என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 6 ஜூலை, 2011

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் [ பகுதி 1 of 2 ]


அந்த ஐமபது அடி அகலக் கிழக்கு மேற்கு சாலையின் நடுவே, தென்புறமாக ஒரு இருபது அடி அகலத்தில் ஒரு குறுக்குச்சந்து சந்திக்கும் ஒரு முச்சந்தி அது. அந்தசந்தில் நுழைந்து சென்றால் ஒரு நூறடி தூரத்தில் தான் அந்த பிரபல கோவிலின் கிழக்கு நுழைவாயில் அமைந்துள்ளது.  கோவிலைத்தாண்டி ஏதோ பத்துப்பதினைந்து ஓட்டு வீடுகள், கோவில் சிப்பந்திகள் தங்குவதற்கு. பிறகு சந்தில் மேற்கொண்டு செல்லமுடியாதபடி பெரிய மதில் சுவர் தடுப்பு வந்துவிடும். 

இதனால் இந்த சந்தில் போக்குவரத்து நெரிசல் ஏதும் கிடையாது. ஆங்காங்கே ஒருசில வாகனங்கள் மட்டும் பார்க் செய்யப்பட்டிருக்கும். முச்சந்தி அருகே, சந்தின் ஆரம்பத்தில், மேற்கு நோக்கி ஒருவர் தன் இஸ்திரிப்பெட்டி தேய்க்கும் உபகரணங்களுடன் ஒரு தள்ளுவண்டியை நிறுத்தியிருப்பார். 

இந்த இஸ்திரிக்காரருக்கு எதிர்புறம், அந்த சந்தின் ரோட்டின்மேல் ஒரு ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்றவிடப்பட்டு, எப்போதும் பரபரவென்ற ஒரு பெரிய சப்தத்துடன் எரிந்து கொண்டிருக்கும்.  அந்த ஸ்டெளவின் மேல் மிகப்பிரும்மாண்டமான ஒரு இலுப்பச்சட்டியில் (இரும்புச்சட்டியில்), எப்போதும் எண்ணெய் கொதித்துக்கொண்டிருக்கும். 

அதன் அருகே ஒருவர் 

(1) பம்ப் ஸ்டெளவ்வுக்கு அவ்வப்போது காற்று அடித்துக்கொண்டும்; 

(2) உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய், பெரிய வெங்காயம், குண்டு குடமிளாகாய் போன்ற காய்கறிகளை, மிகவும் மெல்லிசாக வறுவலுக்கு சீவுவது போல சீவிப்போட்டுக்கொண்டும்; 

(3) சீவியதை ரெடியாகக் கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் ஒரு முக்கு முக்கியும்; 

(4)முக்கியெடுத்த பஜ்ஜி மாவுடன் கூடிய காய்கறித்துண்டுகளை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் போட்டும்;

(5)கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டு தத்தளித்து மிதக்கும் பஜ்ஜிகளை, ஓட்டைகள் நிறைந்த மிகப்பெரிய கரண்டியால், ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சண்டை சச்சரவு செய்து கொள்ளாமல் தடுத்தும்;

(6) அவை அந்தக்கொதிக்கும் எண்ணெயில் தனித்தனியே நீச்சல் அடிக்க உதவியும்;

(7) சரியான பக்குவத்தில் அவை வெந்ததும் அதே ஓட்டைக்கரண்டியால் ஒரே அள்ளாக அள்ளியும்;

(8) அள்ளிய அவைகளை இரும்புச்சட்டிக்கு சற்றே மேலே தூக்கிப்பிடித்தும்;

(9) சூடு தாங்காமல் அவை சிந்தும், கொதிக்கும் எண்ணெய்க்கண்ணீரை,   இரும்புச்சட்டியிலேயே வடியவிட்டும்;

(10) எண்ணெயை வடிகட்டிய பஜ்ஜிகளை அவ்விடம் ரெடியாக உள்ள ஒரு வாய் அகன்ற அலுமினியப்பாத்திரத்தில் வீசியும், 

என அடுத்தடுத்த பல்வேறு காரியங்களை அந்த ஒருவரே மின்னல் வேகத்தில், தொடர்ச்சியாக செய்து கொண்டே இருப்பார். 

இயந்திரம் போல மிகவும் சுறுசுறுப்பாகவும், அஷ்டாவதானிபோல ஒரே நேரத்தில் எட்டுவிதமான காரியங்களில் ஈடுபட்டு, பாடுபட்டு, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, ஃபர்னஸ் போன்ற அனல் அடிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்கு முன் நின்று, உழைக்கும் இந்த மனிதரை தினமும் அடிக்கடி நான் பார்ப்பதுண்டு.  

இவர் இவ்வாறு படாதபாடு படுவதைப்பார்க்கும் எனக்கு, என் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், அமைதியான சூழலில் நான் பார்க்கும் வேலைகளுக்கு, எனக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் அதிகமோ என்று என் மனசாட்சி என்னை அடிக்கடி உறுத்துவதும் உண்டு.    

அவரவர் தலைவிதிப்படி, அவரவர் விருப்பப்படி,  அவரவருக்கு ஏதோ ஒரு உத்யோகம் அமைகிறது. நாம் அதில் முழு ஈடுபாட்டுடன், உண்மையாக உழைத்து, திறமையை வளர்த்துக்கொண்டால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடிகிறது.

அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. 

அது போகட்டும். சூடு ஆறும் முன்பு, பஜ்ஜி வியாபாரத்திற்குத் திரும்பி விடுவோம்.

முதலாமவர் இவ்வாறு சுடச்சுட பஜ்ஜிகளை அலுமனிய அண்டா போன்ற வாய் அகன்ற அந்தப் பாத்திரத்தில் போடப்போட, அதை உடனுக்குடன் ஒரு பஜ்ஜி இரண்டு ரூபாய் என்றும், ஆறு பஜ்ஜிகளாக வாங்கினால் பத்து ரூபாய் என்றும் மார்க்கெட்டிங் செய்ய தனியாக மற்றொருவர். 

அளவாகக்கிழித்த செய்தித்தாள்களில் அப்படியே வைத்தோ அல்லது பேப்பர் பைகளில் போட்டோ, ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டு க்யூவில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட எடுத்துத் தருவார். இவ்வாறு எடுத்து பேப்பரிலோ அல்லது பேப்பர் பையிலோ போடும்போதே, சூடு பொறுக்காமல் தன் கையை அடிக்கடி உதறிக்கொள்வார். 

பஜ்ஜியை எடுத்துக்கொடுப்பது முதல், அடுத்த லாட்டுக்கு பணத்தை கொடுப்பவர்களிடம் காசை வாங்கி கல்லாப்பெட்டியில் போடுவது வரை இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் வேலை. 

இது தவிர அடிக்கடி அந்த பஜ்ஜி ஃபேக்டரிக்குத் தேவைப்படும் மூலப்பொருட்களான, எரிபொருள், பஜ்ஜி மாவு, பஜ்ஜிபோடத்தேவைப்படும் எண்ணெய், காய்கறிகள் எனத் தீரத்தீர மார்க்கெட் டிமாண்டுக்குத் தகுந்தபடி, அந்தத் தள்ளுவண்டியின் அடியே அமைந்துள்ள ஸ்டோர் ரூமுக்குள், தன் தலையை மட்டும் நுழைத்துக் குனிந்து எடுத்துத் தருவதும், இந்த மார்க்கெட்டிங் மேனேஜரின் அடிஷனல் ஃபோர்ட்ஃபோலியோவாகும்.

ஸ்ட்ரீட் லைட் எரியாமல் இருந்தாலோ, அணைந்து அணைந்து எரிந்து மக்கர் செய்தாலோ, மழை வந்தாலோ, பெரும் சுழலாகக்காற்று அடித்தாலோ போச்சு. தெருவில் நடைபெறும் இவர்கள் வியாபாரம் அம்போ தான். 

முக்கியப்புள்ளிகள், அரசியல்வாதிகள், மந்திரிகள் என யாராவது அந்தப்பகுதிப்பக்கம் வந்தாலோ, மேடைப்பேச்சுகள், மாநாடு என்று ஏதாவது நடத்தினாலோ, காவல்துறையின் கைத்தடிகள் இவர்களை நோக்கியும் சுழலக்கூடும்.  மாமூலாக நாங்கள் நின்று வியாபாரம் செய்யும் இடம் இது என்ற மாமூல் பேச்சுகளெல்லாம், அந்த நேரங்களில் எதுவும் எடுபடாது.

சுடச்சுட பஜ்ஜிக்காக ஆர்டர் கொடுத்து, பணமும் கொடுத்துவிட்டு, காத்திருக்கும் கஸ்டமர்கள் ஏராளமாக வண்டியைச்சுற்றி நின்று கொண்டிருப்பது வழக்கம். சிலர் கொதிக்கும் பஜ்ஜியை விட சூடான தங்கள் கோபத்தை முகத்தில் காட்டியவாறு “அர்ஜெண்டாப்போகணும் சீக்கரம் தாங்க”, எனச்சொல்லி, அனலில் வெந்து கொண்டிருப்பவர்களை அவசரப்படுத்துவதும் உண்டு. 

மதியம் சுமார் ஒரு மணிக்குத்துவங்கும் இந்த சுறுசுறுப்பான பஜ்ஜி வியாபாரம் இரவு பத்து மணி வரை ஜே ஜே என்று நடைபெற்று வரும். 

அங்கேயே வாங்கி அங்கேயே நின்ற நிலையில் சுடச்சுட (நெருப்புக்கோழி போல) சாப்பிடுபவர்களும் உண்டு. டூ வீலரில் அமர்ந்தவாறே ஒய்யாரமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. பார்சல் வாங்கிக்கொண்டு உடனே அவசரமாக இடத்தைக்காலி செய்பவர்களும் உண்டு.

மலிவான விலையில் தரமான ருசியான பஜ்ஜிகள் என்பதால் இந்தக்குறிப்பிட்ட கடையில் எப்போதும் கூட்டமான கூட்டம்.  

இந்த பஜ்ஜிக்கடைக்கு சற்று தூரத்திலேயே வைக்கப்பட்டுள்ள முனிசிபாலிடியின் மிகப்பெரிய குப்பைத்தொட்டியும், அதில் அன்றாடம் நிரம்பி வழியும் குப்பைகளும், வழியும் அந்தக்குப்பைகளில் மேயும் ஆடு மாடுகளும் அவற்றின் கழிவுகளும், இந்த ஆடு மாடுகளுக்குப்போட்டியாக அடிக்கடி வந்து, தங்கள் பின்னங்கால்களை மட்டும் சற்றே தூக்கியவாறு, குப்பைத்தொட்டியை உரசிச்செல்லும் ஆத்திரஅவசர நாய்களும், அங்கிங்கனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் ஈக்களும் கொசுக்களும், அந்த பஜ்ஜிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, சற்றே முகம் சுழிக்க வைக்கும். 

ஆனால் இவ்வாறு சுற்றுச்சூழல் சரியில்லாமல் இருப்பதும் கூட, இந்தக்கடையின் பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும், சுண்டியிழுக்கும் சுவைக்கும் முன்னால் அடிபட்டுப்போகும். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா! அதுபோலத்தான் இதுவும்.


தொடரும் 

53 கருத்துகள்:

  1. நல்ல வர்ணனை, எளிய நடை..

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பஜ்ஜிக்கு ஒரு ஜே. சூடாய் ஸ்வாரஸ்யமாய் அதை எழுதிய உங்களுக்கு ஒரு ஜே.

    பதிலளிநீக்கு
  3. ரெண்டே ரெண்டு ரூவா பஜ்ஜிக்கு பின்னால இம்புட்டு பெரிய கதை இருக்கா?

    பதிலளிநீக்கு
  4. யப்பா... இதுல பார்ட்-2 வேற இருக்காமே!!...

    பதிலளிநீக்கு
  5. பஜ்ஜிக்கு பின்னாடி இம்புட்டு மேட்டரா அவ்வ்வ்வ்வ்வ்வ்......பின்னிட்டீங்கய்யா....!!!

    பதிலளிநீக்கு
  6. பஜ்ஜி பஜ்ஜி ...இது உங்களால் மட்டும் தான் முடியும்

    பதிலளிநீக்கு
  7. சூப்பரான வர்ணனைகளுடன் பஜ்ஜி சுடச்சுட
    தயாரகி இருக்கே.முதல் பஜ்ஜி நல்லாருக்கு.
    அடுத்தது எப்போ?ரெண்டு ரூபா கொடுத்தாதானா?

    பதிலளிநீக்கு
  8. அந்தத் தெரு கடை குப்பைத்தொட்டி
    ஏன் பஜ்ஜி வாசம் கூட எங்களுக்கு
    எட்டச் செய்துவிட்டீர்கள்
    வழக்கம்போல அசத்தலான வர்ணனை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  9. //அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. ///

    எளிய நடையில்
    எதார்த்த மொழியில்
    உண்மையை
    சொன்ன விதம் அருமை ஐயா

    கதை முழுவதும் உங்களின் வர்ணனை ராஜாங்கம் கொடி கட்டி பறக்கிறது , அடுத்த பகுதியை படிக்க ஆவலாய் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. ///அவரவர் தலைவிதிப்படி, அவரவர் விருப்பப்படி, அவரவருக்கு ஏதோ ஒரு உத்யோகம் அமைகிறது. நாம் அதில் முழு ஈடுபாட்டுடன், உண்மையாக உழைத்து, திறமையை வளர்த்துக்கொண்டால், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடிகிறது.//ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் ஐயா , அடுத்த பஜ்ஜி எப்போ ..??

    பதிலளிநீக்கு
  11. எளிமையான தமிழ் தொடருங்கள் .. அடுத்தப் பஜ்ஜிக்காக வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  12. அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. //

    அனிச்சை செயல் போல அவர்கள் இயங்குவது வியப்புதான்.

    பதிலளிநீக்கு
  13. அவரவர் வேலைகள் பழக்க தோஷத்தினால், அவரவருக்கு சுலபமானதாகவும், மற்றவர்கள் பார்வைக்கு அதே வேலை மிகக் கடினமானதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. //

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  14. சாதாரண பஜ்ஜிக்கு அசாதாரண வர்ணனை ருசிக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. "பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் தங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. படிக்க படிக்க ஜொள்ளு ஊறுது சூடா ரெண்டு வாழக்கா பஜ்ஜி பார்சல் ப்ளீஸ்....:)

    பதிலளிநீக்கு
  17. மலிவான விலையில் தரமான ருசியான பஜ்ஜிகள் என்பதால் இந்தக்குறிப்பிட்ட கடையில் எப்போதும் கூட்டமான கூட்டமநல்ல வர்ணனை, எளிய நடை..

    பதிலளிநீக்கு
  18. பஜ்ஜின்னா பஜ்ஜி தான்னு நீங்களே சொல்லிட்டீங்களே சார்!சூப்பர்! நாவில் நீர் ஊறுகிறது!!!!

    அடுத்த பஜ்ஜிக்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  19. நாக்குல ஜலம் வந்தாச்சு! எனக்கு தட்டுல போட்டு சட்னி விட்டு தாங்கோ! இங்க வச்சே நொசுக்கிட்டு போறேன்!...:))

    பதிலளிநீக்கு
  20. ஸ்ஸ்ஸ்ஸ்... நாக்கில் ஜலம் வடிய ஆரம்பித்து விட்டது.... பஜ்ஜின்னா பஜ்ஜிதான்.... பஜ்ஜி போடுவது பற்றிய தங்கள் வர்ணனை அந்த காட்சியைக் கண்முன்னே நிறுத்தியது.... அடுத்த பஜ்ஜிக்கு, அதான் சார், அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  21. சூப்பர் வர்ணஜால எழுத்து நடை
    அடுத்தது எப்போ என்று ஏங்க வைத்துவிட்டது
    அசத்தல் ......................

    பதிலளிநீக்கு
  22. பஜ்ஜியை சாதாரணமாக நினைத்திருந்தேன்,உங்கள் எழுத்தால் இப்பொழுது அதன் மீது ஒரு தனி மரியாதை வநதுள்ளது...

    பதிலளிநீக்கு
  23. கொடைக்கானல் மிளகாய் பஜ்ஜிக்குகூட இப்படியொரு அறிமுகம் கிடைத்திருக்காது. மாலை வேளையில் படித்தால் பசிக்காது? பசியுடன் தொடர்கிறோம். நன்றி VGK சார்.

    பதிலளிநீக்கு
  24. ஐயா அழகான வர்ணணை நிறைந்த கதை...
    சுப்பர்...

    பதிலளிநீக்கு
  25. எங்கள் வீட்டருகே இருக்கும் டீக்கடைக் காரரைப் பார்க்கும் போது எனக்கே இதே போலத் தோன்றும். காலை மூன்றரைக்கும் நான்குக்கும் எழுந்து கடைதிறந்து இரவு பத்து மணி வரை கடையில் இருக்கும் அவர் வாழ்க்கையில் வேறு என்ன பொழுது போக்கு என்று வகித்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்டுக் கொண்டதுண்டு. கதை சில காலத்துக்கு முன்னாள் நடப்பது என்பதால் இரண்டு ரூபாய் விலை போலும். இப்போதெல்லாம் ரோட் ஓரத்துக் கடைகளிலேயே வேகமாக பத்து ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  26. பஜ்ஜி சாப்பிடற ஆசைய கிளப்பி விட்டுட்டீங்க சார். எப்படியும் சனிக்கிழமை வரை வாய்ப்பில்லை. செய்தால் உங்கள் பெயர் சொல்லி சாப்பிடுவோம்...:)

    காட்சியை கண் முன் கொண்டு வரும் நல்ல வர்ணனை...

    பதிலளிநீக்கு
  27. அன்புடன் வருகை தந்து,
    பல்வேறு அரிய பெரிய
    கருத்துக்கள் கூறி,
    இந்த என் சிறுகதையின் முதல் பகுதியை உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டியுள்ள,
    அன்பான சகோதர சகோதரிகளுக்கு
    என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இதன் அடுத்த பகுதி (இறுதிப்பகுதி)
    நாளையே வெளியிடப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  28. இன்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  29. அன்பின் வை.கோ - சாதாரணமாக தெருவில் கை வண்டியில் பஜ்ஜி போது விற்கும் ஒருவரையும் அவரது திறமையையும் - அவரது தொழிலினையும் - கவனித்து இவ்வளவு அருமையாக ஒரு பதிவு போட்டது நன்று. தங்களையும் அவரையும் ஒப்பு நோக்கியதும் - அதற்கான ஒரு தெளிவான காரணமும் கொடுத்ததும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சீனா ஐயா, வணக்கம்.

      அன்பான தங்கள் வருகையும் அழகான தங்களின் கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன.

      மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  30. படிக்கும்போதே நாக்கில் நீர் ஊறுகிறதே!வர்ணனை பிரமாதம். கபாலீச்வரர் கோயிலருகில் ஒரு ஜன்னலுக்குள்ளிருந்து இது போன்ற வியாபாரம் நடக்கும் பாருங்கள், சுவையோ சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சென்னை பித்தன் ஐயா, வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் சுவையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      நீக்கு
  31. பகிர்வைபடித்ததும் நான் சாப்பிட்ட தள்ளுவண்டி பஜ்ஜிக்கடை ஞாபகத்திற்கு வந்து விட்டது.சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் அவ்வ்பொழுது எக்ஸிபிஷன் போடுவார்கள்.நானும் எப்பொழுதுதாவது போய் வருவேன்,டிரேட் செண்டர் வாசலில் தள்ளு வண்டி கடையில் கிடைகுமே பஜ்ஜி..சும்மா மெத்து மெத்து என்று பொன்னிறத்தில்,சூடாக சுவையாக,கெட்டி சட்னியுடன்...டிரேட் செண்டர் போனால் அந்த தள்ளு வண்டீகடைக்கு முன்னால் வண்டியை நிறுத்தி சாப்பிடாமல் வருவதில்லை.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஸாதிகா மேடம், வாங்க, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என் மனதை மகிழ்விக்கிறது.

      மனமார்ந்த நன்றிகள், மேடம்.

      நீக்கு
  32. இப்போதைகு இப்பதிவு மட்டும்தான் படிச்சேன்ன் அழகாக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீங்க... அதிகம் அலட்டாமல் அமைதியாகப் போயிடுறேன்ன் ஏணெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira February 9, 2013 at 11:49 AM

      வாங்கோ அதிராஆஆஆஆஆஆ .... வணக்கம்.

      //இப்போதைகு இப்பதிவு மட்டும்தான் படிச்சேன்ன் அழகாக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீங்க..//.

      மிக்க நன்றி.

      //அதிகம் அலட்டாமல் அமைதியாகப் போயிடுறேன்ன் ஏணெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).//

      அடடா, சூட பஜ்ஜி சாப்பிடாம, உடனடியாக வந்த காலோடு ஓடுறீங்க்ளே, இது நியாயமா?

      சரி, OK Thanks a Lot for your kind visit. .Bye for Now.

      நீக்கு
  33. பஜ்ஜியின் மணம் இங்குவரை தூக்குகின்றது.
    உங்களால் தான் இவ்வாறு ரசனையாக எழுத.முடியும்.. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி February 10, 2013 at 8:43 PM

      வாருங்கள், வணக்கம்.

      //பஜ்ஜியின் மணம் இங்குவரை தூக்குகின்றது. உங்களால் தான் இவ்வாறு ரசனையாக எழுத.முடியும்.. பாராட்டுகள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  34. நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. பஜ்ஜி போடற அழகை. அதான் இப்படி அழகா எழுதி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  35. JAYANTHI RAMANI February 13, 2013 at 3:44 AM

    வாங்கோ, வணக்கம்.

    //நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க. பஜ்ஜி போடற அழகை. அதான் இப்படி அழகா எழுதி இருக்கீங்க.//

    உப்பலான, சூடான, சுவையான, பெருங்காய மணத்துடன் கூடிய, பஜ்ஜீன்னாலே அழகோ அழகு தாங்கோ, தங்கள் இந்தப்பின்னூட்டம் போலவே! ;)))))

    அன்பான வருகைக்கும், அழகான பஜ்ஜிக்கும் [கருத்துக்கும்] என் மனமார்ந்த நன்றிக்ள்.

    பதிலளிநீக்கு
  36. அன்பின் வை.கோ - மறுமொழி ஏற்கனவே உள்ளது - 20.07.20111

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  37. cheena (சீனா)September 10, 2013 at 9:30 AM

    வாங்கோ அன்பின் திரு.சீனா ஐயா,வணக்கம் ஐயா!

    //அன்பின் வை.கோ - மறுமொழி ஏற்கனவே உள்ளது - 20.07.2011 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    ஆம் ஐயா, உள்ளது ஐயா. மீண்டும் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  38. பஜ்ஜி சுடுவதின் ஸ்டெப் பை ஸ்டெப் டெக்னிக்குகள் கனகச்சிதமாக விவரிக்கப்பட்டுள்ளன.

    பதிலளிநீக்கு
  39. ஓஹ்ஹோ இப்படித்தான பஜ்ஜெி பண்ணனுமா. சமையல புக் எதானும் எழுத்ி இருக்கீங்களா

    பதிலளிநீக்கு
  40. பஜ்ஜி இப்பூடிதா சுடணுமோ. அம்மி கிட்டத்துல சொல்லிப்போடவேண்டியதா. எண்ணாயில கொதிக்குர பஜ்ஜிய கூட காமெடியா சொல்லினிங்க. பார்சல்..............

    பதிலளிநீக்கு
  41. பஜ்ஜி எண்ணைப்பண்டம்னு ஒதுக்குறவங்ககூட டேஸ்ட் பாக்க வந்துடுவாங்க. அவ்வளவு ருசியான வர்ணனை. அந்த பஜ்ஜிகடை எப்பவுமே திறநாது வச்சிருந்தா நல்ல காசு பாத்துடலாம்

    பதிலளிநீக்கு
  42. ஒரு மினி பஜ்ஜி ஃபாக்டரி கண்ணு முன்னால நிக்குது...நாக்கு ஊறுது...

    பதிலளிநீக்கு
  43. பஜ்ஜிக்கடையை கண்முன் நிறுத்தி பசியைத் தூண்டிவிட்டீர்! தொடர்கிறேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  44. இன்றைக்குத்தான் படித்தேன். இன்னும் பஜ்ஜி ஆறவில்லை.

    "எனக்கு, என் அலுவலகத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், அமைதியான சூழலில் நான் பார்க்கும் வேலைகளுக்கு, எனக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிகவும் அதிகமோ என்று என் மனசாட்சி என்னை அடிக்கடி உறுத்துவது" - நிறைய வேலைகளைப் பற்றியும் அதற்குக் கொடுக்கப்படும் சம்பளம் பற்றியும் எனக்கும் இதேபோன்று தோன்றுவது உண்டு. ஆனால், சம்பளம் என்பது பொறுப்பைப் (Responsibility) பற்றியது அல்லவோ. உடலுழைப்புதான் உயர்ந்த வேலை என்றாலும், உடலுழைப்புக்குப் பெரும்பாலும் குறைவான ஊதியம்தான். (பதவி பூர்வ புண்யானாம்)

    "இடம் இது என்ற மாமூல் பேச்சுகளெல்லாம்" - மாமூலை ரசித்தேன்.

    “அர்ஜெண்டாப்போகணும் சீக்கரம் தாங்க”, எனச்சொல்லி, அனலில் வெந்து கொண்டிருப்பவர்களை" - இதை வாடிக்கையாளர்கள் பஜ்ஜியைப் பார்த்துச் சொல்வதென்றால், 'சீக்கிரம் வாங்க" என்றுனா சொல்லணும். அப்புறம்தான் அவர்கள் மார்க்கெட்டிங் மேனேஜரைப் பார்த்து இதைச் சொல்லுகிறார்கள் என்று.

    "பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும்" - எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இவர்களை, வீட்டிற்கு அழைத்து, நல்ல குவாலிட்டியான (உங்கள் பாணியில் A1) பொருட்களைக் கொடுத்து வீட்டிலேயே பஜ்ஜி தயாரித்துத் தரச் சொன்னா இந்த வாசனையும் சுவையும் வருமா என்று.

    நல்ல வர்ணனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் November 1, 2016 at 2:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைக்குத்தான் படித்தேன். இன்னும் பஜ்ஜி ஆறவில்லை. ...............................//

      தங்களின் அன்பான வருகைக்கும், மாமூலான ஊன்றிய வாசித்தலுக்கும், பொறுப்பு பற்றிய பொறுப்பான கருத்துக்களுக்கும், ஒருசில சிந்திக்க வைக்கும் சந்தேகங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)

      நீக்கு
  45. ஆஹா சூடான பஜ்ஜிக்காகவே ஒரு பதிவா... நாங்கல்லாம் கடைக்கு போனோமா சூடான பஜ்ஜிய சாப்பிட்டோமானு போயிகிட்டே இருப்போம் நீங்க எவ்வளவு எல்லாம் கவனிச்சிருக்கீங்க பஜ்ஜி கடை அமைந்துள்ள இடம் சுற்றுப்புற கடைகள் பஜ்ஜி செய்யும் விதம் எதையுமே விட்டு வைக்கலியே.எழுத்தாளர்களுக்குத்தான் கண்களும் காதுகளும் எல்லா நேரமும் ஷார்ப்பாக இருக்கும்போல.ரசனையான ஆளுதான் நீங்க. உங்களால எங்களுக்கும் சூடூன சுவையான பதிவுகள் படிச்சு ரசிக்க கிடைக்குது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... November 18, 2016 at 10:48 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆஹா சூடான பஜ்ஜிக்காகவே ஒரு பதிவா... நாங்கல்லாம் கடைக்கு போனோமா சூடான பஜ்ஜிய சாப்பிட்டோமானு போயிகிட்டே இருப்போம் நீங்க எவ்வளவு எல்லாம் கவனிச்சிருக்கீங்க பஜ்ஜி கடை அமைந்துள்ள இடம் சுற்றுப்புற கடைகள் பஜ்ஜி செய்யும் விதம் எதையுமே விட்டு வைக்கலியே.//

      :)))))

      //எழுத்தாளர்களுக்குத்தான் கண்களும் காதுகளும் எல்லா நேரமும் ஷார்ப்பாக இருக்கும்போல. ரசனையான ஆளுதான் நீங்க. உங்களால எங்களுக்கும் சூடான சுவையான பதிவுகள் படிச்சு ரசிக்க கிடைக்குது..//

      தங்களின் அன்பான வருகைக்கும் ரசனையான சூடான சுவையான பஜ்ஜி போன்ற கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு