என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 29 அக்டோபர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 2 / 5]



நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 2 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:


தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.

==================================

மறுநாள் காலை சர்க்கரை நோயாளி ஒருவருக்கு தினமும் ஊசி போட வரும் கம்பவுண்டர் வர தாமதம் ஆகிவிட்டது. நோயாளிக்கு பசி வந்து மிகவும் படபடப்பாக ஆகி விட்டார். இதைப்பார்த்த, கேள்விப்பட்ட புதிதாக வந்த சேர்ந்த பெரியவர், “ஊசி மருந்தின் அளவுகள் தெரியுமா?” என்று கேட்கிறார். டாக்டர் சீட்டைத் தட்டுத்தடுமாறி அந்த வயதான அம்மாளின் ஒரு பையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்துத் தருகிறார்கள். 


டாக்டர் சீட்டை வாங்கிப்படிக்கிறார். அதில் காலையில் A10+M20 என்றும், இரவு A10+M5  என்றும் எழுதியுள்ளதைப் [A = Human Actrapid Soluble Insulin Inj. I.P  +  M = Human Insulatard Isophane Insulin Inj. I.P]. புரிந்து கொண்டவர் தன்னிடமிருந்த அதே மருந்துப் புட்டிகள்,  ஒரே ஒரு முறை உபயோகித்தபின் தூக்கி எரியும் ஊசி சிரிஞ்ச், பஞ்சு, ஸ்பிரிட் முதலியவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, பஞ்சில் ஸ்பிரிட்டை கொஞ்சமாக ஊற்றி, மருந்து பாட்டில்களின் ரப்பர் மூடிகளைப் பஞ்சால் துடைத்து விட்டு முதலில் A10 [பத்து ml] அளவும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியாக M20 [இருபது ml] அளவும் ஊசியால் அழகாக உறிஞ்சி எடுத்துக்கொண்டார்.  


பிறகு அந்த அம்மாளின் கையில் ஒரு சிறு பகுதியை, ஸ்பிரிட் ஊற்றிய பஞ்சால் துடைத்து விட்டு, துடைத்த இடத்தை கையால் உப்பலாகப் பிடித்துக்கொண்டு, ஊசி மூலம் மருந்தை செலுத்தி விட்டார்.  பிறகு பஞ்சால் ஊசி குத்திய இடத்தை ஓரிரு நிமிடங்கள் அழுத்தி அமுக்கிவிட்டு பஞ்சையும், ஊசி சிரிஞ்சையும் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு கையை அலம்பிக்கொள்கிறார். இந்த வயதான காலத்திலும்,  சற்றும் கை நடுக்கமின்றி அந்த அம்மாவுக்கு வலி ஏதும் தெரியாமல் பெரியவர் ஊசி போட்டு விட்டதை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்து, மன நிம்மதி அடைந்தனர்.


ஊசி போடப்பட்ட அந்த அம்மாவுக்கு உடனடியாக சாப்பிட ஆகாரம் தருவதற்கு ஏற்பாடு செய்கிறார், அந்தப்பெரியவர். ஊசி போட்டு ஆகாரம் உள்ளே சென்ற அந்த அம்மாவுக்கு படபடப்பு அடங்கி முகத்தில் ஒருவிதத் தெளிவு ஏற்பட்டது. 


பெரியவருக்கு அந்த நோயாளியும் மற்றும் ஒரு சிலரும் நன்றி கூறினார்கள். கைவசம் இருந்த நான்கு பாட்டில் ஊசி மருந்துகளை மட்டும், ஆபீஸ் ரூமில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்கச் சொல்கிறார், அந்தப் பெரியவர்.


அனைவரும் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் வழக்கம் போல் ஓரிடத்தில் கூடி அமர்கின்றனர். 
    
“நல்லவேளையாகத் தெய்வம் போல இந்தப்பெரியவர் இங்கு வந்து சேர்ந்துள்ளார். சுகர் பேஷண்ட்டுக்கு ஊசி போட்டுவிட அனைத்து மருந்துகள், ஊசிகள், பஞ்சு, ஸ்பிரிட் என எல்லாமே கைவசம் வைத்துள்ளார். சரியான நேரத்தில் இன்று அந்த அம்மாவுக்கு தெய்வம் போல் உதவினார். ஏற்கனவே ஒரு முறை இதே போல ஊசி போடவும், டிபன் சாப்பிடவும் லேட்டாகி அந்த அம்மாவுக்கு வியர்த்துக்கொட்டி, படபடப்பாகி, மயக்கமே போட்டு விழுந்து, பிறகு நாமெல்லாம் பயந்து போய், ஆஸ்பத்தரிக்கு தூக்கிப்போனோமே” என்று ஒரு சிலர் நினைவு கூர்ந்தனர். 


”அந்தக் கம்பவுண்டர் எப்போ வந்து, எப்போ ஊசி போட்டு, அந்த அம்மா எப்போ டிபன் சாப்பிடுவது? பசியில் துடித்து, மயக்கமாகி அந்த அம்மா பிராணனே இந்நேரம் போய் இருக்கும்; நல்லவேளையாக இந்தப்பெரியவர் ....... ” என்று, மற்றொருவர் தன் வீதத்திற்கு அரட்டை ராமசாமியைப் பார்த்து தூபம் போட ஆரம்பித்தார்.


இதுவரை நடைபெற்ற எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்த நம் அரட்டை ராமசாமி, பெரியவரின் கைகளைப்பிடித்துக் குலுக்கி நன்றி கூறிவிட்டு, தன் பேட்டியைத் தொடரலானார்:


“சார், என்ன . . . . டாக்டராக வேலை பார்த்தீர்களோ?” 


“இல்லை, நான் மிலிடரியில் வேலை பார்த்து ரிடயர்ட் ஆன சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர். காஷ்மீர், அஸ்ஸாம், புனே, பஞ்சாப் என பல இடங்களில் வேலை பார்த்துவிட்டு கடைசியாக சென்னைக்கு வந்து செட்டில் ஆனவன்.”


“அப்படியா ... சர்க்கரை நோயாளிக்கு ஊசி போட்டீர்களே, அதனால் தாங்கள் ஒரு டாக்டரோ என்று சந்தேகப்பட்டேன்.


“நானும் என் மனைவியும் கூட டயபடீஸ் பேஷண்ட்கள் தான். நான் இன்று வரை மாத்திரைகளில் மட்டும் சமாளித்து வருபவன். ஆனால் என் மனைவிக்கு தினமும் இன்சுலின் ஊசி போட வேண்டும்.  


ஆரம்ப காலத்தில் அவளை தினமும் ஆஸ்பத்தரிக்குக் கூட்டிப்போய்த்தான் போட்டு வருவேன். தினமும் காலை எழுந்ததும் டிபன் சாப்பிடுவதற்கு முன்பாக ஆஸ்பத்தரிக்குப் போய் ஊசி போட்டு வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  பிறகு நர்ஸ் ஒருவளை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி ஊசி போட வைத்தேன். அதற்குப்பிறகு அந்த நர்ஸின் அறிவுரைப்படி அவளிடமிருந்து நானே என் மனைவிக்கு ஊசி போடக் கற்றுக்கொண்டேன். 


அதுவும் கடைசி இரண்டு வருஷங்களாக அவளுக்கு இரண்டு வேளைகளும் இன்சுலின் ஊசி போடப்பட வேண்டும் என்று டாகடர் கூறிவிட்டார். அந்த அளவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அவளுக்கு அதிகமாகி விட்டது.


கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்.


“உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்கள், சார்”


“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது? எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” பெரியவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிறுத்தினார்.


”அதெல்லாம் சரி தான். ஆனால் அனாதைன்னு இனிமேல் நீங்கள் சொல்லாதீர்கள். இந்த முதியோர் இல்லத்தில் உள்ள நாமெல்லோரும் இனி ஒருவருக்கொருவர் உறவினர்கள் தான். இந்த முதியோர் இல்லத்தின் காலை டிபன் எப்படியிருந்தது? தங்களுக்குப்பிடித்ததாக இருந்ததா? என்று பேச்சை மாற்றினார் அரட்டை ராமசாமி.


“பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; 


ஆனால் அந்தக்காலத்தில் என் மனைவி எல்லாமே பிரமாதமாகச் செய்வாள். பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி என வாய்க்கு ருசியாக ஏதாவது தினமும் செய்து கொடுத்து அசத்துவாள்;


அவற்றை இப்போது நினைத்தாலும் நாக்கில் ஜலம் ஊறுகிறது. தினமும் மாலை வேளையில் நானும் என் மனைவியும் ஒரு நீண்ட வாக்கிங் போய்விட்டு கப் ஐஸ் சாப்பிட்டு விட்டு வருவோம். அவளுக்கு ஐஸ் கிரீம் என்றால் உயிர். பேமிலி பேக் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்த நாட்களும் உண்டு.


இமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.


தொடரும்
  
இந்தச் சிறுகதையின் தொடர்ச்சி 
வெளியிடப்படும் நாட்கள்:
பகுதி-3 வரும் 31.10.2011 திங்கள் 
பகுதி-4 வரும் 02.11.2011 புதன் 
பகுதி-5 வரும் 04.11.2011 வெள்ளி.

-oOo-





ஓர் புதிய அறிவிப்பு

ஒரு சில நிர்வாகக் காரணங்களால் தமிழ்மணத்தில் அடியேன் நட்சத்திரப் பதிவர் ஆகத் தோன்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நாட்களில் 
சிறிய மாற்றம் செய்துள்ளார்கள்.

அதன்படி வரும் 07.11.2011 திங்கள் முதல் 
13.11.2011 ஞாயிறு வரை எனக்கு 
”நட்சத்திரப்பதிவர்” 
என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் 
என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் தங்கள்



வை. கோபாலகிருஷ்ணன்

42 கருத்துகள்:

  1. நச்சத்திர பதிவருக்கு வாழத்துக்கள் ஐயா.......

    பதிலளிநீக்கு
  2. அந்த மாதிரி பெரியவர் ஊசி போடும்போதுதான் ஏதோ தவறு நிகழ்ந்து மனைவி இறந்து விட்டதாகப் பிள்ளைகள் குற்றம் சாட்டியிருக்கப் போகிறார்கள்! அப்புறம் இங்கு விடுதியில் இருப்பவர்களும் இவரிடம் ஊசி போடுவதற்கே பயப்படுவார்களே..!!

    பதிலளிநீக்கு
  3. எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” /

    ஆழ்ந்த பொருளுடன் வாக்கு!.

    பதிலளிநீக்கு
  4. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” /

    அவரர் வாழ்க்கையில்
    ஆயிரம் ஆயிரம் வந்தகால வண்ணங்கள் கூடிய எண்ணங்கள்..

    பதிலளிநீக்கு
  5. பேமிலி பேக் வாங்கி வந்து குளிர் சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்த நாட்களும் உண்டு./

    தித்திக்கும் மலரும் நினைவுகள் ..அருமையாக ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை எனக்கு ”நட்சத்திரப்பதிவர்” என்ற அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்../

    பிரகாச்மான ஜொலிக்கும் தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. நாங்களே நட்ச்சத்திரப் பதிவராக
    தேர்ந்தெடுக்கப் பட்டதைப் போல்
    உணர்கிறோம்.மிக்க மகிழ்ச்சி
    கதை மிகப் பிரமாதமாக தொடர்கிறது
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    பதிலளிநீக்கு
  8. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள் பாஸ்......

    கதையும் அருமையாக கொண்டு போறீங்க

    பதிலளிநீக்கு
  9. //எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்//கதையின் களம் , போக்கு, உரையாடல்கள் மிக அருமையாக செல்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. அருமையான மருத்துவ குறிப்புகள், சமையல் பற்றிய விவரங்கள் கதை அழகாக நகர்கிறது.அந்த பெரியவரின் கதையை தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் சாப்பாடு பதிவு ஞாபகம் வந்து விட்டது!! அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறோம்!!

    நீங்கள் எப்பவுமே நட்சத்திரப் பதிவர் தானே, தமிழ் மணத்தில் தாமதமானால் என்ன?!!

    பதிலளிநீக்கு
  12. ஆழ்ந்து அனுபவித்து கூர்ந்து எழுதுகிறீர்கள்.பராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப சுவாரஸ்யமாக போகின்றது.அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்...

    பதிலளிநீக்கு
  15. போங்க வை.கோ. நாங்க இருக்கோம் பின்னால வர. நல்ல ஓட்டம்.
    ஐயா தங்கள் அறிவிப்பு மிக பயனுள்ளதாக் உள்ளது. அதாவது பதிவிடப்போகும் நாட்களை அறிவித்தது. வந்து பார்த்து ஏமாறவும் வேண்டாம். இரு நாட்கள் பார்த்து விட்டு பார்க்காமல் விட்டு விடவும் வேண்டாம். இது போல எல்லோரும் செய்யலாமே... நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நோயாளிகள், மருத்துவக் குறிப்புகள் என்று கதையைப் பிண்ணியுள்ள விதம் அழகாக....

    பதிலளிநீக்கு
  17. நச்சத்திர பதிவருக்கு வாழத்துக்கள் ஐயா.......

    பதிலளிநீக்கு
  18. மருத்துவ குறிப்புகள், சமையல் பற்றிய விவரங்கள் கதை அழகாக நகர்கிறதுஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் ......

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள்.

    தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  20. பதிவுலக நட்சத்திரமே இன்னும் பல முறை ஜொலிக்க வாழ்த்துக்கள்...........

    பதிலளிநீக்கு
  21. //எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். // உண்மை...


    நட்சத்திர பதிவர் ஆனதற்கு மீண்டும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  22. நட்சத்திரப் பதிவர் ஆக தேர்ந்தெடுத்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கு.. தகுதியான நபரைத்தான் செலக்ட் செய்திருக்கிறார்கள்.. உணர்வுபூர்வமாய் கதை நகர்த்திப் போகிறீர்களே..

    பதிலளிநீக்கு
  23. கதையின் ஓட்டமும்
    கதைச் சூழலும்
    வெகு அருமை ஐயா

    தமிழ்மண நட்சத்திர தேர்வுக்கு நீங்கள்
    மிகவும் தகுந்தவர், தாமதமாகவே வந்துவிட்டது.......

    பதிலளிநீக்கு
  24. கதை அருமையாக எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யமாக செல்கிறது .நாங்களும் தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  25. எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” /

    வாசங்கள் பிரமாதம்!
    உள்ளார்ந்த சோகத்துடன் கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது!

    பதிலளிநீக்கு
  26. காது அருமையா இருக்கு
    அடுத்த பகுதிக்காக காத்திருகிறோம்

    பதிலளிநீக்கு
  27. முதுமையும் ஒரு நோய் தான் என்று நினைப்போருக்கு இந்த இரண்டாது பாகம் ஒரு மருந்தாய் (டயபடிக்குக்கு) தொடர்ந்திருக்கீங்க சார்....

    ஒரு பொருளையோ அல்லது ஒரு கருத்தையோ பற்றி சொல்லும்போது அதைப்பற்றிய விவரங்கள் முழுதும் அருமையாய் அலசி ஆராய்ந்து முழுமையாக தரும் ஒரு அசாத்திய பேர்வழி சார் நீங்கோ... முதியோருக்கு வரும் இயல்பான நோய்களில் சுகரும் ஒன்று.... ஆமாம்.... அதில் நிறைய பேருக்கு இன்சுலின் போட்டுக்கிற அளவுக்கு அதிகமாக இருக்கும்... அவர்களால் பசி தாங்கமுடியாது... அது மட்டுமில்லாமல் சாப்பிடும் முன்னர் இன்சுலின் போட்டுக்கணும்.... நுணுக்கமாக டயபடிக் மருத்துவம் பற்றிய விவரங்களை கதையின் ஊடே விவரமாக பதிந்தது படிப்போர் அனைவரும் பயன் பெறும்படி இருந்தது சார்.... நம்ம ஹீரோ ( ஆமாம் முதல் பாகம் படிக்கும்போதே புது அட்மிஷனான பெரியவர் இரண்டாம் பாகத்திலேயே முதியோர் இல்லத்தில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு சரியான நேரத்தில் இன்சுலின் ஊசி மருந்தை ஏற்றி அதை செலுத்தி உயிர் கொடுத்திருக்காரே... அதனால் அங்க இருப்போரை இம்ப்ரெஸ் பண்ணிட்டார்... அவர் மருந்தை எடுத்து படித்து கவனமாக செலுத்தி அவரை மயக்கத்துக்கு போகவிடாமல் காத்ததை படித்த வாசகர்கள் எங்களையும் இம்ப்ரெஸ் பண்ணிட்டார்....நார்மலா ஒரு கதையாசிரியர் எப்படி எழுதுவார்?? ஊசி இருக்கா மருந்து இருக்கா என்று கேட்டு வாங்கி படித்து ஊசி போட்டார் என்று எழுதுவார்...

    ஆனால் உங்களுக்கே உரிய விதத்தில் ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது படிப்பவர்கள் முழுமையாக அந்த விஷயத்தின் முழு விவரங்களை அறிவதற்காக பகிர்ந்திருக்கிறீர்கள்.. அதற்கு உங்களுக்கு சல்யூட் சார்....

    எப்படி எப்படி எப்படி புதுசா வந்த மனிதர் இத்தனை சீக்கிரமா ஹீரோ ஆகிட்டாரேன்னு எல்லோருடைய பார்வையும் அவர் பக்கம் திரும்பினால்.. அவர் ரொம்ப சாதாரணமாக தன் மனைவியின் நினைவுகளில் மூழ்கி.... தன் மனைவியும் தானும் டயபடிக் பேஷண்ட்ஸ் தான் என்றும்... இன்சுலின் போட மனைவியை ரொம்ப தூரம் அழைச்சுட்டு போகணும். வீட்ல நர்ஸ் வைத்தோம் அவர் உதவியால் கத்துண்டேன்னு சொல்றச்சே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள், திருமதி மஞ்சுபாஷிணி மேடம்.

      இந்தக்கதையின் இரண்டாவது இந்தப் பகுதியைப் போலவே தங்கள் பின்னூடமும் அமைந்துள்ளது, தனிச்சிறப்பாக உள்ளது.

      அடேங்கப்பா! எவ்வளவு ரஸித்து மகிழ்ந்துபோய் .... ஏராளமாக .... தாராளமாக ... எழுதியுள்ளீர்கள் !!

      //ஒரு பொருளையோ அல்லது ஒரு கருத்தையோ பற்றி சொல்லும்போது அதைப்பற்றிய விவரங்கள் முழுதும் அருமையாய் அலசி ஆராய்ந்து முழுமையாக தரும் ஒரு அசாத்திய பேர்வழி சார் நீங்கோ...//

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //ஆனால் உங்களுக்கே உரிய விதத்தில் ஒரு விஷயம் பற்றி சொல்லும்போது படிப்பவர்கள் முழுமையாக அந்த விஷயத்தின் முழு விவரங்களை அறிவதற்காக பகிர்ந்திருக்கிறீர்கள்.. அதற்கு உங்களுக்கு சல்யூட் சார்....//

      தங்களுக்கும் பதிலுக்கு ..... என் ராயல் சல்யூட்! ;)))))

      பிரியமுள்ள.
      VGK

      நீக்கு
  28. படிக்கும் வாசகர்கள் கேள்விகள் எழுப்பாதவாறு அவர் மூலமாகவே அந்த விவரங்களை பகிர்ந்த சாமர்த்தியம் கதாசிரியரான உங்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன் சார்....

    வயசானவா காத்திருக்காரே ஊசிக்கு என்ற யோசனை சிறிது கூட இல்லையே அந்த கம்பௌண்டருக்கு?? படிக்கிற எனக்கு கோபம் வர்றது.... ஒரு வேலை செய்தால் அதை பர்ஃபெக்டாக செய்ய இந்த கம்பௌண்டர் முனைவதில்லையே...

    அனாதை :( முதியோர் இல்லத்தில் ஒவ்வொருவரும் முதல்முறை வந்து அடைக்கலமாகும்போது ஏற்படும் ஒரு பரிதாப உணர்வு தன் மனதில் தோன்றும் ஏக்கமான எண்ணம் இந்த அனாதை என்ற வார்த்தை :( எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை... எல்லா சொந்தங்கள் இருந்தும் தனியாய் ஒரு முதியோர் இல்லத்தில் முகம் தெரியாத அந்நியர்களுடன் வாழ்க்கையின் கடைசி நாட்களை நகர்த்தும் கொடுமை..... வயிற்றில் ஆசை ஆசையாக சுமந்து பெற்று அவன் வளர்ச்சியில் பூரிப்படைந்து இன்று அவன் கையாலேயே வீசி எறியப்பட்ட காகிதமாய் ஒரு ஓரத்தில் கிடக்கும் சுயபச்சாதாபம்..... கொண்டு வந்து விட்டப்பின் திரும்பி கூட பார்க்க நினைக்காத சுயநலக்கிருமிகளை பெற்ற வயிற்றை ஆதரவாய் தடவிக்கொண்டு தன் தனிமையை போக்கிக்கொள்ளும் வழி தெரியாத ஆயாசம்..... இத்தனை செய்தும் பிள்ளையை சபிக்கவோ திட்டவோ கோபப்படவோ தெரியாத அம்மாஞ்சித்தனமும் பாசமும்.....ஹூம்..... அனாதையாக தன்னை நினைக்கவைக்கும் உச்சக்கட்ட வேதனை......

    நினைவுகள் மட்டும் என்றும் இளமையாகவே இருக்கிறது எல்லோருக்கும்.... மனைவி செய்யும் விதம் விதமான பண்டங்கள்....பால் பாயஸம், நெய் மணமும் முந்திரி மணமும் கமழும் ரவா கேஸரி, தேங்காய்+ஏலக்காய்+வெல்லம் கலந்து செய்யும் இனிப்பு போளி, பெருங்காய மணத்துடன் காரசாரமாகச் செய்யும் அடை, தேங்காய் துவையல், நெய்யில் வறுத்த முந்திரி கலந்த தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பொரித்த அரிசி அப்பளம், வடகம், ஒட்டலுடன் கூடிய குழம்புமா (பச்சரிசி மாவு) உப்புமா, பஜ்ஜி, வடை, கெட்டிச்சட்னி வை.கோபாலகிருஷ்ணன் சார் என்னது இதெல்லாம்?? என்னதுன்னேன்... இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச ஐட்டங்களாக இருக்கு என்று தோன்றுகிறதே.....படிக்கும்போதே நாக்கில் உமிழ்நீர் சுரப்பதை உணரமுடிகிறது... இத்தனையும் மனைவி சமைத்ததை பெருமையாக சொல்லும்போதே அன்பாய் பகிர்ந்த அந்த மறைந்த அன்னப்பூரணியை நினைத்திருப்பார்.. இத்தனை குழந்தையாய் உலகத்தில் தனியாய் வாழத்தெரியாத என்னை விட்டுட்டு போயிட்டியே என்று அழுது அரற்றி இருப்பார்... பெரியவரின் தலையணை கண்ணீர் அவர் மனைவியின் நினைவுகளை சொல்லி இருந்திருக்கும் கண்டிப்பாக.... கணவன் மனைவியின் பந்தம் இளமையில் இருப்பதை விட முதுமையில் தான் அதிக பலப்படுவது.. அன்பும் புரிதலும் அப்போது தான் இருவருக்குமே அதிகமாக தேவைப்படுவதும்.. பெற்ற பிள்ளைகளை எதிர்ப்பார்க்காது வாழ்ந்துவிட முடியும் ஆனால் இணையை பிரிந்து வாழும் கொடுமை... ஹுஹும்.. இந்த நரகத்தை விட மரணம் மேல் என்ற முடிவுக்கும் வந்திருப்பார் பெரியவர்.... அருமையான உவமையை இடைச்செருகலாய் தந்தது திடுக்கிடவைத்தது..... திருமுந்தியோ எண்ணை முந்தியோ அட்டகாசம் சார் .... எப்படி யோசிக்கிறீங்க யப்ப்ப்ப்பா....

    சார் உங்க கதையில் தாத்ப்ரியமான ஒரு அன்பை, கணவன் மனைவியின் மனநெகிழ்வை, ஒருவரில்லாத மற்றொருவரின் கொடுமையான நிமிடங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது....

    கதையின் போக்கு பெரியவரின் உள் மனதை ஆராய முற்பட்டுவிடுமோ என்ற அவசரத்தனம் அதிகரிக்கிறது.. சுவாரஸ்யத்தில் குறைவில்லாது அதே சமயம் படிப்போருக்கு உற்சாகத்திற்கு குறைவில்லாது கதையை நகர்த்தும் விதம் மிக மிக மிக அசத்தல்...

    அடுத்த பாகத்தில் இன்னும் என்னென்ன சொல்லப்போகிறாரோ எத்தனை ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ என்ற காத்திருப்பு தொடங்கிவிட்டது....

    அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்.... அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  29. மஞ்சுபாஷிணி September 11, 2012 11:41 PM தொடர்ச்சி....

    //படிக்கும் வாசகர்கள் கேள்விகள் எழுப்பாதவாறு அவர் மூலமாகவே அந்த விவரங்களை பகிர்ந்த சாமர்த்தியம் கதாசிரியரான உங்களை ஆச்சர்யமாக பார்க்கிறேன் சார்....//

    எக்ஸ்ப்ரஸ் ரயில் வண்டிப்பெட்டிகள் போன்ற தங்களின் தொடர் பின்னூட்டங்களையும், கதாசிரியரின் சாமர்த்தியத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும் தங்களையும், நானும் ஆச்சர்யமாகத்தான் பார்க்கிறேன்.

    பெரியவரின் நிலைமையை உணர்ந்து அவருக்கு சாதகமாகப் பேசியுள்ள தங்களின் மிக உருக்கமான கருத்துக்கள் என்னை வியக்கச் செய்தன.

    //அன்பும் புரிதலும் அப்போது தான் இருவருக்குமே அதிகமாக தேவைப்படுவதும்.. பெற்ற பிள்ளைகளை எதிர்ப்பார்க்காது வாழ்ந்துவிட முடியும் ஆனால் இணையை பிரிந்து வாழும் கொடுமை... ஹுஹும்.. இந்த நரகத்தை விட மரணம் மேல் என்ற முடிவுக்கும் வந்திருப்பார் பெரியவர்....//

    தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது மிகவும் நியாயமான சொற்கள். அனுபவித்தவர்களாலேயே இதன் ஆழத்தினை உணரமுடியும்.

    //சார் உங்க கதையில் தாத்ப்ரியமான ஒரு அன்பை, கணவன் மனைவியின் மனநெகிழ்வை, ஒருவரில்லாத மற்றொருவரின் கொடுமையான நிமிடங்களை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது....//

    ஜோடியில் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ்வது என்பது நினைத்தே பார்க்க முடியாத கொடுமையிலும் கொடுமை தான், மேடம்.

    //சுவாரஸ்யத்தில் குறைவில்லாது அதே சமயம் படிப்போருக்கு உற்சாகத்திற்கு குறைவில்லாது கதையை நகர்த்தும் விதம் மிக மிக மிக அசத்தல்...//

    தங்களின் மிக நீ...ண்...ட... இந்தக் கருத்துரையும் மிக மிக அசத்தலோ அசத்தல் தான், என் நன்றியோ நன்றிகள்.

    பிரியமுள்ள,
    VGK

    பதிலளிநீக்கு
  30. டயாபடீஸ் நோயாளிகள் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  31. தமிழ் மணம் உங்களை நட்சத்திர பதிவராக அறிவிக்கும் முன்பே எங்கள் எல்லார் மனதிலும் துருவ நட்சத்திரளாக நீங்க ஜொலிக்குறீங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 19, 2015 at 6:11 PM

      வாங்கோ சிவகாமி, வணக்கம்.

      //தமிழ் மணம் உங்களை நட்சத்திர பதிவராக அறிவிக்கும் முன்பே எங்கள் எல்லார் மனதிலும் துருவ நட்சத்திரமாக நீங்க ஜொலிக்குறீங்களே.//

      அடேங்கப்பா ! சிவகாமியா கொக்கா !!

      தன்யனானேன். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  32. சரியான சாப்பாட்டு ராமர் இல்லை, இல்லை சாப்பாட்டு ரசிகர் நீங்கள்.

    மனிதாபிமானம், நகைச்சுவை, சர்ரென்ற திடீர் திருப்பம், நல்லதொரு கரு, சரளமான உரைநடை, மிகப் பொருத்தமான தலைப்பு, சில நேரங்களில் பொருத்தமான படங்கள் எல்லாம் சேர்ந்ததொருகலவை தான் உங்கள் சிறுகதைகள்.

    வெல்லப் பிள்ளையாரைப் போல் முழுவதும் இனிக்கிறது உங்கள் கதைகள்.

    பதிலளிநீக்கு
  33. ஓ... மிலிட்டரி காரவுகளா. பளச நெபனப்ப வநதிடுச்சோ. அரட்ட ஆளு விடாம வெசயத்த கரந்துடுவாங்க போல.

    பதிலளிநீக்கு
  34. பெரியவரின் மலரும் நினைவுகள் நெகிழ்ச்சி. அவரும் அவர் மனைவியும் வரும்பி சாப்பிடும் ஐட்டங்கள் படித்து உடனே சாப்பிட ஆசை. ஒருவருக்கொருவர் பேசி தங்கள் மன உணர்வுகள் பாரங்களை பகிர்ந்து கொள்வது நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  35. முதியோர் இல்ல காட்சி அமைப்பு...ஹீரோவின் பிளாஷ் பேக் அருமை...எண்ட் கார்ட் எப்புடி வருதுன்னு...

    பதிலளிநீக்கு
  36. //அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.
    //தாக்கமும் ஏக்கமும் அருமையாய் வெளிப்படுகின்றன்! தொடர்வோம்!

    பதிலளிநீக்கு