 2011 இல் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தொடர்ந்து கடந்த 6 மாதங்களில் என் பெயர் ஏழு முறைகள் வலைச்சரத்தில், இடம் பெற்றுள்ளது என்பது எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது. 

இவ்வாறு என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த 

(1) திரு. எல்.கே., 
(2) திருமதி அன்புடன் மலிக்கா 
(3) திரு பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி 
(4) திரு. தமிழ்வாசி பிரகாஷ் 
(5) திரு.வேடந்தாங்கல்-கருண், 
(6) திருமதி லஷ்மி மற்றும் 
(7) திருமதி இராஜராஜேஸ்வரி 

ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவுகள் தர ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், என்னை வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க வருமாறு அன்புடன் அழைத்து, உயர்திரு சீனா ஐயா அவர்களிடமிருந்து சமீபத்தில் எனக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இது என் வியப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 

ஒருசில சொந்தக் காரணங்களால் தற்சமயம் என்னால் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இயலாமையைத் தெரிவித்து திரு. சீனா ஐயா அவர்களுக்கு பதில் அனுப்பியுள்ளேன்.

இந்த என்னுடைய நூறாவது பதிவை வெளியிடும் சமயத்தில் என் வலைப்பூவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் நூறைத்தாண்டியுள்ளது, கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது.   FOLLOWERS அனைவருக்கும் என் அன்பான வரவேற்புக்களையும், நெஞ்சார்ந்த  நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைப்பூவில் பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவதால், நாம் நேரில் இதுவரை சந்திக்காத எவ்வளவோ நண்பர்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் மிகச்சிறந்த படைப்புக்களை பார்க்கவும், படிக்கவும் முடிகிறது. ஒருவருக்கொருவர் பின்னூட்டம் இட்டுக்கொள்வதால் நட்பை வளர்த்துக்கொள்ள முடிகிறது. 

நம் இடத்தில் நாம் இருந்து கொண்டே உலகம் பூராவும் பரவியுள்ள நம் தமிழ் சகோதர சகோதரிகளுடன் ஒருவித பாசத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது. உலகச்செய்திகள் பலவும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒத்த கருத்துக்களைக்கொண்ட, ஒரே மாதிரியான ரசனைகள் கொண்ட  நண்பர்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மிகச்சுலபமாகப் பரிமாறிக்கொள்ளவும், நட்பை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது.

முன்பின் நான் பார்த்தறியாத இத்தகைய வலைப்பூ நண்பர்களில் பலர், என்னிடம் மிகுந்த நட்புடனும், பாசத்துடனும், பிரியத்துடனும் தொடர்பு கொண்டு பழகி வருகிறார்கள்.

இவர்களில் ஒருசிலர் என்னுடன் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும், CHATTING  மூலமாகவும் தொடர்பு கொண்டு மிகுந்த நட்புடன் பேசிப்பழகி வருவதும், ஒருசிலர் நேரிலேயே என்னை வந்து சந்தித்துச்செல்வதும், என்னை மிகவும் மனம் மகிழச்செய்து வருகிறது.  

நம்மைப்பற்றி ஓரளவு புரிந்து கொண்டவர்களாகவும்,  நம் நலனின் கொஞ்சமாவது அக்கறை உள்ளவர்களாகவும் இவ்வளவு நபர்கள் நம்மைச்சுற்றி இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதே நமக்கு மிகவும் மனமகிழ்ச்சியையும், மனவலிமையையும் கொடுக்கக்கூடிய விஷயமல்லவா!  அதைவிட வேறு என்ன வேண்டும், நமக்கு?

குறைகளும் நிறைகளும், சுகங்களும் சோகங்களும், சந்தோஷங்களும் சங்கடங்களும் சேர்ந்தது தான் நம் மனித வாழ்க்கை.  எல்லோரையும் போலவே எனக்கும் மனதில் நிறைய சோகங்களும் வருத்தங்களும் உண்டு.  வாழ்க்கையில் எட்ட முடிந்த ஒரு சில சாதனைகள் போல பல வேதனைகளையும் அனுபவித்தவன் தான் நான்.

இருப்பினும் சோகங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, சுகங்களை மட்டும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.மனக்குறைகளை நினைத்துக்கொண்டே இருந்தாலோ, அதைப்பற்றி பிறரிடம் புலம்பிக்கொண்டே இருந்தாலோ எந்தத்தீர்வும் ஏற்பட்டு விடப்போவதில்லை.  அது நம்மை வருத்துவதோடு மட்டுமின்றி, அவற்றைக் கேட்கும் பிறருக்கும் வருத்தம் அளிக்கக்கூடும்.  

கடந்தகாலம் திரும்பி வரப்போவதில்லை. வருங்காலம் நிச்சயமற்றதும் நம்மால் தீர்மானிக்க முடியாததுமாகவே உள்ளது.. நிகழ்காலமே நிச்சயமாக நம் முன் உள்ளது. அது நமக்காகவே உள்ளது.  அதை சந்தோஷமாக செலவிடுவோம்.  மற்றவர்களையும் நம்மால் முடிந்தவரை சந்தோஷப்படுத்துவோம் என்ற நோக்கத்தில் தான் இந்தப்பதிவையும் இதன் தொடர்ச்சிகளையும் தங்களுடன் நான் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  இந்த சந்தோஷத்தை இந்த நிமிடம் எனக்குக்கொடுத்துள்ள இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.  

என் உடல்நிலை மற்றும் குடும்பச்சூழ்நிலை காரணமாக, இதுவரை கடந்த ஆறு மாதங்களாக ஓடிவந்துள்ள வேகத்திலேயே, தொடர்ந்து ஓடி, பல பதிவுகள் தரமுடியுமா என்பது எனக்கு சந்தேகமாகவே உள்ளது.  வேகத்தை சற்றே குறைத்துக்கொள்ள நினைக்கிறேன். வாரம் ஒரு பதிவோ அல்லது மாதம் இரண்டு பதிவுகளோ கொடுக்க முயற்சி செய்கிறேன். 

இந்தப்பதிவினைப் பொறுமையாகப்படித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு,  வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.  

இதுவ்ரை நான் வெளியிட்டுள்ள 99 பதிவுகளில், ஒரு படம் கூட இணைத்தது இல்லை. சேர்த்து வைத்து இதனுடன் தொடர்ந்து வரும் பதிவுகளில்,  திகட்டும் படியாக பல படங்களை இணைத்து விட்டேன். 

இந்தப்படங்களுடன் கூடிய பதிவுகள் ஒவ்வொன்றையும் பற்றிய தங்களின் விரிவான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


என்றும் அன்புடன் தங்கள்,

வை. கோபாலகிருஷ்ணன்
02/07/2011
[ படங்களுடன் கூடிய இதன் தொடர்ச்சி இன்றும் நாளையும் அடுத்தடுத்து வெளிவர உள்ளன ]51 கருத்துகள்:

 1. ஐயா, ஒரு சுய விமர்சனத்தைக் கூட ஒரு கதை போன்றே ஸ்வாரஸ்யமாக எழுத உங்களால் மட்டுமே முடியும்!

  மென்மேலும் பற்பல நல்ல பதிவுகளை எங்களுக்குத் தர உங்களை நல்ல உடல்நலத்தோடு வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. 100வது பதிவிற்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்
  விரிவான மனந்திறந்த பதிவாக இந்த பதிவு இருக்கிறது
  தொடர்ந்து அதிக பதிவுகள் தர வேணுமாய் அனைவரின் சார்பாக
  அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.அதற்கான உத்வேகமும்
  சக்தியும் அளிக்கவேணுமாய் பதிவர்கள் சார்பாக
  ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் ஐயா!...நூறல்ல இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள்
  தங்களால் இடமுடியும். காரணம் எதையாவது சாதிக்க வேண்டும்
  என்ற உறுதியான மனதோடு நீங்கள் ஆரம்பித்த இந்த செயலின்
  பின்னணியில் நிற்கும் தங்களின் மனவலியை தங்களின் இந்த
  ஆக்கத்தை முழுமையாக வாசித்தபோது உணர்ந்துகொண்டேன்.
  அதுமட்டும் அல்ல ஒரு படைப்பாளிக்கு சந்தோசத்தைவிட வலி
  ஒன்றுதான் தரமான ஆக்கங்களைப் படைப்பதற்கு உறுதுணையாக
  நிற்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்க்கு
  தாஜ்மகால் ஒரு உதாரணம்.நீங்கள் மென்மேலும் சிறந்த ஆக்கங்களை
  வெளியிடுவதன்மூலம் நல்லதொரு எழுத்தாளன் என்கின்ற பெயரையும்
  புகழையும் விரைவில் பெறவேண்டும் என்று மனமார வாழ்த்துகின்றேன்.
  வாழ்க என்றும் வளமுடன்.................................

  பதிலளிநீக்கு
 4. இனிய பாராட்டுகள். இந்த நூறு, விரைவில் ஆயிரமாகப் பெருக வாழ்த்துகின்றேன்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் ஐயா ...உங்கள் மாணவனாய் நான் உங்களை தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. ஆயிரமாவது பதிவை எட்ட பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. இனிய நாளில் இனிய பகிர்வுகளை பகிர்ந்து இந்த நாள் மட்டுமல்ல, எல்லாமே இனிய நாட்களே என்று இனிமையாக்கிய இனிய நினைவலைகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. பணியுமாம் என்றும் பெருமை என்று
  பணிவால் உயர்ந்த உள்ளத்திற்கு வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 9. நூறாவது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. மாதம் ஆறு பதிவு நூறு
  பாதாம் பருப்பென பாலுடன் ஊறி
  தீதாமின்றி மனதுடல் ஊறி
  சேதமில்லா செழிப்பினைத் தருக

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 11. //நம்மைப்பற்றி ஓரளவு புரிந்து கொண்டவர்களாகவும், நம் நலனின் கொஞ்சமாவது அக்கறை உள்ளவர்களாகவும் இவ்வளவு நபர்கள் நம்மைச்சுற்றி இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதே நமக்கு மிகவும் மனமகிழ்ச்சியையும், மனவலிமையையும் கொடுக்கக்கூடிய விஷயமல்லவா! அதைவிட வேறு என்ன வேண்டும், நமக்கு?///


  மிக உண்மையான வார்த்தைகள் ஐயா
  உங்களின் பதிவில் பல ஆத்மார்த்தமான கருத்துகளையும் எண்ணங்களையும், இயல்பாய் பகிர்ந்து கொண்டு இருக்குறீர்கள், நீங்கள் இதுவரை ஒரு படம் கூட இணைத்ததில்லை என்பது மிகப்பெரிய சாதனைதான், உங்களின் எழுதாளுமைக்கும் சொல்லாட்சிக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே நினைக்கிறன் ஐயா.

  இந்த நூறாவது பதிவு உங்களின் 40வது திருமண நாளின் போது வந்தது மெத்த பொருத்தமான விஷயம்.

  இன்னும் இந்த வலைப்பூவில் சாதனை பல செய்து சிகரம் பல தொட ஆண்டவனை வேண்டுகிறேன், உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 12. நூறாவது சாதனை பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....

  தாங்கள் இது போலவே, இன்னமும் பல நூறு சதங்கள் அடிக்க வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 13. :)

  தொடர்ந்து பல ஆக்கங்கள் தந்து தமிழுலகம் பயன்பெற மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. 100 -வது பதிவை தந்த நீங்கள் நூறாண்டு வாழ்ந்து நூறாயிரம் பதிவை தர வேண்டுமென்று உங்களை தொடரும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன் .

  பதிலளிநீக்கு
 15. தங்களைப் போன்ற பெரியவர்கள் நினைவில் நிற்கும்படியான இடம் பெற்றமைக்கு அந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இனியவையோ மற்றவகையோ மனதிற்குள் பொத்திவைத்த மாணிக்கங்கள்தான் நினைவுகள். ஒவ்வொரு பதிவிலும் உங்கள் எழுத்துடன் பயணித்து , அந்த சிறப்பை உணர்ந்தது என் பின்னூட்டத்தில் இருந்திருக்கும். அதுபோல இன்னும் பல பயணங்களை எதிர்பார்த்து - வாழ்த்துக்களுடன் சாகம்பரி.

  பதிலளிநீக்கு
 16. நூறாவது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்...:)

  பதிலளிநீக்கு
 17. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 18. 100வது பதிவிற்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்
  விரிவான மனந்திறந்த பதிவாக இந்த பதிவு இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 19. ஆறு மாசத்தில் நூறா? வைகை எக்ஸ்பிரஸ் வேகம்:-)

  பதிலளிநீக்கு
 20. தங்களின் பதிவுகளை "maniraj" தளத்தின் பின்னூட்டதில் கண்டு பார்க்க ஆரம்பித்தேன்.
  மிகவும் அழகாகவும் கற்பனை வளத்துடனும் எழுதிகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. நூறாவது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கோபால் சார்.:)

  பதிலளிநீக்கு
 22. ஆறு மாதத்தில் நூறு பதிவு நிச்சயம் சாதனை. தொடர்ந்து எழுதுங்கள். சந்தோஷங்கள் சோகங்கள் பற்றி நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. நூறாவது பதிவை உங்களுக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. ஆறு மாதத்தில் நூறு பதிவுகள்… நூறு தொடர்பவர்கள் என்று கலக்கலாக இருக்கிறது உங்கள் வலை உலா… தொடர்ந்து இன்னும் பல பதிவுகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என்ற வேண்டுகோள் உடன் தொடர்கிறேன்….

  பதிலளிநீக்கு
 24. மிகக் குறுகிய காலத்தில் அத்தனை பேரின் அன்புக்குப் பாத்திரமாகி.. வளம் மிக்க எழுத்து நடையால் புது அனுபவ உலகிற்குக் கொண்டு போன உங்களுக்கு தளர்ச்சியும் உண்டோ..
  எங்கள் அத்தனை பேரின் பிரிய மலர்களால் ஆண்டவனை பூஜிக்கிறோம். சிறப்பான உடல் நலத்துடன் எங்களை மேலும் மகிழ்விக்க தாயுமானவன் அருள் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
 25. அடுத்த பதிவிற்கும் வந்து கொண்டு இருக்கிறேன்…

  பதிலளிநீக்கு
 26. Dwarf என்று தென்னையில் ஒரு வகை! குறுகிய காலத்தில் நிறைய காய் காய்க்குமாம்..அது போல் தான் நீரும்!
  வலையுலகத்துக்கு குறுகிய காலத்தில் வந்து ஒரு சூறாவளி நிகழ்த்தி விட்டீர்..
  இதோ ஒரு பட்டம் பிடியுங்கள்...
  வைகைப் புயல் மாதிரி நீங்கள் வலைப்புயல்....
  வலைப் புயல் வைகோ..
  வாழ்க..வாழ்க!!!!!

  பதிலளிநீக்கு
 27. நூறாவது பதிவென்றால் முத்தாய்ப்பாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்திருக்கலாம். ஆனால் வலைதள சகோதர சகோதரிகளின் பால் உங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு அன்பு அருவியாக அமைத்திருப்பது தனிச்சிறப்பு. கொட்டிய ஒவ்வொரு துளியும் எங்கள் மனதை குளிர்விப்பவை.

  அனேகமாக ஆங்கிலக் கதைகளில் ஆர்வம் காட்டி வந்த என்னை மீண்டும் தமிழ்கதைகள் படிக்கத் தூண்டியது உங்கள் எழுத்துக்கள் தான். திரு.சுஜாதா, திரு.பாலகுமரன் இவர்கள் கதைகளைப் படித்ததுண்டு. வாசகர் கடிதம் எழுத மனம் ஆசைப்படும். வெளியாகும் என்ற நிச்சயம் இல்லையென்ற காரணத்தால் எழுதியதில்லை.

  பின்னூட்டம் வெளியிடுவது எங்கள் கையில் என்று இருக்கும் பொழுது உங்கள் கதையில் பின்னூட்டம் எழுதி பராட்டுக்களையும், சில கருத்துக்களையும் வெளியிடும் வாய்ப்பு இருப்பது ஒரு சுகமான அனுபவம். 6 ல் 100 ஒரு ஆச்சரியம் தான். 'வாழ்த்துக்கள்' என்ற சொல் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தப் போதவில்லை ஐயா!

  இன்னும் பல நூறு பதிவுகள் உங்களால் முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். உங்களைச் சுற்றி செயல்படும் இந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு உங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

  100 என்ற சவாலை அருமையாக எதிர் கொண்டுவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாழ்த்துக்கள் அய்யா. ஒரு சிலக் காரணங்களால் தொடர்ந்து பதிவுகளைப் படிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன்

  பதிலளிநீக்கு
 29. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். 100ஐ சொல்லும் போது எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லியதில் உங்கள் உள்ளம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. குறுகிய காலத்தில் தரமான நூறு பதிவுகள்.. நல்வாழ்த்துக்கள் வை.கோ சார்!

  பதிலளிநீக்கு
 31. அன்புடன் வருகை தந்து,
  பல்வேறு அரிய பெரிய
  கருத்துக்கள் கூறி,
  இந்த என் நூறாவது பதிவை உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டி, வெற்றி பெறச்செய்துள்ள,
  அன்பான சகோதர சகோதரிகளுக்கு
  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 32. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து சிறப்புறட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 33. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார். மேன் மேலும் உங்கள் எழுத்துக்களால் எங்களை மகிழ்வியுங்கள்.

  பதிலளிநீக்கு
 34. ஆறு மாதத்தில் நூறு பதிவுகளா? கின்னஸ்க்கு அப்ளை பண்ணலாம் போல இருக்கே சார்... வாழ்த்துக்கள்...:)

  பதிலளிநீக்கு
 35. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  நோன்புகாலமாக இருப்பதால் பதிவுகளை படிக்க முடியல, பிறகு முடிந்த போது வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 36. ஆறு மாதத்தில் 100 பதிவு சாதனைதான்.

  உங்கள் பதிவுகள் நிறைய படிக்க வேண்டி உள்ளது .சனிக் கிழமை பேரன் வருகிறான். அதற்குள் முடிந்தவரை படிக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. //கோமதி அரசு October 2, 2012 7:00 AM
  ஆறு மாதத்தில் 100 பதிவு சாதனைதான்.

  உங்கள் பதிவுகள் நிறைய படிக்க வேண்டி உள்ளது .சனிக் கிழமை பேரன் வருகிறான். அதற்குள் முடிந்தவரை படிக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

  முடிந்தபோது அவசரமில்லாமல் ஒவ்வொன்றாகப் படியுங்கள், மேடம்.

  பேரன் வரட்டும். சந்தோஷமாக அவனைக்கொஞ்சுங்கள். அது தான் மிக முக்கியம். ;)

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 38. நான் ஒரு பின்னூட்டத்தில் சதாவதானின்னு சொல்லி இருந்தேன் இல்லியா. இங்கே சதம் அடிச்சிருக்கீங்களே? 6 மாசத்துல 100- பதிவாஆஆஆஆஆஆஆ? நான் வலைப்பூ தொடங்கியே 15- நாட்கள்தான் ஆகுது. இனிமேல தான் உங்க 50- வது பதிவு பக்கம் பாக்கபோறேன். உண்மையிலேயே வலைப்பூ தொடங்கியது இவ்வளவு உற்சாகமான வரவேற்பு கிடைப்பது எல்லாமே நம்மை புது உலகில் சஞ்சரிக்க வைக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 9:11 PM

   //நான் ஒரு பின்னூட்டத்தில் சதாவதானின்னு சொல்லி இருந்தேன் இல்லியா. இங்கே சதம் அடிச்சிருக்கீங்களே?//

   ஆமாம். உங்கள் வாக்கு இங்கு பலித்து விட்டது, தான். வாக்தேவிக்கு வணக்கங்கள். ;)

   //6 மாசத்துல 100- பதிவாஆஆஆஆஆஆஆ?//

   வெறும் 100 பதிவு தருவற்கு ஆறு மாதம் ஆகியுள்ளது. இதே காலக்கட்டத்தில் என்னுடன் பதிவினைத்தொடங்கி 200 பதிவுகள் தந்தவர்களும் இருக்கிறார்கள், தெரியுமோ?

   //நான் வலைப்பூ தொடங்கியே 15- நாட்கள்தான் ஆகுது.//

   பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையாகிய நீங்களே இன்று வரை 8 பதிவுகள் கொடுத்திருக்கீங்கோ. 33 Followers ஐ, சம்பாதிச்சிட்டீங்கோ. ஒரே வாரத்தில் வலைச்சர அறிமுகமும் வாங்கிட்டீங்கோ. என்ன இருந்தாலும் இளம் தளிர் அல்லவா!
   நீங்க போற ஸ்பீடுக்கு யாராலுமே வர முடியாதுங்கோஓஓஓ.
   வாழ்த்துகள்.

   //இனிமேல தான் உங்க 50- வது பதிவு பக்கம் பாக்கபோறேன்.//

   நூறுக்குப்பிறகு ஐம்பதா? OK OK போர்த்திட்டுப்படுத்தால் என்ன? படுத்துட்டு போர்த்திக்கொண்டால் என்ன? எல்லாமே OK தான்.
   போய்ப்பாருங்கோ ... நன்றி.

   //உண்மையிலேயே வலைப்பூ தொடங்கியது இவ்வளவு உற்சாகமான வரவேற்பு கிடைப்பது எல்லாமே நம்மை புது உலகில் சஞ்சரிக்க வைக்குது.//

   ஆமாம். ஆரம்பத்தில் படு உற்சாகமாக எங்கோ நாம் காற்றில் மிதப்பது போல ஓர் தனி மகிழ்ச்சியைத்தரும் தான். புது உலகில் சஞ்சரிக்கும் ’பூந்தளிரே’ வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 39. உங்கள் பதிவை நான் சம காலத்தில் அறிந்திருக்கவில்லை. அதனால பல பதிவுகளை உடனுக்குடன் வாசிக்கக் கொடுத்து வைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 40. //ஒருவருக்கொருவர் பின்னூட்டம் இட்டுக்கொள்வதால் நட்பை வளர்த்துக்கொள்ள முடிகிறது. //

  நானும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட வலைத்தளங்களுக்குப் போய் பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன். சரி முயற்சிக்கறேன்.

  அருமையான ஒரு சுய விமர்சனம்.

  எங்கெங்கோ இருக்கும் நாம் ஒருவருவருக்கொருவர் அறிந்து கொள்ள உதவிய விஞ்ஞான வளர்ச்சிக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 41. 100---வது பதிவுக்கு வாழ்த்துகள். வேர இன்னா சொல்லுதுன்னுபிட்டு பிரியல.

  பதிலளிநீக்கு
 42. 100---வது பதிவுக்கு வாழ்த்துகள். மனம் திறநுத மடலுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 43. 100 மகிழ்ச்சியூட்டும் ஒரு முழு எண்...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 44. 100--- வது பதிவுக்கு வாழ்த்துகள். தற்போது 1000----வது பதிவை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளை இப்பவே தெரிவித்துக்கொள்கிறேன் சுய விமரிசனம் சமயத்தில் உதவியவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தது. சிறப்பு. வலைப்பதிவு எழுதுவதால் நல்ல நண்பர்கள்...நல்ல விஷயங்கள் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாகத்தான் உள்ளது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... October 26, 2016 at 7:35 PM

   வாங்கோ, வணக்கம்.

   //100--- வது பதிவுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //தற்போது 1000----வது பதிவை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளை இப்பவே தெரிவித்துக்கொள்கிறேன்.//

   அந்த ஸ்பீடு ப்ரேக்கரில் மட்டும் என் வண்டி 09.02.2016 அன்று எதிர்பாராத விதமாக மோதாமல் தப்பித்திருந்தால், இந்நேரம் ஆயிரத்தையும் மிகச்சுலபமாக நான் எட்டிப் பிடித்திருப்பேன்.

   //சுய விமரிசனம் சமயத்தில் உதவியவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்தது சிறப்பு.//

   நன்றி மறப்பது நன்றன்று அல்லவா !

   //வலைப்பதிவு எழுதுவதால் நல்ல நண்பர்கள்...நல்ல விஷயங்கள் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாகத்தான் உள்ளது..//

   ஆம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், அதற்குள் 100-ஐ எட்டிப் பித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு