என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

VGK 18 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ஏமாற்றாதே ! ஏமாறாதே !!





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 18 - ’ ஏமாற்றாதே .... ! ஏமாறாதே .... !! 


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html






 

  

 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 








    



 முதல்  பரிசினை  முத்தாக



 வென்றுள்ளவர்கள் மொத்தம் இருவர் 






 


முதல் பரிசினை முத்தாக 


வென்றுள்ள ஒருவர்



காரஞ்சன் [சேஷ் ]









திரு. E.S. சேஷாத்ரி

esseshadri.blogspot.com

அவர்களின் விமர்சனம் இதோ






கதையின் தலைப்பே யாரோ ஒருவர், யாரையோ ஏமாற்றியதால் ஏமாந்து போனாரோ? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, வாசிக்க ஈர்க்கிறது.

கதாசிரியர், தான் வலியுறுத்த எண்ணிய கருத்தை, நீதியை எளிய கதாபாத்திரங்களின் துணையோடு, மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் வாசகர் அனைவரின் உள்ளத்திலும் “பசுமரத்து ஆணியாய்”ப் பதிய வைப்பதில் வெற்றி கண்டு விடுகிறார்.

இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

பிஞ்சுக் குழந்தைகளின் கையில் கிடைக்கக் கூடாத பொருட்களை அவர்கள் எடுக்க முற்படும்போது,  பெற்றோர்கள் அதை மறைத்து வைத்துவிட்டு, “எங்கே காணோம், காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது” என  உரைப்பதில் ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுதல்.

நாம் சிறுவர்களாக இருந்த நாட்களில் காக்காய் நரியிடம் வடை இழந்த கதையிலும், பாட்டி சுட்ட வடையை காக்காய் தூக்கிச் செல்வதும், நரி காக்காயை ஏமாற்றி வடையை எடுத்துக் கொள்வதாகவும் படித்துள்ளோம். ஏமாற்றுவது எப்படி என்பதும் சிறுவயதில் நம்மையறியாமலேயே நம்முள் விதைக்கப்பட்டதோ? எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல் “ –இது வள்ளுவர் வாக்கு.


திருட்டு என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எடுத்துக் கொள்வது ஆகும். ஊழல், பிறர் சொத்தை அபகரித்தல், ஏமாற்றுதல், வஞ்சகம், திருட்டு இவையெல்லாம் தீய செயல்கள். இவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

இதையே வள்ளுவர்
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்..” என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த உண்மைகளை, நீதியை, நம் உள்ளங்களில் பதிய வைக்க எழுதிய படைப்பு இது!

இன்றைய உலகில்   பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது.   மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத்  தவறவில்லை.

பாத்திரப் படைப்பில் வெற்றி!

1.தேங்காய் விற்கும் கிழவி.

எளியவளாக, உழைத்துப் பிழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தள்ளாத வயதிலும், தளரா மனத்துடன் இயன்ற அளவு உழைத்து உண்பவராக, காலையில், சாலையோரத்தில் கடை விரிக்கும் பாட்டி நம் கண்முன் விரிகிறாள்.. தேங்காய் வியாபாரம் செய்யும் கிழவியின் வயோதிகத் தோற்றம், நீண்ட நாட்களாக அவள் உழைத்துப் பிழைப்பவள் என உணர்த்தும்  வகையில் 150 காய்களைச் சுமந்தவளால் தற்போது 50 காய்களை மட்டுமே சுமக்க முடிவதாகக் கூறியதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத் தக்கது.  சைஸ் வாரியாகத் தேங்காய்களை அடுக்கி அதற்கேற்றாற்போல் விற்பனை செய்யும் விலையை நிர்ணயிப்பது வரை அழகான படத்துடன், அருமையாக அருகிலிருந்து பார்த்தது போல் விளக்குகிறார்.

மேலும் அவள் மீது அனுதாபத்தைத் தூண்டும் விதமாக, அவள் வியாபாரத்தில் மனக்கணக்குப் போட முடியாமல் தடுமாறுவதும், பார்வைக் குறைபாட்டால் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கிடையில் வேறுபாட்டை அறிய முடியாமல் தவிப்பதாகவும் கண்பித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.

ஒரு தேங்காயை விற்றால் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான இலாபமே. அதுவும் பேரம் பேசுபவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடும். இதில் தவறாகக் கணக்கு போட்டுவிட்டாலோ அல்லது தவறாகச் சில்லரை கொடுக்க நேர்ந்தாலோ பாட்டிக்கு மிகவும் நஷ்டம்தானே?

இந்த இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், சென்னையில் நடைபாதைக் கடையில் பூவியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் அறியாமல் அவசரத்தில் கொடுத்துவிடுவதால் நஷ்டமடைய நேர்வதாக அந்த மூதாட்டி சாடியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அழுக்கு நோட்டுகள், செல்லாத நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நோட்டுகளாகப் பார்த்து, இது போன்றவரிடம் ஏமாற்றித் தள்ளிவிட்டு ஏதோ உலக சாதனை ஒன்றைச் செய்து முடித்தது போல் எண்ணி அல்ப சந்தோஷம் அடைவார்கள்.

கிழவி வாங்கி வரும் காய்கள் அனைத்துமே நல்ல காய்களாக இருந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டால் அதன் மூலம் அவளுக்குச் சற்று நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இப்படி ஒரு கிழவியைக் கண்முன் நிறுத்தி, அவர்படும் துயரம்தனை விளக்கி, அந்நிலையிலும் உழைத்துப் பிழைப்பதில் உறுதியானவர் என்பதை வலியுறுத்தி அந்தப் பாத்திரத்திற்கு அனைவரின் நெஞ்சிலும் ஓர் உயர்வான எண்ணத்தையும், அனுதாபத்தையும் உண்டாக்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்.  

அடுத்த பாத்திரமாக
தேங்காய் வாங்க வரும் நம் கதையின் நாயகன், 15 வருடங்களுக்கு முன் வேண்டிக்கொண்ட, தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தேங்காய்க் கடை விரித்துள்ள கிழவியிடம் வருவதும், தட்டிப் பார்த்து, நல்ல காய்களாகப் பார்த்து 12 காய்களாகத் தேர்ந்தெடுத்து, அல்பத்தனமாக ஒன்றைக் கிழவி அறியாமல் சுட்டுக்கொண்டு, அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசி, 78 ரூபாயைக் கொடுத்துச் செல்வதில் நம் அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,
 ““தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று” இவர் அகமகிழ்ந்து, கிழவியிடம் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசாமல், பொருளுக்கேற்ற உரிய விலையைக் கொடுத்து வாங்கி அவரின் உழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு மிச்சமாகி இருக்கும்? இப்போது இவ்வளவு செலவு செய்ய நேர்ந்ததே (அதுவும் சுட்டுக் கொண்ட காயின் மதிப்பைக் கழித்து) என கணக்குப் பார்ப்பதில் அவரது அற்பமான மனநிலை வெளிப்படுத்தப் படுகிறது.

உண்மையான, தூய்மையான பக்தியுடன், ஒரு சிறிய பூவை அர்ப்பணித்தாலும் இறைவன் அதை அகமகிழ்ந்து ஏற்கும் இயல்புடையவன் அல்லவா?. இதுபோன்று பிறரை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள், நிறைவேற்றும் பிரார்த்தனை எப்படி உகந்ததாக அமையும் என்ற கருத்தை நம் அனைவருள்ளும் பதிய வைப்பதிலும், கதாநாயகன் மீது எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதிலும் கதாசிரியர் அடுத்த வெற்றியை அடைந்துவிடுகிறார்.

சமுதாயத்தில் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களைச் சாடும் விதமாக இவர் எடுத்துவைக்கும் கருத்துகள் அத்தனையும் நன்முத்துக்கள்.

இதுபோன்ற டிப்டாப் ஆசாமிகள்
  Ø மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்கும் இது போன்ற ஏழை வியாபாரிகளிடம்தான் இவர்களின் பாச்சா பலிக்கும். அதுமட்டுமின்றி அல்பத்தனமாக, ஏதாவது ஒன்றைக் கடத்தி வந்து விடுவார்கள்.

   Ø பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் நாம் வாங்கும் காய்கறிகளையோ, பழங்களையோ பொன்போல் நிறுத்து, ஒவ்வொரு கிராமுக்கும் உரிய விலையுடன், விற்பனைவரி, சேவை வரி முதலியவற்றைச் சேர்த்து வாங்கும் இடங்களில் தப்பித்தவறி பேரம் பேச நினைத்தாலும் பட்டிக்காட்டான் என்ற பரிகாசத்திற்கு ஆளாக நேருமே என்ற எண்ணத்தால், பயத்தால் வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறார்கள்.
  
  Ø “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்றுணர்ந்த காலத்தில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களிலும் இவர்கள் செய்கை எடுபடாமல் போய்விடுகின்றது.

மேற்கண்ட நிகழ்வுகளைச் சாடி, அதற்கான தீர்வைத் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாசிரியர்.
ü பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 
ü அப்படிப்பட்ட வியாபாரிகள் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள்.  (இதில் ஆசிரியரின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது)
ü ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 
டிப்டாப் ஆசாமிகளுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து அறிவுரைகளையும் வழங்கிய கதாசிரியருக்கு ஒரு “ஓஹோ” போடலாம்.


 தன் தவறை உணர்ந்து வருந்தும் நாயகன்!
சதிர் தேங்காய் பொறுக்கும் சிறுவர்களுடன் சென்று 12 காய்களையும் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு , திருடிக்கொண்டு வந்த 13வது காயுடன் வீடு திரும்பிய கணவனுக்கு, அவர் மனைவி அந்தத் தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டு, தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ளாரே எனக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டு உடைக்கையில் ”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பிக்கிறாள்.
மனைவி உரைத்தது உறைத்ததோ நாயகனுக்கு?
நம் கதாநாயகன் “மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாத நிலையடைந்து வாயிலிருந்த இளநீரை வாஷ்பேஸினில் துப்பிவிட்டு, சாமிக்கு உடைத்த காய்கள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று கூறி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையை அடைகிறார். அழுகிய தேங்காய் மூடியில் அந்தக் கிழவியின் முகம் தெரிவதாகச் சித்தரித்தது மிக அருமை. தன்நெஞ்சே தன்னைச் சுட்டிருக்கும் அல்லவா. ஏளனமாகச் சிரித்தது அனைத்துப் பிள்ளையார்கள் மட்டும் அல்ல. நாமும் தான்.
இப்படி முடித்ததில் ஆசிரியர் தன் படைப்புத் திறனை  மீண்டும் நிலைநாட்டுகிறார்.
 இப்படி முடித்திருந்தால்…(என் தாழ்வான கருத்து)
அழுகிய தேங்காயில் அந்தக் கிழவி முகம் தெரிந்ததும், நம் கதாநாயகன் அந்தக் கிழவியிடம் அன்றோ அல்லது மறுநாளோ சென்று தான் செய்த களவுக்குப் பரிகாரமாக, “பாட்டி நேற்று என் வேண்டுதலை நிறைவேற்ற வாங்கிச் சென்ற 12 காய்களும் அருமை. சற்று விலைகுறைத்து வாங்கி விட்டேன் . அதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு, ஒரு 10 ரூபாயாவது வைத்துக்கொள்ளுமாறு அளித்திருந்தால் கதாநாயகருக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். நமக்கும் அவர்மீது எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கும்.
அல்லது
ஒருவேளை அந்தக்கிழவி அதை ஏற்க மறுத்து, தேடி வந்து பாராட்டியதற்கு நன்றி கூறி ஆசீர்வதிப்பதாக அமைத்திருந்தால், நம் அனைவரின் உள்ளத்திலும், இன்னும் உயர்வான நிலையில் நீங்கா இடம்பிடித்த பாத்திரமாக மாறியிருப்பார் என்பது என் தாழ்வான கருத்து.
மொத்தத்தில், கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோர்வையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி!




 { E.S. SESHADRI }

-காரஞ்சன்(சேஷ்)







 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








     








நாட்டு ராஜா உடன் 




எங்கள் வீட்டு ராஜா !



(கைபேசியில் எடுக்கப்பட்ட படம்)


 பட்டிமன்றங்களில் பிரபலமான 


நகைச்சுவைப் பேச்சாளர் 



 திரு. ராஜா அவர்கள்  



 திருச்சி BHEL மனமகிழ் மன்றத்திற்கு 

நேற்று 31.05.2014 வருகை புரிந்தார்கள்.




அவரை BHEL மனமகிழ் மன்றம் சார்பில் 

வரவேற்று அருகில் அமர்ந்திருப்பவர்

என் இளைய மகன்



 திரு. G. ஸ்ரீதர்  


Senior Accounts Officer / Finance,  BHEL

and 

BHEL மனமகிழ் மன்ற பொருளாளர்.





    



 முதல் பரிசினை முத்தாக 


வென்றுள்ள மற்றொருவர்



முனைவர்  திருமதி




 இரா. எழிலி   



அவர்கள்




 முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள



முனைவர்  திருமதி


 இரா. எழிலி   


அவர்களின் விமர்சனம் இதோ:






தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது நம் ஆசிரியரின் தனித்துவம். ஒரு சினிமாப் பாடலை நினைவுறுத்தும் இந்தக் கதையின் தலைப்பு “ஏமாற்றாதே.. ஏமாறாதே”.


சாதாரணமாக ஒரு சிறிய நடைபாதைக் கடை. ஒரு கிழவி கடைவிரிக்கும் விதம், அவளுடைய மன ஓட்டம், தளர்வான வயோதிக நிலை, அதனால் முன்பு போல் அதிக தேங்காய்களைக் கொண்டுவர இயலாமை, அதனால் வருமானக் குறைவு, ஆனாலும் அத்தகு சூழலிலும் “தன் கையே தனக்குதவி” என்று தன்னால் இயன்றதை உழைத்துப் பெறும் உறுதியான மனநிலை இத்தனையையும் கண்முன்னே நிறுத்தி வேலையில்லா வாலிப நெஞ்சங்களுக்கு ஓர் படிப்பினையை அறிவுறுத்தும் முதல் படி முதல் பகுதி. உழைப்பே உயர்வு என்பது உண்மையன்றோ? அது நன்மையன்றோ?


தேங்காய் விலை கேட்பவரிடம் விலையைச் சொல்லி, எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, தான் சற்று விலையைக் குறைத்துக் கொடுப்பதாகவும், இன்முகத்துடன் உரைத்து, பின் அடிமாட்டு விலைக்குப் பேரம் கேட்கப் படும்போது, கட்டுப்படி ஆகாது எனக் கூறுவதும், அழகாய் அந்த மூதாட்டியின் உள்ளக்கிடக்கையை, நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணர்த்துகிறது.


எப்படித்தான் ஆசிரியரின் ஒரு சாதாரண மனிதனின் ஒவ்வொரு செயலையும், உணர்வையும் தனிமனித நியாயங்களையும் அருகிருந்து பார்த்தது போல் அழகாய்க் கோர்வையாய் படம்பிடித்துக் காட்டமுடிகிறதோ? வியப்பில் விரிகின்றன விழிகள்.


ஒரு பெரிய ஷாப்பிங் மாலிலோ அல்லது நிறுவனங்களிலோ பொருள் வாங்க நேர்கையில், தம்மைக் கவுரவக் குறைவாய் மதிப்பிட்டு விடுவார்களோ என்ற போலியான முகத்திரை கிழிபடாமல் இருக்கும்படி, அவர்கள் சொன்ன விலைகொடுத்து, ஒரு பைசா கூட பேரம் பேச முடியாமல் பொருட்களை வாங்கி வரும் நபர்கள் குறித்து வருணித்த விதம் அற்புதம் என்று சிலாகிக்க வைக்கிறது.


அதேசமயம், நடைபாதைக் கடை வயோதிக வியாபாரிகளோ அல்லது வாலிப வயதினரோ, யாராய் இருந்தாலும் அவர்களிடம் பேரம் பேசத் துணிவதும், என்னதான் அவர்களின் வறுமையும் வாழ்வியலும், இந்த வியாபாரம் ஒன்றே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிதர்சன உண்மை தெரிந்திருந்தாலும், நமது கதாநாயகன் போன்றவர்களின் அல்பத்தனமான சிந்தனை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.


 ஓரிரண்டு ரூபாய் அதிகமாய்க் கொடுத்து, நடைபாதைக் கடையினரிடம் பொருள் வாங்கும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே அலாதி! அவர்கள் பரிவாய், பாசமாய் அள்ளித் தரும் காயோ அல்லது பொருளோ நமக்குக் கண்டிப்பாய் ஒரு உன்னதமான செயலைச் செய்த உணர்வை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்த ஆனந்தத்தை (அணில் அணை கட்ட உதவிய விதமாய்) அளிக்கும் என்ற உண்மையை உணர்த்த முயன்ற ஆசிரியரின் முயற்சி மிகுந்த பலனளிக்கும் என்பதும், அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடு, இனி நடைபாதைக் கடையில் பொருள் வாங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிமிடமாவது யோசித்துச் செயல்படக்கூடிய ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


ஆசிரியரின் ஒவ்வொரு கதையும் அவரைப்பற்றி அவரது சுருக்கமான விமர்சனமான “சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன்” என்பது உண்மைதான் என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கிறது.


ஒருவழியாய்த் தேங்காய்களைத் தட்டிப் பார்த்து, முற்றியதாய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்து கொள்முதல் செய்பவரின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியது அருமை. தேங்காய் வாங்குவதிலும் விலையைக் குறைத்ததோடு, ஒரு தேங்காயை லவட்டிக்கொண்டு ஆனந்தப்பட்டதும் ஏனோ மனதைப் பிசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. “To top it all off”  என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடைபோல் முதலிலேயே (15 ஆண்டுகளுக்கு முன்பே) இந்தப் பிரார்த்தனைக்கான தேங்காயை வாங்கி, நிறைவேறியிருந்தால் 12 ரூபாயில் அடங்கிவிட்டிருக்குமே என்று கதாநாயகன் எண்ணிய விதம் அவரது அற்பமான மனநிலையை வெளிக்காடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.


இந்த இடத்தில் “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே! அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து இந்த பூமியைக் கெடுத்தானே ” என்ற பாடல் வரிகளும், “மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது” என்ற பாடல்வரிகளை நினைவூட்ட சிந்தனை விரிந்ததுவோ என எண்ணத் தோன்றுகிறது.


ஒரு வழியாக, கிழவியை ஏமாற்றிய வெற்றிக்களிப்போடு வீறு நடை போட்டு, எல்லாப் பிள்ளையார்களுக்கும் விக்னமின்றி சூரைக்காய் விட்டபின் மகிழ்வுடன் இல்லத்திற்குச் சென்று நிம்மதிப் பெருமூச்சும், பூரிப்புமாய் நிற்கும்போது, உணவு பரிமாறத் தயாராய் இருந்த மனைவி, திருடிய தேங்காயை ( அது திருடியது என அறியாமல்) அவரிடமிருந்து வாங்கி, இலேசாகப் பிளந்து, இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அவரிடம் அருந்தக் கொடுத்துவிட்டு, தேங்காயை உடைத்தவுடன் அது அழுகியிருப்பதைக் கண்டு, பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா? மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா? என வினா எழுப்பிய வினாடியில் தன் வாயில் ஊற்றிய இளநீரை வாஷ்பேசினுக்கு ஓடிச்சென்று துப்பியதும், உடைத்த தேங்காய் மூடியை உற்று நோக்கும்போது அதில் அந்த கிழவியின் முகம் தெரிவதாகக் காட்டியதும் மிகவும் பிரமாதம் என எண்ண வைக்கிறது.


“தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் வாக்கு எத்தனை உண்மை! “தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்ற வரிகள் நம் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.


தான் பிரார்த்தனை நிறைவேற்றிய அத்தனை பிள்ளையார்களும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியது போல் கதையை அமைத்ததும், “நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த இறைவனடா” என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.


“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது முதுமொழி. நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அறிவியல் வழிநின்று பார்த்தால் “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை ஒன்று உண்டு” என்பது உண்மை எனப் புலப்படும். எனவே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று வள்ளுவம் விளித்த பொயா மொழிகள் எத்தனை உண்மை!.


இத்தனை சிறிய கதையில் இரண்டு மூன்று கதாபாத்திர படைப்புக்குள்ளேயே இன்றைய சூழல், மனிதர்களின் மனப்பாங்கு, சூழ்நிலைகளில் அவர்களின் மனக்கணக்குகள் அத்தனையும் அடிக்கோடிட்டுக் காட்டி, தீய எண்ணங்களைக் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அவ்வாறு செய்யின், ஒவ்வொருவரும் பேருவகையை அடையலாம் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் அவா இனியாவது விளையட்டும்.


இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். ஏழை எளிய வியாபாரிகளுக்கு இயன்றவரை வியாபாரத்தில் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாய் நிற்போம். ஆசிரியரின் எளிமையான, வலிமையான கதைக்கு எளியவளின் விமர்சனத்தை ஏற்றிடுவீர்!  நன்றி! 


இரா.எழிலி, புதுச்சேரி

 



இந்த சிறுகதை விமர்சனப்போட்டியில்

முதன் 

முதலாக 

முதல் பரிசினை 

முத்தாகப்பெற்றுள்ள

முனைவர் 

திருமதி. இரா. எழிலி அவர்களுக்கு நம் 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.








     


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.




இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


இணைப்புகள் இதோ:




http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18-02-03-second-prize-winners.html


http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18-03-03-third-prize-winner_31.html




காணத்தவறாதீர்கள் !







 ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்   பற்றிய அறிவிப்புப் பட்டியலில்  


 இம்முறை எந்த ஒரு சிறு மாற்றமும் கூட இல்லாததால்  


 தனிப்பதிவாக  வெளியிடப்பட வேண்டிய  அவசியம் 


 இல்லாமல் போய்விட்டது.  



 HAT-TRICK WINNERS LIST 



 VGK-01 TO VGK-18 


 is ONE and THE SAME as  


 VGK-01 TO VGK-17  


 As per the following Link: 



oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



’முன்னெச்சரிக்கை முகுந்தன்’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 



05 . 06 . 2014



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.













என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

32 கருத்துகள்:

  1. சிறப்பான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற
    திருமதி. Dr. R . எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும்,
    திரு. E . S . சேஷாத்ரி அவர்களுக்கும்
    மனம் நிறைந்த பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் வெற்றி பெற்ற திருமதி எழிலி மற்றும் திரு சேஷாத்ரி இருவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! !தொடர்க!!!

    பதிலளிநீக்கு
  3. மீண்டும் வெற்றி பெற்ற திருமதி எழிலி மற்றும் திரு சேஷாத்ரி இருவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! !தொடர்க!!!

    பதிலளிநீக்கு
  4. என் மனைவியும் நானும் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி! வாய்ப்பளித்த திரு, வைகோ ஐயா அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களின் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இப்படி முடித்திருந்தால்… விமர்சனமும் அருமை... முத்தாக வென்றுள்ள இனியவர். திரு. காரஞ்சன் [சேஷ் ] அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  6. சிறப்பாக விமர்சனம் எழுதி முதல் பரிசு பெற்றுள்ள திரு சேஷாத்ரி, திருமதி இரா. எழிலி தம்பதியினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நாட்டு ராஜாவுடன் உங்கள் வீட்டு ராஜா- தலைப்பும் புகைப்படமும் கலக்கல். என்ன நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் என்றும் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி June 1, 2014 at 10:59 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நாட்டு ராஜாவுடன் உங்கள் வீட்டு ராஜா- தலைப்பும்
      புகைப்படமும் கலக்கல். என்ன நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்
      என்றும் அறிய ஆவல்.//

      தங்களின் ஆவலுக்காக அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

      அன்புடன் கோபு

      ----------------------------------------
      மனமகிழ் மன்றம்

      பாரத மிகு மின் நிறுவனம்

      தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொழிலாளர் தின சிறப்பு பட்டிமன்றம்

      நாள்: 31.05.2014 சனிக்கிழமை
      இடம்: மனமகிழ் மன்றம் உள்ளரங்கம்
      நேரம்: மாலை 6.30 மணி

      தலைப்பு:

      பெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்
      [1] நெருக்கடியே ! ..... [2] நிம்மதியே ! .....

      நடுவர்: T.V. புகழ் திரு. S. ராஜா அவர்கள்

      நெருக்கடியே !
      By
      1] புலவர் M. இராமலிங்கம் அவர்கள்
      2] திரு. அருள் பிரகாஷ் அவர்கள்
      3] திரு. நெல்சன் அவர்கள்

      நிம்மதியே !
      By
      1] திருமதி உமா மாஹேஸ்வரி அவர்கள்
      2] பேராசிரியை குருஞானாம்பிகா அவர்கள்
      3] திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள்.

      சிறப்பு விருந்தினர்:
      திரு. மா. பழனிவேல் அவர்கள்
      பொது மேலாளர் [மனித வளம்]

      அனைவரும் வருக !

      மனமகிழ் மன்றம் - நிர்வாக குழு

      ----------------------------------------

      நீக்கு
  8. முதல் பரிசினையும் பகிர்ந்துகொண்டு சிறப்பித்த
    தம்பதியினரை பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. நாட்டு ராஜா உடன் தங்கள் வீட்டு ராஜா !
    மனம் மகிழும் மனறப் படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி June 1, 2014 at 11:43 AM

      வாங்கோ, வணக்கம்.

      //நாட்டு ராஜா உடன் தங்கள் வீட்டு ராஜா !
      மனம் மகிழும் மன்றப் படப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.!//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் மகிழும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      இப்படிக்கு VGK

      நீக்கு
  10. http://esseshadri.blogspot.com/2014/06/blog-post.html
    http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_1.html
    காரஞ்சன் (சேஷ்) திரு. E S சேஷாத்ரி அவர்கள்

    இந்த வெற்றியாளர், தானும் தன் துணைவியும் முதல் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் இரு தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  11. முதல் பரிசு வென்றவர்கள்:
    திரு. காரஞ்சன் (சேஷ்),
    திருமதி. முனைவர் இரா.எழிலி
    இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. மிக அருமையான விமரிசனங்களை எழுதி வாழ்க்கையைப் போன்றே முதல் பரிசினையும் பகிர்ந்து கொண்ட தம்பதிகள் திரு காரஞ்சன்(சேஷ்) மற்றும் திருமதி எழிலி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    மேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. நாட்டு ராஜா..வீட்டு ராஜா...புகைப்படம் அருமை!

    "பெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்
    [1] நெருக்கடியே ! ..... [2] நிம்மதியே ! ....."

    முடிவு நெருக்கடியா? நிம்மதியா? தெரிந்து கொள்ள ஆவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Radha Balu June 1, 2014 at 10:17 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நாட்டு ராஜா..வீட்டு ராஜா...புகைப்படம் அருமை!//

      சந்தோஷம்.

      "பெண்கள் வேலைக்குப்போவதால் நம் குடும்பங்களில்
      [1] நெருக்கடியே ! ..... [2] நிம்மதியே ! ....."

      //முடிவு நெருக்கடியா? நிம்மதியா? தெரிந்து கொள்ள ஆவல்!//

      காரசாரமான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நடுவர் கடைசியில் ’நெருக்கடியுடன் கூடிய நிம்மதி’ என்று தீர்ப்பு வழங்கினாராம்.

      நான் அந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்குச் செல்ல இயலவில்லை.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  14. முதல் பரிசினை வென்ற சகோதரர் கவிஞர் E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் சகோதரி முனைவர் இரா. எழிலி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. “ நாட்டு ராஜா உடன் எங்கள் வீட்டு ராஜா !” – என்று சொல்லி ஒரு புகைப்படத்தையும் போட்டுவிட்டு “ராஜாவுக்கு ராஜா நான்தாண்டா டோய்” – என்று நீங்கள் பாடுவது காதில் விழுகிறது. திருச்சி பெல் மனமகிழ் மன்ற நிகழ்ச்சியினை தனியாக் ஒரு பதிவாக தந்து இருக்கலாம். சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நீங்கள் தந்த மறுமொழி மூலம் விவரம் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ June 3, 2014 at 6:58 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //“ நாட்டு ராஜா உடன் எங்கள் வீட்டு ராஜா !” – என்று சொல்லி ஒரு புகைப்படத்தையும் போட்டுவிட்டு “ராஜாவுக்கு ராஜா நான்தாண்டா டோய்” – என்று நீங்கள் பாடுவது காதில் விழுகிறது. //

      மிகவும் சந்தோஷம் ஐயா. நான் இதை மிகவும் பெருமையாகவே நினைக்கிறேன். மனமகிழ் மன்ற பொருளாளர் என்ற கெளரவப்பதவி BHEL நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ள என் மகனுக்கு இது போன்ற பல்வேறு V.I.Ps களை சந்திக்க வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.

      இந்த பட்டிமன்றப்பேச்சுகள், பட்டி மன்ற பேச்சாளர்கள் போன்றவர்களை எனக்கு மிகவும் பிடிக்குமே என்பதால் இந்தப் படத்தினை மட்டும் என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என் மகன்.

      //திருச்சி பெல் மனமகிழ் மன்ற நிகழ்ச்சியினை தனியாக் ஒரு பதிவாக தந்து இருக்கலாம். சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நீங்கள் தந்த மறுமொழி மூலம் விவரம் தெரிந்து கொண்டேன்.//

      BHEL தொழிற்சாலைக்குள் விஜயம் செய்த கர்ம வீரர் பெருந்தலைவர் திரு. காமராஜ் அவர்கள், புரட்சித்தலைவர் திரு. MGR அவர்கள் ஆகியோரை மிக அருகில் சென்று, நின்று நிதானமாகப் பார்க்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.

      திருச்சி பெல் மனமகிழ் மன்றத்தில் நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு [1985 to 1994] மேல் தீவிர உறுப்பினராக இருந்துள்ளேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

      திரு. சாலமன் பாப்பையா அவர்கள், திரு. ஞான சம்பந்தன் அவர்கள், வில்லுப்பாட்டுப்புகழ் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள், சரித்திர நாடகப்புகழ் திரு. R.S. மனோஹர் அவர்கள், நகைச்சுவை நாடக நடிகர் காத்தாடி திரு. இராமமூர்த்தி அவர்கள், திரு. டெல்லி கணேஷ் அவர்கள், பிரபல கவிஞர்கள் திரு. அப்துல் ரஹ்மான், திரு. அப்துல் காதர் முதலானோருடன் ஒரே மேடையில் அமர்ந்து பேசி மகிழ்ந்துள்ளேன். On the Spot கொடுக்கப்படும் கவிதைத் தலைப்புகளில் கவிதை இயற்றி போட்டிகளில் கலந்துகொண்டு மேடையிலேயே பிரபலங்களிடமும், அவையோரிடமும் பாராட்டுக்கள், கைத்தட்டல்கள் பெற்றுள்ளேன்.

      இதைப்பற்றியெல்லாம் சற்றே விரிவாக இதோ இந்தப்பதிவினில் பின்னூட்டமாக அளித்துள்ளேன்.

      http://tamilyaz.blogspot.com/2013/01/jail.html

      தாங்கள் சொல்வதுபோல இவற்றையெல்லாம் தனிப்பதிவாகவே தந்திருக்கலாம் தான்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      அன்புடன் VGK

      நீக்கு
  16. பதில்கள்
    1. Timemimi 當代迷你倉June 4, 2014 at 7:15 AM
      小型九龍辦公室分租九龍信箱域名虛擬價格網站中文最平商務新蒲崗文件倉伺服器註冊免費//

      ?????

      என்னால் படித்து புரிந்துகொள்ள முடியாத எழுத்துக்களாக உள்ளன என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவும்.

      நீக்கு
  17. முதல் பரிசினை தம்பதி சமேதராக பெற்றுக் கொண்ட திரு சேஷாத்ரி மற்றும் திருமதி சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    இரண்டு விமர்சனங்களுமே போட்டி போட்டுக் கொண்டு முதலிடத்தில் நிற்கின்றன. அருமையான விமர்சனத்தினை தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. திருமதி சேஷாத்ரி மற்றும் திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    ”ஏமாற்றாதே! ... ஏமாறாதே !!” - தேங்காய்க் கதை:

    ஏழைகள் வயிற்றில் இது போல் தெரிந்தே அடிக்கும் பல கோட் சூட் ஆளுங்களும், பட்டுப்புடவை மாமிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சரியான எழுத்தடி... தங்களது இந்தக் கதை. கதைக்குள் ஒவ்வொரு வரியும், அதற்கேற்றவாறு எத்தனை விஷயங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்... இந்தக் கதையைப் படித்தபின் இது போன்ற அல்ப சந்தோஷிகள் நிச்சயம் மனம் திருந்துவார்கள். கதாசிரியர் மன எண்ணத்துக்கு ஒரு நல்ல விருந்து.... மற்றவர்களுக்கு...: மருந்து.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  20. திரு சேஷாத்ரி தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. முதல் பரிசை வென்ற ஜோடிப் புறாக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)

      நீக்கு
    2. பரிசு வென்ற புருசர் பொஞ்சாதியவங்களுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  22. பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமும் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. என் மனைவியும் நானும் பரிசு பெற்றது மகிழ்வளிக்கிறது! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் நல் இதயங்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றி! வாய்ப்பளித்த திரு, வைகோ ஐயா அவர்களுக்கும் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்களின் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) தம்பதியினருக்கே முதல் பரிசு ... கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள். :)

      நீக்கு