என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 26 ஜூலை, 2014

VGK 26 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?'





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :


VGK-26 
பல்லெல்லாம் 
பஞ்சாமியின் 
பல்லாகுமா ?


இணைப்பு:


 

 



 

 



 





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து



















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்





திருநிறைச்செல்வன்



 J. அரவிந்த் குமார்  



அவர்கள்


வலைத்தள முகவரி





 



இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள



திருநிறைச்செல்வன்


 J. அரவிந்த் குமார்  



அவர்களின் விமர்சனம் இதோ:
 



கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கதை எல்லாம் நம் கதாசிரியரின் கதைபோல் சிரிக்கவைக்குமா?

பல்லெல்லாம் பஞ்சாமியின பல்லாகுமா?
சொல்லெல்லாம்  நகைச்சுவை சொக்குப்பொடி தூவி நகைக்கவைக்குமா?

வெடிச் சிரிப்பு மட்டுமே வாழ்க்கைப்பாடம் நடத்துமா? 
வர்ணணைகளெல்லாம் சுவையோடு விழுந்து எழுந்து உயிர்பெறுமா?

பல் என்ற ஒரே ஒரு இரண்டெழுத்து ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு நகைச்சுவைப் பல்லாங்குழி விளையாட்டு விளையாடி வெற்றியும் பெறுகிறார் கதை ஆசிரியர்..

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..!
உழைத்து வாழவேண்டும் ..போலி பல்டாக்டர் போல 
பிறர் உழைப்பில் வாழ நினைந்திடாதே..!

சொட்டுத் தண்ணீர் வைத்து சட்டிசாந்து வழிக்கும் அளவுக்கு கருமை நிறக் கண்ணன்கள் கூட சினிமா நட்சத்திரங்களின் அழகு சாதன சோப்புகளையும் சிவப்பழகு கிரீம்களையும் நாடுவதை சிரிக்கச்சிரிக்க சொல்லி  சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்.. 

பஞ்சாமி பல்லவராயன் என்னும் போலி டாக்டரிடம் பெற்ற அதீத அவஸ்தைகளைப் பக்கத்திலிருந்து பார்த்தமாதிரி பல்கலைக்கமாய் பல்வேறு தகவல்களையும் நகைச்சுவை ததும்ப ததும்ப பதிவு செய்திருக்கிறார் கதை ஆசிரியர்..

தேன் - தானே மருந்தாகி நோய் தீர்ப்பதோடு, மருந்து உண்ணவும் துணைபுரிந்து  இனிமை கூட்டுவது போல நகைச்சுவைத்தேன் குழைத்து பற்கள் பற்றிய விழிப்புணர்வும் போலி மருத்துவர் பற்றிய எச்சரிக்கை உணர்வும் தோழமையாய் ஊடுருவி கலந்து கதையாக சிரிக்கச் சிரிக்க ரசித்து  அளிக்கப்பட்டிருக்கிறது..

திரைப்படத்தை வெற்றியடைய வைக்க  ரிப்பீட்டட் ஆடியன்ஸ் என்ற நிலையில்  திரும்பத் திரும்பப் பார்த்து அபிமான நட்சத்திரங்களை சூப்பர் நிலைக்கு ஜொலிக்கச்செய்யும் ரசிகர்களே..காரணமாகிறார்கள்..

மனதில் சோகமோ, சலிப்போ படரும் நிலையில் இந்த மாதிரி நகைச்சுவைச் சித்திரங்கள் நினைவில் மலர்ந்து மீண்டும் படித்து மனதில் படிந்த கவலைக் கறைகளை அகற்றி புத்துணர்வு பெறச்செய்கிறது..!.

ஈஸ்ட்மென் கலரில் ஒன்றோடொன்று இணைந்து தேங்காய் துருவிப்பல் பஞ்சாமியின் பெருமை மிகு அடையாளச்சின்னமாம் -

பற்களில் பாறைகளாய் படிந்த காறைகளை  பாளம் பாளமாக பெயர்ந்து எடுப்பதை ரசிக்கும் போது நம் கவலைகளும் பெயர்த்து எடுக்கப்பட்டது போன்ற உணர்வில்  புன்னகை மலர்வதை தடுக்கமுடியுமா என்ன??

துணி துவைக்கும் சொரசொரப்பான கல்லுக்கும் அலசி பிழிந்துவைக்க பக்கத்துப் பல்லையும்  உவமானமாக சொல்லும் நேர்த்தியில் நம் துயரங்களும் துவைத்து அலசி பிழிந்து  காணாமல் போனதாக சிரிப்பின் மூலம் மாயாஜாலம் நிகழ்த்துகிறார் கதை ஆசிரியர்..

ஏனுங்க .... கதாசிரியரே ! பல்லு கொஞ்சம் எடுப்பாக இருந்தால் ஆளாளுக்கு எகத்தாளமாகவா பேசுவீர்கள் ??!!. உங்களுக்கும் எடுப்பான தேங்காய் துருவ வசதியான, துணிதுவைக்க, அலசிபிழிந்து வைக்க சௌகர்யமான சொரசொரப்பான வண்ணமயமான பல் இல்லையே என்ற பொறாமைதான்.. வேறென்ன??  

சிரிக்காமலேயே வெளியில் சம்மனில்லாமல் ஆஜராகும் முந்திரிக்கொட்டைப் பற்களுடன் இருப்பவரைப் பார்த்து சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் என்று பாடவேண்டிய மனைவியே நிலவைப் பார்த்து என்னைத்  தொடாதே என்று சொன்ன வானமாக - தீண்டுவீராகில் திருநீல ண்டம் - மாதிரி பல்லிருக்கும் வரை பக்கத்தில வரத் தடையாணை பிறப்பித்த பிறகே,  பல்லுப் போனபின் பக்கத்தில் வரவேண்டிய அவசியம் என்ன எ தனக்குத் தானே வினவி - சத்தமாக கேட்க ஒரு பயம் தான் - கஸ்தூரி மான் தன் வயிற்றிலிருந்து வரும் கஸ்தூரி வாசத்தை உணராதது போல - தன் சாக்கடை நாற்றம் தனக்கே தெரியாத - நாறவாய் நாராயணசாமியான பஞ்சாமி பல்லழகராக மாற முடிவெடுத்தவருக்கு ஒரு போலி டாக்டரா கிடைக்கவேண்டும்??

தான் சீராட்டி வெற்றிலை போட்டு ஈஸ்ட்மென் கலரில் வண்ணமயமான பற்களை சுத்தம் செய்ய முடிவெடுக்கிறார்.. 

கஸ்தூரி மான் குட்டியோ கண்ணீரை ஏன் சிந்துதோன்னு தாலாட்டி சீராட்டி பக்குவமாக பார்த்துக் கொள்ளவேண்டிய  பற்களைப் போய் அதிர அதிர, வெடுக் வெடுக் என்று பிடுங்கி பணமும் பிடுங்கப் படும்போது படிப்பவர் மனமும் பற்களும் கிடுகிடுத்துத்தான் போகின்றன..


கூடவே மாமனார்  வேறு பல்செட்  பார்ட்டியானாலும் கரகரன்னு கடித்து கரக்முறக்குன்னு சாப்பிட்டு வெறுப்பேத்துவாரா... 

அவ்வழியே ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட பல் செட் பாத்ரூமில் உடைபட்டும், காலி மணிபர்சாக ஆரஞ்சு பழத்தோலாக காட்சிப்படும் போதும், நாக்கு மட்டும் பற்கள் இருந்த இடத்தில் நலம் விசாரிக்கும் சோகத்திலும், சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கிறார் கதை ஆசிரியர்

உரலுக்கு ஒருபக்கம் இடி .. மத்தளத்திற்கு இருபக்கம் அடி.. பஞ்சாமிக்கோ திரும்பின பக்கமெல்லாம் இடியா .??. என்னதான் செய்வார் பாவம் மனிதர்..

நம் அபிமான திரை நட்சத்திரங்களும், பல்மருத்துவர்களும் விளம்பரத்தின் மூலம் ஆக்ரமித்து, என்னதான் பல் பாதுகாப்பை போதித்தாலும், அலட்சியமாக கடந்து செல்லுபவர்கள் கூட, அந்த அதிர அதிர பல் மருத்துவம் செய்யும் கருவியையும், குத்துசண்டை போட்டியையும்,   ஒரே குத்தில் எதிராளியை வீழ்த்தி வெற்றி வாகை சூடும்  மைக் டைசனிடம் குத்து வாங்கியது போல வாய் வீங்கி ரத்தக்களறியான பஞ்சாமி வாயையும், கண்ணீர் சிந்தும் பல்லின் படமும்,  பல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அவரவருக்கு உணரவே வைக்கும் உறுதியாக..

பல்லோடு  பலபேரின் சொத்துக்களையும் வெடுக்கென்று பறித்துக் கொள்ளும் பல்டாக்டர் போலி பல்லவராயன்  நல்லவேளை பல்கலைகலைகழகம் பக்கம் பயணம் செய்யும்போது  போலீசால் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்..

இதுமாதிரி இன்னும் எத்தனை பேர் போலியாக உலவி எத்தனை பேர் பல்லைப்பதம் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என்று விழிப்புணர்வும் தருகிறார்  கதை ஆசிரியர்.. 

சந்தையில் மாடுபிடிக்கும்போது மாட்டின் பல்லைப் பார்த்து தேர்ந்தெடுப்பது போல டாக்டரையும் தேர்ந்தெடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும்தான்.. தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப்பார்க்காதே என்று ஆராயாமல்  போய் பல்லை இழந்துவிட்டாரே பஞ்சமி?!  

பல் தேய்த்த பற்பொடிகளில் உலகநாடுகளை அறிந்துகொள்ள வைத்த ரோஸ் கலர் தித்திக்கும் பல்பொடி மலரும் நினைவுகளை கிளர்ந்தெழ வைக்கிறது..

பல்லுபோனால் சொல்லுப்போச்சு  ... அத்தோடு விருப்பப்பட்டதை சாப்பிடமுடியாமல் பலமும் போய் அவஸ்தைப்பட்டு  பணமும் செலவாகி அதிர்ச்சியடையும் போது,  இறைவன் நமக்களித்த உறுப்புகளின் கொடைக்கு நன்றி செலுத்துகிறோம் .. 

பல், கண், காது கை கால் இதயம் -ஏன்  நகம், தலை முடிகள் கூட ஆரோக்கியமாக இருக்கும் போது நம் கவனத்துக்கு வராமல் அதனதன் வேலைகளைக் கவனிக்கின்றன..

உதிர்ந்தால் முகச்சுளிப்புடன் குப்பைக்குப்போகும் முடி கூட வழுக்கையான பின் எத்தனை கவனம் பெறுகிறது ..!

நிழலின் அருமையை வெயிலில் உணருவது போல் ஆரோக்கியமோ செல்வமோ உறவோ நட்போ  இருக்கும்போது கவனம் பெறாமல் விலகியபின் எத்தனை துன்பமும் செலவும் கொடுத்து ஏங்க வைக்கிறது..!!

சிறு உடற் குறைபாடுகள்-   நேர்ந்தால் செயற்கைக்கு அடி எடுத்துவைக்கும் போது எத்தனை தொல்லைகளை எதிர்நோக்க நேரிடுகிறது என்பதை வலிக்க வலிக்க உணருகிறோம்

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனால் அங்கு இரண்டு கொடுமை  டிங்கு டிங்குன்னு ஆடிக் கொண்டிருந்தாற் போலத்தானே காட்சிகள் அமைகின்றன..!! கடவுளே..கடவுளே..!!

பணம் இன்னிக்குப் போனால் போனது போனதுதான்..
போனால் வாராது திரும்பக் கிடைக்காது .. ஆரோக்கியமும் இயற்கை நமக்களித்த உறுப்புகளும் அப்படித்தான் என பொட்டில் அடித்தாற்போல் நச் என ஆணி அறைந்தாற்போல் மனதில் பதிய வைக்கிறார் கதை ஆசிரியர்..! 

அதுவும் குத்துச்சண்டைப் போட்டியில் ஒரேகுத்தில் எதிராளியின் வாயை ரத்தக்களறியாக்கி வெற்றி வாகைசூடும் மைக்டைசனின் காட்சி வேறு படிப்பவர்கள் கையது கொண்டு வாயது பொத்தி மரியாதை செய்ய அநிச்சையாக தூண்டப்படுகிறார்களே..!

கூந்தலுள்ள மகராசி இடமும் முடிவாள் வலமும் முடிவாள் ....
பல்லிருப்பவன் பக்கோடா  சாப்பிடுகிறான்.. கடித்து மென்று,  ருசித்துச் சாப்பிடமுடியாமல் மிக்ஸியில் பத்தியமாய் பொடித்துச் சாப்பிட்டு உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்து ஏங்குவதுபோல -சின்னக்குழந்தை மிட்டாய்க்கு ஆசைப்படுவதுபோல பாவம் பரிதாபப்படவைக்கிறார்..

வாய்க்கொழுப்பு சீலையில் வடிய கொழுப்பெடுத்துப்போய் எதிராளியையை நாக்கு மேலே பல்லைப் போட்டு ஏதாவது பேசப் போய் அங்கே பழி ஒரு பக்கம் பாவம் ஒருபக்கமாக வாங்கிக் கட்டிக்கொள்வது ஒரு பாவமும் அறியாத பல்தானே.. 

பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திடுவேன் என்பார்கள்.. சண்டையில் பல்தான் உடையும் .. காரணமான நாக்கு பத்திரமான  முப்பத்திரண்டு சிப்பாய்களான பற்களின் கோட்டை நடுவில் பத்திரமாக அரசோச்சி பாதுகாப்பாக இருந்துகொள்ளுமே..! எல்லாச்சோதனைகளும் பல்லுக்குத்தானே..!

ஆனால் இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் தேனிருக்கும் இடத்தினைத்தேடி நாடும் வண்டுபோல பல்லிருந்த வெற்றிடத்தை அடிக்கடி தேடி நலம் விசாரிக்கும் நன்றியுள்ளதாக இருக்கிறதே நாக்கு..!

கதாசிரியர் தானாகட்டும் பல் சுளுக்கும் அளவுக்கு சிரிக்க வைக்க வரிக்கு வரி நகைச்சுவை சொக்குப்பொடி தூவி எழுதி சொக்கவைத்துவிடுகிறாரே..

விழுந்து விழுந்து சிரித்து எழுந்து பார்த்தால் காணாமல் போன பற்களுக்கு கதை ஆசிரியரே பொறுப்பு...

முழுமையான கவனத்துடன்  இலக்கின் மீது வைத்த விஜயனின் குறி தவறாதது போல முரசின் முழக்கமாக நகைச்சுவை வெடிச்சிரிப்பு  அதிர, படங்கள்  கதைக்கு மகுடம் சூட்ட, உயிரோட்டமான கதை ...!



 


Thank you !
My Dear Aravind Kumar
- vgk






    

இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்

திரு.



     E.S. சேஷாத்ரி    


அவர்கள்


esseshadri.blogspot.in







 

இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திரு. E.S. சேஷாத்ரி - காரஞ்சன் [சேஷ்]


அவர்களின் விமர்சனம் இதோ:


“பல் போனால் சொல் போகும்” என்பது பழமொழி. முகத்திற்கு அழகூட்டுவதில் பற்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பற்களைப் பராமரிப்பதின் அவசியத்தை பற்பல கோணங்களில் அலசி ஆராய்ந்து பல்வேறு உதாரணங்களுடன், முழுநீள நகைச்சுவைக் கதையாய் வடித்து, அனைவரையும் பல்லைக்காட்டி சிரிக்க வைத்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.


“பற்கள் அமைவது கூட பகவான் கொடுக்கும் வரமோ?” என எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு விதமான வர்ணனைகள் மூலம் பஞ்சாமியின் பற்களை நம் மனக்கண்ணில் பதிய வைத்து விடுகிறார் கதாசிரியர். பாத்திரத்தைப் படைப்பதில் மட்டுமின்றி, மனதில் பதிய வைப்பதும் அவருக்கே உரித்தான கலை.


பல்தானே என அலட்சியப் படுத்தினால் பற்பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை அழகாக விளக்கிச்செல்கிறார். தன் பற்கள் அழகாகப் பளிச்சிட வேண்டுமென்று, உமிக்கருக்கு முதல் நவீன பற்பசைகள் உபயோகித்துப் பார்ப்பதுவரை பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனளிக்காததில் வருத்தமடைகிறார் பஞ்சாமி.


இதற்கிடையில் வாய்நாற்றம் வேறு. நெருங்கியவர்கள் சொன்னாலும் நம்பாத நம் கதாநாயகன், கட்டிய மனைவியே கண்டித்துச் சொல்லும் அளவுக்குப் போனபின்தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தவராகிறார். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? சிறுவயதிலேயே கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் பற்களை சீரமைத்து இருக்கலாம். தாம்பூலம் தரிக்கும் பழக்கம் உள்ளவராய் இருப்பதால் கண்டிப்பாக கறைபடிவதை தடுக்க கவனமுடன் இருந்திருக்கலாம். ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். எனவே கூச்சப்படாமல், குடும்பத்தினர் எச்சரித்தால் உடனே அதற்கான உரிய நிவாரணத்தைத் தேட வேண்டுமென்பதை அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.


மருத்துவமனையில் தன்னைப் போன்ற பிரச்சினையால் பலர் அவதியுறுவது கண்டு ஆறுதல் அடைவதாகக் காட்டியது, மனித மனங்களின் இயல்பான சிந்தனை என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான்.


பல்மருத்துவரிடம் சென்றவுடன் அவர் பட்ட பாடுகள் அனைத்தும் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டவிதம், பல்வேறு பல்டாக்டர்களிடம் இக்கதையை எழுதுவதற்காகக் குறிப்புகள் சேகரித்திருப்பாரோ என எண்ணவைத்து விடுகிறது.


படங்கள் வேறு ஆங்காங்கே பல்மருத்துவமனையில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்துவிடுகிறது. பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.


போலிப் பற்களைக் கட்டிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் போலியான டாக்டரிடம் சென்றதுதான் தவறு. முகம் அழகு பெறும், வாய்நாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணச் சென்று, அடுக்கடுக்காக பல இன்னல்களைச் சந்தித்து, பொறுமையுடன் அவற்றைத் தாங்கியும் பலனளிக்கவில்லை என அறிகையில் பஞ்சாமி மீது நமக்கு இரக்கம் ஏற்பட்டுவிடுகிது.


போதாக்குரைக்கு மாமனாரின் வருகையால் ஏற்பட்ட மனமாற்றம் அவரை அனைத்துப் பற்களையும் எடுத்துவிடத் தூண்டிவிடுகிறது. பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி, கட்டிக்கொள்ளப்போகும் பல்செட்டைக் கண்ணில் கண்டதும், காதலியுடன் டூயட் பாடும் காதலன் நிலைக்குக் கதாநாயகனைச் சித்தரித்த விதம் கற்பனையின் உச்சம்.


பற்கள் கட்டிக்கொண்ட பின்னர், ஒருவித அசெளகர்யத்தை உணர்வதும், ஏதோ வேண்டாத பொருள் உள்ளே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதும், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? என எண்ணவைத்ததும் மிக இயல்பாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த இன்னல்கள் நாளடைவில் அவருக்குப் பழகிப்போன விஷயங்கள் ஆகி, பல்செட்டைக் கழற்றி வைத்துவிட்டு வாயைக் காற்றாட வைத்துக் கொள்ளும் அளவிற்குப் போனது நகைச்சுவை கலந்த எதார்த்தம்.


ஒரு தெள்ளிய நீரோட்டம் போல் நகைச்சுவையுடன், கதை தொய்வில்லாமல் சென்ற விதம் அருமை. ஒவ்வொரு முறையும் பற்கள் எடுக்கப்படும்போது அவரது முகமாற்றத்தை வர்ணிக்கும் இடங்கள் அருமை. கட்டிய பற்கள் கொட்ட நேர்வதும், விட்டுப் பிரிய மனமின்றி நிரந்தரமாகப் பற்களை பொருத்துவதற்காக ஆகும் செலவைக் கேட்டவுடன், ‘பல்’ பிரச்சனையால் ‘பல்ஸ்’ வீக்காகி விழும் நிலைக்கு ஆளாகிவிடுவதாகக் காண்பித்ததன் மூலம், எந்த ஒரு நோய்க்கும் அல்லது பிரச்சனைக்கும் உரிய நேரத்தில் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுவதன் மூலம் பல்வேறு இன்னல்களைத் தவிர்த்து, பல்வேறு வகையிலும் பாராட்டுக்குரியவராகி பல்லாண்டு நலமுடன் வாழலாம் என்பதை உணர்த்திய ஆசிரியருக்கு பற்பல பாராட்டுகள்! பல்லாவரத்தைச் சேர்ந்த போலி டாக்டர் பல்லவராயன் இனி பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகட்டும் என பஞ்சாமியின் குரல் சபிப்பது நம் காதில் ஒலிக்கிறது.

நன்றி! 


-காரஞ்சன்(சேஷ்)
esseshadri.blogspot.in
Thank you Mr. Seshadri Sir.
- vgk
 








மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாகப்பிரித்து வழங்கப்பட உள்ளது.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-28 



வாய் விட்டுச் சிரித்தால் .... 


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


31.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்
    

17 கருத்துகள்:

  1. இனிப்பான
    இரண்டாம் பரிசினை வென்றுள்ளவர்கள்
    இருவருக்கும்
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் பரிசினை வென்றுள்ள இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  3. 5/9-ல் 3 தெரிந்தாயிற்று; இன்னும் இரண்டு பாக்கியிருக்கா?..

    நகைச்சுவை கதைக்கு நகைச்சுவை கலந்ததாய் விமர்சனமும் இருந்தால் தேவலை என்று நடுவர் தீர்மானித்திருப்பார்
    என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. ஈ. எஸ். சேஷாத்திரி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்! #2ஆவது பரிசு!

    பதிலளிநீக்கு
  5. திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும், திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. இரண்டாம் பரிசு எனக்குக் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசினை வென்றுள்ள இளம் கன்று அரவிந்த் குமார் அவர்களுக்கும்(லொகேஷன் ரொம்ப நல்லா செட் ஆகிடுச்சு போல இருக்கே! அம்மாவோடவே அடுத்த போட்டியா) நண்பர் சேஷாத்ரி அவர்க்ளுக்கும் எனது வாழ்த்துகள்! மனம் திறந்த பராட்டுகள்! தொடரட்டும் வெற்றிகள் - தொடர்வெற்றிகள்! என்றும் அன்புடன் MGR

    பதிலளிநீக்கு
  8. இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. http://esseshadri.blogspot.com/2014/08/blog-post.html
    காரஞ்சன் [சேஷ்] திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  10. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  11. திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு.சேஷாத்திரி அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. ஈ. எஸ். சேஷாத்திரி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் திரு. சேஷாத்திரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திரு அரவிந்தகுமாரு திரு சேஷாத்திரி அவங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திரு அரவிந்தகுமார் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. இரண்டாம் பரிசு எனக்குக் கிடைத்தது மகிழ்வளிக்கிறது! என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திரு.J. அரவிந்த் குமார் அவர்களுக்கு என் பாராட்டுகள்! வாழ்த்துகள்! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு