என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 19 ஜூலை, 2014

VGK 25 / 03 / 03 - THIRD PRIZE WINNER ............ ’ தேடி வந்த தேவதை ’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 25 - ’ தேடி வந்த தேவதை 



இணைப்பு:







   



 
 


    

 

 
  






மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 



நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  





ஐந்து




  











இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  
நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 







    




மூன்றாம் பரிசினை 



முத்தாக வென்றுள்ளவர் 




திருமதி


 கீதா சாம்பசிவம்  


அவர்கள்




 வலைத்தளம்: ’எண்ணங்கள்’

sivamgss.blogspot.in




 

முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள



திருமதி


 கீதா சாம்பசிவம்  


அவர்களின் விமர்சனம் இதோ:







பொதுவாகவே மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்பு அதிகம்.  அதிலும் நாலைந்து குழந்தைகளாக இருந்தால் மூத்த குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்தால் தான் மற்றக் குழந்தைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். இது எழுதப்படாத விதி.  கதாநாயகியான சுமதியும்.  நான்கு தங்கைகளோடு சேர்ந்து பிறந்த மூத்த பெண். சுமதி நர்ஸ் வேலை பார்த்தாலும் அதில் மட்டும் தன் குடும்பம் கடைத்தேற முடியாது என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு தன் குடும்பத்தைக் கடைத்தேற்ற நினைப்பது சரிதான். ஆனால் அதற்காக எய்ட்ஸ் போன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவரைப் போய்த் திருமணம் செய்து கொள்வது கொஞ்சம் ஏற்க முடியவில்லை தான். சுமதி தானாக எடுத்த முடிவு.  தீர்க்கமாக யோசித்து அவள் மருத்துவத் துறையில் இருப்பதால் இந்த நோயைக் குறித்த தகவல்கள் அவளுக்குப் பூரணமாய்க் கிடைத்து விடும்; அவ்வப்போது ஏற்படும் மருத்துவ முன்னேற்றங்களால் பாதிப்பு அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என  அவளும் தெரிந்து வைத்திருந்தாள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு இப்படி ஒருவருக்கு சேவை செய்வதைத் தன் வாழ்க்கையில் லக்ஷியமாகவும் கொண்டிருக்கலாம்.  இப்போது சுமதி செய்வது சரியா, தப்பா என்று நமக்குப் புரியாவிட்டாலும், அவள் தைரியமாக எதிர்கொள்வதைப் பார்த்து அவளோடு நாமும் கூடச் சென்று என்ன நடக்கிறதுனு பார்க்கலாமே! 

எய்ட்ஸ் உள்ள மணமகனுக்குப் பொருத்தமான மணமகள் தேவை என்னும் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நேரடிப் பேட்டிக்குச் சென்றவளுக்குத் தன்னை வரவேற்ற வாலிபன் தான் மணமகன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியே வருகிறது. நமக்கும் மகிழ்ச்சியே!  ஆனால் அவன் தாய் தான் கொஞ்சம் கடுகடுவென இருக்கிறாள். தன் மகனுக்கு இப்படி ஒரு அழகான பெண் மனைவியாக வருவதில் உள்ளூர மகிழ்ச்சி என்றாலும் தான் எதிர்பார்க்கும் சீர்வரிசைகளைப் பெற முடியாது என்னும் வருத்தமும் அந்த வாலிபனின் தாய்க்கு இருந்தது.  தன் ஒரே மகன் சுந்தர் இத்தனை பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும், தான் எதிர்பார்த்தது போல் சீர்வரிசையுடன் பணக்கார மருமகளை அடைய முடியாத ஏமாற்றம் அந்தத் தாய்க்கு.  இவள் பணத்தைப் பார்த்துத் தன் மகனைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறாளோ என அவளால் கூட நினைக்க முடியவில்லை.  ஏனெனில் சுந்தரின் வியாதி அப்படிப்பட்டது. ஆனாலும் சுமதியின் அழகும், அவள் பழகும் விதமும் அந்தச் சிடுமூஞ்சியைக் கூட ஈர்க்கிறது.

சுமதியோ தன் குடும்பம் சாதாரணம் என்பதையும் சொல்லி விடுகிறாள். அந்தத் தாய்க்கு ஆறுதலான ஒரே விஷயம் சுமதியும் அவள் பிறந்த ஊரான திருச்சிக்கு அருகிலுள்ள கிராமம் என்பதே. சுமதி சுந்தரின் தாயிடம் மணமகன் சுந்தர் உண்மையை மறைக்காமல் சொன்னது தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்கக் கூடும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் தன் வருங்கால மாமியாரிடம் சொல்லி அவளுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறாள். அவள் தன்னம்பிக்கையையும், எது வந்தாலும் நேரடியாக எதிர்கொள்ளலாம் என்னும் தைரியத்தையும் இங்கே பார்க்க முடிகிறது.   வந்த இடத்திலும் தாங்கள் சிற்றுண்டி அருந்திய பாத்திரங்களைக் கழுவி வைத்ததன் மூலம் சுமதியின் வருங்கால மாமியார் மனதில் அவள் தன் கடமைகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவாள் என்னும் நம்பிக்கையை ஊட்டுகிறாள்.  ஆனால் தன் மகனையே ஒழுக்கம் கெட்டவனாக நினைத்துக் கொண்டும் ; அதனால் தான் எய்ட்ஸ் அவனுக்கு வந்திருக்கிறது எனவும் அந்தத் தாய் நினைத்து அதைப் பட்டவர்த்தனமாக சுமதியிடம் சொன்னாலும் அதை  சுமதி இதெல்லாம் சகஜம் என்று சொல்கிறாள். இதைத் தான் ஏற்க முடியவில்லை.  என்ன இருந்தாலும் ஒழுக்கமில்லாமல் ஒழுக்கக் கேடால் வந்த எய்ட்ஸ் எனில் இனியும் அவன் ஒழுக்கத்துக்குத் தகுந்த உத்தரவாதம் உண்டா என அவள் யோசித்திருக்கலாமோ?

ஆனால் எய்ட்ஸ்  ஒழுக்கம் கெட்டதால் மட்டுமே  வருவதில்லை. சுத்தமில்லா ஊசிகள் மூலம், ரத்ததானம் செய்கையில் பயன்படுத்தப்படும் சுத்தமில்லா சிரிஞ்சுகள் மூலம், பாதுகாப்பில்லா உடல் உறவுகள் எனப் பல வழிகளிலும் எய்ட்ஸ் பரவுகிறது. இதை மரகதம் தெரிந்து வைத்திருக்கிறாளா இல்லையா என்னும் சந்தேகம் வருகிறது.  சுமதியும் இதைக் குறித்து அதிகமாய்ச் சிந்தித்திருப்பதாய்த் தெரியவில்லை.  அது குறித்த விளக்கம் இங்கே இல்லை. அடுத்ததாக மரகதம் என்ன தடை சொல்லப் போகிறாளோ என்னும் எதிர்பார்ப்பு நம்மிடம் எழுகிறது. 

அதற்கேற்றாற்போல் குழந்தை பிறந்தால் என்ன செய்வது என்ற கேள்வி மரகதத்திடமிருந்து பிறக்க அதையும் சமாளிக்கிறாள் சுமதி.  தகுந்த பாதுகாப்பின் மூலம் பரவாமல் தடுக்கலாம் என்பதோடு எய்டிஸினால் இறப்பு என்பதும் உடனடி வரக்கூடியது அல்ல என்று சொல்லி இருக்கும் காலத்துக்குள்ளாக பிறருக்கு நன்மை செய்யலாமே என்றும் வாதிடுகிறாள்.  தன்னலமற்ற சேவை செய்வதில் அவளுக்கு உள்ள ஈடுபாடு இங்கே வெளிப்படுகிறது.  அதையும் இப்படி ஒரு நோயுள்ள கணவனோடு சேர்ந்து செய்யவும் அவளுக்கு ஆசை. என்னதான் பணம், காசு இருந்தாலும் இத்தகைய கொடிய நோய் இருக்கையில் யாரும் மணந்து கொள்ள முன்வரமாட்டார்கள். சுமதியோ துணிவுடன் இதில் இறங்க நினைக்கிறாள்.     சுந்தரின் தாயோ சுமதியின் மனப் பக்குவத்தால் மனம் மகிழ்ந்தாலும் தன் குடும்ப நிலைமைக்கு ஏற்ற சீர் வரிசைகள் கிடைக்காதே என யோசிக்கிறாள். 

தன் பிள்ளையின் நிலைமையை யோசித்தும், இப்படி ஒரு பல்கலை வித்தகியான பெண் கிடைக்காது என்பதாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு  அவள் வீட்டிற்கு வந்து பெண் கேட்பதாகச் சொல்லுகிறாள்.    நாமும் இவ்வளவு எளிதாக முடிந்ததே என எண்ணுகிறோம். ஆனால் அடுத்துத் தான் அதிர்ச்சி காத்திருக்கிறது நமக்கும், சுமதிக்கும். ஆட்டோவில் ஏறும்போது சுந்தர் கொடுத்த கவரைப் பிரித்துப் படித்தால் மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது சுமதிக்கு.

தன் தாயின் பேராசைக் குணத்தைப் பார்த்தே சுந்தர் தன் குடும்ப மருத்துவர் உதவியோடு தனக்கு எய்ட்ஸ் நோய் என்பதாகப் பொய் சொல்லி இருப்பதாக அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.   அதனால் தான் தங்களை வழியில் பார்த்த மருத்துவர் வாழ்த்துத் தெரிவித்தாரா என சுமதி நினைத்தாள். கூடவே சென்று அனைத்தையும் பார்க்கும் நமக்கு இத்தனை திறமையும், அழகும், நேர்மையும், குடும்பத்தின் மேல் பற்றும் உள்ள சுமதிக்குக் குறைகள் இல்லாத பெரிய பணக்காரக் குடும்ப மாப்பிள்ளையே வருவதில் உள்ளூர மகிழ்ச்சி ஏற்படுகிறது.  ஆனால் நேர்மையே வடிவான சுமதிக்கு இப்படிப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வதில் உள்ள ஆபத்து புரிய, அதோடு சுந்தர் பெற்ற தாயிடமே பொய் சொல்லி இருப்பதால் அவனை ஏற்க மறுக்கிறாள். தன்னால் அவர்களிடம் இந்த உண்மையை மறைக்க இயலாது என்றும் சொல்லித் திட்டவட்டமாக மறுத்து விடுகிறாள்.  இது அவள் நேர்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. பணம், காசு இருந்தாலும் எய்ட்ஸ் என்றதும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தவள், இப்போது அதே பணம், காசு இருந்தாலும் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொள்வது நன்மை தராது என்று உணர்ந்து விடுகிறாள்.  உலகில் பணம், காசை விட நேர்மையும் சத்தியமுமே பெரிது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாள்.  அதோடு சுந்தரின் தாய் சீர்வரிசை எதிர்பார்ப்பதைத் தவறானதல்ல என்பதையும் உணர்த்துகிறாள்.

//திருமணமாகி புதுப்பெண்ணாய் வருபவள் எல்லாச் செல்வங்களுடனும் வந்தால் தான், புகுந்த வீட்டில் அவளுக்கும் ஒரு கெளரவமாகவும், பெருமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்; 

எனவே தங்கள் தாயாரின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் நியாயமானதே;  

அவர்களிடம் உண்மையைச்சொல்லி விட்டு, பிறகு அவர்கள் விருப்பப்படியே, நீங்கள் வேறு யாரையாவது உங்கள் ஸ்டேட்டஸுக்குத் தகுதியானவளாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்; //

மனித மனத்தில் தோன்றும் இயல்புகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறாள் சுமதி என்பதும் மேற்கண்டவற்றை அவள் சொன்னதிலிருந்து ஊகிக்க முடிகிறது. இத்தனை நற்குணங்கள் அமைந்த பெண்ணை மணக்க முடியவில்லை என்பது சுந்தருக்கு வருத்தமாகி விட அவன் சுமதியை நினைத்து ஏங்குகிறான். தன் ஒரே மகன் படும்பாட்டைக் கண்ட அவன் தாய் ஆஸ்பத்திரிக்கே நேரில் போய் சுமதியை விசாரிக்க எண்ணுகிறாள்.  கதாசிரியர் ஆஸ்பத்திரி சூழ்நிலையை இங்கே அருமையாக வர்ணித்திருக்கிறார்.  நாமே நேரில் சென்று அனைத்தையும் பார்க்கிறாப்போல் இருக்கிறது வர்ணனைகள்.  

மரகதத்திடம் உண்மையான காரணத்தைச் சொல்லாமல்  சுந்தரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கும் சுமதியின் மேல் கோபத்துடன்  வீட்டுக்கு வந்தவளுக்கு சுந்தர் சொல்லி உண்மை புரிகிறது.  சுமதியின் பெருந்தன்மை மட்டுமின்றித் தன் குடும்பம் கஷ்டப்படும் நேரத்திலும் பணத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாகவும், உறுதியாகவும் சுந்தரிடம் அவள் மறுத்திருப்பதைக் கண்ட மரகதத்துக்கு இவளைவிடச் சிறந்த மருமகள் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்பது புரிந்து போக, இத்தனை வருடங்களாக அவள் கண்களை மறைத்திருந்த பணமோகம் அகன்று விடுகிறது.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
வாய்மையின் நல்ல பிற..

என்னும் குறளின் பொருள் இப்போது தான் மரகதம் உணர்ந்தாள்.

மனிதரை மனிதருக்காக நேசிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்கிறாள்.  அடுத்த ஒரே மாதத்தில் சுமதியைத் தன் மருமகளாக்கிக் கொள்கிறாள்.

நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.  சுமதியின் விஷயத்தில் உடனடியாக நடந்து விடுவது அவள் அதிர்ஷ்டமா, சுந்தர் அதிர்ஷ்டமா?  இருவரையும் சேர்த்து வைத்துப் பார்த்து ஆனந்தம் அடையும் மரகதத்தின் அதிர்ஷ்டமா? சொல்வது கஷ்டம் தான்.  

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு.





 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !





அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 


சிறப்பிக்க வேண்டுமாய் 


அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-27 




 ’ அவன் போட்ட கணக்கு ‘ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


24 . 07. 2014


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.













என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


18 கருத்துகள்:

  1. மிகவும் அருமையானதொரு விமர்சனம். எய்ட்ஸ் குறித்த விமர்சனக் கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன். மூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. குறளோடு விமர்சனத்தை முடித்த திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  3. நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும். //
    உண்மை.

    மிக அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார்கள். கீதாசாம்பசிவம் அவர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..

    சிறப்பான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான விமரிசணம் எழுதி, பரிசுப் பெற்ற திருமதி கீதாவிற்கு எனது இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  7. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது! என்ன ஒரு மலர்ந்த சிரிப்பு! வாழ்த்துக்கள் சகொதரி!

    பதிலளிநீக்கு
  8. //நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.// அருமையான விமர்சனம்! பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான விமர்சனம்...
    கீதா அமாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. http://sivamgss.blogspot.in/2014/07/3.html
    திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  12. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  13. விமரிசனம் நல்லா இருக்கு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பரிசு வென்ற திருமதி கீதா சாம்பசிவமவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.விமரிசனம் நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. //நேர்மையான வழியில் செல்பவர்களுக்குத் தோல்வி என்பது இல்லை. என்றேனும் ஒருநாள் அவர்களின் நேர்மை புரிந்து கொள்ளப்பட்டுப் பாராட்டுப் பெறும்.// அருமையான விமர்சனம்! பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு