என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 5 ஜூலை, 2014

VGK 23 / 02 / 03 - SECOND PRIZE WINNERS ......... ’யாதும் ஊரே யாவையும் கேளிர் !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 23 - 

’ யாதும் ஊரே யாவையும் கேளிர் !



இணைப்பு:




  


 

 

 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 





நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து
















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 







  


மற்றவர்களுக்கு: 







    



இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர்





முனைவர் திருமதி

 

இரா. எழிலி  


அவர்கள்


 






இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


முனைவர் திருமதி



இரா. எழிலி  



அவர்களின் விமர்சனம் இதோ:
  

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளைச் சற்றே மாற்றித் தன் கதைக்குத் தக்க ” யாதும் ஊரே யாவையும் கேளிர்” எனத் தன் சீரிய நடையில் சிந்தனையினைத் தூண்டியதில் கதாசிரியரின் தனித்துவமும், அனுபவமும், அணுகுமுறையும்  நன்றாகப் புலனாவது முற்றிலும் உண்மை.

பழைய படங்களில் கண்ணாம்பாள் பாத்திரத்தை நினைவுறுத்தும் விதமாய் கதையின் நாயகியும் கண்ணாம்பாக்கிழவியே.




 



இளைய வயதில் அயலூரில் வாழப்போய், தாயாகும் தகுதி இல்லையென திருப்பி அனுப்பப்பட்டு, வாழ்வை முடிக்கப் பூச்சிமருந்தை உட்கொள்ளுமுன், கண் மூடி விக்னவிநாயகனைத் தொழ, மரத்திலிருந்து அபயம் என குரங்குகள் குதித்து பாட்டிலை கவிழ்த்துச் சொன்ன மொழி இதுவோ?         “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்  தோறும் வேதனையிருக்கும்” என்ற கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத வைர வரிகளையோ?



ஆறாத துயரத்திலும் “ஆலயம்” சென்று “ஆ” “லயம்” ஆன்மா சேருவதற்குரிய இடம் சென்றதனால் கைமேல் கிடைத்த பலன் வாழ்வின் நீட்டிப்போ?




வாழ்வே மாயம் என்று வந்தவளை, வாழநினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில் என்று உணரவைத்தது அரச மரத்தடி பிள்ளையாரின் லீலையா? அல்லது கம்பன் பாடிய “அஞ்சிலே ஒன்று பெற்றான்…………..” அவ்வணங்கைக் காத்த அனுமனின் லீலையோ?


நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத்தேடு என்று அசரீரி ஒலித்ததோ?


தற்கொலை செய்ய முடிவெடுப்பது என்பது அந்த ஒரு நொடியில் தோன்றும் உணர்வே. அந்த ஒரு விநாடியில் நடக்கும் ஏதோ ஒரு சிறு நிகழ்வு கூட அவர்களின் மனநிலையில் முழுமையான மாற்றம் விளைவிக்கும் என்பது உளவியலாளர்களின் ஒருமித்த கருத்து. எத்தனை அழகாய்த் தன் கதை மூலம் ஆசிரியர் அதை உணர்த்திவிடுகிறார்!


ஆலயம் தொழுவது சாலவும் நன்றன்றோ? எனவே கண்ணாம்பாக்கிழவி தன் இளவயதில் “ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்! ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்! வண்ணப்பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு!” என்றுணர்ந்து ..சேவை செய்தாளோ?


பிள்ளையாருக்குக் கோயில் எழுப்பப்பட்டபோதும், மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்த குரங்கிற்கு இரங்கி, பிள்ளையார் கோயில் பக்கத்தில் அடக்கம் செய்து ஆங்கே அனுமனுக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்ட போதும் தன்னால் இயன்ற சரீர ஒத்தாசைகளைச் செய்ததோடு மட்டுமன்றி, பூத்தொடுத்து, கோலமிட்டு, துளசி மாலை கட்டி வாழ்ந்ததைக் குறிப்பிடும்போதே பாரம்பரியமிக்க தாமரைப்  பூக்கோலங்களையும், ஶ்ரீரங்கம், திருச்சி வாழ் மக்களின் கைதேர்ந்த மாலைகளையும் படங்களாய் நம் கண்முன் நிறுத்தி, கலைஞர்களின் நேர்த்தியைக் கண்ணுக்கு விருந்தாக்கியது அருமை. அந்த ஆலய வளாகமே அவளுக்கு வாழ்விடமாகிவிடுகிறது.


இளவயதில் “உழைப்பே உயர்வு தரும்” என்றுணர்ந்து, “செய்யும் தொழிலே தெய்வம்” எனும் பாரதியின் வரிகளுக்கேற்ப, நேர்வழியில், மன உறுதியுடன், அக்கம் பக்கத்து வீடுகளில் வேலை செய்து, உழைத்துப் பிழைத்ததாகப் படைத்தது பாராட்டுக்குரியது. எத்தனை இடர் வந்த போதும், எதிர்கொள்ளும் மனமிருந்தால் மங்கையர்க்கு ஏற்றம் உண்டாகும் என்பதையும் உணர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.


இந்தக் கதை மனமொடிந்து, வாழ்க்கையை வெறுத்திருப்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பது உறுதி. மனதில் உறுதி வேண்டும் எனும் பாரதியின் வாக்கு மெய்யன்றோ?


ஒரு குழந்தை பெற்றெடுக்கத் தகுதியற்றவள் என ஒதுக்கப்பட்டாலும், ஓராயிரம் உள்ளங்களை வென்றுவிட்டவளை, தன் கதாபாத்திரமாய் அமைத்து, தாழ்வுணர்ச்சியைத் தகர்த்து, தாய்மை உணர்வை மேம்பட வைத்து, நம் அனைவரையும் தலைதாழ்த்தி தம் படைப்பாற்றலுக்குத் தலைவணங்க வைக்கிறார் ஆசிரியர்.



கதாபாத்திரத்தின் தாயுள்ளம் வெளிப்பட, குழந்தைகளிடம் அவள் காட்டும் அன்பு, பள்ளிச் சிறுவர்களிடம் பரிவுடன் பேசி ஆசீர்வதிப்பது, அனுமந்து, மாருதி என்ற இரு குரங்குகளையும் தன் பிள்ளைகள் போல் பாவித்து, அவைகளுக்கு உணவளித்து, அவை உண்பதைப் பார்த்து மகிழ்வது என சிறு சிறு நிகழ்வுகள் மூலம் படம் பிடித்துக் காட்டியது மிக இனிமை.



தற்காலத்தில் நிகழும் விபத்துகள், விபத்துக்குள்ளானவர் துடிக்கும்போதும் கவனிப்பார் இல்லாமல் போதல் போன்றவை குறித்து கண்ணாம்பாள் வேதனையுறுவதாக அமைத்த வரிகள் நம் அனைவரின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் வரிகளன்றோ?



60 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் மனநிலை, சுற்றுச்சூழல், அந்த இடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வணிகம் மற்றும் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், விலங்கினங்கள் தங்கள் வாழ்விடத்தை மாற்றிக்கொள்ள நேர்ந்த சூழல்கள் போன்ற காலத்தின் கோலத்தையும் கண்முன் நிறுத்தி, மக்கள் மனநிலையில் மனிதநேயமற்ற மாற்றத்தைச் சாடிய வரிகள் மிக நேர்த்தி.



நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவரின் வாக்கினுக்கேற்ப, தன்னிடம் சேர்ந்த பணத்தை, தன்னைக் காத்த கடவுளுக்கு அர்ச்சனை, வடைமாலை, பிரசாதம் முதலியவற்றிற்கு செலவழித்ததுபோக மீதம் 2000 ரூபாயை அர்ச்சகரிடமே கொடுத்து, தனது இறுதிச் சடங்கிற்கு வைத்துக் கொள்ளச் சொன்னதிலிருந்து பிறருக்குத் தன் இறப்பும் தொல்லையாக இருக்கக்கூடாது என்பதில் அவளுக்கிருந்த உறுதி தெளிவாகிறது. 



அர்ச்சகரிடம் பூஜையை அனுமந்துவும், மாருதியும் வரும் நேரத்திற்குத் தக்கவாறு அமைக்க வேண்டியது நெகிழ்விக்கிறது. ஒவ்வொரு நாளும் பிரசாதம் அளித்ததோடு மறவாமல், தன்னுடைய இறுதி நாள் அன்றுதான் என்பதை அறியாமல், அன்றும் அளித்து அவைகள் உண்பதைப் பார்த்து மகிழ்ந்ததை என்ன சொல்ல?


பிரசாத வகைகளைப் பட்டியலிட்டதும் படத்தொடு விளக்கியதும் பாராட்டுக்குரியது.


திடீரென வந்த கடிதம் இடிபோல் ஒரு செய்தியைச் சுமந்து வர, அதன் தாக்குதலில் மனம் இடிந்த கண்ணாம்பாக்கிழவி கண்மூடிப்போகிறாள்.



மறைந்துவிட்டாலும், மக்கள் மனங்களில் மறவாத நிலையில் இடம்பிடித்துவிட்டதை அவள் மறைவுக்குப் பின் நிகழ்ந்த நிகழ்வுகளின் மூலம் ஆசிரியர் மிகத் தத்ரூபமாய் விவரிக்கிறார். ஒரு படி மேலாய் வானரங்கள் கண்ணீர் சிந்தி கடைசிவரை இருந்து, இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதை காட்சிகளாக்கி நம்மையும் கண்ணீர் சிந்த வைக்கிறார். அவளுடைய ஜீவகாருண்யத்தையும் தாயுள்ளத்தையும் உலகறியச்செய்ய
வேறென்ன சான்று வேண்டும்?



இதுவே ஒரு தமிழ்ப்படமாக்கப் பட்டிருந்தால் நிச்சயம் இறுதியில் சுப முடிவாய், அவளுடைய கணவன் திருந்தி அவளைத் தேடி அலைந்து, கண்டு, கசிந்துருகி, இணைவதாய் அமைத்து Highly Cinematic touch கொடுத்திருப்பர். ஆனால் இந்த முடிவு நிதர்சன உண்மையை உலகுக்கு உணர்த்தி, நம் உள்ளங்களில் கண்ணாம்பாக் கிழவியை ஒரு முன்னுதாரணமாய்க் கொண்டு, தடைகள் பல தாண்டி தரணியில் ஒரு ஒப்பற்ற வாழ்க்கையை நோக்கி அடியெடுக்க வைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.




பொருத்தமாகத் தலைப்பிட்டு, அருமையான கதையை அளித்த கதாசிரியர் மிகவும் பாராட்டுக்குரியவரே.


-எழிலி சேஷாத்ரி, புதுச்சேரி







 






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.







    





இனிப்பான இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்




 திரு. ரவிஜி 


மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.

அவர்கள்

mayavarathanmgr.blogspot.com




இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள



 திரு. ரவிஜி 



மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.


அவர்களின் விமர்சனம் இதோ:





யாதுமாகி நின்றாய் காளி” என்பது போல “யாதும் ஊரே…யாவையும் கேளிர்”.  தலைப்பே முழுக்கதையையும் ஏறக்குறைய சொல்லிவிடுகிறது!
       கதை ஒரு ஆதரவற்ற, அனுமார் கோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட திண்ணையில் குடியிருக்கும் கண்ணாம்பாக்கிழவியை அறிமுகம் செய்வதில் துவங்குகிறது.  சாக்குப்படுதாவுக்குள் முடங்கிவிட்ட அவளது வாழ்க்கை? அதிகாலையில், சாணி தெளித்து, கோலமிட்டு, பிறர் பறித்து வரும் பூக்களைத்தொடுத்து கோயிலுக்குக் கொடுப்பது என்று கோயில் சார்ந்ததாகவே அவளது வாழ்க்கை அமைந்து போனது!  பொதுக்கழிப்பிடத்திலும் பொதுக்குளியலறையிலும் இலவச அனுமதி, “இருந்தா டீ தண்ணி…இல்லாங்காட்டி கொழாத்தண்ணி” என்ற பழங்காலத்துப் பாடல் வரியைப்போல இருந்தால் ரெண்டு இட்லி இல்லாங்காட்டி கொழாத்தண்ணி என்றாகியிருந்த அவளது அவல நிலை!?
       அந்த இடத்திற்கு அறுபது வருடங்கள் முன்பு வந்த அவள் அங்கேயே தங்கும் நிலை ஏன் ஏற்பட்டது?  உற்றார் உறவினர் எவருமில்லையா? மெதுவாக - நம்மையும் அறியாமல் கதைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறோம்!
       வறுமையில் பிறந்து, வளர்ந்து, பருவ வயதில் வாழ்க்கைப்பட்டு தாய்மை அடைய வாய்ப்பில்லாது போனதனால் கணவனாலும் கைவிடப்பட்டவள். ஒரு ஜந்துவாக நினைத்து புறக்கணிக்கப்பட்டதனால் பூச்சி மருந்தே கதி என முடிவுசெய்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்து பிள்ளையாரை விழுந்து கும்பிட்டால் முழுமுதற் கடவுள் முடிவையா தருவார்? மாருதிகள் வந்து மருந்தைத்தட்டிவிட்டு மீண்டும் வாழ்க்கையை அந்த மரத்தடியிலேயே துவக்கிவைக்கின்றன. “திக்கற்றவர்க்கு தெய்வமே துணை” என்ற பழமொழி உண்மையாகத்துவங்குகிறது!
       ஊர் மக்கள் சேர்ந்து மரத்தடி வினாயகருக்குக் கோயில் கட்ட அரம்பிக்க, இளவயதினளாயிருந்த காரணத்தால் தனது உடலுழைப்பைத் தந்து மக்களில் ஒருவளாகி, (யாதும் ஊரே என்று!) அப்பகுதியிலேயே வசித்து வந்த ஒருகிழவியின் வீட்டில் இரவு தங்கிக் கொண்டு, வீட்டுவேலை செய்து வயிற்றைக்கழுவிக்கொள்கிறாள்!  வறுமை என்பது செல்வத்தில் மட்டுமேயென்று நேர்மை, உண்மை, மனிதாபிமானம், பரோபகாரம், தர்ம சிந்தனை, இவற்றால் செல்வந்தர்களாகவே விளங்கிய மனிதர்கள் நிறைந்த அந்தப்பகுதி அவளுக்கு ஏற்றதாகவே அமைந்துபோகிறது.
      காட்சிகள் வேகமாகவே நகருகின்றன.  ஒரு நாள் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு குரங்கு பிள்ளையார் கோயில் வாசலுக்கு முன்புறம் உயிரைவிட, தான் கொண்டுவந்திருந்த விஷபாட்டிலைத் தட்டிவிட்டு அன்று தன் உயிரைக்காப்பாற்றிய குரங்காக இருக்குமோ”  என்ற எண்ணத்தில் கண்ணாம்பாளுக்கு கண்ணீர் துளிர்க்கிறது. அடிவயிறு பதறும் இந்த நிலை ஏன்?


      ஏழைத்தொழிலாளர்கள் சேர்ந்து இறந்த குரங்கிற்கு இறுதிச் சடங்குகள் செய்து பிள்ளையார்கோயிலுக்கு அருகிலேயே புதைத்து ஒரு அனுமன் கோயிலும் எழுப்புகின்றனர்.  அந்தக்கோயிலுக்கும் தன்னாலான சரீர ஒத்தாசைகள் செய்து அந்த ஆலயத்தோடே ஒன்றிப்போகிறாள்.  தங்கிக்கொள்ள கோயில், வயிற்றுக்கு குருக்கள் அவ்வப்போது தரும் பிரசாதங்கள், தேங்காய்மூடி, வாழைப்பழங்கள் இத்யாதிகள் என்று வயிற்றைக்கழுவிக்கொள்கிறாள். தீபாவளி போன்ற பண்டிகைகாலங்களில் நெஞ்சில் ஈரம் நிறைந்த சில வசதி படைத்த பக்தர்கள் வாங்கித்தரும் வஸ்திரங்கள் அவளுக்குப் போதுமானதாகி யாதும் ஊரே என்றாகிவிடுகிறது.


       இதற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகி-உறவாகிக்கொண்டிருக்கும் மாருதிக்கும், அனுமந்துவுக்கும் கிடைக்கும் பிரசாததில் தினமும் பங்கு வைக்கிறாள். திருக்கழுக்குன்றத்தில் கழுகுகள் தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதைப்போல இங்கே கண்ணம்பாளின் செல்லமாகிப்போன மாருதியும், அனுமந்துவும் காலை பத்துமணிக்கு தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு அவளது ‘அன்னமிட்ட கை’யை தடவிக்கொடுத்து நன்றியைத்தெரிவித்து செல்லும் அளவிற்கு நெருக்கமாகிவிடுகின்றன.  பெண்பிள்ளைகள் அம்மாக்களாகவே பிறக்கிறார்கள் என்ற கவிதை வரியை ஞாபகப் படுத்துகிறது கண்ணாம்பாளின் பாத்திரப்படைப்பு.

       காலம் மாற மாற காட்சிகளும் மாறும், கொண்ட கோலங்களும் மாறும், மக்கள் மனங்களும் மாறும் என்பதைப்போல, கோயிலை சுற்றி இருக்கும் இடங்கள், மனிதர்கள், எல்லாம் மாறி, அந்த இடமே ப்ளாட் போடப்பட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, குடிசைகள் காணாமல் போய், வாகனங்கள் அதிகரித்து, இரைச்சலாகி, அவசரகதியான இடமாக மாறிப்போகிறது அந்த இடம்.

“மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துபோனக் குரங்கொன்றுக்கு இறுதி மரியாதை செலுத்திக் கோயில் எழுப்பிய நல்ல மனிதர்கள் அன்று இருந்தார்கள்.  

இன்று பைக், கார், லாரி, பேருந்துகளில் அடிபட்டு நடு ரோட்டில் துடிப்பவர்களுக்குக்கூட உதவி செய்ய மனமோ நேரமோ இல்லாமல் ஓடும் மக்களைத்தான் காணமுடிகிறது.
“ என்ற வரிகள் மனிதன் எவ்வாறு இரக்கமற்றவனாக, இயந்திரனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பதனை அப்பட்டமாக ஆணித்தரமாக எடுத்துச் சொல்கின்றன என்றால் அது மிகையில்லை!

       விபத்துக்களில் சிக்கித்தவிப்பவர்களைப் பார்க்கையில் “யார் பெற்ற பிள்ளையோ” என்று துடித்துப்போவது கண்ணாம்பாள் மட்டுமல்ல- நாமும்தான்.

      அந்தக்கோயிலுக்கு தேர்வெழுதுவதற்கு முன்பாக சாமி கும்பிட்டுப்போகும் ஆரம்பப்பள்ளிக்குழந்தைகள் கண்ணாம்பாக்கிழவியையும் வணங்கி ஆசிபெற்றுச் செல்லும்பொழுது ஒவ்வொரு குழந்தையையும் தொட்டுத்தடவி, “நல்லாப்படியுங்க, நிறைய மார்க் வாங்குங்க”  என்று வாழ்த்தும்போது அவர்களை எல்லாம் பெற்றபிள்ளைகளாகவே நினைப்பது உணர்த்தப்பட்டு கிழவியின் பாத்திரத்திற்கு மேன்மேலும் மெருகேற்றுகிறது.

       “கண்ணாம்பாளுக்கு, இப்போது சுமார் எண்பது வயது இருக்கும்” திடீரென இதனைக்குறிப்பிட என்ன காரணம்? தன்னுடைய வெகுநாள் ஆசையை குருக்களிடம் சொல்லும் பொழுதே கதையின் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை கதாசிரியர் நமக்கு ஏற்படுத்திவிடுகிறார்.  பலரும் அன்பளிப்பாகக் கொடுத்த, கிழவியின் பலவருட சேமிப்பை குருக்களிடம் கொடுத்து அந்தப்பிள்ளையாருக்கு ஒரு அர்ச்சனையும், அந்த அனுமார்சாமிக்கு ஒரு வடைமாலையும் போட வேண்டுமென்றும் அதுவும் மறுநாள்  காலை பத்து மணிக்கு தனது குழந்தைகள் மாருதியும், அனுமந்துவும் வரும் சமயம் பிரஸாதம் கிடைப்பது போலச் செய்துகொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறாள்.  மீதித்தொகையை  அனாதையான தனது இறுதிச்சடங்கிற்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறாள்.  இதோ உச்சகட்டத்தினை மிகமிக நெருங்கிவிட்டோம்.  மறுநாளே கிழவியின் ஆசை நிறைவேறுகிறது.  அதாவது அர்ச்சனையும், வடைமாலையும்தான் அதுவும் பெற்ற பிள்ளைகளைபோன்ற மாருதியும், அனுமந்துவும் உடன்கலந்துகொண்டு ப்ரசாதத்தையும் வயிறு நிறைய உண்டதுதான்  என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட பதிவுத்தபாலில் வரும் செய்தி………தான் உடனிருந்து கட்டிய குடியிருந்த கோயிலையே இடிக்கப்போவதான செய்தியைக்கேட்ட உடனே தலையில் இடி விழுந்ததைப்போல ஆகி, மயங்கிச் சரிந்து தெய்வச் சன்னதியில் உயிரை விட்டு விடுகிறாள் கண்ணாம்பாள்.

“இதைக்கண்ட மாருதியும் அனுமந்துவும் கதறி அழுதன. கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. அன்றைய பூஜைகள் அத்துடன் நிறுத்தப்பட்டன. அருகில் இருந்த ஆரம்பப்பள்ளியில், கோயில் கிழவியின் மறைவுக்கு இரங்கல் கூட்டமொன்று நடைபெற்றது. அதன்பிறகு அன்று முழுவதும் பள்ளிக்கு விடுமுறையும்-அறிவிக்கப்பட்டது. அந்தக்கிழவி அனாதை இல்லையென்பதுபோல அந்தப்பகுதி மக்களும், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளும், திரளாகக்கூடியது மட்டுமின்றி, அனுமந்துவும் மாருதியும் மரத்திலிருந்த தங்கள் குரங்குப் பட்டாளத்தையே கூட்டி வந்து, கிழவியின் இறுதி ஊர்வலத்தில், சுடுகாடு வரை பின் தொடர்ந்து வந்தது, அந்தப்பகுதி மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.”
      
எழுதுவது விமர்சனம் என்றாலும் கதாசிரியரின் இந்த வரிகளை அப்படியே திருப்பித் தராமல் இருக்க முடியவில்லை.  பிள்ளையில்லாமல் போகும் நிலைக்கு கணவன் காரணமா அல்லது மனைவி காரணமா என்று அறிந்துகொள்ள ஆசைப்படாமல் பெண்ணுக்குமட்டுமே ‘மலடி’ என்ற பட்டத்தைக்கட்டி கேவலமாக நடத்தும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். இதுதான் அன்றும் கண்ணாம்பாளின் வாழ்க்கையில் அன்று நடந்தது என்பதனை ஓரிரு வரிகளில் கோடிட்டுக்காட்டிவிடுகிறார்.  பின்னர் அங்கங்கே அவளின் மனநிலையைத்தொட்டுச்சென்று இறுதியில் அவளது மறைவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதனை மேற்கண்ட பத்தியில் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் தான் எவ்வளவு பெரிய கதாசிரியர் என்பதனை திரு வை.கோ. அவர்கள் மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.

வாலைக்குழைத்து வரும் நாய்தான். அது மனிதர்க்கு தோழனடி பாப்பா!” மற்றும் “காக்கை குருவி எங்கள் ஜாதி!” என்ற வரிகளுக்கொப்ப, பாசம் செலுத்தி பெற்ற பிள்ளைகளைப்போல உணவளித்து வந்தகாரணத்தால் பெறாமலே பிள்ளைகளாகிவிடுகின்றன மாருதியும், அனுமந்துவும். (பெற்றால்தான் பிள்ளையா?)  எத்தனையோ தலைவர்கள் பிள்ளைபேறு இல்லாமல்போன போதும், மனிதகுலத்திற்கே பலனளிக்கும்விதமாக வாழ்ந்துகாட்டியிருக்கின்றனர்; பல நற்செயல்களையும் செய்திருக்கின்றனர். அவர்களின் இறுதி ஊர்வலம், ஊரே, நாடே திரண்டுவந்து மரியாதை செய்யும் விதமாக இருந்திருக்கிறது. ஆனால் அங்கோ எல்லாம் ஆறறிவு படைத்த வயது வந்த மனிதர்கள் மட்டுமே.  இங்கோ பள்ளியில் பயிலும் குழந்தைகளின் இரங்கல் கூட்டம். கோயிலின் பூஜை நிறுத்தம்.  எல்லாவற்றுக்கும் மேலாக பெறாத பிள்ளைகளான மாருதியும், அனுமந்துவும் கதறி அழுதது, பெரும் வானரக்கூட்டத்துடன் யாவையும் கேளிராகி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டது…….! கண்ணாம்பாளின் பாத்திரத்தை இன்னும் ஒருபடி மேலேயே உயர்த்தி... மற்ற உயிர்களையும் பெற்ற பிள்ளைகளாகவே பாவித்த “தெய்வத்தாய்” ஸ்தானத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார் கதாசிரியர்.  அந்தகாலத்தில் “உதவும் கரங்கள்” அமைப்பு இல்லாவிட்டாலும் வித்யாகர் போன்ற உதவும் “மனங்கள்” இருந்திருக்கின்றன என்பதனையும் செவ்வனே விளக்கியிருக்கிறார் ஆசிரியர். 

இந்தக்கதையை படிக்கும் ஒருவராவது பிள்ளைகுட்டிகளற்ற கண்ணாம்பாள் போன்ற மனிதர்களிடம் ஆதரவுக்கம் நீட்டுவர், குறைந்தபட்சம் அன்பான சில வார்த்தைகளையாவது தருவர் என்றால் அது நிச்சயம் மிகையில்லை! ரமணர் அவர்கள் ”ஒருவன் பிறருக்குக் கொடுப்பதை எல்லாம் தனக்குத் தானே கொடுத்துக்கொள்கிறான்” என்று பொன்மொழிந்தது கண்ணாம்பாளின் வாழ்க்கைமூலம் தெளிவாகியிருக்கிறது. மனதைக்கவரும், உணர்ச்சிபூர்வமான அற்புதப் படங்களின் தெரிவு – கதைக்கு மேலும் மெருகூட்டுகிறது.   அதிலும் கடைசியில் உள்ள குழந்தையின் இரங்கல், மாருதி மற்றும் அனுமந்து கதறிஅழுவது போன்ற படங்கள் – அதி உன்னதம்.
    
இறுதியாக “நான் கல் அல்ல.  மரமும் அல்ல. துன்புறும் மனிதனைக் கண்டு கண்கலங்கும் மென்மையான மனம் என்னிடமுள்ளது” என்ற கவிஞர் மீர்ஜா கலீப் அவர்களின் வரிக்கொப்ப கதையை படித்து முடிக்கையில் என் இருகண்களிலும் கண்ணீர் தளும்பிவழிந்ததை என்னால் உண்மையில் கட்டுப்படுத்தவே முடியவில்லை. முகம் தெரியாத ஏன் பெயர்கூட தெரியாத அந்த கண்ணாம்பாளின் கணவன் மீது "மவனே நீ மட்டும் என் கைல மாட்ன...???!!!! என்பது போன்ற ஒரு கடும் கோபத்தையேகூட கதாசிரியர் ஏற்படுத்திவிடுகிறார்!"

அல்பேனியாவில் ஸ்கோப்ஜி என்ற இடத்தில் “அக்னெஸ் கான்ஷா பெஜாட்ஸு” என்ற பெயருடன் பிறந்து உலகின் வேறொரு பகுதியில் இருக்கும் நம் தாய் நாட்டிற்கு வந்து நான்கு ஆடைகளையும், ஜபமணியையும் தவிர எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாது மனித இனத்திற்கு அருந்தொண்டாற்றி அன்னை தெரெஸா என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர் கூறியது “எந்த ஒரு மனிதனின் மரணமும் கெளரவமாக இருக்கவேண்டும்” என்பது. அந்த விதத்தில் கண்ணாம்பாவின் மறைவும் அவள் வாழ்ந்ததைவிட மிக மிக கெளரவமானதாக அமைந்தது என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
ஐயா! திரு.வை.கோ. அவர்களே நான் வாசித்த உங்களது (குறைந்த படைப்புகளே வாசித்திருக்கிறேன் என்றாலும் கூட) படைப்புகளிலேயே உன்னதமானது இந்தக்கதைதான் என்று நான் நிச்சயமாக அடித்துக்கூறுவேன்.  அடி பின்னிட்டீங்க! பட்டைய கிளப்பிட்டீங்க! பின்னிப் பெடலெடுத்திட்டீங்க! கடைசியில கண்கலங்கவும் வச்சிட்டீங்க!

“கண்ணிலே அன்பிருந்தால், கல்லிலே தெய்வம் வரும்” ! ஏற்றுக்கொள்ளும் மனமிருந்தால் “யாதும் ஊரே…யாவையும் கேளிர்” என்பதும் உண்மைதான்.

உன்னதமான கதைக்கு மீண்டும் மீண்டும் - நெஞ்சார்ந்த நன்றிகள்!!!!!
அன்புடன்,
ரவிஜி.
பின்குறிப்பு:
//“அதிலிருந்து வடைமாலைக்கும், அர்ச்சனைக்குமாக ரூபாய் முன்னூற்று மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள்; மீதி இரண்டாயிரத்தைத் தாங்களே என் கடைசிகாலச் செலவுக்கு வைத்துக்கொண்டு, அனாதையான எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ’கோவிந்தாக்கொள்ளி’ போட்டு, என்னைநல்லபடியாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து விடுங்க என்றாள் கண்ணாம்பாள் கிழவி.//

கொள்ளியும் போட்டு அடக்கமும் செய்ய முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. கோவிந்தாக்கொள்ளி’ மனம் கலங்க வைக்கும் வார்த்தைப் ப்ரயோகம் என்பதில் ஐயமில்லை! எனவே அடக்கம் செய்ய என்பதை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.  கூறியதில் தவறிருந்தால் தயவு செய்து – மன்னிக்கவும்.

மீண்டும் இந்த கதைக்கான எனது நெஞ்சார்ந்த நன்றி!

வலைப்பூ: மாயவரத்தான் எம்ஜிஆர்


 






மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.







    




 
VGK-21 To VGK-23


 திரு. ரவிஜி 


  
   

இரண்டாம் முறையாக மீண்டும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
திரு. ரவிஜி அவர்களுக்கு
நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்

Hat-Trick Prize Amount will be fixed later 
according to his Continuous Further Success 
in VGK-24, VGK-25 and VGK-26

  






    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது

.



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.





oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-25 

 தேடி வந்த தேவதை 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


10.07.2014




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.











என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

22 கருத்துகள்:

  1. இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    முனைவர் திருமதி -எழிலி சேஷாத்ரி அவர்களுக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் பரிசு வென்று
    இரண்டாம் முறையாக மீண்டும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
    திரு. ரவிஜி அவர்களுக்கு மனம் நிறைந்த
    இனிய பாராட்டுக்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. எழிலி மற்றும் ரவிஜி ஆகியோருக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமை அடைகின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. //இரண்டாம் முறையாக மீண்டும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
    திரு. ரவிஜி அவர்களுக்கு என் பாராட்டுக்கள் ! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தெரிவானது மகிழ்வளிக்கிறது. என்னுடன் பரிசு பெறும் திரு. ரவிஜி அவர்களுக்கு பாராட்டுகள்! வாய்ப்பளித்த திரு வைகோ அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும், என்னை வாழித்திய/ வாழ்த்தப்போகும் நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  6. திரு. ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசுக்குரிய வெற்றியாளர்கள் முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் மாயவரத்தான் திரு. ரவிஜி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். யதார்த்த முடிவை சிலாகித்த முன்னதும் யதார்த்த வாழ்வில் உதாரணம் காட்டி முடித்த பின்னதுமாக இரண்டும் மனம் ஈர்க்கும் விமர்சனங்கள்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வை.கோ

    இரண்டாம் பரிசினைப் பெற்ற புதுச்சேரியினைச் சார்ந்த திருமதி எழிலி அவர்களையும் மாயவரத்தைச் சார்ந்த ரவிஜி அவர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. இரண்டாம் பரிசு பெறும் வெற்றியாளர்கள் திருமதி எழிலி சேஷாத்ரி மற்றும் திரு ரவிஜி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல பரிசுகள் இவர்களை வந்தடையட்டும்...

    பதிலளிநீக்கு
  10. இதுவரை வாழ்த்து தெரிவித்துள்ள தெரிவிக்க இருக்கின்ற அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் வை.கோ. அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை பகிர்ந்துகொண்டுள்ள முனைவர். திருமதி.எழிலி அவர்களுக்கு மனம்திறந்த பாராட்டுகள்! ஏற்கனவே இருக்கின்ற மகளிரணி நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டே செல்வதுபோலிருக்கிறதே! பின்னுங்க! போட்டிக்கு இன்னும் கூர்மைப்படுத்திக்கொள்ள வழிகோலுகிறது! அன்புடன் ரவிஜி

    பதிலளிநீக்கு
  11. இந்த வெற்றியாளர், முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    http://esseshadri.blogspot.com/2014/07/blog-post_6.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  12. இரண்டாம் பரிசினை அடைந்த முனைவர் திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் மற்றும் மாயவரத்தான் திரு ரவிஜி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. http://mayavarathanmgr.blogspot.in/2014/07/vgk_12.html
    திரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    இந்த சிறுகதை விமர்சன, மீண்டும் ஹாட்-ட்ரிக் வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  15. திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் மற்றும் மாயவரத்தான் திரு ரவிஜி அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. திருமதி எழிலி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி இரா. எழிலி அவர்களுக்கும் மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. திருமதி எழிலி திரு ரவிஜி அவங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. திருமதி எழிலி மேடம் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. //இரண்டாம் முறையாக மீண்டும் ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
    திரு. ரவிஜி அவர்களுக்கு என் பாராட்டுக்கள் ! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு