என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 20 செப்டம்பர், 2014

VGK-34 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் !


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-34  


 ’ பஜ்ஜீன்னா .... 


 பஜ்ஜி தான் !’  



இணைப்பு:





  

 



    



தமிழ்ச் சிறுகதை உலகின் திருப்புமுனையாக இருந்த சிறுகதைச் சக்ரவர்த்தி புதுமைப்பித்தனின் சிறுகதையைத் தான் படிக்கிறோமோ என்று திகைக்க வைக்கும் ஆரம்பம்.   அந்த ராட்சஸ பம்ப் ஸ்டெளவ் பற்ற வைத்து பரபரவென்று எரிகையில் அந்த ஓசையை உணருகிற மாதிரியேவான எழுத்து. எண்ணெய்க் கொப்பரையின் ஃபர்னஸ் அனல் நம் மேலேயே அடிக்கிற மாதிரி இருக்கிறது. பார்வை லென்ஸ் ஒன்றையும் விட்டு வைக்காமல் பார்த்து ரசித்து உள்வாங்கியது எழுத்தாய் வெளிப்பட்டிருக்கிறது.  தவம் கிடந்தாலும் எல்லோராலும் இந்த அளவுக்கு நேரேட் பண்ண முடியாது என்பது வாஸ்தவம் தான்.



    -- ஜீவி 



      



மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




நடுவர் திரு. ஜீவி






நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 






    




இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 1



தலைப்பு மற்றும் படத்தைப் பார்த்ததும், அதுவும் செட்செட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிந்து வைத்த வெங்காயமும், வாழைக்காயையும் பார்த்த பின்  பதிவை விட்டுப் போக மனமே வரவில்லை. ஆனால் அப்படியும் போனேனே ! நேராக சமையலறைக்குப் போய் நானும் பஜ்ஜி செய்து சாப்பிடத் தான். ஆனாலும்  படத்தில் காட்டியது போல், கோபு சார் எழுதியது போல்  எனக்கு பஜ்ஜி வந்திருக்குமா என்பது சந்தேகமே. படிக்கும் போதே சாப்பிடத் தூண்டுகிற மாதிரியல்லவா எழுதியிருக்கிறார்  ஆசிரியர்.


கதையை விமர்சிக்காமல் மனம் பஜ்ஜி நோக்கி சென்று விட்டதே. அதுவே கதையின் வெற்றி என்று சொல்ல வேண்டும்.


இதோ விமரிசனத்திற்கு வருகிறேன்.

கதையின் ஆரம்பத்தில் கடை இருக்கும் இடத்தை கதாசிரியர் விவரிக்கும் போது எனக்கு சற்று சந்தேகமே வந்தது.  பஜ்ஜி பதிவு படிக்கும் போதே எங்காவது  வரலாற்றுக் கதைப் பக்கம் அகஸ்மாத்தாக சென்று விட்டோமோ என்று பார்த்தேன். இல்லை  பஜ்ஜி கதை தான். பஜ்ஜி விற்கும் தெருவை அப்படி  அலங்காரமாய்  விவரிக்கிறார் ஆசிரியர். அதோடு எத்தனை லாவகமாக  பஜ்ஜி விற்கும்  தெருவிற்கு அழைத்து செல்கிறார் ஆசிரியர். 


பஜ்ஜியைக் கதானாயகானாக எடுத்துக் கொண்டாலும் அதை  ஐந்து நட்சத்திர  ஹோட்டலில் வைக்காமல், தெரு முனைக்குக் கொண்டு வந்து விட்டார் ஆசிரியர். அருகில் குப்பைகள் வேறு. ஆனாலும் பஜ்ஜியின் கதாநாயகன்  அந்தஸ்திற்கு ஒரு குறைவுமில்லாமல்  கதையை நகர்த்தியிருக்கும் விதத்திற்காக   ' சபாஷ்  சார்.! '


இவருடைய கற்பனை  இன்னும் ஜோர் என்று தான் சொல்ல வேண்டும். காய்கறிகளை நறுக்கி வைத்திருக்கும் விதத்தை வர்ணிப்பது, பஜ்ஜிகள் சண்டை போடாமல் பார்த்துக் கொள்வது,  எண்ணெய் கொப்பரையில் பஜ்ஜிகள் நீச்சலடிப்பது, பஜ்ஜிகள் எண்ணெயால்  கண்ணீர் விடுவது, வெந்த பஜ்ஜிகளை பாத்திரத்தில்  வீசுவது என்று இவருடைய கற்பனை மிகவும் ரசித்துப் படித்தேன். பஜ்ஜியை  ஆர்வமுடன்  சாப்பிடலாம், மகிழலாம். ஆனால் படித்தாலே   புன்னகையை வரவழைக்க கோபு சாரால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன்.


தொழிலாளி தானே என்று பஜ்ஜி போடுபவரை ஓரம் கட்டாமல் அவர் தொழில் செய்யும் நேர்த்தியை விவரித்து கை தட்டல் பெறுகிறார் ஆசிரியர். அவர் வேலையை தன் வேலையுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது நம்மையும் சிந்திக்க வைக்கிறது. அவர் சொல்வது சரி தான் என்கிற எண்ணம் மேலோங்குகிறது. 
  

அதற்குப் பிறகு கதாசிரியருடைய மார்கெட்டிங் திறமை பளிச்சென வெளிப்படுகிறது.  அவர் பஜ்ஜிக் கணக்குப் போடும்  சாமர்த்தியத்தில். தேர்ந்த விற்பனையதிகாரியாகி அசர வைக்கிறார் ஆசிரியர்.


பஜ்ஜிக் கடை முதலாளியைப் பற்றி சொல்லி கதையைத் தொடங்க வருகிறார் என்பது நமக்குப் புரிகிறது. கதாசிரியர் தன்னையும் ஒரு கதாபாத்திரமாக  முன் வைக்கிறார் என்றே நினைக்கிறேன்.


பஜ்ஜி முதலாளிக்கு,  கடன் கொடுத்து அவர் பொருளாதாரத்தை  உயர்த்த நினைக்கிறார் வங்கி அதிகாரியான  ஆசிரியர். தெருவுக்குத் தெரு வங்கி தான்., ஆனாலும் தானே முன் வந்து கடன் கொடுக்க நினைக்கும் வங்கி அதிகாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படியும் வங்கி அதிகாரிகள் இருக்கிறார்கள் என்று சொல்லி  ஊக்குவிக்கும் ஆசிரியருக்கு ஒரு ஜே!


கடன் கொடுக்க அதிகாரி நினைத்தாலும் முதலாளி வாங்க மறுக்கிறார். தனக்கு வேண்டாம் என்றும் தேவைப்படும் வேறு ஒருவருக்குக் கொடுக்க சொல்கிறார் பஜ்ஜி முதலாளி. இவருக்குக் கொடுப்பதால் வேறொருவருக்குக் கிடைக்காமல் போகப் போவதில்லை. என்ன இந்த மனிதர் பிழைக்கத் தெரியாதவராய் இருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது.


சின்ன தொழிலதிபராய் விளங்கும் பஜ்ஜி முதலாளி, மேலும் மேலும் முன்னேற வழி வகை இருந்தும் அதை உபயோகிக்கத் தவறியவராய் தான் என் கண்ணிற்குத் தெரிகிறார். இந்தக் காலத்தில் ரிஸ்க்  எடுக்க பயப்படலாமா? அதுவும் தொழில் செய்பவர்கள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த நினைக்க வேண்டும் என்பது  என் கணிப்பு. இங்கே தான்  ஆசிரியரின் கருத்துடன் நான் வேறு படுகிறேன்.


அவர் வங்கி உதவி பெற்று ஒரு சின்ன ஹோட்டல் ஆரம்பித்தார் என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். பஜ்ஜி முதலாளியின் நல்ல மனதைக் காட்ட வேறு உபாயம் கையாண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது கோபு சார். இது என் தனிப்பட்ட மாற்றுக் கருத்து மட்டுமே. இப்பொழுதெல்லாம் தொழில் தொடங்க  ஆசைப்டுபவர்கள் அதிகம். அதற்கு ஏற்றார் போல்  சமுதாய சூழ்நிலைகளும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். அவர் தொழில் அபிவிருத்தி செய்திருந்தார் என்று சொல்லியிருந்தால் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அமைந்திருக்குமே  என்கிற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.


தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் சிறிய அளவில் ரிஸ்க் எடுக்கும் மனோபாவம் வேண்டும் என்றும் நினைக்கிறேன். 


அதோடு, இவருடைய பொருளாதார முன்னேற்றத்தினால் கண்டிப்பாக பலர் வாழ்வில் இவர் வெளிச்சத்தைக் காண்பித்திருக்க முடியும். அந்த அக்கறையில் வெளி வந்த வார்த்தைகள்  இவை. அவ்வளவே.

விமரிசனம் எல்லாம் இருக்கட்டும்  கோபுசார்.. 


எங்கே இருக்கிறது இந்த பஜ்ஜிக் கடை. முகவரி தாருங்கள். சென்று சாப்பிட வேண்டும். அப்படி அருமையாய்  இருக்கிறது பஜ்ஜி, பார்க்கவும், படிக்கவும்.


பாராட்டுக்கள்!
 

இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 

  


திருமதி 


 இராஜலக்ஷ்மி பரமசிவம்  



அவர்கள்


வலைத்தளம்: “அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.





    



இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 2




முச்சந்தியில் அமைந்த பஜ்ஜிக்கடையொன்றை நம்கண்முன் நிறுத்தி, விதவிதமான பஜ்ஜிகள் தயாரிப்பை படங்களுடன் விவரித்து, கதைக்குள் நம்மைக் கவர்ந்திழுத்துவிடுகிறார் ஆசிரியர்.


மாவிற்குள்  பலவித காய்கறிகள் மறைந்து பஜ்ஜிக்குச் சுவைகூட்டுவதுபோல், எளிமையான பாத்திரங்கள் வாயிலாக வாழ்வியல் தத்துவங்களை விளக்கிச் செல்லும் அருமையான கதையைப் படைத்த ஆசிரியருக்கு முதற்கண் என் பாராட்டுகள்.


குப்பைத்தொட்டி ஒன்று கடையின் அருகாமையில் இருந்தபோதிலும், பஜ்ஜியின் தரமும், மணமும் அனைவரையும் கவர்ந்ததாகக் காண்பித்த விதம் அருமை. அட்டெண்டர் பாத்திரத்திற்கு மட்டும் ஆறுமுகம் எனப் பெயரிட்டு மற்ற பாத்திரங்களை பெயரில்லாமலேயே படைத்திருந்தாலும் அவை கதாசிரியரின் பெயர் சொல்லும் பாத்திரங்களாக அமைகின்றன.


“வாழ்க்கை வாழ்வதற்கே” என்பார்கள். வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். அதில் திட்டமிட்டு, தெளிவான சிந்தனையுடன் களமிறங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை தான் அறிந்துகொண்ட பாடமாகக் கதாசிரியர் விளக்கியுள்ளார். பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பாதை தெரிந்தால் பயணம் தொடரும் என்பார் கவியரசர். எண்ணித் துணிக கருமம் என்கிறார் வள்ளுவர்.


வாழ்வாதாரத்திற்கு முக்கியத் தேவை பொருளீட்டல். பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை எனும் கருத்து இதை வலியுறுத்துகிறது. ஆனால் எவ்வழியில் பொருள் ஈட்டுகிறார்கள் என்பதுதான் முக்கியம். தன் உழைப்பினால் பொருள் ஈட்டுபவர்கள். பிறர் உழைப்பைச் சுரண்டி அறமற்ற வழியில் பொருள் ஈட்டுபவர்கள் என இவர்களை வகைப்படுத்தலாம்.


எவ்விதத்திலாவது பொருள் ஈட்டுவதொன்றே இலக்கு என எண்ணுபவர்க்கு, மனித மனத்தின் அருள் என்பதுஅழிந்துபோகிறது. எத்தகைய குரூரமான வழிமுறைகளையும் பின்பற்றிமானக்கேடான காரியங்களையும் செய்துஅவமானங்களையும் தாங்கிக் கொண்டுபணமீட்டுவதில் வெற்றியடைவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு 
சாதனை படைப்பது அவர்களுக்குப் பழகிவிடுகிறதுஆனால் இது உகந்த வழியல்ல.


வாழ்வியல் பாடத்தை உணர்த்துவதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரமான பஜ்ஜிக்கடை பெரியவர், வாழ்வாதாரத்திற்குத் தம் குலத்தொழிலையே தேர்ந்தெடுத்து அறவழியில் பொருளீட்டுகிறார். அதனால் வாழ்வில் ஒரு நிறைவைப் பெற முடிகிறது. ஓரளவு தன் தேவைகள் நிறைவேறியதும், சேவையாக, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக அதே தொழிலைத் தொடர்ந்து செய்கிறார்.


தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப்போரைக் காண்பதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.


குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.    
            
என்பது பொய்யாமொழியன்றோ? இது இந்த பஜ்ஜிக்கடை பெரியவருக்கு மிகப் பொருத்தமான வரிகள்.


பஜ்ஜிக்கடை நடத்துவதில் உள்ள சிரமங்கள் அத்தனையும் மிக அழகாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. தெருவிளக்குக் கூட வியாபாரத்தைத் தீர்மானிக்கும் காரணியாகக் காண்பித்தது நிதர்சனம்! மாமூல் வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் அனைத்தும் உண்மையே.


பஜ்ஜிக்கடையை ஒரு சிறு தொழிற்சாலையாகக் கற்பனை செய்து, பஜ்ஜி தயாரிப்பவர் அஷ்டாவதானியாகவும், பத்துவிரலில் பத்து கத்தி சுழற்றுபவர்போல் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியவிதம் அருமை., வியாபாரத்தைக் கவனிக்கும் பெரியவர் பயன்படுத்தும் மார்க்கெட்டிங் யுக்திகள், மூலப் பொருட்களின் கையிருப்பு குறித்த கண்காணிப்பு ஆகியவை அருமையாக விளக்கப் பட்டுள்ளன. 


ஒரு தொழிற்சாலையை நிர்வகிக்கும் மேலாளரைப்போலஅனுபவ நுட்பங்களுடனும் 
விவர ஞானத்துடனும் தொழிலில் அவ்விருவரின் நடவடிக்கைகள்அடுக்கடுக்காகச் 
சொல்லப்படுகின்றன.


வர்ணனைகள் கதாசிரியருக்குக் கைவந்த கலை. அவற்றில் மிளிரும் நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

1.   “சூடு தாங்காமல் பஜ்ஜிகள் சிந்தும், கொதிக்கும் எண்ணெய்க்கண்ணீரை   இரும்புச்சட்டியிலேயே வடியவிட்டும்”

2.   சிலர் கொதிக்கும் பஜ்ஜியை விட சூடான தங்கள் கோபத்தை முகத்தில் காட்டியவாறு

என வர்ணிக்கும் இடங்கள் இரசித்துச் சிரிக்க வைக்கும்.


“தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க” 
 என்கிறார் குமரகுருபரர்.


இக்கருத்தை எவ்வளவு அழகாகத் தன் பாத்திரப் படைப்புகளில் வெளிப்படுத்தி வியக்க வைக்கிறார் கதாசிரியர்.


வங்கியில் மேலாளராகப் பணியாற்றுபவர், பஜ்ஜி தயாரிப்பவர் படும் சிரமங்களைப் பார்த்து, குளிரூட்டப்பட்ட அறையில், அமைதியான சூழலில் பணிபுரியும் தனக்குக் கிடைக்கும் சம்பளம் அதிகமோ என மனசாட்சியுடன் பேசுகிறார். பெரியவருக்குக் கடனுதவி அளித்து அவர் தொழிலை விரிவாக்க உதவ எண்ணி அவரை அழைத்துவரச் சொல்லி அட்டெண்டரை அனுப்புகிறார்.


பெரியவரோ, தொழில் மீது கொண்ட பக்தியினால், வியாபாரம் உச்சக் கட்டத்தை அடையும் நேரமாதலால் தம்மால் அச்சமயம் வர இயலாத நிலையை விளக்கி மரியாதை நிமித்தம், நான்கு பஜ்ஜிகளையும் கொடுத்தனுப்புகிறார்.
.

மறுநாள் வீட்டில் வந்து அவரைச் சந்திக்கும் பஜ்ஜிக்கடைப் பெரியவர், தம் தொழில் மூலம் அடித்தட்டு மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரையும் திருப்திப்படுத்த முடிவதையும், தேவைகள் நிறைவேறிவிட்டாலும், சேவையாக இதைத் தொடர்வதாகவும் கூறிவிட்டு, தனக்கு உதவ முன்வந்ததைவிட தன்னைவிட எளியவர்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு, திறமையிருந்தும் வாய்ப்பும் வசதியும் அமையப் பெறாதவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உயர்த்திவிட்டால் புண்ணியமாகும் என உரைப்பது அருமை. இவரும் தம்மின் மெலியாரை நோக்குவதைப் பாருங்கள்.


“விரலுக்கேற்ற வீக்கம்” என்பார்கள். ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப்படுவதை விட, நன்கறிந்த தொழிலில் ஈடுபட்டு, நேர்மையுடனும், ஈடுபாட்டுடனும் உழைத்துப் பொருளீட்டல் நன்மை பல நல்கி உயர்வளிக்கும் எனும் வாழ்வியல் தத்துவத்தை அழகாக உணர்த்தியது பஜ்ஜிக்கடை பெரியவர் பாத்திரம்.


ஒவ்வொருவரும் தனக்குக் கிடைத்துள்ள வசதி, வாய்ப்புகளைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். அப்போதுதான் மன அமைதி உண்டாகும். கவலைகள் நீங்கும். தகுதிக்கு மீறி .புதியதாக நமது தேவைகளை பெருக்கிக் கொண்டு அதை அடைய முடியவில்லையே என கவலை கொள்ளுதல் கூடாது.அதற்காக ஏங்கி பெருமூச்சு விடவும் கூடாது. திட்டமிடாமல், அளவுக்கு மீறி ஆசைப்பட்டு, கடன் வாங்கி, அதனால் துன்பத்தை அனுபவிக்க நேர்வது சரியான பாதை அல்ல என்பதையும் அழகாக பஜ்ஜிக்கடை பெரியவர் வாயிலாக உணர்த்தி “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என விளக்குகிறார் கதாசிரியர்.


இந்த உலகத்தை உற்று நோக்கினால், ஒவ்வொரு படைப்பும் நமக்குப் பாடம் கற்பிக்கும். எளியவரான பஜ்ஜிக்கடைப் பெரியவரோ, நன்கு படித்து பெரிய பதவியில் இருந்தும் பங்குச்சந்தை முதலீட்டில் ஐம்பது இலட்சங்களுக்கு மேல் இழந்து நிற்கும் மேலாளருக்கும் பாடம் உணர்த்திச் செல்கிறார்.  


விமர்சனம் எழுதி முடித்தவுடன் “பஜ்ஜி ரெடி!” என மனைவி அழைக்கவும், பஜ்ஜியைச் சுவைத்தபடி இந்தக் கதையை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டேன். அனைவரும் “பஜ்ஜீனா பஜ்ஜீதான்” எனப் பாராட்டியது எனக்குமட்டுமல்ல கதாசிரியருக்கும் மகிழ்வளிக்கும் என்பதில் ஐயமில்லை!


-காரஞ்சன்(சேஷ்)



 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


திரு. E.S. SESHADRI அவர்கள் 


 வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்) esseshadri.blogspot.com




மனம் நிறைந்த பாராட்டுகள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


     





 


இனிப்பான இரண்டாம் பரிசினை  வென்றதுடன் 


மூன்றாம் முறையாகத் தான் பெற்ற   


 ஹாட்-ட்ரிக் வெற்றியினை நான்காம் சுற்றிலும் 


தக்க வைத்துக்கொண்டுள்ளார்.


திரு. E.S. SESHADRI அவர்கள் 

 

VGK-31 TO VGK-34


  
   




மனம் நிறைந்த பாராட்டுக்கள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 [ Hat Trick Prize Amount will be fixed later according to his

further Continuous Success in  VGK-35 and VGK-36 ]



     


 





மிகக்கடினமான இந்த வேலையை 

சிரத்தையுடன் பரிசீலனை செய்து 

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள  

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 


இரண்டாம் பரிசுக்கான தொகை

இவர்கள் இருவருக்கும் 


சரிசமமாக பிரித்து அளிக்கப்பட உள்ளது.






இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள 


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர  


இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !





  



இந்த VGK-34 போட்டிக்கு வந்திருந்த விமர்சனங்கள் பற்றி 

நடுவர் திரு. ஜீவி அவர்களின் பொதுவான சில கருத்துக்கள் 

23.09.2014 செவ்வாய்க்கிழமையன்று

தனிப்பதிவின் மூலம் வெளியிடப்படும்.




காணத்தவறாதீர்கள் !





    


அனைவரும் தொடர்ந்து ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:





VGK-36  


  ’எலி’ஸபத் டவர்ஸ்  




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:




வரும் வியாழக்கிழமை 


25.09.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 கருத்துகள்:

  1. திருக்குறளை மேற்கோள் காட்டி அழகாய் விமரிசனம் செய்து , இரண்டாம் பரிசினை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கும் திரு. சேஷாத்திரி அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
    என் விமரிசனத்தை பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்த நடுவர் திரு. ஜீவி ஐயா அவர்களுக்கும், பரிசு பெற வாய்ப்பளித்த கோபு சாருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாம் பரிசு வென்ற
    திருமதி இராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்
    திரு. சேஷாத்திரி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. //என்ன இந்த மனிதர் பிழைக்கத் தெரியாதவராய் இருக்கிறாரே என்று தோன்றுகிறது//

    கரெக்ட், இராஜலெஷ்மி மேடம். கதாசிரியரும் இந்தக் கருத்தைச் சொல்வதற்காகத் தான் இந்தக் கதையை எழுதி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட....இந்தக் கோணத்தில் நான் பார்க்கவில்லையே ! சுட்டிக் கட்டியதற்கும், பரிசு வழங்கியதற்கும் நன்றி நடுவர் ஐயா.

      நீக்கு
  4. சகோதரி திருமதி இராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்
    நண்பர் சேஷாத்திரி அவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையாக விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள திருமதி இராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய விமர்சனம் தேர்வாகி இருப்பது மகிழ்வளிக்கிறது. வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கு நன்றி! விமர்சனத்தைத் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி! வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசை வென்ற திரு சேஷாத்ரிக்கும், ராஜலக்ஷ்மிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஹாட் ட்ரிக் அடித்த திரு சேஷாத்ரிக்குச் சிறப்புப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. மனமார வாழ்த்தும் , வாழ்த்தப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலான கோபு சாரின் கதைகள் எந்தக் கருத்தையும் வெளிப்படச் சொல்கிற மாதிரி அமைந்த கதைகள் அல்ல. வாசிப்பவர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்திற்கு ஏற்ப தங்களுக்கு பிடிபடுகிற கருத்தைக் கொள்கிறார்கள். இதுவும் நல்ல கதைக்களுக்கு இலக்கணம் தான்.

    பெரும்மழை பிடித்துக் கொண்டால் இந்த வியாபாரமே அம்போ என்று கதையின் நடுவே ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள். அதான் நூலிழை.

    பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் வங்கியை நாடியிருக்க இந்த மாதிரியான எளியவர்கள் ஏதாவது கொள்கைகளை வைத்துக் கொண்டு ஏமாளிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கதையாக கொள்ளலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. பஜ்ஜி கதையை வாசித்த கையோடு சூட்டோடு சூடாக பஜ்ஜியை செய்து சாப்பிட்டு விட்டு அழகான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.
    \\தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் சிறிய அளவில் ரிஸ்க் எடுக்கும் மனோபாவம் வேண்டும் என்றும் நினைக்கிறேன். \\
    ஆம் சிறிய அளவில். மிகச்சரியான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  12. திருக்குறள், பொன்மொழிகள் வாயிலாக கதையை அழகாக விமர்சித்து இரண்டாம் பரிசு பெற்றுள்ள சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. ஜீவி சார் அவர்களின் விமர்சனக் கருத்து வாசக விமர்சகர்களுக்கு ஒரு புதிய பாதையைத் திறந்து வழிகாட்டுகிறது. மிக்க நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வை.கோ

    இரண்டாம் பரிசு பெற்ற ராஜலக்‌ஷ்மி மற்றும் காரஞ்சன் சேஷ் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. வென்றோருக்கு வாழ்த்துக்கள்...
    Vetha.Langathilakm.

    பதிலளிநீக்கு
  16. அழகான விமரிசனங்கள். இருவருக்கும் பாராட்டுகள்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. இவருடைய பொருளாதார முன்னேற்றத்தினால் கண்டிப்பாக பலர் வாழ்வில் இவர் வெளிச்சத்தைக் காண்பித்திருக்க முடியும். அந்த அக்கறையில் வெளி வந்த வார்த்தைகள் இவை. அவ்வளவே.//

    இதுவும் நல்ல கருத்தாய் இருக்கிறது. யோசிக்க வேண்டிய விஷயம்.
    கடன் கிடைக்காமல் கஷ்டபடுபவர்கள் இருக்கும் போது அவருக்கு கடன் கிடைத்தை பயன்படுத்தி நீங்கள் சொல்வது போல் கடையை பெரிது செய்து நிறைய பேருக்கு வேலை கொடுத்து இருக்கலாம்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  18. விரலுக்கேற்ற வீக்கம்” என்பார்கள். ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப்படுவதை விட, நன்கறிந்த தொழிலில் ஈடுபட்டு, நேர்மையுடனும், ஈடுபாட்டுடனும் உழைத்துப் பொருளீட்டல் நன்மை பல நல்கி உயர்வளிக்கும் எனும் வாழ்வியல் தத்துவத்தை அழகாக உணர்த்தியது பஜ்ஜிக்கடை பெரியவர் பாத்திரம்.//

    சேஷாத்திரி நீங்கள் சொல்வது .உண்மை .
    வாழ்வியல் தத்துவத்தை சார் பஜ்ஜி கதை மூலம் அருமையாக சொல்லி விட்டார். போதுமென்ற மனம் படைத்த மனிதர் பஜ்ஜிகடை பெரியவர். பொருள் சேர சேர அதை பரமாரிப்பதில் படும் அவஸ்தை வேண்டாம் என்ற உறுதியான மனம் படைத்த அன்பர்க்கு வணக்கங்கள்.
    அழகான விமர்சன்ம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

    அதற்கான இணைப்பு:

    http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  20. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி ராஜலக்‌ஷ்மி மற்றும் திரு காரஞ்சன் சேஷ் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் -

    பதிலளிநீக்கு
  21. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமிபரமசிவம் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு