என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 13 ஜூன், 2014

VGK 22 - வ டி கா ல்


இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 19.06.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 22

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:





வ டி கா ல்

[சிறுகதைத்தொடர்]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அந்த மனிதருடன் எனக்கு அதிகமாகப் பழக்கமோ அறிமுகமோ இல்லை. ஆனால் நான் அவரை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். எழுத்தாளனாகிய நான் இரவு வெகு நேரம் விழித்திருந்து அமைதியாக எதையாவது பற்றி சிந்தித்து, மனதில் தோன்றுவதை கணினியில் பதிவு செய்துகொண்டோ அல்லது ஏதாவது நூல்களைப் படித்துக்கொண்டோ இருப்பது என் வழக்கம். 



அன்றும் அப்படித்தான். இரவு 11 மணிக்கு மேல் இருக்கும். நான் என் கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தேன்.  கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பதுபோல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது. பிறகு அழைப்பு மணியும் ஒலித்தது. கதவைத்திறந்தேன். 

அதே மனிதர். நல்ல உயரம். சிவந்த நிறம். வயது ஒரு 80க்கு மேல் இருக்கலாம். முகத்தில் பல்வேறு அனுபவச்சுருக்கங்கள். வெள்ளை வேட்டி, வெள்ளையில் முழுக்கை கதர் சட்டை. கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

“வாங்கோ சார்” அமர இருக்கை அளித்தேன். குடிக்க ஃப்ளாஸ்கிலிருந்து மிதமான சூட்டில் சுடுதண்ணீர் அளித்தேன். நன்றியுடன் கூடிய ஒருவித அசட்டுச்சிரிப்புடன் வாங்கிக் குடித்தார்.

“கம்ப்யூட்டரில் பிஸியாக ஏதோ வேலை பார்க்கிறீர்கள் போலிருக்கு; தொந்தரவு செய்கிறேனா?” என்றார்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை; சொல்லுங்கோ சார்” என்றேன்.

“உங்கள் சிறுகதைத்தொகுப்பு நூல்களைப்படித்தேன். நன்றாக இருந்தன. அதுதான் நேரில் பார்த்து சொல்லிவிட்டுப்போகலாம் என்று வந்தேன்” என்றார்.

“நான் எழுதிய கதைகளையா? எங்கு படித்தீர்கள்?”

“சிறுகதைத் தொகுப்புகளாக நீங்கள் வெளியிட்ட இரண்டு புத்தகங்கள் என் மாப்பிள்ளையிடம் கொடுத்திருந்தீர்களே!” என்றார். 

இவர் யார் என்றோ, இவர் மாப்பிள்ளை யார் என்றோ எனக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியாதபடி அவரை ஒரு மாதிரியாகப்பார்த்தேன்.

“கனரா பேங்க் கணபதியோட மாமனார் சார், நான்; சிண்டிகேட் பேங்க் சிங்காரி என்னோட பொண்ணு தான்” என்றார்.

அந்தக்கனரா பேங்க் கணபதியும், சிண்டிகேட் பேங்க் சிங்காரியும் யாராக இருக்கும்? என்று தொடர்ந்து குழம்பினேன் நான்.

என்னைப் பரிதாபமாகப் பார்த்த அவர் ”3C - மூன்றாவது மாடி, மூன்றாவது வீடு” என்றார்.

“ஓஹோ, அப்படியா, ரொம்ப சந்தோஷம்” என்றேன் நான் ஏதோ மிகவும் தெரிந்தது போல.

எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பில் மொத்தம் 4 மாடிகள். ஒவ்வொரு தளத்துக்கு 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள்.  எனக்கு என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணவன், மனைவி, 2 குழந்தைகள் என, நான்கு பேர்களின் முகங்கள் என் மனதிற்குப்பதியவே நான்கு வருடங்கள் ஆனது. 

இன்றும் அவர்களில் யாருடைய பெயர்களும் எனக்குத்தெரியாது. 

ஒருமுறை அந்தப்பக்கத்து வீட்டுக்கு வந்த தபால் தவறுதலாக எங்கள் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதில் வெங்கடேசனோ, வெங்கடராமனோ, வெங்கடரமணியோ, வெங்கடசுப்ரமனியனோ, வெங்கட்ராகவனோ ஏதோ ஒன்று போட்டிருந்ததாக ஞாபகம். 

எங்களுடைய சொந்தக்காரர்களின் பெயர்களே எனக்கு அடிக்கடி குழம்பிப்போகும். என்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பலவித செல்லப்பெயர்களில் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக அழைக்கின்றனர். 

ஸ்கூல் சர்டிபிகேட்டில் முற்றிலும் வேறு ஒரு பெயர் அவளுக்கு. அக்கம்பக்கத்தவர் அழைப்பது “ராமு அம்மா” என்ற பெயரில். என் வீட்டுப்பால்காரர் அழைப்பது “கோடி வீட்டு அம்மா” என்ற பெயரில். [கோடீஸ்வரி அம்மா இல்லை, என் வீடு அமைந்திருப்பது அடுக்குமாடி 2 வது தளத்தில் ஒரு கடைசி வீடு, அதனால் கோடி வீடு]. 

நான் அவளை ஆசையாக அழைப்பது ஒரு தனி செல்லமான பெயரில்; கோபம் வரும்போது ஒரு கோணலான பெயரில்; அதெல்லாம் எதற்காக அனாவசியமாக வெளியே சொல்ல வேண்டும்? விட்டு விடலாம்.

இவர் சொல்லும் கணபதியோ அல்லது சிங்காரியோ என் வீட்டுக்காரிக்கோ அல்லது என் பையன்களுக்கோ ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவர்கள் எல்லோரும் தற்சமயம் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். அவர்களில் யாரையாவது எழுப்பி அவர்களையும் குழப்ப எனக்கு மனம் இடம் தரவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் தான், நான் எழுதி சமீபத்தில் வெளியிட்ட அந்தக்கதை புத்தகங்களை மூணாவது மாடி மூணாவது வீட்டுக்கு படிப்பதற்காகக் கொடுத்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மூன்றாவது மாடியில் ஒரு கணவன் மனைவி இருவரும் ஏதோ பேங்கில் வேலை பார்ப்பதாக யாரோ சொன்னது போல எனக்குள்ளும் ஒரு சொப்பன ஞாபகம் இப்போது வருகிறது. அவர்களைத்தேடி வந்த வெளிநபர்கள் யாராவது கூட, என்னிடம் அதுபோல ஒரு வேளை, என்றைக்காவது விசாரித்திருக்கலாம். நான் வழக்கம் போல, ”எனக்குத் தெரியவில்லை; வேறு யாரிடமாவது, வேறு எந்த வீட்டிலாவது விசாரித்துப்பாருங்கள்” என்று கூட சொல்லியிருக்கலாம். 

என்னைப்பொறுத்தவரை இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பதே மதியம் என் ஞாபகத்திற்கு வருவது இல்லை. எனக்கு சம்பந்தம் இல்லாத தேவையில்லாத விஷயங்கள் எல்லாவற்றிலும், நான் இப்படித்தான். 

ஆனால் என் நண்பர்களில் சிலர், நான் லைட் நீலக்கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டை, டார்க் ப்ரெளன் கலர் பேண்டில் டக் செய்துகொண்டு, பூட்ஸ் காலுடன், மஞ்சள்கலர் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டியபடி, ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் 27B பஸ்ஸில் ஓடிவந்து ஏறியதாக, செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணிக்கு, ஆபீஸில் எங்கேயாவது என்னைச் சந்திக்கும்போது கரெக்டாகச் சொல்லி விசாரிப்பார்கள்.

எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.

சரி...சரி, அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்போது இந்தப்பெரியவரின் கதைக்குப் போவோமா?




பகுதி-2


”சரி சார், இந்த இரவு நேரத்தில் என்ன விஷயமாக என்னைப்பார்க்க வந்தீர்கள்?” என்றேன்.



“சும்மாத்தான். உங்கள் கதைப் புத்தகங்களைப்படித்த நான் உங்களை நேரில் சந்திக்கணும் என்று பல நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் எனக்குத்தூக்கம் வரவில்லை. உங்கள் வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. உங்களையும் பார்த்து அறிமுகம் செய்துகொண்டு, உங்கள் கதைப்புத்தகங்களைப் பார்த்த விஷயத்தையும் கூறிவிட்டு, என்னைப்பற்றியும் (என் கதையையும்) சுருக்கமாகச் சொல்லி விட்டுப்போகலாமோ என்று தான் வந்தேன்” என்றார்.



அவருக்கு ஏழு பெண்கள், நான்கு பையன்களாம். இது தவிர நாலைந்து குழந்தைகள் பிறந்து அற்ப ஆயுளுடன் போய்ச்சேர்ந்து விட்டதாம். வயது எண்பது முடிந்து விட்டதாம். ஒரு பிரபல வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்று இருபது ஆண்டுகள் ஆகிறதாம். குழந்தைகள் பதினோறு பேர்களுக்கும் திருமணம் ஆகி பேரன் பேத்திகள் பிறந்து பல ஊர்களில் உள்ளனராம்.  

இரண்டு பையன்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலையாம். மற்ற இரண்டு பையன்களுக்கும் டெல்லியில் வேலையாம். பையன்கள் எல்லோரும் நல்லபடியாகவே இவரைப் பார்த்துக் கொள்கிறார்களாம். இவருக்கும் பென்ஷன் பணம் வருகிறதாம். பையன்கள் இவரை ரயிலில் பயணம் செய்ய வேண்டாம் என்பார்களாம். எங்கு போனாலும் விமானத்தில் போய் வாருங்கள் என்பார்களாம். 

டெல்லியில் உள்ள இரு மகன்கள், மேலும் இந்தியாவின் ஏழு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஏழு பெண்கள் வீடுகளுக்கும், மாதாமாதம் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தவாறு சென்று ஒரு மாதம் தங்கி வருவது வழக்கமாம். 

இந்தமுறை சிங்காரி வீட்டுக்கு வந்து 20 நாட்கள் ஆகப்போகிறதாம். இன்னும் ஒரு வாரமோ பத்து நாட்களோ கிளம்பி விடுவாராம். அவரின் மனைவி இறந்து போய் மூன்று வருடங்கள் முடியப்போகிறதாம். 

என்னைப்பற்றியும் ஓரளவு விசாரித்துத் தெரிந்து கொண்டார். என்னை விட அவர் 16 வருடங்கள் சீனியர் என்று கணக்குப்போட்டுக்கொண்டேன். நான் ரிடயர்ட் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. அவர் ரிடயர்ட் ஆகி 20 வருடங்கள் ஆகின்றன.  

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்த பெரியவர் என நினைத்துக்கொண்டேன். இன்று ஓரிரு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவோ, வளர்க்கவோ. ஆளாக்கவோ திண்டாட்டமாக இருக்கும் நிலமையில், இவருக்கு பதினாறு குழந்தைகள் பிறந்து, அவர்களில் பதினோறு பேர்களை நன்கு வளர்த்து,  படிக்க வைத்து, நல்ல நிலமைக்குக் கொண்டு வந்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, எவ்வளவு ஒரு பொறுமை, சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை அவருக்கு இருக்க வேண்டும் என வியந்து போனேன். அவருக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும் போலத்தோன்றியது எனக்கு. 

அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததில், ஒருசில விஷயங்களை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது என்னைப் பொறுத்தவரை என் வீடே எனக்கு உலகம். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு இந்த உலகமே வீடு என்பதை அறிந்து கொண்டேன். ஏனென்றால் பாவம், அவருக்கு இப்போது மனைவி இல்லை. 

விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.

மனைவி என்ற ஒருத்தி இல்லாதவன் பாடு, அதுவும் வயதான காலத்தில் ரொம்ப ரொம்பக் கஷ்டம் தான். அவள் ஒருத்தி இருந்தால் தானே இவனுக்கு, இவனுடைய எண்ணங்களுக்கு, இவனுடைய தேவைகளுக்கு, ஒரு வடிகாலாக இருந்து செயல்பட முடியும். அவள் இல்லாத நிலையில் வடிகால் தேடி இவர் வெளியே பலரிடம் செல்ல வேண்டியுள்ளது.

வீட்டில் இவரின் பையன்களோ, மருமகள்களோ, மாப்பிள்ளைகளோ, இவர் பெற்ற பெண்களோ, பேரன்களோ, பேத்திகளோ பலரும் இருக்கலாம். இவரும் பேசலாம் அல்லது பேச நினைக்கலாம். அவர்கள் நின்று இவர் பேச்சைக்கேட்க வேண்டுமே! அதற்கு அவர்களுக்கு விருப்பமும், பொறுமையும், நேர அவகாசமும் இருக்க வேண்டுமே!

அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச்செல்லும் சூழ்நிலைகள். களைப்புடன் வீட்டுக்கு வந்தால் சமையல், சாப்பாடு, ஷாப்பிங் போவது, டி.வி. நிகழ்ச்சிகள், கம்ப்யூட்டர், செய்தித்தாள், வார மாத இதழ்கள் படிப்பது, மறுநாள் சீக்கரம் எழுந்து ஆபீஸ் செல்ல வேண்டி, சீக்கரமாக படுக்கப்போவது என்று ஒவ்வொரு நாளும் கழியும். யாருக்கும் மற்ற யாரிடமும் எதுவும் பேச நேரமிருக்காது. 

குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் போவது, ட்யூஷன் போவது, வீட்டுப்பாடம் செய்வது, நடுநடுவே டி.வி. நிகழ்ச்சிகள், கார்டூன் நெட்வொர்க், வீடியோ கேம்ஸ் என்று அவர்களுக்கும் நேரம் சரியாக இருக்கும். தாத்தாவைப் பார்க்கவோ அவருடன் பேசவோ விரும்ப மாட்டார்கள்.

அந்தப்பெரியவருக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையென்று அவர் புலம்பினாலோ, இருமினாலோ, தும்மினாலோ இவர்களின் எரிச்சலும் கோபமும் அதிகமாகும். 

இத்தகைய சூழ்நிலைகளில் அந்தப்பெரியவர் யாருடன் மனம் விட்டுப்பேச முடியும்?  வந்த பெரியவரின் பேச்சுக்களிலிருந்து என்னால் இவற்றையெல்லாம் அனுமானிக்க முடிந்தது.  ஒரு வடிகால் தேடித்தான், என்னிடம் இன்று வந்திருப்பாரோ! அவர்மேல் இரக்கம் கொண்டு, அவருடன் மிகவும் கனிவாகவே பேசினேன்.


பகுதி-3

”தனிமையை இனிமையாகக் கழிக்க புத்தகம் போன்ற ஒரு சிறந்த நண்பன் கிடையாது, சார்; மேலும் ஒருசில நல்ல புத்தகங்கள் தங்களுக்கு பொழுது போக்காக படிப்பதற்கு தரட்டுமா” என்றும் கேட்டேன்.




“நீங்கள் எழுதி சமீபத்தில் வெளியிட்டதாகச் சொல்லி என் மாப்பிள்ளை கொடுத்த இரண்டு புத்தகங்களிலேயே, இதுவரை நான் எந்தக்கதையையுமே படிக்கவில்லை” என்றார்.

இதைக்கேட்டதும் சற்றே அதிர்ச்சியடைந்த நான், ”என் கதைப் புத்தகங்களைப் படித்ததாகவும், அதனால் தான் என்னை நேரில் சந்திக்க வந்ததாகவும் சொன்னீர்களே” என்றேன்.  

தங்கள் புத்தகங்கள் இரண்டிலும், பின்புற அட்டையில் “ஆசிரியரைப்பற்றி” என்ற குறிப்புகள் இருந்தன. தங்கள் புகைப்படமும், முழு விலாசமும் இருந்தது. அவற்றை மட்டும் தான் படித்தேன்; உடனே உங்களை சந்திக்க ஓடோடி வந்தேன்” என்றார்.

இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது.

அவரைப் பொறுத்தவரை அந்தப்புத்தகத்தின் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களே போதுமானதாகும். அவர் சந்திப்பதற்கும், அளவளாவுவதற்கும்.  மனம் திறந்து மனக்குமறல்களைக் கொட்டவும் ஒரு வடிகால் வேண்டும், அவருடைய தேவை அவ்வளவுதான். 

புத்தக அட்டையை மட்டும் படித்துவிட்டு இன்று என்னையே வடிகால் ஆக்கிக்கொண்டுள்ளார் என்பது, மெதுவாக எனக்கும் புரிய வந்தது.

“அப்புறம் என்ன சார், எதற்கும் கவலையே படாதீர்கள், ஆண்டவன் இருக்கிறார்” என்றேன் வாயில் வெளிப்பட்ட கொட்டாவியை கை விரல்களால் சொடுக்கியபடியே.

அவரும் புறப்படத் தயாரானார். 

“ஆண்டவனைத்தான் நம்பியுள்ளேன். தினமும் ஒரு ரவுண்ட் இங்கு அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக்கோயில்களுக்கும் போய் வந்து விடுவேன்” என்றவர், “இன்று ராத்திரி ரொம்ப நேரம் ஆகிவிட்டது; நான் மேலும் ஒரு வாரமோ பத்து நாட்களோ தான் இந்த ஊரில் இருப்பேன்; நீங்க ஃப்ரீயாக இருக்கும்போது மறக்காமல் என்னைக்கூப்பிடுங்கோ; இன்று பேச விட்டுப்போன விஷயங்களையெல்லாம் பேசிக்கலாம்” என்றார், தன் காலில் செருப்பை அணிந்தவாறே.

“பார்த்து ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்றேன்.

‘ஓ.கே., சார், குட் நைட், ஸீ... யூ” என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்லவே மனம் இல்லாதவராக, ஒருவழியாக, விடை பெற்றுச்சென்று விட்டார்.

நேராக மாடிப்படிகளில் ஏறி தன் [மூன்றாவது மாடி மூன்றாவது வீடு] வீட்டுக்குச் செல்லாமல், மாடிப்படிகளில் இறங்கி கீழே போவதை கவனித்தேன். 




விளக்கை அணைத்துவிட்டு, என் வீட்டு பால்கனி வழியாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாயில் பக்கம் நோக்கினேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்த வாட்ச்மேனை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தார். 




பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு, அவர் தெருவில் எங்கோ நடந்து செல்வதையும் கவனித்தேன்.

மறுநாள் காலையில் வாட்ச்மேனிடம் இதுபற்றி விசாரித்தேன்.

“அந்த வயதானவருக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை, சார்; தினமும் நள்ளிரவு 12 மணிக்கு என்னை வந்து எழுப்புவார். தெருக்கோடி டீக்கடைக்கு அழைத்துச்செல்வார். டீ வாங்கித்தருவார். தானும் டீ குடிப்பார். பிறகு என்னுடன் விடியவிடிய பேசிக்கொண்டே இருப்பார். கேட்டால் வாட்ச்மேன் வேலை பார்க்கும் நீ இரவில் இப்படித்தூங்கி வழியலாமா என்பார்” என்றான்.

“அந்தப்பெரியவர் சொல்லுவதும் நியாயம் தானே வாட்ச்மேன், இரவில் நம் வீடுகளைப் பாதுகாக்க வேண்டிய நீ தூங்கலாமா” என்றேன், நானும்.

”பெரும்பாலும் முழிச்சுகிட்டு தான் சார் இருப்பேன், நடு ராத்திரி லேசாக்கண்ணைச் சொக்க ஆரம்பிக்கும், அப்போது தான் சற்றே கீழே சாய்வேன்.  அப்போ பார்த்து தான் கரெக்டா இந்தப்பெரியவர் வந்து என்னைத் தட்டி எழுப்பிவிடுவார்; 

அவருக்கு ஏதேதோ மனவருத்தங்கள் என்று நான் நினைக்கிறேன், சார்; தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும், தான் பேங்கில் வேலை பார்த்தது பற்றியும், தான் சென்று வந்துள்ள பல ஊர்களைப்பற்றியும், விலைவாசிகள் பற்றியும், அரசியல் கட்சிகள் பற்றியும், ஊழல், லஞ்சலாவண்யங்கள் பற்றியும், ஏதேதோ கதைகள் விடியவிடிய சொல்லிக்கொண்டு தானும் தூங்காமல் என்னையும் தூங்க விடாமல் செய்துவிடுவார், சார்” என்றான்.

“பிறகு எப்போது தான் வீட்டுக்குப்போவார்? வீட்டில் உள்ளவர்கள் இவரைத் தேட மாட்டார்களா?” என்றேன்.


பகுதி-4

”படிச்சவரு, வயசானவரு, ஒரு மாசமோ ரெண்டு மாசமோ தங்க வந்துள்ள விருந்தாளி; காத்தாட வெட்ட வெளியிலே படுக்க விரும்புறாரு என்று அவருக்கு மொட்டை மாடியிலே கட்டில் போட்டு; பெட்ஷீட், தலையணி, போர்வை, குடிக்க வெந்நீர் பாத்திரம், டார்ச் லைட்டு எல்லாம் கொடுத்திருக்கிறார், அவருடைய மாப்பிள்ளை;

பாத்ரூம் போகணும் என்றாலும், குளிராக இருக்கு வீட்டுக்குள் வந்து படுக்கணும் என்றாலும் இருக்கட்டும், என்று வீட்டின் டூப்ளிகேட் சாவியையும் ஏற்பாடாகக் கொடுத்திருக்கிறாங்க. அவங்களைப் பொறுத்தவரை இவர் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு தூங்குவதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றவன் தொடர்ந்து பேசினான்.

“விடியற்காலம் பால்காரரோ, நியூஸ் பேப்பர்காரரோ வந்தவுடன், அவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக்கொண்டே, அவர்களுடன் ஏதோ பேசிக்கொண்டே கிளம்பி விடுவார்” என்றான்.

“இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.

“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு.  டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு; 

அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை; 

நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான்.

அவன் சொல்வதும் எனக்கு நியாயமாகவே பட்டது.

மனைவியை இழந்த அவருக்கு வயதான காலத்தில் பேச்சுத்துணையாக ஒரு வடிகால் தேவைப்படுகிறதே! அந்த வடிகாலாக இருந்து, அவருக்கு இந்த வாட்ச்மேனும் ஏதோ ஒரு விதத்தில் உதவிக்கொண்டு தானே இருந்து வருகிறான்!

இவரைப்போல வசதி படைத்தவர்களும், வடிகால் வேண்டுவோரும், பேசாமல் தற்சமயம், ஆங்காங்கே, டி.வி., கட்டில், தனி அறைகள், ஏ.ஸி. போன்ற அனைத்து வசதிகளும் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சேர்ந்து, மாதாமாதம் பணம் கட்டி, தங்கி விடுவதே நல்லது என்று எனக்குத் தோன்றியது. 

முதியோர் இல்லங்களில் சேர்வதால் அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கும். பேச்சுத்துணைக்கும் பொழுதுபோக்கிற்கும் இவர்கள் வயதை ஒத்த பெரியோர்கள் இருப்பார்கள். பணம் தருவதால் ஓரளவு பொறுப்பாகவும் கவனித்துக் கொள்வார்கள். 

தினமுமோ அல்லது வாரம் ஒருமுறையோ மருத்துவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருகை தருவதால், உடல்நிலை சரியில்லாவிட்டாலும், உடனுக்குடன் கவனிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, தேவையான சிகிச்சை தரப்பட்டு, அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வழியுண்டு.

ஊரார் ஆயிரம் சொல்லுவார்கள். பெற்ற குழந்தைகள் பொறுப்பாக கவனிக்கவில்லையென்று. இன்றுள்ள அவசர உலகத்தில், பணம் ஈட்டுவது மட்டுமே ஒரே குறியாக ஆணும் பெண்ணும் அலைந்து திரிய வேண்டிய அவஸ்தைகளுக்கிடையில், யாரும் யாரையும் ஓரளவுக்குமேல் கவனிக்க முடியாத சூழ்நிலையில், இத்தகைய முதியோர் பிரச்சனைகளுக்கும், நடைமுறைக்கு சாத்தியமான, ஒரு நல்ல வடிகால் (தீர்வு) வேண்டுமே!

எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.

அவரைப்பற்றி உணர்ந்து கொண்ட எனக்கு ‘வடிகால்’ என்ற தலைப்பில் அவரைப்பற்றியே இந்தக்கதையை எழுதி சமுதாயத்திற்கு, இவர்களின் உளவியல் பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியதே, இந்தக்கதை பிறந்ததன் காரணமாகும்.

ஆனால் ஒன்று; எங்கள் வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.   


oooooOooooo

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான கதை என்பதால் 
இத்துடன் முடித்துக்கொண்டு விட்டேன்.

இதன் தொடர்ச்சியாக 

’நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்’
என்று ஏற்கனவே இதே கதையின் இறுதிப்பகுதியில் 
நான் முன்பு வெளியிட்டிருந்தேன்.

அதைப் படிக்க விரும்புவோருக்கு மட்டும் இதோ இணைப்பு:

oooooOooooo



முக்கிய அறிவிப்பு


   
  


VGK-20 ' முன்னெச்சரிக்கை முகுந்தன்  ’ 

சிறுகதைக்கான விமர்சனப் போட்டி 

பரிசு முடிவுகளான 


1] Third Prize Winner*


2] Second Prize Winners*


3] First Prize Winners*


[ * உயர்திரு நடுவர் அவர்களின் குறிப்புடன்  ]



4] VGK-01 To VGK-20 Hat-Trick Prize Winners



5] VGK-11 To VGK-20 க்கான 


ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் +


ஒவ்வொருவரும் பெற்றுள்ள 


பரிசுத்தொகைகள் 


பற்றிய அனைத்து விபரங்கள்




என அடுத்தடுத்து ஐந்து பதிவுகள் 



நாளை சனி  / ஞாயிறு  / திங்களுக்குள்

வெளியிடப்பட உள்ளன.





காணத்தவறாதீர்கள் !





ஒவ்வொரு வாரப் போட்டிகளிலும் 

கலந்துகொள்ள மறவாதீர்கள் !!




என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்
 


23 கருத்துகள்:

  1. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!//

    பிரச்சினையே இல்லாத உதவி...

    சமுதாய சிந்தனையுள்ள அருமையான கதை.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கதை ஐயா
    போட்டி சிறக்கட்டும்

    பதிலளிநீக்கு
  3. ஒன்றிரண்டு வீடுகள் இருந்த இடத்தில் 48 வீடுகள் அமைந்துள்ள இந்தக் காலத்தில் 11 பிள்ளைகள் பெற்று அவர்களைக் கரையேற்றி நல்வாழ்வு வாழ வைத்துவிட்டு தூங்குவதற்கே கஷ்டப்படும் பல பெரியவர்களின் கதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சி...

    பேச்சுத்துணை என்பதன் அவசியம் வயதாக வயதாக அதிகமாகிவரும் யதார்த்த உலகத்தில், ஒன்றிரண்டு மாதத்துக்கு வந்த விருந்தாளி.. மாடிக்கு மேல் அவர் தூங்குவார் என்ற நம்பிக்கையுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு தூங்கும் மாப்பிள்ளையும் பெண்ணும் நிரம்பிவிட்ட இந்தக்காலத்தில் பக்கத்து வீட்டிலோ மாடி வீட்டிலோ இருக்கும் நபர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாதிருப்பது விந்தை இல்லை என்றாலும் வாசலிலே கடக்கும் பெரியவர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகம் போலத் தெரிவதை உணர முடிகிறது...

    ஒவ்வொரு மனிதருக்கும் எத்தனை அனுபவங்கள்...எத்தனை பிரச்சனைகள்..அவரவர் வாழ்க்கை தனித்தனியானது...அதில் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு அனுபவம் கிடைக்கிறது...அதைப் பகிர நினைத்தாலோ கேட்பதற்கு ஆட்களும் இல்லை அவர்களிடம் அதற்க்கான பொறுமையோ சூழ்நிலையோ இல்லை...போதாததற்கு கணினி வேறு...மனிதம் என்பது மெதுவாக அழிந்து வரும் உண்மை உரைக்கும்போது ஆசிரியர் முதியோர் இல்லமே கூட அடுக்கு மாடிக்கட்டடங்களை விட எவ்வளவோ மேலாக இருக்கக்கூடும் என்ற ஒரு சாத்தியத்தை எடுத்துரைக்கிறார்..

    ஆசிரியரின் யதார்த்த உணர்வும் நகைச்சுவை கலந்த நடையும் மிக சிறப்பாகவே வெளிப்பட்டிருக்கிறது...ராமு அம்மா கோடி வீட்டு அம்மா..ஆசையில் ஒரு பெயர்...கோபத்தில் ஒரு பெயர்..கண்கூடாகப் பார்க்கின்ற விஷயங்கள்.....
    "விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்று ஒருத்தி இருந்தால், ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.."..யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்திருப்பதைக் காண்பீர்...
    வாட்ச்மேன் மூலமாகப் பாதி கதையை நகர்த்தியுள்ளது நல்ல யுத்தி..அவர் பார்வைக்கு அவர் வள்ளலாகவே தெரிவதும் அவர் பேசுவதைக் கேட்டுக்கொள்வது போல் கேட்டுக்கொண்டு அவரிடம் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற பாமர சிந்தனையுடன் வேலை நேரத்தில் தூக்கம் போடும் வாட்ச்மேன் நாம் நிதமும் காணும் பலரின் உருவம் தான்...
    " வாட்ச்மேன் அவரைப்பற்றிச் சொல்வதிலிருந்து, அந்த மனிதரிடம் நான் மறுபடியும் மாட்டாமல் தப்பிக்கணும் என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன். " என்கிறபோது நம் அனைவரின் உள்ளத்திலும் இருக்கக்கூடிய ஒரு விந்தை வேதாளத்தைப் பார்க்க முடிகிறது...வயதானவர்கள் தூக்கம் வராமல் சிரமப்படும்போது அவர்களிடம் சற்றே நேரம் ஒதுக்கிக் காது கொடுத்துக்கேட்டுக்கொண்டால் குறைந்தா போய்விடுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் இந்தப் படைப்பு இன்றைய சமூகத்தின் மன உளைச்சலைத் தான் காட்டுவதாகத் தெரிகிறது.... குட் ஒன் சார் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ananthasayanam T June 13, 2014 at 7:12 AM

      Dear Sir, வாங்கோ, வணக்கம்.

      /ஒன்றிரண்டு வீடுகள் இருந்த இடத்தில் 48 வீடுகள் அமைந்துள்ள இந்தக் காலத்தில் 11 பிள்ளைகள் பெற்று அவர்களைக் கரையேற்றி நல்வாழ்வு வாழ வைத்துவிட்டு தூங்குவதற்கே கஷ்டப்படும் பல பெரியவர்களின் கதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சி...
      .........................................................................................................//

      தங்களின் மிக நீண்ட கருத்துக்கள் + தாங்கள் ரஸித்த காட்சிகள் என்னை மிகவும் வியப்படையச் செய்கின்றன.

      இதே கதையினை நான் முன்பு வெளியிட்டபோது, அதன் இறுதிப்பகுதிக்குக் கீழே ’நம் சிந்தனைக்கு சில விஷயங்கள்’ என்ற தலைப்பில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். படிக்கவும் சற்றே சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் இருக்கும். தாங்கள் நேரம் கிடைத்தால் அவற்றையும் படித்துப் பாருங்கோ அப்போதுதான் இந்தக்கதையை முழுமையாகப் படித்த திருப்தி ஏற்படக்கூடும்.

      அதன் இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  4. எத்தனையோ வயதானவர்களின் கதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள். குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள் தான். அதுவும் இவருக்கு இயற்கை அன்னைப் பதினோரு குழந்தைகளைக் கொடுத்து போயிருக்க இடமும் கிடைத்திருக்கிறது. அவர் செய்த புண்ணியம். உங்களைப் போன்றவர்கள் வடிகாலாக அமைவதும் சிறப்பே. நேரில் நடப்பது போலக் கதை சொல்வதும் உங்களுக்கு வெகு லாகவமாகக் கைக்கு வருகிறது. மருந்துகளின் உதவியில் ஆயுள் நீடிக்கும் இந்த நாட்களில் வயதானால் சிரமம்தான். உங்கள் கதைக்கு என் வந்தனங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிசிம்ஹன் June 13, 2014 at 4:31 PM

      வாங்கோ, நமஸ்காரங்கள்.

      //எத்தனையோ வயதானவர்களின் கதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறீர்கள். குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள் தான். அதுவும் இவருக்கு இயற்கை அன்னைப் பதினோரு குழந்தைகளைக் கொடுத்து போயிருக்க இடமும் கிடைத்திருக்கிறது. அவர் செய்த புண்ணியம். உங்களைப் போன்றவர்கள் வடிகாலாக அமைவதும் சிறப்பே.//

      நன்னாவே புரிந்து அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

      //நேரில் நடப்பது போலக் கதை சொல்வதும் உங்களுக்கு வெகு லாகவமாகக் கைக்கு வருகிறது.//

      என் பெரும்பாலான கதைகளில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் நான் நேரில் சந்தித்தவைகளும் உணர்ந்தவைகளும் மட்டுமே. ஆங்காங்கே நிறைய கற்பனைகளையும் நகைச்சுவைகளையும் மட்டும் தூவி விடுவேன். அதனால் மட்டுமே அத்தகைய கதைகளில் உயிரோட்டமும் இருந்து எனக்கு மகத்தான வெற்றிகளையும் தேடித்தந்துள்ளன.

      //மருந்துகளின் உதவியில் ஆயுள் நீடிக்கும் இந்த நாட்களில் வயதானால் சிரமம்தான்.//

      இங்கும் மிகச்சரியாகவே உள்ளதை உண்மையாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். அதே அதே !

      // உங்கள் கதைக்கு என் வந்தனங்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  5. ஒரு சில முதியோர்களின் அவல நிலையை உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளீர்கள். அதற்கு காரணமான பின்னணியையும் குறிப்பிட்டீர்கள். தங்களின் சிந்தனையில் தோன்றிய கருத்துக்களையும் பழைய பதிவில் சென்று படித்து வந்தேன்.

    இதன் மூலம் ஒரு சில நற்காரியங்கள் நிகழலாம்... நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. பல மூத்த குடிமக்களின் நிலை இது தான்.....

    அவர்களில் ஒருவரின் கதையை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்....

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. எழுத்து போன்ற நல்லதொரு பொழுதுபோக்கு உள்ளவர்களுக்கு அக்கம்பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் நேரமிருப்பதில்லை. அதற்கு உதாரணமாய் கதாசிரியர். பொழுதுபோகாமல் உள்ளவர்களுக்கோ அறியாதவர்களின் கதவை அர்த்தஜாமத்திலும் தட்டி அவர்களோடு அளவளாவும் வகையில் பேரார்வம் பெருகுகிறது. அதற்கு உதாரணமாய் பெரியவர்.

    எழுத்தாளராய் இருப்பவர்கள் பெரும்பாலும் அக்கம்பக்க மனிதர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு கதைக்கு நல்ல கரு கிடைக்காதா என்று ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால் இந்தக் கதையின் எழுத்தாளரோ அக்கம்பக்கம் பற்றி அதிக ஆர்வமில்லாதவராய்க் காட்டப்பட்டிருப்பது சற்று விநோதம்தான்.

    முதுமையில் துணையற்று வாழும் வாழ்வின் தவிப்பு மிக அழகாக காட்டப்பட்டிருக்கிறது. கதைக்கு தேர்ந்த தலைப்பு வடிகால். தன் எண்ணங்களுக்கு செவிமடுக்க யாருமற்று அலையும் நிலை மிகவும் பரிதாபம்.
    வாட்ச்மேன் சொல்வதுபோல் பரஸ்பர பகிர்வால் பலருக்கும் வாழ்க்கை வண்டி தடுமாறாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு முதியோர் இல்லம் என்பது இளைப்பாறுதல் தரும் இடமாக இருக்கும் என்ற ஆசிரியர் கருத்து மிகவும் ஏற்புடையது. நகரவாழ்வில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இப்பெரியவர் போன்றவர்களின் நிலையை உத்தேசித்து எழுதப்பட்ட நல்லதொரு கதைக்குப் பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  8. முதியோர் இல்லங்கள் ஒருவர் மிகவும் வயதாகி நோய்வாய்ப் பட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை?

    பதிலளிநீக்கு
  9. முதியவர்களின் இன்றய நிலை இதுதான். நேரில் நடப்பதுபோல சம்பவங்களை சொல்லி இருப்பது கதையுடன் ஒன்றி போக முடிகிறது. தினசரி ஹோம் ல அவஙக கூட தானே இருக்கேன். ஒவ்வொருவரிடமும் மனதை உருக்கும் விஷயங்கள் இருக்கு. சில பேரு பகிர்ந்துப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 26, 2015 at 12:56 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      //முதியவர்களின் இன்றைய நிலை இதுதான். நேரில் நடப்பதுபோல சம்பவங்களை சொல்லி இருப்பது கதையுடன் ஒன்றி போக முடிகிறது. தினசரி ஹோம் ல அவங்க கூட தானே இருக்கேன். ஒவ்வொருவரிடமும் மனதை உருக்கும் விஷயங்கள் இருக்கு. சில பேரு பகிர்ந்துப்பாங்க.//

      இதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. நானும் ஒரு காலக்கட்டத்தில் இங்குள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு வேறு ஒரு முக்கியமான வேலையாக சில நாட்கள் தொடர்ச்சியாகச் சென்றுவந்து, ஒவ்வொருவரிடமும் நிறைய உண்மைக் கதைகளைக் கேட்டு அறிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தக் கதை என் மனதில் உருவானது. அதனால் மட்டுமே இதில் உயிரூட்டம் உள்ளது.

      தங்களின் அன்பான வருகைக்கும், பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  10. // எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.//

    இதே தனிமைப் படுத்தப்பட்ட பெண்கள் எப்படியோ காலம் கழித்து விடுகிறார்கள். தனியான ஆணுக்குத்தான் சிரமம் அதிகம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஒரு SURVEYயும் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 16, 2015 at 8:32 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **எது எப்படியோ, இந்தப்பெரியவரின் சந்திப்பினால், இது போன்ற வயதானவர்கள் தனிமைப் படுத்தப்படுவதால் அவர்களுக்கு மனதளவில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும், கோளாறுகளையும் ஓரளவுக்கு என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தங்களையும் மதித்து யாராவது பேசமாட்டார்களா, தங்கள் மனவருத்தங்களைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் ஏற்பட்டுவிடுகிறது.**

      //இதே தனிமைப் படுத்தப்பட்ட பெண்கள் எப்படியோ காலம் கழித்து விடுகிறார்கள். தனியான ஆணுக்குத்தான் சிரமம் அதிகம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. ஒரு SURVEYயும் சொல்கிறது.//

      SURVEY சொல்லும் இது 100% உண்மைதான் ஜெயா.

      பெண்களாகிய நீங்களெல்லாம் இல்லாமல் ஆண்களாகிய நாங்களெல்லாம் இருப்பது என்பது மிகவும் கொடுமையாகத்தான் இருக்கக்கூடும் என என்னால் இப்போதே நன்கு உணரமுடிகிறது.

      நீக்கு
  11. வயசாளிங்கன்னா அவங்க பேசரதலா கேட்டுகிட ஒரு பேச்சுதொண வோணும். ஒரு ஆள வூட்ல இருகுறவங்களுக்கு ஒருமாதிரியாவும் வெளியாளுகளுக்கு வேர வேர மாதிரிதா தெரியும். அந்த பெரியவரு ராவுநேரம்னுகூட பாக்காம அங்கிட்டு வந்தாப்ல எங்க அல்லாருக்கும் செமத்தியா ஒரு கத கெடச்சிச்சே.

    பதிலளிநீக்கு
  12. வயசானவர்களுக்கு உடல் உபாதைகளுடன் தன் பேச்சு கேக்க யாருமே இல்லையேங்கற மன உளைச்சலும் அதிகம்தான். இரவு நேரமாகி விட்ட பின்னரும் மத்தவா வீட்டைத்தேடி போக வைக்கிற மனது.பாவம்தான்.

    பதிலளிநீக்கு
  13. //வயதாக வயதாக அவர்களும் சிறு குழந்தைகள் போல மாறி விடுகிறார்கள்.// தோற்றம் செயல்கள் எல்லாவற்றிலுமே!!! ஒரு எழுத்தாளரே கதை சொல்லும் கதை..வித்யாசமான சுவாரஸ்யமான முயற்சி!!!

    பதிலளிநீக்கு
  14. கூட்டுக் குடும்பமுறை சிதைந்து, தனிக்குடும்பங்கள் பெருகி வரும் இந்நாளில்
    தன் மன வேதனைகளை, மகிழ்வான தருணங்களின் நினைவுகளை, கடந்தகால அனுபவங்களை, நிகழ்கால நிகழ்வுகள் குறித்த தம் கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாத அல்லது இருந்தும் கேட்கத் தயாரில்லாத நிலையில்தான் இத்தகு முதியவர்கள் வடிகால் தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இன்றைய குடும்ப நிலையை யதார்த்தமாகச் சொல்லிப்போன ஆசிரியரின் திறன் வியக்க வைக்கிறது. பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்து பேசிக்கொள்ளும் நிலையே குறைந்து அலையும் நிலை. பள்ளிப்பாடம் பாரமாகி, போட்டி நிறைந்த உலகமாகி, மதிப்பெண் ஒன்றே தகுதியை நிர்ணயிக்கும் நிலையில் அதை அடைய புத்தகத்திற்குள் புதைந்து, விளையாட்டை மறந்து, கிடைக்கும் சிறிது நேரத்தையும் கணினி அல்லது தொலைக்காட்சியில் தொலைத்து நிற்கும் இன்றைய குழந்தைகள், வயதான முதியவர்கள் இருமுவதும், தும்முவதும் கூட இவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் நிலையாக உள்ளதை அருமையாக எடுத்துரைக்கிறார்.
    இந்த இடத்தில் முதியோர் இல்லம் குறித்து நான் எழுதிய கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

    முதியோர் இருக்கும்
    இல்லங்கள் பெருகட்டும்.
    முதியோர் இல்லங்கள்
    பெருகாமலிருக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  15. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், நான்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    40 + 31 + 34 + 68 = 173

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4.html

    http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html

    பதிலளிநீக்கு
  16. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  17. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 13.06.2021

    வடிகால் அருமை. வயல்களுக்கு மட்டுமல்ல வாழும் மனித ர்க்கெல்லாமும் வடிகால் அவசியம்,இல்லை எனில் மிகப்பெரிய கேட்டை உருவாக்கிவிடும் .நீங்க நம்ம அடுக்குமாடிபற்றி சொல்லியிருப்பீர்கள் எனில் 3c யில் இருந்தது அடியேன், மேலும் உங்க கதாநாயகனாக அட்டைபட ஆசிரியர் குறிப்பை மட்டுமே வாசிக்கும் வாசகர்போன்ற வயதான  பொழுது போக்குகிறவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வர். எதார்த்தம் மற்றும் உண்மை.

    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    பதிலளிநீக்கு