என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

VGK 30 - மடிசார் புடவை



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 14.08.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 


REFERENCE NUMBER:  VGK 30

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



மடிசார் புடவை’

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


 


'ஆத்துக்கு (வீட்டுக்கு) ஒரு பெண் பிறந்தால் அத்தை அசலார்' என்று ஒரு பழமொழி உண்டு. வீட்டுக்கு நான் பெண்ணாகப்பிறந்து விட்டேனே ஒழிய, என் அத்தை அசலாராக முடியவில்லை.

ஏனென்றால் என் வீட்டுக்கு நான் ஒரே பெண். என் அத்தை பிள்ளைக்கே வாழ்க்கைப்பட உள்ள எனக்கு என் அத்தை என்றுமே அசலார் ஆக முடியாதே.

ஏற்கனவே என் அத்தையின் அதிகாரம், எப்போதுமே என் வீட்டில் கொடிகட்டிப்பறக்கும். இப்போது அவர்கள் வீட்டுக்கே மருமகளாக நான் போக வேண்டிய சூழ்நிலையில் நாளுக்கு நாள் வெறும் அதிகாரம் சர்வாதிகாரமாகவே போய்விட்டது.

என் அம்மாவை நினைத்தால் தான் ரொம்பவும் பாவமாக உள்ளது. மாமியார், மாமனார், நாத்தனார் என்று பயந்து நடுங்கிப்பழகியவள். மாமியார், மாமனார் ஏதோ வயதாகி காலமாகிவிட்டதால், நியாயமாக அவளின் பயம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அது தான் இல்லை.

நல்லவேளையாக என் அம்மாவுக்கு, என் வருங்கால மாமியாராகிய ஒரே ஒரு நாத்தனார் மட்டும் தான். ஆனால் அந்த ஒரு நாத்தனாரே ஒன்பது நாத்தனார்களுக்குச் சமம்.

எதைப்பார்த்தாலும் அதில் ஒரு குறையை மட்டும் அலசி ஆராய்ந்து கண்டுபிடிப்பவர்கள் என் அத்தை. வாயைத்திறந்து எது பேசினாலும், அதில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு குதர்க்கம் ஒளிந்திருக்கும்.

மிகவும் அப்பாவியான என் அம்மா, எதற்கு வம்பு என்று பேசாமல் ஒதுங்கியே இருந்தாலும், “அமுக்கக்கள்ளி” என்பார்கள். 

வாயைத்திறந்து ஏதாவது ஓரிரு வார்த்தைகள், அதுவும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டாலும் அதில் ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து பொடுகைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கி அம்மாவை அழ வைத்துவிட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பாள்.

என் அப்பாவும் கூட தன் அக்காவுக்கு சற்று பயப்படக்கூடியவர் தான். சட்டசபை சபாநாயகர் போல இருவருக்கும் நடுவில் நடுநிலைமை வகித்து, தன் அக்காவின் கோபத்தை மேற்கொண்டு கிளறாமல் சமாதானப்படுத்தவே முயற்ச்சிப்பார்.

”என் பொண்டாட்டி ஒரு அசடுன்னு உனக்குத்தெரியாதா அக்கா; அவள் பேச்சை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதே அக்கா; உன் அனுபவம் என்ன! உன் சாமர்த்தியம் என்ன! அவள் கெடக்கிறாள்” என்பார். 

[பிறகு என் அம்மாவைத் தனியாக சமாதானப் படுத்திக்கொள்ளலாம் என்ற ஒரு தைர்யத்தில்.]

இதெல்லாம் என் சின்ன வயது முதல், நான் பலமுறை பார்த்து, கேட்டு, பழகிப்போனது தான். இப்போது என் திருமண விஷயமாக, தன் நாத்தனாரே சம்பந்தி அம்மாளாக வரப்போவது, என் அம்மாவுக்கு அடி வயிற்றில் புளியைக்கரைப்பதாக இருக்க வேண்டும் என்பதை, என்னால் நன்றாகவே உணர முடிகிறது.

சம்பந்தி அம்மாளை இந்த என் கல்யாணத்தில் முழுத்திருப்தி படுத்தவும், தங்களுக்கே இயல்பாக உள்ள ஆவலைப்பூர்த்தி செய்துகொள்ளவும், சீர் வரிசை முதலான அனைத்து விஷயங்களிலும் சர்வ ஜாக்கிரதையாக எல்லாம் அமர்க்களமாக தடபுடலாகச் செய்துவிடத்தான் என் அம்மாவும், அப்பாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

பெறுபவர் மனதில் திருப்தி என்பதை கொடுப்பவர்களால் பணத்தாலோ, பொருளாலோ வரவழைத்துவிட முடியுமா என்ன? பெறுபவருக்கு அது தனக்குத்தானே திருப்தியளித்தால் தான் உண்டு. மேலும் எது கிடைத்தாலும் அதை சந்தோஷமாக, மனதில் ஒருவித திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள, இறைவன் அருளால் அதற்கான மனப்பக்குவம் ஏற்பட்டிருந்தால் தான் உண்டு. 

ஒருவர் தனக்குக்கிடைத்த பொருளை, திருப்தியுடன் பெற்று, சந்தோஷமாக அதை அனுபவிக்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பார்கள், அனுபவசாலிகள். அதுவும் நியாயமான கூற்று தான்.

இன்று எங்கள் வீட்டில் ஒரு சிறிய பிரச்சனையும், பரபரப்பும். என் அத்தைக்கு (வருங்கால சம்பந்தி அம்மாளுக்கு) எங்கள் வீட்டின் சார்பில் கல்யாணத்திற்குப் புடவை எடுக்க ஜவுளிக்கடைக்குப் போக வேண்டும். அவர்கள் எப்போதும் கட்டுவது ஒன்பது கெஜ மடிசார் புடவை.

”கடைக்கு நீங்களும் வாங்கோ” என்று கூப்பிட்டால் “நீயே பார்த்து ஏதாவது வாங்கி வாயேன்; எனக்காகப் புடவை வாங்க நானே உங்களுடன் வந்தால் நன்னா இருக்காது; விலையும் கூடக்குறைய ஏதாவது எடுத்துக்கொண்டு விடுவேன்; உங்கள் பட்ஜெட் எப்படியோ, என்னவோ, ஏதோ?” என்பார்கள்.

சில சமயங்களில் “வரவர இந்த ஒன்பது கெஜம் புடவையைக் கையாள்வதே கஷ்டமாக உள்ளது. உடம்பில் நீட்டி முழக்கிக்கட்டுவதோ, அவிழ்ப்பதோ, துவைப்பதோ, அலசுவதோ, உலர்த்துவதோ, மடித்து வைப்பதோ செய்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. பேசாமல் எப்போதுமே இந்த சிறுசுகளைப்போல நாமும் நைட்டியில், காத்தாட இருந்து விடலாம் போல உள்ளது” என்பார்கள்.

அவர்களைக் கடைக்குக் கூப்பிடாமல் நாங்கள் மட்டுமே புடவை எடுக்கப்போனாலோ, “உள்ளூரிலேயே இருக்கும் என்னையும் ஒரு மரியாதைக்காகவாவது கடைக்கு வாங்கோன்னு கூப்பிடனும்னு தோணலையா உங்களுக்கு” என்பார்கள்.  மொத்தத்தில் இப்படி என்றால் அப்படி என்றும், அப்படி என்றால் இப்படி என்றும் கூறும் சுபாவம் உள்ளவர்கள்.

பலவித யோசனைகள், மண்டைக்குடைசல்களுக்குப்பின், ஒருவழியாக நாங்கள் மட்டுமே ஜவுளிக்கடைக்குப் போவதென முடிவெடுத்து, புறப்பட்டும் விட்டோம்.

தங்கக்கலரில் அரக்கு பார்டர், அரக்குக்கலரில் பச்சை பார்டர், புட்டா போட்டது, புட்டா போடாத ப்ளைன் புடவை, வெந்தயக்கலர், வெங்காயக்கலர், ராமர் கலர், மயில்கழுத்து இரட்டைக்கலர், தலைப்பு பூராவும் ஜரிகை அது இதுன்னு பட்டுப்புடவைகள் பலரகங்களில் போடப்பட்டன. மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை விலைகளில் பல தினுசுகள், பல டிசைன்கள்.



 

 

 

   

 


அப்பாவும் அம்மாவும் நெடுநேரம் யோசித்து, ட்யூப் லைட் வெளிச்சத்திலும், வெளியே வெயில் வெளிச்சத்திலும் கலர்களைப்பார்த்து, திருப்திப்பட்டு, ஒரு நவாப்பழக்கலர் பட்டுப்புடவையை, நல்ல பச்சைக்கலரில் பட்டையான பெரிய ஜரிகை பார்டராகவும், ஒரு வித்யாசமான தலைப்பாகவும் தேர்ந்தெடுத்து கடைக்காரரை விட்டு பிரித்துக் காண்பிக்கச்சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.

ஒருவேளை சம்பந்தி அம்மாளுக்கு திருப்தி இல்லாமல் இருந்தால் வந்து வேறு புடவை மாற்றிச்செல்கிறோம் என்று கடை முதலாளியிடம் கேட்டுக்கொண்டனர். புடவை கசங்காமலும், மடிப்புக்கலையாமலும், பில்லுடன், நான்கு நாட்களுக்குள் வந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்று கடைக்காரரும் உத்தரவாதம் கொடுத்ததில் என் அம்மாவுக்கு ஒரு நிம்மதி. 

அம்மாவும், அப்பாவும் தாங்கள் எடுத்துள்ள பட்டுப்புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கைத்துணி எடுக்க அந்தக்கடையின் வேறு பகுதிக்குச் சென்றார்கள். நான் மட்டும் சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து கொண்டேன்.


தொடரும்

    
 


அதே கடையில் வேறு ஒரு பக்கம் இருந்த புடவைகளை ஒருசில மாமிகள் புரட்டிக்கொண்டிருப்பதை கவனித்த நான், அவ்விடம் சென்றேன்.

அங்கே ஒரு மடிசார்புடவை மாமி மற்றொரு மாமியிடம், ”வரவர இந்தப்பட்டுப் புடவைகளைக் கண்டாலே பத்தி[பற்றி]க்கொண்டு வருகிறது; வெய்யில் காலத்தில் ஒரேயடியாக வியர்வை வழிந்து, கசகசன்னு ஆகி, எப்படா அவிழ்த்துவிட்டு வேறு சாதா புடவை கட்டுவோம்னு ஆகி விடுகிறது; சுலபமாக பாத் ரூம் கூட போய் வரமுடிவதில்லை; விலையும் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு; ஒரு தடவைக்கட்டி அவிழ்த்தால் கசங்கிப்போய் இஸ்திரி போட வேண்டியதுள்ளது. வருஷத்துல நாலு நாள் கூட கட்டிக்க மாட்டோம். சுளையா எட்டாயிரம், பத்தாயிரம்னு கொடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்பிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. 

அந்த அம்மா என் அத்தை-கம்-மாமியார் வயதை ஒத்த மாமியாக இருந்ததால் அவர்கள் அருகில் சென்றேன். சில்க் காட்டான் என்று கூறப்பட்ட நாலு புடவைகளைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அந்தப்புடவைகள் எல்லாம் மிகவும் நன்றாகவே இருந்தன. வழவழப்பாகவும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், அதிக கனமில்லாமல் லைட்-வெயிட் ஆகவும், அடக்கமாகவும், அழகாகவும் இருந்தன.    விலையும் கிட்டத்தட்ட பட்டுப்புடவை போலவே இருந்தன.


 

 

”இவை லேட்டஸ்ட் ரன்னிங் ப்ளெளஸ் என்ற பெயரில் புடவையின் உள்பக்கமாக, மேட்ச் ரவிக்கைத்துணியுடன் கூடிய ஒன்பது கெஜப்புடவைகள். ப்ளெளஸ் பிட் புடவைத்தலைப்பில் இல்லாமல் உள்பக்கமாக இருப்பதில் ஒரு செளகர்யம்; 

சாதாரண தேகவாகு உள்ளவர்கள், அதைத்தனியே கிழித்து ரவிக்கையாகத் தைத்துக்கொள்ளலாம். சற்றே ரெட்டைநாடியாக, வஞ்சகமின்றி வளர்ந்த, வாளிப்பான தேகம் உடையவர்கள், ரன்னிங் ப்ளெளஸ் துணியை கிழிக்காமல் அப்படியே தாராளமாக புடவையாகக் கட்டிக்கொள்ளலாம்;  

அத்தகைய முரட்டுசைஸ் பேர்வழிகள் மட்டும், ரவிக்கைக்கு தனியே துணியெடுத்து தைத்துக்கொள்ளலாம்” என்று அந்தக்கடையின் விற்பனையாளர் அந்த மாமியிடம் விளக்கிக்கொண்டிருந்தார்.  

என்னைப்பார்த்த அந்த மாமி “அம்மாடி, கண்ணு .... என் ராஜாத்தி .... இந்த நாலு புடவைகளில் என் உடம்புக்கு எது நன்றாக இருக்கும்னு நீ சொல்லேன்” என்றார்கள். 

”எல்லாமே சூப்பராகத்தான் இருக்கு மாமி, இந்தப்பொடிக்கலர் புடவை உங்கள் சிவத்த உடம்புக் கலருக்கு எடுப்பாக இருக்கும் போல எனக்குத் தோன்றுகிறது” என்று சொன்னேன். 




அவர்களும், ”நீ ... ராஜாத்தி போல எப்போவும் நன்னா இருப்பேடி ... என் கண்ணே” என்று சொல்லி என் கன்னம் இரண்டையும் தன் இரு கைகளாலும் வழித்து தன் தலையில் விரல்களை சொடுக்குப்போட்டுக் கொண்டார்கள். 

”எனக்கு எதை எடுப்பதுன்னு ஒரே குழப்பமாக இருந்தது, நல்ல சமயத்தில் வந்து பளிச்சுன்னு தெளிவாகச் சொல்லிவிட்டாய்” என்று சந்தோஷமாகச் சொல்லிவிட்டு, நான் சொன்ன அதையே எடுத்துக்கொண்டு பில் போடப்போனார்கள்.

எனக்குத் தாலிகட்டி என்னை மனைவியாக்கிக் கொள்ளத்துடிப்புடன் உள்ள எங்காளு .... என்னை மிகவும் செல்லமாக ‘ராஜாத்தி’ என்றே இப்போதெல்லாம் அழைத்துக் கொஞ்சி வருகிறார். அவர் அவ்வாறு என்னை அழைக்கும் போதெல்லாம் எனக்குள் ஜில்லுன்னு ஒருவித கிளுகிளுப்பு ஏற்பட்டு ஒரே மகிழ்ச்சியாகி விடுகிறது. 

அதுபோலவே அகஸ்மாத்தாக ‘ராஜாத்தி’ என்று இந்த மாமியும் இப்போது என்னைப்பார்த்துச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதனால் என் மனம் இப்போதும் ஜில்லிட்டுப்போனது.

மீதி மூன்று சில்க் காட்டன் புடவைகளில் பளபளப்பாக மிகவும் ஜோராக வயலெட் கலரில் ஆங்காங்கே உடம்பெல்லாம் புட்டா போட்டதும்,  தங்கக்கலரில் பார்டரும் ஜரிகையுமாக, தகதகன்னு மின்னிய வண்ணம், அருமையாக இருந்த வெயிட்லெஸ் புடவைகளில் ஒன்றை நான் எனக்கு வாங்கிக்கொண்டு பில் போடச்சொன்னேன். 




என் அம்மா, அப்பா எடுத்த பட்டுப்புடவையுடன், இதையும் தனியே வாங்கிக்கொண்டு கடையை விட்டுப்புறப்பட்டோம்.

வீட்டுக்குப்போகும் வழியில், என் அத்தையும் வருங்கால மாமியாருமான அவர்கள் வீட்டில் புடவையைக் காட்டிவிட்டுப்போய் விடலாம் என்று, என் அம்மா, அங்கிருந்த பிள்ளையாரை வேண்டிக்கொண்டே சொன்னாள். 

அதன்படியே சரி என்று சம்மதித்த நாங்கள் அதற்கடுத்த ஆயத்த வேலைகளில் இறங்கினோம். அதாவது சம்பந்தியம்மாளைப் பார்க்கப் போகும்போது வெறும் கையுடன் போகமுடியுமா என்ன! 

அங்கிருந்த பழக்கடைக்குப்போய் ஆப்பிள், ஆரஞ்சு, செவ்வாழைப்பழம், மாம்பழம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தள்ளியிருந்த பூக்கடைக்குப்போய் குண்டு மல்லிகைச்சரம் ஒரு பந்து பார்ஸல் வாங்கிக் கொண்டோம். எனக்கும் என் அம்மாவுக்கும் முல்லைப்பூ வாங்கி தலையில் சூடிக்கொண்டோம். 


 

 

 


”ஜில்லுனு ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே” என்று, அம்மாவையும் அப்பாவையும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தேன்.


 


அப்பா, அம்மாவைப்பார்த்தார். அம்மா என்னைப்பார்த்தாள். பிறகு சொன்னாள் “நீயும் அப்பாவும் வேண்டுமானால் போய் ஐஸ் கிரீம் சாப்பிடுங்கோ, நான் இப்போ வரக்கூடிய மனநிலையில் இல்லை” என்றாள். 

அம்மாவின் ஒரே கவலை இந்தப்புடவையை என் அத்தை நிராகரிக்காமல் பிடிச்சுருக்கு என்று சொல்லணும் .... அதுவே நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டது போலத்தான் என் அம்மாவுக்கு இருக்கும்.  

”சரி....ம்மா, இப்போ முதலில் நாம் நேராக அத்தை வீட்டுக்குப் போவோம்; பிறகு நம் வீட்டுக்குப்போகும் போது நாம் எல்லோருமே சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவோம், ஓ.கே. யா?“ என்றேன்.  சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் அம்மா.   

நேராக அத்தை வீட்டுக்கு ஆட்டோவில் பயணம் ஆனோம். அத்தை வீட்டில் நுழைந்ததும், ஹால் சோபாவில் அமர்ந்தபடியே எங்களை வரவேற்ற  அத்தையின் காலடியில் தரையில் என் அம்மா அமர்ந்து கொண்டாள்.  




என் அம்மா நாத்தனாருக்கு சமமாக சோபாவில் அமர மாட்டாள். அவ்வளவு பயம் கலந்த மரியாதை. அப்படியே ஆரம்பத்திலிருந்து தன்னைப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டவள். இனி மாற்றுவது கஷ்டம். கேட்டால் ’ஜில்லுனு தரையிலே உட்காரத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு’ என்பாள்.  

மெதுவாக பட்டுப்புடவையை எடுத்து, அத்தையிடம்  அம்மா பெளவ்யமாகக் நீட்டினாள் -  காட்டினாள்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே தண்ணீர் குடிக்கச்செல்வது போல சமையல் ரூமுக்குள் நான் போய் விட்டேன். கதவு இடுக்கு வழியாக அவர்கள் பேசிக்கொள்வதை நான் கேட்டுக்கொண்டு நின்றேன். 

என் அத்தை அந்தப்பட்டுப்புடவை விஷயமாக என்ன அபிப்ராயம் சொல்லுவார்களோ, என என் அம்மாவின் நெஞ்சு, மரத்திலிருந்து கீழே விழுந்த அணில்குட்டி போல,  என்னமாய்த் துடித்துக் கொண்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொண்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.


  


”நன்னா இருக்கே”  என்று சொல்லிக்கொண்டே புடவையைக் கையில் வாங்கிக்கொண்டு, அதில் போட்டிருந்த விலையை முதலில் நோட்டமிட்டார்கள் என் அத்தை.

“எனக்கு எதற்கு இவ்வளவு விலைபோட்டு பட்டுப்புடவை வாங்கணும்? ஏதோ சில்க் காட்டன்னு இப்போ சொல்றாளே!, அது போதாதோ?; என் பிள்ளையாண்டானும் தனியா அவன் வீதத்துக்கு ஒரு பட்டுப்புடவையே எடுத்திருக்கிறான்;

ஆனா ஒன்னு, நீ வாங்கியிருக்கும் இது, நான் இதுவரை கட்டிக்காத கலராயிருக்கு. சில்க் காட்டன் வாங்கிக்கட்டணும்னு தான் ஒரு ஆசை. பரவாயில்லை. வாங்கினது வாங்கிட்டேள். திரும்பப்போய் மாத்திண்டு வர வேண்டாம் “ என்றார்கள்.  

இதைக்கேட்டதும் என் அம்மாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அம்மா ஓடிப்போய் ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்து வந்து பழங்கள், புஷ்பங்களை அதில் அடுக்கி  என் அத்தையின் [தன் நாத்தனாரின்] கைகளில் கொடுத்துவிட்டு அவர்களை என் அப்பாவுடன் சேர்ந்து நமஸ்கரித்துக்கொண்டாள்.

அவர்கள் எல்லோருக்கும் ஜில் வாட்டர் எடுத்துக்கொண்டு, என் அத்தை முன் ஆஜரானேன்.

நான் வாங்கிவந்த சில்க் காட்டன் புடவையை பையிலிருந்து வெளியே எடுத்து என் அத்தையிடம் கொடுத்தேன்.

“இது ஏதுடீ இன்னொரு புடவை?” என்று என் அம்மா என்னைப்பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டாள். நான் ஏற்கனவே சொல்லிக்கொடுத்தபடி சரியாகவே என் அம்மா நடித்து விட்டதில் எனக்கும் உள்ளூர சந்தோஷம் தான்.

“அத்தை உடம்புக்கு கட்டிண்டா ரொம்ப நன்னா இருக்கும் என்று நான் தான் தனியாக ஒன்று எடுத்து வந்தேன்” என்றேன்.
  
பிரித்துப்பார்த்த என் அத்தைக்கு வாயெல்லாம் பல்லாக ஒரே சந்தோஷம். “இதை......இதை.....இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், ஆசைப்பட்டேன்” என்றார்கள்.

”உங்களுக்கு இது ரொம்பப்பிடிக்கும்னு நான் எதிர்பார்த்தேன், அத்தை; அதனால்தான் இந்தக்குறிப்பிட்ட புடவையை நான் செலெக்ட் பண்ணிண்டு வந்தேன். என் டேஸ்ட்டும், உங்க டேஸ்டும் ஒன்னாவே இருக்கு பாருங்கோ” என்றேன்.

இதைக்கேட்டதும் நிஜமாலுமே சந்தோஷப்பட்ட என் அத்தை  “ஆனால், எனக்கு ஏதாவது ஒரு புடவை மட்டும் போதுமே” என்றார்கள்.

“உங்கள் பிள்ளை எடுத்துக்கொடுத்ததை கல்யாணத்தின் போது கட்டிக்கோங்கோ; அம்மா எடுத்த இந்தப்புடவையை முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது கட்டிக்கோங்கோ; நான் எடுத்த இந்த சில்க் காட்டனை நலங்கு நடக்கும்போது சாயங்காலமாக கட்டிக்கோங்கோ” என்று சொல்லிவிட்டு, அத்தையை நானும் நமஸ்காரம் செய்தேன்.

நான் இவ்வாறு சொன்னதில் அத்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முகத்தில் எந்தவிதக்கோபமும் இல்லாமல் ”நன்னா இரு மகராஜியா” என்று வாழ்த்திவிட்டு, “இருந்து எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும்” என்று எங்கள் மூவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு, சமையல் அறையை நோக்கி துள்ளிச்சென்றார்கள். 

நானும் என் தாயைப்பார்த்து புன்னகை செய்தபடி கண் சிமிட்டிவிட்டு, கூடமாட அத்தைக்கு உபகாரம் செய்ய சமையல்கட்டுக்குள் நுழைந்தேன்.

என் தாயும் தந்தையும் இவள் இனி பிழைத்துக்கொள்வாள்; நாம் இவளைப்பற்றிய கவலையில்லாமல் இருக்கலாம்” என்ற நினைப்புடன் ஒருவித அர்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது.

சற்று நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணத்துடன் கேசரி கிளறும் வாசனை எங்கள் எல்லோருடைய மனதையும் ரம்யமானதொரு சூழலுக்கு கொண்டு சென்றது.  


 

அதை அடுத்து சூடான பஜ்ஜிகள் ..... சுவையான கெட்டிச்சட்னி .. நுரையுடன் நல்ல ஸ்ட்ராங்க் காஃபி  என அனைத்தும் தயாராகி நாங்கள் நால்வரும் சேர்ந்தே சாப்பிட்டோம். 

ஐந்தாவது காஃபியை எங்க ஆள் ஆபீஸ் விட்டு வந்ததும் குடிக்கட்டும் என ஒரு குட்டி ஃப்ளாஸ்க்கில் சூடாக ஊற்றி வைத்து விட்டேன். இந்த என் முன் ஏற்பாட்டை கவனித்த என் அத்தைக்கும் ஒரே சந்தோஷமாகி விட்டது. உதட்டில் ஓர் சிறிய புன்னகையுடன் என் தோளைத்தட்டி பாராட்டினார்கள். 


 

 


என் அத்தையைப்போல ஒரு நல்லவங்க இந்த உலகில் வேறு யாரும் இருப்பாங்களா? என்று நானே எனக்குள் மகிழ்ந்து கொண்டேன். 

”என்னயிருந்தாலும் அவர்கள் என்னோட நாளைய மாமியாராச்சே! அவர்களை விட்டுக்கொடுப்பேனா என்ன? ”


oooooOooooo


VGK-28 
வாய் விட்டுச் சிரித்தால் .. !
சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள்
வழக்கம்போல் 
நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்
வெளியிடப்படும்.

 

 




காணத்தவறாதீர்கள்.





ஒவ்வொருவாரப் போட்டிகளிலும்

கலந்துகொள்ள மறவாதீர்கள்.





என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்



28 கருத்துகள்:

  1. புத்திசாலியான மருமகள் ..!
    அருமையான படங்கள் ..!!
    நிறைவான கதை ..பாராட்டுக்கள்.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயோசிதப் பெண்ணுக்கு ஏற்ற மாமியார். பயமில்லாமல் புக்ககத்தை அணுகும் முறையை முதலிலேயே கற்று விட்டாள். நல்ல படங்களோடு நல்ல கதை. வாழ்த்துகள்.

      நீக்கு
  2. கடைக்கே போஒய் வந்த திருப்தி. நல்ல சமயோசிதமான பெண்.நல்லவேளை இவளும் மாமியாரிடம் நடுங்கியபடி இருக்கப் போகீறாளோ என்ற கவலை போனது. ஒருவருக்கொருவர் சமமாக இருந்துவிட்டால் சண்டை சச்சரவு ஏது. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  3. மனிதர்களின் மனநிலையை படிக்க தெரிந்து விட்டால் எல்லோருக்கும் பிடித்தமாதிரி நடந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட முடியும் என்று காட்டும் மருமகள்.
    புகுந்தவீட்டுக்கு போகும் போது குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீடு இனிமையாக இருக்கும் இருவீட்டாருக்கும் உறவு நலமாக இருக்கும் என்பதும் இக் கதையின் மூலம் அழகாய் சொல்லிவிட்டீர்கள் சார்.
    அருமையான கதை, அழகான பொருத்தமான படங்கள் .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வந்து குவியட்டும் விமரிசனங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அதுபோலவே அகஸ்மாத்தாக ‘ராஜாத்தி’ என்று இந்த மாமியும் இப்போது என்னைப்பார்த்துச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இதனால் என் மனம் இப்போதும் ஜில்லிட்டுப்போனது.

    சைகாலஜி தெரிந்தோ தெரியாமலோ பழகுகிற விதத்தில் மனிதர்களைக் கவர்ந்து விடுகிற அன்பிருந்தால் போதும்.. வாழ்க்கையை ஜெயித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  6. அத்தையுடய மருமாள், ஸரியான குணமறிந்து எப்படி நடக்க வேண்டுமென்று தீர்மானித்து விட்டாள். வெற்றியும் கண்டுவிட்டாள். விசாரம் விட்டதெனக்கு.
    இந்தப் புடவை ஆசை இருக்கிரதே போதும் என்ற எண்ணமே மனதில்த் தோன்றாது. அடுத்தவர்கள் உடுத்தியிருப்பது, அழகாகத்
    தோன்றும். எப்போது வாங்கலாம் என்று மனது எண்ணமிடும்.
    அழகான மடிசார்ப் படவைகள். படங்கள் அமோகம். அழகு.
    சம்பந்திப் புடவை சமத்தைவிட அதிகம் எதிர்பார்ப்பது பிள்ளயைப் பெற்றவர்களின் விசேஷ தனி உரிமை போலும்.
    அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. நல்ல சமர்த்தான மருமகள்தான்! இது போன்ற மருமகள்கள் இருக்கும் வீட்டில் பிரச்சனையே வராது! நல்லதொரு கதை! நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அப்பப்பா!..என:ன ஓரு சமாளிபிக்கேசன்...
    கதை ரெம்ப ஜோராயிருக்கேன்னோ!
    நன்னா எழுதியிருக்கேள்..
    நன்னாயிருங்கோ!...
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வை.கோ - அருமையான கதை - மடிசார் புடவை ( மடிசார் மாமி என வைத்திருக்கலாமோ ) தலைப்பு நன்று . கதை நீண்ட கதையாக இருப்பினும் இரசித்து மகிழ வைக்கும் அருமையான கதை - எத்தனை எத்தனை படங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. ஓ இது படக்கதையா?
    29 படங்கள்!

    சமர்த்து மருமகள்; பிழைத்துக் கொள்வாள்!!

    பதிலளிநீக்கு
  11. புத்திசாலி மருமகள் தான்.

    சமாளிக்கும் விதம் தெரிந்து கொண்டால் ஜெயித்து விடலாம். பாராட்டுகள் சார்.

    பதிலளிநீக்கு
  12. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (22.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    மடிசார் புடவை....:

    உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 'அவள்' எழுதிய சிறுகதை.. அதுதான் புடவைக் கடைக்குள்ளே அலசி, ஆராய்ந்து, அடடா......எத்தனை சூட்சுமம்...! கதை பிரமாதம்..

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  13. மாமியார் மெச்சிய மருமகள் வாழ்க.

    பதிலளிநீக்கு
  14. கதையும் பொருத்தமான படங்களும் ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  15. ஏற்கனவே படித்து பின்னூட்டம் கொடுத்த கதை. இருந்தாலும் படிக்கப் படிக்க சுவாரசியம் குறையவே இல்லை.

    பதிலளிநீக்கு
  16. நல்ல வெவரமான மருமகதான். மாமியாளும் பருமகளும் இதே ஒத்துமயோட இருக்கட்டும் வெகு காலத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  17. புடவைகளில் இத்தனை ரகங்களா. எப்படி செலக்ட் பண்றாங்க. உரையாடல் எல்லாம் யதார்த்தம் படங்கள் கூடுதல் சிறப்பு. மொத்தத்தில் கதை ஸில்க் காட்டன் புடவை போல பளபளக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. அம்மாவுக்கு அடுத்தபடியாக மாமியாரின் மடியை சார்ந்து ஒரு பெண் இருக்கவேண்டும் என்று சொல்லும் இந்த மடி-சார் புடவை கதை.."ராஜாத்தி" மாதிரி ஒரு சமத்துப் பெண் இருந்தால் எல்லோர்க்கும் மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  19. மடிசார் புடவை” எனும் தலைப்பும், மாமி வேடத்தில் கமலஹாசனின் படமும் இது ஒரு பிராமணக் குடும்பம் சார்ந்த கதை என்பதை உணர்த்திவிடுகிறது. மடிசார் புடவை உடுத்திக்கொள்ளும் பழக்கமுடைய, இப்படி என்றால் அப்படி என்றும், அப்படி என்றால் இப்படி என்றும் கூறும் சுபாவமுடைய அத்தை கம் வருங்கால மாமியாரை, எப்படிக் கவர்ந்தார் அவரின் வருங்கால மருமகள் என்பதை மருமகளே எடுத்துரைப்பதாக எழுதப்பட்ட அற்புதமான கதை.



    கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் வைக்காமல், அத்தனை பாத்திரங்களையும் நமக்கு மாமியாரின் மனதினைக் கவர்ந்து வெற்றி கண்ட மருமகள் வாயிலாகவே அறிமுகம் செய்யும் ஆசிரியரின் யுக்தி பாராட்டுக்குரியது. தொய்வில்லாமல் கதையைத் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறார் கதாசிரியர்.
    மாமியாரின் மனம் கவர்ந்த மருமகள் பாத்திரத்தைப் படைத்த கதாசிரியர் அனைத்து மகளிராலும் போற்றப்படுவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. அவருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      //கதாபாத்திரங்கள் யாருக்குமே பெயர் வைக்காமல், அத்தனை பாத்திரங்களையும் நமக்கு மாமியாரின் மனதினைக் கவர்ந்து வெற்றி கண்ட மருமகள் வாயிலாகவே அறிமுகம் செய்யும் ஆசிரியரின் யுக்தி பாராட்டுக்குரியது. தொய்வில்லாமல் கதையைத் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறார் கதாசிரியர். //

      மிக்க மகிழ்ச்சி :)

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  20. இந்த மடிசார் புடவை கனபாடிகள.... வைதிக பரம்பரை இதெல்லாம் சுத்தமாக புரிஞ்சுக்கவே முடியல... இந்த கதையும் நல்லா இருக்கு.. இனிமே உங்க பதிவெல்லாம் படிச்சுதான் மனதை டைவர்ட் பண்ணிக்கொள்ளணும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 27, 2016 at 9:49 AM

      வாங்கோ முன்னாக்குட்டி, வணக்கம்மா.

      //இந்த மடிசார் புடவை கனபாடிகள்.... வைதிக பரம்பரை இதெல்லாம் சுத்தமாக புரிஞ்சுக்கவே முடியல...//

      இதெல்லாம் தங்களால் சுத்தமாக புரிஞ்சுக்கவே முடியல என்பதை என்னால் நன்கு புரிஞ்சுக்க முடியுது. இவை ஒவ்வொன்றும் பற்றிய விளக்கங்கள், தனி மெயில் மூலம் அனுப்பி, தங்களுக்கு விளக்க நினைத்துள்ளேன். :)))))

      //இந்த கதையும் நல்லா இருக்கு..//

      மிகவும் சந்தோஷம்.

      // இனிமே உங்க பதிவெல்லாம் படிச்சுதான் மனதை டைவர்ட் பண்ணிக்கொள்ளணும்...//

      தற்காலிகமாகப் புண்பட்டுள்ள தங்கள் மனம் என் பதிவுகளால் நிச்சயமாக பண்படும் .... ஒத்தடம் கொடுத்தது போல ஹிதமாக இருக்கும் .... என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபூஜி

      நீக்கு
  21. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 42 + 84 = 126

    அதற்கான இணைப்புகள் (பகுதி-1 + பகுதி-2):

    http://gopu1949.blogspot.in/2011/06/1-of-2.html

    http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html

    பதிலளிநீக்கு
  22. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  23. LIBYA VASUDEVAN'S COMMENT THROUGH WHATS APP MESSAGE ON 18.09.2018

    -=-=-=-=-

    [18/09 13:24] Libya Vasudevan Bhel: Gopi....

    உங்கள் கதை *மடிசார்* தூள். வெந்தயம், வெங்காயம் கலர் வரிகளை படித்து மெலிதாக சிரிப்பு வந்தது. மாட்டுப்பெண் நல்ல புத்திசாலி. அம்மாக்காரியும் குடும்ப நலனை ஒட்டி அடங்கிப்போனாலும் பெண்ணின் ப்ளானுக்கு நடித்து நாத்தனாரையே சமாளித்த விதம் அருமை. மிகவும் ரசித்தேன்.

    [18/09 13:25] Libya Vasudevan Bhel: உடனுக்குடன் எல்லா கதைகளுக்கும் பதில் எழுத இயலவில்லை. சாரி.

    -=-=-=-=-

    WELCOME ! THANK YOU VERY MUCH Mr. VASUDEVAN :)

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  24. திருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தக்கதைக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.

    விஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு
    20.09.2018

    பதிலளிநீக்கு