என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 20 ஜூன், 2014

VGK 23 - யாதும் ஊரே ... யாவையும் கேளிர் !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 26.06.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 23

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:




யாதும்  ஊரே 

’யா வை யு ம்’ கே ளி ர் !

சிறுகதைத்தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


அந்தக் கண்ணாம்பாக்கிழவி அந்த அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணைக்குக் குடிவந்து சுமார் அறுபது வருடங்கள் இருக்கும். கோடையோ, குளிரோ, காற்றோ, மழையோ இரவில் ஒரு சாக்குப்படுதாவுக்குள் முடங்கிக்கிடப்பாள். விடியற்காலம் எழுந்து தரையெல்லாம் பெருக்கி, சாணிதெளித்து மெழுகி, அழகாகக்கோலங்கள் போட்டு விடுவாள். 


 

பகலில் பூக்களும், துளசியும் யார்யாரோ பறித்துவந்து தருவதும், இவள் அவற்றை அழகாகத் தொடுத்துக் கோயிலுக்குக் கொடுப்பதும், வாடிக்கையாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருபவை.



எதிர்புறச்சந்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், குளியல் அறை முதலியவற்றில் இந்தக்கிழவிக்கு மட்டும் கட்டணம் ஏதுமின்றி இலவச அனுமதி உண்டு. கோயிலுக்கு நெருக்கமாகவே ஒரு சைவ உணவகம் உள்ளது. கையில் காசு ஏதும் கிடைத்தால் இரண்டு இட்லி வாங்கிக்கொள்வாள் இலவச சட்னி சாம்பாருடன். காசு இல்லாவிட்டால் பட்டினியுடன் கோயில் குழாயில் வரும் தண்ணீரை மட்டுமே அருந்தி மகிழவும் பழகிப்போனவளே.

பக்கத்து கிராமம் ஒன்றில் பிறந்து, ஏழ்மையில் ஊறி, பருவ வயதில் மற்றொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, தாய்மை அடைய வாய்ப்பில்லை என்ற காரணம் கூறிக் கணவனாலும் கைவிடப்பட்டவள். 

நிர்கதியாக அன்று கால்போன போக்கில் நடந்து வந்து, புலம் பெயர்ந்து, இந்த ஊரில் இங்குத்தனியே ஓர் அரசமரத்தடியில் வீற்றிருந்த பிள்ளையாரிடம், தன் மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டு, புடவைத்தலைப்பில் சுற்றி மறைத்து எடுத்து வந்திருந்த பூச்சி மருந்து பாட்டிலின் மூடியைத்திறந்து, பிள்ளையார் முன்பு வைத்துவிட்டு, கடைசியாக ஒருமுறை விழுந்து கும்பிட்டாள். 




அதே நேரம் மரத்திலிருந்து இறங்கிய குரங்குக்கூட்டம், ஒன்றுடன் ஒன்று தங்களுக்குள் ஓடிப்பிடித்து சண்டையிட்டுக்கொண்டு, அந்த பாட்டிலில் இருந்த விஷத்தை அங்கிருந்த மண் தரையில் தட்டிக்கொட்டிவிட்டுச் சென்று விட்டன.



வாழத்தான் வழியில்லை என்று புலம் பெயர்ந்து இவ்விடம் வந்தவளுக்கு சாகவும் வழியில்லாமல் போனது. எல்லாம் ஏதோ தெய்வ சங்கல்ப்பம் என்று நினைத்துப் பேசாமல் அந்த மரத்தடியிலேயே தங்க ஆரம்பித்தாள்.

இவள் இந்த ஊருக்கு வந்த நேரம், வெயிலிலும், மழையிலும் தவித்து வந்த அரசமரத்தடிப் பிள்ளையாருக்கு, ஊர் மக்கள் ஒன்றுகூடி வசூல் செய்து, சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பத் தீர்மானித்தனர். அன்றைய பால்ய வயதுக்காரியான கண்ணாம்பாளும் கோயில் கட்டட வேலைகளில்  தன்னால் ஆன சரீர ஒத்தாசைகளும், உதவிகளும் செய்து தந்து, அந்தப்பகுதி மக்களுக்குப் பரிச்சயம் ஆனாள்.

அந்த அரசமரப்பிள்ளையாரைச்சுற்றி அந்த நாளில் மிகவும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் வசித்து வந்தனர். கைரிக்‌ஷா வண்டிகள், கைவண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒருசில சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஒரே ஒரு ஆட்டோ ரிக்‌ஷா, செருப்புத்தைக்கும் தொழிலாளிகள், ரோட்டோரத்தில் கடைபோடும் காய்கறிக்காரர்கள், ஆங்காங்கே டீக்கடைகள், சவரக்கடைகள், சலவைத் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கழுதைகள், தெரு நாய்கள் என அந்தப்பகுதியே ஒரு மாதிரியாக மிகவும் எளிமையாக ஆரவாரம் ஏதுமின்றிக் காட்சியளித்தாலும், அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை முதலியன நிறைந்திருந்த ஓர் அருமையான சூழலுடன் விளங்கியது அந்தப்பகுதி.

இன்றைய நாகரீகத்தின் பாதிப்புத் தலையெடுக்காத காலம் அது. கண்ணாம்பாளுக்கும் பருவ வயதானபடியால், அங்குள்ள சற்றே வசதிபடைத்த ஒருசில வீடுகளில், தன் உடலுழைப்பைக்கொடுத்து ஏதோ கொஞ்சமாக சம்பாதித்து, மிகவும் கெளரவத்துடனும் மானத்துடனும் தன் வயிற்றுப்பிழைப்பை கழித்து வந்தாள். 

பிள்ளையார் கோயில் பக்கத்திலேயே ஒரு குடிசை வீட்டில் தனியாக வாழ்ந்துவந்த ஒரு கிழவியுடன் சிநேகம் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் அங்கேயே அந்தக்கிழவிக்குத் துணையாகப் படுத்துக்கொண்டு காலம் தள்ளி வந்தாள்.

ஓரிரு வருடங்கள் இவ்வாறு போனபோது, ஒருநாள் அந்தப்பெரிய மரத்தில், குதித்துக்கும்மாளம் அடித்த குரங்குகளில் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்து பிள்ளையார் கோயில் வாசலுக்கு முன்புறம் தன் உயிரை விட்டுவிட்டது.

”தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ” என நினைத்த கண்ணாம்பாளுக்கு, கண்களில் கண்ணீர் வந்தது. இந்தக்குரங்கின் மரணம், அவள் மனதை மிகவும் பாதிப்பதாக இருந்தது.

அங்கிருந்த கைரிக்‌ஷாக்காரர்களும் மற்ற ஏழைத்தொழிலாளிகளுமாகச் சேர்ந்து, ஒரு வேட்டியை விரித்து, அதில் அந்த உயிர்நீத்த குரங்கைப்படுக்க வைத்து, சிறிய மலர்மாலை ஒன்று வாங்கிவந்து அதன் கழுத்தில் அணிவித்து, குங்குமத்தைக்குழைத்து அதன் நெற்றியில் நாமம் இட்டு, அதன் இறுதிக்கடனுக்குப் பணம் வசூல் செய்தனர். பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே ஒரு குழிவெட்டி, அந்தக் குரங்கைப்புதைத்து, புதைத்த இடத்தின் மேல், அந்தப்பிள்ளையாருக்கு சமமாக, ஓர் அனுமன் கோயிலும் எழுப்ப ஆரம்பித்தனர்.

தொடரும்

  

அனுமன் கோயில் கட்டப்படும்போதும், தன்னால் ஆன திருப்பணிகள் [சரீர ஒத்தாசைகள்]செய்து உதவிய கண்ணாம்பாளை, ஒரு காவலாளிபோல, அந்தக்கோயில் வளாகத்தினுள்ளேயே தங்கிக்கொள்ள அவ்வூர்ப் பொதுமக்கள் அனுமதி வழங்கினர்.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒருசில வசதி படைத்த பக்தர்கள், கண்ணாம்பாளுக்கும் உடுத்திக்கொள்ள புது வஸ்திரங்கள் வாங்கித்தந்து, இனிப்புகள் பலகாரங்கள் முதலியன தந்து உதவுவதுண்டு.  கண்ணாம்பா தானாக யாரையும் எதுவும் கேட்பது கிடையாது. கோயிலுக்கு தன்னால் முடிந்த சேவைகள் செய்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்து வந்தாள்.

வாழவழியின்றி அகதியாக, அனாதையாக வந்தவளுக்கு, அந்தப்பிள்ளையார் மற்றும் அனுமார்சாமியின் கருணையினால், அவளும் மிகவும் பாதுகாப்பாக அந்தக் கோயிலிலேயே தங்கிக்கொள்ள ஒரு ஆதரவும், புகலிடமும் அளிக்கப்பட்டதில் அவளுக்கும் திருப்தியே.  

தங்க இடம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த அனுமாரும், பிள்ளையாரும் அவளைக் கைவிடாமல், பட்டினி போடாமல் காத்தும் வந்தனர். 

அங்கிருந்த குருக்கள் அவர்களின் தயவால், ஒண்டிக்கட்டையான இவளின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை உத்தேசித்து, அவ்வப்போது அவள் வயிற்றைக் கழுவிக்கொள்ள தேங்காய் மூடிகள், வாழைப்பழங்கள், வடைகள், சர்க்கரைப்பொங்கல், சுண்டல், தயிர்சாதம், கொழுக்கட்டை என அவ்வப்போது எதாவது பிரஸாதமாக அவளுக்கும் கிடைத்து வந்தன.


  

  

   
  


தனக்குக்கிடைக்கும் இந்த தின்பண்டங்களைத் தான் மட்டுமே சாப்பிடாமல், தன் குழந்தைகள் போன்ற மாருதிக்கும், அனுமந்துவுக்கும் என ஒதுக்கித் திண்ணையின் ஒரு ஓரத்தில் மூடி வைத்திருப்பாள். 




இரவு நேரங்களில் எங்கேயோ போய்த்தங்கும் அந்த குறிப்பிட்ட இரு குரங்குகள் மட்டும், காலை சுமார் பத்து மணியளவில், கண்ணாம்பாக்கிழவியின் திண்ணைக்கு ஆஜராகி, உரிமையுடன் அந்த மூடி வைத்திருக்கும் திண்பண்டங்களைத் திறந்து எடுத்துச்சாப்பிட்டு விட்டு, திரும்பச்செல்லும் சமயம் கண்ணாம்பாளின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

காலம் மாறமாற காட்சிகளும் மாறுவதுபோல, இப்போது அந்தக்கோயிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மிகவும் நாகரீகமாகப்போய்விட்டன. 

ஒரே குப்பை மேடாகத் தெரு நாய்களும், பன்றிகளும் கூட்டம் கூட்டமாகப்படுத்திருந்த இடங்களும், திறந்தவெளிக் கழிப்பிடமாக இருந்த அசிங்கமான ஒதுக்குப் புறப்பகுதிகளும், அவற்றைத்தாண்டி இருந்த விளை நிலங்களும், இன்று ப்ளாட் போடப்பட்டு, பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப்போய்விட்டன.

மனைகளின் மதிப்பும் விலைகளும் பலமடங்கு அதிகமாகி விட்டன. வாகனங்களின் வருகை மிகவும் அதிகரித்து, அமைதியாக இருந்த அந்தப்பகுதி இப்போது ஒரே இரைச்சலாகவும், பரபரப்பாகவும் மாறி விட்டது. 

புதுப்புது மனிதர்கள் நடமாடத்தொடங்கி விட்டனர். ரோட்டிலிருந்த கைவண்டிகள், ரிக்‌ஷாக்கள், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் எல்லாம் காணாமல் போய், மோட்டர் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள், சிற்றுந்துகள், பேருந்துகள் என கணக்கிலடங்காமல் ஓடத்துவங்கின. 

ரோட்டில் இப்போது காலாறக் கைவீசி காற்று வாங்கியபடி நடக்க முடியவில்லை. எங்கும் ஒரே கூட்டமாக இருந்தது. பெரிய பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் என கடைகளாக இல்லாமல் கடல்களாகக் காட்சியளித்தன. பெரும்பாலான குடிசைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. ரோட்டோரக்கடைகளும், டீக்கடைகளும், சிறு வியாபாரிகளும் போன இடம் தெரியவில்லை.

மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துபோனக் குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.  

இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது. 

சாலை விபத்தில் இறப்பவரைச்சுற்றி கூட்டம் போட்டு போக்குவரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது; போலீஸ்காரர்கள் வந்து போட்டோ படம் எடுத்து, உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வரை, யாரும் விபத்தில் அடிபட்டுக்கிடப்பவரைத் தொடக்கூடாது என்று ரொம்பவும் சட்டம் படித்தவர்கள் போல சொல்லித்திரியும் படிப்பறிவு பெற்றவர்களைப் பார்க்கும் கண்ணாம்பாளுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். 

“யார் பெற்ற பிள்ளையோ” என்று துடிதுடித்துப்போவாள் ... அது போன்ற விபத்துக்களைப் பார்க்கும்போது.

அங்கு கோயிலுக்குப் பக்கத்திலேயே உள்ள ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தினமும் கோயிலுக்கு வந்து போவதுண்டு. குறிப்பாக தேர்வு எழுதப்போகும் போது இந்தக்கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுப் போவதுடன், இந்தக்கண்ணாம்பாக் கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்வது வழக்கம். 

அவ்வாறு தன்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க” என ஆசி கூறி வாழ்த்தி அனுப்பி வைப்பாள்.

கண்ணாம்பாளுக்கு, இப்போது சுமார் எண்பது வயது இருக்கும். நாளுக்கு நாள் உடம்பில் தெம்பு குறைந்து வருகிறது. தான் இதுவரை சேர்த்து வைத்துள்ள சொற்பத்தொகையில், அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு வடைமாலையும் போட வேண்டும் என்ற தன்னுடைய வெகுநாள் ஆசையை அந்தக்கோயில் குருக்கள் ஐயாவிடம் கூறினாள்.  

“பேஷா, நாளைக்கே செய்து விடலாம், கண்ணாம்பா; உன்னால் முடிந்ததைக்கொடு போதும். மீதியை நான் போட்டு ஜோராகச் செய்து கொடுத்து விடுகிறேன்” என்றார் அந்தக்குருக்கள்.

தொடரும் 

   

”நாளை காலை பத்து மணிக்கு என் குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுங்க சாமீ” என்று சொல்லித் தன் சுருக்குப்பையிலிருந்த பணத்தையெல்லாம் ஒரு மூங்கில் தட்டில் கொட்டி, அவரை விட்டே மொத்தம் எவ்வளவு தேறும் என்று பார்க்கச்சொன்னாள், அந்தக்கிழவி.

எண்ணிப்பார்த்தவர் “இரண்டாயிரத்து முன்னூற்று மூன்று ரூபாய் உள்ளது” என்றார்.  

தான் யாரிடமும் யாசகம் ஏதும் கேட்காதபோதும், கோயிலுக்கு வரும் பெரும்புள்ளிகள் சிலர் தன் மேல் அன்பு காட்டி அவர்களாகவே மனமுவந்து அளித்துச்சென்ற தொகை, பல வருடங்களாக சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியிருப்பது, கண்ணாம்பாளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  

“அதிலிருந்து வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னை நல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுங்க” என்றாள் கண்ணாம்பாள் கிழவி.

“அதெல்லாம் ஒண்ணும் கவலையேபடாதே; பணத்தை வேண்டுமானால் நான் பத்திரமாக என்னிடம் வைத்துக்கொள்கிறேன்; எப்போதாவது செலவுக்குப்பணம் வேண்டுமானால் என்னிடம் தயங்காமல் கேட்டு வாங்கிக்கோ; பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் இவ்வளவு நாட்கள் இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்திருக்கும் நீ, நூறு வயசுவரை செளக்யமாய் இருப்பாய்; மனதை மட்டும் தளரவிடாமல் தைர்யமாய் வைத்துக்கொள்” என்றார் குருக்கள்.

மறுநாள் காலை பிள்ளையாருக்கு அர்ச்சனை, அனுமாருக்கு வடைமாலை எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மாருதியும், அனுமந்துவும் பூஜை வேளையில் கிழவியுடன் கலந்து கொண்டு, தேங்காய், பழங்கள், வடைகள் என ஆவலுடன் நிறையவே சாப்பிட்டுக்கொண்டிருந்தன. 


 


தான் பெற்ற குழந்தைகள் போல ரசித்து ருசித்து சாப்பிடும் அவற்றைப் பார்த்த கிழவிக்கு ஒரே மகிழ்ச்சி.

அப்போது குருக்களுக்கு தபால்காரர் கொடுத்துச்சென்ற பதிவுத்தபால் ஒன்றைப் பிரித்து, குருக்கள் உரக்கப்படிக்க, கிழவியும் அவர் அருகே நின்றபடி, அதிலிருந்த விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘போக்குவரத்துக்கும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தற்சமயம் மிகவும் இடையூறாக முச்சந்தியில் உள்ள அந்தக்கோயில்கள், ஆக்கிரமிப்புப்பகுதியில் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டவை என்று, நகர முனிசிபல் கார்பரேஷன் முடிவு செய்து விட்டதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் அந்தக் கோயில்களைத் தரை மட்டமாக இடிக்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும், இடித்தபின் போக்குவரத்துக்கான பாதை அகலப்படுத்தும் வேலைகள் நடைபெறும் என்றும், இது ஒரு தகவலுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்று அறியவும்’ என்று எழுதப்பட்டிருந்த விஷயம், குருக்களால் வாசிக்கப்பட்டு, கண்ணாம்பாக்கிழவியால் காதில் வாங்கிக் கொள்ளப்பட்டது.

தனக்குத்தெரிந்தே, தன் பார்வையில், அந்த நாளில் கட்டப்பட்டதும், ஆதரவற்ற அனாதையான தனக்கு இன்று வரை ஒரு பாதுகாப்பு அளித்து வருவதுமான அந்தக்கோயில்கள், இடிக்கப்படப்போகின்றன என்ற செய்தி, அந்தக்கிழவிக்குத் தலையில் இடி விழுந்தது போல ஆனது. 

அப்படியே மனம் இடிந்துபோய் மயங்கிக்கீழே சரிந்து விட்டாள். அவள் உயிர் அப்போதே தெய்வ சந்நிதியில் பிரிந்து போனது.




இதைக்கண்ட மாருதியும் அனுமந்துவும் கதறி அழுதன.

கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன. 

கிழவியின் இறுதி யாத்திரைக்கு அவள் விருப்பப்படியே அந்தக்குருக்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.

கண்ணாம்பாள் கிழவியின் திடீர் மறைவுச்செய்தி காட்டுத் தீபோல அந்தப்பகுதி மக்களுக்குப்பரவியது.  

அருகில் இருந்த ஆரம்பப்பள்ளியில், கோயில் கிழவியின் மறைவுக்கு இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்பிறகு அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. 



அந்தக்கிழவி அனாதை இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளும், திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில், சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.

 


oooooOooooo



சிறுகதை விமர்சனப்போட்டிக்கான கதை என்பதால் 
இத்துடன் இதை நிறைவு செய்துகொண்டு விட்டேன்.

இந்தக்கதை என்னால் எதற்காக எழுதப்பட்டது 
என்ற சிறிய கதை இதன் பின்னனியில் உள்ளது.

அதைப்படிக்க விரும்புவோருக்கு மட்டும்


இதோ இணைப்பு:

oooooOooooo


VGK-21 
’மூக்குத்தி’ப்பரிசு
யார் யாருக்கெல்லாம் கிடைத்தது?


  

   

 

 





VGK-21 ' மூ க் கு த் தி  ’ 


சிறுகதைக்கான


விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

நாளை சனி  / ஞாயிறு  / திங்களுக்குள்

வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !




ஒவ்வொரு வாரப் போட்டிகளிலும் 

கலந்துகொள்ள மறவாதீர்கள் !!



என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்




29 கருத்துகள்:

  1. யாவரும் கேளீர் .. குரங்குகள் உடபட் என்பதை சுவைபட்ச்சொல்லிய கதை..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  2. மனம் கலங்க வைத்த கதை ஐயா... இணைப்பிற்கு செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான படங்கள் கதையை
    காட்சிகளாக்குகின்றன.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மனத்தை நெகிழ வைத்த கதை. கதையின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் மேலும் நெகிழ்த்துகிறது. அருமை கோபு சார்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் !
    அன்பின் கோபால கிருஷ்ணன் ஐயா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள் கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு
    மன்னிக்கவும் .

    பதிலளிநீக்கு
  6. ''..கண்ணாம்பாளின் கைகளைத்தொட்டு (நன்றி தெரிவிப்பதுபோல) தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்..'' மிக உருக்கமான கதை.
    கலக்கப்போகும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    என் கணனி பிழையால் மௌனமாக இருந்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. கதையைப் படித்ததும் மனம் நெகிழ்ந்தது. பின்னணி அறிந்ததும் இன்னும் சற்று வேதனை அடைந்தேன். நேற்றே ஒரு கருத்துரை இட்டிருந்தேன். அருமையான ஆக்கத்திற்கு தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. COMMENTS FROM Mrs. KAMAKSHI MADAM ON 20,06.2014 RECORDED IN MY OLD POST OF JUNE 2011

    Kamatchi June 20, 2014 at 1:09 PM

    அங்கங்கே இம்மாதிரி கோயில்கள் இடிக்கப்படுவது நடந்து கொண்டேதான் இருக்கிரது. மன வெதும்பலில் நீங்கள் புனைந்த மாதிரி கதைகளும் உண்மையிலும் நடந்து கொண்டு இருந்தது.
    இக்காலத்தில் கோயில்களை இடிப்பதுடன் நில்லாமல் ,அங்குள்ளவர்களை துரத்துவதும் நடக்கிறது.
    உணர்வுகள் அருமையான கதையைப் படைக்க உதவியது உங்களுக்கு. ரொம்ப நல்ல கதை.பாராட்டுகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  9. COMMENTS FROM Mrs. GEETHA SAMBASIVAM MADAM ON 20.06.2014 RECORDED IN MY OLD POST OF JUNE 2011

    Geetha Sambasivam June 20, 2014 at 6:43 PM

    நிறையக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. என்ன செய்வது! :(

    Geetha Sambasivam June 20, 2014 at 6:43 PM

    கண்ணீர் வர வைத்த கதை.

    பதிலளிநீக்கு
  10. மனதை தொட்ட கதை. சமீபத்தில் கூட பக்கத்து வீட்டில் டோல்கேட் ஆஞ்சநேயர் கோவிலை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  11. மனதை கரைய வைத்துவிட்டது. நல்ல கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. பல இடங்களில் இது போல நடந்த வண்ணமே இருக்கிறது....

    கண்ணாம்பாள் போன்ற சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.....

    போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. கதையும், அதற்கு ஏற்ற படங்களும் மிக அருமை.
    கதை உருவாக காரணமாய் இருந்த டோல்கேட் அனுமன் கோவில் இடிப்பு அங்கு வசித்த அன்பர்களின் மனதை எவ்வளவு கலங்க வைத்து இருக்கும் என்பதை உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  14. உண்மைச் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட கதை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது! கண்ணாம்பாள் அவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி கதை படித்தவருக்கும் ஏற்பட்டது! அருமையான கதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    VGK-23

    இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:

    http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_28.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  16. சொந்தங்களென்று யாரும் இல்லையென்றால் கூட கிழவியின் காரியங்கள் நிறைவாகச் செய்யப்பட்டன என்று அறியும்போது ஆறுதலாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  17. உண்மை சம்பவமாகத்தான் பார்க்க தோணுது கதைபோல இல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 26, 2015 at 1:10 PM

      //உண்மை சம்பவமாகத்தான் பார்க்க தோணுது கதைபோல இல்ல.//

      மிக்க நன்றி. :)))))

      நீக்கு
  18. இந்தக் கதை நன்னா இருக்குன்னு எப்படி சொல்றது. நீங்க எழுதின கதைகளில் எந்தக் கதைதான் சோடை போயிற்று. ஒரு எழுத்தாளரின் முத்திரைக் கதை என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் கதைகள் அத்தனையும் முத்திரைக் கதைகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 23, 2015 at 2:54 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //இந்தக் கதை நன்னா இருக்குன்னு எப்படி சொல்றது. நீங்க எழுதின கதைகளில் எந்தக் கதைதான் சோடை போயிற்று. ஒரு எழுத்தாளரின் முத்திரைக் கதை என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் கதைகள் அத்தனையும் முத்திரைக் கதைகள் தான்.//

      அடடா, இங்கு திருச்சியில் இன்று கொளுத்தும் வெயிலுக்கு இவ்ளோ பெரிய ஐஸ் கட்டியை ஜில்லுன்னு என் தலையில் ஏற்றி இப்படிக்குளிர வைத்து விட்டீர்களே, ஜெயா.

      குளிர் தாங்க முடியாமல் முரட்டுக் கம்பளியைப் போர்த்தியபடி .... இப்போது உங்கள் கோபு அண்ணா.

      நீக்கு
  19. கண்ணாம்பா கெளவி போல இப்பமும் செல பேருங்க இருக்கதா செய்யுறாங்க. தன்னலம் கருதாத ஒசத்தியான கொணம். கடசி நேரத்துல அவங்கள சுத்திலும் இன்னா அன்பான கூட்டங்க.

    பதிலளிநீக்கு
  20. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்று கண்ணாம்பாகிக்ஷவி கோவலையே தஞ்சமடைந்தா கோவில் இடிபடப்போகும் விஷயம் அவளால் தாங்கி கொள்ள முடியாமல் உயிரையே விட்டுட்டாளே.

    பதிலளிநீக்கு
  21. இருப்பவர்க்கு ஒரு வீடு..இல்லாதவர்க்கு பல வீடு. அனாதையானவர்களுக்கு உலகமே உறவு...

    பதிலளிநீக்கு
  22. இடிக்கப்படப்போகும் அந்தக் கோயிலின் நினைவலைகள் மக்கள் நெஞ்சில் இடம் பிடித்திருக்கும்வரை, அந்தக் கண்ணாம்பாக் கிழவியின் நினைவும் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. தம் படைப்புத் திறனால் அந்தப் பாத்திரத்தை அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடிக்கச் செய்துவிடுகிறார் கதாசிரியர்.

    ஆழமனத்துள் அழுத்தமான உணர்வுகளை, பொருத்தமான தலைப்பிட்டு, அருமையாக விதைத்துச் சென்ற கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  23. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    32 + 34 + 47 = 113


    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-3.html

    http://gopu1949.blogspot.in/2011/06/2-of-3.html

    http://gopu1949.blogspot.in/2011/06/3-of-3.html

    பதிலளிநீக்கு
  24. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  25. Excellent story. The given name of the story is very good. Felt a True story

    பதிலளிநீக்கு
  26. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 13.06.2021

    'யாதும் ஊரே  யாவரும் கேளிர்' என்பதைவிட 'அனைத்து உயிர்களும் நம் உறவே' என்ற உண்மையே சிறந்த தலைப்பாக இக்கருவிற்கு தோன்றுகிறது. ஆறறிவு மனிதன் ஐந்தறிவு ஜீவன்களிடமும் அதேபோல் மனிதர்களிடம் விலங்கினமும் பரஸ்பரம் எல்லா உணர்வுகளையும் பிரதிபலிக்க முடியும் என்ற எதார்த்தத்தை அருமையாக உணர வைத்தீர்கள்.

    -=-=-=-=-

    கதையின் தலைப்பு : 'யாதும் ஊரே யாவையும் கேளிர்' என்று என்னால் கொடுக்கப்பட்டுள்ளது. [யாவரும் அல்ல]   

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    பதிலளிநீக்கு