முன்கதை முடிந்த இடம்:
த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச்சாப்பிட வேண்டிய அனைத்துப்பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.
குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.
=========================================================================
இப்போது பகுதி-5 .......... தொடர்கிறது
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அந்த தெய்வமே இன்று இந்த சிவகுரு ஐயா உருவத்தில் வந்து, தனக்கு தகுந்த நேரத்தில் உதவிட முன்வந்திருப்பதை அஞ்சலை உணரத்தொடங்கினாள்.
தான் மேற்கொண்டு எப்படி இந்தப் பொல்லாத உலகத்தில், மானம் மரியாதையுடன் வாழ்ந்து, இந்தத் தன்கைக்குழந்தையையும் ஆளாக்க முடியும் என்று கலங்கிப்போய் இருந்தவளுக்கு, வயிறு நிரம்ப நல்ல உணவுகள் வாங்கிக்கொடுத்து, இந்த மிகப்பெரிய ஹோட்டலில் இன்று ரூம் போட்டு தங்கச்சொல்லி, மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல பலவித யோசனைகள் கூறி, எந்தவிதமான நிர்பந்தங்களோ, கட்டாயமோ செய்யாமல், நன்றாக யோசித்து உன் முடிவைச்சொல், நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிப்போய் உள்ள, சிவகுரு ஐயாவை நினைத்து கண் கலங்கினாள், அஞ்சலை.
இப்படியும் சில நாகரீகமான, நல்ல உள்ளம் கொண்ட, பரந்த மனப்பான்மை கொண்ட, மிகச்சிறந்த மனிதர்கள் இருப்பார்களா, என வியந்துதான் போனாள்,அதிகம் படிக்காதவளும், சேரியிலேயே பிறந்து வளர்ந்து சேரியிலேயே வாழ்க்கைப்பட்டவளுமான, அஞ்சலை என்ற அப்பாவிப்பெண்.
சிவகுரு ஐயாவின் விருப்பப்படி நான் நடந்து கொள்ள சம்மதிப்பது சரிதானா; அது பாவச்செயல் இல்லையா? மறைந்த தன் கணவனுக்கும், அவர் நினைவாக விட்டுச்சென்றுள்ள என் குழந்தைக்கும் நான் செய்யும் துரோகச்செயல் இல்லையா? இது, எந்த ஒரு பெண்ணும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் செயல் அல்லவே! உற்றார் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் படியாக தனக்கு யாரும் இல்லையென்றாலும், ஊரார் சும்மா இருப்பார்களா? அஞ்சலையின் ஒரு மனசாட்சி இவ்வாறெல்லாம் பலவாறு, அவளைக்குழப்பலானது.
அதேசமயம் அவளின் மற்றொரு மனசாட்சி “நீ இன்றிருக்கும் ஆதரவற்ற நிலையில், உன்னிடம் இரக்கம் காட்டி, உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பும், நல்வாழ்வும் அமைத்துத்தர, ஒரு மனிதர் தானே முன்வந்து, உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறார். அவரைத்தட்டிக்கழித்து விட்டு, உன்னால் இந்தக்கைக்குழந்தையுடன், வறுமை என்ற ஓட்டைப்படகுடன், கணவனை இழந்த வெறுமைவாழ்வு என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சல் போடமுடியுமா?” என்று கேட்டு எள்ளி நகையாடியபடி மேலும் தொடர்ந்தது:
”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.
இவ்வாறு “பணமா........பாசமா” என்ற குழப்பத்தில் இருந்த அஞ்சலை, தன் குழந்தைப்பக்கம் திரும்புகிறாள்.
பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள்.
எப்படிக்கூட்டிக்கழித்து பெருக்கிவகுத்துப் பார்த்தாலும், தான் இன்றுள்ள நிலையில், சிவகுரு ஐயா சொல்வதே சரியென்று படுகிறது அவளுக்கு. ஐயா சொல்படி கேட்டு நடந்தால்தான், அவருக்கும், அவர் மனைவிக்கும், தனக்கும், தன் குழந்தைக்குமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் என்ற ஆறுதல் கிடைத்து, தன் சொச்ச வாழ்நாளாவது ஓரளவு தன் மகனுக்கு அமையப்போகும் நல்லதொரு வளர்ப்பையும், வாழ்க்கையையும் நினைத்தாவது இன்பமாகக் கழியக்கூடும் என்ற நல்லதொரு எண்ணத்துடன் ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள், அஞ்சலை.
......................
................................
..........................................
/ இடைவேளை /
.........................
....................................
...............................................
வீட்டு ஹாலின் சுவரைச்சுற்றிலும், பல்வேறு பாவனைகளில் சிரித்த வண்ணம் குழந்தைகள் படங்கள் நிறையவே தொங்கவிடப்பட்டிருந்தன. தினமும் போல ஒவ்வொன்றாக அவற்றைப்பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் மல்லிகா.
மணி மாலை 6 என்பதை ஆறு முறை ஒலித்த அந்த சுவர் கடிகாரம் நினைவு படுத்தியது. பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது.
காலையில் புறப்பட்டுச்சென்ற தன் கணவர் இன்னமும் வரக்காணோமே என்ற கவலையில் செல்போனில் தொடர்பு கொள்ள நினைத்தவளின் கவனத்தை வாசலில் கேட்ட அழைப்பு மணி ஈர்த்தது.
கதவைத்திறந்த மல்லிகாவுக்கு, கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.
தலை நிறைய சுருட்டை முடி, குண்டு மூஞ்சி. குறுகுறுப்பான பார்வை. குட்டிக்கிருஷ்ணன் போன்றே சற்று கருமைநிறம். காது நுனிகளில் சொருகிய வண்ணம் தங்க அவல் போன்ற தொங்கட்டான்கள். கைக்கு ஒன்று வீதம் பட்டையான தங்க வளையல்கள். விரலில் குட்டியான அழகிய மாதுளைப்பழ முத்துக்கல் பதித்த மோதிரம். அந்த மோதிரத்தைக் கைவளையளுடன் இணைத்த பாம்பரணை போன்ற மெல்லியதோர் தங்கச்செயின்.
கழுத்தினில் மினுமினுக்கும், மெஷின் கட்டிங்க்கில் செய்த வெந்தய டிசைன் தங்கச்சங்கிலி. இடுப்பில் தங்கத்தில் அரணா. தனியாக தங்க நாய்க்காசுகள், தங்கத் தாயத்துடன் கூடிய ஒரு கருப்புக்கயிறு.
கால்கள் இரண்டிலும் முத்துமுத்தாக ஒலிஎழுப்பும் வெள்ளிக்கொலுசுகள். பாதங்களில் நடந்தால், பூனை போல ஒலி எழுப்பும் அழகிய பூப்போட்ட பூட்ஸுகள். புதுச்சட்டை, புது டிராயர், கமகமக்கும் குழந்தைக்ளுக்கான விசேஷ பெர்ஃப்யூம் மணம்.
தன்னிடம் தாவிய அந்தக்குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் மல்லிகா.
கூடவே வந்த வேலையாள் ஒருவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியையும். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த குட்டி மெத்தை தலையணியுடன் கூடிய, தொங்கும் தொட்டிலையும் வைத்துவிட்டு, சிவகுருவிடம் விடை பெற்றுச்சென்றான்.
அந்த அட்டைப்பெட்டி நிறைய, குழந்தைகளுக்கான விலை உயர்ந்த, தரமான விளையாட்டுச் சாமான்கள், ரப்பர் பொம்மைகள், பந்துகள், பால் பவுடர் டப்பாக்கள், ஃபீடிங் பாட்டில்கள், நிப்பிள்கள், நாப்கின்கள் இத்யாதி இத்யாதி, வாங்கிக்குவித்திருந்தார், சிவகுரு.
”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.
தொடரும்

