என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

100 / 1 / 2 ] அன்னதான மஹிமை - 3 of 3

2
ஸ்ரீராமஜயம்

 

அன்னதான சிறப்புக்கு 
மஹாபெரியவா சொன்ன 
உண்மைக்கதை. 

முன்கதைச் சுருக்கம்

பகுதி 1 of  3
http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html


பல வருடங்களுக்கு முன்பு காஞ்சி மஹாஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. தரிஸனத்திற்கு ஏகக்கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். 

ஒரு நடுத்தர வயது தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கைகூப்பி நின்றனர். 

அவர்களைக்கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடேடே ..... யாரு .... பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்திருந்தே! அப்போ என்னவோ கஷ்டத்தையெல்லாம்  சொல்லிண்டு வந்தயே ..... இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சிரித்துக்கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ண படியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளின்னு சொல்லலாம்] சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது ...... முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே தங்கறது. 

எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா .... தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்.

உடனே ஆச்சார்யாள், “ பேஷ் ... பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா  சரிதான் ..... அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே ... அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.

உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள்.

இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே  ஒரு வைராக்யம் வேணும். அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?”


- குதூகுலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.


ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?”


உடனே ஸ்வாமிகள், “ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு, பெளவ்யமாக, “என் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாள் .... நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்றோம் ... இந்த அதிதி போஜன மஹிமையைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ..... நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சிக்கிறாப்போல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும்” என்றார். 


அவரை அமரச்சொன்னார் ஸ்வாமிகள். பக்தரும் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பரப்பிரும்மம் பேச ஆரம்பித்தது. 


”ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தெட்டு [1938-39] .... முப்பத்தொன்பதாம் வருஷம்ன்னு ஞாபகம்.ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்திலே [கும்பகோணம்] நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. 


அப்போ நடந்த ஒரு சம்பவத்தத்தான் இப்போ நா சொல்லப்போறேன். அத நீங்கள்ளாம் ஸ்ரத்தையாக் கேட்டுட்டாளே, இதுலே இருக்கற மஹிமை நன்னாப் புரியும்!  சொல்றேன் ... கேளுங்கோ ... சற்று நிறுத்திவிட்டு, தொடர்ந்தார் ஸ்வாமிகள்.


கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்ட கரையிலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்ன்னு பலசரக்கு வியாபாரி ஒருவர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு ..... அவரோட தர்மபதினி பேர் சிவகாமி ஆச்சி. அவா காரைக்குடி பக்கத்துல பள்ளத்தூரைச் சேர்ந்தவா. அந்த தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.  


கடத்தெரு மளிகைக்கடயப் பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேந்து நம்பகமான ஓர் செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டுருந்தா. 



தொடரும்

பகுதி-2 of 3

குமரேசன் செட்டியாருக்கு அப்போது ஐம்பது ... ஐம்பத்தைந்து வயசு இருக்கலாம். அந்த ஆச்சிக்கு ஐம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் “சிவ...சிவ” ..... ”சிவ...சிவ” ங்கற நாமஸ்மரணம் தான் வந்துகொண்டிருக்கும். வேற பேச்சே கிடையாது. 

செட்டியார் வீட்ல ஒரு ஒத்தைமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சியை ஒட்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்தியம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் காவேரி ஸ்நானம் பண்ண வருவா. ஸ்நானத்தை முடிச்சிண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்கரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. அப்டி ஒரு அந்நோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப்பத்தி இதையெல்லாம் தூக்கியடிக்கக்கூடிய ஒரு சம்பவம் சொல்லப்போறேன் பாருங்கோ. - சொல்லிவிட்டு கொஞ்சநாழி சஸ்பென்ஸாக மெளனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.

சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப்போகிறாரோ என ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத்தொடங்கினார். 

“பல வருஷங்களா அந்த தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும், அவாளுக்கெல்லாம் முகம் கோணாம, வீட்டுக்கூடத்துல ஒக்காத்திவெச்சு, போஜனம் பண்ணி வெப்பா. 

சிவனடியார்களை வாசல் திண்ணையில் ஒக்கார வெச்சு, ரெண்டு பேருமா சேந்து கால் அலம்பிவிட்டு, வஸ்த்ரத்தால் தொடச்சு விட்டு, சந்தனம் குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.

அவர் கிருஹத்திலே சமையல்காரர் ஒத்தரையும் வெச்சுக்கல! எத்தன அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையால சமச்சுப்போடுவா. 

அதுலயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவாள்ட்டயே கேட்டுண்டு போய், வாங்கிண்டுவந்து பண்ணிப்போடுவா! அப்டி ஓர் ஒஸந்த மனஸு! 

இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்டித்தெரியும்ன்னு யோசிக்கிறேளா? ... அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர், குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர்தான் சாகவாசமா இருக்கறச்சே இதையெல்லாம் வந்து சொல்லுவார்! இப்போ புரிஞ்சுதா?”

சற்று நிறுத்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவே இல்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது.

”ஒரு நாள் நல்லமழை  பேஞ்சிண்டிருந்தது. உச்சிவேளை. வாசலில் வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும். 

கொடயப்புடிச்சிண்டு மஹாமஹக் கொளத்துப் படிகள்ல எறங்கிப்பார்த்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு ஒக்கார்ந்திருந்தார்.  

அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலருக்கு.  தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். 

கால அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அவர அழைச்சுண்டு வந்து ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்த தம்பதி. 

செட்டியாரின் தர்மபத்னி, அந்த  சிவனடியார் கிட்டப்போய், “ஸ்வாமிக்கு என்ன காய்கறி பிடிக்கும் ..... சொல்லுங்கோ. கடைக்குப்போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்” என்று கேட்டா.

சிவனடியாருக்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப்பக்கம் போய்ப்பார்த்தார்.  கொல்லையிலே நிறைய முளைக்கிரை மொளச்சிருக்கிறதைப் பார்த்தார்.  உள்ள வந்தார். அந்த அம்மாவக் கூப்ட்டு,   ”தனக்கு ... வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீரக் கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணாப்போறும்”ன்னார்.  

கைலே ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப்போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆகிண்டே போச்சு. சிவனடியாருக்கோ நல்ல பசி. கீரய நாமும் போய் சேர்ந்து பறிச்சா, சீக்ரமா வேலை முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு, கீர பறிக்கப்போனார் சிவனடியார். 

இவா ரெண்டுபேரும் கீர பறிக்கறதை கொல்லைப்புற வாசல்படியிலே நின்று கவனித்துக்கொண்டிருந்தாள் அந்த ஆச்சி. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரத்தட்டை உள்ளே கொண்டுவந்து வெச்சா! உடனே அந்த அம்மா என்ன பண்ணினா தெரியுமா? ரெண்டு தட்டுக்கீரையையும் தனித்தனியா அலம்பினா.   ரெண்டு அடுப்பத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரயப்போட்டு அடுப்பிலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. 

அதப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு ஒரே ஆச்சர்யம்! “என்னடா இது .... ரெண்டும் ஒரே மொளக்கீர தானே! ஒரே பாத்ரத்லே போட்டு சமைக்காம, இப்படித் தனித்தனியா அடுப்பு மூட்டி, இந்த அம்மா பண்றாளேன்னு” கொழம்பிப்போனார்.

சித்தநாழி கழிச்சு, கீர வாணலி ரெண்டையும் கீழே இறக்கி வெச்ச அந்த அம்மா, சிவனடியார் பறித்து வந்தக்கீரய மட்டும், தனியா எடுத்துண்டு போய் பூஜை அறையிலே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. 

இதப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்குப் பெருமை பிடிபடல்லே!

அவர் என்ன நினைச்சுட்டார் தெரியுமா? ’நாம் ஒரு பெரிய சிவபக்தன் ... சந்யாசி. அதனால் நாம பற்ச்ச கீரையைத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்ன்னு இந்த அம்மா புரிஞ்சிண்டு, நிவேதனம் பண்றா’ன்னு தீர்மானிச்சுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணின பிறகு, இந்த நிவேதனம் விஷயமாக அந்த அம்மாக்கிட்டேயே கேட்டுடணும் எனவும் தீர்மானம் பண்ணிட்டார். 

இங்கு சற்று நிறுத்தி, எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார். 

தொடரும்

   
நிறைவுப்பகுதி
[ 3 of 3 ]



”போஜனம் முடிந்து வந்து ஒக்காந்த சிவனடியார், தன் சந்தேகத்த அந்த ஆச்சிக்கிட்டே கேட்டுட்டார். 

ஆச்சி என்ன பதில் சொன்னாத்தெரியுமா? ”ஐயா, கொல்லேல கீர பறிக்கிறச்ச நா பார்த்துண்டே இருந்தேன். என் பர்த்தா ’சிவ..சிவ’ன்னு சிவ நாமத்தைச்சொல்லிண்டே கீரயப் பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுச்சு. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியமே இல்லே. 

நீங்க ஒண்ணும் சொல்லாமப் பறிச்சேள். அதனால் தான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு, ஒங்கக்கீரைய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்”ன்னு சொன்னாள்.

இதக்கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னவோ போல ஆயிடுச்சு. ரொம்ப சங்கோஜப்பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. 

ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டி விட்டுப் புறப்பட்டார். அப்டி அன்னம் [சாப்பாடு] போட்ட தம்பதி அவா.

நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: 

”இப்டி விடாம அதிதி போஜனத்த, பிரதி தினமும் பண்ணிவெச்சிண்டிருந்த அவாளுக்குக் கிடச்ச ’பலப் பிராப்தி’ [பிரயோசனம்] என்ன தெரியுமா?

சிலவருஷங்கள் கழிச்சு ஷஷ்டியப்தபூர்த்தி [60 வயது பூர்த்தி] எல்லாம் அவா பண்ணிண்டா. 

ஒரு மஹாசிவராத்திரி அன்னிக்கு, கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்ல நாலு கால பூஜையிலே ஒக்காந்து தரிஸனம் பண்ணினா.

வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா, தனக்கு ’ஓச்சலா இருக்கு’ ன்னு சொல்லி பூஜ ரூம்ல ஒக்காந்தவ அப்டியே கீழ சாஞ்சுட்டா.  

பதறிபோய் “சிவகாமி”ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்திலேயே சாய்ஞ்சுட்டார். 

அவ்ளவுதான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே அவா ரெண்டு பேரும் ஜோடியா “சிவ சாயுஜ்ய”த்த அடஞ்சுட்டா. 

அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சத்துக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கிடச்ச ’பதவி’யப் பாத்தேளா? 

இப்பவும் ஒவ்வொரு மஹாசிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நான் நெனச்சுப்பேன். 

அப்டி அன்னம் போட்ட தம்பதி அவா.

முடித்தார் ஆச்சார்யாள். கேட்டுக்கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது.

இடத்தைவிட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், “மணி கிட்டத்தட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ .... உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ” எனக்கருணையுடன் அனுப்பி வைத்தது. 

[ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்ன 
‘அன்னதான மஹிமை’ 
இத்துடன் நிறைவடைந்தது.]

oooooOooooo

[ 2 ]

மேற்படி இணைப்பினில் 

“என் மனத்தில் ஒன்றைப்பற்றி ... 
நான் நினைத்ததெல்லாம் வெற்றி”

என்ற தலைப்பில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடன் 
அடியேனுக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தைப்பற்றி 
எழுதியிருந்தேன். 



அதனைப் படிக்காதவர்கள் 
http://gopu1949.blogspot.in/2013/04/8.html
மேற்படி இணைப்புக்குப்போய் படித்து மகிழலாம்.


oooooOooooo

[ 3 ]

கீழ்க்கண்ட இணைப்பினில்
“நானும் என் அம்பாளும் ! - 
அதிசய நிகழ்வு”

என்ற தலைப்பினில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடன்
அடியேனுக்கும் ஏற்பட்ட ஓர் சொந்த 
அனுபவத்தைப்பற்றி எழுதியிருந்தேன்.

அதனைப்படிக்கத் தவறியவர்களுக்காக 
மீண்டும் இங்கே இப்போதுவெளியிட்டுள்ளேன். 

 
                                            

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுடன் அடியேனுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. எவ்வளவோ MIRACLES நிகழ்ந்துள்ளன. 

இதுவரை அவ்வாறான என் அனுபவங்கள் எதையும் நான் யாரிடமும் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டது இல்லை. 


எனக்கு மட்டுமல்ல. தரிஸனத்திற்குச் சென்று வந்த எவ்வளவோ பக்தர்களுக்கு, அவர்களின் அருளால் எவ்வளவோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறான பலரின் சுகானுபவங்களையெல்லாம் தொகுத்து ‘கவிஞர் நெல்லை பாலு’ என்பவர் 1995 இல் “தெய்வ தரிஸனம்” என்ற தலைப்பினில் ஸ்ரீ பரமாச்சார்யார் ஸ்வாமிகளின் முதலாண்டு நினைவஞ்சலிக்காக ஓர் சிறப்பு நூல் வெளியிட்டிருந்தார்கள். 


அந்த நூலில் ஸ்ரீ ஸ்வாமிகளுடனான தங்களின் அனுபவங்களை பலரும் 

பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.  



அதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி  [PRESIDENT OF INDIA] 

திரு. ஆர். வெங்கட்ராமன்  அவர்களில் ஆரம்பித்து 

நூற்றுக்கணக்கான பிரபலங்கள் எழுதியுள்ள 

அனுபவக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.


அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல் 

இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த 

பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். 







அடியேன்அந்த புத்தகத்தில் எழுதியுள்ள பகுதியை மட்டும் 

இங்கு கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 





கோவிலில் மாட்டு ....


பரமாச்சாரியார் உத்தரவு


[By V. கோபாலகிருஷ்ணன் BHEL திருச்சி.]


-oOo-




1978 ம் வருஷம். 


விநாயக சதுர்த்திக்கு முதல் நாள்.  


நான் என் குடும்பத்தாருடன் ஸ்ரீ  ஸ்வாமிகளை 

தரிஸிக்கச் சென்றிருந்தேன்.



அதுசமயம் ஸ்ரீ பரமாச்சார்யாள் அவர்கள் 

குண்டக்கல்லுக்கு அருகில் உள்ள ‘ஹகரி’ என்ற 

சிற்றூரில்  ”பண்யம் சிமிண்ட் ஃபேக்டரி ” வளாகத்தில் 

முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வந்தார்கள். 


அங்கு ஸ்ரீ மஹாபெரியவா ஆக்ஞைப்படி மிகவும் துரிதமாக 

ஓர் சிவன் கோயில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் இருந்தது. 



வழக்கப்படி நான், என் தாயார், என் மனைவி என் முதல் இரு 

குழந்தைகள் [வயது முறையே 4-1/2 மற்றும் 3] 

தரிஸனத்திற்குச் சென்றிருந்தோம். 



எனக்குப் படம் வரைவதில் சிறுவயது முதற்கொண்டே ஆர்வம் உண்டு. 

என் கையால் நானே சிரத்தையாக வரைந்து வர்ணம் தீட்டி 

மிகப்பெரிய அளவில் ஒரு காஞ்சி காமாக்ஷி அம்மன் ஓவியத்தை 

அட்டை மடங்காமல் வெகு ஜாக்கிரதையாகச் 

சுற்றி எடுத்துச்சென்றிருந்தேன்.



நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தபோது மாலை சுமார் 4 மணி இருக்கும்.


சுமார் 100 பக்தர்கள் மட்டுமே ஸ்ரீ பெரியவா தரிஸனம் 

செய்து கொண்டிருந்தார்கள். அதிகமாகக் கூட்டம் இல்லாத நேரம்.



ஸ்ரீ மஹா பெரியவாளை நெருங்கி நாங்கள் நான்கு நமஸ்காரங்கள் 

செய்து விட்டு, கொண்டு சென்ற ஸ்ரீ காமாக்ஷி அம்மன் படத்தை 

பழத்தட்டுடன் சமர்ப்பித்தோம். 



அருகில் உதவியாளர்களாக இருந்த  ’ராயபுரம் ஸ்ரீ பாலு’ 

அவர்களும், ’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’ அவர்களும் 

ஸ்ரீ பெரியவாளிடம் படத்தைப் பிரித்துக் காட்டினார்கள்.



அதை தன் திருக்கரங்களால் வாங்கிக்கொண்ட ஸ்ரீமஹா பெரியவா 

அவர்கள், தன் திருக்கரங்கள் இரண்டையும் அந்தப்படத்தில் 

நன்றாக ஊன்றிய வண்ணம், கீழே தரையில் அமர்ந்த நிலையில், 

வெகு நேரம் சுமார் 10-15 நிமிடங்கள் நன்றாக ஊன்றிப்பார்த்து, 

மிகவும் ரஸித்து, சந்தோஷத்துடன் புன்னகை புரிந்தார்கள்.



நான் அந்தக்காட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போய் ஸ்தம்பித்து 

நின்று கொண்டிருந்தேன். பிறகு தன் உதவியாளர்களிடம் ஏதோ 

சில விபரங்கள் என்னைப்பற்றி கேட்டது போல உணர்ந்து கொண்டேன். 


பிறகு அங்கு கூடியிருந்த பக்தர்களில் சிலர், “ஸ்ரீ மஹா பெரியவா 

திரும்பவும் காஞ்சீபுரத்திற்கே வந்து விட வேண்டும். ஸ்ரீ மஹா 

பெரியவாளை அழைக்கவே ஸ்ரீ காமாக்ஷி அம்மன் இங்கு 

இப்போது வந்திருக்கிறாள்” என்று தங்கள் ஆசையை மிகவும் 

பெளவ்யமாக வெளிப்படுத்தினார்கள். 


ஸ்ரீ மஹா பெரியவாளும் சிரித்துக்கொண்டார்கள்.


ஸ்ரீ மஹாபெரியவா தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு வட இந்திய 

பாத யாத்திரை மேற்கொண்டு, சுமார் 8 ஆண்டுகளுக்கும் 

மேலாகி, தமிழ்நாட்டுப்பக்கம் எப்போ திரும்பி வருவாரோ என 

பக்தர்களை ஏங்க வைத்திருந்த காலக்கட்டம் அது. 



நான் வரைந்து எடுத்துச்சென்ற படத்தை அனுக்கிரஹம் செய்து 

திரும்பத் தந்து விடுவார்கள், அதை ஃப்ரேம் செய்து நம் 

கிருஹத்தில் பூஜையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று 

நினைத்திருந்த எனக்கு, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி அங்கு காத்திருந்தது.



ஸ்ரீ மஹாபெரியவா யாரோ ஒருவரை குறிப்பாக 

அழைத்து வரச்சொல்லியிருந்தார்கள். வந்தவர் அந்த 

பண்யம் சிமிண்ட் ஃபேக்டரியின் மிக உயர்ந்த அதிகாரியோ 

அல்லது மேனேஜிங் டைரக்டரோ என்று நினைக்கிறேன்.



அவர், பஞ்சக்கச்சத்துடன், உத்திரியத்தை இடுப்பில் 

சுற்றிக்கொண்டு, மேலாடை ஏதும் அணியாமல்,  மிகவும் 

பெளவ்யமாக வந்து, ஸ்ரீ மஹாபெரியவாளை நமஸ்காரம் 

செய்து கொண்டார். 

 

அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து, 

அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில் 

மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.



எனக்கு ஒரு 9 x 5 வேஷ்டியும், என் மனைவிக்கு 9 கெஜம் நூல் 

புடவையும், என் தாயாருக்கு குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் 

சால்வையும், என் குழந்தைகள் இருவருக்கும் பழங்கள் 

கல்கண்டு + குங்குமப்பிரஸாதம் போன்றவைகளையும் ஒரு மூங்கில் 

தட்டில் வைத்து, ஸ்ரீ மஹாபெரியவா நன்றாக ஆசீர்வதித்து 

அனுக்கிரஹம் செய்து கொடுத்தார்கள். 



அனைவரும் நமஸ்கரித்து விட்டு வாங்கிக்கண்களில் ஒத்திக்கொண்டோம்.



மறுநாள் விடியற்காலை, விநாயக சதுர்த்திக்காக, அந்த ஊர் 

கலைஞர் ஒருவரால் மிகப்பெரிய விநாயகர் சிலை களிமண்ணால் 

வெகு அழகாகச் கையினாலேயே வடிவமைக்கப்பட்டு, 

செய்யப்பட்டதை அருகில் நின்று கவனிக்கும் பாக்யம் பெற்றேன்.  


விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா 

சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் 

பாக்யம் பெற்றோம்.



இந்த நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத 

ஒரு நல்ல பேரின்ப அனுபவம் ஆகும்.


oooooOooooo



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தில்

அடியேனின் இன்றைய இந்தப்பதிவு 



100வது ’அமுதமழை’ யாக அமைந்துள்ளது.


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அனுக்ரஹ அமுத மழை ’
மேலும் தொடர்ந்து எட்டு பகுதிகள் 
மட்டுமே பொழியும்.



இதன் தொடர்ச்சி .... பகுதி 101
நாளை மறுநாள் வெளியாகும்.


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

oooooOooooo



ஓர் மகிழ்ச்சிப் பகிர்வு



மேலே உள்ள படத்தில் 
நடுநாயகமாகத் தோன்றிடும் 
’சிங்கக்குட்டி'தான் 
என் கைக்குழந்தை 


மேலும் விபரங்கள் இதன் தொடர்ச்சியில் 
பகுதி 100 / 2 / 2 ]
’வெற்றித்திருமகன்’ 
என்ற தலைப்பில்
இப்போதே இன்றே தனிப்பதிவாக 
வெளியிடப்பட்டுள்ளது.

காணத்தவறாதீர்கள்.






54 கருத்துகள்:

  1. அமுத மழையின் 100வது பதிவு
    மகிழ்வுடன் கூடிய வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வை.கோ

    அன்னதான மகிமை மூன்றாவது பகுதி நன்று.

    சிவனடியார் நினைத்துப் பெருமைப் பட்டது ஒன்று - உண்மையான காரணம் மற்றொன்று.

    சிவபெருமானுக்கு நிவேதனம் பண்ணியது பற்றிய உண்மைக் காரணத்தை ஆச்சி விளக்கிய உடன் அசந்து போய் விட்டார்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ

    இறுதியாக முடிவினில் சிவனடி சேர்ந்த தம்பதிகளைப் பற்றி அதுவும் சிவராத்ரியன்று - அவர்கள் கொடுத்து வைத்த தம்பதிகள் - அவர்களையும் அன்ன தானத்தினையும் பற்றிய உண்மைக் கதையினை விளக்கிக் கூறிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைப் பர்ரி என்ன கூறுவது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பகிர்வு.. அந்த தம்பதிகளின் பக்தியும், அதிதி போஜனத்தை பற்றியும் தெரிந்து கொண்டேன்...

    தங்களுடைய அனுபவங்களையும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்..

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே நல்ல உயர்ந்த அனுபவங்கள். உங்கள் அனுபவங்களையும் ஏற்கெனவே உங்கள் பதிவிலேயே படித்திருக்கிறேன். இன்று மீண்டும் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வெற்றித் திருமகன் - வைகோவின் கைக் குழந்தை - ஸ்ரீதருக்குப் பாராட்டுகள் - அயலகம் சென்றும் பரிசுகள் பல பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா
    சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.

    தெய்வமே கணபதியை பூஜிப்பதைக் காணும்
    பேறு பெற்றதற்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  8. 100வது ’அமுதமழை’ யாக அமைந்துள்ளதற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ..!

    பதிலளிநீக்கு
  9. தெய்வ தரிஸனம்” என்ற தலைப்பினில் ஸ்ரீ பரமாச்சார்யார் ஸ்வாமிகளின் முதலாண்டு நினைவஞ்சலிக்காக ஓர் சிறப்பு நூலில் தாங்கள் பெற்ற அனுக்ரஹமும் பதிவாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது..!

    பதிலளிநீக்கு
  10. அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே அவா ரெண்டு பேரும் ஜோடியா “சிவ சாயுஜ்ய”த்த அடஞ்சுட்டா

    கிடைதற்கரிய மஹா பேறு பெற்ற தம்பதியர் ..!

    பதிலளிநீக்கு
  11. என் பர்த்தா ’சிவ..சிவ’ன்னு சிவ நாமத்தைச்சொல்லிண்டே கீரயப் பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுச்சு. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியமே இல்லே.


    சிவார்ப்பணமாக எந்த செயலைச்செய்தாலும் அது நைவேத்தியமாகிவிடுகிற அற்புதத்தை அருமையான உணர்த்திய பகிர்வுகள்.!

    பதிலளிநீக்கு
  12. அதிதி போஜன மஹிமையைப்பற்றி விஸ்தாரமாக விளக்கிய நிகழ்வுகள் பயனுள்ளவை..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  13. சிவகாமி ஆச்சி சிவனடியாரிடம் சொன்னதைப் படித்த போது எனக்கு நினைவிற்கு வந்தது, "கொக்கென நினைத்தனையோ கொங்கணவா " என்பது தான். ஆச்சர்யமாக இருந்தது. அதே சமயத்தில் அந்தத் தம்பதி செய்த அதிதி உபசாரம் எவ்வளவு புண்ணியம் கொண்டு சேர்த்திருக்கிறது. எத்தனை தம்பதிகளுக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்!
    இதைப் பகிர்ந்து ,விருந்தோம்பலின் மகிமையை உணர்த்தியதற்கு நன்றி வைகோ சார்.

    பதிலளிநீக்கு
  14. அமுத மழையின் 100வது பதிவு
    மகிழ்வுடன் கூடிய வாழ்த்துக்கள் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  15. ஒரு தவம் போல சிரத்தையுடன் எழுதி நூறு கைக்குள் வந்த நிலவாயிற்று.

    //ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

    நினைப்பதை செயல்படுத்தி நடத்தியும் காட்டியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.. நல்ல விஷயங்களை எழுத வேண்டும் என்று நினைத்தது தான் நூறு என்கிற எண்ணைக்கையை எட்டியதைக் காட்டிலும் சிறப்பாகப் படுகிறது. அந்த சிறப்பே ஆசிர்வாதமாய்
    தோன்றாத்துணையாய் நின்று வழிநடத்திச் சென்றிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. அமுதமழையின் 100வது பதிவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.புஷ்பங்களை பறிக்கும்போதும் சமைக்கும்போதும் பகவன் நாமாக்களை சொல்லிக்கொண்டேஇருப்பது அந்த காரியங்கள்பயனுள்ளதாக செய்யும் சிவபக்தி அதிதி போஜனம் செய்வித்த அந்த உத்தம தம்பதிகளுக்கு சிவசாயுஜ்யம் .அனாயாசமாககிடைத்த அரும் பேறு.

    பதிலளிநீக்கு
  17. பெரியவா சொன்ன அன்னதானத்தின் மகிமையை விளக்கும் சம்பவம் அற்புதம்.
    அனைவரும் இந்த நல்ல பண்பினை கடைபிடிக்கவேண்டுகிறேன்.

    ஒரு நூறைத் தாண்டி பல நூறு பதிவுகளை எட்ட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. அன்னதான மகிமையை
    அருமையாக அனைவரும் உணரும் வண்ணம்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  19. பெரியவர் சார்ந்த 100 வது பதிவு வந்திருப்பது எவ்வளவு பெரிய விசியம்.பாராட்டுக்கள் சார்.தங்களின் அம்மன் ஓவியம்
    பற்றி ஏற்கனவே எதோ ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள் என்று நினைக்கின்றேன்.பெரிய ரெக்கார்ட் சார்.

    பதிலளிநீக்கு
  20. அமுத மழையின் 100வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!..

    பதிலளிநீக்கு
  21. அமுத மழையின் மகத்தான நூறாவது பதிவு.
    மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்கள்..

    இன்னும் பல நூறு பதிவுகளை தாங்கள் வெளியிட வேண்டும்.அதற்கு - இறைவன் அருள்வானாக..

    பதிலளிநீக்கு
  22. 100வது பதிவு மஹாபெரியவாளின் அனுக்ரஹத்தால் சிறப்பாக அமைந்துள்ளது! அன்னதான மஹிமை அறிந்தோம்! பகிர்விற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  23. குமரேசன் செட்டியார் – சிவகாமி ஆச்சி செய்த அன்னதானத்திற்கு கிடைத்த ’பலப் பிராப்தி’ [பிரயோசனம்] உண்மையிலேயே கண்ணீர் சிந்த வைக்கும் கதைதான்.

    // அடியேன் எழுதியதோர் அனுபவமும் அதில் பக்கம் எண்கள்: 155-157 இல் இடம் பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தை இன்றும் நான் மிக உயர்ந்த பொக்கிஷமாக என்னிடம் வைத்துள்ளேன். //

    உங்களுக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்த திருப்தி.

    கோயிலில் மாட்டு .. என்ற சமபவத்தை ஏற்கனவே படித்து இருக்கிறேன். மீண்டும் இப்போது படித்தேன். 100 ஆவது அமுத மழைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. விநாயக சதுர்த்தி பூஜை ஸ்ரீ மஹாபெரியவா
    சந்நிதானத்திலேயே மிகச்சிறப்பாக நடைபெற்றதை நேரில் காணும் பாக்யம் பெற்றோம்.//

    அற்புதமான அனுபவம்.

    பதிலளிநீக்கு
  25. அமுத மழையின் 100வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    குருவின் அருள் பூரண்மாக கிடைத்த நாள். மகிழ்ச்சியான நாள்.
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  26. அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே அவா ரெண்டு பேரும் ஜோடியா “சிவ சாயுஜ்ய”த்த அடஞ்சுட்டா. // எப்படி பட்ட பேறு எல்லோருக்கும் இப்படி கிடைக்குமா!
    அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    மெய்சிலிர்த்து போனது.

    பதிலளிநீக்கு
  27. அமுதமழையின் 100 ஆவது பதிவு மன திற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள். அன்னதான மகிமை,கீரையைத் தனியாக சமைத்ததின் காரணம் படிக்க மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.
    சிவராத்திரியன்று, அன்ன தான தம்பதிகள் ஒன்றாக இறைவனடி சேர்ந்தது. தானத்தில் சிறந்தது அன்ன தானமே. நல்ல விஷயங்கள்.
    காமாக்ஷி அம்மன் ஓவிய விஷயங்கள் முன்பே படித்ததுஞாபகம் வந்தது. தொடர்ந்த நல்ல விஷயங்கள், படிக்க
    எழுதியதற்கு நன்றி. வாழ்த்துகளுடனும், அன்புடனும்.

    பதிலளிநீக்கு
  28. அமுத மொழியின் நூறாவது பதிவு. மனம் நிறைந்த பாராட்டுகள்......

    தொடர்ந்து பல சிறப்பான பதிவுகள் எழுதவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. அன்னதான சிறப்புக் கதை மிகவும் அருமை ஐயா... நன்றி...

    100வது பதிவு - மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
  30. Namaskaram...Venugopal from Kanchipuram....outlook express in my system does not work...if you are free pl.give me a missed call to me 9443486117..."VANDI VANDIYAKA VISHAYAM IRUKKIRATHU' Thank you very much..

    பதிலளிநீக்கு
  31. அமுத மழையின் 100வது பதிவு வாழ்த்துக்கள்.

    .அன்னதான மஹிமை அறிந்துகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. நமஸ்காரம்..எதேர்ச்ையாக தங்கள் பதிவை பார்த்தபோது..ஷாக்..."மஹாபெரியவா 101"அதிர்சசி அடைய காரணம் இதுவே: "எனக்கு வேண்டிய ஒருவர்..அவர் வாழ்ககையில் பெரியவா நடத்திய லீலை,அருள் நாடகம்...இதோ...அவருக்கு தங்களைபபோல் அப்பா,தாத்தா என்று பெரியவாளை அறிந்த பாரம்பரியம் இல்லை..அவருக்கு 30 வயது வரை பெரியவாளை பார்த்தது இல்லை..கேள்விபட்டதோடு சரி.அவருக்கு govt.job...jr,Asst.ஆனால் வேலை பிடிக்கவில்லை..காரணம் அவர் stenography..english,tamil highspeed pass செய்தவர்.. leave…absent...குடும்ப செலவுக்கு வககீல்களிடம் job typing போவார்..தினம் 200/-குறையாமல் கிடைககும்..1986-ல். திருமணமாகி 1 பையன் 3 வயது..probation period..office-ல் சிலர் அவரை நிரந்தரமாக வெளியேற்ற முயற்சி செய்தனர்..file தயார்...ஏதோ தோன்ற காஞ்சி போகிறார்கள்..அங்கே அந்த ஞான சூரியனை பார்த்ததும் இவர் பயந்து போய் சற்று தொலைவில் போய் நின்று கொண்டார்..இவர் மனைவி மட்டும் அழுகிறார்..அரற்றுகிறார்.."பெரியவா அவரை பாருங்கோ..மனசு சரியில்லை எங்கிறார்..எங்காத்து மனுஷா எல்லாம் அவரை பயித்தியம் என்கிறார்கள்...நீங்கதான் காபபாதனும்...ஒரு கணம் கண் மூடியவர் திடீர் என எழுந்து..இரும்பு கைப்பிடியை பிடித்து படி ஏறி..platform மாதிரியான மேடையில் ஏறி,சுற்றும் முற்றும் பார்ககிறார்... இவர் பயந்துககொண்டு தூரமாக நிற்கிறார்..இவரை பெரியவா ...அப்படியே வைத்த கண் வாங்கமல் பார்ககிறார்..பார்வை என்றால் அப்படி ஒரு பார்வை...தடித்த மூககு கண்ணாடி வழியாக பார்ககிறார்.."அய்யோ எத்தனையோ ஜன்மாவில் செய்த பாவமூடடையோடு நிற்கிறான் பார்...சபித்து விடுவாரோ?பயததில் 4 கூடம் ஜலத்தை தலயில் கொட்டினது போல வியர்வை வெள்ளம்...மனைவி அழைகக,இயந்திரம் போல் பெரியவாவிடம் செல்ல பிரசாதம் தரபபடுகிறது..பஸ் பிடித்து மறு நாள் ஊருக்கு வந்தனர்...மறுநாள் காலை...இவர் cycle-ல் ஏறி எங்கோ போக நினைக்க இவர் அறியாமல் office போகிறார்...நேராக officer..."நான் join பண்ணுகிறேன்...."ஓ தாரளமாக..."joining report எழுதனம்..பேனா இல்லை..வெளியே போய் எழுதி வருகிறேன்...இவர்.".வேண்டாம் ..attendance regr.ல் கைஎழுத்து போடு..--officer.
    இவர் போனபின் office supdt.15 பக்க மோமோவோடு வருகிறார்..."அதெல்லாம் வேண்டாம்"என்னமோ தெரியலை,இவனை தண்டிக்க மனம் வரவில்லை" சுருக்கமாக சொன்னால்,இவர் 58 வயதில் பணி ஓய்வு பெற்றார்..நடுவில் என்ன கஷ்டம் வந்தாலும்,பாதிபபு இல்லை...அவர் மகன் BE முடித்து வெளி நாடடில் Engr. பெண்ணுக்கு திருமணமாகி 8 மாத பேரன்..இவர் மஹாபெரியவா பற்றிய புத்தகம் ஒன்றை படித்தாரம் அதில் "வில்வமரம்"மகிமை பற்றி பெரியவா சொன்னதை படித்து வில்வசெடிகளை வளர்த்து கோவில்களில் வைத்து வருகிறார்...காலடி முதல் காஞ்சிபுரம் வரை...கரூர் தொடங்கி நாகை வரை...செடிகள் பற்றி எதுவும் தெரியாத இவர்..பெரியவாதான் வழி நடத்துவதாக சொல்கிறார்..27 நட்சத்திர மரங்கள்,ருத்ராசச மரம் வரை பேசுகிறார் he has planted nearly 500 saplings..ஒருகாலத்தில் வாடகை cycle-ல் போனவர் இப்போது கார்,நிறைய கோவில்கள்..சுருங்க சொன்னால்,"இளையதங்குடி,கலவை,வடவாம்பலம்,எழுசசூர், ஏன்..ஸ்ரீகண்டன் மாமா சித்தியான அங்கரையில் கூட ஒரு வில்வ செடி...விழுபபுரம்,இசசங்குடி,...
    மஹா பெரியவா என்றால் அழுகை வரும்..ஏன் என்றால் என்னயும் ஒரு poruttai கருதி அருள் செய்கிறாரே தன்னால் அழுகை வரும் என்பார்...நாளை மஹாபெரியவா ஆராதனை...எனவே தான் இந்த விளக்கம்...
    "அவன் வேறு யாருமில்லை ..."நாயினும் கீழான இவன்தான்" நமஸ்காரம்.."ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர...

    பதிலளிநீக்கு
  33. Venugopal Krishnamoorthi December 28, 2013 at 7:10 PM

    நமஸ்காரம் சார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு எழுதியுள்ளீர்கள்.

    கவலைப்படாதீங்கோ. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இன்றும்கூட நம்முடனே தான் இருக்கிறார்கள். நம்மை இன்றும் அவர்கள்தான் வழிநடத்திச் செல்கிறார்கள். ரக்ஷித்து வருகிறார்கள்.

    மனப்பூர்வமாக யார் அவரை தியானித்தாலும், வழிபட்டாலும் அவர்களை அவர்கள் இன்றும் கைவிடுவதே இல்லை.

    அடியேனுடைய இந்தத்தொடரின் 100வது பதிவுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளீர்கள். தங்களை இங்கு வரவழைத்துள்ளதும் அந்த மஹானின் அனுக்ரஹம் மட்டுமே என்பதை நான் நன்கு அறிவேன்.

    இந்த அடியேனின் பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தரவோ, ஏதாவது ஒருசில பகுதிகளையாவது படிக்க சந்தர்ப்பம் அமையவோ, ஓர் கொடுப்பினை வேண்டும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் எல்லோருக்கும் இது அமையவே அமையாது. எதற்குமே அவர் அருள் + அனுக்ரஹம் இருந்தால் மட்டுமே பிராப்தம் கிடைக்கும்.

    நாளைக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 20வது ஜயந்தி திருநாள். தாங்கள் அவ்விடம் காஞ்சிபுரத்தில் இருப்பதால், ஸ்ரீமடத்திற்குப் போய் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அதிஷ்டானத்தை பன்னிரெண்டு பிரதக்ஷணங்கள் செய்து நான்கு நமஸ்காரங்கள் செய்துவிட்டு வாங்கோ. அப்போது இந்த அடியேனாகிய நாயையும் கொஞ்சம் நினைச்சுக்கோங்கோ, அது போதும் எனக்கு.

    உங்களை பிறகு ஒருநாள் நான் போனில் தொடர்பு கொள்ளுவேன். அதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். தயவுசெய்து பொறுத்துக் கொள்ளவும்.

    அன்புடன் VGK [கோபு]

    பதிலளிநீக்கு
  34. வெற்றிகரமான தங்களின் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.தங்களின் தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.

    --

    பதிலளிநீக்கு
  35. உங்கள் அனுபவமும், கூடவே திரு வேணுகோபால் அவர்களின் அனுபவமும் சேர்ந்து இந்த நூறாவது பதிவிற்கு ஒரு தெய்வாம்சத்தைக் கொடுத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  36. அதிதி போஜனத்தை விடாமல் செய்த அந்த செட்டியார் தம்பதிகளுக்கு கிடைத்த பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  37. சகோதரிக்கு நன்றி..வில்வ விதை போட்டு வளர்ந்து வரும் கன்றுகள்...
    இதில் ஒரு ஆத்ம திருப்தி..

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துக்கள்
    நூறாவது பதிவுக்கு
    அதுக்குலயுமா நூறு ஆச்சு
    அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சத்துக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கிடச்ச ’பதவி’யப் பாத்தேளா
    இந்த பதவி பெரியவா போட்டதுன்னஅ?

    பதிலளிநீக்கு
  39. இப்படி அன்னதானம் செய்தால் சிவ சாயுஜ்ய பதவி கிடைச்சுடும்போல. வேறு என்ன வேணும்.

    பதிலளிநீக்கு
  40. // நீங்க ஒண்ணும் சொல்லாமப் பறிச்சேள். அதனால் தான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு, ஒங்கக்கீரைய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்”ன்னு சொன்னாள்.//

    அதான பார்த்தேன்.

    // அவ்ளவுதான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே அவா ரெண்டு பேரும் ஜோடியா “சிவ சாயுஜ்ய”த்த அடஞ்சுட்டா. //

    இறைவன் கடாட்சம்.

    //அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து,

    அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில்

    மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.//

    உங்க வீட்டில மாட்டி இருந்திருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு அதிக மகிழ்ச்சி கிடைச்சிருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 24, 2015 at 4:05 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **அவரிடம் மேற்படி படத்தை ஒப்படைத்து பெரியதாக FRAME செய்து, அங்கு கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள சிவன் கோயிலில் மாட்டிவிடும் படி ஆக்ஞை செய்தார்கள்.**

      //உங்க வீட்டில மாட்டி இருந்திருந்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு அதிக மகிழ்ச்சி கிடைச்சிருக்குமே.//

      ஆமாம் ஜெயா. மேலும் இது நான் சற்றும் எதிர்பாராததோர் நிகழ்ச்சியாகும். :)

      >>>>>

      நீக்கு
  41. //"அவன் வேறு யாருமில்லை ..."நாயினும் கீழான இவன்தான்" நமஸ்காரம்.."ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர...//

    அவர் சரணத்தை நாடிச்சென்ற யாரையும் அவர் கை விட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 24, 2015 at 4:09 PM

      **"அவன் வேறு யாருமில்லை ..."நாயினும் கீழான இவன்தான்" நமஸ்காரம்.."ஜெய ஜெய சங்கர..ஹர ஹர சங்கர...**

      //அவர் சரணத்தை நாடிச்சென்ற யாரையும் அவர் கை விட்டதில்லை.//

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  42. 100---வது பதிவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  43. அதிதி போஜன பலன் அந்த தம்பதிக்கு பரி பூரணமா கெடைச்சுடுத்து.

    பதிலளிநீக்கு
  44. ஒருவருக்கு அதிதி போஜனம் இடைவிடாமல் செய்ததே எத்தனை பலனைக் கொடுத்துள்ளது.

    செட்டியார் வீட்டு அம்மா, எத்தனை பக்தி விசுவாசம் இருந்தால், 'சிவ' என்று நாமஸ்மரணை செய்து கீரை பறிக்கும்போதே அது சிவார்ப்பணமாகிவிட்டது என்று எண்ணுவார். அன்னதானம் மட்டுமல்ல, அந்த உயர்ந்த பக்தி அவர்களுக்கு முதுமை எனும் நோய் பீடிக்காமல், சிவராத்திரி அன்றே சாயுஜ்யம் கிட்ட உதவிற்று.

    அனுபவங்கள் எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் படிக்கத்தூண்டும்.

    நீங்கள் வரைந்த படம் எங்கேயாவது போட்டிருக்கிறீர்களா (கோவிலில் மாட்டச் சொன்ன படம்)?

    பதிலளிநீக்கு
  45. 'நெல்லைத் தமிழன் September 29, 2016 at 5:55 PM

    வாங்கோ, வணக்கம்.

    //அனுபவங்கள் எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் படிக்கத்தூண்டும்.//

    கரெக்ட். மிக்க மகிழ்ச்சி.

    //நீங்கள் வரைந்த படம் எங்கேயாவது போட்டிருக்கிறீர்களா (கோவிலில் மாட்டச் சொன்ன படம்)?//

    இந்தக்கேள்விக்கான என் பதிலை மிகவும் விரிவாக இதோ இந்தக்கீழ்க்கண்ட பதிவினில் உள்ள, தங்களின் பின்னூட்டத்திற்கு என் பதிலாகக் கொடுத்துள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2013/04/9.html

    தலைப்பு:
    9] "நானும் என் அம்பாளும் !" .. அதிசய நிகழ்வு !
    [ ”பொக்கிஷம்” தொடர் பதிவு ]

    பதிலளிநீக்கு
  46. இந்தப்பதிவின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும், நம் தோழி ’ஆச்சி’ அவர்களால் FACEBOOK இல் இன்று 18.07.2019 வியாழக்கிழமை (குருவாரத்தில்)வெளியிடப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே. அதற்கான இணைப்பு இதோ:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/676920042810693/

    பதிலளிநீக்கு