என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

VGK 23 / 01 / 03 - FIRST PRIZE WINNERS ............. ‘யாதும் ஊரே யாவையும் கேளிர் !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 23 - 

’ யாதும் ஊரே யாவையும் கேளிர் !



இணைப்பு:




  


 

 

 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 





நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து
















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



முதல் பரிசினை முத்தாக 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்





 திரு.


 E.S.சேஷாத்ரி  


அவர்கள்


 




முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள 



 திரு.  E.S.சேஷாத்ரி  




அவர்களின் விமர்சனம் இதோ:



கோவில்கள் பண்டைக்காலம் முதல் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த ஒரு விஷயம். கோவில்கள் அக்காலத்தில் இயற்கை அரணாகவும், கலைக்ககூடங்களாகவும், கலை, இலக்கியம், ஆன்மிகம் வளர்க்கும் இடமாகவும், பசிப்பிணி நீக்கும் மையமாகவும் திகழ்ந்தவை. “கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்று உலகநீதி உரைப்பதிலிருந்து கோயிலின் மகிமையை அறிந்துகொள்ள முடிகிறது.

கோவில் ஒன்று இடிக்கப்பட நேர்ந்ததையும், அதனால் அப்பகுதி மக்களின் மனவருத்தங்களையும் கருவாகக் கொண்டு ஆசிரியர் படைத்துள்ள இக்கதை நம் நெஞ்சத்தில் இனம்புரியா ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்திச் செல்கிறது..

கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண், தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, கடவுள் அருளால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு, அவள் வாழத்துணிந்து, வாழ்ந்து மறைந்த பின்னும் அங்கிருப்போர் உள்ளங்களில் வாழ்வதாக முடித்த ஆசிரியரின் படைப்புத்திறன் பாராட்டுக்குரியது.

“திக்கற்றவருக்குத் தெய்வமே துணை”. எண்பது வயதான கண்ணாம்பாக் கிழவியை (அவளிட்ட கோலங்களோடு) நம் கண்முன் நிறுத்திவிட்டு, 60 ஆண்டுகளுக்கு முந்தைய அவளது இளமைப் பருவத்தை சுழல் போட்டுக் காண்பிக்கும் ப்ளாஷ்பேக் போன்று கதையில் காண்பிக்கிறார். மாலையிட்ட கணவன் கைவிட்டாலும், மாலைகட்டித் தந்து பிழைக்கிறாள் மனமாற்றம் தந்த கடவுளுக்கு.

கட்டிய கணவன் கைவிட்டுவிடுகிறான் தாயாகும் தகுதி அவளுக்கில்லை என்று. பிறந்த ஊர், புகுந்த ஊர் இரண்டிலும் இருக்க மனமின்றி கால்போன போக்கில் செல்கிறாள், முடிந்துவைத்த விஷத்துடன் தன் கதையை முடித்துக்கொள்ள. 

அவள் கதை முடிந்துவிட்டால் அருமையான கதை நமக்கேது?

அரசமரத்தடி விநாயகர் கண்ணில்பட, அவர்முன் அந்த பூச்சிமருந்தைத் திறந்துவைத்துவிட்டு, கண்மூடும் முடிவை உணர்த்த கண்மூடித் தொழும்வேளை கண் திறக்கிறார் கடவுள். மரத்தின் மேலிருந்து குதித்த வானரங்களின் சேட்டையால், அந்த விஷம் மண்ணோடு மண்ணாக, அவளது தற்கொலை முடிவும் கணநேரத்தில் மாறி, வாழத் துணிகிறாள்.
  
அப்பகுதியில் வசித்த எளிய மக்களின் உயரிய உள்ளத்தால் அந்த அரசமரத்தடி விநாயகருக்குக் கோயில் எழும்புகிறது. அந்த உயரிய பணிக்கு தன்னால் இயன்ற சரீர ஒத்தாசைகள் செய்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆகிறாள்..

உடலில் தெம்பும் உளத்தில் உழைத்துப் பிழைக்க உறுதியும் கொண்டு அருகிலிருந்த வீடுகளில் வேலை செய்து, இரவில் அடைந்துவிடுகிறாள் ஒரு கிழவியின் குடிசையில். தங்குவதற்கு தன் குடிசையில் இடமளித்த அந்தக் கிழவியின் முடிவு குறித்து ஓரிரு வரிகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

உணவு, உடை, உறையுள்: அடிப்படைத் தேவைகள் நிறைவேறுதல்- (“மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்” –கவியரசர்)

மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்த குரங்கை மரியாதைகளுடன் அடக்கம் செய்து பிள்ளையார் கோயிலை ஒட்டியபடி ஆங்கோர் ஆஞ்சநேயர் கோயில் எழுப்புகின்றனர், இரக்க உணர்வுடன் வாழ்ந்த மக்கள். அதற்கும் மனமுவந்து தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளைச் செய்கிறாள்.

தன்னைக் காத்த கடவுளுக்கு காவலாளிபோல் இருக்க, அங்கிருந்த மக்களின் கருணையால் ஆலய வளாகம் அவளது உறைவிடமாகிறது.

முதுமைப் பருவத்திலும், மாலை கட்டித் தருதல், கோலமிடுதல், ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் போன்றவற்றிற்கு உதவியாய் இருக்கிறாள்.

அவ்வப்போது அர்ச்சகரின் பரிவால் கிடைக்கும் பிரசாதங்கள் வயிற்றுப் பசிதீர்க்கும் உணவாகின்றன..

பண்டிகைக் காலங்களில் பரிவோடு சிலர் வழங்கும் புத்தாடைகள்தான் அவளுக்கு உடுத்திக்கொள்ள உடைகள்.

அருகிலிருந்த கட்டணக்கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளில் கண்ணாம்பாளுக்கு இலவச அனுமதி.

சில நேரங்களில் குடிநீர்க்குழாய் வழங்கும் இலவசக் குடிநீர் இவளின் பசிதீர்க்கும் மருந்து.

இலக்கியங்கள் காலக் கண்ணாடி! - கதாசிரியரின் இந்தக் கதையும் தான்!

கதாசிரியர் தன் சிறந்த படைப்புத்திறனால், அறுபதாண்டுகளுக்கு முன் அந்த இடம் இருந்த நிலை, அங்கு வாழ்ந்த கீழ்த்தட்டு மக்களின் நிலை, அவர்களின் மனநிலை, காற்றை மாசுபடுத்தாத அன்றைய போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றைக் கண்முன் நிறுத்திவிடுகிறார்.

இப்போது அந்த இடத்தின் நிலை, மக்கள் தொகைப் பெருக்கம், சாலையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகனங்களின் பெருக்கம், சிறுவியாபாரிகள் இல்லாமல் கடைகள் கடல்களான நிலை, அவசர உலகம், இரைச்சலும் பரபரப்பும் மிகுந்த வாழ்க்கை, அதற்கேற்ப விரையும் வாகனங்கள், அதனால் பெருகும் விபத்துகள், படித்த மாந்தரும் விபத்தினைப் பாராமுகமாய் விரையும் மனநிலை ஆகியவற்றை இதைவிட அழகாக எப்படி உரைக்க முடியும்?.

மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துபோன குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.  

இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.
 “

எதார்த்தத்தைப் படம் பிடித்து, நம்மை அறைந்து செல்லும் வரிகள்!

அன்னை தெரசாவின் அமுதமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.
“தாய்மை அடைந்தால் ஓரிரு குழந்தைகளுக்கு மட்டுமே தாய்! தாயுள்ளம் கொண்டால் ஓராயிரம் குழதைகளுக்குத் தாய்!

 “எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா!”

கண்ணாம்பாளின் தாயுள்ளத்திற்குச் சான்றளிக்கும் இடங்கள்!

1.   மரத்திலிருந்து விழுந்து இறந்த குரங்கு தன்னைக் காப்பாற்றிய குரங்காக இருக்குமோ? என எண்ணி வருத்தமடைதல்.

2.   தனக்குக் கிடைக்கும் உணவில் சிறு அளவாவது மாருதிக்கும், அனுமந்துவுக்கும் எடுத்து வைத்துப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல். அவை சாப்பிடும்போது தன் குழந்தைகளைப் போல் அவற்றைப் பார்த்து மகிழ்தல்.

3.   விபத்தில் சிக்கியவர்களைக் கண்டு “யார் பெற்ற பிள்ளையோ? இப்படி நேர்ந்ததே எனத் துடித்தல்.

4.   பள்ளிக் குழந்தைகளிடம் அன்புகாட்டி “ நல்லா படிக்கணும், நிறைய மார்க் வாங்கணும்” என வாழ்த்தியனுப்புதல்.

நன்றி மறவா நல்லுளம்!

நன்றி மறவா நல்உளத்தோடு தன்னை வாழவைக்கும் தெய்வங்களான விநாயகருக்கு ஒரு அர்ச்சனையும், ஆஞ்சநேயருக்கு ஒரு வடைமாலையும் சாற்ற நினைத்து, தன் வாழ்நாள் சேமிப்பான 2303 ரூபாயை அர்ச்சகரிடம் கொடுத்து, தன் ஆசை நிறைவேற ஆகும் செலவான 303 ரூபாய் போக மீதிப்பணம் 2000 ரூபாயை தன் இறுதிச் சடங்கிற்கு செலவழித்து கரைசேர்க்க வேண்டுகையில் நம் கண்கள் குளமாகின்றன. குருக்களோ “பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். உனக்கு ஒன்றும் ஆகாது. மனதைத் தளரவிடாதே, நூறு வயது வாழ்வாய் என உரைப்பது ஆறுதலாய் அமைகிறது.

அந்த பூஜையைக் கூட பத்துமணியளவில் தன் குழந்தைகள் போல் வளரும் மாருதியும் அனுமந்தும் வரும் நேரத்தில் செய்து பிரசாதம் வழங்கச் சொல்லி, அதை அவைகளுக்கு அளித்து உண்டு மகிழ்வதைப் பார்க்கும் தாயுள்ளம் நம்மை நெகிழச் செய்கிறது.

அந்தக் குருக்களுக்கு வந்த பதிவஞ்சல் இடியாய் ஒரு செய்தியை அவளுக்குள் இறக்க, கோயில் இடிக்கப்படப் போவதை எண்ணி வருந்தி    
     “துன்பப் படுறவங்க எல்லாம்  தங்களோட குறைகளைத் தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க. அந்த தெய்வத்துக்கே…………….?”

என மனம் இடிந்து அங்கேயே தன் இறுதி மூச்சை விட்டுவிடுகிறாள்.

அன்பு செலுத்துபவர்கள் உள்ளவரை அனாதை யாருமில்லை!
   
பிறந்த ஊர், புகுந்த ஊர் இரண்டையும் விட்டு வேறொரு ஊர் வந்து வாழ
நேர்ந்த கண்ணாம்பாளுக்கு “யாதும் ஊரே!” என்பது மிகவும் பொருந்துகிறது.

அவளிடம் மனிதர்கள் மட்டுமல்ல, நன்றியோடு நடந்துகொண்ட     குரங்கினமும்  அவளுக்கு உறவுகள் தான். நன்றிமறக்கும் மனங்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

கண்ணாம்பாள் எடுத்து வைக்கும் உணவை உரிமையாக உண்டபின்னர் அவளுக்கு நன்றி செலுத்துவதுபோல் அவள் கைகளைத் தடவிச் செல்லும் இடத்திலும், அவள் மறைந்த உடன் மாருதியும், அனுமந்துவும் கதறியழும் இடத்திலும் கல்மனமும் கரைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

கதாசிரியர் அதற்கேற்ப படங்களைத் தேடி இடையில் சேர்த்தது அந்தக் காட்சிக்கு மேலும் வலு சேர்த்துவிடுகிறது. ஆதரவளித்த மக்கள் மட்டுமின்றி, இடுகாடு வரை இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அந்தக் குரங்குகளும் நம்முள் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றன.

“யாவையும் கேளிர்!” என்பதும் இதன் மூலம் பொருந்துகிறது.

இடிக்கப்படப்போகும் அந்தக் கோயிலின் நினைவலைகள் மக்கள் நெஞ்சில் இடம் பிடித்திருக்கும்வரை, அந்தக் கண்ணாம்பாக் கிழவியின் நினைவும் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. தம் படைப்புத் திறனால் அந்தப் பாத்திரத்தை அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்கச் செய்துவிடுகிறார் கதாசிரியர்.

ஆழமனத்துள் அழுத்தமான உணர்வுகளை, பொருத்தமான தலைப்பிட்டு, அருமையாக விதைத்துச் சென்ற கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!.

-காரஞ்சன்(சேஷ்)
esseshadri.blogspot.in

 






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    




முதல்  பரிசினை  முத்தாக


வென்றுள்ள மற்றொருவர்






மீண்டும் 





கீதமஞ்சரி


திருமதி.


  கீதா மதிவாணன்  

அவர்கள்




முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள



திருமதி.


  கீதா மதிவாணன்  


அவர்களின் விமர்சனம் இதோ:


பெற்றால்தான் பிள்ளையா என்பார்கள்பெற்றால்தான் தாய்மையா என்று கேட்கத் தோன்றுகிறதுவயிற்றில் பிள்ளைகளை சுமப்பதுதான் தாய்மை எனில் நெஞ்சத்தில் தாய்மை சுமப்பவர்களை என்னவென்று சொல்வதுஅவர்கள் மாத்திரம் தாய்கள் இல்லையா? என்ன ஒரு அபத்தம்!

குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அறுபது வருடங்களுக்கு முன் கணவனாலும் சுற்றத்தாலும் விரட்டியடிக்கப்பட்ட கண்ணாம்பாள் பாட்டிக்கு இன்று எவ்வளவு குழந்தைகள். பள்ளிக்கு விடுமுறை விடப்படும் அளவுக்கு பெரிய மனுஷியாக கொண்டாடப்படுகிறாளே அவள்.. அவளை இடுகாட்டில் கொண்டுவைக்கும் வரை கூட வர எவ்வளவு பேர்! அவளை விரட்டிவிட்ட கணவன் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் பார்த்திருக்கவேண்டும் அவளது பெருமையை!

ஊருக்கும் பேருக்குமாய் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்குக் கூட இத்தனைப் பெருமை சாத்தியப்பட்டிருக்காது. கண்ணாம்பா பாட்டி மனிதர்களிடத்தில் மட்டுமல்லாது ஐந்தறிவு ஜீவன்களிடமும் காட்டும் தாய்மையும் கருணையும் மனந்தொடும் அற்புதம்.

இந்த கண்ணாம்பா பாட்டியைப் போல் வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமில்லாமல் துரத்தியடிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர்தாங்கள் செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிப்பவர்கள் எத்தனைப் பேர்எல்லோருக்கும் இதுபோலொரு வாழ்க்கை சாத்தியப்படுகிறதா என்னஇந்தக் கண்ணாம்பா பாட்டியும் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் விஷம் குடிக்க வந்தவள்தானே… உன் வாழ்க்கையின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்று குறிப்பால் தடுத்து நிறுத்திய அதே கடவுள்இனி அங்கு தனக்கு இடமில்லை என்று புரிந்ததும் தனக்குப் பின் தன் பக்தையின் கதி என்னாகும்  என்று யோசித்து தனக்கு முன்னாலேயே அவளை அழைத்துக் கொண்டார் போலும்.

அவளை சுற்றி வாழும் மனிதர்கள் இரக்கமற்றவர்களாக இருந்திருந்தால் அவள் மறுபடியும் விஷத்தைத் தேடிச்செல்லும் அவசியம் நேர்ந்திருக்கும். ஆனால் அவளைத் தங்களுள் ஒருவராய் ஏற்று அன்போடு அரவணைத்துக்கொண்டனர் அக்கம்பக்க எளிய மனிதர்கள். காலப்போக்கில் நாகரிகமும் நகரமயமாக்கமும் விரிய விரியமனங்களும் மனிதாபிமானமும் குறுகிப் போவதை கண்முன் காட்சிப்படுத்துகின்றன கதையோடு ஒட்டிய வரிகள்.  

எளிய மனிதர்களிடத்தில் இருந்த கள்ளமில்லாத அன்பும் கண்ணியமும்தான், பருவ வயதில் போக்கிடமற்று அநாதையாய் வந்துசேர்ந்த போதிலும் கண்ணாம்பாளை கௌரவத்துடனும் மானத்துடனும் வாழ வழிகோலியிருக்கிறது. அவள் ஆசைப்படி தன்னுடைய காசில் பிள்ளையாருக்கு அர்ச்சனையும் ஆஞ்சநேயருக்கு வடைமாலையும் சாத்த முடிவதோடு தன்னுடைய அந்திமக் கிரியைக்கும் அடுத்தவர் உதவியின்றி ஏற்பாடு செய்து கடைசிகாலத்திலும் கௌரவத்தோடு போய்ச்சேர முடிந்திருக்கிறது.

நகரவிரிவாக்கத்தில் கடைகள்வீடுகள் என்று பல இடங்களும் இடிக்கப்படுவது நமக்குத் தெரியும்.    இடிப்பவர்களைப் பொறுத்தவரை அவை 
வெறும் கட்டடங்கள்தாம்ஆனால் அந்தவீடுகளிலோ கடைகளைச் 
சார்ந்தோ வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு அவை கோயில்கள்
ஆனால் கோயில்களே இடிக்கப்படும் நிலை வரும்போது
அந்த தெய்வத்தை நம்பி வாழ்பவர்களின் கதி?

காலங்காலமாக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகள் சிதைந்து சிதிலமுறுவதை நேரடியாகப் பார்க்கும் போது மனம் படும்வேதனையை 
என்னவென்பது?

இப்படியொரு சூழலில் விஷயத்தைக் கேள்விப்பட்ட நொடியே தன் 
உயிரைத்துறக்கிறாள் ஒருத்தி என்றால் அவளுடைய வாழ்க்கையை 
எந்த அளவுக்கு அந்தக் கோவில்களும் அவற்றில் உறையும் தெய்வங்களும் ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

சொல்லப்போனால் அந்தக் கோவில்கள் கூட அவளுக்குக் குழந்தைகளைப் போன்றவைதாம். மூத்த குழந்தை பிள்ளையார் கோவில். இளைய குழந்தை அனுமன் கோவில். தன் கண்முன்னால் குழந்தைகள் வளர்வதையும் பேரும் புகழும் பெறுவதையும் கண்ணாறக் கண்டுகளித்து பூரிக்கும் தாய்க்கு நிகராய் கண்ணாம்பா பாட்டியும் படிப்படியாய் கோவில்களின் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்து நிற்கிறாள். தான் வாழும்போதே தன் கண்ணெதிரிலேயே தன் குழந்தைகளின் வீழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் எந்தத் தாய்தான் தன்னுயிரைத் தக்கவைத்திருப்பாள்?

இனி கோவில் இல்லாமல் தான் என்ன ஆவோம் என்று 
நிச்சயம் நினைத்திருக்க மாட்டாள் அம்மூதாட்டி. கோயில் இல்லாமல் இந்தப் பள்ளிக் குழந்தைகள் என்ன பாடுபடுவார்கள்?தன் குழந்தைகள் போல் வளர்க்கும் மாருதியும் அனுமந்துவும் என்ன ஆவார்கள் என்றுதான் சிந்தித்திருக்கும் அவளது மனம்தாயல்லவா 
அவள்?

கதை முழுவதும் விரவி நிற்கிறது கண்ணாம்பா பாட்டியின் தாய்மையும் அன்பும் கருணையும்இந்தக் கதையின் பின்னணியாக டோல்கேட் ஆஞ்சநேயர்கோவில் இடிக்கப்பட்டபோது தன் மனம் பட்ட பாட்டைக்
குறிப்பிட்டிருக்கிறார் கதாசிரியர் கோபு சார்

இதுபோல் அவதிப்பட்ட நெஞ்சங்கள் எத்தனையோஒரு பானை 
சோற்றுக்கு ஒரு சோறு பதமாக பல நூறு நெஞ்சங்களின்சான்றாக 
இந்த கண்ணாம்பா பாட்டியைக் காட்டி கதையை முடித்துவிட்டார்

தனக்குப் பிரியமான ஒரு பொருள் தன்னைவிட்டுப் போகும்போது 
உயிரே போவது போல் இருந்தது என்று உவமை சொல்வார்கள்இங்குதன் உயிரையே போக்கி அந்த உவமையை உண்மையாக்கிவிட்டார் 
பாட்டி.     
geethamanjari.blogspot.in



  









மனம் நிறைந்த பாராட்டுக்கள். 



அன்பான இனிய நல்வாழ்த்துகள்.






    


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.




இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-03-03-third-prize-winner.html



http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-02-03-second-prize-winners.html


காணத்தவறாதீர்கள் !






 HAT-TRICK WINNERS' 


UPDATED LATEST LIST FOR 



VGK-01 TO VGK-23 

WILL BE PUBLISHED SHORTLY, 

AS A SEPARATE POST.





ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியலில் 

நிறைய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் 


VGK-01 TO VGK-23 


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பற்றிய 

புதுப்பிக்கப்பட்ட பட்டியல் விரைவில் 

தனிப்பதிவாகவே வெளியிடப்பட உள்ளது.






oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-25 

 தேடி வந்த தேவதை 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

18 கருத்துகள்:

  1. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ளவர்கள்
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வை.கோ - சிறுகதை விமர்சனப் போட்டி நடத்தி - பல்வேறு பதிவர்களிடம் இருந்து விமர்சனங்கள் பெற்று - நடுவருக்கு அனுப்பி - போட்டி முடிவுகளைப் பெற்று - பரிசுகள் வழங்கி - பரிசுகள் பெற்ற விமர்சனங்களைப் பெற்று பிரசுரித்து மகிழ்வது பாராட்டுக்குரிய செயல்.

    முதல் பரிசு பெற்ற காரஞ்சன் ( சேஷ் ) என்கிற E.S.சேஷாத்ரி மற்றும் கீத மஞ்சரி என்கிற கீதா மதி வானன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - மேன் மேலும் பலப் பல பரிசுகள் பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. பாடல் வரிகள், அமுதமொழிகளோடு இனிய விமர்சனம் செய்த திரு. E.S.சேஷாத்ரி ஐயா அவர்களுக்கும், நெகிழ்ச்சியான விமர்சனம் செய்த சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது ம்கிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! அருமையாக விமர்சனம் எழுதி என்னுடன் பரிசு பெறும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! வருகை தந்து வாழ்த்துரைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  5. முதலாம் பரிசினை முத்தாய் பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  6. http://esseshadri.blogspot.com/2014/07/blog-post_6.html

    Mr E S Seshadri

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  7. என்னுடைய விமர்சனம் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருப்பதை அறிகையில் மிகவும் மகிழ்வாக உள்ளது. தொடர்ந்து பல போட்டிகளிலும் பங்கேற்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

    புதுமையான போட்டியின் மூலம் அற்புதமான வாய்ப்புக்களை அள்ளி வழங்கும் கோபு சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்புறப் பங்காற்றும் நடுவர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

    முதல்பரிசை என்னோடு பகிர்ந்துகொள்ளும் திரு.சேஷாத்ரி அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. நண்பர் சேஷாத்திரி ,சகோதரி கீதா மதிவாணன் இருவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. முதல் பரிசினை பெற்றிட்ட வெற்றிமிகு வலைப் பதிவாளர்கள் திரு. E.S.சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. முதல் பரிசினை முத்தாய் பெற்ற சேஷாத்ரி சார் அவர்களுக்கும், கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. திரு. சேஷாத்திரி ,திருமதி கீதா மதிவாணன் இருவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. முதல் பரிசினை தட்டிச் சென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திருமதி கீதா மதிவாணன் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. //முதல் பரிசு வென்றுள்ள நண்பர் சேஷாத்திரி ,சகோதரி கீதா மதிவாணன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கண்ணாம்பாள் எடுத்து வைக்கும் உணவை உரிமையாக உண்டபின்னர் அவளுக்கு நன்றி செலுத்துவதுபோல் அவள் கைகளைத் தடவிச் செல்லும் இடத்திலும், அவள் மறைந்த உடன் மாருதியும், அனுமந்துவும் கதறியழும் இடத்திலும் கல்மனமும் கரைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு