என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 14 மார்ச், 2014

VGK 09 ] அ ஞ் ச லை




இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 20.03.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 
[ V A L A M B A L @ G M A I L . C O M  ] 

REFERENCE NUMBER:  VGK 09

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:



அஞ்சலை

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்





[1]

அந்தச்சேரிப்பகுதி குடிசை ஒன்றின் வாசலில், மிகவும் ஊர்ந்து சென்று நின்றதில் புத்தம் புதிய, அந்த தக்காளி நிற மாருதி கார், மேலும் கூடுதல் அழகாக இருப்பது போலத்தோன்றமளித்தது.

காலைவேளைக்கதிரவனின் ஒளி, டிரைவர் சீட்டின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் பட்டுப்பிரதிபலித்தது. சேரியில் சைக்கிளின் பழைய டயர்களை ஒரு சிறிய குச்சியால் தட்டி வண்டியாக ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் காரைச்சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்தனர்.  அதில் ஒருசிலர் அந்தக்காரை ஆசையுடன் தொட்டுப்பார்த்தனர். அவர்களின் புழுதி படிந்த கைரேகைகள் ஆங்காங்கே திருஷ்டிப்பொட்டு போல அந்தக்காரின் உடம்பில் பதிந்தன.

தன் குடிசையிலிருந்து வெளியில் வந்து எட்டிப்பார்த்த அஞ்சலைக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. 

“சாமீ.... நீங்க ஏன் சாமீ இந்தக்குடிசைக்கெல்லாம் வரணும்?  சொல்லி அனுப்பியிருந்தால் நானே ஓடியாந்திருப்பேனில்ல. சரி வந்துட்டீங்க.... வாங்க” எனச்சொல்லி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, எதிர்புறம் இருந்த டீக்கடைக்கு ஓடிப்போய், ஒரு கால் மட்டும் சற்றே நொடிக்கும், மர ஸ்டூல் ஒன்றை இரவல் வாங்கியாந்து, தன் சேலைத்தலைப்பால் அழுத்தித் துடைத்துவிட்டு, குடிசை வாசலில் போட்டுவிட்டு, அமரும்படி வேண்டினாள்.  

அக்கம்பக்கத்து குடிசை வாழ் மக்களின் பார்வை முழுவதும் இவர்கள் மேலேயே இருந்ததால், சிவகுருவுக்கு சற்று சங்கடமாக இருந்தது.  அதை உணர்ந்த அஞ்சலை மர ஸ்டூலுடன் குடிசைக்குள் நுழைந்து “மெதுவா குனிஞ்சு வாங்க....சாமீ” என்று உள்ளே அழைத்தாள்.

குடிசை வீடு ஒன்றுக்குள் முதன் முதலாகப்போன சிவகுருவுக்கு அதன் அமைப்பு மிகவும் வியப்பாக இருந்தது. 

நான்கு பக்கங்களும் மண்ணால் எழுப்பப்பட்ட குட்டிச் சுவர்கள். சாணத்தால் மொழுகிய மண் தரை மாட்டுக்கொட்டகையை நினைவுபடுத்தியது.  மேல் புறம் மூங்கில் குச்சிகள் கொடுத்து,  தென்னம் ஓலைகளாலும் முழுவதுமாக வேயப்பட்ட கூரைப்பகுதி. 

இடதுபுறம் இருந்த சமையலறைப்பகுதிக்குச் சிறிய குட்டையானதொரு தடுப்புச்சுவர். ஒரு மூலையில் ஏதோவொரு ஸ்வாமி படம். படத்தின் தலையில் அன்றே பறித்ததோர் செம்பருத்திப்பூ. படத்தின் கீழே அழகியதோர் சிறிய கோலம். அருகில் அழகாக ஏற்றி முத்துப்போல பிரகாசிக்கும் ஒரு மிகச்சிறிய அகல் விளக்கும், அதனருகே, ஒரு எண்ணெய் பாட்டிலும், தீப்பெட்டியும்.

வலதுபுற ஓரமாக கயிறுகள் தளர்ந்து தொங்கிய வண்ணம் ஒரு கயிற்றுக்கட்டில். அதன் மேல் ஒரு பனை ஓலை விசிறி. குடிசையின் மேல்பகுதி மூங்கில்களில் தொங்கும் நீண்ட S வடிவக்கொக்கிகள்.  அவற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இரண்டு லாந்தர் விளக்குகள்.

மற்றொரு மூலையில் 4 செங்கல்கள் மட்டும் வைத்து அதன் நடுவில் ஆற்றுமணல் பரப்பி, அந்த மணல் மேட்டின் மேல் ஒரு ஈரத்துணி சுற்றிய மண் பானை, மூடியுடன். அதன் மீது அந்தப்பானைக்கு கிரீடம் வைத்ததுபோல கவிழ்ந்த நிலையில் ஒரு அலுமினியக் குவளை.  

குடிசையின் வாசல்புறம், கொல்லைப்புறம் என்று இருபுறமும் மூங்கில் ப்ளாச்சுகளில் பனை ஓலையால் வேயப்பட்டு எப்போதும் திறந்த நிலையில் கதவுகள் போன்ற அமைப்பு ஒன்று இருந்ததால், அவையே அந்தக்குடிசை வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றும் வர உதவின.




”மண் குடிசை ... வாசலென்றால் ... தென்றல் வர ... மறுத்திடுமோ”, என்ற வாத்யார் படப்பாடலை, சிவகுருவின் வாய், அவரையறியாமலேயே முணுமுணுத்தது.   

கயிற்றுக்கட்டிலின் அருகே, சாயம் போன நீல நிற சேலை ஒன்றில், கயிற்றால் கட்டப்பட்டுத் தொங்கும் தூளி. வாயில் இரண்டு விரல்களைச்சூப்பியவாறு, சுகமாகத்தூங்கும், எட்டு மாதங்களே ஆன கொழுகொழுக்குழந்தை. 

குடிசை முழுவதும் இப்படி நோட்டம் விட்ட சிவகுருவுக்குத் தான் வந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற சிறு தடுமாற்றம்.



 


[2]

அஞ்சலைக்கு வயது இருபத்து ஐந்துக்குள் தான் இருக்கும். மிகவும் அடக்கமானவள். சற்றே சுமாரான நிறமானாலும் கம்பீரமான வசீகர உடல்வாகு. கடந்த ஒரு வருடமாகத்தான், அவளுடன் சிவகுருவுக்குப் பழக்கம். 

வீட்டைப்பராமரிப்பதில் அவளுக்கு நிகர் அவளே. மனதிலும் செயலிலும் சுத்தமானவள். அவள் பாத்திரங்களைக்கழுவி வைத்தால் ஒரு வரவரப்போ, எண்ணெய்ப்பிசுபிசுப்போ இல்லாமல் அவை அப்படியே டால் அடிக்கும். துணிமணி துவைத்தாலும், அப்படியே பளிச்சென்று இருக்கும். 

ஃபிரிட்ஜ், டி.வி. ஷோகேஸ், கம்ப்யூட்டர், ஜன்னல்கள், கதவுகள் என எல்லாவற்றையும் தூசி இல்லாமல் துடைத்து, ஒட்டடை அடித்து,  பாத்ரூம் கழுவி, வீட்டைப்பெருக்கி, வாரம் ஒருமுறை தரையை அலம்பித்துடைத்து, அற்புதமாக வைக்கக்கூடியவள். 

நாணயம், நம்பிக்கை பற்றியோ கேட்கவே வேண்டாம். பீரோக்கள் எல்லாவற்றையும், திறந்து போட்டுவிட்டு, வீட்டு சாவியையும் அவளிடமே ஒப்படைத்து விட்டு, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் நாம் போய் விட்டு, நிம்மதியாக வரலாம். 

ஒருமுறை துவைக்கப்போட்ட சட்டைப்பையிலிருந்து அறுநூறு ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொடுத்தவள். ஒரு நாள் வீட்டைக்கூட்டி சுத்தம் செய்யும் போது, பெட்ரூம் கட்டிலின் கீழ் சுவர் ஓரமாக கிடந்த இரட்டைவடம் தங்கச்சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்தவள். 

வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள், மளிகை சாமான்கள் முதலியன வாங்கித் தருபவளும் அவளே. ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, ஆயிரம் வேலைகளை செய்து கொடுத்து, நல்ல பெயர் எடுத்தவள். 

அடுத்த மாதம் முதல் அஞ்சலைக்குத் தந்துவரும் மாதச்சம்பளத்தை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயர்ந்த இருந்த நேரம் பார்த்துத்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து விட்டது.  

வீட்டு வேலைகளை மிகவும் சிறப்பாகவும், சீக்கரமாகவும் முடித்து விட்டு, பகலில் “அத்திப்பூக்கள்” ளும், இரவில் “நாதஸ்வரம்” மும் டி.வி. யில் பார்த்துவிட்டுத்தான் தன் வீட்டுக்குப் புறப்படுவாள். வாடகைத்தாயாக நடிக்கும் ’கற்பகம்’ என்ற கதாபாத்திரத்தை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். 
இது நான் ஏப்ரல் 2011 இல் என் பதிவினில் வெளியிட்ட கதை 
என்பதை இங்கு  தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அத்திப்பூக்களும், நாதஸ்வரமும் அந்தக் காலக்கட்டத்தில்
தொலைகாட்சியில் காட்டப்பட்ட மெகா சீரியல் தொடர்களாகும்.}

அஞ்சலை வராமல் தன் வீடு கடந்த ஒரு மாதமாக தவித்துத்தத்தளித்து வருவதை ஒரு நிமிடம் நினைத்துப்பார்க்கிறார், சிவகுரு. பாவம் அவர் மனைவி மல்லிகா. அவளுக்கு எப்போதும் வயிற்றுப்பகுதியில் ஏதோவொரு பிரச்சனை. அடிக்கடி சுருட்டிப்பிடித்து வலி வந்துவிடுகிறது. அதற்கான தொடர் சிகிச்சை எடுத்து வருபவள்.

குழந்தைப் பைத்தியமான அவளுக்கு இதுவரை குழந்தை ஏதும் பிறக்கவில்லை. தற்சமயம் கருத்தரித்து குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவளுக்கு வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக நாளடைவில் சரிசெய்ய வேண்டியிருப்பதாகவும் அந்த லேடி டாக்டர் சிவகுருவுக்கு மட்டும் தெரியப்படுத்தியிருந்தார்கள். 

இப்போது உள்ள பல்வேறு பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரிசெய்த பிறகு, தானே அவளுக்குத் தேவையான மற்ற சிகிச்சைகள் மேற்கொண்டு, குழந்தை பாக்யம் கிடைக்கச்செய்வதாகவும்,  இதற்கெல்லாம் குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம் என்றும், அதே லேடி டாக்டர் சிவகுருவிடம் சொல்லியதில், அவருக்கு சற்றே ஆறுதலாகவும் மனநிம்மதியாகவும் இருந்து வருகிறது. 

இவ்வாறு உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் குறைந்த மல்லிகாவால், அவ்வளவு பெரிய தன் வீட்டை, அஞ்சலையின் உதவியின்றிச் சரியாக பராமரிக்க முடியவில்லை.



  

[3]

”சொல்லுங்க சாமீ .... ஏதாவது ஜில்லுனு குடிக்க உங்களுக்கு சர்பத் வாங்கியாரட்டா? அம்மா நல்லா இருக்கங்களா?” என்று கேட்டாள் அஞ்சலை.

”சர்பத்தெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா, குடிக்க பானைத்தண்ணி கொடு போதும்; நானும் அம்மாவும் நல்லாத்தான் இருக்கோம். ஒரு மாதமா நீ ஏன் வீட்டுப்பக்கமே வரலை?  மேற்கொண்டு என்ன செய்வதாய் இருக்கிறாய்? 

ஏதோ நடக்கக்கூடாதது தான். போதாத காலமும் ஆகாத வேளையும் இப்படி சோதனையா நடந்து போச்சு. அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படிம்மா?” ஒரு வித வாஞ்சையுடன் வினவினார் சிவகுரு.

”நீங்களும் அம்மாவும் அன்னிக்கு இராமேஸ்வரத்துக்கு அவசரமா ஏதோ வேண்டுதல்ன்னு புறப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, என் புருஷன் ஆஸ்பத்தரியிலே தீவிர சிகிச்சைப் பிரிவுலே தன் உயிருக்குப் போராடிக்கிட்டு கிடந்தாரு. 

அப்போ நல்லவேளையா, நீங்கதான் தெய்வம் மாதிரி சுளையா நாலாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போனீங்க. அந்தப்பணத்துல கால் பகுதிக்குமேல் அந்த ஆஸ்பத்தரி நாயிங்க ஈவு இரக்கமே இல்லாமல் பிடுங்கி பங்கு போட்டுக்கிட்டாங்க. 

போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, ஒருவழியா அவங்ககிட்டேயிருந்து ’பாடி’யை வாங்கி சொச்ச காரியங்களைப் பார்க்க செலவழித்தது போக மீதிப்பணம் ஏதோ கொஞ்சம் இருந்திச்சு. 

இந்த மாசம் பூராவும் நான் வேலைக்கு எங்கும் போகாததாலே, அந்த மீதிப்பணம் தான், ஏதோ எனக்குக்கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும், என் புள்ளைக்கு பால் வாங்கிக்கொடுக்கவும், இன்னிக்கு வரைக்கும் உதவியாய் இருக்குது.

இந்தப் போலீஸ்காரங்களும், அரசாங்க அதிகாரிங்களும் அடிக்கடி வந்து ஏதேதோ விசாரணை பண்ணிட்டுப்போறாங்க. மேற்கொண்டு என்ன செய்யறதுண்ணு ஒண்ணுமே புரியலே .... சாமீ.

நீங்க தான் கடவுள் மாதிரி எவ்வளவோ தடவை பணம் காசு கொடுத்து, எனக்கு உபகாரம் செய்துகிட்டு இருக்கீங்க. அந்தக்கடனையெல்லாம் இந்த ஜென்மத்திலே நானு எப்படி அடைப்பேன்னு தெரியலை சாமீ.

என் புருஷன் இருந்தவரைக்கும் பகல் பொழுதிலே இந்தப்புள்ளைய அவரு பார்த்துக்கிட்டு, நைட்டுலே வாட்ச்மேன் வேலைக்குப்போயிட்டிருந்தாரு. இப்போ நானும் வேலைக்குப்போனா, இந்தப்புள்ளைய யாரு பார்த்துப்பாங்கன்னு வேறு புரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். 

இதுக்கு நடுவிலே பட்டணத்துலேந்து ஒருத்தர் வந்தாரு. இந்தக்குழந்தையைக் கொடுத்துடறா இருந்தா, முழுசா பத்தாயிரம் ரூபாய் வாங்கித்தந்துடுவாராம். நல்லா யோசனை பண்ணி வைய்யீன்னு சொல்லிவிட்டுப் போய் இருக்காரு. 

எப்படீங்க கஷ்டப்பட்டு பெத்து வளர்த்த புள்ளையப்போயீ மனசோட விக்க முடியும்?” கண்ணீர் விட்டவாறே புலம்பித்தீர்த்தாள் அஞ்சலை.    

அவளின் சோகக்கதையைக்கேட்டதும் சிவகுருவுக்கும் கண்ணீர் வந்துவிடும் போல வருத்தமாகவே இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.  

எதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை .... நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.  

”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார்.  

அஞ்சலையின் புருஷனை இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த ஞாபகம் சிவகுருவுக்கு. 

ஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்.



   


[4]

தூளியிலிருந்த குழந்தை, அடியில் போடப்பட்டிருந்த கெட்டித்துணியில் ஈரத்தைச் சொட்டவிட்டு சிணுங்க ஆரம்பித்தது. அஞ்சலை தன் குழந்தையைக் கையில் எடுத்து, தண்ணீர் தெளித்து துணியால் துடைத்தவாறே தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள். 

இந்த ஏழைக்குடிசையில் பிறந்துள்ள அந்தக்குழந்தை, அழகோ அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது சிவகுருவுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அங்கிருந்த ஓலையால் செய்யப்பட்ட கிலுகிலுப்பையை எடுத்து சிவகுரு குழந்தைக்கு ஆட்டிக்காண்பித்ததும், அது கடகடவென்று வாய்விட்டுச்சிரிக்க ஆரம்பித்தது.

“டேய்....உன் பெயர் என்னடா?” என்று கேட்டபடி அதன் கன்னத்தைத்தொட்ட சிவகுருவிடம் சிரித்தவாறே அது தாவிச்சென்றது. 

பிறகு அவர் முகத்தையே உற்றுப்பார்த்த அது, அவரின் கோல்ட் ஃப்ரேம் போட்ட மூக்குகண்ணாடியை தன் பிஞ்சு விரல்களால் கழட்டி, தன் கையில் பிடித்து வாயில் வைத்துக்கொள்ளப்போனது. 

“பார்த்து......சாமீ.....கீழே போட்டு உடைச்சுடப்போவுது” என்று பதறினாள் அஞ்சலை. அவர் தன் மூக்குக்கண்ணாடியை, அதன் பிடியிலிருந்து ஒருவாறு கஷ்டப்பட்டுக் காப்பாற்றியதும், அவர் சட்டைப்பையில் குத்தியிருக்கும் பேனாவை எடுக்கக் குனிந்து முயன்றது. 

அந்தக்குழந்தையின் சுறுசுறுப்புடன் கூடிய குறும்புத்தனம் சிவகுருவுக்கு மிகவும் பிடித்துப்போனது. தன்னிடம் இருந்த செல்போன் கேமராவினால், தன்னுடன் சேர்த்து அந்தக்குழந்தையையும் பலவித போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.

பிறகு அஞ்சலையுடன் அந்தக்குழந்தையையும் கூட்டிக்கொண்டு தன் காரில் வெளியே எங்கோ புறப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தை அஞ்சலையிடம் தெரிவித்த சிவகுரு, தன் காரை நோக்கிச்செல்லலானார்.

மர ஸ்டூலை எதிர்புற டீக்கடையில் நன்றி சொல்லி பொறுப்பாக ஒப்படைத்து விட்டு, தன் குடிசைக்கதவுகளை சாத்தி, நாய் ஏதும் நுழையாத வண்ணம் கயிறு போட்டுக்கட்டிவிட்டு,   கையில் குழந்தையுடன் கிளம்பினாள் அஞ்சலை.

காரின் பின்புற ஓரமாக அமர்ந்தபடி, தன் குழந்தைக்கு வேடிக்கை காட்டியவாறே சென்ற அஞ்சலைக்கு, இவர் இன்று எதற்கு நம்மைத்தேடி வந்தார்? இப்போ எங்கே நம்மைக்கூட்டிப்போகிறார்? என்பது ஒன்றும் புரியாமல் குழப்பமாகவே இருந்தது.  

வந்ததொரு பெரும்புள்ளியுடன், அஞ்சலை ஒய்யாரமாகக் காரில் ஏறி அமர்ந்து எங்கோ புறப்பட்டுச் செல்வதைப்பார்த்த அக்கம் பக்கத்து சேரி ஜனங்கள் தங்களுக்குள் ஏதேதோ கற்பனைகள் செய்துகொண்டு, அவசர அவசரமாகக் கூடிப்பேசலானார்கள். 

”புடிச்சாலும் புடிச்சாள், நல்ல புளியங்கொம்பாத்தான் பார்த்துப் புடிச்சிருக்கிறாள்” என்றாள் கைத்தடி ஊன்றிய ஒரு கிழவி.  

“புருஷனை மலையா நம்பியிருந்தா, அந்தப்பொறம்போக்கும் போய்ச்சேர்ந்து, மாசம் ஒண்ணாச்சு; அவளுக்கும் சின்ன வயசுதானே; புருஷனையே நினைச்சுக்கிட்டு இருந்துட்டு, இப்போ வந்துள்ள அரசனையும் கைவிட்டுட முடியுமா என்ன?”அடுத்த கிழவி ஏதோ ஒத்துஊதி, அந்த முதல் கிழவியின் பேச்சுக்கு தூபம் போடலானாள்.

“நம்ம அஞ்சலையைப்பத்தி நல்லாத் தெரிஞ்சிருந்தும் இப்படி நாக்கூசாம பேசுறீங்களே! இது உங்களுக்கே நியாயமா” அஞ்சலைக்குப்பரிந்து பேசுபவள் போல, மிகவும் ஆர்வமாக வந்துசேர்ந்து கொண்டாள், அஞ்சலை வயதையொத்த இன்னொருத்தி. 

இப்படியாக எப்போதுமே தங்களின் வெறும் வாயை மென்றுவரும் அவர்களுக்கு, இப்போது, இன்றைக்கு காரில் ஏறிச்சென்ற அஞ்சலை என்ற அவல் கிடைத்து விட்டதில், நேரம் போனது தெரியாமல், கிடைத்த அவலை வாய் ஓயாமல், நன்றாக மென்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர். 

பிரபல மிகப்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடல்கள், குடும்பத்துக்குத்தேவையான அனைத்து பொருட்களும் விற்கப்படும் பல்பொருள் அங்காடிகள் பலவும் ஒருங்கே நிறைந்திருந்த அந்தப்பகுதியின் நடுவினில் அமைந்திருந்த ஒரு மிகப்பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் அந்த கார் புகுந்து நின்றது.   

த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச் சாப்பிட வேண்டிய அனைத்துப் பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.  

குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.     



    


[5]

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள்.  அந்த தெய்வமே இன்று இந்த சிவகுரு ஐயா உருவத்தில் வந்து, தனக்கு தகுந்த நேரத்தில் உதவிட முன்வந்திருப்பதை அஞ்சலை உணரத்தொடங்கினாள்.

தான் மேற்கொண்டு எப்படி இந்தப் பொல்லாத உலகத்தில், மானம் மரியாதையுடன் வாழ்ந்து, இந்தத் தன் கைக்குழந்தையையும் ஆளாக்க முடியும் என்று கலங்கிப்போய் இருந்தவளுக்கு, வயிறு நிரம்ப நல்ல உணவுகள் வாங்கிக்கொடுத்து, இந்த மிகப்பெரிய ஹோட்டலில் இன்று ரூம் போட்டு தங்கச்சொல்லி, மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல பலவித யோசனைகள் கூறி, எந்தவிதமான நிர்பந்தங்களோ, கட்டாயமோ செய்யாமல், நன்றாக யோசித்து உன் முடிவைச்சொல், நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிப்போய் உள்ள, சிவகுரு ஐயாவை நினைத்து கண் கலங்கினாள், அஞ்சலை.

இப்படியும் சில நாகரீகமான, நல்ல உள்ளம் கொண்ட, பரந்த மனப்பான்மை கொண்ட, மிகச்சிறந்த மனிதர்கள் இருப்பார்களா! என வியந்துதான் போனாள், அதிகம் படிக்காதவளும்,  சேரியிலேயே பிறந்து வளர்ந்து, சேரியிலேயே வாழ்க்கைப்பட்டவளுமான, அஞ்சலை என்ற அப்பாவிப்பெண்.

சிவகுரு ஐயாவின் விருப்பப்படி நான் நடந்து கொள்ள சம்மதிப்பது சரிதானா; அது பாவச்செயல் இல்லையா? மறைந்த தன் கணவனுக்கும், அவர் நினைவாக விட்டுச்சென்றுள்ள என் குழந்தைக்கும் நான் செய்யும் துரோகச்செயல் இல்லையா? 

இது, எந்த ஒரு பெண்ணும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் செயல் அல்லவே! உற்றார் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் படியாக தனக்கு யாரும் இல்லையென்றாலும், ஊரார் சும்மா இருப்பார்களா? அஞ்சலையின் ஒரு மனசாட்சி இவ்வாறெல்லாம் பலவாறு, அவளைக் குழப்பலானது.

அதேசமயம் அவளின் மற்றொரு மனசாட்சி “நீ இன்றிருக்கும் ஆதரவற்ற நிலையில், உன்னிடம் இரக்கம் காட்டி, உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பும், நல்வாழ்வும் அமைத்துத்தர, ஒரு மனிதர் தானே முன்வந்து, உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.  அவரைத்தட்டிக்கழித்து விட்டு, உன்னால் இந்தக்கைக்குழந்தையுடன், வறுமை என்ற ஓட்டைப்படகுடன், கணவனை இழந்த வெறுமைவாழ்வு என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சல் போடமுடியுமா?” என்று கேட்டு எள்ளி நகையாடியபடி மேலும் தொடர்ந்தது:

”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.   
  
இவ்வாறு “பணமா........பாசமா” என்ற குழப்பத்தில் இருந்த அஞ்சலை, தன் குழந்தைப்பக்கம் திரும்புகிறாள்.

பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள். 




எப்படிக்கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்துப் பார்த்தாலும்,  தான் இன்றுள்ள நிலையில், சிவகுரு ஐயா சொல்வதே சரியென்று படுகிறது அவளுக்கு.

ஐயா சொல்படி கேட்டு நடந்தால்தான், அவருக்கும், அவர் மனைவிக்கும், தனக்கும், தன் குழந்தைக்குமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் என்ற ஆறுதல் கிடைத்து, தன் சொச்ச வாழ்நாளாவது ஓரளவு தன் மகனுக்கு அமையப்போகும் நல்லதொரு வளர்ப்பையும், வாழ்க்கையையும் நினைத்தாவது இன்பமாகக் கழியக்கூடும் என்ற நல்லதொரு எண்ணத்துடன் ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள், அஞ்சலை.

......................
................................
..........................................

/ இடைவேளை / 

.........................
....................................
...............................................

வீட்டு ஹாலின் சுவரைச்சுற்றிலும், பல்வேறு பாவனைகளில் சிரித்த வண்ணம் குழந்தைகள் படங்கள் நிறையவே தொங்கவிடப்பட்டிருந்தன. தினமும் போல ஒவ்வொன்றாக அவற்றைப்பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் மல்லிகா.  

மணி மாலை 6 என்பதை ஆறு முறை ஒலித்த அந்த சுவர் கடிகாரம் நினைவு படுத்தியது. பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது. 


  


காலையில் புறப்பட்டுச்சென்ற தன் கணவர் இன்னமும் வரக்காணோமே என்ற கவலையில் செல்போனில் தொடர்பு கொள்ள நினைத்தவளின் கவனத்தை வாசலில் கேட்ட அழைப்பு மணி ஈர்த்தது. 

கதவைத்திறந்த மல்லிகாவுக்கு, கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.

தலை நிறைய முடி, குண்டு மூஞ்சி. குறுகுறுப்பான பார்வை. குட்டிக்கிருஷ்ணன் போன்றே சற்று கருமைநிறம். காது நுனிகளில் சொருகிய வண்ணம் தங்க அவல் போன்ற தொங்கட்டான்கள். கைக்கு ஒன்று வீதம் பட்டையான தங்க வளையல்கள். விரலில் குட்டியான அழகிய மாதுளைப்பழ முத்துக்கல் பதித்த மோதிரம். அந்த மோதிரத்தைக் கைவளையளுடன் இணைத்த பாம்பரணை போன்ற மெல்லியதோர் தங்கச்செயின்.  

கழுத்தினில் மினுமினுக்கும், மெஷின் கட்டிங்க்கில் செய்த வெந்தய டிசைன் தங்கச்சங்கிலி. இடுப்பில் தங்கத்தில் அரணா. தனியாக தங்க நாய்க்காசுகள், தங்கத் தாயத்துடன் கூடிய ஒரு கருப்புக்கயிறு.

கால்கள் இரண்டிலும் முத்துமுத்தாக ஒலிஎழுப்பும் வெள்ளிக்கொலுசுகள். பாதங்களில் நடந்தால், பூனை போல ஒலி எழுப்பும் அழகிய பூப்போட்ட பூட்ஸுகள். புதுச்சட்டை, புது டிராயர், கமகமக்கும் குழந்தைகளுக்கான விசேஷ பெர்ஃப்யூம் மணம்.  

தன்னிடம் தாவிய அந்தக்குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் மல்லிகா.

கூடவே வந்த வேலையாள் ஒருவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியையும். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த குட்டி மெத்தை தலையணியுடன் கூடிய, தொங்கும் தொட்டிலையும் வைத்துவிட்டு, சிவகுருவிடம் விடை பெற்றுச்சென்றான். 

அந்த அட்டைப்பெட்டி நிறைய, குழந்தைகளுக்கான விலை உயர்ந்த, தரமான விளையாட்டுச் சாமான்கள், ரப்பர் பொம்மைகள், பந்துகள், பால் பவுடர் டப்பாக்கள், ஃபீடிங் பாட்டில்கள், நிப்பிள்கள், நாப்கின்கள் இத்யாதி இத்யாதி, வாங்கிக் குவித்திருந்தார், சிவகுரு.

”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.


 
 
  

[6]

“தெரியாது மல்லிகா .... ஆனால் இது இன்றுமுதல் நம் குழந்தை தான். அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்குப்போய் தத்து எடுத்து வந்துவிட்டேன்.  

அன்றொரு நாள் நீயும் நானும் அங்கு போய் பதிவு செய்துவிட்டு வந்தபோது, இதுபோல நமக்குப்பிடித்தமான குழந்தை ஏதும் அங்கு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோமே, ஞாபகம் இருக்கிறதா?  

இந்தக்குழந்தை சமீபத்தில் தான் அங்கு வந்து சேர்ந்துள்ளது. தாமதம் செய்தால் இதையும் வேறு யாராவது எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. அதனால் தான் அவசரமாக இதைக்கூட்டி வந்து விட்டேன். வரும் வழியில் அதற்கு வேண்டிய எல்லாப்பொருட்களையும் ஆசை ஆசையா வாங்கி வந்துவிட்டேன்.

தயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே ஏற்றுக்கொள்ளணும். இவன் வந்தவேளை, நமக்கே கூட, வேறு ஒரு குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படலாம்” என்றார், சிவகுரு.

தன் டிஜிட்டல் காமராவையும், வீடியோ காமராவையும் கொண்டு, மல்லிகாவுடன் குழந்தையையும் சேர்த்து, பலவித போஸ்களில் படம் பிடித்து பதிவு செய்தார் சிவகுரு.

குழந்தையின் கன்னத்தில் ஏற்படும் குழிவிழும் சிரிப்பு மல்லிகாவின் மனதை மிகவும் மயக்கத்தான் செய்தது. அவளின் அன்றைய மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருந்தது.

சிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். 

அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.

சமீபகாலத்தில் இவ்வளவு ஒரு சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டிராத சிவகுரு, தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக் குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.  

தான் வாங்கி வந்துள்ள மற்ற விளையாட்டு சாமான்களை ஒவ்வொன்றாகப் பிரித்து மற்றொரு அறையின் தரையில் கடை பரப்பிக்கொண்டிருந்தார், சிவகுரு.



.........
...................
.............................
........................................



சற்று நேரம் கழித்து அங்கு வந்து வாசல் கதவோரம் நின்ற அஞ்சலை, மிகவும் மெதுவாக காலிங் பெல்லை அழுத்த, மல்லிகாவே கதவைத் திறந்தாள். மறுநாள் முதல் பழையபடி வீட்டு வேலைகள் செய்ய வந்து விடுவதாகச் சொன்னாள், மல்லிகாவிடம் அஞ்சலை. 

இதைக்கேட்ட மல்லிகாவுக்கு காதில் தேன் பாய்வது போலத்தோன்றியது.

”கண்டிப்பாக வந்துடு அஞ்சலை. எங்களின் இந்த ராஜாப்பயலை நீ தான் இனிமேல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லி குழந்தையை அஞ்சலைக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள் மல்லிகா.

அந்தப்பணக்காரக் குழந்தையை முதன்முதலாக மிகவும் அதிசயமாகப்பார்த்த அஞ்சலையிடம், அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டது. 

இதைப்பார்த்துச் சிரித்த மல்லிகா அதன் வேற்றுமுகம் தெரியாத மழலைச்செயலைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டாள்.  

“பாரு, அஞ்சலை, இவனை நீ இப்போதான் முதன்முதலாகப் பார்க்கிறாய்; அதற்குள் ரொம்ப நாட்கள் உன்னிடம் பழகியவன் போல ஓடி வந்து உன்னைக்கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கூட வேற்றுமுகம் தெரியாத குழந்தையாக இருக்கிறான். யாரைப்பார்த்தாலும் உடனே சிரித்துக்கொண்டே அவர்களிடம் போய் விடுகிறான்” என்று அந்தக்குழந்தயைப்பற்றி அஞ்சலையிடம் சொல்லி பூரித்துப்போனாள், மல்லிகா. 

”ஆமாம்மா, கள்ளங்கபடமில்லாமல், சூதுவாது தெரியாதவனாகத்தான் இருப்பான் போலிருக்கு இந்தக்குழந்தை” என்று சொல்லி ஒருவாறு சமாளிப்பதற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்தாள், அஞ்சலை. 

முள் போன்ற ஏதோ ஒன்று தன் தொண்டையில் மாட்டி துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தை அளிப்பது போல உணர்ந்தாள் அஞ்சலை.

சிவகுரு ஐயாவுக்கு, தான் செய்துகொடுத்த சத்தியம், அது தனக்குப்பிறந்த,  தன் குழந்தையேதான், என்ற உண்மையை மல்லிகாவிடம் கூற வந்த அஞ்சலையைத் தடுத்து நிறுத்திவிட்டது.

அங்கு சிவகுருவால் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாமான்களின் மேல் அந்தக் குழந்தையின் கவனம் ஈடுபடும் நேரமாகப்பார்த்து, மல்லிகாவிடம் விடைபெற்று, தன் குடிசையை அடைந்தாள் அஞ்சலை.

அந்த லாட்ஜ் ரூமைக்காலிசெய்து விட்டு தன்னை தன் குடிசை வாசலில் காரில் இறக்கி விட்டுச்செல்லும் முன், தன்னிடம் சிவகுரு ஐயா அளித்த மூன்று லட்சம் ரூபாய்க்கான செக் (காசோலை) போடப்பட்ட கவரைத் தேடி எடுத்தாள்.  

அதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும்? அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள். 

தன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.

இன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டோ படங்கள் எடுத்து, பான் [PAN] நம்பருக்கு அப்ளை செய்து, பேங்குக்குக்கூட்டிப்போய் ஃபிக்ஸட் டெபாஸிட் ஆக இந்தத்தொகையை போட்டுத்தருவதாகவும், அதுவரை இந்த செக் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிப்போயிருந்தார், சிவகுரு.  

ஒரு வயது கூட பூர்த்தியாகாத தன் மகனால் தனக்கு மாதாமாதம் சுளையாக ரூ. 2500 க்குக்குறையாமல், இந்த டெபாஸிட் தொகை மூலம், நிரந்தர வருமானமாகக் கிடைக்கும் என்று சிவகுரு ஐயா சொன்னதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாள்.

தினமும் தன் குழந்தையைப்போய்,  தான் பார்க்க முடியும், அவனுடன் பழக முடியும், அவனுடனேயே இருந்து அவனைப்பராமரிக்கவும், கொஞ்சவும்கூட முடியும், அதற்கெல்லாம் தனியாக மாத ஊதியமும் பெற முடியும் என்றாலும், தன் குழந்தை என்ற உரிமை கொண்டாடமட்டும் முடியாது என்பதை நினைக்கையில் அவள் மனம் மிகவும் வருந்தியது. 

அதைவிட அந்த மல்லிகா அம்மாவிடம் இந்த உண்மையை மறைப்பது, அவள் மனதுக்கு மிகவும் சங்கடமான சமாசாரமாகவே இருந்தது. 

ஆனாலும், தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத் தூங்கப்போனாள்.

..............
......................
................................

தனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் குழந்தை இப்போது தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிக்கலானாள்.



இருள் அகலுமா?



 கோழி கூவுமா?


பொழுது விடியுமா?



இருள் அகலுமா ?  கோழி கூவுமா ? பொழுது விடியுமா ? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ..... அந்த அஞ்ச லை.


oooooOooooo 







தங்களின் தகவலுக்காக மட்டும்

"அ ஞ் ச லை ”


இந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் 

புதினம்” தமிழ் இதழின் 

பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி,  

2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட 

உலகளாவிய சிறுகதைப் போட்டியில்’ 

ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, 


’புதினம்’ வெளியீடான 

“பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” 

என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை 

அச்சிடப்பட்டு,  வெளியானது 

என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


இந்த  “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் 

இடம்பெற்றிருப்பதாக, 

ஒருசில வெளியூர் வாசகர்களின்,  

பாராட்டுக் கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.   



 



oooooOooooo


VGK-07 

ஆப்பிள் கன்னங்களும் ...
அபூர்வ எண்ணங்களும் !



என்ற சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு, தாராளமாகவும், மிகச்சிறப்பாகவும் விமர்சனங்கள் எழுதி அனுப்பி அசத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

விமர்சனங்கள் அனைத்தும், நடுவர் அவர்களின் தீவிரமான பரிசீலனைகள் முடிந்து, அவைகளுக்கான இறுதி முடிவுகள் என்னை நோக்கி வந்தடையத் தொடங்கிவிட்டன.



ஆப்பிள் கன்னங்கள்  போன்ற அந்த அழகான முடிவுகளை  அற்புதமாக வடிவமைத்து பதிவாக வெளியிட வேண்டும் என்ற அபூர்வ எண்ணங்கள்  உடன் அடியேனும் இருப்பதால் .........

வழக்கம்போல வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களுக்குள், பரிசு பெற்றோர்கள் பற்றிய முழு அறிவிப்புகளும் என் வலைத்தளத்தில் தனித்தனிப்பதிவுகளாக வெளியிடப்படும்.  

காணத்தவறாதீர்கள் !

அடுத்தடுத்த போட்டிகளில்
கலந்துகொள்ள மறவாதீர்கள் !!


oooooOooooo




'எங்கோ படித்தது'  


பொதுவாக முன்னுரை, முடிவுரை  எல்லாம் போட்டு விமர்சனக் கட்டுரைகள் எழுதுவது பள்ளிக்கல்வி காலத்தோடு போயாச்சு.  

அதுவும் சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளுக்கு விமர்சனம் எழுதுகையில், எழுதுகின்ற அப்படிப்பட்ட விமர்சனங்களும், கதை போல வாசிக்கிறவர்களை ஈர்க்கிற மாதிரியான புதுமைகளைக் கொண்டிருந்தால் எடுப்பாக இருக்கும்.  

இப்படியான புதுமைகள், விமர்சனம் செய்வோரின் கற்பனை வளத்தையும், அவர்தம் எழுத்துத்திறமையையும் எடுத்துச் சொல்வதாக அமைந்து விமர்சிப்பவருக்கும் பெருமை சேர்க்கும்.

எழுதுகின்ற விஷயங்களுக்கு ஏற்பவான மேற்கோள்கள், பழமொழிகள், இலக்கிய வரிகள் போன்ற எடுத்துக்காட்டல்கள் எல்லாம், ரஸத்தில் கடுகு தாளிப்பது போல அளவோடு இருந்தால் அழகாக இருக்கும். 

அவையே அளவுக்கு மிஞ்சினால் கடுகு தான்  கண்ணை உறுத்தும். ரஸத்தின் சுவையும் மாறுபடும்.



[இதை நான் எங்கேயோ, எப்போதோ, எதிலோ படித்தது.

சிறுகதைக்கு விமர்சனம் அளிக்கும் தங்களுக்கு இது 
பயன்படக்கூடுமானால் எனக்கும் மகிழ்ச்சியே.]






என்றும் அன்புடன் தங்கள்


வை. கோபாலகிருஷ்ணன்



27 கருத்துகள்:

  1. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன்!

    இப்பொழுதுதான் சிறுகதை விமர்சனப் போட்டி தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் ஒன்பதாவது சிறுகதை - விமர்சனப் போட்டிக்கு வந்து விட்டது. நீங்கள் பதிவிடும் நேரம், கருத்துரைகளுக்கு பதில் தரும் நேரம் இவற்றைப் பார்க்கும் போது, போட்டியை கவனமாக சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் இருப்பதை உணர முடிகிறது. வாழ்த்துக்கள்!

    விமர்சனப் போட்டிக்கு என்று வந்த கதைகளுக்கு தனியே விமர்சனம் செய்வது சரியல்ல என்பதால் விமர்சனங்களை நான் எழுதவில்லை.

    பதிலளிநீக்கு
  2. ”மண் குடிசை ... வாசலென்றால் ...
    தென்றல் வர ... மறுத்திடுமோ”,

    அருமையான கதை.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப் போட்டியில்’ பரிசுக்குத் தேர்வாகியதற்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுக்கள்..!


    ’புதினம்’ வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்”
    என்ற நூலில் அச்சிடப்பட்டு, வெளியானதற்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  4. நாதஸ்வரம் தொடர் இன்னமும் தொலைக்காட்சியில் வந்து கொண்டு தான் இருக்கிறது. :))))

    பதிலளிநீக்கு
  5. சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. உலகளாவிய சிறுகதை போட்டியில் பரிசு
    சாதனையாளர் ஐயா நீங்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  7. உலகளாவிய சிறுகதைப் போட்டியில்’ இக் கதை தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    குடிசை வீட்டை அழகாய் வர்ணித்து இருக்கிறீர்கள்.
    கதை அருமை. நாளை முதல் குழந்தையுடன் தானே இருக்க போகிறாள் அஞ்சலை.

    பதிலளிநீக்கு
  8. உலகளாவிய சிறுகதைப் போட்டியில்’ இக் கதை தேர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  9. பரிசு பெற்ற கதையா ?.......

    பாராட்டுக்களையே சுவைத்த உங்களுக்கு மிளகின் காரம் பிடிக்குமா ?



    தங்க முலாம் பூசப்பட்ட மனித நேயம்.



    நம்பினார் கெடுவதில்லை , இது மட்டுமல்ல,



    ( நான், எனது என்பதையும் விட்டுக் )

    கொடுப்பவர்களும் கெடுவதில்லை.

    இது நான்கு மறை தீர்ப்பு .





    அஞ்சலைக்கு இருள் அகலும் ;

    கோழியும் கூவும்:

    விடியலும் வரும்.

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் வாசித்தாலும் சுவை கூட்டினாள் அஞ்சலை... சிறுகதை போட்டியில் பரிசு வாங்கியதற்கு பாராட்டுகள் சார்.

    பதிலளிநீக்கு
  11. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://swamysmusings.blogspot.com/2014/10/blog-post_29.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  12. இன்று ‘கீதா விருது’ பெற்றுள்ள திருமதி ஞா. கலையரசி அவர்கள் அதற்கான தன் மகிழ்ச்சியினையும், ஏற்கனவே ’VGK-09 அஞ்சலை’ சிறுகதைக்கு வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த, பரிசுக்குத் தேர்வான தனது விமர்சனத்தையும், இன்று அவர்களின் வலைத்தளப் பதிவினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://unjal.blogspot.in/2014/11/3.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி ஞா. கலையரசி அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  13. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-9.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  14. ஏழைகளின் கதை உணர்ச்சிப் போராட்டமாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. கதை ரொம்ப நல்லா இருக்கு.பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  16. நல்ல அருமையான உணர்ச்சிபூர்வமான கதை. பாவம் அஞ்சலை போல் எவ்வளவோ பெண்கள்.

    பரிசு கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியப்படணும்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 27, 2015 at 10:40 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //நல்ல அருமையான உணர்ச்சிபூர்வமான கதை. பாவம் அஞ்சலை போல் எவ்வளவோ பெண்கள். பரிசு கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியப்படணும். வாழ்த்துக்கள்.//

      சந்தோஷம். அருமையான உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  17. அஞ்சல கத ரொம்ப நல்லா இருந்திச்சு

    பதிலளிநீக்கு
  18. மண்குடிசையின் வர்ணனையை எவ்வளவு எதார்த்தமா வர்ணித்து இருந்தாலும் அந்த குடிசைப்படம் அழகா விளக்கிடுத்தே. அஞசலையின் குடிசைதானே அது.

    பதிலளிநீக்கு
  19. அருமை.. கரும்பு தின்ன கூலியா என கேட்கவைப்பதுபோல முடித்திருந்தாலும்..இறுதிவரிகள் கிளைமாக்ஸ் இன்னும் தொடருமா என யோசிக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  20. தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக தன் குழந்தையையே அளித்துவிட்டாலும் தன் குழந்தையென ஒருநாளும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலையும்,வீட்டிற்கு வந்தாலும் குழந்தையில்லாத தூளியும்,

    வெறிச்சோடிய மனநிலையும்,உள்ளப்போராட்டத்தை ஒரு தாயின் உவகைப் பூரிக்கும் உணர்வுகளை மொத்தமாய் உறிஞ்சிவிட்ட வறுமை என்று எந்த தாய்க்கும் வரக் கூடத வாழ்வியல் நிலையை விடியலை நோக்கிக் காத்திருக்கும் விம்மிய நெஞ்சத்தை அப்பப்பா!! ஒவ்வொன்றும் ஓர் மைல்கல்லாய் விவரித்த விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  21. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் பதிவுலக ஆரம்ப நாட்களில் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    30 + 26 + 26 + 28 + 38 + 92 = 240

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 முதல் பகுதி-6 வரை):

    https://gopu1949.blogspot.in/2011/04/1-1-of-6.html
    https://gopu1949.blogspot.in/2011/04/2-2-of-6.html
    https://gopu1949.blogspot.in/2011/04/3-3-of-6.html
    https://gopu1949.blogspot.in/2011/04/4-4-of-6.html
    https://gopu1949.blogspot.in/2011/04/5-5-of-6.html
    https://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html

    பதிலளிநீக்கு
  22. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  23. WHATS APP COMMENTS RECEIVED ON 28.08.2018 FROM Mrs. VIJI KRISHNAN, RAIL NAGAR, TIRUCHI

    -=-=-=-

    Anjalai story heart touching.

    -=-=-=-

    Thanks a Lot விஜி !

    அன்புடன் வீ..ஜீ !!

    பதிலளிநீக்கு
  24. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயணமூர்த்தி, திருச்சி, அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

    விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு
    26.09.2018

    பதிலளிநீக்கு
  25. WHATS-APP COMMENT RECEIVED ON 07.05.2019 FOR VGK-09

    உயர்ந்த உள்ளம்.
    ஏழையின் விளக்கில் நல்ல ஒளி.
    அருமை. வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு,
    மணக்கால் மணி

    பதிலளிநீக்கு