என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 செப்டம்பர், 2011

முதிர்ந்த பார்வை [சிறுகதை பகுதி 1 of 2]

முதிர்ந்த பார்வை

[சிறுகதை - பகுதி 1 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
அந்த முதியோர் இல்லத்தில் தன் தாய் தந்தையரை ஒப்படைத்து விட்டு வெளியே வந்த மணிகண்டனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. அவன் மனைவி கல்யாணி அவனை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னங்க இது. நடுரோட்டில் இப்படி ஒரு ஆம்பளை அழலாமா? கண்ணைத் துடையுங்க முன்னாடி” என்று டவலை நீட்டினாள்.

மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.  

கல்யாணியும் மிகவும் நல்லவள் தான். கல்யாணம் ஆகி வந்த கடந்த நாலு வருடங்களில், மாமியார், மாமனார் இருவரையும் தன் சொந்தத் தாய் தந்தையைப் போலவே மிகவும் அன்புடனும், அனுசரணையாகவும், மரியாதையாகவும் தான் கவனித்துக்கொண்டு வருகிறாள் என்பதும் மணிகண்டனுக்குத் தெரியாதது அல்ல.

வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவன் வந்தானாம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னானாம்.

ஜோஸ்யன் வந்து போன சமயம் மணிகண்டனும் வீட்டில் இல்லை. ரேஷன் கடைக்குப்போய் கும்பலில் நின்று பொருட்கள் வாங்கி வந்த அவன் மனைவி கல்யாணியும் வீட்டில் இருக்க முடியாமல் போய் விட்டது.

அந்த ஜோஸ்யன் எவனோ சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்ட, தன் பெற்றொர்கள் இப்படிப் பிடிவாதமாக வீட்டை விட்டு, முதியோர் இல்லத்தில் தங்களைச் சேர்க்கச் சொல்லி வற்புறுத்துவார்கள், என்று கனவிலும் நினைக்காத மணிகண்டனுக்கு, வேறு எந்த வழியும் தெரியவில்லை.

பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளையாகப் பிறந்து விட்டதால், அவனை விட்டு அவர்களை வேறு எங்கு தான் அனுப்ப முடியும் அவனால். மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன்.

அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதிலோ, வசதிகள் செய்து கொடுப்பதிலோ மிகவும் கவனமாக அவர்கள் மனது கோணாமல் இருந்து வருபவன்.

“இவனைப் பெற்றெடுக்க இவன் தந்தை என்ன நோன்பு நோற்றானோ” என மற்றவர்கள் பொறாமை கொள்வது போல நேற்று வரை போய்க்கொண்டிருந்த கூட்டுக்குடும்பம் அது. அவனுக்கு வாய்த்த மனைவி கல்யாணியும் நேற்று வரை அவ்வாறே மிகவும் நல்லவளாக எல்லோரையும் அனுசரித்துத்தான் இருந்து வந்திருக்கிறாள். இப்போது யார் கண்ணு பட்டதோ, இந்த தேவையில்லாத பிரிவு.

மணிகண்டன் தன் வருமானத்திற்குத் தகுந்தபடி அழகாகத் திட்டமிட்டு செலவுகள் செய்து, யாருக்கும் எந்த ஒரு குறையும் இன்றி குடும்பம் நடத்தி வருபவன். தன்னுடைய சிறுசேமிப்புக்களுடன், வங்கியொன்றில் லோன் வாங்கி சிறியதாக ஒரு வீடும் கட்டி, சிறப்பாக வாழ்ந்து வருபவன். 

தன் தந்தையின் சொற்ப ஓய்வூதியத்தையும் கூட, அவர் பெயரிலேயே வங்கியில் மாதாந்திர சேமிப்பாக இருக்கட்டும்; ஏதாவது எதிர்பாராத செலவுகள் வந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று விட்டு வைத்திருப்பவன்.   

அழகிய வாட்டர் ஹீட்டருடன் கூடிய, வெஸ்டேர்ன் பாத்ரூம் அட்டாச்சிடு சிங்கிள் பெட்ரூமில், இரண்டு கட்டில்கள் போட்டு, ஏ.ஸீ. வசதிகள் செய்து கொடுத்து, பொழுதுபோக்குக்கு டீ.வி, பக்திப்பாடல் கேஸட்டுக்கள் செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் எல்லாமே கொடுத்து, வெய்யிலோ, மழையோ, பனியோ, காற்றோ எந்தப்பருவ காலங்களிலும், தன் தாய் தந்தையர் உடல் நிலைக்கு எந்தப் பாதிப்பும் வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டவன் தான்.


ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.


யார் அந்த ஜோஸ்யர், அவர் பெயர் என்ன, அவருக்கு வீடு எங்கே உள்ளது, அவரின் விலாசம் என்ன என்று கேட்டால் வயதான இவர்கள் இருவருக்கும் சொல்லத்தெரியவில்லை. அவர் ஏதோ கேரளாவிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராகச் செல்பவர் என்றும், குருவாயூரப்பன் சொப்பனத்தில் வந்து சொன்னபடி நம் வீடு தேடி வந்து, வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, நமக்கு நல்லது தான் செய்து விட்டுப்போய் இருக்கிறார், என்றும் திருப்பித்திருப்பி சொல்லி வருகின்றனர்.


இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.


நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. 


கல்யாணி இங்கு நடந்த விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவரை விபரமாக எடுத்துக்கூறியும், தான் எந்தத்தவறும் செய்யவில்லை என்று சமாதானம் சொல்லியும், சம்பந்தி மேல் உள்ள அன்பினாலும், அவர்கள் இது நாள் வரை தங்களிடம் நடந்து கொண்ட பண்பினாலும், தங்கள் மகள் கல்யாணி சொல்வது எதையுமே நம்பாமலும், ஏற்றுக்கொள்ளாமலும் மறுத்து விட்டனர்.    


மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.
தொடரும் 43 கருத்துகள்:

 1. படித்தாயிற்று. :) அவர்கள் ஏன் பிரிந்து செல்ல நினைத்தார்கள் என்பதை ஊகிக்க முயற்சிக்கிறேன், முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வை.கோ - கதை நன்று - கதை மாந்தர் அனைவருமே நல்லவர்களாகச் சித்தரிக்கப் படுகின்றனர். துவங்கும் பொழுது மணிகண்டனுக்கு கல்யாணியிம் மேல் சிறு சந்தேகம் என ஒரு சிறு குறிப்பு வருகிறது .......ஏன் பிரிந்து சென்றார்கள் என நான் ஒரு மாதிரி சிந்தித்து வைத்திருக்கிறேன். பார்ப்போம் அடுத்த பகுதியினை ..... மணிகண்டனுக்கு குழந்தைகள் இல்லையோ ......நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. சமகாலப் பிரச்சனையை மிகச் சரியாகத்
  தொட்டுப்போகும் கதைக் கருவும்
  அதைச் சொல்லிச் செல்லும் விதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஏதோ காரணம் இல்லாமல் இந்த சம்பவங்கள் நடக்கவில்லை என்று தெரிகிறது. பையனின் நன்மைக்காகவே பெற்றோர்கள் இப்படிச் செய்வார்கள் என்றும் தெரிகிறது. எப்படித் தொடர்கிறீர்கள் என்று காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு.
  அடுத்து பார்க்கலாம்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. //மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.//

  இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பல நன்மைகள் நடக்கும்.தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
 7. "முதிர்ந்த பார்வை அருமையாய் அனுபவ வரிகளுடன் சிற்ப்பான கதைக்கு பாராட்டுக்கள்.

  அடுத்தபகுதியை எதிர்பார்த்திருக்கிறோம் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. மற்ற இந்தக்கால பிள்ளைகள் போலன்றி, மணிகண்டன் தன் தாய் தந்தை மேல் அளவுக்கதிகமான பாசம் வைத்துள்ளவன்.//

  கேட்கவே இனிமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பெற்றோரின் விருப்பம் அறிந்து நடக்கும் பிள்ளை, மருமகள் - அருமையான ஆரம்பம். எனக்கு ஒரு யூகம் இருக்கிறது நாளை தொடர்கிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 11. “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.//

  ரத்தினமான வரிகள்.

  பதிலளிநீக்கு
 12. பிள்ளைகளின் நல்வாழ்விற்காகவே சிறிதுகாலம் பிரிந்திருக்கிறார்களோ!!

  பதிலளிநீக்கு
 13. நடந்த கதைகளையெல்லாம் கேள்விப்பட்ட கல்யாணியின் பெற்றோர்களுக்கும், கல்யாணி மேல் ரொம்பவும் கோபமாக வந்தது. வயதான காலத்தில், நல்ல நடமாட்டத்துடன், தங்களால் முடிந்த சரீர ஒத்தாசைகள் செய்துகொண்டு, தன் மகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்து வந்த தம்பதியை, சின்னஞ்சிறுசாகிய தன் மகள், இவ்வாறு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளதை கேள்விப்பட்ட அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.


  ஆஹா.. எப்படிப்பட்ட மனிதர்கள். மணம் செய்து கொடுக்கும்போதே தனிக்குடித்தன மந்திரம் ஓதி அனுப்பும் யதார்த்த வாழ்வில் இப்படியும் சிலர்.
  வாழ்க..உங்கள் கதாபாத்திரங்கள்.

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொரு கதாபாத்திரமும் நல்லவர்களாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. இது மிகவும் பாசிட்டிவ் ஆன ஒரு விஷயம்...

  எதற்காக பெரியவர்கள் இருவரும் முதியோர் இல்லம் சென்று இருப்பார்கள் என யோசிக்க முடியவில்லை..

  அதனால் அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்பு அதிகம் ஆகிவிட்டது .

  பதிலளிநீக்கு
 15. அருமையான கதை.
  பெற்றோர் ஏன் பிரிந்து சென்றார்கள் என்பதற்கு நான் ஒரு காரணம் யுகித்து வைத்திருக்கிறேன். அது சரியா என்று பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 16. தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் கதை நகருகிறது. சிக்கு இருந்தால் பிரிக்கலாம். இல்லாததால் எதாவது சிக்கிட்டு அவிழ்த்துவிடுவீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. முனைவர்.இரா.குணசீலன் said...
  //தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

  http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

  நன்றி.//

  நன்கு படித்து தமிழில் புலமைபெற்ற பண்டிதர்களுக்கே புரியும், பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களைத்தேடி, அலசி ஆராய்ந்து அதன் அருமை பெருமைகளை, என் போன்ற பாமரனுக்கும் நன்கு புரியும் வண்ணம் சுலபமாக்கி, பழச்சாறு போலத் தந்து வரும், தங்கள் தமிழ்பணிக்கு, தமிழராய்ப் பிறந்துள்ள அனைவரும் தலை வணங்க வேண்டும்.

  தொடர்ந்து தொய்வில்லாமல் இத்தகைய தமிழ்பணியாற்றும் மிகச்சிறந்த மனிதரான, முனைவர், இரா.குணசீலன் ஆகிய தங்களால் ஒரு விருது கிடைக்க நான் தான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  என் உடல்நிலை + வேறு சில குடும்பச்சூழ்நிலைகள் காரணமாக, அதிகமான பதிவர்களின் வெளியீடுகளை கடந்த 2 மாதங்களாக படிக்க முடியாமலும், அப்படியே ஆசையில் படித்தாலும் பின்னூட்டம் அளிக்க முடியாமலும் உள்ளேன்.

  இருப்பினும் என் பழைய பின்னூட்டங்களுக்கு மதிப்பளித்து, எனக்கு நீங்கள் இந்த விருது வழங்கியுள்ளதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 19. மஹாபாரதத்தில் யுதிஷ்டிரன் கண்ணுக்கு ஒரு கெட்டவர் கூட
  படவில்லை.அது போல் உங்கள் கதாபாத்திரங்களை நீங்கள்
  படைத்திருக்கிறீர்கள்.
  அனைவரும் இவ்வாறிருக்க பிரிவின் காரணம்
  என்னவென்பது என் ஊகத்துடன் ஒத்துப் போகிறதா
  என்று அறியக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 20. கதை ஜெட் வேகத்தில் ஓட... நாங்களும் தொடர்ந்து ஓடி வருகிறோம்...

  பதிலளிநீக்கு
 21. ஏதோ ஒரு காரணம் இருக்கு .அடுத்த பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 22. அடுத்து என்னன்னு எதிர் பர்க்கவைக்கும் கதை ஓட்டம். நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 23. முதியோர் இல்ல‌ம் பெருகி வ‌ரும் இந்நாளில், பெற்றோரை வ‌ய‌தான‌ கால‌த்தில் எப்ப‌டியெல்லாம் பாதுகாக்க‌ வேண்டுமென்ற‌ அறிவுறுத்த‌ல் இழைந்தோடுகிற‌து க‌தை நெடுக‌. மேலும், ம‌னித‌ர்க‌ள் த‌த்த‌ம் அள‌வில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முய‌ல‌ வேண்டுமென்ற‌ முனைப்பையும் தோற்றுவிக்கிற‌து. கேர‌ள‌ ஜோசிய‌ன் எனும் திட்ட‌மிட்ட‌ க‌தாபாத்திர‌த்தில் தானிருக்கிற‌து க‌தைமுடிச்சின் சூட்சும‌ம். பார்க்க‌லாம். உங்க‌ விளையாட்டில் ஒரு சுவார‌ஸ்ய‌மிருக்கிற‌து எப்போதும்.

  பதிலளிநீக்கு
 24. நல்ல கதை. ஏன் முதியோர் இல்லம் சென்றார்கள்....

  அடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 25. அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகளுக்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 26. Respected Sir,
  என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். http://blogintamil.blogspot.com.
  Thank you Sir.

  பதிலளிநீக்கு
 27. சாகம்பரி said...
  Respected Sir,
  என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (6/11/11 -ஞாயிறுக்கிழமை) காலை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். http://blogintamil.blogspot.com.
  Thank you Sir.//

  என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 28. மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.

  ஏங்க வீட்டில் ஏதானும் குழப்பம்னு வந்துட்டா உடனே இந்தப்புருஷன்காரங்க ஏங்க மனைவிமேலேயே சந்தேகப்படுராங்க?

  வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவன் வந்தானாம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னானாம்

  இந்த ஜோசியம், ஜாதகம் எல்லாத்தையும் இப்படியாகண்மூடித்தனமாக நம்புவாங்க?

  ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.

  மகனின் நிலமையில் யாரு இருந்தாலும் இப்படி வருத்தம் வரும்தான்.

  மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.

  பெண்ணைபெற்றவர்களும் இப்படி அனுசரணையுடன் இருந்துவிட்டால் நல்லதுதானே.

  இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.

  ஆமா அவங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து பழையபடி கூட்டுக்குடும்பமா சேர்ந்துடுவாங்க என்பதே சந்தோஷமா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 17, 2013 at 8:59 PM

   **மீண்டும் மீண்டும் அவனுக்குத் தன் மனைவி மீதுதான் ஒரு சந்தேகம். தான் ஆபீஸுக்குப் போனபின், தன் பெற்றோர்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசி, தவறாக அவர்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டிருப்பாளோ! பலமுறை அது விஷயமாக அவளிடமே கேட்டும் அவளிடமிருந்து, எந்த ஒரு உண்மையையும் அவனால் வரவழைக்க முடியவில்லை.**

   //ஏங்க வீட்டில் ஏதானும் குழப்பம்னு வந்துட்டா உடனே இந்தப்புருஷன்காரங்க ஏங்க மனைவிமேலேயே சந்தேகப்படுறாங்க?//

   பூந்தளிர் கேட்டுள்ளது சரியான் கேள்வி தான். இதற்கான பதில் என் இரு நகைச்சுவைச் சிறுகதைகளில் உள்ளன.
   போய்ப்படியுங்கோ, கருத்துச்சொல்லுங்கோ. இப்படியும் சில மனைவிகள் இருக்கிறார்களே .. ப்லே கில்லாடிகளாக.

   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

   “சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]”

   http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html

   விருது மழையில் தூறியதோர் குட்டிக்கதை.

   [புத்திசாலி மனைவியைப் பற்றிய நகைச்சுவைக் கதை]

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>> பூந்தளிர் [2]

   **வீட்டுக்கு அன்று ஒரு நாள், ஜோஸ்யம் சொல்ல கேரள மந்திரவாதி போல ஒருவன் வந்தானாம். ”கூட்டுக் குடும்பமாக இருந்தால் உங்கள் இருவருக்குமே மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. எவ்வளவு சீக்கரம் பிரிந்து செல்லுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது”, என்று சொன்னானாம்**

   //இந்த ஜோசியம், ஜாதகம் எல்லாத்தையும் இப்படியா கண்மூடித்தனமாக நம்புவாங்க?//

   எல்லாமே நல்லா ஸ்மூத்தா போகும் வரை ஏதும் பிரச்சனை இல்லை தான். ஏதாவது ஒரு கஷ்டம் வரும்போது தான், ’எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?’ என்று நினைத்து ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோஸியரிடம் போய் அலைய வேண்டியதாக உள்ளதூஊஊஊ.

   இதைப்பற்றி கூட நான் என் “மாமியார்” என்ற குட்டியூண்டு கதை ஒன்றில் எழுதியுள்ளேனாக்கும்.

   http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html

   “மாமியார்”

   நல்லா மாட்டினீங்களா?

   நீங்க இப்போ ‘சிவ சிவா’ என முணுமுணுப்பது எனக்கும் தெரிகிறதூஊஊஊஊ.

   >>>>>>

   நீக்கு
  3. கோபு >>>> பூந்தளிர் [3]

   **ஜோஸ்யர் யாரோ ஒருவர் வந்து திருஷ்டிப்பட்டது போல ஏதேதோ சொல்லி குருவிக்கூட்டைக் கலைத்து விட்டதில், மணிகண்டனுக்கு மிகவும் வருத்தம்.**

   //மகனின் நிலைமையில் யாரு இருந்தாலும் இப்படி வருத்தம் வரும்தான்.//

   போதுமே அதெல்லாம் ஒண்ணுமே வராதுங்கோஓஓஓஓ.

   கதையில் தான் இதெல்லாம் சாத்தியம்.

   அவனவன் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததும், அவளுக்கு இடுப்புப்பிடிக்கப்போய் விடுவான்.

   தாயாவது, தந்தையாவது?

   நீங்க வேறு, கூத்தில் கோமாளி போல எதாவது நடுவில் கருத்துச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க! ;)))))

   >>>>>>>


   நீக்கு
  4. கோபு >>>> பூந்தளிர் [4]

   **மேலும் “இனி உன் மாமியார், மாமனார் இருவரும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பி எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது தான் உன்னைப் பார்க்க நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என்றும் சொல்லி விட்டனர்.**

   //பெண்ணைப் பெற்றவர்களும் இப்படி அனுசரணையுடன் இருந்துவிட்டால் நல்லதுதானே.//

   நல்ல இருப்பாங்களே! நீங்களும் அவர்களை நல்லா இருக்க விடுவீங்க்ளே!! பிச்சுப்புட மாட்டீங்க்ளோ பிச்சு !!!

   >>>>>


   நீக்கு
  5. கோபு >>>> பூந்தளிர் [5]

   **இன்னும் ஒரு வருடத்திற்கு குருப்பெயர்ச்சி முடியும் வரை தான் இந்தப் பிரச்சனையாம். பிறகு பழையபடி கூட்டுக் குடும்பமாகவே வாழலாம் என்றும் அந்த ஜோஸ்யர் சொல்லியிருப்பதாகச் சொன்னதனால், மனது சற்றே சமாதானம் ஆனது மணிகண்டனுக்கு.**

   //ஆமா அவங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து பழையபடி கூட்டுக்குடும்பமா சேர்ந்துடுவாங்க என்பதே சந்தோஷமா இருக்கு.//

   திருமணம் ஆன ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீங்க இப்படிச் சொல்வதைக் கேட்கவே எனக்கும் சந்தோஷமாத் தான் இருக்கூஊஊஊஊஊ.

   அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிங்கோஓஓஓஓ.

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 29. பெரியவர்கள் இருவரும் தாங்கள் கொஞ்ச நாள் தனியாக இருக்கலாம் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 30. இப்படி ஒரு மாமனார், மாமியார்

  இப்படியும் ஒரு அம்மா, அப்பா

  அதென்ன திருமணம் ஆகிவிட்டால் எது நடந்தாலும் அந்தப் பெண்ணையே குறை சொல்லுகிறார்கள்.

  நல்ல மாமனார், மாமியார் கிடைப்பது ஒரு வரம். அஎதப் பெண்ணிற்குக் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. இப்பூடில்லா சோசியம் சொல்லுரவங்க பேச்செல்லா கேட்டுகிட கூடாதுல்ல.

  பதிலளிநீக்கு
 32. நல்லாதாகீது இவுளுகளல்லா இப்புடி நம்புரதாலதான சோசியக்காரங்க பொளப்பு நடக்குது.

  பதிலளிநீக்கு
 33. காரணம் இல்லாமல் காரியமில்லை. ஏதோ காரணம் இருக்கு. வெளிப்படையாக சொல்ல தயங்கறாங்க. வீட்டில் இதுபோல விரும்ப தகாத சம்பவம் நடந்தா ஏன் மனைவி மேலயே சந்தேகப்படுறாங்க. பெண்ணின் பெற்றோரும் என்ன காரணமா இருக்கும் என்றே புரியாமல் பெண்ணுக்கு அறிஉரை கூறுகிறார்கள்

  பதிலளிநீக்கு
 34. அருமை...யதார்த்தமான டுவிஸ்ட்...கல்யாணியோட அம்மா அப்பா காரக்டர்ஸ் மனசுல நிக்குது...

  பதிலளிநீக்கு
 35. அருமையான தொடக்கம்! காரணம் அறிய ஆவல் மேலிடுகிறது!

  பதிலளிநீக்கு