’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
VGK-32 ’ சகுனம் '
இணைப்பு:
மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு, மிக அதிக எண்ணிக்கையில் பலரும், மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, வெகு அழகாக விமர்சனங்கள் எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் அவர்களால் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம்:
ஐந்து
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ள விமர்சனம் - 1
“சகுனம்” என்ற தலைப்பில் கதை. தலைப்பின் கீழே கதை துவங்கும் முன்பு ஒரு பூனை இடமிருந்து வலமாக ஓடும் படம் வேறு. கதையைப் படிக்கத் தூண்டி விறுவிறுப்பைக் கூட்டிவிடுகிறது. தெளிவான நடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எளிய சொற்செறிவுடன், ஒன்றன் பின் ஒன்றாய், நிகழ்வுகளின் கோர்வையாய், நிதர்சனத்தை அறிய வைக்கும், உள்ளத்தை உருகவும், உறையவும் வைக்கும் விதமாய் படைக்கப் பட்டுள்ளது. ஒரு உண்மைச்சம்பவத்தின் வெளிப்பாடோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.
சகுனம் குறித்து நான் படித்த சில தகவல்களை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.
மக்களிடையே மண்டிக்கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சகுனம் பார்ப்பதும் ஒன்று. இதனால் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான பாதிப்புகளை விளக்கி, இதுகுறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஒரு நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையேற்படுத்தும் நல்லதொரு சகுனமாகவும் தெரிகிறது.
உலகளவில் அனைத்துப் பண்பாடுகளிலும் சகுனம் பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. இது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். தமிழில் இதை நிமித்தம் என்பர். அரசவையில் நிமித்திகன் ஒருவன் இருப்பான். அவன் சொல்படிதான் மன்னன் நடப்பானாம். நம் நாட்டிலும் சகுனம் பார்க்கும் பழக்கம் மெத்தப் படித்தவர்கள் மத்தியிலும் இருக்கிறது. சில பழமொழிகள் சகுனம் சார்ந்தவையாக இருப்பதிலிருந்து இதன் பழமையைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தச் சகுனம் தனிமனித வாழ்வில் மட்டும் செல்வாக்குச் செலுத்தவில்லை. மாறாக, நமது உள வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.
“சகுனம் என்பதற்கு 'பக்ஷி'என்பது அர்த்தம். பக்ஷிகளால் ஏற்படும் நிமித்தங்களுக்குத்தான் சகுனம் என்று பெயர். ஒரு பூனை குறுக்கே போனால் அது நிமித்தம். கருடன் குறுக்கே போனால் அது சகுனம்.
'நிமித்தம்'என்பதிலேயே, நாம் 'சகுனம் பார்ப்பது'என்று சொல்வதிலுள்ள மற்ற எல்லாம் வரும். Omen என்று பொதுவாகச் சொல்வது நிமித்தம்தான்.
நிமித்தம் என்பது அதுவே பலனை உண்டாக்குவதில்லை; இன்னொன்று நிச்சயம் பண்ணிவிட்ட பலனை இது வெளிப்படத் தெரிவிக்கிறது என்றே ஆகிறது. இதே போல, நம்முடைய பூர்வகர்ம பலனைத்தான் நிமித்தங்கள் யாவும் தெரிவிக்கின்றன. “
-நன்றி தெய்வத்தின் குரல்.
“சகுனம் பார்ப்பது என்பது மனதில் உள்ள பய உணர்வு மிகுதியையும், தன்னம்பிக்கைக் குறைபாட்டையும் காண்பிக்கிறது” என்பது என் தாழ்மையான கருத்து.
இந்தக் கதையின் நாயகனான சிவராமன் மூலம் கதாசிரியர் மேற்சொன்ன கருத்துகளை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், சகுனம் பார்ப்பதில் நம்பிக்கையுடையவர்கள் குறைந்தபட்சம் அடுத்தவர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மிக அழகாக உணர்த்திவிடுகிறார்.
இந்த உலகத்தின் இயக்கத்தில் உயிர்களின் தோற்றமும், மறைவும் மனிதர்களின் செயல்களுக்கு அப்பாற்பட்டவை. நம்முடைய வாழ்நாள் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். இதையே கம்பன், எல்லாமாய் நின்று, அலகிலா விளையாட்டாய் அனைத்தையும் நடத்தி வருவது தெய்வத்தின் அருளேயன்றி, வேறொன்றும் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
அன்றாட நிகழ்வுகளில் நாம் பின்பற்றிவரும் சாஸ்திர சம்பிரதாயங்களை கதையின் துவக்கத்திலிருந்து ஆங்காங்கே அழகாக ஆசிரியர் கதையின் போக்கிலேயே விவரித்துவிடுகிறார்.
புனிதமான நாட்களில் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், அது சார்ந்த நம்பிக்கைகள், சுகமோ, துக்கமோ அந்தந்த நிகழ்வுகள், தருணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளூம் மனப்பாங்கு, பிறர் மனம் புண்படா வண்ணம் நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை விளக்குதல் அருமை!
எண்பது வயதைக் கடந்த ஶ்ரீமதிப்பாட்டி, தன் கணவரோடு தீர்க்கசுமங்கலியாக வாழ்ந்த காலத்திலும் கணவரோடு சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று காவிரியில் நீராடி, மங்கலகரமாக வலம் வந்தவர். காலத்தின் கோலத்தால் கணவனை இழந்தாலும், வயோதிகத்தையும் பொருட்படுத்தாது, கட்டை பிரம்மச்சாரியான, 50 வயதான தன் இரண்டாவது மகனின் துணையுடன், காவிரியில் நீராடும் வழக்கத்தைக் கடைபிடித்து, திருநீறு தரித்து சிவப்பழமாகத் திரும்புவதாகக் காட்டி, வாழும் முறையில் எளிமையாகவும், உடல் வலிமையைவிட உள்ளஉறுதி கொண்டவர்களாய்த் திகழ்ந்த தலைமுறையை வெளிப்படுத்துகிறார்.
தனிமனித ஒழுக்கத்தில், சமய நெறிமுறைகளைப் பின்பற்றும் ஒருவராக சிவராமன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஶ்ரீமதிப் பாட்டியிடம், சகுனம் பார்ப்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை என்றும் திர்க்கசுமங்கலியாக வாழ்ந்து, கணவனை இழந்தபின்னும், ஆசார அனுஷ்டானங்களைத் தவறாமல் பின்பற்றி வாழ்ந்துவரும் அவர்கள் தன் எதிரில் வருவதை ஒரு நல்ல சகுனமாகவே எடுத்துக் கொள்வதாகவும், வழிவிட்டு விலகி நிற்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் உரைப்பதன் மூலம் இந்த அவசர, விஞ்ஞான உலகத்தில் இத்தகு மூட நம்பிக்கைகளை வளர்த்து, அடுத்தவர் உள்ளத்தையும் பாதிக்கும் வண்ணம் நடந்து கொள்வது தேவையற்றது என்பதை தெளிவுறுத்திவிடுகிறார்.
அதன்பின்னர், இவர் வேண்டுகோளுக்கிணங்கி ஶ்ரீமதிப்பாட்டி இவர் எதிரில் வர நேர்கையில் எந்தவித தயக்கமும் இன்றி வருவதாகவும், இவரை ஆசீர்வதிப்பதிப்பதாகவும் அமைத்துள்ளார்.
கணவரை இழந்த கைம்பெண்கள் உள்ளத்தில், தாம் எதிர்படுவதால் பிறருக்கு எவ்விதத் துன்பமும் நேரக்கூடாது என்ற எண்ணமும், அதே நேரத்தில் சமுதாயத்தில் இந்த நம்பிக்கையை வைத்திருப்பவர்களால் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலையும் வெளிப்படுத்தும் விதமாக இதை அமைத்த விதம் பாராட்டுக்குரியது.
குடும்பத்தின் நிகழ்வுகளையும் கதையின் போக்கில் சொல்லிப்போனவிதம் அருமையோ அருமை. மகள்களைச் செல்லமாக வளர்ப்பதாய் எண்ணி, சமையல் கூட அறியாத நிலைக்குத் தள்ளுவதை அழகாகச் சாடியுள்ளார்.
மாமியார், மருமகனை மகிழ்விக்க திரட்டிப்பால் செய்து தருவதும், ஶ்ரீமதிப்பாட்டி விழுந்து நினைவற்ற நிலையில் இருப்பதைக் கூறிவிட்டு, சிவராமனின் மனைவி, தன் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்று வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாளை தரிசிக்க விரைவதாகக் கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதும் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் வரிகள்.
தன்னை ஆசீர்வதித்த பாட்டி நினைவற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து மனவருத்தம் அடைவதும், அவருக்கு அந்த நிலையிலும் கொஞ்சம் திரட்டிப்பாலை ஊட்டிவிடுவதும், அந்தப் பாட்டி கொஞ்சம் அதை விழுங்கியதை எண்ணி பூரிப்பதும், பாட்டி மறைந்த செய்தியை அவர்கள் குடும்பத்தாரின் அழுகை சத்தம் கேட்டவுடன் அறிந்து அங்கு விரைந்து, கங்கை நீரை பாட்டியின் மேல் தெளித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து, துன்பத்திலும் பங்கேற்று, கொள்ளிவைத்து முடிப்பது வரை உடனிருந்து, அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உணவளிப்பதும், கதாநாயகன் ஒரு மகனுக்கும் மேலான நிலையில் அந்தப் பாட்டியைக் கவனித்து கரை சேர்த்த புண்ணியத்தைத் தேடிக் கொள்வதாகத் தோன்றுகிறது.
இரண்டாவது மகனின் குணாதிசயத்தை குறிப்பால் உணர்த்தும் வண்ணம், அவன் பாதியளவு திரட்டிப்பால் இருந்த சம்புடத்தை வாங்கிக் கொண்டு சமயலறைப் பக்கம் சென்று அதை முழுவதுமாகத் தின்று தீர்த்து, பாத்திரத்தைத் தேய்த்துக் கொண்டுவந்து ஒப்படைத்து ஏப்பம் விட்டதாகவும், அம்மாவின் நிலை குறித்து விசாரிக்கும்போது, சற்றே அழுகை வரவழைக்க முயற்சித்ததாகக் காண்பித்த விதம் அருமை.
இந்த துக்க நிகழ்வு வெவ்வேறு நபர்களால் எப்படி விவரிக்கப் பட்டது என்பதில் வாழ்க்கைத் தத்துவம் விளக்கப் பட்டுள்ளது. சில நேரங்களில் சில மனிதர்கள் எப்படி தரம் கெட்டு, நன்றி மறந்து செயல் படுகிறார்கள் என்பதும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
கல்யாணச் சாவாகப் பார்க்கும் நிலையில் சிலர். வைகுண்ட ஏகாதசியில் மரணிக்கும் பாக்கியம் கிடைத்ததாகச் சிலர். ஆனால் நன்றி கெட்ட இரண்டாவது மகனோ காலையில் குளிக்கக் கிளம்பும் போது சிவராமன் எதிர்ப்பட்டதால் மட்டுமே இந்த துக்க நிலை ஏற்பட்டதாகக் கூறும் போது, நன்றி கெட்ட மாந்தரடா! நானறிந்த பாடமடா” என்ற எண்ணத்தை சிவராமனின் உள்ளத்தில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் ஏற்படுத்திவிடுகிறார்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்” எனும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நடக்கும் சிவராமன் பாத்திரம், “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி! மனிதன் எதையோ பேசட்டுமே, மனதைப் பார்த்துக்கொள் நல்லபடி” எனும் வரிகளை நினைவு படுத்திவிடுகிறது.
நிலையாமையை உணர்த்தும் விதத்தில் அமைத்த வரிகள்
“தொடர்ந்து எரியும் தீபத்தில் எண்ணெயோ அல்லது திரியோ ஏதாவது ஒன்று
தீர்ந்து போவது இயற்கை தானே! அதுபோல வயதான தம்பதியினரில், யாராவது
ஒருவர் மற்றொருவரைவிட்டுவிட்டு, முன்னால் போவதும், தவிர்க்க முடியாத
ஒரு இயற்கையின் நியதி தானே!
நறுக்குத் தெரித்தாற்போல் பொட்டில் அறையவைக்கின்றன.
நன்றி கெட்ட மகனுக்கு பாடம் புகட்டும் வகையில் மூத்த மருமகள் பாத்திரம் உரைக்கும் வரிகள்
”எல்லாம் அதுஅது தலைவிதிப்படி நடக்க வேண்டிய நேரத்தில், நடந்து கொண்டே தான் இருக்கும். எம தர்மராஜாவிடமிருந்து யாரும் தப்பவே முடியாது. ஏதோ இந்தக்கிழவி தன் காரியங்களைத் தானே பார்த்துக்கொண்டு, கடைசிவரை வைராக்கியமாக இருந்து, டக்குனு மகராஜியாப் போய்ச்சேர்ந்துட்டா. யாருக்கும் கடைசிவரை எந்த சிரமமும் கொடுக்கவில்லை”
எத்தனை உண்மை!
தன் துன்பம் பாராமல் பிறர்க்குழைத்த சிவராமனுக்கு ஶ்ரீமதிப்பாட்டியின் ஆசி துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றிகெட்ட பிரம்மச்சாரியின் வார்த்தைகளைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இத்தகு கதையைப் படைத்த ஆசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!
-காரஞ்சன்(சேஷ்)
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:
திரு. E.S. SESHADRI அவர்கள்
திரு. E.S. SESHADRI அவர்கள்
Thanks a Lot My Dear Mr. Seshadri
- vgk
தாங்கள் எட்டியுள்ள தொடர்ச்சியான
இந்த எட்டாவது வெற்றியும்
நல்ல சகுனம் தானே ! :)
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இந்த எட்டாவது வெற்றியும்
நல்ல சகுனம் தானே ! :)
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ள விமர்சனம் - 2
சகுனத்தடை என்ற பெயரால் நம் சமூகத்தில் கைம்பெண்களுக்கு தரப்படும் அவமரியாதையைப் போக்கும் விதமாக கதையின் நாயகன் சிவராமன் பேசுவது முற்போக்கில் சேர்த்தியோ இல்லையோ தெரியாது, ஆனால் தங்களைப் பிறர் சகுனத் தடையாக எண்ணுவதால் தங்களைத் தாங்களே தாழ்த்தி உளம் சோரும் ஸ்ரீமதி பாட்டி போன்ற கைம்பெண்களுக்கு ஒரு பெரும் ஆறுதலையும் மனச்சாந்தியையும் தரும் என்பது உண்மை.
ஆசிரியர் குறிப்பிடுவது போல சில திருமணங்களில் பெண்ணின் அல்லது மாப்பிள்ளையின் தாயார் விதவையாக இருந்தால் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தாலும் மணவறைக்கு வந்து மணமக்களை ஆசிர்வதிக்க மாட்டார்கள். மணமக்கள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று தீர்க்காயுசுடன் வாழவேண்டும் என்று நெஞ்சம் நிறைந்து வாழ்த்துபவர்கள் அவர்களைத் தவிர வேறு யாராய் இருக்கமுடியும்?
மனதார வாழ்த்துபவர்கள் கூட மணவறையில் வந்து வாழ்த்தத்தயங்குவார்கள். காரணம் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயம். அந்த பயத்தை விடவும் அப்படி நடந்துவிட்டால் ஊரார் வாயில் தான் அகப்பட்டு இழப்பின் துயரத்தை விடவும் கூடுதல் துயரத்தை அனுபவிக்கவேண்டுமே என்ற கலவரம்தான் அதிகமாக இருக்கும்.
இங்கு சிவராமன், ஸ்ரீமதி பாட்டியிடம் அவர் எதிரில் வருவதை சகுனத்தடையாகவே தான் பார்ப்பதில்லை என்கிறார். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் இவன் ஒப்புக்கு சொல்கிறான் என்றோ அல்லது இவன் சகுனம் பார்ப்பதில்லை என்றாலும் ஒருவேளை சகுனம் பலித்து ஏதேனும் விபரீதம் உண்டாகிவிடுமோ என்றோ பாட்டிக்கு உள்ளூர கவலை ஏற்படலாம். அந்தக் கவலையும் அவருக்குக் கூடாது என்று எண்ணும் சிவராமன், தான் தினமும் உச்சிப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டும், அனுமன் ஸ்லோகம் சொல்லிக்கொண்டும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பண்ணிக்கொண்டும் போவதாக சொல்லி கூடுதல் நம்பிக்கை வார்க்கிறார். அதனால் பாட்டி எதிரில் வருவதால் தனக்கு எதுவும் ஆபத்தோ அசம்பாவிதமோ நேராது என்றும் அவர்கள் கவலையில்லாமல் இருக்கலாம் என்றும் நம்பிக்கையைக் கொடுக்கிறார். பாட்டியிடமிருந்து வாழ்த்தும் பெறுகிறார்.
கதையின் ஆரம்பத்திலேயே ஸ்ரீமதி பாட்டி பற்றியும் சகுனத் தடை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுவிடுவதால் அடுத்தடுத்தப் பத்திகளை வாசிக்கையில் சிவராமனுக்கு நேரப்போகும் ஏதோவொரு அசம்பாவிதத்தை எதிர்பார்த்தபடியே இருக்கிறது மனம். ஆனால் முற்றிலும் தலைகீழாக, ஸ்ரீமதி பாட்டிக்கே படித்துறையில் கால்தவறி விபத்து ஏற்பட்டுவிடுகிறது. இது வாசகர் எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.
எண்பது வயது தாண்டிய நிலையிலும் வெய்யிலோ, மழையோ, பனியோ, குளிரோ பாராது, வருஷம் முழுவதும் விடியற்காலம் நாலு மணிக்குள் எழுந்து, ஐந்து மணிக்குள் கிளம்பி முதல்மாடியிலிருந்து படியிறங்கி (லிப்ட் ஆறுமணிக்கு மேல்தான் இயங்குமாமே) போகவர சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே போய் காவிரி ஸ்நானம் செய்துவிட்டு சொட்டச்சொட்ட ஈரத்துணியுடன் வரும் ஸ்ரீமதி பாட்டியை வர்ணிக்கும்போதே நமக்கும் அவரிடத்தில் பலத்த அபிமானம் வந்துவிடுகிறது.
அப்படிப்பட்டவரை நிதமும் தரிசிக்கும் சிவராமனுக்கு அவருடைய மரணப் படுக்கை அதிர்ச்சியையும் மிகுந்த மன வருத்தத்தையும் தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பாட்டியின் வயிற்றில் பிறந்து, பாட்டியுடனேயே வாழ்ந்த இரண்டாவது மகனுக்கு அந்த ஆற்றாமை இல்லை என்பது வியக்கவைக்கிறது. பரிமாறியது போக மிச்சமிருந்த திரட்டுப்பால் சம்புடத்தைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு போய் முழுவதையும் வழித்துத் தின்றுவிட்டு பாத்திரத்தைக் கழுவிக் கொண்டுவந்து கையில் கொடுத்த நிகழ்வே சான்று. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். இந்தப் பிள்ளையோ தாய் சாகக்கிடக்கும் நிலையிலும் தன் வயிறு ஒன்றே பிரதானம் என்பது போல் அல்லவா நடந்துகொண்டது.
அது மட்டுமா? சிவராமன் குறிப்பிடுவது போல் வயதான தாயாரை கவனமாக கையைப் பற்றி அழைத்துவரத் துப்பில்லாத அவர், சிவராமன் எதிரில் வந்ததால்தான் தன் தாயாருக்கு இப்படியொரு துர்பாக்கியம் ஏற்பட்டுவிட்டதாக கூறுவது அவருடைய குறுகிய மனத்தையே காட்டுகிறது. ஒருவேளை அண்ணன் அதைக் குத்திக்காட்டி விடுவாரோ என்ற பயத்தில் முந்திக்கொண்டு சகுனத்தைக் குறை கூறுகிறார் போலும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஸ்ரீமதி பாட்டியே முன்னால் வரத் தயங்கிய போதும் அவரைத் தேற்றி சகுனத்தைப் பொருட்படுத்தாத சிவராமனின் பெருந்தன்மையான குணம் எங்கே? மிகுந்த நல்லெண்ணத்தோடு எல்லா உதவிகளும் செய்யும் ஒருவரை சகுனத்தைக் காரணம் காட்டி காயப்படுத்தும் அந்த இரண்டாவது மகனின் அற்ப குணம் எங்கே? சகுனத்தில் நம்பிக்கை உள்ளவராகவே இருக்கட்டும். ஆனால் எங்கு எதைப்
பேசுவது என்ற விவஸ்தை வேண்டாமா?
இப்படியா சம்பந்தப்பட்டவரின் காதுபடவே பேசுவது?
இவ்வளவுக்கும் அவர் வீட்டு சாப்பாட்டை உண்டுவிட்டு அவர் வீட்டு
அறையிலேயே உட்கார்ந்துகொண்டு அவரைப் பற்றியே அவதூறாகப் பேசுவதென்றால்
எவ்வளவு அநாகரிகம்?
பேசுவது என்ற விவஸ்தை வேண்டாமா?
இப்படியா சம்பந்தப்பட்டவரின் காதுபடவே பேசுவது?
இவ்வளவுக்கும் அவர் வீட்டு சாப்பாட்டை உண்டுவிட்டு அவர் வீட்டு
அறையிலேயே உட்கார்ந்துகொண்டு அவரைப் பற்றியே அவதூறாகப் பேசுவதென்றால்
எவ்வளவு அநாகரிகம்?
அந்த நொடியே சிவராமன் மனத்தில் அந்த இரண்டாவதுபிள்ளையின்
மீது அதுவரைஇருந்த மதிப்பு சரசரவென்று சரிந்துபோய்விட்டது
மீது அதுவரைஇருந்த மதிப்பு சரசரவென்று சரிந்துபோய்விட்டது
என்பதை அடுத்தடுத்த வரிகளில் அவரைக்குறிப்பிடும்போதெல்லாம்
‘தடிப்பிரும்மச்சாரி’ என்றே குறிப்பிடுவதைக் கொண்டு அறியலாம்.
இப்படி பேசிய மனிதருக்கு இனி சிவராமன் தரப்பிலிருந்து எந்த
உதவியாவது கிடைக்குமா? செய்யத்தான் யாருக்கும் மனம்வருமா?
என்னதான் நெருங்கிய உறவுகள் ஆயிரம் பேர் இருந்தாலும் ஒரு
அவசர ஆத்திரத்துக்கு உறவுகளை விடவும் அக்கம்பக்கத்தவர்களைத்
தான் பெரிதும் நம்பியிருக்கிறோம். இதோ, மூத்த பிள்ளை
வருவதற்குள் பாட்டிக்குச் செய்யவேண்டியவற்றை உடனடியாக
செய்ததுயார்? சிவராமன்தானே?
பாட்டியின் ஈமச்சடங்குக்குப் பின் உற்றார் உறவினர்
அக்கம்பக்கத்தவர் அனைவரையும் அழைத்து விருந்து
தயாரித்துப் பரிமாறியது சிவராமன் குடும்பத்தினர்தானே?
தவளையும் தன் வாயால்கெடும் என்பதுபோல் சகுனத்தைக்
காரணம் காட்டி ஒரு நல்ல மனிதரைப்பகைத்துக்கொண்ட
அந்த இரண்டாவது மகனின் செயலை
வருவதற்குள் பாட்டிக்குச் செய்யவேண்டியவற்றை உடனடியாக
செய்ததுயார்? சிவராமன்தானே?
பாட்டியின் ஈமச்சடங்குக்குப் பின் உற்றார் உறவினர்
அக்கம்பக்கத்தவர் அனைவரையும் அழைத்து விருந்து
தயாரித்துப் பரிமாறியது சிவராமன் குடும்பத்தினர்தானே?
தவளையும் தன் வாயால்கெடும் என்பதுபோல் சகுனத்தைக்
காரணம் காட்டி ஒரு நல்ல மனிதரைப்பகைத்துக்கொண்ட
அந்த இரண்டாவது மகனின் செயலை
மூடநம்பிக்கை என்பதா? முட்டாள்தனம் என்பதா?
இந்தக் கதையிலும் சில சம்பிரதாய நம்பிக்கைகள் உதாரணத்துக்கு வாசலில் தண்ணீர் தெளிக்காமல், காலையில் வீட்டை விட்டு யாரும் எங்கும் வெளியே புறப்பட்டுப் போகக்கூடாது, இறந்தவர் வீட்டில் சொல்லிக்கொண்டு போகக்கூடாது போன்ற சில சம்பிரதாய வழக்கங்கள் ஆங்காங்கே காட்டப்பட்டிருக்கின்றன என்றாலும் அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் உண்டாகாது என்பதால் பிரச்சனையில்லை.
அடுத்தவரை பாதிக்காதவரை எந்த சாத்திர சம்பிரதாயமும் தொடர்வதில் பாதகமில்லை. பாதிக்கும் என்று தெரிந்தும் தொடர்வது துளியும் நியாயமில்லை. இக்கருத்தினை அழகான கதை மூலம் அறியத்தந்த கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியவர் :
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்
வலைத்தளம்: கீதமஞ்சரி geethamanjari.blogspot.in
-vgk
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
[ Hat Trick Prize Amount will be fixed later according to their
further Continuous Success in VGK-33 and VGK-34 ]
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கான இணைப்புகள் இதோ:
காணத்தவறாதீர்கள் !
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-34
VGK-34
’ பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ’
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
தொடர்ந்து முதலிடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள். இம்முறை முதலிடத்தை கீதமஞ்சரியோடு பகிர்ந்து கொண்ட திரு சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குGeetha SambasivamSeptember 7, 2014 at 4:21 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தொடர்ந்து முதலிடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள். //
தாங்கள் சொல்வது மிகவும் சரியே. கடந்த VGK-29 முதல் VGK-32 வரை தொடர்ச்சியாக நான்கு முறை முதலிடம் பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
//இம்முறை முதலிடத்தை கீதமஞ்சரியோடு பகிர்ந்து கொண்ட திரு சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்.//
சென்ற முறையும்கூட [VGK-31 இல் கூட] , இவா ரெண்டு பேரும்தான் முதலிடத்தைப்பகிர்ந்து கொண்டுள்ளார்களாக்கும்.
இதுவரை VGK-10, VGK-11, VGK-23, VGK-29, VGK-31 and VGK-32 ன்னு ஆறுமுறை இவாளே முதல் பரிசினை பகிர்ந்து கொண்டுள்ளார்கள், என சரித்திரம் சொல்லுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரு. சேஷாத்ரி இருக்காரே, இவர் VGK-25 முதல் VGK-32 வரை தொடர்ச்சியா 8 முறை வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கார், பார்த்தேளோ.
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
பின்னூட்டம் போச்சா இல்லையானு தெரியலை! :)
பதிலளிநீக்குGeetha Sambasivam September 7, 2014 at 4:21 PM
நீக்கு//பின்னூட்டம் போச்சா இல்லையானு தெரியலை! :)//
ஆஹா, இன்னிக்கு என்னமோ அதிசயமா வந்திடுச்சு ! ;)
[ஒரு ஈ ..... காக்காயையும் காணுமேன்னு நினைச்சேன்.
அதனால் தான் காக்கா ஊஷ் ஆகவில்லை போலிருக்கு. :) ]
- VGK
முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும்
பதிலளிநீக்குதிருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் ,.
திரு சேஷாத்ரி அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கள்.!
முதலிடம் பெறும் நண்பர் திரு சேஷாத்ரி அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குசகுனம், நிமித்தம் என்ற பெயர்களில் சிலர் செய்யும் செயல்கள் ரொம்பவே படுத்துகின்றன.
சிறு வயதில் விஜயவாடா நகருக்கு பள்ளி விடுமுறையின் போது சென்று வருவதுண்டு. அப்போது நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் எனது மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளதே.....
//அடுத்தவரை பாதிக்காதவரை எந்த சாத்திர சம்பிரதாயமும் தொடர்வதில் பாதகமில்லை. பாதிக்கும் என்று தெரிந்தும் தொடர்வது துளியும் நியாயமில்லை. இக்கருத்தினை அழகான கதை மூலம் அறியத்தந்த கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு// அருமையாக விமர்சனம் எழுதி பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்குப் பாராட்டுகள்!
என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது மகிழ்வளிக்கிறது. தொடர்ந்து 8 ஆவது வெற்றி என்பதும் ஊக்கமளிக்கிறது. வாய்ப்பளித்த திரு. வைகோ சார் அவர்களுக்கு என் நன்றி! அவ்வப்போது குறிப்புகள் வழங்கி விமர்சனம் எழுதுவதை செம்மைப்படுத்தும் நடுவருக்கும் என் உளமார்ந்த நன்றி! வாழ்த்திய வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் நன்றி!
பதிலளிநீக்குவெற்றி பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!! விமர்சனங்கள் அருமை!!
பதிலளிநீக்குநண்பர் சேஷாத்ரி மற்றும் சகோதரி கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்ற சேஷாத்ரி சார் அவர்களுக்கும், கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கோபு ஸார்.
பதிலளிநீக்குஉங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி
Ranjani Narayanan September 8, 2014 at 5:05 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//வணக்கம் கோபு ஸார். உங்களுக்கு ஓர் விருது பரிந்துரைத்திருக்கிறேன். தயவு செய்து, வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
நன்றி,
அன்புடன்,
ரஞ்சனி//
ஆஹா, மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
தற்சமயம் புறப்பட்டு பெங்களூருக்கு நேரில் வர செளகர்யமில்லாமல் உள்ளது. அங்கு நம்மாத்திலேயே அது தங்கள் கஸ்டடியிலேயே பத்திரமாக இருக்கட்டும்.
பிறகு அவ்விடம் ’தும்கூர் புளி’ வாங்க வரும்போது நேரில் சந்தித்து வாங்கிக்கொள்கிறேன்.
ஏற்கனவே பெங்களூர் விஜயநகர் ‘இந்திரபிரஸ்தா” ரெஸ்டாரண்டில் தாங்கள் எனக்குத் தரவேண்டிய ட்ரீட் ஒன்று நெடுநாட்களாகப் பெண்டிங்கில் உள்ளது.
அதையும் சேர்த்து முடித்து விடுவோம்.
நான் நடுவில் சென்ற வருடம் அங்கு பெங்களூருக்கு வந்து, தங்களுக்கு போன் செய்தேன் ..... கை வசம் சூப்பரான முரட்டு சைஸ் ஏ.ஸி. காரும் 2 நாட்களுக்கு முழுக்க முழுக்க வாடகைக்கு எடுத்து வைத்திருந்தேன்..... ஆனால் அதுசமயம் தாங்கள் சென்னையில் இருப்பதாகச் சொல்லி விட்டீர்கள் - நினைவிருக்கும் என நினைக்கிறேன்.
மீண்டும் நன்றிகள்.
அன்புடன் கோபு
’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html
அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
கதையின் ஒவ்வொரு வரியும் நிஜத்தில் நடப்பதைப் போன்ற உணர்வை தந்தது. ஸ்ரீமதி பாட்டி இறந்த சமயம்... நடந்த நிகழ்வுகளை படிக்கும் போது, ஒரு தத்ரூபம்... ஒரு பேரமைதி, மனத்துள் ஒரு அதிர்வு கூடவே இருந்தது.
நன்றி கெட்ட மனிதனின் வார்த்தைகள் சுட்டபோது இதயம் அடைந்த உணர்வு கூட தொற்றிக் கொண்டது.
திரட்டுப் பாலின் ருசியும், சமையலின் ருசியும், அங்கங்கே மனத்தைப் பறிகொடுக்க வைத்தது. பசியையும் தூண்டியது. எழுத்தால் உணர்வுகளைத் தூண்டும் ரகசியம் கதை முழுக்க தெரிகிறது... இது கதையல்ல நிஜம்... என்று.!
இது தான் உங்கள் வெற்றி. வாழ்க..!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
முதல் பரிசினை வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும், திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும், திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் வாழ்த்துகல்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும், திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி கீதமஞ்சரி திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி கீதமஞ்சரி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதிகீதமஞ்சரிதிரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதொடர் வெற்றிகளுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்கு