என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

VGK 33 - எல்லோருக்கும் பெய்யும் மழை !



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 04.09.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 33

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 




’எல்லோருக்கும் 
பெய்யும் மழை’

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



ந்த வங்கியின் காசாளரான வஸந்திக்கு பலவிதமான மன உளைச்சல்கள். பூவும் பொட்டுமாக புது மணப்பெண்ணாக துள்ளித்திரிந்து ஜொலிக்க வேண்டிய அவள், திருமணம் ஆன முதல் ஆண்டு முடிந்ததுமே, சாலை விபத்தொன்றில் கணவனை பறிகொடுத்து விட்டு, அவன் பார்த்து வந்த வங்கி வேலையை, கருணை அடிப்படையில் பெற்றுக்கொண்டு, சின்னஞ்சிறு வயதில் பிழைப்புக்காக உழைக்க வந்து, ஓராண்டு தான் ஆகிறது.

கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சாட்சியாக ஓர் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு வலது கையில் சுண்டிவிரல் அருகே ஆறாவது விரலாக ஜிமிக்கி போல ஒரு குட்டியூண்டு விரல் தொங்கிக்கொண்டு உள்ளது. இப்போது அந்தக்குழந்தை பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. 

அந்தத்தொங்கலில் உள்ள விரலை இப்போதே சுலபமாக நீக்கிவிடலாம் என்று மருத்துவர்கள் எடுத்துச் சொல்லியும், ‘ஆறாம் விரல் மிகவும் அதிர்ஷ்டமானது’ என வேறுசிலர் எடுத்துக்கூறி வருவதால் அது இன்னும் நீக்கப்படாமல், அந்த அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து இன்னும் தொங்கிக்கொண்டு தான் காத்திருக்கிறது. 

இவள் காலடி எடுத்து வைத்த வேளை தான் இப்படி ஆகிவிட்டது என்று தங்களின் ஒரே பிள்ளையை பறிகொடுத்த வேதனையில், புலம்பி வந்த மாமனார் மாமியாருடன் கொஞ்சகாலம் படாதபாடு பட்டுவிட்டு, பிரஸவத்திற்கு பிறந்த வீடு வந்தவள் தான். பிறகு அவர்களும் குழந்தையையும் இவளையும் பார்க்க வரவே இல்லை.

புகுந்த வீட்டுக்கு குழந்தையுடன் வரச்சொல்லி அழைக்கவும் இல்லை. நல்லவேளையாக இவளின் அந்தக் குழந்தையைக் கூடமாட பார்த்துக்கொள்ள ஒண்டிக்கட்டையான இவளது தாயாராவது இருப்பதில் சற்றே ஒரு ஆறுதல்.

வீட்டில் இருந்தால் வேதனை தான் அதிகரிக்கும் என்று ஆபீஸுக்கு வந்தால் இங்கும் பிரச்சனை தான். காசாளர் [CASHIER] வேலை என்ன லேசான வேலையா? கொடுக்கல் வாங்கலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அனுபவசாலிகளையே கூட சமயத்தில் காலை வாரி விட்டுவிடும். 

எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் வஸந்திக்கு சமயத்தில் பணம் கையை விட்டுப்போய் நஷ்டமாகி விடுகிறது. மாதக்கடைசி வேறு. இந்தக் காலம்போல் பணம் எண்ணும் மெஷின்களோ, ATM வசதிகளோ, கணினி தொழில்நுட்பங்களோ அன்று ஒன்றுமே கிடையாது. ஒவ்வொரு நோட்டாக, ஸ்பாஞ்ச் டப்பாவில் தண்ணீர் நிரப்பி தொட்டுத்தொட்டு விரல்களாலேயே எண்ண வேண்டும். அழுக்கு நோட்டு, கிழிந்த நோட்டு, செல்லாத நோட்டு, கள்ள நோட்டு என்று நடுநடுவே கூடுதல் தொல்லைகள் வேறு.  

நேற்று மாலை சுளையாக நானூறு ரூபாய் கணக்கில் உதைத்தது. கை நஷ்டப்படுவதுடன் சீஃப் கேஷியரிடமும் மேனேஜரிடம் பாட்டு வேறு வாங்க வேண்டியுள்ளது. உடனே பணம் கட்டமுடியாத சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட காசாளருக்கு சம்பள முன்பணம் (SALARY ADVANCE) கொடுத்தது போல கணக்கு எழுதி, அன்றைய அலுவலகக் கணக்கை சரிசெய்துவிட்டு, பிறகு முதல் தேதி சம்பளப் பட்டுவாடாவில் அந்தத் தொகைகளைப் பிடித்துக்கொள்வார்கள். 

உண்மையிலேயே பணம் கொடுக்கல் வாங்கலில் தவற விடப்பட்டதா அல்லது மாதக்கடைசியில், குடும்பச் செலவு செய்ய பணப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாடகம் ஏதாவது நடத்தப்படுகிறதா என்று மேலதிகாரிகளான அவர்கள் சந்தேகப்படுவதும் இயற்கையே.

தன்னைச் சுற்றிச்சுற்றி வந்து 10, 20, 50 என்று அடிக்கடி கைமாத்து வாங்கிச்செல்லும், அந்த வங்கியின் அடிமட்ட தற்காலிக ஊழியரான பெண் அட்டெண்டர் அஞ்சலை நேற்று முன்தினம் காலை தன்னிடம் வந்து அவசரமாக 200 ரூபாய் கேட்டதையும், தான் தர மறுத்து விட்டதையும் நினைத்துப்பார்த்தாள் வஸந்தி.

பழகிய வரை அஞ்சலையும் நல்லவள் தான். அவள் கணவன் தான், சதா சர்வகாலமும் குடித்துவிட்டு, மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தும் வேலை வெட்டி இல்லாதவன்.

பாவம் அஞ்சலை. முப்பது வயது முடிவதற்குள் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள். இவள் ஒருத்தியின் மிகக்குறைந்த சம்பளத்தில் ஆறு உயிர்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு. பண நெருக்கடியால் ஒருவேளை அஞ்சலை நம் கவனத்தை திசைதிருப்பி, ஏமாற்றி பணம் ரூபாய் நானூறை தன் மேஜையிலிருந்து எடுத்துப்போய் இருப்பாளோ?

ஆனால் தானும் கூடமாட தொலைந்த பணத்தைத் தேடுவது போல நேற்று மாலை வெகு நேரம் என்னுடனேயே இருந்து, என்னருகே கேபினுக்குள் இருந்த குப்பைத்தொட்டியைக் கிளறி, ரூபாய் நோட்டுக்கள் ஏதாவது பறந்து அதில் போய் விழுந்துள்ளதா என குனிந்து நிமிர்ந்து ஆராய்ந்து, என் வருத்தத்தில் பங்கேற்றுக் கொண்டாளே, அஞ்சலை!

எதற்கும் இனி அவள் விஷயத்தில் சற்று உஷாராகவே இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள், வஸந்தி.

இன்று விடியற்காலம் அஞ்சலை, வஸந்தி வீட்டுக்கே சென்று ரூபாய் நானூறு பணத்தை நீட்டி, “அம்மா, இதுவரை உங்களிடம் சிறுகச்சிறுக நான் வாங்கிய பணம் ரூபாய் நானூறு வரை இருக்கும். இந்தாங்க அம்மா அந்தப்பணம். உங்களைப்போன்ற ஒரு நல்லவங்களுக்கு ஒரு எதிர்பாராத சோதனையும், நஷ்டமும் [CASH SHORTAGE] ஏற்பட்டதில் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது” என்றாள்.

"முந்தாநாள் தான் என்னிடம் வந்து 200 ரூபாய் கடன் கேட்டாயே, அஞ்சலை! இந்தப்பணம் நானூறு ரூபாய் உனக்கு எப்படிக்கிடைத்தது?" வஸந்தி தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை மிகவும் இயல்பாக ஒரு கேள்வியாகக் கேட்டே விட்டாள்.    

”நானும் உங்களைப் போலவே பலபேர்களிடம் அன்று கைமாத்தாக தருமாறு பணம் கடன் கேட்டுப்பார்த்து விட்டேன். ஆனால் யாருமே தந்து உதவவே இல்லை அம்மா;

விற்கும் விலைவாசியில் ஒரு நாள் போவது ஒரு யுகமாக உள்ளதே அம்மா. கட்டினவனும் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சாராயக்கடையே கதி என்று இருக்கிறான். நான் என்ன செய்ய? எனக்கு வேறு வழியே தெரியலையம்மா;

என் கழுத்தில் இருந்த அரைப்பவுன் தாலி மட்டுமே மிச்சம் இருந்தது. அதையும் என்றைக்காவது குடிபோதையில், மேலும் ஊற்றிக்குடிக்க கழட்டிக்கொண்டு போய் விடுவான் அந்தப்பாவி மனுஷன். அவனே சரியில்லாத போது அவன் கட்டிய அந்தத் தங்கத்தாலி எனக்கு முக்கியமாகப் படவில்லை. மேலும் எங்க அம்மா கஷ்டப்பட்டு, தன் காசுபோட்டு கடையில் வாங்கிய தாலிதான் அது.

அவிழ்த்துப்போய் அடகு வைத்து ரூபாய் ரெண்டாயிரம் வாங்கியாந்துட்டேன். வெகு நாட்களுக்குப்பிறகு நேற்று தான் எங்கள் வீட்டில் வாய்க்கு ருசியாச் சமைத்து, வயிறு முட்டக் குழந்தைகளுக்குப் போட முடிந்தது” என்றாள் கண்களில் நீர் மல்க.

அவள் பேச்சை நம்பவும் முடியாமல், நம்பாமலும் இருக்க முடியாமல் வஸந்திக்கு மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது.  எது எப்படியோ அஞ்சலைக்கு அவ்வப்போது சிறுகச்சிறுக சில்லறையாகக் கொடுத்த தொகை, திரும்ப வரவே வராது என்று முடிவு கட்டியிருந்த தொகை, மொத்தமாக இப்போது திரும்பி வந்ததில், வஸந்திக்கும் மகிழ்ச்சியே.  

”தாலியை அடமானம் வைத்துவிட்டு, கழுத்தில் வெறும் மஞ்சள் கயிற்றுடன் உன்னைப் பார்த்தால், உன் புருஷன் திட்டி, அடிக்க வரமாட்டானா?” என்று கேட்டாள் வஸந்தி.

”இனிமேல் ஒரு அடி என்னை அந்த ஆளு அடித்தாலும் போதும்; நேராகப்போய் போலீஸில் புகார் கொடுத்து ஒரு வருஷம் உள்ளே தள்ளிப்புடுவேன். பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம் புதுசா போட்டிருக்காங்கன்னு, தினமும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, போதை ஏறும் வரை ஓஸிப்பேப்பர் படிக்கும் அதுக்கும் தெரியுமில்லே! உள்ளே தள்ளிவிட்டா என்னிடம் காசும் பறிக்க முடியாது; தண்ணியும் அடிக்க முடியாது; அதனால் அது இனி என் வம்புக்கே வராதும்மா” என்றாள் அஞ்சலை.  

இவள் தைர்யமாக அதுபோலச் செய்தாலும் செய்வாள் என்று நினைத்துக் கொண்டாள், வஸந்தி.

அஞ்சலை விடைபெற்றுச் சென்றதும், ஆபீஸுக்குப் புறப்பட தன்னை தயார் படுத்திக்கொண்டாள், வஸந்தி. 


ன்று கடவுளை வேண்டிக்கொண்டு மீண்டும் கேஷ் கெளண்டரில் அமர்ந்தாள் வஸந்தி. 

சட்டை ஏதும் அணியாமல் தோளில் துண்டு மட்டும் போட்டவாறு, அக்குளில் மிகப்பெரிய குடை ஒன்றை மடக்கிய நிலையில் இடுக்கியவாறு, அந்தப்பக்கத்து கிராமப்பெரியவர் ஒருவர் வஸந்தியிடம் வந்தார்.

”அம்மாடி, நேற்று காலை உன்னிடம் இருபத்து ஐயாயிரம் ரூபாய் நான் வாங்கிப்போனதில் ரூபாய் நானூறு கூடுதலாய்க் கொடுத்து விட்டாய் போலிருக்கு! இனறு காலையில் தான் கறவை மாடுகள் வாங்கவும், உரம், பூச்சி மருந்து போன்றவைகள் வாங்கவும், அந்தப்பணத்தை எடுத்து பொறுமையாக எண்ணிப் பார்த்தேன். 

500 ரூபாய்த்தாளின் 41 இருந்தது. 100 ரூபாய்த்தாளில் 49 தான் இருந்தது. ஒரு நூறு ரூபாய்க்கு பதில் ஒரு ஐநூறு ரூபாயைக் கொடுத்து விட்டாய் போலிருக்கு. இந்தாம்மா அந்தப்பணம்” என்றார் அந்தப்பெரியவர்.

பெரியவரை அமரச்செய்து, தேநீர் வரவழைத்துக் கொடுத்து “மிகவும் நன்றி, ஐயா” என்றாள் வஸந்தி.

”இதற்குப்போய் என்னம்மா நன்றியெல்லாம் சொல்றீங்க! தப்பு என் மேலேயும் உள்ளதும்மா; நானும் பணத்தை இங்கேயே எண்ணி சரி பார்த்து விட்டுத்தான் போயிருக்கணும்; 

நம்ம பேங்கிலே நேற்றைக்கு கும்பல் ரொம்ப அதிகமாக இருந்திச்சு. நான் வங்கியிலிருந்து எடுத்த தொகையோ அதிகம். திருட்டுப் போய்விடுமோ என்ற பயம் வேறு. நீ கொடுத்தப்பணத்தை அப்படியே இடுப்பு வேட்டியிலே பத்திரமா இறுக்கி முடிந்து கொண்டு நகர்ந்து போய் விட்டேன். மேலும் நீ கொடுத்தால் அது வழக்கமா சரியாகத்தான் இருக்கும்னு ஒரு நம்பிக்கையும் தான் காரணம்” என்றார்.

அந்தப்பெரியவர் விடைபெறும் முன், “எங்க கிராமத்துப் பொண்ணு அஞ்சலை இங்கே தானே வேலை பார்க்குது! அது ரொம்ப ரொம்ப நல்ல தங்கமான பொண்ணும்மா. சின்னக்குழந்தையாய் இருந்த போது தன் பிறந்த வீட்டிலேயும் கஷ்டப்பட்டுச்சு; புருஷன் சரியில்லாம, இப்போதும், குழந்தை குட்டிகளோட கஷ்டப்படுவதாக அன்னிக்கு என்னை தெருவில் பார்த்தபோது சொல்லிச்சு;

நான் இங்கே வந்துட்டுப்போனதாகவும், அவளை நான் மிகவும் விசாரித்ததாகவும் சொல்லும்மா”  என்றார் பெரியவர்.

அஞ்சலையையா நீ சந்தேகப்பட்டாய் என்று அந்தப்பெரியவர் சாட்டையைச் சுழட்டி அடித்தது போல இருந்தது வஸந்திக்கு.

”வானம் இருட்டாகி விட்டது. பலத்த மழை வரும் போலத்தோன்றுகிறது” என்று வங்கியில் பணம் கட்ட வந்த இருவர் பேசிக்கொண்டது வஸந்தியில் காதில் விழுந்தது.

இந்தப்பெரியவர் போலவும், நம் அஞ்சலை போலவும் ஆங்காங்கே சில நல்லவர்கள் இருப்பதாலேயே, நாட்டில் அனைவருக்கும் மழை பெய்து வருகிறது என்று நினைத்துக்கொண்டாள் வஸந்தி.





oooooOooooo

     



 

நினைவூட்டுகிறோம் !

 

சிறுகதை விமர்சனப்போட்டியின்


நடுவர் யார் ?


VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளில்

ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் 

எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே 

இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முடியும்.


மிகச்சுலபமான இந்தப் போட்டியில் 
கலந்து கொள்ள மறவாதீர்கள்.


மேற்படி போட்டியின் இதர
நிபந்தனைகள் காண இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html



     
 


VGK-31 

முதிர்ந்த பார்வை


 



 

 


VGK-31 

முதிர்ந்த பார்வை


சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள்

நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்

வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள்.




 




மஹா கணேசா ! மங்கள மூர்த்தி !!



அனைவருக்கும்  


இனிய விநாயகர் சதுர்த்தி 


நல்வாழ்த்துகள்  !






என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

29th August, 2014.

26 கருத்துகள்:

  1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  2. நல்லார் ஒருவர் இருந்தால்
    எல்லோருக்கும் பெய்யும் மழை!
    வறுமையில் செம்மை காக்கும்
    அஞ்சலையின் பாத்திரப்படைப்பு அருமை..!
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் சார்!

    பதிலளிநீக்கு
  4. இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  6. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கதை.நிஜ வாழ்க்கையில் நடக்கக் கூடிய சம்பவங்களைக் கோர்த்து வெகு யதார்த்த நடையில் செல்கிறது.அஞ்சலைகளுக்கும் கிராமத்துப் பெரியவர்க்கும் மிக மிக நன்றி சொல்லத் தோன்றுகிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
    கிராமத்து பெரியவர், அஞ்சலை போன்றோர் இன்னும் இருப்பதால் தான் மழை என்பது நிஜம்.
    அருமையான கதை.
    படங்கள் எல்லாம் அருமை.
    மோதகம் எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  9. மழை கொட்டட்டும். நாமும் நனைவோம். :)

    பதிலளிநீக்கு
  10. கதை அருமை.... நம்மில் பலர் கூட இப்படி அவசரப்பட்டு சந்தேகப்பட்டுவிட்டு பிறகு வருந்துவோம்... கெட்டவர்கள் நடுவில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை நம்பத்தான் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  11. ஏதோ ஒருவிதத்துக் கஷ்டம் ஸந்தேகம் வந்து விட்டது. அது நீங்கிய விதம் இருக்கிறதே தாமதமானாலும் நன்றாக உள்ளது.
    யதார்த்த உலகத்தில் இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. கொடுக்கல் வாங்கலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அனுபவசாலிகளையே கூட சமயத்தில் காலை வாரி விட்டுவிடும். //

    உண்மை தான் ஐயா.எப்படி கவனகம், நல்ல நினைவுடனும் செய்தாலும் கடைசியா...முழி பிதுங்கி விடும் தான். மாசக்கடைசியில வசந்திக்கு...பாவம் அவ்வப்போது சோதனை.

    பண விஷயத்தில்....யாரையும் சந்தேகப்படும் நிலை மனிதனுக்கு வந்து விடுகிறது...என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள்.

    ஒருவர், இருவர் நல்லவர்களாக இருக்கத்தான் அவ்வப்போது மழை பெய்கிறது என்பது வாஸ்தவம் தான் ஐயா. அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri February 8, 2015 at 12:37 AM

      வாங்கோ, வணக்கம்.

      **கொடுக்கல் வாங்கலில் முழுக்கவனமும் இருக்க வேண்டும். அனுபவசாலிகளையே கூட சமயத்தில் காலை வாரி விட்டுவிடும்.**

      //உண்மை தான் ஐயா. எப்படி கவனம், நல்ல நினைவுடனும் செய்தாலும் கடைசியா...முழி பிதுங்கி விடும் தான். மாசக்கடைசியில வசந்திக்கு...பாவம் அவ்வப்போது சோதனை.

      பண விஷயத்தில்....யாரையும் சந்தேகப்படும் நிலை மனிதனுக்கு வந்து விடுகிறது...என்பதை அழகாய் காட்டியுள்ளீர்கள்.

      ஒருவர், இருவர் நல்லவர்களாக இருக்கத்தான் அவ்வப்போது மழை பெய்கிறது என்பது வாஸ்தவம் தான் ஐயா. அருமையான கதை.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  14. மனிதனுக்கு மன அழுத்தம் வந்தால் விவேகம் அவனைவிட்டுப் போயவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை சொன்ன விதம் நல்லா இருக்கு. பண விஷயத்துல யாருமேல எப் சந்தேகம் வரும்னே தெரியல.

      நீக்கு
  15. // அஞ்சலையையா நீ சந்தேகப்பட்டாய் என்று அந்தப்பெரியவர் சாட்டையைச் சுழட்டி அடித்தது போல இருந்தது வஸந்திக்கு.//

    எப்படி எல்லாம் லிங்க் பண்ணறீங்க கதையில. வழக்கம் போல் முத்தான கதை.

    பதிலளிநீக்கு
  16. நல்லவங்கலா இருக்குறாங்கதா. பணம்னு ஒன்னுலா அல்லாத்தயும் ஆட்டிபோடுது.

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை. பணம் மனுஷாளை எப்படில்லாம் ஆட்டி வைக்கறது. அது ஆட்டி வைக்கிறபடி ஆடறவாளும் இருக்காளே.
    பணத்துக்கு அஞ்சலையைத் தெரியுமா பெர்யவரைத்தெரியுமா. .

    பதிலளிநீக்கு
  18. அஞ்சலை - நேர்மையாக இருக்கவும் - 'அஞ்சலை'. மனம் கவர்ந்த கதை.

    பதிலளிநீக்கு

  19. “நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” எனும் வள்ளுவரின் வாக்கினை மெய்யாக்குவதுபோல் இவர்களுக்காக பெய்யெனப் பெய்த மழையுடன் கதையை முடித்தது அருமை!.

    கதையைப் படைத்த கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

      தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  20. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 33

    அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8.html

    பதிலளிநீக்கு
  21. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-33-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-33-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-33-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  22. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  23. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 23.06.2021

    அருமை, ஒரு ஏழை எவ்வளவு நேர்மையான யதார்த்த மனிதராக இருந்தாலும் உலகம் எப்போதுமே சந்தேக கண் கொண்டே பார்க்கும் என்பதும் எதார்த்தமான ஒன்றே. ஏழைகள் எப்போதும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மீண்டும் பாடம் நடத்திய ஆசிரியருக்கு நன்றி.          துரை.மணிவண்ணன்.
    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
    - VGK  23

    பதிலளிநீக்கு