என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 20 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 1 of 8 ]

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.

“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.

பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.

வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.

குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.

“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.

தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.



புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.

“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.



தொடரும்

33 கருத்துகள்:

  1. கதை விறுவிறுப்பாகச் செல்கிறது,அடுத்த பகுதி எப்பொழுது?


    எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டுள்ளேன்,முடிந்தால்
    கலந்து கொள்ளவும்

    பதிலளிநீக்கு
  2. திருமதி ராஜி அவர்களின் முதல் வருகைக்கு நன்றி.

    விறுவிறுப்பாகச் செல்வதாகத் தாங்கள் கூறிய இந்தக் கதை கடைசி வரை விறுவிறுப்பாகவே சென்று உங்களைப் போன்றவர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்.

    அடுத்தடுத்த பகுதிகள் வெளியிடப்படும் நாட்கள்:
    30.01.2011; 04.02.2011; 09.02.2011; 14.02.2011; 19.02.2011; 24.02.2011 &
    01.03.2011.

    பதிலளிநீக்கு
  3. விறுவிறுப்பாய் ஆரம்பித்து இருக்கிறது காசி யாத்திரை. தொடர்கிறேன்…

    பதிலளிநீக்கு
  4. நான் ஏதோ பேய் பூதம் என்று பயந்து விட்டாளோ என்று பயந்தேன்(?).
    விறுவிறுப்பாய் போகிறது ரயில்

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள வெங்கட் & சிவகுமாரன்,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    இந்த ரயில் தமிழ்நாட்டில் மங்கையர் மலர் மூலம் 2006 ஆம் ஆண்டும், [பிறகு கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு] கன்னட மொழிப் பத்திரிகை ”கஸ்தூரி” மூலம் கர்னாடகத்தில் 2008 ஆம் ஆண்டும் ஓட்டப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாகப் போகிறது கதை. அடுத்த பகுதி எப்போ சார்?

    பதிலளிநீக்கு
  7. கதை நன்றாக ஆரம்பித்து இருக்கிறது. நானும் காசி வரை வருகிறேன். எனக்கு ஜன்னல் சீட்டு தான் வேணும்.

    பதிலளிநீக்கு
  8. I am privileged to have read the climax before itself..dear all its a worth reading story!!

    பதிலளிநீக்கு
  9. middleclassmadhavi
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    அடுத்தடுத்த பகுதிகள் வெளியிடப்படும் தேதிகள்
    திருமதி ராஜி அவர்களுக்கு நான் கொடுத்தள்ள பதிலில் தெளிவாக உள்ளன. தயவுசெய்து பார்க்கவும்.

    கோவை2தில்லி said...
    //கதை நன்றாக ஆரம்பித்து இருக்கிறது. நானும் காசி வரை வருகிறேன். எனக்கு ஜன்னல் சீட்டு தான் வேணும்.//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. காசி யாத்திரைக்கு வர விரும்பும் தங்களுக்கும்
    அடுத்த பகுதியிலேயே ஜன்னல் சீட்டு கொடுக்கப்படும்.

    Girija said... // I am privileged to have read the climax before itself..dear all its a worth reading story!! //
    என் படைப்புக்கு ‘விளம்பர அதிகாரி’ யாக செயல்படத் தொடங்கியுள்ள உனக்கு என்
    நன்றிகள் உரித்தாகுக !.

    பதிலளிநீக்கு
  10. அருமை... ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  11. திரு எல்.கே அவர்களின் வருகைக்கும், எதிர்பார்ப்புக்க்கும் மிக்க நன்றி. 4 அல்லது 5 நாட்கள் இடைவெளிகளில் வெளிவர உள்ள தொடரின் அடுத்தடுத்த பகுதிகளுக்கும் வருகை தாருங்கள்.

    [ மூன்றாவது பூணூல் குழந்தை பிறப்பிற்காகப் போடுவது இல்லை என்று சொல்லி, வேறொருவர் பதிவுக்கு, நீங்கள் எழுதிய பின்னோட்டத்தைப் படித்தேன். நீங்கள் சொல்வது தான் சரி ]

    பதிலளிநீக்கு
  12. “காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் !

    பதிலளிநீக்கு
  13. பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

    சுவரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டோம். !

    பதிலளிநீக்கு
  14. இராஜராஜேஸ்வரி said...
    //“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் !//

    அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இராஜராஜேஸ்வரி said...
    பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.

    சுவரஸ்யமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டோம். !//

    எப்படியோ கவனித்தால் சரி.

    கவனிப்பில் தானே சுவரஸ்யமே அடங்கியுள்ளது.

    பதிலளிநீக்கு
  16. //பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.// நான் அக்காவுடன் பிடித்த சண்டைதான் ஞாபகம் வருகிறது.

    //குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.// யாதார்த்தம்.

    ஆரம்பமே அசத்தலா இருக்கு.லேட் ஆக படிப்பதால் காத்திருக்கதேவையில்லை. ஓரேதடவையில் படித்திடலாம்.எல்லா பாகத்தையும்.

    பதிலளிநீக்கு
  17. அன்புத் தங்கை அம்முலு அவர்களே,

    வாங்கோ! வாங்கோ!! வணக்கம்.

    ****பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.****

    //நான் அக்காவுடன் பிடித்த சண்டைதான் ஞாபகம் வருகிறது.//

    அப்படியா! பஸ் இரயில் பயணங்களில் ஜன்னலை ஒட்டிய இருக்கை என்றால் [குழந்தைகளோ பெரியவர்களோ] யாருக்குமே ஒரு மகிழ்ச்சி தான். ;)

    ****குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.****

    //யாதார்த்தம்.// யதார்த்தமாகச் சொல்லிவிட்டீர்களே, நன்றி ;)

    //ஆரம்பமே அசத்தலா இருக்கு.லேட் ஆக படிப்பதால் காத்திருக்கத் தேவையில்லை. ஓரே தடவையில் படித்திடலாம்..... எல்லா பாகத்தையும்.//

    ஆஹா! நேற்று ஒரே நாளில் என் பல பதிவுகளைப் படித்து, ரஸித்து, ருசித்து, அழகாகக் கருத்துரைகள் கொடுத்து அசத்தி இருந்தீர்கள்.

    இன்று இதுவரை என் அன்புத் தங்கை அம்முலுவைக் காணோமே என நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு ஆயுஷு நூறு.

    ”நினைத்தேன் ...... வந்தாய் நூறு வயது ....
    கேட்டேன் ....... தந்தாய் ஆசை மனது”
    என ஒரு தமிழ் திரைப்படப் பாடல் உண்டு.

    கேட்காமலேயே தருகிறாய் பின்னூட்டம் .... நகைச்சுவைக்கான ஆசை மனது தங்களுக்கு. அதற்கு என் நன்றிகள்.

    தொடர்ந்து படியுங்கள். கருத்துக்களை வாரி வழங்குங்கள்.

    பிரியமுள்ள
    VGK


    பதிலளிநீக்கு
  18. உடம்பெல்லாம் உப்புச்சீடையை படிக்கலாம்னு வந்தால் காசிக்கு பயணமாகிறதே பட்டாபி அண்ட் கோ :) பட்டாபியின் பொறுப்பான சூட்கேசுகளை மொத்தம் எத்தனை? 12 உருப்படி... எல்லாத்தையும் காலில் இடறாதவண்ணம் உள்ள தள்ளிட்டு ஃபேன் சுவிட்ச் போட்டுட்டு கொஞ்சம் நிம்மதியா காற்று வாங்கலாம்னு பார்த்தால் விமலா பதறி ஓடிவரும் காட்சி.... பங்கஜம் பொண்ணை இப்படியா தைரியத்தை கொடுக்காமல் வளர்ப்பது?? பொண்ணை தைரியமா இருக்கணும். யாரையும் பார்த்து பயப்படக்கூடாதுன்னு சொல்லி இருந்தால் இப்படி எதிர்ல வந்து உட்கார்ந்துட்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு விமலாவே தைரியமா சொல்லி இருப்பாளே...

    சின்னக்குழந்தைகள் வெளியூர் பிரயாணம் என்றால் ஜன்னல் சீட்டுக்கு அடித்துக்கொள்வதை நான் சிறுவயதில் இருந்து பார்த்திருக்கிறேன். அதே போல் இங்கு பிள்ளைகள் அடித்துக்கொள்வது பார்க்க ரசிக்கமுடிகிறது....

    தயிர்சாத தூக்கு பத்திரம்.. எதிர்ல இருக்கிறவர் கேட்டுறப்போறார்...

    பங்கஜத்துக்கு செம்ம கோபம் போல எதிர்ல உட்கார்ந்திருக்கிறவர் மேலே...

    ஜாலியா ஒரு பயணம் தொடங்கியாச்சு... இனி போய்ச்சேரும்வரை என்னென்ன நடக்கப்போகிறதோ...

    தொடர்கிறேன் அண்ணா அடுத்த பாகம்.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் மஞ்சு,

    வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

    நீங்களும் பட்டாபி கோஷ்டியுடன், கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தொத்தி விட்டீர்கள் போலிருக்கிறதே!

    பேஷ் பேஷ் ... ரொம்ப நன்னாயிருக்கு!!

    //பொண்ணை தைரியமா இருக்கணும். யாரையும் பார்த்து பயப்படக்கூடாதுன்னு சொல்லி இருந்தால் இப்படி எதிர்ல வந்து உட்கார்ந்துட்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு விமலாவே தைரியமா சொல்லி இருப்பாளே...//

    எல்லோரும் ’மஞ்சுபாஷிணி’ போலவே தைர்யசாலியாக வளர்க்கப்பட்டால் தானே!

    என் மஞ்சுவைப்பாருங்கோ .....

    அவங்களுக்கு எட்டோ பத்தோ லாங்குவேஜ் தெரியும் ......

    ஒவ்வொரு லாங்குவேஜ் தெரிந்தால் ஒவ்வொரு அடிஷனல் கண் இருப்பது போல ....

    எங்க மஞ்சுவுக்கு மொத்தம் பன்னிரெண்டு கண்களாக்கும் ....

    மற்றவர்கள் கண் போட்டுடப்போறாங்க ... ஜாக்கிரதை, மஞ்சு.

    இப்படியெல்லாம் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட மஞ்சு
    பிறந்தது ஓர் இடம், புகுந்தது ஓர் இடம், பறந்து போய் உள்ளது ஓரிடம், பணியாற்றுவது ஓர் இடம், நடுவில் ப்ளாக் எழுதுவது, வலைச்சர ஆசிரியர் பதவி அது இது என்று ஒரே பிஸி தான் ... போங்க.

    தொடரும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜாலியா ஒரு பயணம் தொடங்கியாச்சு... இனி போய்ச்சேரும்வரை என்னென்ன நடக்கப்போகிறதோ...//

      படுஜாலியா எங்க மஞ்சுவும் கதாசிரியருடன் பயணத்தில் சேர்ந்தாச்சு. இனி போய்ச்சேரும்வரை என்னெல்லாம் இரயில் பெட்டிகள் போல நீ......ள......மா......க க்கருத்துகள் எழுதப்போறாங்களோ?

      மஞ்சுவின் பிஞ்சு விரல்கள் வலிக்குமேன்னு அண்ணாவுக்கு ஒரே கவலையா இருக்கு.

      //தொடர்கிறேன் அண்ணா அடுத்த பாகம்.//

      ஆஹா! இதை இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், மஞ்சு.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா


      ReplyDelete

      நீக்கு
  20. நானும் TIME MACHINE ல பின்னாடி போய் கங்கா காவேரி எக்ஸ்பிரசில் ஏறி விட்டேன்.

    பங்கஜம் மாமி ரொம்ப அழகா, நம்ப தில்லானா மோகனாம்பாள் பத்மினிமாதிரி இருக்கா. மாமா அவ்வளவு அழகு இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. பொறுப்பா இருக்கார். அதனாலதான் பரவாயில்லைன்னு சொன்னேன். குழந்தேள்ளாம் துடைச்சுவிட்ட மாதிரி, அம்மா மாதிரியே இருக்கா.

    யாரு இது இப்படி வந்து உக்காந்துக்கறது. இவரைப் பார்த்துதான் விமலா பயப்பட்டாளா?

    //“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.//

    ஓசி காப்பி கேக்கறதாக்கும்.

    சரி அடுத்த பாகத்துல சந்திக்கறேன்.

    பதிலளிநீக்கு
  21. JAYANTHI RAMANIFebruary 3, 2013 at 11:59 PM
    //நானும் TIME MACHINE ல பின்னாடி போய் கங்கா காவேரி எக்ஸ்பிரசில் ஏறி விட்டேன்.//

    வாங்கோ, ரொம்பவும் சந்தோஷம்.

    //பங்கஜம் மாமி ரொம்ப அழகா, நம்ப தில்லானா மோகனாம்பாள் பத்மினிமாதிரி இருக்கா. //

    சூப்பர். நான் சொன்னது தில்லானா மோகனாம்பாளில் வரும் பத்மினியை.

    //மாமா அவ்வளவு அழகு இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. பொறுப்பா இருக்கார். அதனாலதான் பரவாயில்லைன்னு சொன்னேன். //

    தடாலடியாக மனசில் பட்டதை டக்குன்னு சொல்லும் உங்களின் குணம் எனக்குப் பிடிச்சுப்போச்சு.

    //குழந்தேள்ளாம் துடைச்சுவிட்ட மாதிரி, அம்மா மாதிரியே இருக்கா. //

    அப்படியென்றால் ....... குழந்தேள்ளாம் .........

    நம் ‘லயா’ குட்டியின் அப்பா போல, நம் செள, சந்தியா போல என்கிறீர்களோ! ;))))))

    பதிலளிநீக்கு
  22. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  23. //Asiya Omar June 18, 2013 at 8:48 PM

    வாங்கோ, வணக்கம்.

    //http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை.மிக்க நன்றி.//

    மிக்க நன்றி, மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  24. தூரத்துப் பயணம் என்றாலே பதட்டம்தான். ரயிலில் நம் சீட்டைக் கண்டு பிடித்து சாமான்களை எல்லாம் சரியாக ஏற்றி, உடன் வரும் பிரயாணிகள் கூட சௌஜன்யமாக ஆகும் வரை இந்தப் பதட்டம் நீங்காது. கதை இப்போதுதான் சூடு பிடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. ஊருக்கு கிளம்புரவங்க ரயில் ல உக்காந்ததும் எப்படில்லாம் செயல் படுவாங்கன்னு உணர்ந்து ரசனையா எழுதி இருக்கீங்க. நாமளும் அவங்க கூடவே பிரயாணம் போவது போலவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  26. பெட்டியும் சட்டியுமாய்... பிள்ளை குட்டிகளுமாய் ஒரு குடும்பஸ்தர் ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் சிரமங்களை மிக அழகாக எழுத்தால் காட்டியுள்ளீர்கள். எந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து குழந்தை பயந்தாளோ, அந்த பயங்கரமான உருவமே அவள் எதிரில் வந்தமர்ந்தால் எப்படியிருக்கும்? தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. மொத பாரா படிக்காங்காட்டியும் நானே ஊருக்கு பொறப்படுரது போல தோணுச்சி.

    பதிலளிநீக்கு
  28. ஒவ்வொரு விஷயமும் அழகா காட்சி படுத்தி வருகிறீர்கள். ஊருக்கு புறப்படுகிறவர்களின் மனநிலை அங்கு நடக்கும் சம்பவங்கள் எல்ஷாமே நல்லா உணர்ந்து ரசிக்க முடியறது. திறமையான எழுத்து.

    பதிலளிநீக்கு
  29. அருமையான ஓப்பனிங்...ரயில் பயணம் என்றாலே சுகம்தான்.. அதுவும் காசி - நெடும் பயணம்...சற்றே பயம்புறுத்தும் உருவம் கொண்ட ஒரு மனிதர்...எதிரே வந்து உட்கார...தொடரும்...அடுத்த எபிசோட் எப்ப வரும்..???

    பதிலளிநீக்கு
  30. காட்சிகளை அருமையாக அமைத்துள்ளீர்கள்! பயணிப்போம்!

    பதிலளிநீக்கு
  31. ரயிலில் நீண்ட பயணம் செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்ப கங்கா காவேரியில் ஆனந்தமாக பயணிக்க சுவாரசியமாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரயிலடியில் அவர்களுக்கு ஏற்படும் பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அப்பாடா ஸீட் கண்டு பிடித்து சாமான்களை மனைவியின் கட்டளைகள் மூலம் அடுக்கி வைத்து குழந்தைகளையும் ஜன்னல் சீட்டுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி கட்டளைகள் இட்டு.ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாடா இப்ப சூடா ஒரு காபியும் கிடைத்ததில். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட முடியுது. குடும்பத்தினரின் வயது விபரங்கள் அவர்களின் பிரயாணத்தின் நோக்கம். புரிய வைக்குது. வயதுக்கு வந்து சில நாட்களே ஆன மகள் கழிவரையிலிருந்து பயந்து ஓடி வந்ததைப்பார்க்கும் தாயின் மன தவிப்பு புரியமுடியுது. அந்த பயங்கரமான உருவமுள்ள மனிதர் அவர்களின் கம்பார்ட் மெண்டிலேயே ஜன்னல் சீட்டில் வந்து உட்கார்ந்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை எனன்பது அவர்களின் முகச்சுளிப்பிலேயே புரியுது . கூடவே அவர் பேச ஆரம்பித்ததும் இன்னமும் எரிச்சல் அடைவதும் புரியுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 28, 2016 at 12:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ரயிலில் நீண்ட பயணம் செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.//

      அப்படியா, அதனால் பரவாயில்லை.

      இப்போதுகூட என் இனிய நண்பரும், திருச்சி பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ என்பவர் என்னை ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவு எழுத அழைத்துள்ளார்.

      http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html

      பலமுறை மின்னஞ்சல் மூலம் எனக்கு நினைவூட்டலும் அனுப்பிவிட்டார். அவரின் அன்புக்குக்கட்டுப்பட்டு, நேற்று இரவு முழுவதும் தூங்காமல் நான் அதனை ஒருவழியாக எழுதி முடித்து அவருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி, அவருடைய வலைத்தளத்திலேயே என் கட்டுரையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டேன்.

      ஆனால் அதற்கு அவர் ஏனோ சம்மதிக்காமல், என் வலைத்தளத்தில்தான், நானேதான் வெளியிட வேண்டும் என்றும், என் வாசக வட்டம் மிகப்பெரியது என்றும், அவர்கள் அனைவரும் இதனைப்படித்து மகிழ வேண்டும் என்றும் ஏதேதோ சொல்லிவிட்டார்.

      எந்தத்தலைப்பில் வேண்டுமானால் என்னால் சர்வ அலட்சியமாகவும், மிகக்குறைந்த நேரத்திலும், மிகச்சுவையாகவும், நகைச்சுவையாகவும் கட்டுரைகள் எழுத முடியும்தான்.

      இருப்பினும் பல்வேறு சொந்தக் காரணங்களால் இப்போதைக்கு எனக்கு என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் எழுதி வெளியிட விருப்பம் இல்லாமல் உள்ளது.

      மேற்படி கட்டுரையை எழுதி தயார் நிலையில் என்னிடம் வைத்துள்ளதால் எனக்கு இப்போ என்ன செய்வது என்றே புரியவில்லை. :(

      //இப்ப கங்கா காவேரியில் ஆனந்தமாக பயணிக்க சுவாரசியமாக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.//

      சந்தோஷம். கங்கா ஸ்நானம் செய்ய தாங்களும் கூடவே வருவதில் எனக்கு மிகவும் சந்தோஷமே.

      //ரயிலடியில் அவர்களுக்கு ஏற்படும் பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. அப்பாடா ஸீட் கண்டு பிடித்து சாமான்களை மனைவியின் கட்டளைகள் மூலம் அடுக்கி வைத்து குழந்தைகளையும் ஜன்னல் சீட்டுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி கட்டளைகள் இட்டு.ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாடா //

      சில மனைவிமார்கள் இதுபோல தங்கள் கணவன்மார்களை அவ்வப்போது தேளாகக் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். நான் என் அனுபவத்தில் நிறையவே பார்த்துள்ளேன்.

      //இப்ப சூடா ஒரு காபியும் கிடைத்ததில். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட முடியுது.//

      சூடான சுவையான காஃபி கழிவறையிலிருந்து பயந்துபோய் ஓடிவந்த விமலாவுக்கு அல்லவா பங்கஜம் மாமியால் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கே கிடைத்ததாக கற்பனை செய்துகொண்டு ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டீங்களாக்கும். ஓக்கே .... ஓக்கே.


      //குடும்பத்தினரின் வயது விபரங்கள்; அவர்களின் பிரயாணத்தின் நோக்கம். புரிய வைக்குது.
      வயதுக்கு வந்து சில நாட்களே ஆன மகள் ’க ழி வ றை’ யிலிருந்து பயந்து ஓடி வந்ததைப்பார்க்கும் தாயின் மன தவிப்பு புரியமுடியுது. அந்த பயங்கரமான உருவமுள்ள மனிதர் அவர்களின் கம்பார்ட் மெண்டிலேயே ஜன்னல் சீட்டில் வந்து உட்கார்ந்ததும் அவர்களுக்கு பிடிக்கவில்லை எ ன் ப து அவர்களின் முகச்சுளிப்பிலேயே புரியுது . கூடவே அவர் பேச ஆரம்பித்ததும் இன்னமும் எரிச்சல் அடைவதும் புரியுது.//

      தங்களின் அனைத்துப் புரிதல்களுக்கும், அன்பான தொடர் வருகைக்கும், ஒவ்வொரு சம்பவத்தையும் நன்கு அலசி ஆராய்ந்து பின்னூட்டமிட்டு வருவதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு