என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 17 மே, 2014

VGK 15 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ---- ' அ ழை ப் பு’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 15 - ’ அ ழை ப் பு  ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html




 









 

  

 




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

இரண்டாம்  பரிசினை 

 வென்றுள்ளவர்  இருவர் 



அதில் ஒருவர்




திருமதி 



 கீதா சாம்பசிவம்   


அவர்கள்





sivamgss.blogspot.in


" எண்ணங்கள் “




 



இரண்டாம் பரிசினை வென்றுள்ள


திருமதி 



 கீதா சாம்பசிவம்  



அவர்களின் விமர்சனம் இதோ:





"கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் "என்று சொலவடை உண்டு.  வீடு கட்டுவதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை மட்டும் குறிக்காது அது.  அந்த வீட்டை நாம் எவ்வளவோ கஷ்டங்கள் பட்டுக் கட்டினப்புறமா வந்து பார்க்கும் ஒவ்வொருத்தரும் ஆயிரம் நொட்டை சொல்லுவாங்க பாருங்க!  அதிலே தான் நொந்து நூலாகிப் போவோம்.  அதே போல் கல்யாணம் பண்ணுவதும் சாமானிய விஷயம் இல்லை.  இன்றளவும் கல்யாணம் பண்ணுவது என்பது சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது.  இத்தனைக்கும் இப்போதெல்லாம் சமையலுக்கு காடரிங் ஆட்கள் வந்துவிடுகின்றனர்.  அந்த அந்த நேரத்துக்கு ஒவ்வொரு சடங்குக்கும் உரிய எல்லா சாமான்களையும் நம் கையில் கொடுத்து உதவுகின்றனர்.  பழக்கமே தெரியாதவர்களுக்கு ஒரு சில காடரிங் ஆட்கள் பழக்க வழக்கங்களையும் சொல்லித் தருவது நடந்து வருகிறது.  ஆனால் எல்லாத்துக்கும் மேல் இந்த அழைப்பு அனுப்பும் வேலை இருக்கே அது தான் முக்கியமானது.

அழைப்பிதழ் அச்சிடுவதில் ஆரம்பிக்கும். பிள்ளை வீட்டுக் கல்யாணமோ, பெண் வீட்டுக் கல்யாணமோ எதுவானாலும் அவரவர் தந்தை வழித் தாத்தா, தாய் வழித்தாத்தா இருவர் பெயரும் போட வேண்டும்.  இதிலேயே ஒரு சிலர் தாய் வழித்தாத்தா பெயர் எதுக்குனு சொல்வாங்க. அவங்களை சமாதானம் செய்யணும். இதுக்காகக் கோவிக்கும் மனைவியை சமாதானம் செய்யணும்.  இப்படி ஒவ்வொன்றாகப் போட்டு விட்டுக் கடைசியில் "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" என்னும் ஒரு பத்தியைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக ஒவ்வொருத்தர் வீட்டிலே பெரிய பிரச்னையாகிவிடும். தென் மாவட்டத்துக்காரங்கன்னா கேட்கவே வேண்டாம்.  தாய் மாமனுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்து அவங்க பெயரையும் பத்திரிகையில் சேர்க்கணும்.  இல்லைனா தாய் மாமன் கோவித்துக் கொண்டு கல்யாணத்துக்கே வராமல் போய் விடும் தர்ம சங்கடங்கள் நேரலாம். பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ முதலில் கல்யாணம் ஆகி இருந்தால் அவங்க இருவர் பெயரோடு அவரவரின் கணவன், மனைவி பெயரையும் போட்டாக வேண்டும்.  இந்த வம்பெல்லாம் வேண்டாம்னு உற்றமும், சுற்றமும் அப்படினு போட்டுட்டுச் சும்மா இருக்கிறவங்க உண்டு. 

இங்கே நம் நண்பர் எல்லாமும் கிரமமாகச் செய்கிறார்.  தூர தேசங்களில் இருப்பவர்களுக்கும் வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் முன் கூட்டியே பத்திரிகையை அனுப்புவதன் மூலம் தன் முன் ஜாக்கிரதையையும் அனைவரும் அப்படியே செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டுகிறார். திட்டமிட்டு அனைத்தும் செய்கிறார்.  பத்திரிகை அனுப்பியவர்கள் பெயரையும் குறித்து வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் வெளியூர்களில் இருந்தாலும் தங்கள் பிள்ளையின் கல்யாணத்தில் அவர்களும் பங்கேற்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.  உறவுகளை அரவணைத்துச் செல்லும் அவர் போக்கு இங்கே புரிய வருகிறது. அதே போல் உள்ளூர் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் தானே தன் மனைவியோடு நேரில் சென்று அழைக்கவும் தயாராகிறார்.

இதில் பணச் செலவு மட்டுமில்லை, உடல் சோர்வும் கூடவே இருக்கிறது. ஆனாலும் இவை எதையும் பொருட்படுத்தாமல் யாருக்கும் தொந்திரவாக இல்லாத ஒரு நேரத்தில் தன் பயணத்தை ஆரம்பித்து ஒவ்வொரு வீடாக அழைக்கச் செல்கிறார்.  ஆட்டோவை வெயிட்டிங்கில் போடுவதில் உள்ள சிரமம், போக்குவரத்து நெரிசலின் தாமதம், ஒருவழிப்பாதை என்பதால் கிட்ட இருக்கும் இடங்களுக்குக் கூடச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய அவஸ்தை என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு சென்றாலோ செல்ல வேண்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலவற்றில் லிஃப்ட் இல்லை;  லிஃப்ட் இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் இயங்கவில்லை போன்ற தொந்திரவுகள்.  பெயர்க் குழப்பங்கள், முன் கூட்டிச் சொல்லிவிட்டுச் செல்லாததால் வீட்டில் காண வேண்டிய நபர் இல்லாமை ஆகிய தொந்திரவுகள் நேருகின்றன.  அப்படியே காண வேண்டிய நபர்கள் இருந்தாலும் எல்லாருமே ஒரே மாதிரியான வரவேற்பையா கொடுக்கிறார்கள்.

சிலர் தொலைக்காட்சி சீரியல் பார்க்கிறச்சே இவன் என்ன தொந்திரவு என்ற எண்ணத்திலும், இன்னும் சிலர்  பத்திரிகையைப் பிரித்தே பார்க்காமல் ஓரமாய்ப் போட்டுவிடுவதும், மனம் இருப்பவர்கள் குடிக்க, சாப்பிட என்று தருவதும், மனமில்லாதவர்கள் குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காததும் என மாறுபட்ட பல்வேறு அனுபவங்கள்.  இன்னும் சிலர் இவங்க இன்னும் பல வீடுகள் செல்லணுமே, ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கேனு நினைக்காமல் பேசித்தள்ளும் நபர்களாகவும் இருந்தார்கள். எல்லாவற்றையும் விட தொலைக்காட்சிகளில் மூழ்கி இருப்பவர்கள் அரை மனதாகப் பேசுவது தான் இவரை மிகவும் பாதித்திருக்கிறது.  அதோடு பிசினஸில் மூழ்கி இருக்கும் நபர் ஒருத்தர் போனதும் வரவேற்று ஒரு வார்த்தை சொன்னதோடு சரி.  அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாகிறது.  இவரைக் கவனிக்கவோ, என்ன விஷயம் எனக் கேட்கவோ அவருக்கு நேரமும் இல்லை. தொலைபேசி அழைப்புகள் அவரைப் பேச விடவும் இல்லை. இப்படியான பலதரப்பட்ட மனிதர்களிடம் பலதரப்பட்ட அனுபவங்கள் போதாது என்று இன்னொரு வீட்டில் பார்க்கவேண்டிய நபரின்  இரு தாரங்களும் இல்லாமல் வேறொரு பெண்மணி இருந்ததும், இவர் மனதைக் குடைகிறது.

மனிதர்களில் தான் எத்தனை வகை!  உயரம், குள்ளம், குண்டு, ஒல்லி, நடுத்தரம், கறுப்பு, சிவப்பு, மாநிறம் என இருப்பதைப் போல் அவர்களின் குணங்களிலும், நடத்தைகளிலும், வீட்டுக்கு வருகிறவர்களை நடத்தும் முறைகளிலும் எத்தனை எத்தனை மாறுதல்கள்!  இத்தனை வேறுபாடுகள் கொண்ட சுவாரசியமான உலகம் ஒன்றைப் பார்த்து   நண்பர் மூலமாகவே அனைத்துச் செய்திகளையும் பெற்றுக் கொண்டு பார்த்து ரசிக்கிறார் இந்தக் கதாசிரியர்.  அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை  ஒரு மூன்றாம் மனிதராகவே அனைத்தையும் பார்த்து வருகிறார்.  ஆனால் கடைசி வரை அவரால் அப்படி இருக்க முடிந்ததா என்றால் இல்லை.

அங்கே தான் இருக்கிறது முக்கியமான செய்தியே.. "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு". என்னும் வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கிறார் நம் கதாசிரியர். ஒரு வழியாக நண்பரின் மகனுக்குக் கல்யாண தினமும் வந்துவிடுகிறது. மண்டபத்துக்கும் வந்துவிடுகிறார் ஆசிரியர்.  ஆனால் கல்யாணப் பிள்ளையின் தந்தையான இவரின் நண்பரைக் காணவே காணோம். மேடையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.  ஆண்கள் அரட்டை அடிக்கப் பெண்கள் பட்டுப்புடவையிலும் நகைகளிலும் ஜொலித்துக்கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்க, அவசரமாய்க் கிளம்புபவர்கள் மொய் எழுதிவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்க, பிள்ளையின் தந்தை இருக்குமிடமே தெரியவில்லை.  அவரை எல்லா இடமும் தேடிய கதாசிரியர் நண்பரின் மனைவியைக் கேட்க, அவர் இன்னமும் மணமகன் அறையில் இருப்பதாகவும், தன் பிறந்தகத்து மநுஷர்களை அலக்ஷியம் செய்துவிட்டதாகவும் கோபமாகச் சொல்ல விஷயம் என்னவென விசாரித்துத் தெரிந்து கொள்கிறார்.

பிள்ளையின் தாய் மாமா மும்பையில் இருக்கிறார்.  அவருக்குப் பத்திரிகையைத் தபாலில் அனுப்பிவிட்டுக் கூடவே ஒரு கடிதமும் வைத்துத் தொலைபேசியிலும் சொல்லி இருக்கிறார் நண்பர்.  இத்தனை அமர்க்களத்தில் மும்பைக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு நேரில் போய் அழைப்பது என்றால் சும்மாவா! ஆகையால் இவ்வளவு முன் ஜாக்கிரதை எடுத்துக் கொண்டு எல்லாமும் செய்தும், தாய்மாமாவுக்கு நேரில் அழைக்காத கோபம்.  முறுக்கிக் கொண்டு நிற்கிறார். பிள்ளையின் தந்தை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஒரே முறுக்காக முறுக்கிக் கொண்டு இருக்கிறார்.  இவர்களுக்கும் வயதாகிவிட்டது; உடல் நலம் சீராக இராது என்பதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மறுக்கிறார்.

நம் கதாசிரியருக்கு நிலைமை புரிகிறது.  "ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக் கற; பாடிக்கறக்கற மாட்டைப் பாடிக்கற" என்பார்கள்.  அதற்கேற்ப, மும்பைக்காரர் செல்லும் வழியிலேயே போய் அவரை மடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தன் நண்பரைக் கடிந்து கொள்கிறாப்போல் பாவனை செய்கிறார். மும்பை போய் அழைக்காதது மாபெரும் குற்றம் என்கிறாப்போல் பேசவும் மும்பைக்காரருக்கே ஒரு மாதிரி ஆகி விடுகிறது.  அதோடு இல்லாமல் மும்பைக்காரர் பெருந்தன்மையோடு இதை மன்னித்துக் கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அவரைத் தூக்கி வைத்துப் பேச முகஸ்துதிக்கு மயங்காதார் யார்!  அப்படியே மயங்கி விடுகிறார்.  இதுதான் சரியான நேரம் என நம் கதாசிரியரும் அவர் காலில் தம் நண்பர் சார்பாக விழுந்து மன்னிப்புக் கேட்க, ஒரு வழியாய் மும்பைக்காரர் வழிக்கு வந்து விடுகிறார்.

இங்கே தான் நம் ஆசிரியரின் பெருந்தனமை மட்டுமில்லாமல் மனிதர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதில் அவருக்குள்ள சாமர்த்தியமும் தெரிய வருகிறது. கல்யாணத்தை நிறுத்துவது மும்பைக்காரரின் நோக்கம் இல்லை என்றாலும் அவருடைய ஈகோவானது அவருக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தது.  அது கிடைக்கவில்லை என்றதும் முறுக்கல், வக்கிரம். அதைத் தூண்டி விடுகிறாப்போல் சகோதரியின் பேச்சு.  எல்லாமும் சேர்ந்து கொள்ள மனிதர் ஒரேயடியாகக் கோபப்பட்டார்.  அந்தக் கோபத்தை சாந்தப்படுத்தத் தெரியாமல் விழித்த தம் நண்பரை இவர் சரியான சமயத்துக்குப் போய் அவர் சார்பாகப் பேசிக் கல்யாண நிகழ்ச்சிகளில் மகிழ்வோடு பங்கு பெறும் அளவுக்கு அவர் மனதை வசமாக்கிவிட்டார்.  இது எல்லாருக்கும் கைவந்த ஒன்றல்ல.  இங்கே அவர் மட்டும் அப்படி நடந்திராவிட்டால் கல்யாணத்தில் தேவையில்லா மனக்கசப்பும், வருத்தமும் நேரிட்டிருக்கும். 

நான் தான் உசத்தி, நீ என்ன என்னை விட உசத்தியா என்றெல்லாம் நினைக்காமல், அப்படியெல்லாம் பேசாமல் நண்பருக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு காலில் விழுந்து நமஸ்காரமும் பண்ணி ஒருவரை வழிக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்றல்ல.  உண்மையில் மிகப் பெரிய மனம் வேண்டும். அடக்கம் வேண்டும். விநயம் வேண்டும்.  இவை அனைத்தும் கைவரப் பெற்ற நண்பரைப் பெற்ற கல்யாணப் பிள்ளையின் அப்பா உண்மையில் பாக்கியசாலியே! கதாசிரியருக்கும் சேர்த்து மும்பைக்கு விருந்தினராக வரும்படி அழைப்பும் கிடைக்கிறது. கல்யாணமும் சுமுகமாக நடைபெற வழி செய்தாயிற்று.  கல்யாணத்தில் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. 

பொருத்தமான இடங்களில் பொருத்தமான படங்களையும் சேர்த்துக் கதை அழகுக்கு அழகு செய்திருக்கிறார்.  அதிலும் வாஷிங்டனில் திருமணம் படங்கள் பிரமாதம்.  எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது.





 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.






    


இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள மற்றொருவர்:


தான் பெற்ற ஹாட்-ட்ரிக் பரிசினை 

தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு


ஐந்தாவது சுற்றிலும்


முன்னனியில் நிற்கும்


களம்பூர் திரு.




 G. பெருமாள் செட்டியார்  



அவர்கள்


வலைத்தளம்

http://gperumal1974.blogspot.in/





இரண்டாம் பரிசினை வென்றுள்ள


ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்


களம்பூர் திரு. 




 G. பெருமாள் செட்டியார்  



அவர்களின் விமர்சனம் இதோ:







[ To make the letters in BOLD size to easily read,

Click here first and then Press 

'Control and Plus'  Buttons simultaneously. 

Do it again and again to get more & more BIG Size of Letters.

At last Press 'Control and Minus' Buttons to bring it to Normal Size. - VGK ]  


தேவலோகத்தில்,  பாண்டவர்கள், பாஞ்சாலி மற்றும்  கர்ணன் ,  
அளவளாவிக் கொண்டிருக்க, கண்ணன்  அவர்களுடன்  
கலந்து கொள்கிறான்.


அனைவரும்  மகிழ்ச்சியுடன்  வரவேற்று,  
" நீண்ட  நாட்களாயிற்று  

கண்ணா,  உன்னைப் பார்த்து.  

எங்களை  மறந்தாயோ ? "  
என வினவ, 

கண்ணன்:             பூலோகம்  சென்றிருந்தேன் !  என்  பக்தன்  ஒருவன்,   
                                      தன்  மகனுக்கு   திருமணம்   நிச்சயம்  செய்திருக்கிறான் !  

சகதேவன் :           உன்  பக்தனா !  படாத  பாடு  படுத்தியிருப்பாயே  அவனை !

தருமன் :                 சகாதேவா !

சகதேவன் :           நான்  உண்மையைத்தானே  கூறினேன் !

தருமன் :                அவனை விடுத்து ,  நீங்கள்  தொடருங்கள் ,  கண்ணா !

கண்ணன் :             நீங்கள்  நினைப்பதுபோல்  இல்லை !  கலியுகத்து  மக்கள் 
                                       மிகவும்  புத்திசாலிகள் !  என்  மனம் ,  அவர்கள்பால்  
                                      லயித்துவிட்டது !

விஜயன் :              மிகுந்த  பீடிகையுடன்  ஆரம்ப்பிக்கிறாய்,  கண்ணா ! 
                                      ஆவலை  தூண்டுகிறாய் !  விரிவாக  சொல்லேன் !

கண்ணன் :            தன்  மகனுக்கு  திருமணம்  செய்ய  நிச்சயம்  செய்திருக்கும்  
                                     பக்தர், 



சகதேவன்:          அவர் பெயர் ?


கண்ணன் :          ம்..ம்..  நண்பர்  என்று  வைத்துக் கொள்வோம் !  அவருக்கு.....
                                    ஒரு   நண்பர் !



சகாதேவன் :      நண்பருக்கு,    நண்பரா  ?   மிகவும்  குழப்புகிறாய் ,  கண்ணா !


கண்ணன் :          அவரை  "  கதா நாயகன் " என்று  வைத்துக் கொள்வோம் !  
                                    இப்போது  திருப்திதானே !



தருமர் :                  சகதேவா !  இடையில்  குறுக்கிடாதே !  நீங்கள்  தொடருங்கள் ,
                                    கண்ணா !


கண்ணன் :         திருமணத்திற்கு  மூன்று  மாதங்களுக்கு  முன்னரே  
                                  அழைப்பிதழ்களை   அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார், 
                                  நண்பர் !   அந்த  அழைப்பிதழ்களின்  ஓரங்களில்,  மஞ்சளைத் 
                                  தடவி  ,   பூஜை அறையில்  வைத்து ,  என்  ஆசியையும்  
                                 பெற்றுவிட்டார் !
                         
கர்ணன் :              கண்ணனின்  ஆசீர்வாதம் பெற்ற திருமணமா ?  மிகவும்  
                                    சிறப்பானதாக  இருக்குமே !


கண்ணன் :         வெளியூர்களில்  வசிக்கும்  அன்பர்களுக்கு,   காலதாமதமாய் 
                                  கிடைக்கும்  தகவல்களால்  ஏற்படும்  இன்னல்களைத் தவிர்க்க,
                                  முன்கூட்டியே  யோசித்து,  அவர்களின்  பெயர்களையெல்லாம் 
                                  பட்டியலிட்டுவிட்டார் !



சகதேவன் :       இந்த  " முன் கூட்டியே  யோசிக்கும்  திறமையை "  நண்பருக்கு  
                                    கொடுத்தது  நீதானே,   கண்ணா ?


கண்ணன் :        ஆம் !  அதிலென்ன சந்தேகம் ?



சகதேவன் :       அதனால் தான்  பயமாயிருக்கிறது,   !  முன்கூட்டியே  
                                   யோசிப்பதில் ,  வித்தகனாயிற்றே ,  நீ !  
                                   ஒரு பாதியை  சொல்லிவிட்டு,  மறு பாதியை  மறைத்து, 
                                   மற்றவர்களை  துன்பத்தில்  ஆழ்த்தி ,  வேடிக்கைப் பார்ப்பதில் 
                                    வல்லவன்  அல்லவா நீ ! 



தருமர் :                விளையாட்டு  வேண்டாம்,  சகாதேவா !
                                   அது  நடந்து  முடிந்த  கதை !
                                    இன்றைய நிகழ்ச்சியின்  முடிவை அறியாமல் ,  வீணே  
                                   வார்த்தைகளைக் கொட்டுவது தவறு . 
                                   உன்  தவறான  வார்த்தைகளால்,  பாஞ்சாலியின்  முகம் 
                                    வாட்டமடைவதைப் பார்   !



பாஞ்சாலி :        ஆம்  சுவாமி !  இளையவரின்  வார்த்தைகள் ,  என் மனதில்  
                                   பழைய  நினைவுகளைக் கொண்டுவந்து விட்டது ! 


கண்ணன் :       ஆஹா !  என்ன  பொறுமை !  என்ன பொறுமை !
                                அன்றும், இன்றும்......  நீ  மாறவேயில்லை,  தர்மா !
                                வாழ்த்துகிறேன்,   உன்னை ! 



தருமர் :                வாழ்த்துக்களுக்கு  நன்றி, கண்ணா !  
                                   நீங்கள்  தொடருங்கள் !


கண்ணன் :       தினமும்  அழைப்பிதழ்களை  தபாலில்  சேர்த்துவிட்டு, 
                               அவைகளை  அனுப்பிய  தேதியையும்  குறித்து  
                               வைத்துக் கொள்வார்,  நண்பர்   !



கர்ணன் :           என்ன  ஒரு நேர்த்தி !  பாராட்டுகிறேன்  கண்ணா,  உன் பக்தரை !


கண்ணன் :        நண்பருக்கு  ஒரு  மைத்துனர் .  அவரின்  இருப்பிடம் , நண்பரின் 
                                 இருப்பிடத்திலிருந்து   வெகு  தூரம்.    மும்பை  என்ற இடம் .
                                நேரில்  சென்று  அழைப்பிதழைக்  கொடுக்க  ஆவல்.
                                ஆனால்,  இந்த ஒரு  அழைப்பிற்காக  மட்டும்  சில நாட்களைச் 
                                செலவிட வேண்டியிருக்கும் .  அதனால்,    திருமண  அழைப்பிதழை 
                                தபாலில்  அனுப்பி விடலாம்  என்று எண்ணி  தன்  மனைவியின்  
                                கருத்தைக் கேட்கிறார்,  நண்பர்.



கர்ணன் :            நியாயம் தானே ?


கண்ணன் :       மனைவியும்  சரி என்று  சொல்லிவிடுகிறார் .



பாஞ்சாலி :       கணவனின் கருத்தே  தன்  கருத்தென  கொண்ட  மகராசி !



சகதேவன் :     வீணாக  கருத்துக்களைக்  கொட்டிவிட்டு ,  மாட்டிக் கொள்ளாதே ,
                                 பாஞ்சாலி !



பாஞ்சாலி :     நான்  உண்மையைத்தானே  கூறினேன் !


கண்ணன் :       தொலைவில் இருக்கும்  மைத்துனருக்கு ,  அழைப்பிதழை  
                                அனுப்பிவிட்டு,  உள்ளுரில்  இருக்கும்  அன்பர்களுக்கும், 
                                நண்பர்களுக்கும்,  உறவினர்களுக்கும்  நேரில் சென்று  
                                அழைப்பிதழைக் கொடுத்து,  திருமணத்திற்கு  அழைக்க 
                                வேண்டும்  என்ற ஆசை ,  நண்பருக்கு ,



                                 அவ்வாறு செல்லும்போது, தன் மனைவியும் ,  பட்டு உடுத்தி , 
                                 சீவி, சிங்காரித்து, தலை நிறைய  மலரணிந்து,  கையில் 
                                 வெள்ளி சிமிழில்  குங்குமம்  ஏந்தி,  உடன் வர வேண்டும்  
                                 என்பதுவும்  நண்பரின்  ஆசை !



கர்ணன் :           நியாயமான  ஆசைகள்தானே,   கண்ணா ?


கண்ணன் :        அங்குதான்  சிக்கல் !  காலையில்  சிலரையும்,  மாலையில்  
                                சிலரையும்  சந்தித்து ,  அவர்களை  திருமணத்திற்கு  அழைப்பது 
                                என்று  திட்டம்  தீட்டியிருந்தார்,  நண்பர் ! 

                                ஆனால்,  அவரின்  மனைவியோ  தொலைக் காட்சியில் வரும் 
                                " அத்திப் பூக்களை "  பார்க்காமல் ,  தலையில்  பூக்களைச் 
                                  சூட  மறுக்கிறார்.  அதுதான்  பிரச்சினை !



கர்ணன் :               தொலைக்காட்சி.....  அத்திப் பூக்கள்  .......
                                     இளவல்  சகதேவன்  கூறியதுபோல்  ,  மிகவும்  
                                     குழப்பிவிட்டாய் ,  கண்ணா !


கண்ணன் :          தொலைக்  காட்சி  என்பது,   உலகத்தில்  ஓரிடத்தில்  நிகழும் 
                                   நிகழ்வுகளை ,  உலகத்தின்  மறு  மூலையிலும்  காணலாம் !
                                   உதாரணத்திற்கு,   மகா பாரதத்தின்  பதினெட்டு நாட்கள்  
                                   போர்களையும்,  அரண்மனையில் இருந்தவாறே  நேரில் 
                                  கண்டு, திருதராஷ்டிரனுக்கு  உரைத்தானல்லவா, சஞ்சயன் !
                                  அதைப் போன்றது !



கர்ணன் :             அது  நீ  கொடுத்த வரம் !


கண்ணன் :         அன்றைக்கு,  அது  ஒரு  சாதனை !   அதற்கு  தேவைப்பட்டது 
                                  எனது  வரம் !



                                  ஆனால்  இன்றைக்கு,  பூலோகத்தில் இதெல்லாம்   சர்வ  
                                  சாதாரணம் !
                                 
சகதேவன் :        கண்ணா !  நீ  கூறியது  எனக்கு  சரியாக  கேட்கவில்லை .
                                    தொலை  காட்சி  என்றாயா?  அல்லது  தொல்லைக் காட்சி 
                                     என்றாயா? 


கண்ணன் :        தொலைக் காட்சி  என்றுதான்  கூறினேன் !
                                 விரும்பியவர்களுக்கு   தொலைக் காட்சி !
                                 விரும்பாதவர்களுக்கு  தொல்லைக் காட்சி !
                                 அவ்வளவுதான் !



சகதேவன் :      உன்னைப் போல்  என்று சொல் !


கண்ணன் :       சகதேவா !  என்ன  உளறுகிறாய் ?



சகதேவன் :     அன்று ,  ஆயர்பாடியில்  இருந்த  கோபிகையரில்   சிலருக்கு 
                                 ஓயாத  தொல்லையாகவும்,      சிலருக்கு     செல்லப்  
                                 பிள்ளையாகவும்,  இருந்தவனல்லவா  நீ ! 
                                 அதனால்தான்  அப்படி  சொன்னேன் !



பாஞ்சாலி :     கண்ணா !  அந்த   அத்திப் பூக்களைப் பற்றி ...


கண்ணன் :        அத்திப் பூக்கள்  என்பது  ஒரு  நெடுந்தொடர்.  
                                முற்காலத்தில்,  இரவில்  குழந்தைகளை  தூங்க  
                                வைப்பதற்காக,  குழ்ந்தைகளை  படுக்க வைத்துவிட்டு, 
                                தாயோ, அல்லது  வீட்டிலிருக்கும்  பெரியவர்களோ  கதை 
                                சொல்வார்கள் .  குழந்தைகளும்  கதையைக் கேட்டுக் கொண்டே 
                                தூங்கிவிடும். 



பாஞ்சாலி :    ஆமாம் !
  
கண்ணன் :    முந்தையநாள்   பாதியில் நின்ற கதை  மறுநாளும்  தொடரும் .
                             இவ்வாறு  சொல்லப்படும்  கதை ,  பல நாட்களுக்கு  தொடரும்.
                             ஆனால்,  இந்த  நெடுந்தொடர்  முடிவடைய  பல  மாதங்களும் 
                             ஆகும்,  பல வருஷங்களும்  ஆகும் !



பாஞ்சாலி :    எதையெதையோ  சொல்லி,  ஆவலை  தூண்டிவிட்டாய் , கண்ணா !
                               எனக்கும்  அத்தகைய  நிகழ்ச்சிகளை  பார்க்க வேண்டும்போல் 
                               இருக்கிறது !



சகதேவன் :    பாஞ்சாலி !  நீ  கேட்பது  வரமா ?  இல்லை  சாபமா ?



பாஞ்சாலி :   ஏன்  இப்படி  பயமுறுத்துகிறீர்கள் ?



சகதேவன் :    வரமென்றால்,   அதில்  எங்களுக்கும்  பங்குண்டு !
                                சாபமென்றால்,  நீ மட்டும்  தன்னந்தனியே  பார்த்து,  சிரித்து ,
                               ரசித்து,  மகிழ வேண்டியிருக்கும் !  



பாஞ்சாலி :    அண்ணா .......  கண்ணா ! !  
                               தயவு  செய்து ,  நான்  கேட்டதையெல்லாம்  மறந்து விடு !



தருமர் :             (  பாஞ்சாலியின்  பயத்தை  ரசித்தபடி )  சகதேவா !  போதும் 
                               உன்  குறும்புத்தனம் !  கண்ணனை  பேச விடு !


கண்ணன் :    மனைவியின்   காலம்  தாழ்த்தும்   இந்த செயலை   கண்டிக்க 
                               முடியாமல்,  அழைப்பிதழ்களைக் கொடுக்க மாலையில்   
                               செல்கிறார்,      தன்  மனைவியுடன் .
                               சென்றோமா,  அழைப்பிதழை  கொடுத்தோமா  என்று   
                               முடிகிறதா  அவர்களின்  வேலை .   எத்தனை  இடையூறுகள்  ! 
                              
                               போக்குவரத்து   நெரிசல்களால்   ஏற்படும்  கால  தாமதம் ,
                               இவர்கள்   தேடிச்  சென்றவர்கள்  ,  இவர்கள்  செல்லும்   நேரத்தில் 
                               அங்கிருக்க  வேண்டும் ,   அப்படியே  இருந்தாலும்   கதவை  
                              திறப்பதற்கு முன்  அவர்கள்  எடுத்துக் கொள்ளும்  
                              முன் எச்சரிக்கை,  
                              ஒரே  பெயரைக் கொண்ட  கட்டிடங்கள்,
                              ஒவ்வொரு  கட்டிடத்திலும் ,  ஒரே  பெயரைக் கொண்ட  
                              பல்வேறு  மனிதர்கள் ,
                              திருமணத்திற்கு  அழைக்க  வந்தவர்களை  லட்சியம்  
                              செய்யாமல்,  தொலைக்  காட்சி பெட்டியில்  லயித்திருப்பது,
                              வந்தவர்களை  உட்காரவைத்துவிட்டு,  தொலை பேசியில் 
                              பேசிக் கொண்டே  அழைப்பிதழின்  மேல்  கிறுக்குவது ......



                              அப்பப்பா !  சொல்லி மாளாது,  நண்பரும்  அவரின்  மனைவியும் 
                              பட்ட பாட்டை !



கர்ணன் :       உன் பக்தனின்  இவ்வளவு  துன்பங்களையும் வேடிக்கைப் 
                              பார்த்துக் கொண்டிருந்தாயா,  கண்ணா ?


கண்ணன் :     நான்  எங்கே  வேடிக்கைப் பார்த்தேன் !   அழைக்கச்  சென்றவர்கள் 
                             என்னை  உடன் வர  அழைத்தால்தானே  நான்  அவர்களுடன் 
                             செல்ல முடியும் ?  இவ்வளவும்,  நண்பர்  நம்  கதா நாயகனிடம் 
                             கூறியது !



சகதேவன் :  கதா நாயகன்  மிகவும்  வருத்தப்பட்டிருப்பாரே ,  நண்பரின்  
                              வேதனை மிக்க  அனுபவங்களைக் கேட்டு !


கண்ணன் :      அதுதான்  இல்லை !  மிகவும்  ரசித்து  சிரிப்பார் !  .  
                               நண்பரும், கதா நாயகனும்  இரவில்,  ஒரு கோவிலில்  
                               சந்திப்பதை  வழக்கமாகக்  கொண்டவர்கள் .  
                               நண்பரின்  "  அழைப்பு    படலத்தை "  கேட்பதற்காகவே  ,
                               அவருக்காக  துண்டு போட்டு  இடம்  பிடிப்பார்  என்றால்  
                              பார்த்துக் கொள்ளுங்களேன் !



கர்ணன் :         துண்டு  போட்டு  இடம் பிடிப்பதா ?  கண்ணா !  ஒன்றும் 
                               புரியவில்லை ,  எனக்கு !


கண்ணன் :      அவர்கள்  சந்திப்பது  இரவு  நேரத்தில்  அல்லவா !
                              கோயிலில்  கூட்ட்ம்  அதிகம்  இருக்கும் !
                               நண்பர்  வருவதற்கு தாமதமானால்,  அவர்  உட்காருவதற்கு 
                               இடம்  வேண்டுமல்லவா ?  அதற்காக,  தன்  மேல்  துண்டை  
                               விரித்து விட்டு,  கேட்பவர்களிடம்  "   நண்பர்  வருகிறார், 
                              நண்பர்  வருகிறார் "  என்று  சொல்லிக் கொண்டிருப்பார் !
                              நண்பர்  வந்தவுடன் ,  அவரின்  அன்றைய  அனுபவங்களைக் 
                              கேட்டு  ரசித்துவிட்டு  செல்வார் !



கர்ணன் :      என்ன  கொடுமை  இது,  கண்ணா !
                             நண்பருக்கு  உதவி செய்யாவிட்டாலும்  பரவாயில்லை,
                            ஆறுதல்  சொல்லாவிட்டாலும்  பரவாயில்லை ,
                             அவரின் வேதனை மிக்க  அனுபவங்களைக் கேட்டு  
                             ரசிப்பது  என்பது  .......................
                             இத்தனை  கேடு கெட்டவர்களா இந்த  மானிடர்கள் !


கண்ணன் :   ஏன்  தவறாக  எடுத்துக் கொள்கிறாய்,  கர்ணா ?
                            சந்தோஷத்தை  மற்றவர்களுடன்  பங்கிட்டுக் கொண்டால் 
                            அது  வளரும் !
                            துக்கத்தையும்,  வேதனைகளையும்  பங்கு வைத்தால்  
                            அது  குறையும் அல்லவா ?



கர்ணன் :      இல்லை,  கண்ணா !  உன் வாதத்தை  என்னால்  ஏற்றுக் கொள்ள 
                            முடியவில்லை !


கண்ணன் :     தவறு, கர்ணா !  என்  கூற்றை  வைத்துக் கொண்டு  நீ தீர்மானிப்பது 
                             சரியல்ல !
                             தீர  விசாரிப்பதுதான்  முறை !
                             இன்று  திருமணம் !  நாம்  சென்று  அங்கு  என்ன  நடக்கிறது  
                             என்று  பார்த்து  வருவோம்,  வா   ! 



சகதேவன் :   எதிர்பார்த்தேன் !  இப்படி  ஏதாவது  நடக்குமென்று !



தருமர் :            சகதேவா !  எதையும்  சந்தேகக் கண் கொண்டு  பார்ப்பதே  
                              உன் வேலையாய்  போய்விட்டது !



சகதேவன் :   முன்பு  கண்ணன்  இங்கு  வந்திருந்தபோது,  பெரிய  அண்ணன் 
                               கர்ணன்,  உங்களிடம்  துரியோதனனைப்பற்றியும்,   அவன்பால் 
                               கொண்ட  நட்பினைப் பற்றியும்  பேசிக் கொண்டிருந்தார்  
                               அல்லவா ?


கண்ணன் :    ஆமாம் !  அதெற்கென்ன  இப்போது ?



சகதேவன் :    அப்போது,  உன் இதழ்களின்  ஓரத்தில்  மலர்ந்த  புன்சிரிப்பை 
                               பார்த்துவிட்டேன்,  கண்ணா !  
                               உன்னை  நானறிவேன் !   என்னை  நீயறிவாய் !!  
                              நீ  தீர்மானித்துவிட்டாய் !!  விடவா  போகிறாய் ??
                               அண்ணன்  கர்ணனுக்கு  அழைப்பு  விடுத்துவிட்டாய் !! 
                              மீற  முடியுமா  அவரால் !!  சென்று  வாருங்கள் !


கண்ணன் :     (பாஞ்சாலியை  நோக்கி )  நீயும்  எங்களுடன்  
                               வருகிறாய்,  பாஞ்சாலி ! 



சகதேவன் :   பாஞ்சாலி,  உன்னை  அப்போதே  எச்சரித்தேன்,  
                              கருத்துக்களைச்  சொல்லி,  மாட்டிக் கொள்ளாதே   என்று ! 
                              இதோ பார்,  உனக்கும்  ஒரு  அழைப்பு !
                             மீறவா  முடியும் ,  உன்னால் ?  சென்று வா !! 



-ooooo-


பூலோகத்தில் ,  திருமண  மண்டபம் .



கர்ணன்    :            கண்ணா !  நாம்  சரியான  இடத்திற்குதானே  
                                      வந்திருக்கின்றோம் ?  


கண்ணன் :              சரியான  நேரத்திலும்  வந்துவிட்டோம் ,  கர்ணா !   
                                       பாஞ்சாலி,  அதோ  பார்,,  பட்டு உடுத்தி,  சீவி, சிங்காரித்து ,
                                       கழுத்து நிறைய  நகைகளுடன் ......  அவர்கள்தான்  
                                       நண்பரின்  மனைவி !



பாஞ்சாலி  :          அழகாய்த்தான்  இருக்கிறார்கள் , கண்ணா ! 
                                      ஆனால்,  முகத்தில்  ஏதோ  ஒரு வாட்டம்  இருக்கிறது .
                                      காரணம்  என்ன  ,  கண்ணா !


கண்ணன்  :             மும்பையிலிருந்து  அவரின்  அண்ணன்  திருமணத்திற்கு 
                                       வந்து விட்டார் !   அவரின்  பிறந்த வீட்டு  உறவு  என்று  
                                       சொல்லிக்கொள்ள  இருப்பது ,  இந்த  ஒரு  அண்ணன் 
                                       மட்டும்தான் .



                                        ஆனால்,  மும்பையிலிருந்து  வந்தவரோ ,   வானத்துக்கும் 
                                        பூமிக்குமாக  குதிக்கிறார்,  தன்னை  நேரில்  வந்து 
                                        அழைக்கவில்லை ,  அதனால்  தனக்கு  இந்த  இடத்தில்  
                                        எந்த  மரியாதையும்  இல்லை என்று .



                                       நண்பரின்  மனைவியாலும்  அவரை  சமாதானப்படுத்த 
                                       முடியவில்லை .  இவரும்   அண்ணனுடன்  சேர்ந்து  
                                       கொண்டார்   இப்போது.    தன்  அண்ணனை  நேரில் சென்று 
                                       அழைக்கவில்லை,  தன்  பிறந்த  வீட்டை  சரியாக  
                                       மதிக்கவில்லை என்று  கணவனிடம்  கூப்பாடு  
                                       போடுகிறார். 
                                        
                                        உரலுக்கு  ஒரு பக்கம் இடி,  மத்தளத்திற்கு   இரண்டு  பக்கமும் 
                                        இடி.  



பாஞ்சாலி :             என்ன  வேதனை  ,  கண்ணா,  உன் பக்த்தருக்கு !
                                        தூரத்திலிருந்த  உறவினருக்கு  அழைப்பிதழை  தபாலில்  
                                        அனுப்புவதற்கு  இசைந்தவர்தானே  இவர் ?


கண்ணன் :              ஆமாம் !



பாஞ்சாலி :              இப்போது,  தன்  நிலையை  மாற்றிக்கொண்டு,  கணவனை  
                                         குறை கூறுவது  எவ்வகையில்  நியாயம் ,  கண்ணா ?


கண்ணன் :                கலியுகத்தில்  இதெல்லாம்  சகஜம்,  பாஞ்சாலி !
                                         புகுந்த  வீட்டின்  பெருமையைக் காப்பது தன்  கடமை  என்று 
                                         நினைத்தவர்கள் ,  உங்கள்  காலத்தில்  இருந்த பெண்கள் !



                                         பிறந்த வீட்டின் பெருமையைப் பற்றி பேசியே,  கணவனை 
                                         இடித்துரைப்பவர்கள்,   கலியுகத்துப் பெண்கள் ! 



பாஞ்சாலி :              என்ன இருந்தாலும் ,  இது  உன் பக்தனுக்கு  வேதனையல்லவா ?
                                          திருமண நேரம்  நெருங்கிக் கொண்டிருக்கிறது ! 
                                         இந்த  பிரச்சினையை  தீர்க்க மாட்டாயா? 
                                          நீ  ஆசீர்வதித்த  திருமணமல்லவா  இது ?


கண்ணன் :                 இவர்கள்  எப்போதுமே  இப்படித்தான் !
                                         முடிந்தவரை   போராடுவார்கள் !   
                                         தன்னால்  முடியாது  என்று  தெரிந்தவுடன்,  கையை 
                                         தூக்கிக் கொண்டு  "  கண்ணா "  என்று  கதறுவார்கள் !
                                         அப்போது  ஓட வேண்டும், நான் ,  உதவி செய்வதற்கு !
                                         இது,  எனக்கு  விதிக்கப்பட்டது,  பாஞ்சாலி ! 



பாஞ்சாலி :              என்னை  குத்திக் காட்டுகிறாயா , கண்ணா, 
                                         இந்த  தருணத்தில் ?


கண்ணன் :                  தவறாக  எடுத்துகொள்ளாதே,  பாஞ்சாலி !
                                          அன்று,  நீயும்  மானிடராக  பிறந்தவள்  தான் !
                                          நான்,  மானிடரின்  இயல்பை   எடுத்துரைத்தேன், 
                                          அவ்வளவுதான் !



                                          அதோ பார்,  மண்டபத்தின் உள்ளே  நுழைகிறாரே,  
                                          அவர்தான்  நம்  கதா நாயகன் !



கர்ணன் :                    அவனைப் பார்க்கவே  பிடிக்கவில்லை,  எனக்கு.
                                           பிறர்  துன்பத்தில்  மனம் மகிழும் ,  ஈனப்  பிறவி !
                                           வரும்போதே  அவன் கண்கள்  நண்பரைத்  தேடுகின்றன !
                                          இதோ,  நண்பரின் மனைவியிடம்  பேசி,  நண்பர்  
                                           இருக்குமிடத்தையும்  தெரிந்து கொண்டுவிட்டான் ! 
                                          சந்தோஷத்தில்  குதிக்கப் போகிறான் !


கண்ணன் :                பொறுமையாய்  இரு ,  கர்ணா !



கர்ணன் :                    எதற்காக  பொறுமையாய்  இருக்க வேண்டும் !
                                         அதோ  பாருங்கள்.  சுவற்றை  நோக்கியிருக்கும்  அந்த 
                                          பெரியவரை  சமாதானப் படுத்தாமல்,  அவருக்காக 
                                          பரிந்து பேசி,  நண்பரை  சாடும்  அந்த  நயவஞ்சகனைப்  
                                           பாருங்கள் . 



                                          கண்ணா !  என்ன  இது ?  



                                           கதாநாயகன்,  அந்த  பெரியவரின்  
                                           காலில்  விழுந்து  "  எனக்காக  நண்பரை  மன்னிக்க " 
                                           வேண்டுகிறான்.  



                                          இது  மாபெரும்  செயல்  அல்லவா !
                                          தன்னை மறந்து,  தன்  நிலை மறந்து ,  
                                          வேர்  அறுந்த  மரம் போல்  ,  
                                          மற்றவர்  காலில்  சாஷ்டாங்கமாய்  நமஸ்காரம் 
                                          செய்வது,  முழுமையான   சரணாகதியை  வெளிப்படுத்தும் 
                                          செயல் அல்லவா !

                                          கோவிலில் ,  தண்டனிட்டு  நமஸ்காரம்  செய்வது, 
                                           தனக்காக,  தன்னை  உய்விக்க,   இறைவனை  
                                           வேண்டும்  செயல் .



                                          ஆனால்  இங்கு,  நண்பருக்காக  மற்றவர் காலில்  காலில் 
                                           விழுந்து  நமஸ்காரம்  செய்த  கதா  நாயகனின்  மனதில் 
                                          வேறு ஒரு  எண்ணம் இருக்கிறது ! 



                                           பிறர் துன்பத்தில்  இன்பம் காணும்  ஈனப் பிறவிகளுக்கு, 
                                           இந்த  எண்ணம் வராது.



                                           நீ  நடத்தும்  இந்த  நாடகத்திற்கு   அர்த்தம் என்ன ? 
                                           இதை  விவரமாகச் சொல், கண்ணா !


கண்ணன் :                  எல்லாவற்றையும்  நீயே  சொல்லிவிட்டு,  என்னை  
                                           எதற்கு   அர்த்தம் கேட்கிறாய் ?



                                          போகட்டும் !  உனக்காக  ஒன்றை மட்டும்  சொல்கிறேன் !



                                           கதா நாயகனுக்கு  ,  நட்பு  என்ற  வார்த்தையைப்பற்றி 
                                           தெரிந்ததெல்லாம்  ஒன்றே  ஒன்றுதான் ! 



                                           அது, 
                                           உடுக்கை  இழந்தவன்  கைபோல  ஆங்கு 
                                           இடுக்கண்  களைவதாம்  நட்பு 
                                           என்ற  திருவள்ளுவரின், திருக்குறள் !





கர்ணன் :             எத்தனை   அழகான  குறள் !
                                  மிகுந்த  பொருட்செரிவுள்ள  குறள் !
                                  இது ஒன்றே  போறும், கண்ணா !  
                                      
                                  கதா நாயகனின் மன நிலையை விளக்க,  
                                  இதைவிட  சிறந்ததொரு   பாடல் ஏதும் இல்லை !



                                  தேரோட்டியின்  மகனாக  இருந்த என்னை, 
                                  அரசனாக்கி   அழகு பார்த்த  துரியோதனுக்காக,  
                                  எதையும்  செய்ய  தயாராயிருந்த  என்னைக் காட்டிலும்.



                                  " எடுக்கவோ,  கோக்கவோ "  என்று  கேட்ட  
                                    துரியோதனனின்  மன நிலையைக் காட்டிலும், 



                                  நண்பருக்காக  மற்றவரின் காலில்    விழுந்து  
                                  மன்னிப்பு  கேட்ட  கதா நாயகனின்  செயல்  
                                  மிகவும்  பெரியது !
                                  போற்றத்தகுந்தது !



                                  இந்தச் செயலை,  நான்  அன்றே  செய்திருந்தால், 
                                 துரியோதனுக்காக ,  நான்  தருமனின்  காலில்  விழுந்து 
                                 மன்றாடியிருந்தால்,  நடந்திருக்குமா  
                                 அந்த  மகா பாரதப் போர் !
                                 அழிந்திருக்குமா  அத்தனை  உயிர்களும் !
                                 அகந்தையும்,  ஆணவமும்  என் கண்களை  மறைத்துவிட்டது !



                                  இல்லை  என்று  கேட்டவர்கெல்லாம் , 
                                  இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுத்த  நான், 
                                  வெட்கி தலை குனிந்துவிட்டேன், 
                                  நண்பருக்காக  தன்னையே  வேரறுந்த மரமாக 
                                  சாய்த்துக்கொண்ட , இந்த  நல்லவன்  முன்னால்  !
      
                                  இத்தகைய  நல்ல  உள்ளத்தையா  நான்  தூற்றினேன், 
                                  நய வஞ்சகன்  என்று ? 
                                      
                                 இந்த  உத்தமனையா  நான்  தூற்றினேன்,  ஈனப் பிறவியென்று ?



                                  உன் பக்தனுக்கு,  நீ  "  நண்பர்  "  என்று  பெயர்  வைத்த  காரணத்தை 
                                 ஆராயாமல்,  அறிவிழந்து விட்டேன், கண்ணா !  
                                  நீ  பொறுமையாக  இரு  என்று  சொல்லியும்  கேளாமல் ,
                                  அறிவிழந்து, வார்த்தைகளை  தவற விட்டேன் !



                                  இங்கு  அழைத்து வந்து ,  என்னை  பெரும்  பாவத்திற்கு 
                                  ஆளாக்கிவிட்டயே , கண்ணா !  இது  முறையா ?
                                  இது  தகுமா ?



                                  பெற்றவளைத் தவிர மற்றவரிடத்தில்  எதையும் கேட்காத 
                                  நான் , இன்று  உன்னிடம்  கேட்கிறேன்,  எனக்கு இரண்டு 
                                  வரங்களக் கொடு !



                                  நான் இன்று செய்த  பாவத்திற்கு  தண்டனையாக, 
                                 மறு பிறவி  என்று  ஒன்றிருந்தால்,...


கண்ணன் :       இருந்தால்  .....?

கர்ணன் :            நான்  இந்த  கதா நாயகனுக்கு  நண்பனாக வேண்டும் !


கண்ணன் :        அடுத்து  ?



கர்ணன் :            ஒற்றை வரியில் ,  நட்புக்கு  இலக்கணம் வகுத்த  அந்த 
                                 திருவள்ளுவருக்கு  மாணாக்கனாக வேண்டும் !


கண்ணன் :         விதியிருந்தால்,  நீ விரும்பியது  நிறைவேறும்,  கர்ணா !



கர்ணன்:               நன்றி, கண்ணா !  நன்றி !



                                   கண்ணா !  ஒரு  சிறு  சந்தேகம் ! 


கண்ணன் :         கேள் !



கர்ணன் :              நட்பைப் பற்றி  நான் தெரிந்து கொளவதற்காக,  என்னை  
                                   அழைத்து வந்தாய் . 
                                   இந்த  பாஞ்சாலியை  ஏன்  அழைத்து வந்தாய் ?  
                                   இந்த  அறிவிலியைப் பார்த்து  சிரிப்பதற்கா ?


கண்ணன் :          நான்  உன்னிடம்  ஏமாந்து விட்டேன்,  கர்ணா !
                                   நட்பை  பற்றிய  குறிப்பினை  சீக்கிரம்  உணர்ந்து 
                                  கொள்வாய்  என   எதிபார்த்தேன் !



                                  முழு சரணாகதி  விஷயத்தில்  நீ  சோடை போனால், 
                                  அதை  எடுத்துச் சொல்ல,  அதை  முற்றும் உணர்ந்த 
                                  அனுபவசாலியான ,  பாஞ்சாலி    உகந்தவள்  என்று 
                                  எண்ணி  அவளை  அழைத்து வந்தேன் ! 



                                  ஆனால் , நீ  ,  சரணாகதி விஷயத்தில்  தெளிவாக  
                                  இருந்து விட்டாய்,  அதனால்.  பாஞ்சாலிக்கு  இங்கு  
                                  வேலையில்லாமல்  போய்விட்டது ! 

கர்ணன் :            பாஞ்சாலியின்  அனுபவமா ?    அதை  கேட்க  நான் 
                                  ஆவலாய்  உள்ளேன்,  கண்ணா !


கண்ணன் :        அதை  நான் சொல்வதைவிட ,  பாஞ்சாலி சொல்வதுதான்  
                                 சிறப்பு !  



பாஞ்சாலி :        வேண்டாம்  கண்ணா !  சூர்ய புத்திரரின்  மனம்  
                                   வேதனைப் படலாம் !



கர்ணன் :             நான்  உணர்ச்சி வசப்படமாட்டேன்  என்று  உறுதி  
                                  கூறுகிறேன் ,  பாஞ்சாலி !  உன் அனுபவத்தைச் சொல் !



பாஞ்சாலி :        துரியோதனனின்  சபையில்  நான்  மானபங்கப் பட்டது 
                                   அனைவருக்கும்  தெரியும் !  
                                    என்னால்  முயன்றவரை  போராடினேன் !
                                   முடியவில்லை என்றபோது,  கடைசி நிமிடத்தில் 
                                    கைகளை  தூக்கி,  "  கண்ணா " என்று  கதறினேன் !
                                   என் மானம்  காக்கப்பட்டது ! 
                                    
                                   கண்ணன்,  பாண்டவருக்கு  உற்றவன் !
                                    எனக்கு  சகோதரனைப் போன்றவன் ! 
                                    நான்  கண்ணனைச்  சரணடைந்தேன்,  
                                    காப்பாற்றிவிட்டான்,  என்ற நினைப்பில்  இருந்தேன் !



                                    சரணாகதி  என்பது  இது  அல்ல,  மற்றொன்றும்  
                                    இருக்கிறது என்று எனக்கு  உணர்த்தியதும் , 
                                    கண்ணன் தான் !



                                   பாரதப் போரில்  9ஆம்  நாள் ,  இரவு .
                                   " சரியாக  போர் புரியவில்லை "  என்று   பிதாமகரை 
                                    இழித்துரைகின்றான்,  துரியோதனன் !



கர்ணன் :            அதனை  நான்  அறிவேன் !



பாஞ்சாலி :        பாதிக்கப்பட்ட  பிதாமகர்,  "  பார்த்தனைக் கொல்வேன் " 
                                   என்று  சபதம்  செய்கிறார் .
                                   
                                  இதை அறிந்த பாண்டவர்களிடையே  பெரும் கலக்கம்.



                                   பீஷ்மரை வீழ்த்த  யாராலும்  இயலாது  என்பது  
                                   அனைவரும்  அறிந்த  உண்மை !



                                   அதுமட்டுமல்ல,   அவரே  விரும்பினாலொழிய  ,  மரணம் 
                                    அவரை  தழுவாது  என்பதும்  அனைவரும்  அறிந்த  உண்மை !



                                 ஆறுதலும், தேறுதலும் சொல்ல,  வேகமாய் வந்த  கண்ணன் 
                                   வாயடைத்து  நின்றுவிட்டான் ,  எங்களின்  நிலை கண்டு !



                                  கேட்பதைக் கொடுப்பவன்  கண்ணன் !
                                   கேட்டவுடன்  கொடுப்பவனும்  கண்ணன் !



                                  ஆனால், 
                                   எதைக் கேட்பது ?
                                   எப்படி கேட்பது ? 
                                  
                                    தயக்கத்துடன்  கண்ணனை  நோக்கினோம் !
                                    ஒற்றை  வரியில்  உத்தரவிட்டான்,  கண்ணன்,  
                                    "  பாஞ்சாலி,  என்னுடன்  வா "  என்று !



                                    கொண்டவர்களை  நோக்கினேன் ,
                                     யார் முகத்திலும்  அசைவில்லை ! 
                                    மவுனம்  சம்மதத்திற்கு  அறிகுறி  என்று  
                                    பின் தொடர்ந்தேன்       அண்ணனை !
                           
                                    கண்ணன்  என்னை  அழைத்துச் சென்றது , 
                                     பிதாமகரின்  பாசறைக்கு ! 



                                    பாசறையின்    மூலையில்,  எங்களுக்கு  முதுகைக் 
                                    காட்டியவாறு  ஆலோசனையில்  இருந்தார்,  
                                     பிதாமகர் !



                                  " சப்தம்  செய்யாமல்,  வேகமாக  சென்று ,  பீஷ்மரின் 
                                   கால்களில்  விழுந்து விடு"  என்று  கிசுகிசுத்தான் ,  கண்ணன்.



                                    நானும் , வேகமாகச் சென்று  பிதாமகரின்  கால்களில் 
                                     விழுந்தேன் .  சப்தம் கேட்டு  திரும்பிய  பிதாமகர்,  
                                    என்னை  யாரென்று  அறியாமல் ,  எதோ  ஒரு  பெண்  என்று 
                                    கருதி,  "  தீர்க்க சுமங்கலி  பவ "  என்று  வாழ்த்திவிட்டு , 
                                     " நீ  யார்,  பெண்ணே ? "  என்று  வினவினார், 
  
                                  நான்  மெதுவாக,  தலையை  நிமிர்த்த ,  அதிர்ந்து  போனார், 
                                  பிதாமகர்.



                                  அவர்  கண்களில்  தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்ததும் ,
                                   உணர்ந்து கொண்டேன் ,  பிதாமகரின்,  வீழ்ச்சியை !



                                  அப்போதுதான்  உணர்ந்து கொண்டேன்,  
                                  காலில்  விழுவது  என்பது,  முழுமையான  சரணாகதி 
                                  என்று ! 



                                  அப்போதுதான்  புரிந்து கொண்டேன்,  இந்த  முழு  சரணாகதி, 
                                  எதிரியையும்  எளிதில்  வீழ்த்திவிடும்  என்பதை !



                                  அப்போதுதான்  தெரிந்து கொண்டேன்,    இந்த   சரணாகதி , 
                                  மாற்றான்  மனதையும்  மாற்றிவிடும்  என்பதை !



                                  இன்று,  இந்த  கதா நாயகன்  அந்த  பெரியவரின்  காலில்  
                                   விழுந்ததுமே  புரிந்து கொண்டேன்,  கண்ணனின்  
                                    விளையாட்டை !
                               
கர்ணன் :          கண்ணா !  நட்பின்  பெருமையை  நான்  அறிந்து  கொள்வதற்காகவும்,
                                 முழு சரணாகதியின்  ரகசியத்தை  மற்றவர்கள்  அறிந்து 
                                 கொள்வதற்காகவும்,  நீ  நடத்திய  நாடகமா  இது  ! 



                                  இதற்காகவே  ,  நண்பரை  படைத்து,  அவரின்  நண்பராக  
                                  கதா நாயகனையும்  படைத்த 
                                 கண்ணா!
                                 கோவிந்தா !
                                 கோபாலா  !
                                 கிருஷ்ணா  !
                                 மாதவா  !
                                 முகுந்தா !                                 
                                  மது சூதனா !
                                 பரந்தாமா  !!   
                                எனக்கு,  நட்பைப்  பற்றி  தெரிந்து கொண்ட  என் சார்பிலும், 
                                முழு  சரணாகதியின்  மகத்துவத்தை   உணர்ந்து கொண்ட  
                                மற்றவர்களின்  சார்பிலும்,  மனமார்ந்த  நன்றியும்  ,  பாராட்டுக்களும் !




கண்ணன் :    சரி !  நாம்  வந்த  வேலைதான்  முடிந்து  விட்டதே !  போகலாமா ?



கர்ணன் :        இந்த  திருமணம்  .....


கண்ணன் :    அது  நல்லபடியாகவே  நடக்கும் !   வளைகாப்பிற்கும்,  சீமந்தத்திற்கும் 
                              "  அழைப்பு "  வரும்.  வாருங்கள்  போகலாம் !

-oooOooo-



 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-18

ஏமாற்றாதே ! ஏமாறாதே 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 

22.05.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.










என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

  1. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம்
    அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் பரிசினை வென்று தான் பெற்ற
    ஹாட்-ட்ரிக் பரிசினை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்ட
    ஐந்தாவது சுற்றிலும் முன்னனியில் நிற்கும்
    களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களின் பிரமிக்கத்தக அருமையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்..இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான பெருமாள் செட்டியாரின் விமரிசனத்தோடு என்னுடையதும் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாகவே இருக்கிறது. பெருமாள் செட்டியாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

    சிறந்த கதையினைப் படைத்து ,
    என்னை எழுதத் தூண்டிய
    கதாசிரியர் அவர்களுக்கும்,
    என்கருத்தினையும் , எழுத்துக்களையும்
    பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுத்த
    நடுவர் அவர்களுக்கும் ,
    மனமார்ந்த நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  5. http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_17.html
    களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  6. கீதா மேடம் அவர்களுக்கும், திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்களது வெற்றிகள்!

    பதிலளிநீக்கு
  8. இரண்டு மாறுபட்ட விமர்சனங்களை எழுதி இரண்டாம் பரிசுக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு பெருமாள் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. பரிசு வென்ற கீதாசாம்பசிவம்மேடம் பெருமாள்செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. இரண்டாம் பரிசை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசமாக யோசித்து விமர்சனம் எழுதும் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:14 PM

      //இரண்டாம் பரிசை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசமாக யோசித்து விமர்சனம் எழுதும் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ ! :)

      நீக்கு
  13. பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவம் திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருமதி கீதா சாம்பசிவம் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமுமே நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு