என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - பகுதி 1 of 2]உண்மை சற்றே வெண்மை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என அரோக்கியமான சத்துணவுகள் அளித்து, போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  

கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி எஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர்.  
கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.

இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.


தொடரும்


[இதன் தொடர்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 09.09.2011 அன்று வெளியாகும்]

47 கருத்துகள்:

 1. முதிர்கன்னிகளின் நிலையும், அவர்களின் பெற்றோர்களின் நிலையும் நிதர்சனமாக உணர்த்தும் கதை.

  பதிலளிநீக்கு
 2. சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது./

  காலம் மாறும் கவலையும் ஒருநாள் தீரும்தானே!

  பதிலளிநீக்கு
 3. பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. ”/

  கடவுள் காக்கட்டும். மனக்குறை தீர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. "உண்மை சற்றே வெண்மையாய் இருப்பதே மகிழ்ச்சிக்குறைவுக்குக் காரணமோ என்னவோ !

  பதிலளிநீக்கு
 5. திருமணமாகாத முதிர்கன்னியின் பார்வையில் கதை ஆரம்பம் ஜோர். நீங்களோ நன்றாக வரைவீர்கள். உங்கள் கதைகளுக்கு சிம்பிளாய் ஒரு ஓவியம் நீங்களே ஏன் வரையக் கூடாது?

  பதிலளிநீக்கு
 6. கதை சொல்வது உங்களுக்குக் கை வந்த கலை கோபால் ஜி..:)) தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. முதிர் கன்னிகளின் பிரச்சனைக் கதையை
  மிகப் பிரமாதமாக துவக்கி இருக்கிறீர்கள்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறோம்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 8. ஆரம்பமே நல்லா இருக்கு (கொஞ்சம் வீட்டு நினைவும் வந்தது )
  தொடர்கிறோம்

  பதிலளிநீக்கு
 9. உண்மை சற்றே வெண்மைதான் என்றாலும் பலருக்கு மற்ற நிறங்கள்தானே பிடிக்கிறது.
  அதனால் வெண்மை தனித்து விடுகிறது என்றாலும் வெண்மை கம்பீரமானதுதான் உண்மையைப் போல.

  அதுபோல கதையின் நாயகிக்கும் கம்பீரத்தை கொடுக்கிறதா என்று அடுத்த பகுதியில்
  பார்க்கலாம்

  பதிலளிநீக்கு
 10. கதைக்கென போட்டிருக்கும் முதல் ஃபோட்டோ சூப்பர்
  '

  பதிலளிநீக்கு
 11. உண்மை வெண்மையில்லை நண்பரே, அது மிகவும் கசப்பானது. மேலும் அது சுடும். வாழ்க்கையின் நிதரிசனங்களை அனுபவிப்பது மிக மிக கடினம்.

  வயதான காலத்தில் இத்தகைய கதைகளை (கதை என்று தெரிந்தும் கூட) படிக்கும்போது மனம் மிகவும் கனத்துப்போகிறது.

  பதிலளிநீக்கு
 12. கதைதான் என்றாலும் அந்த பெண்ணுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகவேண்டுமே என்று மனது பதைபதைக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. இந்த சிறுகதை எல்லாம் புத்தகமா போடுவீங்களா?

  பதிலளிநீக்கு
 14. கதை தான் என்றாலும் நெரில் நடப்பதுபோல் சொல்லி இருக்கிரீர்கள்.
  நல்ல ரசனை .

  பதிலளிநீக்கு
 15. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 16. காலத்தே வாழ்க்கை அமையாத பெண்ணின் வேதனையை அழகாய் ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒரு நாவலுக்கான கனத்தை இதில் உணர்கிறேன். எழுதுங்கள்ஜி.. காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 17. இன்றைய வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கதையாக ஆரம்பித்திருக்கிறது.

  அடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 18. இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!//இந்த கூற்று ஒரு நாளும் மாறப்போவதில்லை சார்.

  பதிலளிநீக்கு
 19. //ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும் திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். //எத்தனை பேர் இப்படி நினைக்கிறார்கள் சார். எப்படியாவது முடிதால் போதும் என்று நினைக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 20. பெண்ணின் பிரச்சினையை தொட்டுச் செல்லும், மனதை தொடும் கதையின் ஆரம்பத்தை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. நேரமின்மையால் நிறைய கதை படிக்க முடியல் மெதுவா தான் பார்க்கனும்

  இது தலைப்பே சூப்பர்.
  வெள்ளி கிழமையா மீதி??/

  பதிலளிநீக்கு
 22. என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

  இந்த வரிக்கு மட்டுமே அதன் உண்மைக்காக லேசாக அழுகையே வருகிறது.

  பதிலளிநீக்கு
 23. முதிர்கன்னியின் நிலை....

  அடுத்து என்ன ஆகும் அந்த முதிர்கன்னிக்கு....

  உண்மையின் நிறம் என்ன ஆனது என்று பார்க்க காத்திருக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 24. நல்ல தொடக்கம்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 25. Waiting for 9th to know what happens next.....I know and wish that good things are bound to happen............because you always present good things of life unlike many in the media.......still the interest and suspense is maintained.

  Anbudan Manakkal J Raman, Vashi

  பதிலளிநீக்கு
 26. தங்களின் உணர்வுப்பூர்வமான கதைகளில் இதுவும் ஒன்று.நிச்சயம் மனதைத் தொடும் முடிவாக அமையும் என்ற எதிர்பார்ப்புடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 27. முடிவை அறிய நாளை எப்போ வரும் என்று காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. உண்மையின் நிறமே வெண்மை தானே!

  பதிலளிநீக்கு
 29. நல்ல கதை இது. இப்போதே அதன் முடிவை நான் ஊகித்துவிட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் கதை. உணர்வுகளில் இயங்கும் கதை இது. வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 30. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  //இந்த சிறுகதை எல்லாம் புத்தகமா போடுவீங்களா?//

  இதுவரை 3 சிறுகதைத்தொகுப்புக்கள் வெளியிட்டுள்ளேன், சார்.

  அவை பற்றிய விபரங்கள் ஏற்கனவே கீழ்காணும் இணைப்பில் கூட ஒரு பதிவாகவே கொடுத்துள்ளேன்:

  http://gopu1949.blogspot.com/2011/07/4.html

  பதிலளிநீக்கு
 31. அழகிய சிறுகதைத் தொடருக்கு வாழ்த்துக்கள் ஐயா ...........

  பதிலளிநீக்கு
 32. ஸ்ரீராம். said...
  //திருமணமாகாத முதிர்கன்னியின் பார்வையில் கதை ஆரம்பம் ஜோர்//.

  மிக்க நன்றி
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்.

  //நீங்களோ நன்றாக வரைவீர்கள். உங்கள் கதைகளுக்கு சிம்பிளாய் ஒரு ஓவியம் நீங்களே ஏன் வரையக் கூடாது?//

  விரைவில் ஏதாவது ஒரு கதைக்கு அவ்வாறு செய்து உங்கள் ஆவலைப்பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.

  ஆலோசனைக்கு நன்றிகள்.vgk

  பதிலளிநீக்கு
 33. Harani said...
  //நல்ல கதை இது. இப்போதே அதன் முடிவை நான் ஊகித்துவிட்டிருக்கிறேன். நெகிழவைக்கும் கதை. உணர்வுகளில் இயங்கும் கதை இது. வாழ்த்துக்கள் சார்.//

  தங்களின் அன்பான வருகையும், நெஞ்சை நெகிழ வைத்த உணர்வு பூர்வமான வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளது.
  மிக்க நன்றி, சார்.

  பதிலளிநீக்கு
 34. என் பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய

  திருமதி: இராஜராஜேஸ்வரி அம்பாள்
  திருமதி: அமைதிச்சாரல் அவர்கள்
  திருமதி: தேனம்மை லெக்ஷ்மணன்
  அவர்கள்
  திருமதி: Angelin அவர்கள்
  திருமதி: ராஜி அவர்கள்
  திருமதி: RAMVI அவர்கள்
  திருமதி: LAKSHMI அவர்கள்
  திருமதி: மி.கி.மாதவி அவர்கள்
  திருமதி: கோவை2தில்லி அவர்கள்
  திருமதி: சாகம்பரி அவர்கள்
  திருமதி: Jaleela Kamal அவர்கள்
  திருமதி: tirumathi bs sridhar
  அவர்கள்
  திருமதி: இமா அவர்கள்
  திருமதி: அம்பாளடியாள் அவர்கள்


  திரு.என் ராஜபாட்டை ராஜா அவர்கள்
  திரு.ரமணி சார் அவர்கள்
  திரு.ரத்னவேல் சார் அவர்கள்
  திரு.Dr.P.Kandaswamy Phd.சார்
  அவர்கள்
  திரு.மோஹன்ஜி சார் அவர்கள்
  திரு.ரிஷபன் சார் அவர்கள்
  திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
  திரு.புலவர் சா. இராமானுசம் ஐயா
  அவர்கள்
  திரு.மணக்கால் அவர்கள் &
  திரு.ஜீவி அவர்கள்

  ஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், உற்சாக வரவேற்புக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  நாளை மீண்டும் சந்திப்போம் என்று கூறி அன்புடன் விடைபெறும் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 35. அன்பின் வை.கோ - கதை நன்று - முதிர் கன்னிகள் படும் பாடு சொல்லை மாளாது. பெற்றோர்கலூம்முயன்று கொண்டு தான் இருப்பார்கள். ம்ம்ம் - பொறுத்திருப்போம் அடுத்த பகுதிக்கு ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 36. cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ - கதை நன்று - முதிர் கன்னிகள் படும் பாடு சொல்லை மாளாது. பெற்றோர்கலூம்முயன்று கொண்டு தான் இருப்பார்கள். ம்ம்ம் - பொறுத்திருப்போம் அடுத்த பகுதிக்கு ..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  தங்களின் அன்பான வருகையும், அருமையான கருத்துக்களும், நல்வாழ்த்துக்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
  மிக்க நன்றி, ஐயா.

  பதிலளிநீக்கு
 37. வாயில்லா பிராணிகளினுடைய கத்தல் களிலேயே அதற்கு என்ன தேவை என்று புரிந்து கொள்பவர் களுக்கு மனிதருக்கு எப்ப எனுன்ன தேவைன்னு ஏன் புரிய மாட்டேங்குது

  பதிலளிநீக்கு
 38. காலா காலத்தில் நடக்க வேண்டியது நடக்கா விட்டால் கஷ்டம் தான். முதிர் கன்னிகளின் மனம் என்ன பாடு படும்.

  எட்டாக்கனிக்கு கொட்டாவி விடும் மக்கள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 39. ஆரம்பம் நல்லா இருக்குது. அடுத்தாப்ல இன்னா சொல்ல போறீங்க.

  பதிலளிநீக்கு
 40. எப்படி சொல்ல ரொம்ப டெலிகேட்டான விஷயத்த எடுத்திருக்கீங்க. முதிர் கன்னிகளை நினைத்தால் பரிதாபம் மட்டும் தானே நம்மால படமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 41. அருமையான கதைக்கரு....மிகவும் நுணுக்கமாகக் கையாளும் விதம் அருமை...

  பதிலளிநீக்கு
 42. சமுதாயத்தில் தெளிவு படுத்தவேன்டிய சில அறிவியல் உண்மைகளைக் கதைக்கருவாக தேர்ந்தெடுத்தது பாரட்டுக்குரியது!

  பதிலளிநீக்கு