என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 அக்டோபர், 2014

VGK-38 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'மலரே .... குறிஞ்சி மலரே ... !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



 


 




கதையின்  தலைப்பு :


 VGK-38 



   மலரே ....குறிஞ்சி மலரே ! 



இணைப்பு:



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




 நடுவர் திரு. ஜீவி  



 


அமெரிக்காவில் வீட்டுக்கல்வியாய் தமிழ்

நடுவர் தாத்தாவும் அவர் பேரனும்

பேரனின் தமிழ் எழுத்துக்களும்


 


நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 




    

இனிப்பான இரண்டாம் பரிசினை

வென்றுள்ள விமர்சனம்-1



 

மனைவிக்குப் பொன்விலங்கு பூட்டி வீட்டில் அடைத்து வைக்கும் கணவனைக் குறித்த கதை இது.  சகலகலாவல்லியான கல்பனா திருமத்துக்குப் பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்க வேண்டி வருகிறது.  அவளுக்கு இதுதான் பிடிக்கும் என்று அவள் கணவன் தானாக முடிவெடுத்து அவளைக் கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைக்கிறான். வீட்டில் அடைபட்ட கிளியான அவளுக்குத் துணையாகவும் சில பச்சைக்கிளிகள் கூட்டில் அடைக்கப்பட்டு வளர்கின்றன. சுதந்திரமாகப் பறக்கும் பறவைகளைக் கூட்டில் அடைப்பதே எனக்குப் பிடிப்பதில்லை. கல்பனா கோயிலுக்குப் போனால் கூடத் துணைக்குத் தன் தாயை அவள் கணவன் அனுப்புகிறான். இத்தனைக்கும் கல்பனா திருமணத்துக்கு முன்னர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளே!  வங்கியில் வேலை செய்த கல்பனா, வங்கிக்கும் நீண்ட விடுமுறை போட்டுவிட்டுக் கணவன் விருப்பப்படி வீட்டுச் சிறையில் வாயே திறக்காமல் இருக்கிறாளாம். கோபமாக வருகிறது! :( அதோடு அவள் வங்கி வேலையில் இருந்தவள் என்பது தெரியாமல் அவள் கணவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கவும் முடியாது.  இப்படி இருக்கையில் எவ்விதம் அவன் அவளை அவ்வாறு நடத்தினான் என்பது வியப்பே!



கணவன் வரையில் மனைவியை மிகவும் சந்தோஷமாக ராணி போல் வைத்திருப்பதாக எண்ணம். எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள். மனைவி எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சுகமாகப் புத்தகங்கள் படித்துக்கொண்டும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், கிளிகளுக்கு உணவிட்டுக் கொண்டும் இருந்தாலே போதும் என்பது அவன் எண்ணமாக இருக்கலாம்.  ஆனால் இதுவா உண்மையான சுகம்? என்னதான் வீட்டில் வேலைகள் செய்யாமல் இருந்தாலும் அக்கம்பக்கத்தினருடன் பேசிப் பழகவோ, தன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களைத் தானே தேர்ந்தெடுத்து வாங்கவோ, சுதந்திரமாகக் கடை, கண்ணிகளுக்கும் கோயிலுக்கும் போவதற்கோ, பிறந்த வீட்டுக்குப் போவதற்கோ கூடக் கணவனின் அனுமதியை எதிர்பார்ப்பது என்றால் கொடுமையாக இல்லையோ? பிறந்த வீட்டிற்கு நினைத்த நேரம் போக முடியாது;  போகவும் கூடாது. ஆனால் முன் கூட்டித் திட்டமிட்டுக் கணவனிடம் சொல்லிவிட்டுப் போய் வரலாமே!  அதுவும் இல்லை.  ஆனால் இதற்குக் காரணமே ஒரு வகையில் கல்பனாவே தான். 



கணவன், மனைவிக்குள் ஒளிவு, மறைவு இல்லாமல் இருந்தால் நல்லது. தன்னைக் குறித்த அனைத்தையும் மனைவியிடம் தெரிவிக்கும் கணவன் அதே போல் மனைவியிடமும் அவள் ஆசைகள், தேவைகள், திறமைகள் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனதுமே முதல் ஒரு வாரத்திற்குள்ளாக இது எல்லாம் நடந்து முடிந்து விட வேண்டும். இப்போதெல்லாம் நிச்சயம் ஆனதிலிருந்தே  ஆணும், பெண்ணும் சேர்ந்தே தான் சுற்றுகிறார்கள்.  இதுவும் அவள் கணவனுக்குப் பிடிக்காது போலும்;  அப்படிப் போயிருந்தால் ஓரளவுக்குக் கல்பனாவின் விருப்பு, வெறுப்புகள் பிடிபட்டிருக்குமே! மனைவியின் ஆசைகளை, விருப்பங்களை மதிக்க வேண்டும்.  அவளை கொலு பொம்மை போல் கருதக் கூடாது.  அலங்கரித்து வீட்டில் அமர்ந்து கொண்டு அழகு பார்க்க மட்டும் மனைவி அல்ல.  கணவனின் முதல் நண்பனாக மனைவியும், மனைவியின் முதல் நண்பனாகக் கணவனும் இருத்தல் வேண்டும். சொல்லப் போனால் ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து இருவரின் விருப்பமும் தெரிந்து கொண்டு பின்னரே சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம்.  கணவன் கேட்காவிட்டாலும் கல்பனாவே தன்னைக் குறித்துக் கணவனிடம் சொல்லி இருக்கலாம். அதைச் செய்யவில்லை அவள்.  என்ன படித்து என்ன? கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா? தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட வேண்டும்? கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்?  தன் மனைவியை மிகவும் நேசிக்கும் சிவராமன் அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் என எண்ணுகிறான். 



ஒரு சமயம் சிவராமனுக்கு அலுவலக வேலையாக வடமாநிலத்தில் உள்ள ஹரித்வார் செல்ல நேர்கிறது.  அப்போது தில்லியில் ரயில் மாறும் முன்னர் பெட்டி, படுக்கைகள், அடையாள அட்டை உட்பட அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு மொழியும் புரியாமல் நிற்கும் சிவராமன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்படும்போது தில்லியில் வக்கீல் தொழில் புரியும் கல்பனாவின்   சிநேகிதி நந்தினி அவனைப் பார்க்கிறாள்.  நந்தினியின் வண்டியும் போலீஸ் வண்டியும் சிக்னலில் நிற்கும்போது பார்க்க நேரிடுகிறது.  கல்யாணத்தின் போதே நந்தினி கவனித்த சிவராமன் கன்னத்தில் உள்ள மச்சத்தை வைத்து அடையாளமும் கண்டுகொள்ளுகிறாள்.  ஆனாலும் சந்தேகம்.  நிவர்த்தி செய்து கொள்ளக் கல்பனாவுடன் பேச வேண்டும்.  ஆனால் அவள் கைபேசி எண் இல்லை; அங்கங்கே விசாரித்து அவளுடைய வீட்டு எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டு நாசூக்காக விசாரிக்கிறாள் நந்தினி.  ஒரு மாதிரியாக நந்தினிக்குக் கல்பனாவின் நிராதரவான நிலைமை புரிய மன வருத்தம் கொள்கிறாள்.



கல்பனாவைத் தன் ஆதர்சமாகக் கொண்டிருந்த நந்தினிக்குக் கல்பனாவின் தற்போதைய நிலையை எப்படியானும் மாற்றவேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை. பெண் சுதந்திரம் என்று இங்கே பேசப்பட்டாலும் அதற்காக அத்துமீறி நடக்கும்படியும் சொல்லவில்லை. கணவனோடு இணையாகவே அவள் கருதப்பட வேண்டும்.  நந்தினியின் எண்ணம் அதுவே! கல்பனாவின் கணவன் நிலை குறித்து அவளிடம் சொல்லி அவளைப் பதட்டப்பட வைக்காமல் நந்தினியே தன் வருங்காலத் துணைவன் துணையோடு சிவராமனை மீட்கிறாள்.  சிவராமனுக்கோ இரண்டு நாட்கள் சிறைவாசம் நிறைய மாற்றத்தைத் தந்திருக்கத் தன் தவற்றை உணர்கிறான்.  அதற்கேற்ப நந்தினி அவனைக் கல்பனாவிடம் பேச வைத்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து உதவி செய்வதோடு, கல்பனாவின் திறமைகளையும் பட்டியலிடுகிறாள்.  தனக்கே தெரியாமல் தன் மனைவிக்குள் இத்தனை திறமைகளா என வியந்த சிவராமன் தன் மனைவியை வீட்டுப் புறாவாகத் தான் நடத்தியது குறித்தும் வருந்துகிறான்.



நந்தினியின் உதவியால் தன் அலுவலக வேலையை முடிக்க ஹரித்வாருக்கும் சிவராமனால் செல்ல முடிந்தது.  அதோடு தன் மனைவி கல்பனாவுக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும் என்ற செய்தியையும் நந்தினியின் மூலம் அறிந்து கொள்கிறான்.  தான் எதுவுமே மனைவியைக் குறித்துத் தெரிந்து கொள்ளாமல் மூன்றாம் மனிதர் மூலமாய்த் தெரிந்து கொள்வதில் அவனுக்கு உள்ளூர அவமானமும், வெட்கமும் நேரிடுகிறது. அதனால் தான் ஹரித்வாரிலிருந்து திரும்புகையில் கல்பனாவுக்குப் பிடித்த பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை வாங்கியதோடு அல்லாமல், தனக்கு உதவி செய்தவள் "நந்தினி" என்பதையும் அந்த இனிப்பின் பெயர் நந்தினி என்றிருந்ததைச் சுட்டிக்காட்டித் தெரியப்படுத்துகிறான். எல்லாவற்றையும் விட இனிப்பான செய்தியாகக் கல்பனாவுக்கு இனி பிறக்க விருக்கும் குழந்தையும் பெண்ணாக இருந்தால் நந்தினி என்னும் பெயரை வைக்க விரும்புவதாக நன்றியுடன் கூறும் சிவராமன் கூண்டுக்கிளிகளையும் பறக்க விடச் சொல்கிறான். கல்பனா இனி வேலைக்குச் செல்லலாம் என்றும் தான் அவளைக் குறித்து அறியாமல் இருந்தது குறித்தும் வருந்துகிறான். இரண்டு நாட்கள் சிறைவாசம் தன் கணவனைப் பெருமளவு மாற்றி இருப்பதிலும் தன்னால் சொல்ல முடியாத தன் அருமை, பெருமைகளை எடுத்துச் சொன்ன தன் சிநேகிதி நந்தினிக்கும் கல்பனா மனதுக்குள் பாராட்டுத் தெரிவித்திருக்க வேண்டும்.  தெரிவித்திருப்பாள் என நம்புவோம்.  இப்போதாவது கல்பனா தானும் தன்னைக் குறித்துத் தன் கணவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும் என நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை. அது கொஞ்சம் குறையாகவே இருக்கிறது. 



எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை.  சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல.  நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம். மாற்றங்கள் தேவை தான்.  ஆனால் அவை இரு மனதிலும் தோன்றி ஓர் ஒத்திசைவோடு நடைபெற வேண்டும்.  அதற்கு இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும். ஆரம்பத்திலேயே கணவன் தனனை நடத்தும் விதம் சரியில்லை என்பதைக் கல்பனா இதமாகச் சுட்டிக் காட்டி இருந்தால் சிவராமனுக்கும் புரிந்து இருக்கும் அல்லவா?  ஏனெனில் மனைவியை நேசிக்கும் கணவன் தானே!  நேசம் அதீதமாகப்போய்விட்டது.  அது தன் மனைவிக்கு வசதிகள் செய்து கொடுக்கிறோம் என்னும் பெயரில் அவளைச் சிறைப் பறவையாக ஆக்கிவிட்டது.



குறிஞ்சி மலர் பனிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் பூக்கும். அவை பூக்கையில் தான் அவற்றைப் பார்க்க முடியும்.  ஆனால் அன்பு அப்படி அல்ல. ஊற்றுப் போல் சுரந்து கொண்டே இருக்கும்.  வற்றாத ஊற்று.  பெரு வெள்ளத்தின்போது அடித்துக் கொண்டு வரும்  மணலால் அந்த ஊற்றுக்கண் அடைபடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்.  இரு வேறு மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்ட பெண்களை வைத்துக் கதை பின்னி இருக்கும் ஆசிரியர் கல்பனாவின் மேல் நமக்கெல்லாம் இரக்கம் தோன்ற வேண்டும் என நினைத்திருந்தால் ம்ஹூம், எனக்கு இரக்கம் தோன்றவே இல்லை.  ஏனெனில் அவள் குணாதிசயங்கள் அப்படி இல்லையே!  கல்பனா தன் வாயைத் திறக்காமல் இருந்துவிட்டுக் கணவன் தன்னை ஒழுங்காக நடத்தவில்லை என எதிர்பார்ப்பதில் நியாயம் என்பதே இல்லை. கணவன் புரிந்துகொள்ளும்படி கல்பனா நடந்து கொள்ளவில்லை என்பதும் உண்மை. :)



ஆனாலும் இந்தக் கதையின் மூலம் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி விருப்பு, வெறுப்புகளை அலசிக் கொண்டு பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் அதுவே கதைக்கு மாபெரும் வெற்றி!  இன்றைய காலகட்டத்துக்கு ஏற்பக் கதையை ஆசிரியர் புனைந்திருந்தாலும் வழக்கமான ஆணாதிக்க மனப்பான்மையையே இங்கேயும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.  ஒரு விதத்தில் சிவராமன் ஆணாதிக்கம் கொண்டவனாக இருந்தாலும் மனைவி மேல் அளவு கடந்த பாசம் கொண்டிருப்பதால் எளிதில் மனைவியால் அவனை மாற்றி சகஜ நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்பதும் தவிர்க்க முடியா உண்மை. கல்பனாவின் மேல் உள்ளூர அனுதாபத்தைத் தோற்றுவிக்கும் விதமாக எழுதியுள்ள ஆசிரியரின் கதை சொல்லும் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.








 




இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 




 திருமதி.



கீதா சாம்பசிவம் 



அவர்கள் 


வலைத்தளம்: எண்ணங்கள்

sivamgss.blogspot.in





  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.






      




இனிப்பான இரண்டாம் பரிசினை



வென்றுள்ள விமர்சனம்-2








ஒரு பிரபலமான பாடல் வரியை நினைவூட்டும் தலைப்பு. காதல் கதையாக இருக்குமோ என எண்ணினால், காவல் கதையாக மிகவும் விறுவிறுப்புடன் துவங்குகிறது.

கதைக்கான கரு, பாத்திரப்படைப்பு, அதற்கேற்ப காட்சிகளின் அமைப்பு, தொய்வில்லாத நடை, சொல்லவந்த செய்தியை அழகாய் வலியுறுத்தி கதையை முடித்த பாங்கு மிக அருமை!

கதைக்கரு:

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி பெறுவதில் நல்ல முன்னேற்றம் கண்டு, நல்ல விழிப்புணர்வுடன் ஆண்களை விட மிகுந்த திறமை பெற்றவர்களாய்த் திகழ்ந்தாலும், பெண்கள் உழைப்பதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கான தைரியத்தை, திறமையை பெற்றிருந்தாலும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தில் வாய்ப்பளித்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் தடையாய் இல்லாமல், அவர்கள் வாழ்வில் பீடுநடை போட பேருதவியாய் இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் சமுதாயச் சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ள கதை.


பிற மொழிகளிடையே வெறுப்புணர்வு பாராட்டாமல், அவற்றை அறிந்து கொள்ள முயலுதல் நன்று என்பதையும் நன்கு உணர்த்தும் கதை.


ஆனால் சில ஆண்கள் மனதில் மட்டும் பெண்கள் குறித்த பார்வை இன்னும் மாறவில்லை.  “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று முழுமனதுடன் நம்பினால் மட்டுமே பெண்கள் நிறைய வெற்றிகளைப் பெற முடியும். பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்காத சமுதாயம், நாகரிகமான சமுதாயமாக இருக்க முடியாது என்பதை அழகாய் உணர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.

  
விறுவிறுப்பான காட்சிகளுடன் துவங்கும் கதையைப் படிக்கையில் நமக்குள்ளும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. தலைநகர் டில்லியில் சிக்னலில் காரில் காத்திருக்கும் நந்தினியின் அருகில் வந்து நின்ற போலீஸ் ஜீப்பிலிருந்த வாலிபனின் வலது கன்னத்தில் இருந்த மச்சம் அவள் கண்ணில் பட்டதும் தட்டிய பொறியில் கதை விரிகிறது.


யார் அவர்? என்ற கேள்விக்கு விடை காண முயன்று, அவர் தன் கல்லூரித் தோழியான கல்பனாவின் கணவன் என்பதை நினைவுகூர்ந்து அவளுடைய தொலைபேசி எண்ணை வேறு சில தோழிகளின் மூலம் பெற்றுக்கொண்டு தொடர்பு கொள்வதாகக் காண்பித்தபின் கதையில் எத்தனை திருப்பங்கள்.!


பாத்திரப்படைப்புகளில் ஆசிரியர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருப்பதை உணரமுடிகிறது.


கல்லூரி நாட்களில் புரட்சிகரமாக, பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக விளங்கிய, மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தகல்பனாவுக்கு வாய்த்த கணவன் சிவராமனோ வித்யாசமான பொஸஸிவ்நெஸ் கொண்டவராகவும், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்பவராகவும், மனைவியினுடைய திறமைகளையோ விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள முற்படாதவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான்.


ஆனால் கல்பனாவை ரோல்மாடலாக எண்ணித் தன்னை மேம்படுத்திக்கொண்ட நந்தினியோ, தன்னைப் புரிந்துகொண்ட, தனக்கேற்ற துணையான தன்னைப்போலவே வக்கீலாகப் பணிபுரியும் சீனியரான வஸந்த்தை காதலித்து, மணமுடிக்க இருப்பதாகக் காண்பிக்கிறார்.


நந்தினியின் பாத்திரப்படைப்பின் மூலம், படித்த பெண்கள் அறிவாளிகள் என்பதையும், அவர்களின் விவேகமான, தைரியமான செயல்கள் இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக அமைகிறது என்பதையும் வெளிச்சம்போட்டுக் காட்டி விடுகிறார் கதாசிரியர். காவல் துறை ஜீப்பில் கைவிலங்கோடு இருந்த வாலிபன் தன் தோழியின் கணவன்தான் என்பதை, கன்னத்து மச்சம் மூலம் அடையாளம் கண்டுகொண்டு, தோழியிடம் பேசி அவன் டெல்லிக்கு வந்திருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு, கருவுற்றிருக்கும் தன் தோழி கவலையடையா வண்ணம் சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு அவனைக்குறித்த விவரங்களை அறிந்து, தன் வருங்காலக் கணவன் உதவியுடன் திங்கட்கிழமை காலையில் ஜாமீனில் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, நன்கு உபசரித்து, தன் தோழியின் அருமை பெருமைகளை உரைத்து, கல்பனாவுடன் பேச வைத்து, புதிய சூட்கேசில் பயணத்திற்குத் தேவையான துணிமணிகள், புதியதோர் செல்போன், சிம்கார்ட், ரொக்கப்பணம் இவற்றை அளித்து ஹரித்வாருக்கு ஸ்டேஷன் வரை காதலனுடன் காரில் வந்து வழியனுப்பி வைத்ததாகக் காண்பித்ததில் நந்தினியின் திறமை, சாதுர்யம், தேவை அறிந்து சேவை செய்தல், தனக்கு முன்மாதிரியாக இருந்த தோழிக்கு நன்றிக்கடன் செய்தல், ஆகியவற்றை வெளிப்பட வைத்துவிடுகிறார் கதாசிரியர். நந்தினியின் மனம் கவர்ந்த காதலனும் அவர் மனம் அறிந்தவராக இருப்பது அருமை.


கல்பனா  பாத்திரத்தின் மூலம், திறமையும், துணிச்சலும் கொண்டிருந்தாலும் குடத்திலிட்ட விளக்காக, கூண்டுக்குள் சிறைப்பட்ட பறவையைப்போல் பல பெண்கள் வாழவேண்டியிருப்பதை வெளிப்படுத்தி, இது போன்ற பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திச் சொல்கிறார்.


கல்பனாவுக்குக் காவலாக வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குச் செல்லும் மாமியார், தன் மகனுக்கு இந்த விஷயத்தில் தக்க அறிவுரைகள் வழங்கத் தவறிவிட்டவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளார்கள் என்பதை உணர்த்துவதற்கோ?

கண்களில் விரியும் காட்சிகளின் நேர்த்தி:-

நந்தினி கல்பனாவுடன் தொலைபேசி வழியே உரையாடும் இடத்தில் கல்பனாவின் நிலையை உணர்த்தும் காட்சிகள் அருமை. கல்பனாவிற்கென்று ஒரு செல்போன் இல்லாத நிலையும், கிளிகளைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்ப்பதாகவும், அந்தக் கிளிகளைப்போல் தானும் ஒரு கூண்டுக்கிளியாய் இருப்பதாகவும், தன் பொழுதுபோக்கிற்கு தன்னைப்போலவே சிறைபட்டிருக்கும் சில கிளிகளே உதவுதாகவும் கல்பனா உரைக்கும் இடங்கள் அருமை.

அடுத்ததாக
  • போலீஸ் ஜீப்பில் கண்ட காட்சியை கல்பனாவிடம் சொல்லாமல் தவிர்த்த நந்தினிக்கு தூக்கமில்லை.
  • கணவனிடமிருந்து எந்தத் தகவலும் வராத கவலையில் கல்பனாவிற்கும் தூக்கம் வரவில்லை.
  • தலைநகரில், தன் உடமைகளை இழந்து, மொழியும் அறியா நிலையில் துயருற்ற, தீவிரவாதியோ எனும் சந்தேகத்தில் ஏதோ ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமனுக்கும், தூக்கமில்லை
என மூவரின் நிலையையும் உணர்த்தும் காட்சிகள் அருமை.


இரண்டு முழுநாட்களும், மூன்று முழு இரவுகளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனுபவம் சிவராமனை ஒரு புது மனிதனாக மாற்றியிருந்தது. நந்தினியின் அறிவுக்கூர்மையால், சமயோஜிதமான செயல்பாட்டால் மட்டுமே தான் இன்று மீண்டுவரமுடிந்ததை உணர்கிறான். கல்பனாவின் திறமைகள், பெருமைகளை நந்தினி மூலம் அறிந்து கொள்கிறான்.

கல்பனாவுக்கு மிகவும் பிடித்த இனிப்புடன் வீடு திரும்பும் சிவராமன் அந்த ஸ்வீட் டப்பாவின் மேல் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த நந்தினி எனும் பெயரை கல்பனா காண்பித்ததும், அதைப் பார்த்ததால்தான் வாங்கிவந்ததாகவும், பெண்குழந்தை பிறந்தால் நந்தினி எனப் பெயர் வைக்கலாம் என உரைத்து சமாளிக்கும் இடமும் அருமை. ஹிந்தி மொழி அறிந்த கல்பனாவை உடன் அழைத்துச் சென்றிருந்தால் இந்நிலை சிவராமனுக்கு ஏற்பட்டிருக்காது.

எப்படியோ சிறைவாசம் சிவராமனை மனம் திருந்திய மைந்தனாக மாற்றிவிட்டது. விடுதலை பெற்றது கூண்டுக் கிளிகள் மட்டுமல்ல! திருமணத்திற்குப்பின் நீண்ட விடுப்பில் இருந்து தற்போது வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட கல்பனாவும்தான்.

தான் வெகுநாளாகப் பார்க்க விரும்பிய குறிஞ்சி மலர் தன்னருகில் இருப்பதாய் சிவராமன் உணர்கிறான் என கதையை முடித்துள்ளார் கதாசிரியர். இதன் காரணம் மனைவிமீது அவனது பார்வையில் ஏற்பட்ட மாற்றமே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

என்னைப் பொறுத்தவரை, தன் தோழியின் கணவர் சிறைப்பட்டதைக் காண நேர்ந்து, அவரை மீட்டெடுத்து உரிய நேரத்தில் உதவிய நந்தினியும் ஒரு குறிஞ்சிமலர்தான். வஸந்த் வாழ்வில் ஒரு வசந்தமலர் நந்தினி.

பெண்களின் முன்னேற்றம், சுதந்திரம் குறித்த சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இக்கதையைப் படைத்த கதாசிரியர் நம் அனைவரின் பாராட்டுக்குரியவர் என்பதில் ஐயமில்லை!

-காரஞ்சன்(சேஷ்) 

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 




 திரு. 



E.S. சேஷாத்ரி 


அவர்கள்.



வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)

essseshadri.blogspot.com

  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.






      



மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை 

இந்த இருவருக்கும்  சரிசமமாகப் 

பிரித்து அளிக்கப்பட உள்ளது.



      

 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !



     



நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



நாளை 26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும்



நல்லதொரு வாய்ப்பினை


நழுவ விடாதீர்கள்











என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்



19 கருத்துகள்:

  1. திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள்
    சிறப்பான எண்ணங்களை
    விமர்சனமாக்கி பரிசுபெற்றதற்கு
    மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு

  2. திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்.
    பெண்களின் முன்னேற்றம், சுதந்திரம் குறித்த
    சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம்
    எழுதிய விமர்சனம்பரிசுபெற்றதற்கு
    மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களும்
    திரு . சேஷாத்ரி அவர்களும்
    கதையை தங்கள் கோணத்தில்
    சிறப்பாக அலசி விமரிசித்திருந்தார்கள்.
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. "எல்லாவற்றையும் மனதுக்குள் பூட்டி வைத்து விட்டுக் கணவன் தன்னை மதிக்கவில்லை; தனக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லை என்றெல்லாம் சொல்வது மிகக் கொடுமை. சுதந்திரம் பிறர் கொடுத்துப் பெறும் ஒன்றல்ல. நாம் நாமாக இயல்பாக இருப்பதே உண்மையான சுதந்திரம்,"
    கீதா சாம்பசிவம் அவர்களின் இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
    பரிசு பெறும் கீதா அவர்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  5. “தன் தோழியின் கணவர் சிறைப்பட்டதைக் காண நேர்ந்து, அவரை மீட்டெடுத்து உரிய நேரத்தில் உதவிய நந்தினியும் ஒரு குறிஞ்சிமலர்தான். வஸந்த் வாழ்வில் ஒரு வசந்தமலர் நந்தினி”.
    திரு சேஷாத்ரி அவர்களின் இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். அருமையான விமர்சனம் எழுதி பரிசு பெறும் சேஷாத்ரி அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  6. என்னுடைய விமர்சனம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.வாய்ப்பளித்த திரு வைகோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! பாராட்டிய்/ வாழ்த்திய நல்லிதயங்களுக்கும் என் நன்றி!

    பதிலளிநீக்கு
  7. கதையை வித்யாசமான கோணத்தில் அலசி, அருமையாக விமர்சனம் எழுதி என்னுடன் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  8. \\என்ன படித்து என்ன? கல்லூரியில் தைரியமான பெண்ணாகப் பெயர் வாங்கினதெல்லாம் இங்கே கணவனுக்கு அடிமையாக இருப்பதற்கா? தன்னுடைய கோழைத்தனத்தை நினைத்தல்லவோ கல்பனா வெட்கப்பட வேண்டும்? கணவனைக் குற்றம் சொல்வது எவ்வகையில் நியாயம்? \\ நியாயமான கேள்விகள். கல்பனாவிடத்தும் தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அசத்தலான விமர்சனம் எழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள கீதா மேடம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. தோழிகளான கல்பனா, நந்தினி இருவரது மாறுபட்ட குணநலன்களையும் விரிவாய் அலசி அழகானதொரு விமர்சனமெழுதி பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு திரு. சேஷாத்ரி அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. இரண்டாம் பரிசை என்னுடன் பகிர்ந்து கொண்ட திரு சேஷாத்ரிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இங்கே வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    http://sivamgss.blogspot.in/2014/11/blog-post.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  12. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு சேஷாத்திரி அவர்களுக்கும் எங்கள் மனமுவந்த வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு சேஷாத்திரி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருமதி கீதாசாம்பசிவம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  15. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு சேஷாத்திரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவம் திரு சேஷாத்திரி அவங்கமுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. திருபதி கீதாசாம்பசிவம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்ந்நுகள்.

    பதிலளிநீக்கு
  18. வெற்றி பெற்ற இருவருக்கும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு